Advertisement

அத்தியாயம் –7

 

 

“என்னை மட்டுமே கொன்னியே, இதோ இங்க இன்னொருத்தி வந்திருக்கா இவளை மட்டும் சும்மா விட்டிருக்க என்று அரூபமான அருண் கேட்க சஞ்சு ‘இதென்னடா புதிதாக, நம்மை வைத்து ஒரு விளையாட்டு என்று எண்ணினாள்.ஏற்கனவே மரணபீதியில் இருப்பவளை கண்டு அவன் பேசியது வேறு அவளை மொத்தமாக கலங்கச் செய்தது.

 

 

வேறு யாரும் இருக்கிறார்களா என்று அவள் நோக்க அங்கு அரூபமாய் பெண்ணொருத்தி நிற்க அவள் இதயம் விட்டு விட்டு துடித்தது.“நீ சாக, பாவம் தான் காரணம்… அநியாயமா அவ ஏன் சாகணும் என்றது அந்த பெண்ணுருவம். சஞ்சுவுக்கு கையில் வலி எடுக்க ஆரம்பிக்க ‘விட்டுவிடு என்பதை கூட மெல்லிய முனகல் குரலிலேயே கூறி கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

 

 

அப்போது அந்த பக்கம் சருகுகள் மிதிபடும் ஓசை கேட்க அவளருகே யாரோ நடந்து வரும் ஒலி துல்லியமாய் கேட்டது. அதற்கு மேல் நிற்க முடியாமல் அவள் கண்கள் சொருக கால்கள் நிலையிழந்து தவித்தது.

 

 

சஞ்சு எங்கு சென்றிருப்பாள் என்று யோசித்துக் கொண்டே முன்னேறியவனுக்கு சட்டென்று ஒன்று தோன்றியது. ‘ஒரு வேளை இவள் நம் தோப்பு வீட்டிற்கு சென்றிருப்பாளோ.

 

 

அது இந்த பக்கம் தானே வரும் என்று நினைத்தவன் வண்டியை அரைவட்டம் அடுத்து திருப்பியவன் அந்த பாதையை நோக்கி பயணித்தான். மனதிற்குள் நன்றாக அவளை திட்டிக் கொண்டிருந்தான். ‘இவளுக்கு இந்த சாகசம் எல்லாம் தேவையா

 

 

‘இப்படி நடுராத்திரியில வந்து பார்த்தா தான் ஆச்சா… ஏற்கனவே ஊரு கெட்டு கிடக்கு… ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆனா என்ன ஆகறது என்று நினைத்துக் கொண்டே வர அவன் எண்ணம் சரி என்பது போல அந்த வீட்டின் வாயிலில் அவள் ஸ்கூட்டி அரவமற்று நின்றிருந்தது.

 

 

வண்டியை விட்டு இறங்கியவன் சுற்று முற்றும் பார்க்க ஆள்நடமாட்டமே இல்லாமல் அந்த பகுதி வெறிச்சென்றிருந்தது. டார்ச்சை கையில் எடுத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

 

 

வாயிலில் இருந்த வெளிவிளக்கின் சுவிட்சை தட்ட அது ஒளிர்ந்தது. ‘இவ லைட் கூட போடாம என்னத்தை கண்டுபிடிக்கிறா என்று யோசித்துக் கொண்டே பக்கவாட்டில் நடந்து சென்றான்.

 

 

அவன் நடந்து செல்லும் போது அவன் காலடிபட்டு சருகுகள் சப்தமெழுப்பியது. ஏனோ கண்கள் அவளை எப்போது காண்போம் என்று தேட பக்கவாட்டில் திரும்பி நடந்தவன் வீட்டிற்கு நேர் பின்னே வர சஞ்சு முனகும் ஒலி கேட்டு விரைந்து அருகில் வந்தான்.

 

 

சஞ்சுவும் கண்கள் செருக மயங்கி விழும் நேரம் அருகே வந்தவன் அவளை தாங்கி பிடித்தான். தன்னையறியாமல் “சஞ்சு என்னாச்சு… எழுந்திரும்மா என்று அழைக்க அவளிடம் இருந்து பதிலேதும் இல்லை.

 

 

அவள் கை வேறு உள்ளே இடுக்கில் மாட்டியிருப்பதாக தோன்ற அவள் கையை மெதுவாக வெளியில் எடுத்தான். அவளை தோளில் சாய்த்து நடத்தி செல்லலாம் என்று நினைக்க அவள் கால்கள் நிற்க முடியாமல் சரிய ஆரம்பித்தது.

 

 

சுதாரித்தவன் சட்டென்று இருகைகளாலும் அவளை தூக்கிக் கொண்டு முன் வாசலை நோக்கி நடந்தான்.

 

 

வாசலுக்கு வந்ததும் அவளை திண்ணையில் கிடத்தி விட்டு அவன் வண்டியை நோக்கி வேகமாக விரைந்தான். கையோடு தண்ணீர் பாட்டிலை கொண்டு வந்தவன் அவள் முகத்தில் நீரை வேகமாக தெளிக்க அவள் மெதுவாக கண்விழித்து பின் மூடிக் கொண்டாள்.

 

 

அவளருகே வந்தவன் அவளை எழுப்பி அவன் தோள் மேல் சாய்த்துக் கொண்டு பாட்டிலில் இருந்த நீரை அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக புகட்டினான். ஓரளவு தெம்பு வந்த பின்னே அவள் மெதுவாக கண்ணை திறந்தாள்.

“என்னாச்சு சஞ்சு நீ எதுக்கு இந்த நேரத்துல இங்க வந்த?? என்று கேள்வி கேட்டான் அவன்.

 

 

“நிரு உள்ளே… உள்ளே… உங்… உங்கண்ணா… என்று சொல்ல முடியாமல் திக்கியவள் இருகைகளாலும் அவன் கழுத்தை கட்டிக் கொண்டு விசும்பினாள்.

 

 

‘நிருவா… இதென்ன இவ என்னை புதுசா கூப்பிடுறா என்று அவன் மனம் அவசரமாக நினைத்ததை ஒதுக்கியவன். “என்ன சஞ்சு என்ன சொல்ற?? (இவன் மட்டும் செல்லமா சஞ்சுன்னு கூப்பிடலாமா அப்படின்னு நீங்க கேட்குறது புரியுது. அது இந்த பக்கிக்கு எப்படி சொல்லி புரிய வைக்க…)

 

 

அவள் நடந்ததை சொல்ல இப்போது அவன் அவளை முறைத்தான். “என்ன சஞ்சு சொல்ற நீ?? எங்கண்ணன் எப்படி இங்க இருக்க முடியும்?? அவன் இறந்து போய் வருஷம் மூணுக்கு மேல ஆகுது

 

 

“இல்லை நிரு நான் பார்த்தேன். அங்க வேற ஒரு பொண்ணும் இருந்தா??

 

 

“சரி வா என்னோட… நாம உள்ள போய் பார்ப்போம் என்று எழுந்தான் அவன்.

 

 

“எப்படி உள்ள போறது?? அதான் கதவு பூட்டியிருக்கே??

 

 

“இது எங்க வீடுங்கறதை மறந்துட்டியா?? என்றவன் வண்டியை நோக்கி சென்றான். “நானும் வர்றேன் என்று அவன் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு அவனை உரசிக் கொண்டு நடந்தாள்.

 

 

வண்டியில் வைத்திருந்த சாவியை எடுத்துக் கொண்டு அவளுடன் வந்தவன் கதவை திறந்தான். அப்போது தான் கவனித்தவள் “இந்த லைட் எரியுமா?? என்றாள்.

“பார்த்தா உனக்கு எப்படி தெரியுது

 

 

“நான் வந்ததும் போட்டேனே எரியவே இல்லையே??

 

 

“போட்டிருந்தா தான் எரியும் என்று அவன் நக்கலாக பதில் அளித்தான். அவள் அதையெல்லாம் கண்டு கொள்ளும் மனநிலையில் இல்லை. எப்படி எரிந்தது என்ற ஆச்சரியத்தில் அதையே யோசித்துக் கொண்டிருந்தாள்.

 

 

உள்ளே செல்லும் போதும் அவனை ஒட்டியே சென்றாள் அவள். உள்ளே சென்றவன் டார்ச்சை ஒளிரவிட்டு சுவிட்சை தேடி போட அறையெங்கும் ஒளிவெள்ளம் பரவியது.

 

 

“நல்லா பாரு சஞ்சு இங்க யாருமே இல்லை என்றான் அவன்.

 

 

இருவரும் ஒவ்வொரு அறையாக சென்று பார்த்தனர். அடுத்த அறைக்கு செல்ல அப்போது தான் கவனித்தாள் அவளுடன் வந்தவன் அருகில் இல்லை என்பதை. சட்டென்று அவளுக்குள் திகில் பரவ ஆரம்பித்தது.

 

 

சுற்றுமுற்றும் பார்க்க அந்நேரம் சற்று முன்னர் அவள் பார்த்த அந்த பெண்ணுருவம் மீண்டும் அவள் முன் நிழாலடியது. அவளுக்குள் பயகுமிழ்கள் அடிவயிற்றில் இருந்து உற்பத்தியாகியது.

 

 

“அவன் சாகப் போறான், நீ அவனை விட்டு போய்டு என்று அந்த குரல் அவளருகில் நெருங்கி வந்து கூற அவள் உடல் அதிர்ந்தது, திடுக்கிட்டு போனாள் அவள்.

 

 

“அவர்க்கு ஒண்ணும் ஆகாது… என்றாள் தன்னை மீறிய குரலில்.

 

 

“கண்டிப்பா அவன் சாவான் என்றது அப்பெண்.

 

 

“என்னை மீறி உன்னால எதுவும் செய்ய முடியாது… அவருக்கு எதுவும் ஆக நான் விடமாட்டேன்

 

 

“நீ தேவையில்லாம குறுக்க வராதே… அப்புறம் நீயும் இல்லாம போய்டுவ என்றது அது மிரட்டும் குரலில்.

“நான் இல்லாம போனாலும் உன்னால அவரை எதுவும் செய்ய முடியாது என்றவள் அங்கு அவள் முன் அரூபமாய் நின்றிருந்த அருணை அப்போது தான் பார்த்தாள்.

 

 

“யார் இவங்க?? என்னென்னமோ சொல்றாங்க என்றாள் அழும் குரலில்.

 

 

“கண்டிப்பா அது செஞ்சிடும், நீ நிரஞ்சனை கூட்டிட்டு இங்க இருந்து முதல்ல போ?? என்றான் அருண். அப்பெண்ணுருவம் அருணை தீப்பார்வை பார்க்க அவன் அங்கிருந்து மறைந்தான்.

 

 

“அவன் சாவான்… நான் நினைச்சது நடக்கும் என்று அவள் காதுக்கருகில் சொல்ல “இல்லை… இல்லை அவருக்கு எதுவும் ஆகாது என்று வாய்விட்டு புலம்பினாள் அவள்.

 

 

அப்போது மற்ற அறைகளையும் சுற்றி பார்த்துவிட்டு வந்த நிரஞ்சன் “யாருக்கும் எதுவும் ஆகாதுன்னு சொல்ற சஞ்சு என்றான்.

 

 

அவனைக் கண்டதும் பாய்ந்து வந்து அவன் கழுத்தை கட்டிக் கொண்டவள் “உங்களுக்கு எதுவும் ஆகாது. என்னை மீறி யாரும் உங்களை எதுவும் செய்ய முடியாது. உங்களுக்கு எதுவும் ஆகாது என்று கூற அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

 

 

“என்னம்மா என்ன சொல்ற??எனக்கு ஒண்ணுமே புரியலை??

 

 

“உங்க… உங்களுக்கு ஏதோ ஆகிடும் சொல்றாங்க… என்னை மீறி உங்களுக்கு எதுவும் ஆகாது நிரு… நீங்க என்னை விட்டு போகாதீங்க என்றவள் விட்டால் அவன் எங்கே அவளை விட்டு போய் விடுவான் என்று எண்ணியவள் போல் அவனை இறுக்கிக் கொண்டாள்.

 

 

இவளை இங்கேயே இருக்கவிட்டால் இன்னும் என்ன கதை சொல்வாளோ என்று எண்ணியவன் அவளை தோளில் சாய்த்தவாறே வெளியே அழைத்து சென்றான். விளக்கணைத்து கதவை இழுத்து பூட்டியவன் சாவியை பான்ட் பாக்கெட்டில் போட்டதும் அவளை தன்னிலிருந்து விலக்கினான்.

“இப்போ சொல்லு சஞ்சு??? என்ன நடந்துது என்றான் மீண்டும்.

 

 

அவளும் உள்ளே நடந்ததை கூற அவனுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. அவளுக்கு ஏதோ பிரமை என்று புரிந்தது. இவள் இல்லாத ஒன்றை கற்பனையாக யோசிக்கிறாள் என்று நினைத்தான்.

 

 

கண்டதையும் கேட்டவளுக்கு இங்கு வந்ததும் அப்படி தோன்றி இருக்கும் என்று நினைத்துக் கொண்டான். எல்லாவற்றையும் மீறி அவனுக்குள் ஒரு கேள்வி முளைத்தது. அது தனக்கு என்னவானால் என்ன, அதற்கு இவள் ஏன் பதட்டப்படுகிறாள் என்பதே அது.

 

 

“சஞ்சு… என்று மெதுவாக அழைத்தான்.

 

 

“நீ சொல்றது எங்கயாச்சும் நடக்குமா சஞ்சு… இதெல்லாம் வெறும் கற்பனைடா என்று கூறி முடிக்கவில்லை “நீங்க என்னை நம்பலைல நிரு, ஏன் நிரு உங்களுக்கு எதாச்சும் ஆகிடுமோன்னு நானே நொறுங்கி போய் இருக்கேன்

 

 

“நான் கேட்டது எல்லாம் நிஜம்… ப்ளீஸ் என்னை நம்புங்க என்றவள் குரல் உடைந்து அழ ஆரம்பித்தாள். அதை கண்டு மனம் தாளாதவன் “சரி சஞ்சு விடு, நான் எதுவும் சொல்லலை. ஆனா ஒண்ணு… என்று நிறுத்தினான்.

 

 

அவள் நிமிர்ந்து அவன் என்ன சொல்ல வருகிறான் என்று விசும்பலுடனே பார்த்தாள். “நீ அழுகையை நிறுத்து சஞ்சு அப்போ தான் சொல்லுவேன் என்றதும் வேகமாக கண்ணீரை துடைத்தாள்.

 

 

நிமிர்ந்து அவனை நோக்கி ‘இப்போ சொல்லுங்க என்பது பார்க்க அவனும் “எனக்கு என்ன ஆனா உனக்கு என்ன சஞ்சு?? என்று தான் மனதில் நினைத்ததை மெதுவாக கேட்டுவிட்டான்.

 

 

புரியாமல் பார்த்தவள் தெரியவில்லை என்பதாய் தலையை அசைக்க அவனுக்கு ஏதோ புரிய ஆரம்பித்தது. தன் மனதும் அவள் மனதும் அவனுக்கு அக்கணம் முழுதுமாக புரிந்தது.

 

“நிஜமாவே புரியலியா சஞ்சு?? என்க அவள் நிமிர்ந்து அவனை நோக்கியவாறே பதில் பேசாமல் இருந்தாள். “அப்போ இதுக்கு என்ன அர்த்தம்?? என்று அவள் அவனை கட்டிக் கொண்டிருப்பதை காட்டி கேட்க அப்போது தான் அவளுக்கு உறைத்தது அவன் என்ன சொல்ல வருகிறான் என்று.

 

 

முகம் லேசாக சிவந்துவிட அவனை விட்டு விலகினாள். அவன் முகத்தை பார்க்கவே வெட்கமாக இருந்தது, இவ்வளவு நேரமாக அவனை கட்டிக் கொண்டிருந்தது அப்போது தான் நினைவுக்கு வந்தது.

 

 

அவன் அவளை நோக்கி ஒரு எட்டு எடுத்து வைக்க யாரோ நடந்து வரும் ஓசை கேட்டு இருவரும் திரும்பினர். காலடி சத்தம் கேட்டதும் மீண்டும் பயந்தவள் வேகமாக அவனிடம் வந்து ஒண்டினாள்.

 

 

வந்தது வேறு யாருமல்ல கார்த்திக் தான். “என்னடா நடக்குது இங்க?? என்று அவர்கள் இருந்த நிலையை சுட்டிக் காட்ட அவசரமாக நிரஞ்சனிடம் இருந்து விலகினாள் சஞ்சு.

 

 

“நீங்க தான் மாமாக்கு சொன்னீங்களா??? என்று நிரஞ்சனை முறைத்தாள்.

 

 

“ஆமா நீ பாட்டுக்கு ராத்திரி நேரத்துல இங்க வந்திருக்க… நான் உள்ள வரும் போதே உன் வண்டியை பார்த்திட்டு கார்த்திக்கு போன் பண்ணி சொல்லிட்டேன். அதான் அவன் வந்திருக்கான் என்றான் நிரஞ்சன் பதிலுக்கு.

 

 

“ஆமா கார்த்திக் நீங்க ஏன் நடந்து வர்றீங்க… உங்க வண்டி எங்கே?? என்றான் தொடர்ந்தவாறே.

 

 

“நிரஞ்சன் நான் வண்டி எடுத்தேன் வைங்க சத்தம் ஊரையே கூட்டிரும். ஊரை கூட்டுற சத்தம் எங்கம்மாவுக்கு கேட்காதா… அதான் என் புல்லட்டை வீட்டில விட்டுட்டு மெயின் ரோடு வரைக்கும் ஆட்டோல வந்தேன். இங்க தான் உள்ள எவனும் வரமாட்டானே அதான் நடந்து வந்தேன்

 

 

“ஆட்டோவா… எப்படி கிடைச்சது???

 

 

“முழுசா ஐந்நூறு ரூபா கொடுத்திருக்கேன் அதான் வந்தான் என்றான் அவன் பாவமாக.

 

 

“சஞ்சு இங்க எதுக்கு நீ சொல்லாம கொள்ளாம வந்தே… முதல்ல வீட்டுக்கு கிளம்பு அங்க போய் பேசிக்கலாம் என்று பரபரத்தான் கார்த்திக்.

 

 

சஞ்சு அவன் பின்னே செல்லப் போனவள் திரும்பி நிரஞ்சனை ஒரு பார்வை பார்த்தாள். அவள் பார்வையில் என்ன நினைத்தானோ “கார்த்திக் என்றழைத்தான் நிரஞ்சன்.

 

 

“என்ன நிரஞ்சன்???

 

 

“கார்த்திக் நீ தப்பா எடுத்துக்கலைன்னா சஞ்சுவை நானே வீடு வரைக்கும் கூட்டிட்டு வர்றேனே?? என்றான் பெரும் தயக்கத்துடன்.

 

 

இருவரையுமே சற்று வித்தியாசமாக பார்த்தவன் மனதிற்குள் ஏதோ நினைத்தவனாய் “சரி ஆனா பத்திரம் என்றான்.

 

 

“என் மேல நம்பிக்கையில்லையா கார்த்திக்??

 

 

“நிறைய இருக்கு நிரஞ்சன், நீங்க சீக்கிரம் அவளை கூட்டிட்டு வீடு வந்து சேருங்க. சஞ்சு வண்டி சாவியை கொடு உன்னோட வண்டியை நான் எடுத்திட்டு போறேன் என்றவன் அவளிடம் சாவி வாங்கிக் கொண்டு அவள் ஸ்கூட்டியில் ஏறி பறந்தான்.

 

 

வெளிகேட்டை பூட்டி தாள் போட்டவன் பைக் அருகே சென்று அவளை அழைக்க அவளும் பின்னால் ஏறி அமர்ந்தாள். இருபுறமும் கால்களை போட்டுக் கொண்டு அமர்ந்தவள் பிடிப்புக்காக அவன் வலது தோள் மேல் கைவைத்தாள்.

 

 

“போகலாமா என்று கேட்க அவளிடமிருந்து இம்மென்று பதில் வந்தது. மனதில் மீண்டும் ஏதோ ஒரு கலக்கம் தோன்ற மெதுவாக கண்களை திருப்பி அந்த வீட்டு வாசலை பார்க்க அப்பெண்ணுருவம் அங்கு நின்றிருந்தது.

 

 

பயத்தில் முன்னே சென்று அவன் இடுப்பை சுற்றி வளைத்துக் கொண்டு அவன் மேலேயே சாய்ந்துக் கொண்டாள் கண்ணை இறுக்க மூடி. நிரஞ்சனுக்கு தான் தர்மசங்கடமாக இருந்தது. அவளை விலக்கவும் முடியாமல் தடுக்கவும் முடியாமல் இன்பமான அவஸ்தையாக இருந்தது.

 

 

அவன் வண்டியை கிளப்பி முன்னேற மீண்டும் ஒரு முறை வந்த வழியை திரும்பி பார்த்தவள் அங்கு யாரும் இல்லாதது கண்டு சற்றே நிம்மதியுற திடுமென்று அவள் காதருகில் முணுமுணுப்பாக “அவனை உயிரோட விடமாட்டேன் என்ற குரல் கலைத்தது.

 

 

சஞ்சு அவனை மேலும் மேலும் இறுக்கிக் கொள்ள நிரஞ்சன் அவஸ்தைக்கு உள்ளானான். ஒரு கட்டத்தில் அவளின் இறுக்கம் அவனுக்கு வலி கொடுக்க “சஞ்சு… சஞ்சு… என்று மெதுவாக அழைத்தான்.

 

 

அவளிடம் இருந்து பதில் இல்லாது போக லேசாக திரும்பி பார்க்க அவள் அவன் தோள் மீது சாய்ந்து உறங்கியிருந்தாள். அவள் தூக்கம் கலையாதவாறு வண்டியை மெதுவாக ஓட்டினான்.

 

 

ஒரு கையால் அவன் இடுப்பை சுற்றியிருந்த அவள் கைகளை பிடித்துக் கொண்டான். தூக்கத்தில் அவள் எங்கே கிழே விழுந்து விடுவாளோ என்ற பயத்தில்.

 

 

ஒருவாறு அவன் அவர்கள் வீடு வந்து சேர கார்த்தி வாசலிலேயே காத்திருந்தான். “என்னாச்சு நிரஞ்சன் ஊர்வலம் வந்தீங்களா என்ன இவ்வளவு நேரமாகிடுச்சு என்றான்.

 

 

“இல்லை கார்த்திக் சஞ்சு தூங்கிட்டா, எங்க கிழே விழுந்திட போறான்னு நான் ஒரு கையால அவளை பிடிச்சுட்டு ஒரு கையால மெதுவா வண்டி ஓட்டிட்டு வந்தேன். அதான் கொஞ்சம் தாமதாகி போச்சு

 

 

சஞ்சுவின் அருகில் வந்த கார்த்தி அவளை எழுப்ப குரல் கொடுக்க நிரஞ்சன் தடுத்தான். “கார்த்திக் ப்ளீஸ் வேண்டாம்… அவளை எழுப்பாதீங்க, பாவம் ஏதேதோ அலைச்சல் அவளுக்கு நல்லா தூங்குறா…

 

 

“இவ்வளவு நேரம் அழுத்திட்டே இருந்தா, கலைச்சு போய் தூங்குறவளை எழுப்ப வேணாமே

 

 

“அப்போ எப்படி நிரஞ்சன் அவளை உள்ளே கூட்டிட்டு போறது

 

 

“கார்த்திக் நீங்க சஞ்சுவை கொஞ்சம் பிடிங்க நான் இறங்கிக்கறேன் என்றவன் கார்த்திக் அவளை பிடித்ததும் வண்டியில் இருந்து இறங்கியவன் “நீங்க விடுங்க கார்த்திக்… நானே தூக்கிட்டு வர்றேன் என்றவன் அவன் பதிலை எதிர்பார்க்காமல் சஞ்சுவை கைகளில் தாங்கினான்.

 

 

“வண்டியை ஸ்டான்ட் போட்டிடுங்க கார்த்தி என்றான் போகும் தருவாயில். ‘என்னடா நடக்குது இங்க என்று இரண்டாம் முறையாக இப்போது அவனையே கேட்டுக் கொண்டான் அவன்.

 

 

வண்டியை நிறுத்திவிட்டு கார்த்திக்கும் உள்ளே சென்று அவள் அறையை காட்ட நிரஞ்சன் அவளை படுக்கையில் கிடத்தினான். அவளோ தூக்கத்திலும் விடாமல் அவன் சட்டையை இறுக்கி பற்றியிருந்தாள். அவன் விலக்க முயல “நிரு போகாதீங்க நிரு… என்னை விட்டு போகாதீங்க என்று அழுதாள்.

 

 

‘என்னாச்சு இவளுக்கு இப்படி அழுதே என்னை கொல்லுறாளே… இவ அழுதா எனக்கு மனசு கேட்க மாட்டேங்குதே என்று யோசித்தவன் கார்த்திக்கை பார்க்க அவன் ‘நீ கொஞ்சம் சமாதானப்படுத்து என்பதாய் அவனை பார்த்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான்.

 

 

அவன் அங்கிருந்து வெளியேறினாலும் உள்ளே என்ன நடக்கிறது என்பதை கவனித்துக் கொண்டு தான் இருந்தான். நிரஞ்சன் அவளை தோள் மேல் சாய்த்து ஆறுதல் படுத்தி உறங்க வைப்பதை நிம்மதியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

 

ஒருவாறு அவள் கண்ணயர்ந்து நன்றாக உறங்கவும் அவள் நெற்றியில் முத்தமிட்டு வெளியே வந்தான் நிரஞ்சன். இப்போது கார்த்திக்கின் முகத்தை பார்க்கவே அவனுக்கு சங்கடமாக இருந்தது.

 

 

“கார்த்திக்… என்றவன் எப்படி பேசுவது என்று தெரியாமல் விழித்தான்.

 

 

“உட்காருங்க நிரஞ்சன்… நாம பேச இது நேரமில்லை இருந்தாலும் அங்க என்ன நடந்ததுன்னு நீங்க சொன்னா தான் என்னால தெரிஞ்சுக்க முடியும் என்று கூற நிரஞ்சன் அங்கு நடந்ததை அப்படியே கூறினான்.

 

 

சற்றே ஆச்சரியமான கார்த்தி “ஆனா நிரஞ்சன் நீங்க அங்க வேற யாருமே இல்லைன்னா சொல்றீங்க?? என்றான்.

 

 

“ஆமா கார்த்திக்… அங்க யாருமே இல்லை, வேலைக்கு கூட நாங்க ஆளு வைக்கவே இல்லை… அப்புறம் எப்படி அங்க ஆளுங்க இருக்க முடியும்…

 

 

“சரி அதை விடுங்க… சஞ்சு விஷயம் என்ன??? என்றான் கார்த்திக்.

 

 

“என்ன கேட்க வர்றீங்கன்னு புரியலை கார்த்திக்??

 

 

“சஞ்சுவை பத்தி உங்க அபிப்பிராயம் என்ன நிரஞ்சன்??

 

 

நிரஞ்சன் எதுவும் பேசாமல் மெளனமாக அமர்ந்திருந்தான், இது காதல் தானா என்று அவனே சற்று குழம்பியிருந்தான். இந்நேரத்தில் கார்த்திக்கிற்கு என்ன பதில் சொல்ல என்று யோசித்தான்.

 

 

“உங்க அம்மாவுக்கு ஒரு கஷ்டம்ன்னா… என்ன பண்ணுவீங்க நிரஞ்சன்

 

“இதென்ன கேள்வி கார்த்திக்… அந்த கஷ்டத்தை போக்க தான் நினைப்பேன்

 

 

“உங்க அக்காவுக்கோ தங்கைக்கோ ஒரு கவலை அப்போ…

 

 

“அப்பவும் அவங்களுக்கு ஆறுதலா இருந்து கஷ்டத்தை போக்க நினைப்பேன்

 

 

“சஞ்சு உங்களுக்கு யாரு??? உங்க அம்மா இல்லை… உங்க அக்காவோ தங்கையோ இல்லை… என்று நிறுத்தினான்.

 

 

நிரஞ்சனுக்கு அவன் என்ன கேட்க வருகிறான் என்பது புரிய அவன் மனம் சஞ்சுவை தவிர வேறு யாரையும் நினைக்காது என்று புரிந்து கொண்டது. அவள் அழுதால் தன்னால் தாங்க முடியாதென்பதும் அவள் துயர் போக்க அவன் கைகள் நீளுவதும் அவள் தலை சாய்க்க அவன் தோள்கள் ஏங்குவதும் புரிந்தது அவனுக்கு.

 

 

“உங்க கேள்விக்கு பதிலை நாளைக்கு சொல்றேன் கார்த்திக்… நீங்க சஞ்சுவை பார்த்துக்கோங்க என்றவனின் முகம் தெளிந்திருந்ததை கார்த்திக் கண்டு கொண்டான்.

 

 

சஞ்சு அன்று DCP அலுவலகத்தில் நிரஞ்சனை பார்த்து நடந்து கொண்ட விதமும் நிரஞ்சன் அவனை கேள்வி கேட்ட விதமும் அவனுக்கு ஏதோ தோன்றியது. அதுமட்டுமில்லாமல் வரும் வழியெங்கும் சஞ்சனா நிரஞ்சனை பற்றியே பேசிக் கொண்டு வந்தது அவன் சந்தேகத்தை தூண்டியது.

 

 

அதை பற்றி சஞ்சனாவிடம் கேட்காமல் விட்டவன் அஞ்சனாவுக்கு போன் செய்து அது பற்றி துருவ அவளும் நிரஞ்சனை சஞ்சனா முதலில் பார்த்தது முதல் கடைசியாக அவர்கள் இருவரும் அவனை பற்றிய பேசியது வரை அனைத்தும் சொன்னாள்.

 

 

சஞ்சுவுக்கு நிரஞ்சன் மேல் இருப்பது வெறுப்போ கோபமோ அல்ல என்றும் அவளையறியாமல் அவள் அவன் மேல் அன்பு வைத்திருக்கிறாள், ஆனால் கோபம் வெறுப்பு என்ற போர்வையில் அதை மறைத்து வைத்திருக்கிறாள் என்று அவளை புரிந்தவளாக கூறினாள்.

 

 

அதுமட்டுமல்லாது யாரும் அறியாத ரகசியம் ஒன்றையும் அவள் கூறினாள். அது சஞ்சு நிரஞ்சன் பற்றிய தகவல்களை சேகரித்தவள் அதை அவள் பீரோவில் தனிப்பட்ட அறையில் பொக்கிஷம் போல் பாதுகாக்கிறாள் என்றாள்.

 

 

இரண்டொரு நாளில் சஞ்சுவை பற்றி நிரஞ்சனிடம் பேசலாம் என்று நினைத்திருந்த கார்த்திக்கிற்கு தானே வந்த சந்தர்ப்பமாக இது அமைந்து விட அவனும் நிரஞ்சனை யோசிக்க வைத்திருந்தான்.

 

 

அன்று நிரஞ்சன் ஒரு பதட்டமாக எங்கே கார்த்திக் சஞ்சுவை தான் கட்டிக் கொள்ளப் போகிறான் என்று சொல்லுவிடுவானோ என்று இருக்க அவன் இல்லை என்றதும் தெளிந்த அவன் முகம் கார்த்திக்கின் கண் முன்னால் வந்து போனது.

 

 

பொழுது அழகாக புலர்ந்தது ஆனால் சஞ்சுவுக்கு தான் அது நல்ல பொழுதாக இல்லை. அவளறையில் தன்னை மீறி அரற்றியவளை காலை எழுந்து சஞ்சுவுக்கு காபி கொண்டு வந்த சுந்தரி பார்த்துவிட என்னவோ ஏதோவென்று நினைத்தவர் அவள் நெற்றியில் கை வைத்து பார்க்க கொதித்துக் கொண்டிருந்தது.

 

 

உடனே கார்த்திக்கின் அறைக்கு சென்று அவனை எழுப்பி கூட்டி வந்தார். அவனும் அவள் அறைக்கு வந்து பார்த்தான் “அய்யோ நைட் நடந்த கலவரத்துல பயந்து போய் ஜுரம் வந்திடுச்சு போலயே என்று வாயை விட்டான்.

 

 

“என்ன கார்த்திக்?? என்ன நடந்தது?? என்று மகனை முறைத்தார் அவர். “ஒண்ணுமில்லை என்று சமாளித்து பார்த்தவன் அவர் நம்பாத பார்வை பார்க்க நடந்ததை அப்படியே கூறினான்.

 

 

சஞ்சு-நிரஞ்சன் விருப்பம் பற்றி மட்டும் கூறாது விடுத்திருந்தான். அந்நேரம் சரியாக நிரஞ்சன் கார்த்திக்கின் வீட்டிற்கு சஞ்சுவை பார்க்க வந்தான். கார்த்திக்கின் கைபேசிக்கு அவன் அழைத்திருக்க அது அவன் அறையிலேயே விட்டு விட்டு வந்திருந்ததில் அடித்து ஓய்ந்திருந்தது.

 

 

நிரஞ்சனை பார்த்ததும் சுந்தரி ரௌத்திரமானார். கார்த்திக் அன்னையை எதுவும் பேச வேண்டாம் என்று கண்களாலேயே கூற அமைதியாக இருந்தார். நிரஞ்சனிடம் சஞ்சனாவிற்கு காய்ச்சல் அடிப்பதால் மருத்துவமனை கூட்டி செல்லப் போவதாக கார்த்திக் தெரிவித்தான்.

 

 

அவளுக்கு காய்ச்சல் என்றதும் நிரஞ்சன் பதற அதற்கு மேல் பொறுக்க முடியாத சுந்தரி “எல்லாம் உன்னால தான்… நீ வந்ததுனால தான் அவளுக்கு இப்படி ஆச்சு… முதல்ல நீ இங்க இருந்து வெளியே போ… இனிமே இங்கே வராதே என்றார் அவர் உயர்ந்த குரலில்.

 

 

கார்த்திக்கிற்கு அன்னை இப்படி பேசுவது புதிது என்பதால் அவரை வித்தியாசமாக பார்த்தான். அவரை எதிர்த்து எதுவும் அவனால் பேச முடியவில்லை.

 

 

நிரஞ்சனை கெஞ்சும் பார்வை பார்க்க அவன் முகமோ கடும் சீற்றத்தில் இருந்ததை அவனால் உணர முடிந்தது. “கார்த்திக் அவளை ஹோஸ்பிட்டல்ல சேர்த்திட்டு எப்படி இருக்குன்னு எனக்கு சொல்லு…நான் போறேன் என்றவன் அங்கிருந்து விருட்டென்று கிளம்பிச் சென்றுவிட்டான்…..

 

 

அத்தியாயம் –8

 

 

கார்த்திக் வீட்டில் இருந்து நேரே கிளம்பியவன் DSP அலுவலகத்திற்கு சென்று மாறனிடம் பேசிவிட்டு அவனுக்கு தேவையான சில முக்கிய தகவல்களை சேகரித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

 

 

அர்ஜுனுக்கு போன் செய்து பேசியவன் அவனை ஒரு இடத்திற்கு வரவழைத்திருந்தான். ஊருக்கு வெளியே சற்று தள்ளி அமைந்திருந்த அந்த ஹோட்டலில் இருவரும் சந்தித்தனர்.

 

 

“ஹாய்டா நிரன்… என்னடா எதுவும் முக்கியமான விஷயமா என்னை பார்க்க வரச்சொல்லி நீயே சொல்லி இருக்க என்றான் அர்ஜுன் குதூகலமான குரலில்.

 

 

“ஹ்ம்ம்… ஆமாம்டா ஒரு முக்கியமான விஷயம் பேசணும். அதுக்கு தான் வரச் சொன்னேன் என்றவன் அவனிடம் இருந்த சில தகவல்கள் அடங்கிய குறிப்பை அர்ஜுனிடம் கொடுத்தான்.

 

 

“அப்புறம் அர்ஜுன் இந்த சிம் கார்ட் பத்திரம்… இது யாரோடது என்னன்னு விசாரிச்சு வைச்சுக்கோ… இதுல சிம் மெசேஜ்ஸ் கொஞ்சம் இருக்கு… நான் அதை ஏற்கனவே காபி பண்ணிட்டேன்… அதுல இருக்கற விஷயத்தை ஓரளவு யூகிச்சுட்டேன்… நீயும் ஒரு தடவை பார்த்திடு…

 

 

“வந்திருக்கவங்க ஏதோ பெரிய ப்ளானோட தான் வந்திருக்காங்க… நாம நினைச்சதுவிட விஷயம் பெரிசா இருக்கும்ன்னு தோணுது… நம்ம டிபார்ட்மெண்ட்லையே நெறைய பேரு அவங்களுக்கு உதவி பண்ணுறாங்க…

 

 

“சோ… நாம ரொம்ப கேர்புல்லா தான் இந்த விஷயத்தை டீல் பண்ணனும்… நீ எந்த விஷயமா இருந்தாலும் எனக்கு மட்டும் போன் பண்ணு… வேற யார்கிட்டயும் எதுவும் சொல்லிடாதே… என்று எச்சரிக்கை செய்தான்.

 

 

“நானும் அதே தான் நினைச்சேன் நிரன்… நான் வேற விதமா கண்டுபிடிக்க ஆரம்பிச்சு இருக்கேன்… அனேகமா நான் கொஞ்சம் நெருங்கிட்டேன் நினைக்கிறேன்…

 

 

“உன்னோட இந்த குறிப்பு எனக்கு எந்த வகையில உதவுதுன்னு நான் பார்த்திட்டு இன்னைக்கு நைட் உனக்கு போன் பண்ணுறேன் நிரன். அப்புறம் இது எனக்கு கிடைச்ச தகவல், நீயும் படி… அப்புறம் என்ன பண்ணுறதுன்னு பார்க்கலாம் என்றான்.

 

 

இருவருமாக சிறிது நேரம் சீரியஸாக பேசிக் கொண்டிருப்பதை இருவிழிகள் நோட்டமிடுவதை நிரஞ்சன் கண்டுவிட்டான். சட்டென்று யதார்த்தமாக பேசுவது போல அர்ஜுனிடம் பேச ஆரம்பித்தான்.

 

 

“சார்… அப்புறம் இதை பார்த்திட்டு சொல்லுங்க… நல்ல வரன் வந்திடுச்சுன்னா நாங்களும் முடிக்கற மாதிரி தான் இருக்கோம்… நானே நேர்ல வரணுமான்னு நீங்க கேட்கறது புரியுது…

 

 

“ஆனாலும் இது என்னோட சொந்த விஷயம் இல்லையா… அதான் நானே வந்திட்டேன்… நீங்க கொடுத்த வரனோட தகவல் எல்லாம் நான் வீட்டில காட்டுறேன்… அதுல எதுவும் செட் ஆகிட்டா உடனே சொல்றேன்…

 

 

“எதுக்கும் நீங்க இன்னும் கொஞ்சம் நல்ல வரனா தேடிக் கொடுத்தா ரொம்ப புண்ணியமா போகும் என்று சம்மந்தமில்லாமல் பேச நிரஞ்சனின் கண்ணசைவில் அவனும் அவர்களை நோட்டமிடுபவனை கண்டுவிட அர்ஜுனும் அவனுக்கு ஈடுகொடுக்கும் விதமாக பேசினான்.

 

 

“என்ன சார்… இது எங்க வீட்டு கல்யாணம் போல கண்டிப்பா நல்ல வரனா தான் கொண்டு வந்திருக்கேன்… நீங்க பார்த்திட்டு சொல்லுங்க… பிடிக்கலைன்னா நான் வேற வரனை பத்தி டீடைல் கொண்டு வரேன் அடுத்த வாரத்தில என்றான்.

 

 

தள்ளி நின்று அவர்களை நோட்டமிட்டு கொண்டிருந்தவன் சற்று முன் இருவருக்கும் அடுத்த டேபிளில் அமர்ந்து அவர்கள் பேசுவதை கேட்க, நிரஞ்சனும் அர்ஜுனும் அவனை கண்டுகொண்ட பின் உப்பு பெறாத விஷயம் பற்றி பேச ஆரம்பித்ததை அறியாதவன், ச்சே நாம சந்தேகப்பட்டது போல இல்லை இது வேற ஏதோ… என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

 

 

அவன் சென்றதும் இருவரும் இயல்பாகினர். “நல்ல வேளை நிரன், நீ கண்ஜாடை காட்டினே… யார் இவன்னு தெரியலையே… அனேகமா இவனை உன்னை கண்காணிக்க தான் போட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன்… சோ நீ கொஞ்சம் கவனமா இரு… என்று அர்ஜுன் அவனை எச்சரித்தான்.

 

 

“அப்புறம் நிரன் நீ ஏன் ஒரு மாதிரியா இருக்கே… எதுவும் பிரச்சனையா???

 

 

“ஒண்ணும்மில்லைடா… என்றான் நிரஞ்சன் சலிப்பாக.

 

 

“அப்போ கண்டிப்பா ஏதோ இருக்கு?? சொல்லுடா உனக்கு என்ன பிரச்சனை உன் முகமே சரியில்லையே… என்னாச்சு??

 

 

“சஞ்சு… என்றான் மொட்டையாக.

 

 

“சஞ்சுவா??? யார்டா அது???

 

 

“உனக்கு தெரியாதா அர்ஜுன்… அன்னைக்கு பஸ்ல பார்த்தோமே…

 

 

“ஓ… அந்த பொண்ணு பேரு சஞ்சுவா… யாருக்கு தெரியும் அவ பேரை கேட்டதுக்கு தான் என்னை கலாய்ச்சிட்டு போயிட்டாளே… எனக்கெப்படி அவளோட பேரு தெரியும்…

 

 

“ஆமா… சஞ்சுன்னா… அப்போ நீ அவங்களை விரும்புறியா??? என்று சரியாக கண்டுபிடித்து கேட்டான் அவன்.

 

 

“ஹ்ம்ம்…

 

 

“எப்படிடா??? நீங்க இரண்டு பேரும் எலியும் பூனையுமா அடிச்சுக்கிட்டதா சொன்னே?? அப்புறம் எப்படி என்றவனிடம் நிரஞ்சன் நடந்ததை கூறினான்.

 

 

“அப்போ நான் சந்தேகப்பட்டது சரி தான்… நீங்க ரெண்டு பேரும் விரும்புறீங்கன்னு அன்னைக்கே நினைச்சேன்… உன்னை கொஞ்சம் வெறுப்பேத்தி பார்த்தேன்… நீ அசராம இருந்த, ஆனாலும் நான் கரெக்ட் பண்ணுறேன்… சொன்னதும் உன் முகம் போன போக்கை பார்க்கணுமே… என்று நண்பனை கலாட்டா செய்தான்.

 

 

“சரி அதெல்லாம் இருக்கட்டும்… அவங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லிட்டு நீ போய் பார்க்காம இருந்தா எப்படி?? கார்த்திக்கோட அம்மா உன்னை போக சொன்னா நீ போயிடுவியா??

 

 

“அவங்க மயக்கத்துல இருந்து எழுந்தா உன்னை தானே தேடுவாங்க… போடா முதல்ல அவங்களை போய் பார்க்கற வழியை பாரு என்றான் அர்ஜுன்.

 

 

“நானும் அதே யோசனையில தான் இருக்கேன் அர்ஜுன்… கார்த்திக்கிட்ட பேசிட்டு அங்க போகலாம்ன்னு நினைச்சுட்டு இருக்கேன்… சரி நான் கிளம்புறேன்டா… என்னை சொல்லிட்டு நீ கவனமில்லாம இருக்காதே, கொஞ்சம் கவனமா இரு… என்றுவிட்டு நிரஞ்சன் கிளம்பினான்.

 

 

வீட்டிற்கு சென்று குளித்து கிளம்பியவன் கார்த்திக்கிற்கு போன் செய்தான். சஞ்சுவை மருத்துவமனையில் சேர்க்க சொல்லி இருப்பதாக கூறியவன், அவன் அன்னை வீட்டிற்கு சென்றிருக்கும் தகவலையும் கூடுதலாக கூறியிருந்தான்.

 

 

நிரஞ்சனும் அது தான் சாக்கென்று மருத்துவமனை சென்றான். அவன் வந்ததுமே கார்த்திக் முகத்தில் திருப்தி நிலவ “என்னாச்சு கார்த்திக்… என்னை பார்த்ததும் நிம்மதி பெருமூச்சு விடறீங்க… என்னாச்சு

 

 

“இல்லை நிரஞ்சன் இவ்வளோ நேரம் சஞ்சுவை சமாளிக்கறது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அவ தூங்குற நேரமும் உங்களை தான் தேடிட்டு இருந்தா… நான் பக்கத்துல போய் அவ கையை பிடிச்சு சமாதானப்படுத்தவும் நீங்க தான்னு நினைச்சு என் கையை பிடிச்சுக்கிட்டே தூங்கிட்டா

 

 

“ஆனா கண்ணு முழிச்சதும் ஒரு ரகளையே பண்ணிட்டா… சஞ்சு இப்படி எல்லாம் பண்றவளே கிடையாது… அவளை பார்க்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு… நான் அஞ்சுவை போன் பண்ணி வரச்சொல்லி இருக்கேன்…

 

 

“நீங்க கொஞ்ச நேரம் போய் அவ பக்கத்துல இருங்க நிரஞ்சன்… அம்மா கிளம்பினதுமே நான் உங்களுக்கு போன் பண்ணலாம்னு நினைச்சுட்டு இருந்தேன்… நீங்களே பண்ணீங்க… போன்ல உங்ககிட்ட எதையும் சொல்லி கலவரப்படுத்த எனக்கு மனசில்லை… அதான் இங்க வந்ததும் சொல்றேன்

 

 

கார்த்திக் பேசுவதை கேட்ட நிரஞ்சனுக்கு அதற்கு மேல் பொறுக்கவில்லை. வேகமாக உள்ளே விரைந்தான். சஞ்சுவுக்கு லேசாக விழிப்பு வந்திருக்க ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருப்பதை பொருட்படுத்தாமல் எழுந்து அமர முயற்சி செய்தாள்.

 

 

“சஞ்சு… பேசாம படு என்ற அவனின் அதட்டலில் அமைதியானாள்.

 

 

“எங்க போனீங்க நிரு… என்னைவிட்டு எங்க போனீங்க… ப்ளீஸ் எப்போமே என்னை விட்டு போகாதீங்க நிரு… என் கூடவே இருங்களேன்… எனக்கு ரொம்ப பயமா இருக்கு நிரு… ப்ளீஸ் என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தோடியது.

 

 

சேரை அவளருகில் நெருக்கமாக இழுத்து போட்டுக் கொண்டவன் அவள் உள்ளங்கையை எடுத்து தன் கைகளுக்குள் அடக்கிக் கொண்டான். “இங்க பாரு, இப்போ எதுக்கு அழற… நான் இங்க தானே குத்துக்கல்லு மாதிரி இருக்கேன்…

 

 

“ஏன் நிரு இப்படி பேசறீங்க???

 

 

“எனக்கு எதுவும் ஆகாது சஞ்சு… அதை நீ கொஞ்சம் நம்பும்மா… ஏன் இப்படி அழுதிட்டே இருக்கே???

 

 

“நான் முதன் முதல்ல பார்த்த சஞ்சுவா இதுன்னு இருக்கு எனக்கு… எவ்வளவு தைரியமா இருப்பே… இப்போ இப்படி நீ பயந்து நடுங்கறது எனக்கு பிடிக்கலை சஞ்சு…

 

 

“உன்னோட அந்த தைரியம் தான் எனக்கு பிடிச்சதே… நீ உன் தைரியத்தை விட்டுட்டு இப்படி ஒண்ணுமில்லாத விஷயத்துக்கு அழறது எனக்கு பிடிக்கலை சஞ்சு…

 

 

“அப்போ உங்களுக்கு ஒண்ணுன்னா நான் பயப்படக் கூடாதா… என்னை ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்க நிரு… என்று கண்ணீர் வழிய அவள் மீண்டும் பேச ஆரம்பிக்கவும் நிரஞ்சனுக்கு கோபம் குமிழாக எழுந்தது.

 

 

“சஞ்சு போதும் நிறுத்து… சும்மா அதே பல்லவியை பாடாதே… நீ வீணா கற்பனை பண்ணிட்டு தேவையில்லாம யோசிச்சுட்டு உன்னையும் கஷ்டப்படுத்திட்டு எல்லாரையும் கஷ்டப்படுத்துற…

 

 

“நான் என்னோட பழைய சஞ்சுவை பார்க்கணும்… என்கிட்ட துருதுருன்னு பேசுற அந்த சஞ்சு தான் வேணும் எனக்கு… என்கிட்ட மல்லுக்கு நிக்கற அந்த சஞ்சுவை தான் எனக்கு பிடிக்கும்… இப்படி கோழையான சஞ்சு எனக்கு வேணாம்…

 

 

“இனிமே நான் இங்க வரமாட்டேன் சஞ்சு… இன்னும் இரண்டு நாள்ல உன் உடம்பு சரியாகி நீ என்னை பார்க்க ஆபீஸ் வர்றே… அங்க வந்து என்கிட்ட சண்டை போடு… அப்போ தான் நான் உன்கூட பேசுவேன்… என்றுவிட்டு அவள் கையில் இருந்து அவன் கையை பிரித்துக் கொண்டு வெளியில் வந்தான்.

 

 

சஞ்சு அதற்கும் அழுகையே பரிசாக கொடுக்க அவனால் அங்கிருக்க முடியாமல் வெளியில் சென்றான். அவன் வாசலை தாண்டி வெளியில் வரவும் கார்த்திக்கின் அன்னை சுந்தரி அங்கே நிற்பதை கண்டான்.

 

 

“அம்மா… நீங்க….

“அப்போவே வந்திட்டேன்…

 

 

“நல்லதும்மா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…

 

 

அவர் அமைதியாய் நின்றிருக்க அதையே சம்மதமாக எடுத்துக் கொண்டு அவன் பேச ஆரம்பித்தான்.

 

 

“அம்மா… நான் உங்களை அப்படி கூப்பிடலாம்ல… கார்த்திக்கு அம்மான்னா எனக்கும் அப்படி தான்… நான் அப்படியே கூப்பிடுறேன்… எனக்கு சஞ்சுவை ரொம்ப பிடிச்சிருக்கும்மா…

 

 

“உங்களுக்கும் என்னை பிடிச்சிருந்தா, உங்க மருமகளுக்கு நான் சரியானவன்னு தோணிச்சின்னா சஞ்சுவோட அப்பாகிட்ட எனக்காக பேசுங்க… உங்களுக்கு சம்மதம்ன்னா எங்க வீட்டில சொல்லி இங்க பெண் பார்க்க வரச்சொல்றேன்…

 

 

“வேண்டாம்… பெண் பார்க்க வரவேண்டாம்… என்றார் அவர் மறுமொழியாக…

 

 

நிரஞ்சனுக்கு கோபம் துளிர்விட அவன் எதுவும் பேசாமல் வெளியேற முனைய “நான் எங்க அண்ணன்கிட்ட பேசறேன்… பெண் பார்க்க உங்கவீட்டு ஆளுங்க இங்க வரவேண்டாம்… சென்னையில இருக்க எங்க அண்ணன் வீட்டுக்கு போனா போதும்… என்று அவர் சம்மதத்தை சொல்லாமல் சொல்ல நிரஞ்சன் மகிழ்ந்தான்.

 

 

“அம்மா…. அப்போ நீங்க ஏன் காலையில அப்படி பேசினீங்க…என்று இழுக்க “அதை பத்தி நான் இன்னொரு நாள் சொல்றேன்ப்பா என்று கூறிக் கொண்டிருக்கும் போது கார்த்திக்கும் கேட்டுவிட, “அம்மா… என்று அவன் சந்தோசத்துடன் குரல் கொடுத்தான்.

 

 

“எப்படிம்மா… இப்படி திடிர்னு மாறினீங்க… என்று அவன் மனதில் நினைத்ததை ஒளியாமல் கேட்டான்.

 

 

“நிரஞ்சனும் உன்னை மாதிரி தான்னு… நீ அஞ்சு மேல எப்படி ப்ரியம் வைச்சு இருக்கியோ… அதே போல தான் அவனும்… அதை நேர்லயே பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்… அதுனால வந்த மாற்றம் தான் இது…

 

 

“ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்ன்னு சொல்லுவாங்க… நான் பழைய சோறை வைச்சு பதம் பார்த்திட்டேன்… என்னோட கணிப்பு தப்புன்னு புரிஞ்சுது அதான் அவங்க ரெண்டு பேரும் சேரட்டும்ன்னு நினைச்சேன்…

 

 

“இவங்க விரும்புறதை பத்தி நீ எதுவும் என்கிட்ட சொல்லவே இல்லை… என்று நிறுத்தினார்.

 

 

“அம்மா… அது அவங்களுக்கே நேத்து தான் தெரியும்… அதை நான் எப்படிம்மா உங்ககிட்ட சொல்ல முடியும்…

 

 

“ஆமாம்மா கார்த்திக் சொல்றது சரி தான்… எங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிக்கும்ங்கறதே இப்போ தான் நாங்க உணர்ந்தோம்… என்று தடுமாற்றமாக பதில் சொன்னான் நிரஞ்சன்.

 

 

“சரி விடுப்பா… உங்க வீட்டில பேசிட்டு நல்ல நாளா பார்த்து சீக்கிரம் வரச் சொல்லுப்பா…

 

 

“சரிங்கம்மா… நான் கிளம்புறேன்…

 

 

“டேய்… என்ன நீ வந்ததும் கிளம்புற என்றான் கார்த்திக்.

“சஞ்சு சரியாகி வரட்டும், அப்புறம் வரேன்

 

 

“என்ன சொல்லிட்டு போற நிரஞ்சன், அவளை சமாளிக்க என்னால முடியலை. நீ வேணா அம்மாவை கேளு, காலையில இருந்து அவ எங்களை படுத்தி எடுத்துட்டா…

 

 

“இல்லை இனி உங்களை கஷ்டப்படுத்த மாட்டா… நான் கிளம்பறேன் என்றுவிட்டு அங்கிருந்து உடனே வெளியேறிவிட்டான் அவன்…

 

____________________

சிங்கப்பூரில் பெடாக் ஏரியாவில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் எட்டாவது லெவலில் குடியிருந்தார் மயில்வாகனன். அவருடைய சொந்த ஊரில் அவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்துவிட்டதாக தகவல் வர வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தார்.

 

 

மனைவியை அங்கேயே விட்டுவிட்டு சில நாட்கள் ஊரில் இருந்து விட்டு பதினைந்து நாளில் திரும்பி வருவதாக கூறிவிட்டு விமான நிலையத்திற்கு சென்றார்.

 

 

எல்லா பார்மாலிட்டிஸ் முடித்து டைகர் ஏர்வேஸ் விமானத்தில் ஏறி அமர்ந்தார். சீட் பெல்ட்டை போட்டுக் கொள்ள விமானம் மெல்ல மெல்ல உயரே பறந்தது.

 

 

சீரான உயரத்திற்கு வந்த பின்னே சீட் பெல்ட்டை தளர்த்தியவருக்கு கண்கள் செருக ஆரம்பித்தது….

 

____________________

 

 

சென்னை விமான நிலையத்தில் இறங்கிய மயில்வாகனன் சொந்த ஊருக்கு செல்வதற்காக முன்னரே பதிவு செய்திருந்த வண்டி அவருக்காக காத்திருக்க அதில் ஏறி ஊருக்கு பயணமானார்.

 

 

இன்னும் சில மணிகளில் அவர் ஊருக்கு சென்றுவிடலாம் என்றிருக்க கார் நடுவழியில் நின்றுவிட்டது. டிரைவர் ஏதேதோ செய்து பார்த்தும் கார் அசையாமல் நின்றிருக்க டிரைவரோ மயில்வாகனனை நோக்கினார்.

 

 

“சார் வண்டி கிளம்ப மாட்டேங்குது. ஏற்கனவே ரொம்ப நேரம் ஆகிடுச்சு, வண்டியை பக்கத்துல மெக்கானிக் யாரும் இருந்தா கூட்டிட்டு வந்து பார்த்தா தான் சரியாகும் போலிருக்கு. இங்க பக்கத்துல மெக்கானிக் யாரும் கிடைப்பாங்களான்னு வேற தெரியலை சார். என்ன சார் செய்யலாம் என்று கையை பிசைந்தார்.

 

 

“சரி இருக்கட்டும் தம்பி, ஒண்ணும் பிரச்சனையில்லை. நல்லவேளையா இந்த குறுக்கு வழிகிட்ட வண்டி நின்னு போச்சு. நான் இது வழியாவே ஊருக்கு போய்டறேன். இப்படி போனா நான் ஒரு இருபது நிமிஷத்துல போய்டலாம்

 

 

“நீ காசு எவ்வளவுன்னு சொல்லு… என்று கேட்டு காசை கொடுத்துவிட்டு நகர்ந்தார்.

 

 

“சார்… சார்… இப்படியே இருட்டுல எப்படி சார் போவீங்க… இந்த டார்ச் வேணா எடுத்துட்டு போங்க சார்… என்று டிரைவர் டார்ச்சுடன் அருகில் வந்தார்.

 

 

“பரவாயில்லைப்பா… எனக்கு பழக்கப்பட்ட இடம் தான் நான் போய்டுவேன்… உனக்கு தான் டார்ச் தேவைப்படும் நீயே வைச்சுக்கோ என்றவர் டிரைவருக்கு நன்றி கூறி முன்னேறி நடந்தார்.

 

 

அந்த குறுக்கு வழியாக செல்ல வேண்டும் என்றால் இடையில் சுடுகாட்டை தாண்டியே செல்ல வேண்டும்… மூன்றாம் பிறை நிலவு நேரமாக வந்து கண்சிமிட்டி விட்டு விரைவாகவே மறைந்திருக்க கும்மிருட்டு அந்த இடத்தை சூழ்ந்திருந்தது.

 

 

‘ச்சே… டிரைவர்கிட்ட டார்ச் வாங்கியிருக்கலாம் போலயே… இந்த பக்கம் லைட் எல்லாம் போட்டிருப்பாங்கன்னு நினைச்சா இன்னமும் இந்த ஊர் வளராமயே இருக்கு என்று மனதிற்குள் சலித்துக் கொண்டார்.

 

 

அதுவரை மனதில் குடிகொண்டிருந்த தைரியம் மெல்ல விடைபெற ஆரம்பித்திருந்தது. எங்கு தைரியமும் துணிவும் விடைபெறுகிறதோ அங்கு பயமும் இயலாமையும் உடனே வந்து குடியேறிவிடும்.

 

 

அதுவே மயில்வாகனனுக்கும் நடந்தது, தனியே அவ்வழியே செல்ல துணிந்து தைரிய நடை போட்டவரின் கால்கள் சுடுகாட்டை தாண்டி செல்ல நடுங்கியது. மனதிற்குள் சொல்லொணாத பயம் சூழ்ந்து உடம்பில் ஒரு வித சூடு பரவியது.

 

 

சருகுகள் காற்றில் நகரும் ஓசை கூட பயங்கர சத்தமாக கேட்டது போல் உணர்ந்தார். காற்றில் மரக்கிளைகள் அசையும் ஓசை கூட ஆவென்ற சப்தத்துடன் கேட்டது.

 

 

துணிந்து மேலே முன்னேறி நடக்க காற்றில் இருவாட்சியின் மணம் மெல்ல வீசி அவர் நாசியை துளைத்தது. ‘என்னது இருவாட்சியின் மணம் போல் இருக்கிறேதே. ஆனால் சுடுகாட்டில் எப்படி அந்த வாசம் வரும் என்று யோசித்துக் கொண்டே முன்னேறினார்.

 

 

அவர் சுடுகாட்டின் நுழைவு வாயிலை கடந்து செல்லவும் அவர் பின்னே ஒரு மெல்லிய கொலுசொலியின் சத்தம் துல்லியமாக கேட்டது.

 

 

அதற்கு மேல் நடக்க முடியாமல் கால்கள் தரையோடு வேரூன்றியது போல் நின்றுவிடவும் கொலுசொலியின் சத்தமும் நின்றிருந்தது. பயத்தை களைந்து மேலே நடக்க முயன்றார்.

 

 

மீண்டும் கொலுசொலி அவர் நடைக்கு சுருதி சேர்ப்பது போல் நடக்கவும் அப்படியே நின்றவர் பின்னால் திரும்பி பார்க்க ஆள் அரவமற்று நிசப்தமாக மயான அமைதியாக இருந்தது அந்த கணம்.

 

 

காற்று கூட இயக்கத்தை நிறுத்தி வேடிக்கை பார்க்க தயாரானது போல் இருந்தது. புயலுக்கு முந்தைய அமைதி எப்படி பயத்தை கொடுக்குமோ அது போன்ற பயம் அவருக்கு தோன்றியது.

 

 

ஏதோ நடக்க போகிறது என்று இயல்பான உணர்வு எச்சரிக்கை செய்ய எதுவும் செய்ய இயலாமல் நின்றிருந்தார்.வந்த வழியே திரும்பி செல்லலாம் என்றால் அவர் பாதி தூரத்தை கடந்திருந்திருந்தார். முன்பு தெரிந்த சாலை கூட இப்போது கண்ணுக்கு தெரியாமல் மறைந்திருந்தது.

 

 

யாருக்காவது போன் செய்து வரச் சொல்லலாம் என்று நினைத்து கைபேசியை எடுத்து பார்க்க அது தன் இயக்கத்தை மொத்தமாக நிறுத்தியிருந்தது சார்ஜ் இல்லாமல்.

 

 

மீண்டும் நடையை தொடர கொலுசொலியும் உடன் நடையை தொடர்ந்தது, அதை தொடர்ந்து பூவாசமும் வீச அவர் நடையை மீண்டும் நிறுத்தினார். ஆனால் இப்போது கொலுசொலி நடையை நிறுத்தியிருக்கவில்லை.

 

 

அவர் பின்னால் கேட்ட அந்த சத்தம் அவரை கடந்து முன்னால் வேகமாக சென்றதை அவரால் உணர முடிந்தது. இதயம் அதிவேகமாக துடிக்க ஆரம்பித்தது, பயத்தில் கண்கள் இருண்டது போல் இருந்தது. தன்னை மெதுவாக ஆசுவாசப்படுத்திக் கொள்ள முனைந்தார் அவர்.

 

 

விட்டிருந்த நடையை மீண்டும் எட்டிப் போட்டு சுடுகாட்டை கடந்து செல்ல அவர் காதில் சுடுகாட்டில் இருந்து ஓலங்கள் கேட்டது. கூகையும் நடு இரவில் அலற சற்று நேரத்தில் எந்த சத்தமும் இல்லாமல் நிசப்தமாயிருந்தது.

 

 

அந்த நிமிடம் அவர் காதில் கேட்டது எல்லாம் பிரமையோ என்பது போல் தோன்றியது அவருக்கு. சுடுகாட்டை தாண்டி வரிசையாக நிறைய மரங்கள் இருக்க ஒரு பெரிய ஆலமரமும் அங்கு வீற்றிருந்தது.

 

 

“மயிலு… மயிலு… என்று ஆலமரத்தின் கீழ் நின்றிருந்த ஒருவர் அழைக்க நிம்மதி பெருமூச்சு வந்த மயில்வாகனன் வேகமாக நடந்து ஆலமரத்தினருகே சென்றார்.

 

 

முதலில் கேட்ட அந்த குரல் அவரருகில் வந்து “மயிலு… எப்படா வந்தஊருக்கு… ஒரு வார்த்தை கூட சொல்லவேயில்லை நீ வரப் போறன்னு…

 

 

“முதல்லயே சொல்லியிருந்தா நானே உன்னை அழைக்க மெட்ராசுக்கு வந்திருப்பேனே என்ற கூறிய குரலை கேட்டு மயில்வாகனன் அதிர்ந்தார்.

 

 

யாருடைய இறப்புக்காக சிங்கப்பூரில் இருந்து வந்தாரோ அவரே மயில்வாகனனிடம் பேசியதில் அவரின் இதயம் தாறுமாறாக துடிக்க அப்படியே கிழே சரிந்தார் அவர்…..

Advertisement