Advertisement

அத்தியாயம் –21

 

 

நிரஞ்சன் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தாலும் அவன் எண்ணமோ சஞ்சு பேசியதிலேயே இருந்தது. வீட்டில் நடந்ததை நினைவு கூர்ந்தான்.

 

 

நிரஞ்சன் சஞ்சனாவிடம் அவன் தந்தையையும் மேகநாதனையும்கைது செய்வது குறித்தே அவளிடம் பேசியிருந்தான். மேகநாதன் என்று அவன் சொன்னதும் சஞ்சனா முதலில் விழிக்க பின் “இவர் அந்த மேகநாதனா என்றாள் நிரஞ்சனிடம்.

 

 

“ஹ்ம்ம் அவரே தான்… அவர் இப்போ நம்ம ஊருக்கு வந்திருக்கார், இவ்வளவு நாள் ஊரைவிட்டு போய் வெளிநாட்டுல செட்டில் ஆனவர் ஒரு சொத்து விஷயமா இங்க வந்திருக்கார்…

 

 

“அவரோட சொத்து கைமாத்த விடாம நான் தான் இப்போ நிறுத்தி வைச்சிருக்கேன்… அதுவுமில்லாம அவரோட பாஸ்போர்ட் விசா எல்லாமே முடக்கி வைச்சிருக்கேன்…

 

 

“எப்படி நிரு முடக்குனீங்க… அவர் எதுவும் கேள்வி கேட்கலையா… என்றவளிடம் “நான் தற்காலிகமா போக முடியாம செஞ்சிருக்கேன்… அவர்க்கு இதுவரை எந்த சந்தேகமும் இல்லை…

 

 

“ஆனா நிரு இதெல்லாம் தேவையா… நீங்க இதை பத்தி யோசிக்கவே இல்லையா… இது சரியா வருமா நிரு என்று அவள் அவனிடம் கூறினாலும் அவன் முடிவு சரியென்பதில் அவள் எந்த மாற்று கருத்தும் கொள்ளவில்லை.

 

 

அவள் கேள்வி கேட்டது கூட ஸ்ரீமதியின் நிலையை நினைத்தும் கவிதாவின் வாழ்வு இதனால் பாதிக்கப்படும் என்று தான். “என்ன சஞ்சு இப்படி பேசுற, அப்போ தப்பு செஞ்சா தப்பிச்சுடலாம்ன்னு எல்லாருக்கும் தோண ஆரம்பிச்சுடும்

 

 

“நான் அதுக்கு சொல்லலை நிரு அத்தை பத்தி யோசிச்சீங்களா… அவங்ககிட்ட பேசினீங்களா… கவிதா அண்ணி வீட்டில என்ன சொல்லுவாங்க…

“சஞ்சு போதும் நிறுத்து… இப்படி எல்லார்க்காகவும் யோசிச்சா எந்த குற்றவாளிக்கும் தண்டனையே கிடைக்காது… கவிதா வீட்டில என்ன நினைப்பாங்கன்னு எனக்கு கவலையில்லை… அம்மாகிட்ட பேச எனக்கு தைரியமில்லை… என்று முடித்துவிட்டான்.

 

 

அவளிடம் அப்படி சொல்லிவிட்டானே தவிர அவனுக்குமே அவன் அன்னையை பற்றிய கவலை தான்… ஆனால் அதை எல்லாம் இப்போது யோசிக்க முடியாது என்று தோன்ற அந்த எண்ணங்களை புறந்தள்ளினான்.

 

 

அவள் வேலை செய்யும் பத்திரிகை அலுவலகத்தின் வாசலில் வண்டியை நிறுத்த இருவருமாக இறங்கி எடிட்டரின் அறைக்கு சென்றனர். “வாங்க… வாங்க… ரெண்டு பேரையும் இன்னைக்கு ஒண்ணா பார்க்கறேன்…

 

 

“நான் ஊருக்கு போயிருந்த நேரத்துல நிச்சயத்து முடிச்சுட்டு இப்படி சைலென்ட்டா வந்து நிக்குறீங்க… என்றார் எடிட்டர்.

 

 

“சார் அதான் சொல்லிட்டீங்களே நீங்க ஊருக்கு போயிட்டீங்கன்னு… நாங்க என்ன சார் பண்ணுறது…நீங்க எப்படியும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுவீங்கள்ள சார்…

 

 

“அதெப்படிம்மா வராம போவேன்… நீங்க ரெண்டு பேரும் சந்திக்க ஒருவகையில நான் தானே காரணம்…

 

 

“அது சரி தான் சார்… என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளை போதும் என்பதாய் தடுத்த நிரஞ்சன் எடிட்டரிடம் திரும்பி “அங்கிள் அந்த கதை எல்லாம் நாம அப்புறம் பேசிக்கலாம்…

 

 

“நான் இப்போ பேச வந்த விஷயமே வேற, கிளைமாக்ஸ் நெருங்கிட்டு இருக்கு… ரெண்டு பேரும்நீட்டி முழக்கிட்டு பேசிட்டு இருந்தா படிக்கறவங்க கடுப்பாக மாட்டாங்க…

 

 

“டேய் தம்பி எப்படி சுவாரசியம் கூட்டணும்ன்னு பத்திரிகைக்காரனுக்கு தெரியும்… நீ சொல்ல வந்ததை சொல்லு…

‘இவர் யாரையுமே நிம்மதியா பேசவிட மாட்டார் போல என்று அவனை திட்டினாலும் அவன் பேசப்போகும் விஷயம் பெரிதென்பதால் அமைதி காத்தாள் சஞ்சு.

 

 

எடிட்டரிடம் அவன் சொல்லி முடிக்கவும் அவர் சற்று அமைதி காத்தார். “என்ன நிரஞ்சன் சொல்ற… நான் உன்னோட குடும்ப நண்பன் அப்படிங்கற முறையில சொல்றேன்… இதெல்லாம் சரியா வருமா…

 

 

“சொல்லுங்க சார் இதே தான் நானும் கேட்டுட்டு இருக்கேன்… இவருக்கு நீங்களாச்சும் புரியற மாதிரி சொல்லுங்க… என்ற சஞ்சுவை நிரஞ்சன் முறைத்தான்.

 

 

“இங்க பாருங்க இது தான் என் முடிவு… நீங்க மத்தவங்களையும் ஒண்ணா சேர்த்து கூட்டிட்டு வாங்க… யாருமே மிஸ் ஆகக்கூடாது… சஞ்சு நான் சொன்ன மத்ததும் நடக்கணும் எல்லாம் உன் பொறுப்பு…

 

 

“இன்னும் கொஞ்ச நேரத்துல நீங்க எல்லாம் அங்க கிளம்பி வரணும்… என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான். “என்னம்மா இவன் இப்படி சொல்லிட்டு போறான்…

 

 

“எனக்கும் என்ன பண்ணுறதுன்னு புரியலை சார்… அத்தையை நினைச்சா தான் கஷ்டமா இருக்கு… இவர் எதையுமே யோசிக்க மாட்டேங்குறார்… சார்… நான் கொஞ்சம் வெளிய போயிட்டு சீக்கிரமே வந்திடறேன்… என்று அவரிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள்.

 

____________________

 

 

நிரஞ்சன் அந்த ஹோட்டல் வளாகத்திற்குள் நுழைய பின்னோடு அர்ஜுனும் இறங்கினான். இன்னும் சில சீருடை அணிந்த காவலர்களும் இறங்க ஹோட்டல் பரபரப்பானது. நிரஞ்சன் ரிசப்ஷனில் விசாரிக்க மேகநாதன் அறையில் இருக்கிறார் என்ற தகவலறிந்து அவர் அறைக்கு செல்ல மின்தூக்கியில் ஏறினான்.

 

 

மேகநாதனின் அறைக்கு வெளியே நின்றுக் கொண்டு அழைப்பு மணியை அழுத்த உள்ளேயிருந்து எந்த பதிலும் இல்லை… பத்து நிமிடம் கடந்து செல்ல அவனுக்கு ஏதோ விபரீதமாக தோன்றியது.

 

 

ரிசப்ஷனுக்கு அழைத்து அவர் மனைவியை பற்றி விசாரித்தான். அவர் காலையிலேயே வெளியே சென்றுவிட்டதாக தகவல் அறிய அந்த அறையின் மாற்று சாவியை உடனே எடுத்து வருமாறு கூறினான்.

 

 

ஆனால் மாற்று சாவி வைத்திருப்பவர் வெளியே சென்றிருப்பதாகவும் அரைமணி நேரத்தில் அவர் வந்த பின் எடுத்து தருவதாக அப்பெண்மணி சொல்ல அவன் கோபம் கரையை கடந்தது.

 

 

அர்ஜுன் அவனை சாந்தப்படுத்த முயற்சி செய்ய சட்டென்று நினைவு வந்தவனாக கைப்பேசியில் மேகநாதனின் மனைவியின் எண்ணை பதிவு செய்திருந்ததை தேடி எடுத்தான்.

 

 

அவசரமாக பொத்தானை அழுத்தி அவருக்கு அழைக்க “ஹலோ… என்றார் மேகநாதனின் மனைவி எதிர்புறமிருந்து.

 

 

“மேடம் நான் நிரஞ்சன் ACP, நீங்க தங்கியிருக்க ஹோட்டல்ல தான் இருக்கேன்… சாரை பார்க்க வந்தேன், ரொம்ப நேரமா காலிங்பெல் அழுத்திட்டே இருக்கோம்… சார் கதவை திறக்கலை…

 

 

“இந்த அறையோட சாவி உங்ககிட்ட தானே இருக்கு… நீங்க எப்போ வருவீங்க, எங்க இருக்கீங்க… என்றான். அவர் பதிலுக்கு வேறு கேள்விகள் கேட்டு அவனை துளைத்துவிட்டு அதன்பின்னே லிப்ட்டில் இருப்பதை சொன்னார்.

 

 

லிப்டை திறந்து அவர் வெளியே வர அவசரமாக ஓடிய நிரஞ்சன் சாவியை அவர் கையில் இருந்து வாங்கி வேகமாக அறைக்கதவை திறந்தான்.

 

 

அங்கு மேகநாதனோ நாக்கு வெளியே தள்ளிக் கொண்டிருக்க கண்கள் சொருக இருகைகளாலும் அவர் கழுத்தை நெருக்கிக் கொண்டிருந்தார். “ஹலோ என்ன பண்றீங்க நீங்க… என்று அவரை உலுக்கினான்.

அவர் கைகளை பிரித்து விட அவர் மயக்க நிலைக்கு சென்றார். அவரை தூக்கிக் கொண்டு அவசரமாக மருத்துவமனை விரைந்தனர்… முதலுதவிக்கு பின் அரைமணி நேரத்தில் மெதுவாக அவர் கண்விழித்து பார்க்க எதிரில் அழுதுக் கொண்டு நின்றிருந்த மனைவியை பார்த்தார்.

 

 

“நான் உயிரோட தான் இருக்கேனா… என் கழுத்தை யாரோ நெரிச்சாங்களே…

 

 

“உங்க கழுத்தை யாரோ நெரிக்கலை, நீங்களே உங்க கழுத்தை நெரிச்சீங்க… என்ற குரல் கேட்டு மறுபுறம் பார்த்தார் மேகநாதன். அவருக்கு பதில் சொன்னது நிரஞ்சனே.

 

 

நெற்றி சுருக்கி யோசித்தவர் “நீ நாகுவோட பையன் தானே… நீ எப்படிப்பா இங்க… என்று கேட்க அவர் மனைவியோ “அவர் உங்களை தான் பார்க்க வந்தார்… நல்லவேளை அவர் மட்டும் இல்லைன்னா உங்களுக்கு என்ன ஆகியிருக்குமோ… என்று நடந்ததை கூறினார்.

 

 

“தம்பி நீங்க நல்ல நேரத்தில வந்ததுனால நான் பிழைச்சேன்… என் உயிரை காப்பாத்தினதுக்கு ரொம்ப நன்றி தம்பி

 

 

“உங்களை அவ்வளவு சீக்கிரமா சாகவிட்டிருவேனா சார்… நான் உங்களை காப்பாத்தினது… உங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க தான்… என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பத்திரிக்கையும் மீடியாவும் உள்ளே நுழைந்தது.

 

 

“இவங்க எல்லாம் எதுக்கு வர்றாங்க… டாக்டர்.. என்ற கூற “உங்களுக்கு ஒண்ணுமில்லைன்னு டாக்டர் சொல்லிட்டார்… நான் உங்களை கைது பண்ணறேன்… அர்ஜுன்… என்று கூற விரைந்து வந்த அர்ஜுன் அவருக்கு விலங்கிட்டான்.

 

 

“எதுக்கு என்னை கைது பண்றீங்க… என்ன காரணம் நான் இதுவரைக்கும் எந்த தப்புமே பண்ணதில்லையே… பதிலுக்கு அவனோ “அப்படியா அப்போ செண்பகம் மாரி யாருன்னே உங்களுக்கு தெரியாதா… என்று கூற அவரோ விழித்தார்.

“தப்பே செய்ததில்லைன்னு சொன்னீங்க… இப்போ அமைதியானா என்ன அர்த்தம்…

 

 

“நான் எந்த தப்பும் பண்ணலை… நீங்க சொல்ற பேருல எனக்கும் யாருமே தெரியாது… என்று பதிலுக்கு அழுந்ததிருந்தமாக பொய்யுரைத்தார் அவர்.

 

 

“எல்லாத்துக்கும் ஆதாரம் என்கிட்ட இருக்கு… இது பலவேசத்தோட டைரி இது வந்து கோர்ட்ல நடந்ததை சொல்லும்… அதை தவிர்த்தும் என்கிட்ட ஆதாரங்கள் இருக்கு…

 

 

“மூணு கொலை பண்ணிட்டு இந்த ஊரைவிட்டு தப்பிச்சு போய் கல்யாணம் பண்ணி குழந்தை குட்டி பெத்து வளர்த்திட்டு அப்புறமா சாவகாசமா இங்க வருவீங்க… பண்ண தப்பு இந்த ஊரு உலகத்துக்கு தெரியாமலே போய்டும்ன்னு நினைச்சீங்க அப்படி தானே…

 

 

“என்னது மூணு கொலையா… ரெண்டு பேரு தானே… என்று அவர் வாய்விட்டு கூற அவரின் மனைவி தூவென்று அவரை காரி உமிழ்ந்தார்.

 

 

“அந்த பொண்ணு கருவுல உருவான அந்த சிசுவையும் சேர்த்து மூணு கொலை… புரியலையா, அப்போ அந்த பொண்ணு கர்ப்பமா இருந்தா… என்று அவருக்கு மட்டும் விளக்கம் தராமல் தொலைக்காட்சிக்கும் பத்திரிக்கைக்கும் சேர்த்தே தகவல் சொன்னான்.

 

 

மேகநாதனோ “எப்போ உன்னோட… என்றவர் “நாகு… என்றார்… “உள்ள போங்க கொஞ்ச நேரத்தில அவரும் வந்து சேருவார்… என்றான்.

 

____________________

 

 

சஞ்சு வெளியில் சென்றிருந்தவள் மீண்டும் திரும்பி வர மற்றவர்கள் மேகநாதனை கைது போயிருப்பதாக தகவல் வர அவளும் அங்கு விரைந்தாள். செல்லும் வழியிலேயே அவளுக்கு நிரஞ்சனின் வீட்டிற்கு போகச்சொல்லி எடிட்டர் கூற அங்கு சென்றாள்.

 

 

அவள் அங்கு சென்று சேரவும் அவளின் மற்ற நண்பர்களும் வந்து சேரவும் சரியாக இருந்தது. வாசலில் டவேரா வந்து நிற்கவும் நிரஞ்சன் மற்றும் சில காவலர்கள் கேட்டின் உள்ளே நுழைந்தனர்.

 

 

ஸ்ரீமதி வீட்டின் உள்ளறையில் இருக்க மகள் கவிதா அப்போது உள்ளே நுழைந்தாள். விரைந்து வந்தவள் அவள் அன்னையின் கையை பற்றிக் கொண்டாள்.

 

 

“அம்மா பயப்படாதேம்மா… எதுவுமில்லை… தைரியமா இரு… என்று கூற “எனக்கு எதுக்கும்மா தைரியம் சொல்ற… என்னாச்சு… என்று பதட்டமானவர் “நி… நிரஞ்சனுக்கு ஏதாச்சும்… என்று கூறி முடிப்பதற்குள் அவன் உள்ளே நுழைந்தான் அர்ஜுனுடன்.

 

 

மகனை பார்த்ததும் திருப்தி அடைந்த ஸ்ரீமதி, அவனோடு வந்தவர்களை நோட்டமிட்டார். ஸ்ரீமதிக்கு அது ஒன்றும் புதிதல்ல, மகன் என்று காவல் துறையில் பணிய புரிய ஆரம்பித்தானோ இது போல் அவ்வப்போது வந்து செல்வதுண்டு என்று அவர் அறிவார்.

 

 

ஆனாலும் இன்று மகனின் முகத்தில் தெரிந்த ஏதோவொன்று அவர் அடிவயிற்றினில் பயம் கொள்ளச் செய்தது. நிரஞ்சன் அர்ஜுனை பார்த்து கண்ணசைக்க முன்னால் வந்தவன் “கவிதா அப்பா எங்கேம்மா என்றான்.

 

 

அவள் விழிகளோ அன்னையை பார்க்கவும் அண்ணனை பார்க்கவும் பின் தந்தையின் அறையை பார்க்கவும் பதில் சொல்லாமல் விழித்தாள். ஏற்கனவே சஞ்சனா அவளின் வீட்டிற்கு வந்து நடந்ததை கூறியிருந்தாள்.

 

 

தந்தையை நினைத்து வெட்கம் கொண்ட அந்த மகள் தாயை நினைத்து துயர் கொண்டாள். அவளின் மாமியாரும் மாமனாரும் இனி அவளுக்கு அவள் குடும்பத்தினருடன் இருந்த தொடர்பு இன்றே முடிந்தது என்று கூறிவிட்டனர்.

 

 

எதையும் பொருட்படுத்தாது சஞ்சு அவள் தாய்க்கு துணையாக அழைத்தாளேன்று கணவரிடம் மட்டும் சொல்லிவிட்டு வேகமாக அவள் அன்னையை காண வந்திருந்தாள்.

 

 

“என்னப்பா ரஞ்சன் அப்பாவை எதுக்கு கூப்பிடுற… என்ன விஷயம் என்கிட்ட சொல்லுப்பா… என்றார் ஸ்ரீமதி.

 

 

“நான் இப்போ உங்க பிள்ளையா வரலை, ஒரு குற்றவாளியை பிடிக்க வந்தேன்… என்றான் அவன் இறுக்கமாக.

 

 

“ஏன்ப்பா உங்கப்பா தப்பேதும் பண்ணியிருக்க மாட்டாரே… ஏதாச்சும் கணக்குல பொய் கணக்கு எதுவும் காட்டிட்டாரா… அதுக்கு தான் வந்திருக்கியா… என்றார் கணவனின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையில் அப்பாவியாக.

 

 

“நான் வருமான வரித்துறையில இல்லையே… நான் குற்றம் செய்யறவங்களை பிடிக்கற போலீஸ்… வரி ஏய்ப்பு செய்யறவங்களை பிடிக்கிறவனில்லை… அதுக்கு வேற ஆளுங்க…

 

 

அப்போது தூங்கி எழுந்து அறையில் இருந்து வெளியே வந்தார் நாகேந்திரன். இரண்டு எட்டு எடுத்து முன்னே வைத்தவன் அவர் எதிரில் நின்றுக் கொண்டு “உங்களை கைது செய்யறேன்… என்றான்.

 

 

“என்னது… என்னடா உளர்ற… என்றார் கோபமாக…

 

 

“உளறல் இல்லை உண்மை தான்… நீங்க செய்த தப்புக்கு தான் உங்களை கைது பண்ணறேன்…

 

 

“தப்பா நான் என்ன தப்பு செஞ்சேன்… நான் எதுவுமே செய்யலையே…

 

 

“வாழ்க்கையில ஒரே தரம் தப்பு செஞ்சவனுக்கு தெரியும் அவன் என்ன தப்பு செஞ்சான்னு… தப்பையே செஞ்சுட்டு இருக்கவனுக்கு தெரியாது அவன் எந்த தப்பை செஞ்சான்னு…

 

 

“என்னடா உன் பேச்சு தொனியே மாறுது… என்றவரின் தொனி தான் உண்மையிலேயே வேறாய் இருந்தது.

 

 

கணவனையும் மகனையும் மாறி மாறி பார்த்தவருக்குள் விழிகளில் நீர் நிறைந்து பார்வையை மறைத்தது.

 

 

“ஆமாம் மாறுது… எந்த வம்பும் பண்ணாம பேசாம என்கூட வாங்க…

 

 

“நான் என்ன தப்பு பண்ணேன் எதுக்கு என்னை அரெஸ்ட் பண்ணப் போறே… அதை சொல்லு முதல்ல… இந்நேரம் என் புள்ளை அருண் உயிரோட இருந்திருக்கணும்… அப்பனை எதிர்த்து நின்ன உன்னை வெட்டியிருப்பான்…

 

 

“போதும் நிறுத்துங்க… அண்ணன் உயிரோட இருந்தாலும் தப்பு பண்ண அப்பனை விட்டு வைச்சிருக்க மாட்டான்… உங்க மேல அவனுக்கு பாசமிருக்கலாம்… அதுக்காக நீங்க பண்ண தப்பை எல்லாம் அவன் ஆதரிச்சிருக்க மாட்டான்…

 

 

“என்னடா தப்பு தப்புன்னு சொல்லிட்டு இருக்க…

 

 

“அப்பா… போதும் நிருந்துங்க… என்ற குரல் மகளிடத்தில் இருந்து வர “என்னம்மா கவிதா நீயும் இப்படி பேசற… உங்கப்பா தப்பு செய்வேனா

 

 

“செஞ்சிருக்கீங்கப்பா… இதுவரைக்கும் உங்களை நாங்க அமைதியான அன்பான அப்பாவா தான் பார்த்திருக்கோம்… இன்னைக்கு தான் உங்களோட இன்னொரு முகத்தை பார்க்கறோம்…

 

 

“இதுவரைக்கும் நீங்க இப்படி சத்தமா கூட பேசினதில்லையேப்பா எங்ககிட்ட… இதுல இருந்தே தெரியலையாப்பா நீங்க இவ்வளவு நாளா நல்லவர் மாதிரி நடிச்சிருக்கீங்கன்னு… அண்ணன் உங்களை கேள்வி கேட்டதும் உண்மையிலே தப்பு பண்ணாதவனா இருந்தா இப்படி பேச மாட்டானே…

 

 

“கவிதா… என்ற அவர் கத்த இப்போது நிரஞ்சன் அவரை முறைத்தான். “போதும் நீங்க நடிச்சது எல்லாம், மாரி செண்பகத்தை கொலை செஞ்சு அதை மறைச்சு அவங்களை பத்தி தப்பான அபிப்பிராயத்தை ஏற்படுத்தி நடந்த விஷயத்தை மூடி மறைச்ச குற்றத்துக்காக உங்களை கைது செய்யறேன்…

 

 

“மாரியா… செண்பகமா… அவங்க யாருன்னு எனக்கு தெரியாது… என்று அவர் சொல்ல அவர்கள் வீட்டில் வேலை செய்த பொன்னனை அழைத்துக் கொண்டு சஞ்சு வந்தாள்.

 

 

“எங்க இவரை பார்த்து சொல்லுங்க மாரி, செண்பகம் யாருன்னு தெரியாதுன்னு… என்று நிரஞ்சன் கூற நாகேந்திரன் போட்டிருந்த நல்லவன் முகத்திரை கிழிந்து அவரின் நிஜ முகத்தை காட்டியது.

 

 

“அப்புறம் மல்லிகா அவங்களையும் நீங்க மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்… உங்களால சீரழிக்கப்பட்ட பெண்களோட எண்ணிக்கை நெறைய… ஆனா எங்களுக்கு கொஞ்சம் தான் தெரிஞ்சிருக்கு…பொன்னன் அங்கிள்… என்று கூப்பிட்டான்

 

 

அவன் கூப்பிட்டதும் பொன்னன் தனக்கு தெரிந்ததை கூற அவனை தடுத்த நாகேந்திரன் “இதுக்கெல்லாம் என்ன ஆதாரம்… என்றார் அசட்டையாக. மேகநாதனை தவிர மற்ற யாரும் உயிருடன் இல்லை என்ற தைரியமும், மேகநாதன் உண்மையை சொல்ல மாட்டார் என்ற நம்பிக்கையிலும்.

 

 

“இது பலவேசத்தோட டைரி, பண்ண தப்பையெல்லாம் வாக்குமூலம் போல எழுதி வைச்சிருக்கார்…

 

 

“அது யாரோ பத்தி எழுதியதா இருக்கும்… நான் தான்னு என்ன நிச்சயம்…

 

 

“உங்களை பத்தி அந்த டைரி படிச்சதும் தெரிஞ்சுகிட்டேன்… இப்போ தான் உங்க நிஜமுகத்தை பார்க்கறேன்… இப்படி கேட்பீங்கன்னு நினைச்சேன்… என்றவன் அவர் முன் எதையோ எடுத்து நீட்டினான்.

 

 

“இது என்னன்னு தெரியுதா… உங்களோட வெள்ளி அரணாக்கொடி… நீங்க செண்பகத்தை புதைச்ச இடத்துல இருந்து எடுத்தது… இது தவிர்த்து நீங்களே நேரடியா உங்களோட நண்பர்கிட்ட கொடுத்த வாக்குமூலமும் என்கிட்ட இருக்கு… என்றவன் அதற்கு மேல் அவரை பேசவிடவில்லை.

 

 

அர்ஜுன் அவருக்கு விலங்கிட மற்றவர்கள் அவரை அழைத்துச் செல்ல கூட்டத்துடன் நின்றிருந்த சஞ்சனாவும் அவள் உடன் வந்தவர்களுடன் வண்டியில் ஏறிச் சென்றாள்.

 

 

வீட்டில் தனித்து விடப்பட்ட ஸ்ரீமதி இன்னமும் தன்னிலை வராதிருக்க அப்போது கவிதாவின் மாமனாரும் மாமியாரும் உள்ளே நுழைந்தனர். பின்னோடே அவள் கணவனும் நுழைந்தான்.

 

 

கவிதாவின் மாமியார் அவளை திட்டிவிட்டு மகனை சேர்த்து ஏசியவர் ஸ்ரீமதியை பார்த்து நறுக்கென்று கேட்டுவிட்டு மருமகளின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு போனார்…

 

 

உடனிருந்த மகளும் இல்லாமல் கட்டிய கணவனின் துரோகத்தை தாங்க முடியாமல் அப்படியே நெஞ்சை பிடித்து அமர்ந்தவருக்கு ஒன்றுமே ஓடவில்லை.

 

 

கட்டிய கணவன் ஹரிச்சந்திரனாக இல்லாவிட்டாலும் கட்டிய மனைவிக்கு துரோகம் செய்யாதவனாக இருக்க வேண்டும் என்று அவள் ஆசைப்படுவாள். ஸ்ரீமதியும் அப்படி ஒரு எண்ணம் கொண்டிருந்ததில் தவறில்லையே…

 

 

ஆனால் நடந்தது என்ன… எத்தனையோ பெண்களுடன் உறவாடியவன் தனக்கு கணவனா… பத்தோடு பதினொன்றாக நானும் இருந்திருக்கிறேனா… இவர் கையில் தாலி வாங்கி குழந்தை பெற்று ச்சே என்று அருவருப்பு தோன்றியது…

 

 

கழுத்திலிருந்த தாலி பாரமாக தோன்றியது, அதை கழட்டி வீச அவருக்கு துணிவில்லை… இன்னமும் கல்லானாலும் கணவன் என்று நம்பும் பெண்மணியாயிற்றே…

உடம்பெல்லாம் தீயாய் எரிந்தது போல் இருந்தது. இத்தனை வருடம் எப்படி அவருடன் வாழ்ந்தேன் நினைக்க நினைக்க அவர் மனம் ஆறாமல் இருந்தது. எத்தனை பெண்கள் கண்ணீர் சிந்தினார்களோ கடவுளே…

 

 

அவர் எண்ணமெல்லாம் எத்தனையோ பெண்களின் வாழ்க்கையை சீரழித்தது போல் என் வாழ்க்கையும் அழித்துவிட்டார் என்ற எண்ணமே தோன்ற கண்களை துடைத்துக் கொண்டு முடிவெடுத்தவராக உள்ளே சென்றார்.

 

 

சஞ்சுவுக்கு ஏனோ நெஞ்சு கூடு காலியானதை போன்ற ஒரு உணர்வு சட்டென்று வண்டியை நிறுத்தச் சொல்லி பாதிவழியிலேயே இறங்கிக்கொண்டவள் நிரஞ்சனின் வீட்டை நோக்கிச் சென்றாள்…

 

 

திறந்திருந்த அறைக்கதவு அவளுக்குள் குளிரை பரப்பியது… “கவிதா… கவிதா… எங்க இருக்கீங்க… என்று குரல் கொடுத்தாள். உள்ளேயிருந்து எந்தவித பதிலும் இல்லாததால் ஒவ்வொரு அறையாக சென்றாள்.

 

 

கவிதா உள்ளே இருப்பதற்கான அடையாளம் ஏதுமில்லாதிருக்க “அத்தை… என்று அழைத்து பார்த்தாள். சமையலறையை ஒட்டியிருந்த அறையில் ஏதோ உருளும் சத்தம் கேட்டது……

அத்தியாயம் –22

 

 

அந்த அறைக்கதவின் முன் சென்று நின்றவள் அதை திறக்க முயல உள்ளே அது பூட்டப்பட்டிருந்தது. “அத்தை… அத்தை… என்று அழைத்து பார்த்தும் பயனில்லாததால் அந்த அறையில் சன்னல் ஏதும் இருக்கிறதா என்று நோட்டமிட, சன்னலோ வெளிபக்கமாக இருக்க அங்கு விரைந்தாள்.

 

 

பாதி திறந்திருந்த சன்னலில் அவள் கண்ட காட்சி அவள் அடிவயிற்றில் பயத்தை உண்டு செய்தது… “அத்தை… என்ன பண்றீங்க அத்தை… வேண்டாம் இப்படி எல்லாம் செய்யாதீங்க அத்தை…

 

 

“ஏற்கனவே மாமா இப்படி செஞ்சதில அவர் நொந்து போயிருக்கார்… நீங்களும் அவரை விட்டு போக முடிவெடுத்தா அவர் என்ன பண்ணுவார் அத்தை…

 

 

“வேண்டாம் அத்தை ப்ளீஸ் இப்படி எண்ணம் வேண்டாம்… கதவை திறங்க அத்தை என்று அவள் கதற ஸ்ரீமதியோ எதையுமே காதில் வாங்காதவராக தன் உயிரை மாய்த்துக் கொள்வதிலே குறியாய் இருந்தார்…

 

 

புடவையில் சுருக்கிட்டு முடித்தவர் தன் கழுத்தில் மாட்டிக்கொண்டிருக்க “அத்தை… கடைசியா ஒண்ணு சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க… உங்க மகனை இந்த உலகத்தில நீங்க அனாதையா விட்டு போகப் போறீங்களா…

 

 

“நான் இருக்கேனே பார்த்துக்குவேன்னு நீங்க நினைக்காதீங்க… நானும் இனி அவருக்கு இருக்க மாட்டேன்… அவர் இனி தனியா தான் இருக்கணும் அனாதையா… நீங்க இப்படி ஒரு முடிவெடுத்தா எனக்கும் வேற வழியில்லை…

 

 

“இதே வீட்டில வேற ஒரு ரூம்ல நானும் இப்படியே தொங்கிடுவேன்… இது தான் உங்களுக்கு வேணுமின்னா என்ன வேணும்னாலும் செய்ங்க…

 

“நான் சும்மா சொல்றேன்னு நினைக்காதீங்க… நான் சொல்றதை செய்வேன்… உங்க பிள்ளைக்கு பதில் சொல்ற அளவுக்கு எனக்கு தைரியம் இல்லை… நீங்களே முடிவு பண்ணிக்கோங்க என்றவள் அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை.

 

 

உள்ளே வந்து சோபாவில் அமர அந்த அறைக்கதவு திறந்து வேகமாக எழுந்தவள் “ஏன் அத்தை… எதுக்கு இப்படி செய்ய நினைச்சீங்க… என்று கேட்டதும் கரைகடந்த வெள்ளமாய் கண்ணீர் கரைந்து வழிந்துக் கொண்டிருந்தது.

 

 

இது நாள் வரை கட்டியவன் கண்ணியவான் என்று எண்ணிக் கொண்டிருந்தது ஒரே நாளில் தூள் தூளாக போனதில் ஏற்கனவே நொந்திருந்தவருக்கு தேறுதலாய் உடனிருந்த மகளையும் அவள் வீட்டினர் வந்து அழைத்து சென்றிருந்தனர்.

 

 

அந்த வீட்டில் ஆறுதலாக ஒருவர் கூட இல்லையென்பதே பெரிய வலியாய் இருந்தது. சொல்லி அழக்கூட ஆளில்லாத தனிமையே அவரை மேலும் வாட்டியிருக்க அப்படி ஒரு முடிவை அவர் எடுத்திருந்தார்.

 

 

இப்போது மருமகளின் பேச்சில் அவரின் தற்கொலை எண்ணம் தடைபட நடந்தவை கண் முன் வந்து பெருங்குரலில் அழ ஆரம்பித்தார் அவர். சஞ்சுவை கட்டிக்கொண்டு அழுதவரை என்ன சொல்லி தேற்றுவது என்று சஞ்சுவுக்கும் புரியவில்லை.

 

 

அவரை பார்க்கும் போது பாவமாக இருந்தது. கட்டிய கணவனின் துரோகத்தை ஜீரணிக்க முடியாமல் அழும் வரை மெல்ல சமாதானப்படுத்தி படுக்க வைத்தாள்.

 

 

அவள் வீட்டிற்கு போன் செய்து விஷயத்தை கூற ஆரம்பிக்க அதற்குள் எதிர்முனையில் பேசிய அவளின் அன்னையோ “சஞ்சு நீ முதல்ல அங்க இருந்து கிளம்பு… இந்த சம்மந்தம் நமக்கு வேணாம்…

 

 

“உன்னை அந்த வீட்டில எல்லாம் கட்டிக் கொடுக்க முடியாது… இருந்திருந்து இப்படி ஒரு கொலைக்கார குடும்பத்தில தான் நீ வாக்கப்படணுமா…

 

 

“இங்க டிவியில எல்லாம் காமிச்சாங்க… பெத்த அப்பாவை புள்ளையே கைது பண்ணி கூட்டிட்டு போறார்… என்னடி நடக்குது இங்க… அக்கம் பக்கம் எல்லாம் வந்து கேவலமா பேசிட்டு போறாங்க… என்று பொரிய போனை ராணியிடம் இருந்து பிடுங்கினார் சுந்தரி.

 

 

“அண்ணி…. என்று அவர் கூற “நீங்க கொஞ்சம் பேசாம இருங்க… நான் பேசிக்கறேன்…

 

 

“சஞ்சும்மா உங்கம்மா சொல்ற மாதிரி எதுவும் நடக்காது… நிரஞ்சன் தான் உனக்கு மாப்பிள்ளை… தப்பு பண்ணவர் பெத்த அப்பான்னு பார்க்காம அவரை கைது செஞ்சவர்… எப்பவும் அவர் வாழ்க்கையில தப்பே பண்ணமாட்டார்…

 

 

“அதை நான் நம்புறேன்… இப்போ உங்கம்மாவுக்கும் அது புரிஞ்சிருக்கும்… நடந்ததில அந்த தம்பியோட தப்பு எதுவுமில்லை… நீ என்னன்னு சொல்லுடா… உன்னை பேசவிடாம உங்கம்மாவே பேசிட்டா… நானும் அதையே செய்யறேன்… சொல்லுடா என்றார் சுந்தரி.

 

 

“அத்தை… என்றவள் நடந்த விஷயத்தை கூறி முடித்தாள், அவள் சுந்தரியிடம் போனில் பேசிக் கொண்டிருக்கும் போதே ஸ்ரீமதிக்கு கண்கள் சொருகியது கட்டிலின் விளிம்பில் அமர்ந்திருந்தவர் அப்படியே கீழே சரிய கட்டிலின் விளிம்பில் இடித்துக் கொள்ள அப்படியே தரையில் விழுந்தார்.

 

 

கட்டிலில் இடித்ததில் நெற்றியில் இருந்து ரத்தம் வழிய ஆரம்பிக்க பதட்டத்துடன் உள்ளே ஓடிவந்து அவரை தூக்கினாள் சஞ்சு. அவளுக்குமே ஒன்றும் புரியவில்லை…

 

 

ஒற்றை ஆளாக எப்படி அவரை மருத்துவமனை அழைத்து செல்லப் போகிறோம் என்று திகைத்தாள். அதற்கு அவள் போனை பாதியிலே விட்டுப் போயிருந்ததில் லைனை துண்டித்த சுந்தரி மீண்டும் அவளுக்கு அழைக்க நடந்ததை கூறி உடனே வரச்சொன்னாள்.

 

 

அவள் போனை வைக்கவும் கார்த்திக் அவளுக்கு அழைத்திருக்க விபரம் சொல்லி அவனை உடனே நிரஞ்சனின் வீட்டிற்கு வரச்சொன்னாள். வரும் போதே கார்த்திக் ஆட்டோவை அழைத்து வந்திருந்தான்.

 

 

இருவருமாக அவரை தூக்கி வந்து ஆட்டோவில் ஏற்றினர். “மாமா வீடு… வீட்டை பூட்டணுமே… என்றவள் வீட்டை துழாவ பூட்டோ சாவியோ எங்கிருக்கிறது என்றே அவளுக்கு தெரியவில்லை. கதவை அப்படியே திறந்து போட்டுவிட்டு போகவும் அவளால் முடியவில்லை.

 

 

பக்கத்து வீட்டுக்கு சென்று பூட்டும் சாவியும் கேட்க அவர்களோ முகத்தை திருப்பிக் கொண்டு சென்றனர். அதற்கு அடுத்த வீட்டினரை அழைக்க அவர்களோ எங்களுக்கு எதற்கு பொல்லாப்பு என்ற ரீதியில் பேச, அவர்கள் நடந்து கொள்வது மனதிற்கு வலித்தது அவளுக்கு. வெளியில் தாழ் போட்டுவிட்டு செல்ல வேண்டியது தான் என்று முடிவெடுத்தாள்.

 

 

நல்லவேளையாக அவளின் சிரமத்தை பார்த்த கார்த்திக் அதற்குள்ளாக வீட்டிற்குள் சென்று பூட்டை தேடி கண்டுபிடித்து கதவை பூட்டி சாவியை அவளிடம் கொடுக்க இருவருமாக ஸ்ரீமதியை மருத்துவமனை அழைத்து சென்றனர்.

 

____________________

 

 

நிரஞ்சனுக்கு பொட்டு தூக்கமில்லை… அவன் தந்தையும் மேகநாதனையும் கைது செய்து சிறையில் அடைத்தவன், மறுநாளே அவர்களை நீதிமன்றத்தில் கொண்டு நிறுத்த தேவையான ஆவணங்களை தயார் செய்துக் கொண்டிருந்தான்.

 

 

ஏற்கனவே அவன் முக்கிய வேலைகள் அனைத்தும் முடித்து வைத்திருக்க சஞ்சனாவின் மூலம் பொன்னனை பற்றி அறிந்தவன் அவரையும் ஒரு சாட்சியாக்கினான்.

 

மேலும் சுந்தரியின் மூலம் மல்லிகா என்றவரை பற்றி சஞ்சு அவளறிந்த தகவல்களை அவனுக்கு தந்திருக்க அதை பற்றிய தகவல்களையும் கூடுதலாக இணைத்தான்.

 

 

நாகேந்திரன் அவரின் வழக்கறிஞரை சந்திக்க வேண்டும் என்று சொல்ல யாரையும் அவரை பார்க்க விடாமல் செய்தான்… யாரும் அவருக்காக வாதாடக் கூட அவன் விடவில்லை…

 

 

மறுநாள் காலை அவர்கள் இருவரையும் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர். நிரஞ்சன் அவனுக்கு நெருக்கமான ஒருவரை விட்டு நீதிமன்றத்தில் இந்த வழக்கை விரைந்து முடித்து தீர்ப்பு சொல்ல வேண்டும் என்று பொதுநல மனு ஒன்றும் போட்டிருந்தான்.

 

 

ஏற்கனவே இந்த கொலை நடந்து பலவருடங்கள் ஆகிவிட்ட நிலையில், குற்றமும் குற்றவாளிகளின் நேரடி வாக்குமூலமும் தகுந்த சாட்சிகளும் இருக்கும் பட்சத்தில் வழக்கை விரைந்து முடித்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் வாதாடினார்…

 

 

நிரஞ்சனின் கைபேசி சார்ஜ் இல்லாமல் அணைந்து போயிருக்க நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்த வேளை அர்ஜுனுக்கு சஞ்சனாவிடமிருந்து அழைப்பு வந்தது.

 

 

இரவு முதல் அவள் இருவருக்குமாக மாறி மாறி போன் செய்திருப்பாள் போலிருக்கிறது. இருவரின் எண்ணும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

 

 

கார்த்திக்கும் காவல்துறை அலுவலகம் வந்து அவனுடன் பேசமுடியாமல் திரும்பி வந்ததையும் கூறியவள் நிரஞ்சனின் அன்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவலை கூறி போனை வைத்தாள்.

 

 

அந்த வழக்கை சிறப்பு நீதிபதிகள் விசாரித்துக் கொண்டிருக்க சாட்சிகள், சாட்சியங்கள் என்று அனைத்தும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்ததை விசாரித்துக் கொண்டிருந்தனர்.

 

 

மதியம் மூன்று மணிக்கு அனைத்து விசாரணையும் முடிந்திருக்க குற்றவாளிகளை சிறைச்சாலைக்கு அழைத்து சென்று விட்டு வரும் வழியில் தான் அர்ஜுன் சஞ்சனா போன் செய்ததை சொன்னான். உடனே பதறியடித்துக் கொண்டு அவன் மருத்துவமனைக்கு விரைந்தான்.

 

____________________

 

 

ஸ்ரீமதிக்கு லோ பிரஷர் ஆகியதிலேயே அவர் மயக்க முற்றிருக்கிறார், மேலும் கீழே விழுந்ததில் அடிப்பட்டு வேறு ரத்தம் வெளியேறியதில் அவருக்கு நினைவு திரும்பாமலே இருந்தது.

 

 

அவருக்கு ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது, இரவு பகலாக சஞ்சுவே உடனிருந்து அவரை பார்த்துக் கொண்டிருந்தாள். முதல் நாள் இரவு அஞ்சுவும் அவளுக்கு துணையிருந்தாள்.

 

 

‘எப்படியோ அர்ஜுனுக்கு தகவல் சொல்லியாயிற்று, நிரஞ்சன் வந்துவிடுவார்… ஆனால் கவிதா… ச்சே அவள் வீட்டில் சென்று அவ்வளவு தூரம் எடுத்து சொல்லியும் அவள் வீட்டினர் இப்படி புரியாமல் செய்கின்றனரே என்று அவளுக்கு கோபமாக வந்தது.

 

 

கவிதாவின் எண்ணுக்கு அழைத்தாள், எடுத்தது அவளின் மாமியார்… “என்ன வேணும் எதுக்கும்மா போன் பண்ணே… ஏதோ நேத்து வந்தியே எல்லாம் சொன்னியேன்னு உன் மேல மரியாதை வைச்சேன்…

 

 

“போற போக்குல என் மருமகளை அவங்க வீட்டுக்கு போன்னு வேற சொல்லிட்டு போயிருக்க… ஏன்மா இதான் பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுறதா… என்றார்.

 

 

“ஏன்ம்மா நீங்களாம் ஏன் இப்படி இருக்கீங்க… நேத்து எதுக்காக நான் உங்க வீட்டுக்கு வந்து அவ்வளவு தூரம் பேசினேன்… நடந்த தப்புக்கு கவிதாவை நீங்க தப்பா நினைக்கக் கூடாதுன்னு தானே…

 

 

“அதான் நாங்க கவிதாவை தப்பா நினைக்கலையே…

 

 

“கவிதாவை தப்பா நினைக்கலை… ஆனா அவளை அவங்க வீட்டுக்கு போகக் கூடாதுன்னு தடுத்திருக்கீங்க… அது எந்தவிதத்துல நியாயம்… அவங்க அப்பா அரெஸ்ட் ஆகப் போற விஷயம் அத்தைக்கு தெரியவே தெரியாது…

 

 

“அந்த ஜீவனை யாராச்சும் நினைச்சு பார்த்தீங்களா… கூட ஆறுதலா இருக்க சொல்லிட்டு வந்த பொண்ணை நீங்க அழைச்சுட்டு போயிருக்கீங்க… நான் மட்டும் வராம இருந்திருந்தா அத்தை இன்னைக்கு உயிரோட இருந்திருக்க மாட்டாங்க…

 

 

“என்னம்மா சொல்றே… என்று பதறினார் அவர் எதிர்முனையில் அவர் கைகள் நடுங்கியது.

 

 

“ஆமா அப்படி தான் நடந்திருக்கும், நீங்க கவிதாவோட அப்பா பண்ண தப்பை மட்டுமே பார்த்தீங்களே… தப்பை தட்டி கேட்ட அவரோட மகன் உங்க கண்ணுக்கு தெரியலையா… ஒருத்தர் தப்புன்னா அப்படியே அவங்க குடும்பத்துல இருக்க எல்லாரையும் ஒதுக்கி வைச்சுடறதா

 

 

சஞ்சு பேசிக்கொண்டிருக்கும் போதே அந்த போன் துண்டிக்க பட்டுவிட்டது… ‘ச்சே… என்ன மனுஷங்க இவங்க… பேசிட்டு இருக்குமே போதே போனை கட் பண்ணுறாங்க… என்று அவள் தனக்குள் புலம்பிக் கொண்டிருக்க அரை மணி கடந்த வேளையில் கவிதாவுடன் அவள் ஒட்டுமொத்த குடும்பமும் உள்ளே வந்தது.

 

 

கவிதாவின் மாமியாரோ சஞ்சனாவின் கையை பிடித்துக் கொண்டார். கவிதாவோ “அத்தை ஏதோ தெரியாம பேசிட்டாங்க மன்னிடுங்க… என்று மாமியாருக்காக பேசினாள்.

 

 

“ஆமாம்மா… நான் ஏதோ தெரியாம பேசிட்டேன்… நான் கவிதாவோட அப்பாவை நினைச்சு எல்லாரையும் ஒதுக்க நினைச்சது தப்பு தான்… என்று அவர் செய்த தப்புக்கு மன்னிப்பு கேட்க கவிதாவின் மாமனாரும் வருத்தம் தெரிவித்தார்.

 

 

“அய்யோ என்னம்மா, நீங்க என்கிட்ட மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை… விடுங்கம்மா, அப்பா நீங்களும் தான்… என்று இருவருக்குமாக கூறியவள் எல்லோரையும் உள்ளே சென்று பார்க்க சொன்னாள்.

 

 

கவிதாவை வீட்டுக்கு போகச் சொல்லிவிட்டு சஞ்சு அங்கேயே அமர்ந்திருந்தாள். நிரஞ்சனை தவிர எல்லோரும் வந்தாயிற்று, அவளுக்கு அவன் மேல் இருந்த கோபம் மலை போல் உயர்ந்து கொண்டே போனது.

 

 

எரிமலையாய் அவள் உள்ளம் வெடித்துக் கொண்டிருக்க அவசரமாக உள்ளே ஓடி வந்தான் நிரஞ்சன். சஞ்சுவையும் அவன் அன்னையும் பார்த்ததும் அவனுக்கு சற்றே நிம்மதி வந்தது.

 

 

அவன் உள்ளே வர “இங்க எதுக்கு வந்தீங்க… என்ற அவளின் கேள்விக்கு முறைப்பையே பதிலாக தந்தான்.

 

 

“கேக்கறேன்ல இப்போ எதுக்கு வந்தீங்க…

 

 

“உன் வேலையை பாரு…

 

 

“போதும் நிரு சும்மா என்னையே எதாச்சும் சொல்லுங்க… உங்களுக்கு உங்க வேலை உங்க கடமை அது தான் முக்கியம்… அம்மா முக்கியம் இல்லை, தங்கை முக்கியம் இல்லை… நான் முக்கியம் இல்லை…

 

 

“உங்களை யாரும் குறை சொல்லிடக் கூடாது அது தான் உங்களுக்கு முக்கியம் இல்லை… எத்தனை தரம் சொன்னேன் கேட்டீங்களா… ஒரு முறை உங்கம்மாகிட்ட பேசியிருக்கலாம்ல…

 

 

“உங்களுக்கு எப்பவோ இந்த விஷயம் தெரியும் தானே… நீங்க என்ன பண்ணனும்னு ஏற்கனவே யோசிச்சு இருப்பீங்க தானே… அப்போவே சொல்லியிருக்கலாம்ல…

 

 

“என்னடி ரொம்ப பேசிட்டே போறே… நான் என்ன நிலைமையில இங்க வந்திருக்கேன்… நீ பாட்டுக்கு புரியாம பேசிட்டே இருக்க…

 

 

“என்ன நிலைமை உங்க நிலைமை… அத்தையை விடவா உங்க நிலைமை கஷ்டமா போச்சு… அவங்க என்ன பண்ண இருந்தாங்கன்னு தெரியுமா உங்களுக்கு சொல்லி அழக் கூட அந்த மனுஷிக்கு ஆளில்லாம யாருமில்லைங்கற உணர்வுல தற்கொலை செஞ்சுக்க பார்த்தாங்க…

 

 

“அத்தையை பத்தியும் கவலையில்லை… கவிதாவோட வாழ்க்கை பத்தியும் உங்களுக்கு கவலையில்லை… நீங்க நினைச்சதை மட்டும் தான் நீங்க செய்யணும்… உங்களுக்கு வேலை மட்டும் கடமை இல்லை…

 

 

“பெத்த அம்மாவுக்கு மகனா இருக்கறதும், தங்கைக்கு நல்ல அண்ணனா இருக்கறதும் கூட உங்க கடமை தான்… உங்க குடும்பத்துக்கு பங்கம் வராம உங்க வேலையை பாருங்க…

 

 

“அதைவிட்டு இப்படி வேலை வேலைன்னு இருப்பீங்கன்னா சொல்லிடுங்க… அத்தையை நானே பார்த்துக்கறேன்… நீங்க உங்க வேலையை கட்டிட்டே அழுங்க… நாளைக்கு எனக்கும் இதே நிலை தான் என்று அவள் கூறவும் ஒட்டுமொத்த கோபமுமாய் சேர்ந்து சத்தமாக பேசினான்.

 

 

“போடி வெளிய… வெளிய போ முதல்ல… நீ பண்ண உதவிக்கு ரொம்ப ரொம்ப நன்றி… உன் கால்ல வேணும்னாலும் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கறேன்… எனக்கு யாரும் வேணாம்…

 

 

“எங்கம்மாவை எப்படி பார்த்துக்கறதுன்னு எனக்கு தெரியும் நானே பார்த்துக்கறேன்… நீ கிளம்பு முதல்ல… உனக்கென்ன தெரியும் எங்கம்மாவை பத்தி என்னை விட உனக்கு அதிகமா தெரியுமா… நீ போ வெளிய என்று கத்தியவன் அவன் அன்னைக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.

 

 

சஞ்சுவும் எதுவும் பேசாமல் வெளியில் சென்று விட்டாள். மருத்துவமனை வளாகத்தில் இருந்த பார்க் ஒன்றில் சென்று அமர்ந்தவள் கண்ணை மூடி உட்கார்ந்திருந்தாள்.

 

 

“ஏம்மா சஞ்சு உனக்கு அவ்வளவு கோபம்… என்றார் சுந்தரி.

 

 

“கோபமா பேசலைன்னா அவருக்கு புரியாது அத்தை… பாவம் அத்தை அவங்க… இவருக்கு நிலைமையோட விபரீதம் புரிய வைக்க தான் அப்படி பேசினேன்… நான் போகலைன்ன என்னாகியிருக்கும் நீங்களே சொல்லுங்க…

 

 

“எனக்கு நினைக்கவே முடியலை… அந்த பாவம் யாருக்கு அத்தை… அதை நான் சொன்னா இவருக்கு புரிய மாட்டேங்குது… என்னை வெளிய போக சொல்றாரு… என்றவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

 

 

அங்கு வந்த அர்ஜுன் “சஞ்சனா உங்களுக்கு வந்த கோபம் போல தான் அவனுக்கும்… நேத்துல இருந்து அவன் ஒரு பொட்டு கண்ணு மூடலை… என்றவன் நீதிமன்றத்தில் நடந்ததை கூறினான்.

 

 

“எவ்வளோ பேரு எவ்வளவு விதமா பேசுறாங்கன்னு உங்களுக்கு தெரியாது… சிலர் இது அவனோட புகழ்ச்சிக்காக பண்ணதா சொல்றாங்க… காதுபடவே நெறைய பேரு தப்பா பேசுறாங்க… அவன் எதையும் பெரிசு படுத்தலை… எதையும் வாய்விட்டு சொல்ல மாட்டானே தவிர அவனுக்கும் கவலைகள் இருக்கு…

 

 

“அவனுக்கு நீங்களும் அம்மாவும் மட்டும் தான் ஆறுதல்… அம்மா இப்படி இருக்க நிலைமையில நீங்க தான் அவனுக்கு ஆறுதல் சொல்லணும்… ப்ளீஸ் போங்க… அம்மா பக்கத்துல உட்கார்ந்திட்டு அவங்க கையை பிடிச்சுட்டு வெறிக்க பார்த்துட்டு இருக்கான்… என்னாலேயே தாங்க முடியலை…

 

 

அர்ஜுன் சொல்லி முடிக்க சஞ்சனா எழுந்து உள்ளே சென்றாள். நிரஞ்சன் அவன் அன்னையின் கையை பிடித்துக் கொண்டு ‘அம்மா நான் உங்ககிட்ட சொல்லலைன்னு உங்களுக்கு கோபமாம்மா…

 

 

‘நா… நான் எப்…. எப்படிம்மா இதை உங்ககிட்ட சொல்ல முடியும்… அப்பா இப்படி இத்தனை பொண்ணுங்களோட, நான் இதை எப்படிம்மா உங்ககிட்ட சொல்லியிருப்பேன்…

‘ஒருவேளை உங்ககிட்ட அப்போவே சொல்லியிருந்தா, நான் தப்பு பண்ணிட்டேனாம்மா… உங்ககிட்ட சொல்லியிருக்கணுமோஎன்னை மன்னிச்சுடுங்கம்மா… என்று மனதார அவருடன் பேசிக் கொண்டிருந்தான்.

 

 

உள்ளே சஞ்சு நுழைவதை உணர்ந்திருந்தாலும் நிரஞ்சனோ திரும்பி கூட பார்க்கவில்லை. அருகே வந்து அவன் தோளில் அவள் கைவைக்க கையை தட்டிவிட்டான்.

 

 

அவளோ அவன் முன்னால் வந்து நின்று அமர்ந்திருந்தவனை அணைத்துக் கொள்ள முதலில் திமிறினாலும் ஆறுதல் தேடும் சிறுகுழந்தையாய் அவனும் அவளை இறுக்கிக் கொண்டான்.

 

 

வார்த்தைகள் தராத ஆறுதலை அவளின் அணைப்பு கொடுக்க எதற்கும் கலங்கியிராத நிரஞ்சனின் கண்களில் நீர்கசிவதை சஞ்சு உணர்ந்தாள்…

 

 

“ஏன் சஞ்சு நீ என்னை தப்பா நினைக்கிறியா… எனக்கு எந்த கடமையும் இல்லைன்னு நினைக்கிறியா சஞ்சு…

 

 

“எங்கப்பாவுக்கு தண்டனை கிடைக்காம போயிருந்தா தான் நாங்க பழி பாவத்துக்கு ஆளாகியிருப்போம்… ஒரு மகனா நான் செஞ்சது உங்களுக்கு தெரியலை இல்லை…

 

 

“செஞ்ச பாவத்துக்கு தண்டனை கிடைச்சதுனால எங்களோட பாவம் ஓரளவாச்சும் குறைஞ்சு இருக்கு தானே சஞ்சு… அவரோட பாவம் எங்களுக்கும் பாவம் தானே…

 

 

“அவருக்கு தண்டனை கிடைச்சு அந்த பாவத்தை அவர் கழிக்கட்டும்… அவருக்கு மகனா பிறந்ததுக்கு நாங்களும் அந்த பாவத்தை நல்ல காரியங்கள் செஞ்சு போக்கறோம்…

 

 

“மாமா செஞ்சதுக்கு நீங்க என்ன பண்ண முடியும் நிரு… விடுங்க…

 

 

“ஒரு மனுஷனோட சொத்து எப்படி அவனுக்கு பின்னாடி அவனோட சந்ததிக்கோ அது போல தானே பாவமும் வந்து சேரும்… ஒரு அப்பாவா அவர் கடமையை அவர் செஞ்சாரோ இல்லையோ…

 

 

“ஒரு மகனா அவர் பாவத்தை குறைக்க என்னாலானதை செய்திருக்கேன்… ஒரு நல்ல போலீசாவும் ஒரு மகனாவும் நான் என் கடமையை சரியா தானே சஞ்சு செஞ்சிருக்கேன்…

 

____________________

 

 

அதிகாலை பொழுது இனிதாக புலர்ந்திருக்க வாழை மரம் தோரணம் கட்டியிருக்க மண மேடையில் அரசாணிக்கால் நட்டிருக்க மற்றொருபுறம்  மேள வாத்தியங்கள் உயிர்பெற்று முழங்கிக் கொண்டிருக்க நாதஸ்வர ஓசை கானமிசைக்க அந்த திருமண மண்டபம் உயிர் கொண்டிருந்தது.

 

 

ஆட்கள் இங்குமங்கும் ஓடிக் கொண்டிருக்க கவிதா வாயிலில் அவள்கணவனுடன் நின்றுக் கொண்டு வருவோரை வரவேற்று சந்தனம் கொடுத்து உபசரிக்க அவளின் மாமனாரும் மாமியாரும் திருமணத்திற்கு வந்துக் கொண்டிருந்த பெரிய மனிதர்களை உள்ளே அழைத்து சென்று அமரவைத்தனர்.

 

 

சஞ்சனாவுக்கும் அஞ்சனாவுக்கும் ஒரே நாளில் திருமணம் என்பதால் பெண்களிருவரும் அவர்கள் அறையில் தயாராகிக் கொண்டிருந்தனர். நிரஞ்சனையும் கார்த்திக்கையும் அர்ஜுன் ஒருவழியாக்கி கலாட்டா செய்துக்  கொண்டிருந்தான்.

 

 

நிரஞ்சன் கருமமே கண்ணாக தயாராகிக் கொண்டிருந்த போதிலும் அவன் அவ்வப்போது யோசனைக்கு செல்வது அர்ஜுனுக்கு புரியாமலில்லை… தெரிந்து நடந்ததோ இல்லை தானாக நடந்ததோ நாகேந்திரனுக்கும், மேகநாதனுக்கும் அன்று தான் தீர்ப்பு நாள்…

 

 

அர்ஜுனும் திருமண மண்டபத்தில் இருப்பதால் நிரஞ்சன் நீதிமன்றத்திற்கு மாறனை செல்லுமாறு கூறியிருந்தான்… ஸ்ரீமதி கொஞ்சம் இயல்பாகியிருந்தாலும் அவரால் முழுதும் அவர் கவலையில் இருந்து வெளி வர முடியவில்லை.

அறையில் தயாராகிக் கொண்டிருந்த சஞ்சனா செண்பகத்தையும் மாரியையும் பற்றிய சிந்தனையில் முழ்கினாள்.

 

____________________

 

 

ஸ்ரீமதி மருத்துவமனையில் இருந்து வந்ததும் திருமண வேலைகள் நடக்க வேண்டும் என்று உறுதியாக கூறிவிட ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்தது. சஞ்சனா திருமணத்திற்கு முன் அருணுக்கு சாந்தி செய்ய வேண்டும் என்று உறுதியாக கூறினாள்.

 

 

அருணுக்கு சாந்தி செய்வதற்காக அவர்கள் ஊருக்கு சென்றனர். சாந்தியை அவன் கடைசியாக உயிர்விட்ட இடத்திலேயே செய்ய வேண்டும் என்று சொல்லி சஞ்சனா அந்த தோட்ட வீட்டிற்கே அழைத்து சென்றாள்.

 

 

அங்கு அருணுக்கு மட்டுமல்லாது செண்பகத்திற்கும் மாரிக்கும் சேர்த்தே சாந்தி நடத்த ஏற்பாடு செய்திருந்தாள். நிரஞ்சன் மறுப்பு கூறுவானோ என்று நினைத்திருந்தவளுக்கு அவன் மறுப்பு கூறாமல் ஏற்றுக் கொண்டது நிம்மதியை கொடுத்தது.

 

 

மூவருக்குமாக சாந்தி செய்து படையலிட்டு காக்காவிற்கு வைப்பதற்காய் ஒரு வாழையில் வைத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு சென்றாள். மனதார மூவரையும் ஒரு சேர அழைத்தாள்.

 

 

அருண் இப்படி பாதியிலே உயிரை விட்டதும் அவன் ஆன்மா சாந்தியடையாமல் சுற்றிக் கொண்டிருப்பதையும் உணர்ந்தவள்… ‘மாமா நீங்க ஏன் செத்தீங்கன்னு தெரியாம தான் இன்னும் இங்க காற்றாய் கலந்திருக்கீங்கன்னு தெரியுது…

 

 

‘உங்களுக்கு இப்போ எல்லாமே புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்… இதுல யாரையுமே தப்பு சொல்ல முடியாது, உங்க உயிர் போனதுக்கும் ஈடு செய்ய முடியாது…எங்களோட இந்த பரிகாரத்தை ஏத்துக்கோங்க… என்று வேண்டி ஒரு சிறிய இலையை அவள் வைக்க ஒரு காகம் வந்து அதிலிருந்ததை சாப்பிட்டு சென்றது.

 

 

இப்படியாக செண்பகத்தையும் மாரியையும் வெகு நேரமாக அழைத்து அவர்கள் வராததாலேயே அவள் கீழே இறங்கி வந்திருந்தாள். எல்லோரும் சாப்பிட்டு முடிக்க சஞ்சனா மட்டும் உணவருந்தாமலே இருந்தாள். பசிக்காமல் இருப்பதால் சிறிது நேரம் கழித்து சாப்பிடப் போவதாக கூறிவிட்டாள்.

 

 

மற்றவர்கள் தோட்டத்தை சுற்றி பார்க்க சென்றுவிட எல்லோருமே வெளியில் கயிற்று கட்டிலை போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தனர். சஞ்சனா தண்ணி குடிக்க உள்ளே செல்ல போட்டிருந்த படையலின் அருகே அருண் நின்றிருந்தான்.

 

 

“மாமா… என்று அவள் அழைக்க அவன் கண்ணீருடன் மறைந்து போனான். செண்பகமும் மாரியும் அங்கு தான் நின்று கொண்டிருந்தனர். இருவருமாக அமைதியாக நின்றிருந்தனர்.

 

 

“உங்களுக்கு இன்னும் சாந்தியாகலையா… மாமா பண்ண தப்புக்கு அவரை அவரோட பையனே பிடிச்சு ஜெயில்ல போட்டுட்டார்… எப்பாடு பட்டாவது அவருக்கு தண்டனை கிடைக்கணும்ன்னு அவர் போராடுறார்…

 

 

“நான் கூட அவர்கிட்ட சொன்னேன் நீங்க இதெல்லாம் செய்யறது வேஸ்ட்ன்னு எப்படியும் நீங்க ரெண்டு பேரும் அவங்களை கொன்னுடுவீங்கன்னு சொன்னேன்…

 

 

“அவரோட உயிருக்கும் ஆபத்துன்னு சொன்னேன்… அவர் அதுக்கு என்ன சொன்னார் தெரியுமா… என்று சொல்லியவள் நிரஞ்சன் கூறியதை அப்படியே கூறினாள்.

 

 

“ஆவி இருக்குன்னு நீ சொல்றதை என்னால இன்னும் நம்ப முடியலை சஞ்சு… அப்புறம் எப்படி அவங்க பழிவாங்குவாங்கன்னு சொல்ற…

 

 

“ஏன் நிரு நான் எப்போ சொன்னாலும் நீங்க நம்பவே மாட்டேங்குறீங்க… அன்னைக்கு தோட்ட வீட்டுல நிகிதாகிட்ட இருந்தும் அங்க இருக்கவங்ககிட்ட இருந்தும் என்னை காப்பாத்தினது அவங்க தான்…

“நீங்களே அன்னைக்கு பார்த்தீங்கள்ள… நிகிதாவோட ஆளுங்களை அவங்க பின்னாடி இழுத்துட்டு போனதை… அதுக்கு அப்புறம் தானே நிலைமை தலைகீழா ஆச்சு…

 

 

“சஞ்சு அது பேய்ங்க செஞ்சதா நீ தான் சொல்ற… அவங்களுக்கு வேற எதுவும் ப்ராப்ளம் இருந்திருக்கலாம்ல… அதை ஏன் நீ யோசிக்க மாட்டேங்குற…உனக்கு இப்போ என்ன பயம் அவங்க என்னை எதுவும் செய்திடுவாங்கன்னா… அப்படியே அவங்க இருக்கறது உண்மைன்னா அவங்களுக்கு என் உயிர் வேணும்ன்னா தாராளமா எடுத்துக்கட்டும்…

 

 

“போற உயிர் எப்போ வேணுமின்னாலும் போகும்… என்னோட உத்தியோகத்தில இல்லாத சிக்கலே இல்லை, எனக்கு வராத நெருக்கடிகள் இல்லை… எனக்கு உயிரை பத்தி கவலையில்லை சஞ்சு…

 

 

“தப்பு செய்தவனுக்கு தண்டனை தர்றது தான் உயர்ந்த தீர்ப்பு…மரணம் என்னைக்கும் உயர்ந்த தண்டனை கிடையாது… செய்த தப்பை அவன் உணரணும் வருந்தணும் திருந்தணும் அதுக்கு தான் தண்டனை தர்றதே…

 

 

“ஏன் நிரு நம்ம சட்டத்துல மரணதண்டனை கூட இருக்கே… சட்டம் கொடுத்தா அந்த தண்டனை சரின்னு சொல்றீங்களா…

 

 

“சஞ்சு சட்டத்துல அப்படி ஒரு தண்டனை இருக்கறது உண்மை தான்… எவனொருவன் திருந்த கூட மாட்டான்னு முடிவுக்கு வருதோ அவனுக்கு தான் மரணதண்டனை சரி… யாரா இருந்தாலும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கறதுல தப்பேயில்லை

 

 

“ஆனா ஒண்ணு ஒரு உயிருக்கு இன்னொரு உயிர் தான் பலியா… சொல்லு சஞ்சு அப்படி ஒரு உயிருக்கு மற்றொரு உயிர் தான் பலின்னா நம்மை கடிக்கிற கொசுவையும் எறும்பையும் நாம தினம் தினம் சாகடிக்கிறோம்…

 

 

“மனுஷன் மட்டும் தான் உயிரா அவைகளும் உயிர் தானே… அதுக்கெல்லாம் நாம பலியாகிட்டு இருக்கோமா… என்னை பொருத்தவரைக்கும் தப்பு செய்தவங்களுக்கு தண்டனை கிடைக்கணும்…

 

 

“காலம் தாழ்ந்து கிடைச்சாலும் நீதி கண்டிப்பா கிடைக்கும்… தப்பு செய்தவங்க தண்டனை அனுபவிப்பாங்க… இதுக்கு மேல நீ இதை பத்தி என்கிட்ட பேசாதே சஞ்சு… என்று மருத்துவமனையில் அவள் பேசியபோதே அவன் கூறிவிட்டான்.

 

 

“இதெல்லாம் அவர் சொன்னது தான், எனக்கும் அதே சரின்னு தான் படுது… உங்களுக்கு அவர் உயிர் தான் வேணுமின்னா நான் இனி உங்களை தடுக்கலை…

 

 

“ஆனா ஒரு விஷயம் தண்டனை வாங்கி கொடுத்தில என்ன பெரிய விஷயமிருக்குன்னு தோணலாம் உங்களுக்கு… ஆனா இதுனால ஒரு ஒரு இடத்திலையும் அந்த குடும்பம் படுற அவமானம் என்னன்னு பார்க்கறவங்களுக்கு தான் தெரியும்…

 

 

“புகழுக்காவும் பதவியை தக்க வைச்சுக்கறதுக்காகவும் தான் இதெல்லாம் பண்ணினதா எல்லாரும் பேசறாங்க… அதுமட்டுமா மாமா செஞ்ச விஷயத்தால கவிதாவுக்கும் பிரச்சனை தான்…

 

 

“வெளிய தலைக்காட்ட முடியாத அளவுக்கு தான் எல்லாம் நடக்குது… இது எதுவும் பொருட்படுத்தாம அவர் அவங்கப்பாவுக்கு தண்டனை வாங்கி கொடுத்திருக்கார்…

 

 

“இதை விட பெரிய தண்டனை அந்த குடும்பத்துக்கு கிடைச்சிடாது… இதுக்கு மேல உங்க இஷ்டம்…நான் இவ்வளவு சொல்லிட்டு இருக்கேன்… ஆனா இன்னமும் உங்களுக்கு சாந்தியாகலைன்னு நினைக்கிறேன்… என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் மறைந்திருந்தனர். சஞ்சனாவும் நிகழ்வுக்கு வந்தாள்.

 

____________________

 

 

மாப்பிள்ளைகள் மணமேடை வந்திருக்க அய்யர் கூறும் மந்திரங்களை பெயருக்காக ஒருவனும், உள்வாங்கி மற்றொருவனும் சொல்லிக் கொண்டிருந்தனர்.

 

 

அது ஒன்பது பத்தரை முகூர்த்தமென்பதால் சடங்குகள் நிதானமாகவே நடந்துக் கொண்டிருந்தது. நீதிமன்றத்தில் பத்து மணிக்கு தீர்ப்பு என்பதால் நிரஞ்சன் பரபரப்பாக இருந்தான்.

 

 

சஞ்சனாவையும் அஞ்சனாவையும் கவிதாவும் அம்பிகாவும் அழைத்து வந்து மணமேடையில் அமர்த்தவும் மேலும் சில சடங்குகள் நடக்க சரியாக பத்து இருபதுக்கு நிரஞ்சனின் கைபேசி அழைக்க அதை எடுத்து காதுக்கு கொடுத்தவனின் முகம் சற்றே நிம்மதியுற்றது.

 

 

அதன்பின்னே அவன் முகம் தெளிவை சுமக்க அய்யர் தாலி எடுத்து கொடுக்க முதலில் கார்த்திக் அஞ்சனாவின் கழுத்தில் அணிவிக்க, அடுத்ததாக நிரஞ்சன் சஞ்சனாவின் கழுத்தில் பொன் தாலி அணிவித்தான்.

 

 

சஞ்சு போனில் என்ன என்பது போல் கேட்க அப்புறம் சொல்றேன் என்பது போல் அவனும் சைகை செய்தான்.மற்ற சடங்குகள் நடந்து முடிய ஓய்வெடுக்க அவர்கள் அறைக்கு அவர்கள் வந்திருக்க சஞ்சு அவனை பார்த்தாள்.

 

 

“என்னாச்சு நிரு… போன்ல யாரு??? என்ன சொன்னாங்க???

 

 

“அது… அப்பாவுக்கு இன்னைக்கு தீர்ப்பு இல்லையா அது பத்தி தான் மாறன் பேசினான்… அவருக்கு ஆயுள் தண்டனை கிடைச்சு இருக்கு… அவர் சாகற வரை அந்த தண்டனையை அனுப்பவிக்கணும்ன்னு தீர்ப்பு வந்திருக்கு…

 

 

“ஏன் நிரு இதை தானே நீங்க எதிர்பார்த்தீங்க…

 

 

“ஹ்ம்ம் ஆமாம் சஞ்சு, ஆனா அம்மாவை நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு… சரி சஞ்சு நான் போய் ரிசப்ஷன்க்கு ரெடி ஆகறேன்… நீயும் சீக்கிரம் வந்திடு… என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறினான்…

 

 

‘அய்யோ ஆண்டவா நான் தப்பு பண்ணிட்டேன் போல இருக்கே… நான் இவருக்கு பொண்டாட்டி ஆனதுக்கு அப்புறம் கூட ரொமான்ஸ் பண்ண மாட்டேங்குறாரே…

 

 

‘எதுவும் டெக்னிகல் ப்ராப்ளமா இவரை உருவாக்கும் போது… இப்படி போலீசாவே சுத்திட்டு இருந்தா போரடிக்குமே… என்ன செய்ய இது தான் உன் தலைவிதி சஞ்சு… என்று வராத கண்ணீரை துடைத்துக் கொண்டு.

 

 

கூடாநட்பு கேடாய் முடியும் என்பதற்கு சாட்சியாய் நாகுவும் அவர் கூட்டாளிகளும் இருந்திருக்க, இவர்களால் ஒரு நல்லுறவு ஒன்று அந்த திருமணத்தில் உண்டாகியது.

 

 

கார்மேகம் ஏற்கனவே நிரஞ்சன் குடும்பத்திற்கு வெகு நெருக்கம் என்பதால் அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் திருமணத்திற்கு வந்திருந்தனர்.

 

 

செண்பகத்தால் உயிர் போகும் நிலை வந்தும் கடைசி நேரத்தில் தாயும் மனைவியும் வந்ததால் பிழைத்து கோமாவில் இருந்த சங்கர் ஒரு மாதத்திற்கு முன் நினைவு திரும்பி சிறிது சிறிதாக எழுந்து நடமாட ஆரம்பித்திருந்தான்.

 

 

மேகநாதனின் மனைவியும் மயில்வாகனத்தின் மனைவியும் கூட அந்த திருமணத்திற்கு வந்திருந்தனர். நிரஞ்சனை அவர்கள் பாராட்டி அவனுக்கு வாழ்த்தும் கூறினர்.

 

 

எல்லோரும் தங்கள் கணவன்மார்கள் செய்த தப்புக்கு தண்டனை கிடைத்ததை நினைத்து வருந்தினாலும், அதற்காக நிரஞ்சனை நினைத்து பெருமையே கொண்டனர்.

 

 

வரவேற்ப்பு முடிந்து அனைவரும் இரவுக்குக்கான ஏற்பாட்டை கவனித்துக் கொண்டிருக்க பின்வாசலில் ஏதோ நினைவில் தனித்து அமர்ந்திருந்தாள் சஞ்சனா.

அவளருகில் யாரோ அமர்ந்திருப்பது போல் தோன்ற மெல்ல அவள் திரும்பி பார்க்கவும் அங்கு செண்பகம் அமர்ந்திருப்பது அவளுக்கு தெரிந்தது.

 

 

“ரொம்ப நன்றி, என் நிருவை நீங்க எதுவும் செய்யாம இருந்ததுக்கு… உங்களுக்கு நடந்தது அநியாயம் தான்… நீங்க மன்னிச்சதே பெரிய விஷயம்…

 

 

“இப்பவும் நான் மன்னிச்சிட்டேன்னு நீ எப்படி நம்புற… என்று பதில் கேள்வி போட்டாள் அரூபமாய் இருந்த செண்பகம்.

 

 

“அவர்க்கு எதுவும் ஆகணும்ன்னா அது எங்க கல்யாணத்துக்கு முன்னாடியே ஆகியிருக்கணும்… அப்படி நடக்கலையே…ஏனோ உங்களுக்கு என் மேல ஒரு கருணை இருக்குன்னு நினைக்கிறேன்… இல்லைன்னா அன்னைக்கு என்னை நீங்க காப்பாத்தியிருக்க மாட்டீங்க… ஆனா இன்னும் ஏன் நீங்க எங்களையே சுத்தி வர்றீங்க….

 

 

“இன்னும் உங்க மனசுல ஏதோ கிடந்து அரிக்குது… எங்களை முழுசா மன்னிக்க உங்களால முடியலை…சரி தானே… செண்பகம் பதில் சொல்லாமல் மறைந்து போனாள்.

 

 

சஞ்சுவை அலங்கரித்து நிரஞ்சனின் அறைக்கு அனுப்பினர். சஞ்சு கதவை மூடவும் அருகே வந்த நிரஞ்சன் அவளை பின்னிருந்து அணைத்தவன் கையில் தூக்கிக் கொண்டு சென்றான்.

 

 

“நிரு என்ன இது விடுங்க… என்னால நம்மவே முடியலை… உங்களுக்கு ரொமான்ஸ் வரவே வராதுன்னு நினைச்சேன்… நீங்க என்ன இப்படி அசத்துறீங்க… சரி கீழ இறக்கி விடுங்க…

 

 

“முடியாது…

 

 

“எனக்கென்ன உங்களுக்கு தான் கைவலிக்க போகுது போங்க…

 

 

“எனக்கு ஏன் வலிக்க போகுது… என்றவன் அவளை தூக்கிக் கொண்டே கட்டிலில் அமர்ந்து மடியில் சாய்த்துக் கொண்டான்.

 

 

“என்னை மனசுக்குள்ள எவ்வளவு திட்டியிருப்ப நீ… இனி நீ போதும் போதும்ன்னு சொன்னாலும் நான் விடமாட்டேன்…

 

 

“என்ன விடமாட்டீங்க… என்றவளிடம் “ஹ்ம்ம் ரொமான்ஸ் பண்ணுறதை விடமாட்டேன்…இன்னைக்கு நமக்கு முதலிரவு தெரியும்ல…

 

 

“அடப்பாவி மனுஷா இன்னைக்கு தான் நமக்கு முதலிரவா… அப்போ அன்னைக்கு கொண்டாடினதுக்கு பேரு என்னவாம்… என்று எழுந்து அமர்ந்தாள் சஞ்சு.

 

 

“அது கல்யாணத்துக்கு முன்னாடி நடந்தது, சாரி சஞ்சு… அன்னைக்கு நடந்துக்கிட்டது தப்பு தான்… ஆனா என் மனசார இன்னைக்கு தானே நமக்கு முதலிரவு…

 

 

“நிரு சும்மா அதையே சொல்லாதீங்க… அன்னைக்கு நடந்தது தப்பு தப்புன்னு அதே பாட்டு பாடிட்டு இருப்பீங்க… நமக்குள்ள அப்படி நடந்த போதும் நான் உங்களுக்கு மனைவி தான் மறந்துட்டீங்களா… சட்டப்படி நம்ம பதிவு திருமணம் முடிஞ்சுடுச்சு அதெப்படி மறந்தீங்க…

 

 

அப்போது தான் நினைவு வந்தவனாக “நீ பண்ணுன அநியாயத்துல அதுவும் ஒண்ணு… அதை நான் எப்படி மறந்தேன் தெரியலை…

 

 

“நான் என்ன அநியாயம் பண்ணேன், ஏதோ ஒரு பயம் நீங்க என்னை விட்டு போய்டுவீங்களோன்னு… அதான் நம்ம நிச்சயம் முடிஞ்சு ஊருக்கு வந்த அன்னைக்கே கார்த்திக் மாமாகிட்ட சொல்லி அதுக்கு ஏற்பாடு செஞ்சேன்…

 

 

“வேண்டாம்ன்னா நீங்களும் அன்னைக்கு அதை தடுத்திருக்கலாமே… எதுக்கு கையெழுத்து போட்டீங்க…

 

 

“அது ஏன்னு எனக்கும் புரியலை சஞ்சு… எனக்கும் உள்ள ஏதோ ஒரு பயம், பயம்ன்னு சொல்ல முடியாது… ஏதோ ஒரு உணர்வு அதுனால தான் உன்னோட ஏற்பாட்டுக்கு சம்மதிச்சேன்…

 

 

“எதுக்கும் அம்மாவை கேட்டுக்கலாமேன்னு கேட்டேன், அவங்களும் எதுவும் சொல்லலை… அதான் தைரியமா கையெழுத்து போட்டேன்…

 

 

“இப்பவும் நீங்க கஞ்சித்தொட்டி தான் நிரு…

 

 

“எதுக்குடி அப்படி சொல்ற…

 

 

“பின்ன மறுபடியும் பேசியே கொல்றீங்களே…

 

 

“உன்னை… இந்த வாய் தானே பேசுது என்ன பண்றேன் பாரு… என்றவன் அதற்கு மேல் அவளை பேசவிடாமல் அவள் இதழை அணைக்க அங்கு ஒரு இனிய இல்லறம் அரங்கேறியது…

 

___________________

 

 

சிறையில் தனியறையில் இருந்த மேகநாதனும் நாகேந்திரனும் ஒருவரை ஒருவர் குறைக் கூறிக் கொண்டனர். “எல்லாம் உன்னால தான்டா ஆச்சு… நீ மட்டும் என்னை உன் வீட்டுக்கு கூப்பிடாம இருந்தா நான் வந்த வேலை முடிச்சுட்டு ஊருக்கு திரும்பி போயிருப்பேன்… என்றான் மேகநாதன்.

 

 

“ஏன்டா பரதேசிங்களா அன்னைக்கு வசதியானவன்னு என் பின்னாடி நாய் மாதிரி வாலாட்டிட்டு நான் சொன்னதை கேட்டிட்டு இருந்த நாய் நீ இன்னைக்கு என்னையே பேசுறியா… என்று பதிலுக்கு நாகேந்திரன் பாய்ந்தார்.

 

 

இருவருமாக அடித்துக் கொண்டிருக்க திடிரென்று காற்றில் மிதந்து வந்தது நிஷாகந்தி பூவின் வாசம்…

 

____________________

 

 

சஞ்சு நிரஞ்சன் திருமணம் முடிந்த ஒன்றரை மாதத்தில் அர்ஜுனுக்கும் அம்பிகாவும் திருமணம் ஏற்பாடாகியிருந்தது. எல்லோரும் திருமணத்திற்காக ஊருக்கு சென்றனர்.

 

 

அம்பிகாவுக்கு தோழிப்பெண்ணாக சஞ்சனா இருக்க நிரஞ்சன் அர்ஜுனுக்கு துணையாக இருந்தான்… சஞ்சனா இங்குமங்கும் ஓடுவதை கண்டு ரசித்துக் கொண்டிருந்தான்.

 

 

மாம்பழ வண்ணப்பட்டுடுத்தி ரோஜா வண்ணத்தில் ஆங்காங்கே பூ டிசைன் செய்த புடவையை அணிந்திருந்தாள்… காதில் போட்டிருந்த முத்து ஜிமிக்கி அவள் ஓட்டத்திற்கு இணையாய் அங்குமிங்கும் ஆடிக் கொண்டிருந்தது.

 

 

சஞ்சனா ஸ்டோர் அறைக்கு ஒரு பொருளை எடுக்கச் சென்றிருக்க அவளின் உள்ளுணர்வு அங்கு வேறு யாரோ இருப்பதை சொல்ல சட்டென்று திரும்பி பார்த்தாள்.

 

 

மாரியும் செண்பகமும் அங்கு நின்றிருந்தனர்… “ஏன் இப்படி இன்னமும் இங்கயே சுத்தி சுத்தி வர்றீங்க… உங்களுக்கு என்ன வேணும் என்னோட உயிரா… இல்லை அவரோட உயிரா…

 

 

இருவரும் ஏதும் பேசாமல் மௌனமே பதிலாய் நின்றிருந்தனர். “நான் உங்கக்கிட்ட ஒண்ணு சொல்லுவேன்… என்று நிறுத்தினாள். “உங்களோட மனக்கவலை எனக்கு புரிஞ்சு போச்சு… எந்த பாவமும் அறியாத உங்களோட குழந்தை உலகத்தை பார்க்க முன்னாடியே கருவுலையே அழிஞ்சு போச்சு அதானே உங்க கவலை…

 

 

“உங்க குழந்தையை நான் நல்லபடியா வளர்ப்பேன்… என்ன பார்க்கறீங்க இந்த உலகத்தை பார்க்காம உயிரை விட்ட அந்த சிசுவை எங்க மூலமா இந்த உலகத்தை பார்க்கும்… அவர்கிட்ட கூட நான் இந்த விஷயத்தை சொல்லலை, உங்ககிட்ட தான் முதல்ல சொல்றேன்…

 

 

“அந்த குழந்தைக்கு ஒரு நல்ல தாயாவும் தந்தையாவும் இருந்து நாங்க குழந்தையை வளர்ப்போம்… என்று சொல்லி அவள் வயிற்றை தடவினாள்.செண்பகம் அவளருகே வந்து மெல்ல அவள் வயிற்றை வருட ஏதோவொரு நிம்மதி இருவருக்கும் தோன்ற செண்பகமும் மாரியும் அங்கிருந்து மறைந்தனர்.

 

 

அறையை விட்டு சஞ்சனா வெளியே வரவும் அவளை மீண்டும் அறைக்குள் இழுத்துச் சென்றான் நிரஞ்சன். “என்ன நீ இப்படி அப்படியுமா நடந்து நடந்து மனுஷனை கொல்ற…

 

 

“ப்ளீஸ் சஞ்சு… என்றவன் அவளை பேசவிடாமல் அவள் இதழணைத்தான்.“நிரு ப்ளீஸ் விடுங்க… நிரு இப்படி இறுக்காதீங்க…. உங்க பொண்ணுக்கு வலிக்கும்…

 

 

“என்னது என் பொண்ணா?? சஞ்சு நீ என்ன சொல்ற… எனக்கு ஒண்ணும் புரியலை… நமக்கு கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆகியிருக்குமா…

 

 

அவள் அவன் காதை பிடித்து திருகினாள். “திருடா… உங்களுக்கெல்லாம்  எப்படி போலீஸ் வேலை கொடுத்தாங்களோ… புரியலையா… இல்லை புரியாத மாதிரி நடிக்கிறீங்களா… ஆளை பாருஒரு வேளை உங்களுக்கு அம்னீஷியாவோ அடிக்கடி எல்லாம் மறந்திடுறீங்க…

 

 

“மறக்கலைடி என் பொண்டாட்டி… உன்னை சும்மா கலாட்டா பண்ணேன்… நீ சொல்ல வர்றதை கூட புரிஞ்சுக்க முடியாதவன்னு நினைச்சுட்டியா…ஆமா எப்போ டெஸ்ட் பண்ணே… எனக்கு கூட சொல்லவே இல்லை…

 

 

“இன்னைக்கு தான் டெஸ்ட் பண்ணேன்… இப்போ உங்ககிட்ட சொல்லிட்டேன்… போதுமா

 

 

“போதாது சஞ்சு… என்றவனிடம் “என்ன போதாது… சஞ்சு…

 

 

அவனோ அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவன் அவள் வயிற்றை கட்டிக் கொண்டு முத்தமிட தொடங்கினான்… அவளை இருகைகளாலும் தூக்கிக் கொண்டு ஆனந்த கூத்தாடினான்.

 

இனி அவர்கள் வாழ்வில் செண்பகமோ மாரியோ மீண்டும் குறுக்கிட மாட்டார்கள்… நிரஞ்சனும் சஞ்சனாவும் புதுவரவின் மகிழ்ச்சியில் திளைத்திருக்க நாமும் அவர்களை வாழ்த்தி விடைபெறுவோம்…

Advertisement