Advertisement

அத்தியாயம் –19

 

 

வீட்டிற்கு செல்லும் வழியிலேயே சஞ்சு அவள் அத்தை வீட்டுக்கு சென்று அவளுக்கு தேவையான உடைகளை எடுத்துக் கொண்டு பின்பு நிரஞ்சனின் வீட்டிற்கு சென்றனர்.

 

 

அவன் வீட்டிற்கு சென்றதும் இரவு உணவை அருந்தினர். நிரஞ்சனே சஞ்சனாவுக்கு ஊட்டிவிட ஏனோ கண்களை கரித்தது அவளுக்கு. மிதமான சூட்டில் பாலில் பனங்கற்கண்டு கலந்து வந்து அவளுக்கு கொடுத்தான்.

 

 

“சரி சஞ்சு நீ போய் உள்ள படுத்துக்கோ… எதுவும் வேணும்னா கூப்பிடு நான் அடுத்த ரூம்ல இல்லையில்லை ஹால் சோபாவில படுத்திருப்பேன் எழுந்து வந்திடுவேன்… என்றான் நிரஞ்சன்.

 

 

“என்னது வெளிய படுக்கறீங்களா?? நான் மட்டும் தனியா படுக்கணுமா?? நிரு ப்ளீஸ் என்னோடவே படுத்துக்கோங்க… இல்லைன்னா நானும் உங்களோடவே வந்து படுத்துக்கறேன்… என்னால தனியா படுக்க முடியாது…

 

 

“சஞ்சு நான் என்ன அடுத்த வீட்டிலய போய் படுக்க போறேன்… அடுத்த ரூம்ல தானே படுக்க போறேன்… உனக்கு தனியா படுக்க என்ன பயம்… உங்க அத்தை வீட்டில நீ தனியா தானே படுத்திருப்ப…

 

 

“அதெல்லாம் சரி தான்… இன்னைக்கு நடந்த களேபரம் தான் என் கண்ணு முன்னாடி வருது ப்ளீஸ் நிரு… என்று சொல்லி அவனை பாவமாக பார்த்தாள்.

 

 

“சரி சரி.. வா… என்றுவிட்டு அவனும் அவளோடே அந்த அறைக்குள் நுழைந்தான்.

 

 

“நிரு… எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்றாள்.

 

 

“மாத்திரை போட்ட தானே முதல்ல தூங்கு… எதுவானாலும் நாளைக்கு பேசிக்கலாம்

 

 

“ப்ளீஸ் நிரு… என்று அவள் பார்க்க கட்டிலில் அவளருகே அமர்ந்தான். “சொல்லு என்ன பேசணும் என்றான் அவளை பார்த்து.

 

 

“உங்களுக்கு என் மேல கோபமில்லையே… நீங்க சொல்ல சொல்ல கேட்காம அங்க போனேன்னு… என்று பயந்த பார்வை பார்த்தாள்.

 

 

“என்னது கோபமில்லையா…. அதெல்லாம் மலையளவுக்கு இருந்திச்சி… இப்போ இல்லை

 

 

“ஏன் நிரு??? என்றவளை “ஏன்னா… நீ ஒரு வார்த்தை சொன்னியே நிகிதாகிட்ட, பீகாஸ் ஹீ லவ்ஸ் மீன்னு…அதுக்கு பிறகு என்னால உன் மேல கோபமா இருக்க முடியலை…

 

 

“என் மேல உனக்கு எவ்வளவு நம்பிக்கை, அதை நினைச்சு எனக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சுடா என்று அவன் சொல்லும் போது அந்த குரலில் கர்வமும் பெருமிதமும் இருந்தது.

 

 

அவள் ஆச்சரியக் குரலில் “நிரு!!! அதெப்படி உங்களுக்கு தெரியும்… நானும் நிகிதாவும் பேசுறது கூடவா நீங்க ட்ராக் பண்ணீங்க

 

 

“அதுக்கு காரணம் அம்பிகா என்றவன் அம்பிகா புத்திசாலித்தனமாக அர்ஜுனுக்கு போன் செய்திருந்ததை விவரித்தான்.

 

 

“அவளை என்னமோன்னு நினைச்சேன்… ச்சே பாவம் என்னால தான் நிரு அவ இன்னைக்கு இப்படி இருக்கா… போகும் போதே வரமாட்டேன்னு சொன்னா… நான் தான் வம்படியா அவளை கூட்டிட்டு போனேன்…

 

 

“பாவம் நிரு அவ… என்றவளின் குரல் உடைந்திருந்தது. “அதெல்லாம் விடு சஞ்சு…அப்புறம் ரொம்ப சாரி என்று அவன் கூற எதற்கு என்பதாய் அவள் புருவத்தை உயர்த்தினாள்.

 

“நீ நிகிதா பத்தி சொன்னதை நான் அலட்சியப்படுத்தி உன்னை கஷ்டப்படுத்தியிருக்கேன்… அதுக்கு தான் மன்னிப்பு கேட்டேன்… எனக்கு எல்லாமே தெரியும், என்னோட கணிப்பு எப்பவும் சரி தான் அப்படிங்கற கர்வம்

 

 

“நிரு ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க… அப்படிலாம் எதுவும் இல்லை… ஆனா அந்த நிகிதா இந்தளவுக்கு மோசமா இருப்பான்னு நானும் கூட நினைக்கலை நிரு… எனக்கு ஒண்ணு மட்டும் புரியலை… என்று நிறுத்தினாள்.

 

 

“என்ன புரியலை?? என்றவனுக்கு “அவங்க எதுக்கு ரன்பீர் சிங்கை கொல்ல வந்தாங்க… அவர் ஒரு விளையாட்டு வீரர் தானே… அவரை மாதிரி எவ்வளோ பேரு விளையாடுறாங்க… ஏன் குறிப்பிட்டு அவரை மட்டும் கொல்ல நினைச்சாங்க…

 

 

“நீ இவ்வளவு விஷயம் சேகரிச்சு இருக்கியா அவளை பத்தி… ஆனா நீ இன்னும் முழுசா விசாரிக்கலை. அவர் இப்போ விளையாடுறது இல்லை அது தெரியுமா…

 

 

“ஹ்ம்ம் தெரியும்… அதுனால தான் எனக்கும் ஒண்ணும் புரியலை…

 

 

“மண்டு அவர் இப்போ என்னவா இருக்கார்ன்னு உனக்கு தெரியுமா…

 

 

“ஏதோ வேலை பார்க்குறார், அதை பத்தி நான் முழுசா தெரிஞ்சுக்கலையே…

 

 

“ஒரு பத்திரிகைக்காரி இப்படி தான் சொல்றதா?? இந்த ஊர்ல என்ன நடக்குதுன்னு மட்டும் தெரிஞ்சா போதாது இந்த நாட்டுல என்ன நடக்குதுன்னும் நீ கவனிக்கணும்…

 

 

“ஹ்ம்ம் எல்லாம் கவனிச்சுட்டு தான் இருக்கோம்… ரொம்ப பில்டப் பண்ணாம என்னன்னு சொல்லுங்க…

 

“அவர் நம்ம மத்திய அரசாங்கத்துல ஒரு முக்கிய பதவியில இருக்கார்… அவர் ரொம்ப நேர்மையானவர் அது தான் பிரச்சனை… தப்பு பண்ணுறவங்களை ஒருவழியாக்க கெடுபிடியா நடந்துக்குவார்…

 

 

“அது தான் இப்போ அவருக்கு எதிரியா போச்சு… நிகிதா ஒண்ணும் சாதாரணமான ஆளு இல்லை… அம்பிகா எப்போ அவ மேல சந்தேகம்ன்னு சொன்னாளோ அப்போவே அவளோட முழுத்தகவலும் நானும் அர்ஜுனும் எடுத்திட்டோம்…

 

 

“நிகிதாவோட அண்ணன் எதிரி நாட்டோட உளவாளி… இதுல இன்னும் ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா அந்த ரஹீம் இவளோட அண்ணன்னு யாருக்குமே தெரியாது…

 

 

“ஏன்னா இவ அவங்க பெரியப்பா வீட்டில தான் வளர்ந்தா… அதை அவங்க ரொம்ப சாதகமா பயன்படுத்திக்கிட்டாங்க… ரன்பீர் சார் உள்துறையில மிக முக்கிய பணியில இருக்கார்….

 

 

“அவரால அவங்களுக்கு கெடுபிடி அதிகம் ஆகிடுச்சு அதான் அவரை போட்டு தள்ள முடிவு பண்ணிட்டாங்க…

 

 

“அவர் இருக்கறது டெல்லில அங்கேயே அவரை கொன்னிருக்கலாமே… இங்க வந்து ஏன் கொல்ல நினைச்சாங்க…

 

 

“ஏன் இதுக்கு முன்னாடி பிரதமராய் இருந்த ராஜீவ்காந்தியை நம்மோட அண்டைநாட்டு ஆளுங்க இதே தமிழ்நாட்டுல தானே வைச்சு கொன்னாங்க… இத்தனைக்கும் அப்போ அவர் பதவியில வேற இருந்தார்…

 

 

“ஹ்ம்ம் ஞாபகம் இருக்குங்க… என்று அவனை ஆமோதித்தாள். “இங்க ரன்பீர் சார் ஒரு ஸ்கூல்க்கு தலைமை தாங்க வர்றதை தெரிஞ்சுக்கிட்டு இங்க வந்து அவரை கொல்ல சதி பண்ணாங்க…

 

 

“இந்த ஊர்ல முதல்ல தேவையில்லாத கலவரத்தை ஏற்படுத்த முயற்சி பண்ணாங்க… நல்லவேளையா கார்த்திக் அப்போ அவங்களை அடையாளம் காண எங்களுக்கு உதவி பண்ணார்…

“மாமாவா அவர் என்ன பண்ணார்… என்று அவள் கேட்க கார்த்திக் கொடுத்த சிம் கார்ட் பற்றி கூறியவன் அதில் இருந்த தகவல்களை சேகரித்த விபரத்தை அவளிடம் கூறினான்.

 

 

“ஆனா இந்த ரன்பீர்இந்த ஊர்ல இருக்கற ஸ்கூல்க்கு ஏன் தலைமை தாங்க வர்றார்…

 

 

“ஆனாலும் சஞ்சு ரொம்ப கேள்வி கேட்குற, நான் உன்கிட்ட இவ்வளவு சொன்னதே அதிகம்… இதெல்லாம் உன்னோடவே இருக்கணும்… சரியா… என்றவன் அவள் தலையசைத்ததும் தொடர்ந்தான்.

 

 

“ரன்பீர் சார் தலைமை தாங்க வர்றதா சொன்னாரே அந்த ஸ்கூல் கரஸ்பாண்டன்ட்டோட அப்பாவும் ரன்பீர் சாரோட அப்பாவும் ராணுவத்தில ஒண்ணா இருந்தாங்க…

 

 

“ரன்பீர் சாரோட அப்பாவை ஒரு ஆபத்தில இருந்து அவர் மீட்டதுனால அவங்க ரொம்பவும் க்ளோஸ் ஆகிட்டாங்க… அதுக்கு நன்றி செலுத்துற விதமா தான் அவர் இங்க வர்றார்…

 

 

“நாளைக்கு காலையில அவர் இங்க வந்திடுவார்… எனக்கு நெறைய வேலை இருக்கு சஞ்சு, நீ வேற வளவளன்னு கேள்வி கேட்டுட்டு இருக்க, தூங்கலாமா??? என்று பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

 

 

“சரி நிரு தூங்கலாம்… என்று அவள் கூறவும் அவன் கட்டிலில் இருந்த விரிப்பையும் தலையணையையும் எடுத்தான்.

 

 

“இதை எதுக்கு எடுக்கறீங்க நிரு… இங்கயே படுக்க வேண்டியது தானே… என்றவள் அவன் முறைப்பில் கடைசியாக சொன்னதை மெதுவான குரலில் சொன்னாள்.

 

 

“ஏன் நிரு… நான் வேணா கீழே படுக்கறேன்… என்று எழுந்தவளை “பேசாம படு சஞ்சு… நமக்கு இன்னும் கல்யாணம் ஆகலை சஞ்சு ஞாபகம் இருக்கு தானே…

 

 

“எல்லாம் இருக்கு… நீங்க எந்த காலத்துல இருக்கீங்க நிரு… அதுக்கு நீங்க என்னை அத்தை வீட்டிலேயே விட்டிருக்கலாம்…

 

 

“பேசாம படுடி… சும்மா தொணதொணன்னு பேசிட்டு… மனுஷனை உசுப்பேத்தாதே… உன்னை ஏன் இங்க கூட்டிட்டு வந்தோம்ன்னு யோசிக்க வைச்சுடாதே… எனக்கு நாளைக்கு நெறைய வேலை இருக்கு தூங்கணும்

 

 

“இருந்தாலும் நிரு நான் எப்படி கட்டில்ல தனியா…….

 

 

நிரஞ்சன் விரிப்பை விரித்து படுத்துக் கொண்டான். எப்போது உறங்கினானோ தெரியவில்லை எப்போதும் அவனை எழுப்பும் அவன் கைபேசி அலாரம் அடிக்கவும் வலது கையை நீட்டி அதை எடுத்து பொத்தானை அமுக்கினான்.

 

 

இடது கையை நீட்ட முயற்சிக்க கையை எடுக்க முடியாமல் போகவும் அவன் திரும்பி பார்த்தான். சஞ்சு அவன் கையை அணைவாய் வைத்து அதில் தலை வைத்து உறங்கியிருந்தாள்.

 

 

‘இவளை சொன்னாலும் கேட்காம இங்க வந்து படுத்திருக்காளே… இவளை இங்க கூட்டிட்டு வந்திருக்க கூடாதோ… என்னடா இது இந்த மதுரைக்கு வந்த சோதனை… என்று நொந்து கொண்டவன் மெதுவாக அவள் தலையை எடுத்து தலையணையில் வைத்தான்.

 

 

படுக்கையில் இருந்து எழுந்தவன் காலை குறுக்கி உறங்கும் அவளை உறக்கம் கலையாதவாறு தூக்கி கட்டிலின் மேல் படுக்க வைத்துவிட்டு அவள் நெற்றில் முத்தமிட்டு குளியலறை புகுந்தான்.

 

 

சீருடை அணிந்து தயாராகி காபியை குடித்து முடித்தவன் அவளுக்கு எடுத்து வைத்துவிட்டு வெளியில் சென்று டிபனும் வாங்கி வந்து வைத்தவன் அவளை எழுப்பினான்.

 

 

“சஞ்சு எழுதிரும்மா… நான் ஆபீஸ் கிளம்பிட்டேன்… என்று அவன் கூறவும் அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தவள் சுற்று முற்றும் பார்த்தாள். ‘நான் எப்போ மேல வந்து படுத்தேன் என்று யோசித்துக் கொண்டே அவனை பார்த்தாள்.

 

 

“என்ன நிரு அதுக்குள்ள என்ன அவசரம் நீங்க கிளம்பிட்டீங்க…

 

 

“என்னது அவசரமா மணி எட்டாகுது… பத்து மணிக்கு ரன்பீர் சார் வந்திடுவார்… நான் இன்னும் அரைமணி நேரத்துல அங்க இருக்கணும்… உனக்கு காபி போட்டு பிளாஸ்க்ல வைச்சுருக்கேன்…

 

 

“டிபன் வாங்கிட்டு வந்து டைனிங் டேபிள் மேல வைச்சிருக்கேன்… பிரஷ் பண்ணிட்டு நல்லா கேட்டுக்கோ பிரஷ் பண்ணிட்டு காபி குடி… பழக்க தோஷமா பெட் காபி குடிக்காதே… சரியா

 

 

“அப்புறம் ஆட்டோ சொல்லியிருக்கேன்… உங்க ஆபீஸ்க்கு போயிட்டு வந்திடு… நீயா எதுவும் சொல்ல வேண்டி இருக்காது… வேலை எல்லாம் சீக்கிரம் முடிச்சுட்டு வந்திடு… இது வீட்டோட சாவி என்று அவள் கையில் திணித்தான்.

 

 

“சரி நான் கிளம்பறேன்… என்று அவன் சொல்லிவிட்டு கிளம்பயத்தனிக்க “நிரு ஒரு நிமிஷம் என்று கூற அவளை திரும்பி என்ன என்பது போல் பார்த்தவன் புருவத்தை உயர்த்தினான்.

 

 

“ஐ லவ் யூ நிரு… என்று அவள் கூற சற்றே திகைத்தவன் பதிலுக்கு ஏதும் சொல்லாமல் ஒரு சிறு தலையசைப்புடன் வெளியேறினான்.

 

 

சஞ்சனாவும் குளித்து சாப்பிட்டு கிளம்பியிருக்க அவன் சொன்னது போலவே ஆட்டோ வரவும் அதில் ஏறி அவள் அலுவலகம் கிளம்பினாள்.

 

 

நிரஞ்சனுக்கும் அர்ஜுனுக்கும் தலைக்கு மேல் வேலையிருந்தது. என்ன தான் அவர்கள் தீவிரவாதிகளை பிடித்துவிட்டாலும் அவர்கள் வேறு எதுவும் திட்டம் வைத்திருப்பார்கள் என்று எதிர்பார்த்தவர்கள் கடுமையான கட்டுபாடுகள் விதித்தனர்.

 

 

மிக மிக பாதுகாப்பாகவே அவரை அழைத்து வந்து அதே போல் அவர் திரும்பி செல்லும் வரை அவரை பத்திரமாகவே பார்த்து வழியனுப்பினர். ரன்பீர் இருவரையும் மனமார பாராட்டி வாழ்த்து கூறி விடைபெற்றார்.

 

 

சஞ்சு அலுவலகத்தில் இருந்து நேரே வீட்டிற்கு சென்றுவிட்டு பின் அம்பிகாவை பார்க்க மருத்துவமனை சென்றாள். அம்பிகா சற்றே தேறி எழுந்து அமர்ந்திருந்தாள். சஞ்சு வேகமாக வந்து அவளை அணைத்துக் கொண்டாள்.

 

 

“சாரிடி அம்பிகா… எல்லாமே என்னால தான், என்னால தானே உனக்கு இப்படி ஆச்சு… நேத்து உன்னை பேச்சு மூச்சில்லாம பார்க்கவும் ரொம்ப கஷ்டமா போச்சு. அர்ஜுன் பாவம் அவர் கண்ணுல இருந்து கண்ணீரே வந்திடுச்சு…

 

 

“சஞ்சு விடுங்க… அதெல்லாம் ஒண்ணுமில்லை… நான் இப்போ நல்லா தான் இருக்கேன்…

 

 

“இல்லை அம்பிகா நேத்து சமயோசிதமா அர்ஜுனுக்கு போன் பண்ணது எவ்வளோ நல்லதா போச்சு தெரியுமா… நிரு உன்னை பத்தி பெருமையா சொல்லிட்டு இருந்தார்…

 

 

“எனக்கே அதை நினைச்சா ஆச்சரியமா தான் இருக்கு சஞ்சு… எனக்கு எப்படி அப்படி எல்லாம் தோணிச்சுன்னே தெரியலை… ஆனா சஞ்சு அர்ஜுன் எனக்காக ஏன் பீல் பண்ணணும்… என்றவள் அவள் அன்னையும் தந்தையும் அங்கிருப்பதையே மறந்து சஞ்சுவிடம் கேட்டுக் கொண்டிருந்தாள் ஆர்வமாக.

 

 

“ஏன் அம்பிகா அது ஏன்னு உனக்கு புரியலையா??

 

 

அம்பிகாவுக்கு புரிந்ததோ இல்லையோ அவளின் பெற்றோருக்கு அர்ஜுனை புரிந்தது. இருந்தாலும் மகளின் பதில் என்னவென்று அவளை பார்த்தனர்.

 

 

“நிஜமாவே புரியலை எனக்கு… என்றவளுக்கு நிச்சயம் புரிந்திருந்தது அவனை, ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சஞ்சு என்ன பதில் சொல்லப் போகிறாள் என்று பார்த்தாள்.

 

 

“நீ எதுக்கு அம்பிகா நிருவுக்கு போன் பண்ணாம அர்ஜுனுக்கு போன் பண்ணே… எனக்கு ஒண்ணுன்னா அதை பத்தி நிருவுக்கு தானே தெரியணும்… என்று கொக்கி போட்டாள்.

 

 

“அது… அது வந்து என் போன்ல முதல்ல அவர்… அவர் பேரு தான் இருந்திச்சு… அதான் அந்த நம்பருக்கு போட்டேன்… என்று சமாளித்தாள்.

 

 

அர்ஜுனும் நிரஞ்சனும் வேலை முடிந்து நேரே அம்பிகாவை பார்க்க மருத்துவமனை வந்திருக்க அம்பிகாவும் சஞ்சனாவும் பேசிக் கொண்டிருப்பதை கேட்டவுடன் அர்ஜுனை தடுத்த நிரஞ்சன் வெளியிருந்து அவர்கள் உரையாடலை இருவருமாக கேட்டனர்…

 

 

அம்பிகா திணறிக் கொண்டிருக்கும் போதே பொறுக்கமுடியாமல் உள்ளே வந்தவன் அவள் பெற்றோரிடம் நேரடியாகவே கேட்டுவிட்டான். “சார் எனக்கு உங்க பொண்ணை கல்யாணம் பண்ணி தருவீங்களா… என்று.

 

 

இருவரும் சற்றே திகைத்து பின் அவர்கள் மகளின் முகத்தை பார்க்க அர்ஜுனும் அவளை நோக்கினான். “என்னங்க ராதா என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்க தானே…

 

 

“சும்மா சஞ்சனாகிட்ட கதை சொன்ன மாதிரி என்கிட்ட சொல்லி ஏமாத்த வேண்டாம்… ஆமா இல்லைன்னு ஒரே பதில் தான் எனக்கு வேணும்… என்று கட்டன்ரைட்டாக சொல்ல “என் பேரு அம்பிகா… ராதா இல்லை…

 

 

“எதுவா இருந்தா என்ன?? என்று அவன் சொல்ல அவளோ “உங்களுக்கு அம்பிகா வேணுமா… ராதா வேணுமா என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பதினாறு வயது சிறுமி ஒருத்தி சீருடையுடன் உள்ளே நுழைந்தாள். “இவ தான் ராதா என்னோட தங்கச்சி… என்று சொல்ல அர்ஜுன் முகத்தில் டின் டின்னாக அசடு வழிந்தது…

 

 

“என்னது ராதாவா??? நிஜமாவே உனக்கு ராதான்னு ஒரு தங்கை இருக்கான்னு ஏன் சொல்லவே இல்லை… என்று விழித்தான்.

 

 

“நீங்க அன்னைக்கு அப்படி சொன்னதும் எப்படி கண்டுபிடிச்சீங்கன்னு முதல்ல கோபம் வந்திச்சு… அப்புறம் தான் நீங்க சினிமா கதாநாயகிகள் பத்தி பேசறீங்கன்னு புரிஞ்சு கொஞ்சம் அமைதியாகிட்டேன்.

 

 

“எங்கப்பாவுக்கு அந்த ரெண்டு நடிகையும் ரொம்ப பிடிக்கும், அதான் எங்களுக்கு அந்த பேரு… இப்போ சொல்லுங்க அம்பிகா வேணுமா?? ராதாவா???

 

 

“அம்பிகா தாங்க வேணும்… அம்பிகா தாங்க வேணும்… என்று அவன் திரும்ப திரும்ப சொல்ல அங்கு ஒரே சிரிப்பலையாக இருந்தது.

 

 

சஞ்சனாவோ “ஆனா அம்பிகா இந்த ரெண்டு போலீஸ் கொஞ்சம் ஒரே மாதிரி தான் போல… நிருவும் இப்படி தான் இதே ஆஸ்பிட்டல் வைச்சு தான் என்னை கல்யாணம் பண்ணிக்க விரும்பறதா சொன்னார்…

 

 

“என்ன நான் இருந்த ரூம் வேற, நீ இருக்கற ரூம் வேற… டயலாக் எல்லாம் ஒண்ணு போலவே இவங்க பேசிட்டாங்க…என்று கூற மீண்டும் எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

 

 

நிரஞ்சன் சஞ்சனாவை அழைத்துக் கொண்டு எல்லோரிடம் விடைபெற்றுக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினான். முதலில் இறங்கி வேகமாக வீட்டிற்குள் சென்றாள் அவள்.

 

 

பின்னோடு அவனும் வீட்டிற்குள் நுழைய வீடு முழுதும் நெய் வாசம் வீசிக்கொண்டிருந்தது. ‘இதென்ன வீடு பூரா நெய் வாசமடிக்குது… யாரு வந்திருப்பா… இவ நம்ம கூட தானே வந்தா… அதுக்குள்ள சமைச்சிருக்க முடியாதே என்று யோசித்துக் கொண்டே உள்ளே வந்தான்.

 

 

எதிரில் வந்தவள் “போங்க… போங்க சீக்கிரம் போய் குளிச்சிட்டு வாங்க… நான் அதுக்குள்ள சூடா காபி போட்டு வைக்கிறேன்… இன்னைக்கு ஒரு ஸ்பெஷல் வேற இருக்கு…

 

 

“என்ன ஸ்பெஷல் சஞ்சு… அப்போ இதெல்லாம் உன் வேலை தானா… என்ன செஞ்சு வைச்சு இருக்க… ஏதோ இனிப்பு வாசம் அடிக்குது… இன்னைக்கு என்ன விசேஷம் உன் பிறந்தநாளா… இல்லையே…

 

 

“அடடா போதும் உங்க ஆராய்ச்சி முதல்ல ரெப்ரெஷ் ஆகிட்டு வாங்க… அப்புறம் பேசுவோம்… என்றவள் அவன் முதுகில் கைவைத்து அவனை குளியலறை வாயிலில் சென்று விட்டு வந்தாள்.

 

 

குளித்து வேறு உடைக்கு மாறிக் கொண்டு வந்தவனுக்கு சூடான காபியுடன் கேசரியும் போண்டாவும் வைத்துக் கொடுத்தாள். “ஹேய் சஞ்சு இதெல்லாம் எப்போ செஞ்சே

 

 

“நான் ஆஸ்பிட்டல் போக முன்னாடி வீட்டுக்கு வந்து இதெல்லாம் செஞ்சேன்… போண்டா மட்டும் இப்போ சூடா போட்டது…

 

 

“இதெல்லாம் எதுக்கு இப்போ???

 

 

“பின்னே உங்களை ஸ்பெஷலா கவனிக்க வேணாமா… ஆபீஸ்ல உள்ள டிவில பார்த்தேன்… உங்களையும் அர்ஜுனையும் புகழ்ந்து தள்ளிட்டாங்க… இன்னைக்கு தலைப்பு செய்தியே நீங்க தானே…

 

 

“அதான் ரொம்ப சந்தோசமா இருந்துச்சு… இதெல்லாம் செஞ்சேன்… நல்லா இருக்கா… அத்தையை கேட்டு கேட்டு தான் செஞ்சேன்… அவங்க வேற யாருக்கு செய்யற எதுக்கு இதெல்லாம் கேட்குறன்னு கேட்டு என்னை துளைச்சிட்டாங்க…

 

 

“காலையில இருந்து ஒரு ஒருத்தாரா எனக்கு போன் பண்ணி உங்களை பத்தி தான் விசாரணை… என்று சிலாகித்து சொன்னதை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

 

லேசாக நெற்றியில் அரும்பிய வியர்வையுடன், கலைந்திருந்த சுருள் மூடியை கையால் ஒதுக்கிக் கொண்டு கண்ணை உருட்டி உருட்டி அவள் பேசுவதை பார்த்தவனின் விழிகள் கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கியது.

 

 

இப்போதெல்லாம் அவள் அடிக்கடி சேலை உடுத்துவதாக தோன்றியது. ஒரு வேளை அவன் பிடித்திருக்கிறது என்று சொன்னதால் கூட இருக்கலாம். இமை தாழ்ந்து அவள் வெற்றிடையை அவன் பார்வை தழுவ லேசாக காற்றில் ஆடிய மேலாடை விலகி அவனை அலைகழித்தது.

 

 

தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அவனுக்கு கோபம் வர ஆரம்பித்தது. பொறுமையை இழுத்து பிடித்து தன்னை அடக்கியவன் “சஞ்சு பேசினது போதும்டா… நான் போய் நைட்டுக்கு சாப்பிட எதுவும் வாங்கிட்டு வர்றேன்

 

 

“என்னது வாங்கிட்டு வர்றீங்களா… விளையாடுறீங்களா… நான் சப்பாத்திக்கு பிசைஞ்சு வைச்சுருக்கேன்… பசிக்கும் போது சொல்லுங்க சுட்டு தர்றேன்… இப்போ போய் சப்ஜி பண்ணுறேன்… என்று சொல்லி அவள் இடத்தை காலி செய்யவும் தான் அவனுக்கு மூச்சே வந்தது.

 

 

‘இவளை இங்க கூட்டிட்டே வந்திருக்க கூடாது… என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுறா… காலையில வேற போற போக்குல ஐ லவ் யூ வேற சொல்லி நான் வேற அடிக்கடி கற்பனைக்கு போய் இந்த அர்ஜுன் கிண்டல் பண்ணது தான் மிச்சம், ராட்சசி என்று அவளை மனதிற்குள் செல்லமாக வைதான்.

 

 

இரவு இருவருமாக சாப்பிட்டு முடிக்க வேலை முடித்து வந்து சோபாவில் அமர்ந்தவள் மடிக்கணினியை எடுத்து வைத்துக் கொண்டு வேலை பார்த்துக் கொண்டிருந்த நிரஞ்சனை நோக்கினாள்.

 

 

“இன்னும் என்னங்க வேலை, படுக்கலாம்ல…

 

 

“நீ போய் படு சஞ்சு… எனக்கு நேரமாகும் படுக்க, வேலையிருக்கு… என்று நிமிர்ந்து பார்க்காமலே பதிலளித்தான் அவளுக்கு.

“நான் மட்டும் எப்படி தனியா??? நிரு ப்ளீஸ் உள்ள வந்து வேலை பாருங்களேன்… என்றதும் கணினியில் இருந்து முகம் விலக்கி கடுமையாக “இப்போ போறியா இல்லையா??? நீ என்ன சின்ன குழந்தையா???சும்மா கடுப்பேத்திட்டு என்று அவன் சொல்லவும் முகம் வாடி எழுந்து சென்றாள்.

 

 

விழியில் லேசாக கண்ணீரும் எட்டிப்பார்க்க கட்டிலில் சரிந்து கண்ணீர் விட்டாள். ‘எப்பா போயிட்டாளா, இவளை சமாளிக்கறது பெரிய வேலையா இருக்கே எனக்கு… சாரிடா சஞ்சு நான் உன்னை கோபமா பேசிட்டேன்… என்று மனதார மன்னிப்பும் கேட்டுக் கொண்டான்.

 

 

இரவு மணி பன்னிரெண்டை நெருங்கும் சமயம் அவனுக்கும் கண்கள் செருக மடிகணினியை அணைத்துவிட்டு எழுந்தான். அவளருகில் சென்று நின்று பார்த்தால் கூட வம்பு வந்துவிடும் போல் தோன்ற விரிப்பை எடுத்துக் கொண்டு முதல் நாள் படுத்த இடத்தில் படுக்காமல் கட்டிலுக்கு நேர் கீழே விரித்துக்கொண்டு படுத்துவிட்டான்.

 

 

காலையில் இருந்து பெரும் அலைச்சலாக இருந்ததில் உடம்பு அசதியாய் இருந்தது அவனுக்கு. உடம்பெல்லாம் வலிப்பது போல் இருந்தது, படுத்ததும் உறங்கியிருந்தாலும் அது நிம்மதியான உறக்கமாக அவனுக்கு இல்லை.

 

 

அவன் கனவில் யாரோ அவன் கழுத்தை நெறிப்பது போல் தோன்ற தொண்டை வலிக்க ஆரம்பித்தது… கண்ணை மூடியவாறே அரற்றினான். “யாரது?? ஹேய் யாரது?? சொல்லு, கேட்கிறேன்ல விடு விடு… என்றவாறே கைகளை காற்றில் துழாவி யாரையோ பிடித்து தள்ளிக் கொண்டிருந்தான்.

 

 

நிரஞ்சன் இப்படி கத்திக் கொண்டிருக்க அவனை நோக்கி வந்த சஞ்சனாவும் “அவரை விட்டுடு… ப்ளீஸ் அவரை விட்டுடு…என்னை மீறி அவரை எதுவும் செய்ய முடியாது…

 

 

“சஞ்சு நீ எதுக்கு வந்தே?? நான் பார்த்துக்கறேன் விடு… என்று உறங்கிய நிலையிலேயே எழப் போக “இல்லை நிரு ஒண்ணுமில்லை… நான் பார்த்துக்கறேன்…

 

“விடு சஞ்சு, யாரோ வேணுமின்னே செய்யறாங்க… நான் இதுக்கெலாம் பயப்பட மாட்டேன்… என்று மீண்டும் கண்ணயர்ந்த நிலையிலேயே எழ சஞ்சு அவன் பேச்சை நிறுத்த அவள் இதழ் கொண்டு அவனிதழ் மூடினாள்.

 

 

அதன்பின் கனவிலேயே இருவரும் ஈருடல் ஓர் உயிராகி உறவாடியிருக்க எப்போதும் போல் அவன் கனவை அவன் கைபேசியில் வைத்திருந்த அலாரம் அடித்து கலைத்து அவனை எழுப்பியது.

 

 

தூக்கம் கலைய ஆரம்பித்தவனுக்கு ‘ச்சே என்ன கனவிது, இவளை இங்க கூட்டிட்டு வந்ததுல இருந்து எனக்கு கண்ட நினைப்பு வருது… முதல்ல கார்த்திக்கு போன் பண்ணி வரச்சொல்லி இவளை அங்க அனுப்பி வைக்கணும் என்ற சிந்தனையுடன் இருக்க அலாரமோ முதலில் எழுந்து என்னை கவனியேன் என்பது போல் மீண்டும் அலறியது.

 

 

கையை நீட்டி கைபேசியை எடுக்க முயல அவனால் கையை நீட்ட முடியாமல் போனது. ‘இன்னைக்கும் இங்க வந்து படுத்திட்டாளா என்று எண்ணிக் கொண்டு கண்ணை நன்றாக விழித்து பார்த்தான்.

 

 

சஞ்சு முதல் நாள் போல் அவன் கையை அணைவாய் கொடுத்து தலைவைத்து உறங்கியிருக்க அவன் சட்டென்று எழுந்து அமர்ந்தான்……..

 

 

அத்தியாயம் –20

 

 

அவனருகில் படுத்திருந்தவளின் கலைந்திருந்த கோலம் நடந்தது கனவில்லை என்று அவனுக்கு பறைசாற்றியது.

 

 

‘என்ன ஒரு முட்டாள்தனம், இது எப்படி சாத்தியம். நடந்தது கனவா?? நனவா?? என்றளவுக்கு கூட எனக்கு அறிவு இல்லையா??

 

 

‘ஏன் சஞ்சு என்னை தடுக்கவில்லை?? அவள் தடுத்தாலும் தடுக்கவில்லை என்றாலும் இப்படி ஒரு விஷயம் நடந்தது கூட தெரியாத அளவுக்கு என் புத்தி என்ன செய்து கொண்டிருந்தது

 

 

அவனுக்கு அவன் மேலேயே கோபம் கோபமாக வந்தது. ‘ச்சே என் தந்தையின் ரத்தம் இந்த உடம்பில் தானே ஓடுகிறது, அது கொடுத்த தைரியம் தான் இப்படி செய்ய வைத்திருக்கிறது… என்று அதற்கும் தன்னையே குற்றம் சாற்றிக் கொண்டான்.

 

 

கண்ணை மூடி நடந்ததை நினைவுக்கு கொண்டு வர முயன்றான். ‘நைட் என் கழுத்தை யாரோ நெரிச்சது போல இருந்துச்சே, சஞ்சு அதை பார்த்திட்டு தானே என் பக்கத்துல வந்தா… அப்போ அவன் வந்தது யாருன்னு பார்த்திருக்கணும்

 

 

நிரஞ்சன் வேகமாக எழுந்து அமர்ந்ததிலேயே விழிப்பு தட்டியிருந்த சஞ்சு படுத்துக் கொண்டே அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் முகம் முதலில் குழப்பத்தில் இருந்ததும் பின் கோபம் கொண்டதையும் கவனித்தாள்.

 

 

மெதுவாக அவள் எழுந்து அமர நிரஞ்சன் திரும்பி அவளை பார்த்தான். அந்த பார்வை ‘நடந்தது என்ன என்று அவளிடம் கேளாமல் கேட்டது. அவள் மெளனமாக தலை குனியவும் “சஞ்சு என்றழைத்தான்.

 

 

“நைட் என்ன நடந்திச்சு. உண்மையை சொல்லு… என்னை கொல்ல வந்தது யாரு… வந்தவங்க என் கழுத்தை பிடிச்சு நெரிச்சது எதுக்காக… அவங்க இப்போ எங்கே??

 

“அப்புறம் சஞ்சு ந… நமக்குள்ள என்ன நடந்திச்சு… என்று கடைசியாக கேட்டதை மிக மெதுவான குரலில் கேட்டான்.

 

 

“நைட் யாரும் வரலை நிரு…

 

 

“என்ன யாரும் வரலையா??? அப்போ என் கழுத்தை யாரோ பிடிச்சது, நான் எழுந்து பார்க்கறேன்னு சொன்ன போது ஒண்ணுமில்லைன்னு சொல்லி நீ… நீ என் பக்கத்துல வந்து…  சொல்லு சஞ்சு நமக்குள்ள என்ன நடந்திச்சு…

 

 

“நிரு நீங்க ஏதோ கனவு கண்டு உறக்கத்தில புரண்டுட்டு இருந்தீங்க… உங்களை சமாதானப்படுத்த தான் நான் உங்க பக்கத்துல வந்தேன்… அப்புறம் நடந்ததுக்கு…என்று சொல்ல முடியாமல் நிறுத்தினாள்.

 

 

“நீ ஏன் சஞ்சு என்னை தடுக்கலை… தப்பில்லையா கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி நடந்தது தப்பில்லையா?? என்னை நீ ஓங்கி ஒரு அறைவிட்டிருக்க கூடாதா??

 

 

“ஆனா சஞ்சு என்னை கொல்ல வந்தவங்களை நீ விரட்டின மாதிரி இருந்திச்சே… என்னை விட்டுட சொல்லி நீ அவங்ககிட்ட கேட்ட ஞாபகம் இருக்கே

 

 

“இல்லை நிரு நான் அப்படி எதுவும் கேட்கலை… நீங்க தூக்கத்தில புலம்பிட்டு இருக்கீங்கன்னு தான் நான் உங்க பக்கத்துல வந்தேன்…

 

 

“சஞ்சு நான் கேட்டதுக்கு இன்னும் உன்கிட்ட இருந்து பதில் வரலை… நீ ஏன் என்னை தடுக்க முயற்சி எடுக்கலைன்னு கேட்டேன்…

 

 

“நிரு நீங்க ஏன் இதை தப்புன்னு நினைக்கறீங்க… ப்ளீஸ் நிரு இதை இதோட விட்டுடுங்க… அதுவும் இல்லாம உங்களை நான் எப்படி தடுத்திருக்கணும்ன்னு எதிர்பார்க்கறீங்க

 

 

“சஞ்சு அப்போ நடந்தது தப்பே இல்லைன்னு சொல்றியா… கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி நடந்தது தப்பில்லையா?? என்கிட்ட தான் சஞ்சு தப்பு… நான் ரொம்ப தப்பான எண்ணம் கொண்டிருக்கேன்…

 

 

“உன்னை நான் இங்க கூட்டிட்டு வந்ததே தப்பு… நீ இங்க வந்ததுல இருந்தே எனக்கு கண்ட கண்ட எண்ணமெல்லாம் வருது உன் மேல… நான் இப்படி எல்லாம் இருந்ததேயில்லை…

 

 

“நிரு ப்ளீஸ் போதும் நிறுத்துங்க… நான் உங்க பொண்டாட்டிங்கறதை எப்படி மறந்தீங்க நீங்க… உங்கப்பா பண்ண மாதிரி நீங்களும் தப்பு பண்ணிட்டீங்கன்னு நினைக்கறீங்க… அதான் உங்களை இப்படி பேச வைக்குது…

 

 

அவன் தந்தையை பற்றி பேசியதும் அவன் உடலும் மனமும் இறுக முகமும் இறுக்கத்தை சுமந்தது. ‘இந்த விஷயம் சஞ்சுவுக்கு எப்படி தெரிந்தது என்று யோசித்தவன் பார்வை இப்போது அவளை நோக்கியது.

 

 

“நிரு நீங்க என்ன யோசிக்கறீங்கன்னு எனக்கு புரியுது… நான் அந்த டைரி அன்னைக்கு இங்க வந்திருக்கும் போது படிச்சேன்… அப்படி பார்க்காதீங்க நிரு…நான் வேணுமின்னு அதை படிக்கலை…

 

 

“அது நீங்க எழுதினதுன்னு நினைச்சு தான் படிச்சேன்… என்னை பத்தி எதாச்சும் எழுதியிருப்பீங்களான்னு ஆர்வத்துல தான் அதை படிக்கவே ஆரம்பிச்சேன்… அப்போ தான் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன்…

 

 

“உனக்கு எப்படியும் தெரிஞ்சு தானே ஆகணும்… இன்னைக்கு இல்லைன்னா நாளைக்கு தெரிஞ்சிருக்கும்… சரி விடு சஞ்சு… நான் கார்த்திக்கு போன் பண்றேன்… இன்னைக்கு நைட்குள்ள வரச் சொல்றேன்…நீ உங்க வீட்டுக்கு போ, நடந்த தப்புக்கு என்னை மன்னிச்சுடு…

 

 

“நிரு திரும்ப திரும்ப நடந்ததை தப்புன்னு சொல்லாதீங்க… நீங்க ஒண்ணும் என்னை பலவந்த படுத்தலையே… ரெண்டு பேரோட விருப்பத்துல தானே இந்த சங்கமம்… உங்களுக்கு எந்த குற்றவுணர்ச்சியும் வேண்டாம் நிரு ப்ளீஸ்… “அத்தையும் கார்த்திக் மாமாவும் நாளைக்கு காலையில வந்திடுவாங்க அதுவரைக்கு நான் இங்கயே இருக்கேன் நிரு…

 

 

“போதும் சஞ்சு… தப்பை சரின்னு சொல்லாதே… கார்த்திக்கிட்ட என் மேல நம்பிக்கை இல்லையான்னு கேட்டேன்… இப்போ அந்த நம்பிக்கையை நான் கெடுத்துட்டு தானே நிக்குறேன்…

 

 

“இன்னும் கொஞ்ச நாள்ல நமக்கு கல்யாணம் ஆகப்போகுது… அதுக்குள்ள இப்படி நடந்திருக்க வேணாம்ன்னு நான் நினைக்கிறேன்… அது தப்புன்னு எனக்குப்படுது…

 

 

“நிரு…

 

 

“நீ எதுவும் பேச வேண்டாம்…

 

 

“நிரு அதான் எல்லாம் நடந்து முடிஞ்சு போச்சு… அப்புறம் ஏன் பயப்படுறீங்க… நாளைக்கு அவங்க வந்ததும் நான் போறேன்…

 

 

“ஓ அப்போ தப்பை திரும்ப திரும்ப செஞ்சா தப்பில்லைன்னு சொல்ல வர்றியா??என்றவன் கோபமாக அவளை பார்த்தான்.

 

 

‘இருந்தாலும் இவரு ரொம்ப போலீசா இருக்காரு என்று மனதிற்குள் அவனை திட்டிக் கொண்டாள்.

 

 

கார்த்திக்கிற்கு போன் செய்து உடனே கிளம்பி வரச் சொன்னான். அவன் அன்று இரவே சென்னை கிளம்புவதால் சஞ்சுவை தனியே விடமுடியாது என்று சொல்லி அவர்களை உடனே கிளம்பி வரச் சொன்னான்.

 

 

சஞ்சுவிடம் எதுவும் பேசாமல் குளியலறைக்குள் புகுந்துக் கொண்டவன், குளித்து தயாராகி சீருடை அணிந்து வந்து அவளை உடனே கிளம்பச் சொன்னான்.குளியலறைக்குள் புகுந்த சஞ்சுவிற்கோ கண்கள் கரித்துக் கொண்டு அழுகை வந்தது.

 

‘இன்னைக்கும் செண்பகம் வந்தா என்ன செய்யறது, என்னை இன்னைக்கே வீட்டுக்கு போக சொல்றாரே… கடவுளே நான் என்ன செய்வேன்…ஏன் செண்பகம் உங்களுக்கு இவ்வளவு கொலை வெறி… கட்டிக்க போறவளை தோட்டத்தை கூட தப்புன்னு நினைக்கற இவரை கொன்னே ஆகணும்ன்னு உங்களுக்கு ஏன் இந்த வெறி…

 

 

‘அவரை விட்டுடுங்க… ஒரு தப்புக்கு இன்னொரு தப்பு சரியாகுமா… என்று வாய்விட்டு அரற்ற நிரஞ்சன் குளியலறை கதவை தட்டினான். அவசரமாக குளித்து முடித்து வந்தவள் கிளம்பி அவனுடன் தயாரானாள்.

 

 

“உன்னோட திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு வா… என்று ஒற்றை வார்த்தை சொல்லிவிட்டு அவன் வெளியில் சென்று விட்டான். அவள் உடைமைகளை எடுத்துக் கொண்டு அந்த அறையில் மாட்டப்பட்டிருந்த விநாயகரின் படத்தின் முன் சென்று நின்றாள்.

 

 

‘நடந்து எதுவும் சரின்னு நான் சொல்லலை… ஆனா அவருக்கு ஏதாவது ஒண்ணுன்னா என்னால தாங்க முடியாது… என்னை பொறுத்த வரைக்கும் நடந்த எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும்ன்னு நம்பறேன்…

 

 

‘இதுவும் நல்லதுக்குன்னு தான் நான் நினைக்கிறேன்… அவர்க்கு எதுவும் ஆகக்கூடாது என்று வேண்டிக் கொண்டு விபூதியை எடுத்து கீற்றாய் நெற்றியில் இட்டுக் கொண்டாள்.

 

 

அவளை அழைத்துச் சென்று அவள் அத்தை வீட்டில் விட்டுவிட்டு எதுவும் பேசாமலே அவன் கிளம்பிச் சென்றுவிட்டான். அவன் சென்ற சற்று நேரத்திற்க்கெல்லாம் கார்த்திக் அவளுக்கு அழைத்தான்.

 

 

“சொல்லுங்க மாமா… என்றாள்.

 

 

“என்ன சஞ்சு என்னாச்சு? நிரஞ்சன் உடனே ஊருக்கு கிளம்பணும், இங்க உன்னை பார்த்துக்க ஆளில்லைன்னு சொன்னார்… எதுவும் பிரச்சனையா??

 

 

“பிரச்சனையா?? அதெல்லாம் ஒண்ணும்மில்லை மாமா?? அவர்க்கு முக்கியமான வேலையிருக்குன்னு சொல்லிட்டு இருந்தார்… அதனால தான் மாமா… என்று சமாளித்தாள்.

 

 

“சஞ்சு எனக்கு உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்…

 

 

“சொல்லுங்க மாமா…

 

 

“அன்னைக்கு அந்த வீட்டில நான் அந்த பேயை பார்த்தேன் சஞ்சும்மா….

 

 

“மாமா நிஜமாவா சொல்றீங்க… அவங்க உங்க கண்ணுக்கு தெரிஞ்சாங்களா??

 

 

“ஹ்ம்ம் ஆமாம்டா தெரிஞ்சாங்க… அவங்களை அதுக்கு முன்னாடியே நான் பார்த்திருக்கேன்… நீ முதல் முறை அந்த வீட்டுக்கு போனப்ப உன்னை கூப்பிட வந்தேனே ஞாபகமிருக்கா

 

 

“அப்போ நான் உன் வண்டி எடுத்துட்டு திரும்பி போகும் போது கொஞ்ச தூரம் போனதும் திரும்பி பார்த்தேன். அப்போ அந்த வீட்டு வாசல்ல இவங்களை பார்த்தேன்…

 

 

“அவங்களால ரஞ்சனுக்கு ஆபத்துன்னு நீ சொன்னது எனக்கு ஞாபகம் வந்திச்சி… அது என்ன ஆபத்துன்னு தெரிஞ்சுதா…

 

 

‘அச்சோ இதை மாமாகிட்ட எப்படி சொல்ல, சொன்னா வருத்தப்படுவாங்களே… அதும் இல்லாம நிருவோட அப்பா பத்தியும் சொல்ல வேண்டியிருக்குமே… என்ன செய்ய… இப்போதைக்கு எதுவும் சொல்ல வேணாம்… என்று தனக்குள் பேசி முடிவெடுத்துக் கொண்டாள்.

 

 

கார்த்திக்கிடமோ “தெரியலை மாமா… ஆனா அவரை கொல்லுவேன்னு அவங்க சொல்லிட்டு இருக்காங்க மாமா… என்றவளின் குரல் சற்றே உள்ளே சென்றது.

 

 

“சரி சரி சஞ்சு அதெல்லாம் ஒண்ணும் ஆகாது, நானும் அம்மாவும் கிளம்பிட்டோம்… அங்க தான் வந்திட்டு இருக்கோம்… சாயங்காலம் வந்திடுவோம்… என்று சொல்லி போனை வைத்தான்.

 

 

மாலை அவர்கள் வீட்டிற்கு வரும் போது நிரஞ்சனே அவர்களை அழைத்து வந்தான். சஞ்சு நிரஞ்சனிடம் நடந்ததில் எந்த தப்புமில்லை என்று சொல்லியிருந்தாலும் இப்போது அவளுக்கு படபடக்க ஆரம்பித்தது.

 

 

அவனிடம் தோன்றியிராத அந்த குற்றவுணர்வு சுந்தரியையும் கார்த்திக்கையும் பார்த்ததும் அவளுக்கு வந்தது. குற்றவுணர்வில் அவளால் அவர்களை சரிவர வரவேற்க கூட முடியவில்லை. இருவரையும் வாங்க என்று வரவேற்றதை தவிர அவள் வேறெதுவும் பேசவேயில்லை.

 

 

நிரஞ்சன் கேட்கவே வேண்டாம் சஞ்சனாவை திரும்பிக் கூட பார்க்கவில்லை. கார்த்திக் இருவரையும் நோட்டம்விட்டுக் கொண்டுதானிருந்தான், நிரஞ்சன் கிளம்பும் முன் சஞ்சுவை பார்த்து லேசாக தலையசைத்தானே தவிர பேசவில்லை.

 

 

சுந்தரி சும்மா இல்லாமல் “என்ன சஞ்சு பார்த்திட்டே இருக்கே… போய் வழியனுப்பிட்டு வா…என்று அவளை விரட்டினார்.

 

 

அவள் வெளியே செல்லவும் அவன் காரை எடுத்துக்கொண்டு செல்லவும் சரியாக இருந்தது. வெளியில் சென்ற சில நொடிகளிலேயே அவள் திரும்பி வரவும் சுந்தரி என்ன என்பது போல் பார்த்தார்.

 

 

“அவர் கிளம்பிட்டார் அத்தை… ஊர்ல நெறைய வேலை இருக்காம், போன் பண்ணுறேன் சொல்லிட்டார்… என்றுவிட்டு வேகமாக அவள் அறைக்குள் சென்று மறைந்தாள்.ஊருக்கு கிளம்பி சென்ற நிரஞ்சனோ அவளுக்கு போன் செய்யவேயில்லை.

 

 

நாம் முதலில் போன் செய்து பேசுவதா என்று ஆண்களுக்கே உரிய மனப்பாங்கோடு அவனும், நானா பேசாமல் இருந்தேன் இவர் பேசினால் தான் என்ன என்று அவள் பிடிவாதத்தோடும் இருந்தாள்.

சஞ்சு எப்போதும் இருக்கும் கலகலப்போடு இல்லாமல் இருந்ததை கவனித்த சுந்தரி, “என்னடா சஞ்சு ஏன் ஒரு மாதிரியா இருக்கே? முகத்துல என்னடா தழும்பா இருக்கே??  எதுவும் பிரச்சனையா??

 

 

“அது… அது ஒண்ணும்மில்லை அத்தை… நீங்க ஊருக்கு போன அன்னைக்கு நான் பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டேன்… அதான் காயம், வேற ஒண்ணுமில்லை என்று சமாளித்தாள்.

 

 

“ஏன்டா உடனே எனக்கு போன் பண்ணியிருக்க கூடாதா?? நான் வந்திருப்பேன்ல…

 

 

“என்ன அத்தை நீங்க இதுக்கு போய் யாராச்சும் போன் பண்ணுவாங்களா… நீங்களே கல்யாணத்துக்கு சாமி கும்பிட போனீங்க, உடனேயே உங்களை வரச்சொன்னா நல்லாவா இருக்கும்…

 

 

“எனக்கு ஒண்ணுமில்லை அத்தை… நான் நல்லாவே இருக்கேன்… எப்பவும் போல…

 

 

இரண்டு நாட்கள் கழித்து கார்த்திக்கிற்கு நிரஞ்சன் போன் செய்தான். “கார்த்தி நான் சஞ்சுவுக்கு போட்டேன்… கால் போகலை, அவளை எனக்கு பேச சொல்றியா என்று போடாத காலை போட்டதாக சொல்லி தன் கெத்தை விட்டுக்கொடுக்காமல் பேசினான்.

 

 

“என்னாச்சு ரஞ்சன், உங்களுக்குள்ள என்ன பிரச்சனை. சஞ்சு எதுவும் தப்பா பேசிட்டாளா… ரெண்டு நாளா அவ யாரோடையும் சரியாவே பேசலை… எப்போ கேட்டாலும் நான் நல்லா இருக்கேன்னு ஒரு பதில் சொல்றா…

 

 

“அவ இப்படி இருந்து நான் பார்த்ததே இல்லை, எப்போடா அம்மாவை கலாட்டா பண்ணலாம்… என்னை எப்படி வம்பிழுக்கலாம்ன்னே இருக்கவ யாரோடவும் பேசாம அமைதியா இருக்கறது ரொம்ப புதுசு…

 

 

“கார்த்தி பெரிசா எதுவுமில்லை… ஒரு சின்ன சண்டை அதெல்லாம் சரியாகிடுச்சு… அவளை எனக்கு போன் பண்ண சொல்லு நான் பேசறேன்… என்றுவிட்டு போனை வைத்தவனுக்கு குற்றவுணர்ச்சியாக இருந்தது.

 

 

‘ச்சே ரொம்ப திட்டிட்டோமோ… ஒரு போன் கூட போடாம இருந்துட்டோமே… ஏன் அவளாச்சும் போன் பண்ணியிருக்கக் கூடாதா… என்று யோசித்தான்.

 

 

கார்த்திக் அவளிடம் விஷயத்தை சொன்னதும் சஞ்சனா அவள் போனை முழுவதுமாக அலசிவிட்டாள். அவன் போன் செய்திருக்கிறானா என்று, அவன் கடைசியாக அவர்கள் சண்டை போட்டதிற்கு முதல் நாள் பேசியது தான் அதன் பின் எந்த போனுமே இல்லை.

 

 

‘அப்போ சும்மா தான் சொல்லியிருக்கார். ஏன் இவர் பண்ணா நான் எடுக்க மாட்டேனா… போன் பண்ணலாமா வேணாமா… என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவனிடம் இருந்து குறுந்தகவல் வந்தது.

 

 

அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அவனுக்கு அழைத்தாள். போனை எடுத்த இருவருக்குமே முதலில் என்ன பேசுவது என்றே தெரியாமல் சற்று அமைதியாக கழிய நிரஞ்சனே ஆரம்பித்தான்.

 

 

“சாரி சஞ்சு…

 

 

“நீங்க எதுக்கு சாரி சொல்றீங்க நிரு… உங்ககிட்ட பேசும் போதும் எனக்குஎதுவும் பெரிய தப்பா தெரியலை… ஆனா அத்தை முகத்தையோ கார்த்திக் மாமா முகத்தையோ என்னால நிமிர்ந்து கூட பார்க்க முடியலை நிரு…

 

 

“அதெல்லாம் விடு சஞ்சு… இப்போ கவலைப்பட்டு ஒண்ணும் ஆகப்போறது இல்லை… சஞ்சு உனக்கு இன்னும் அந்த ஊர்ல வேலையிருக்கா… நீ எப்போ சென்னைக்கு வரப் போறே… உன்கிட்ட நான் நெறைய பேசணும்…

 

 

“என்ன நிரு என்ன விஷயம் சொல்லுங்க…

 

“நீ சென்னைக்கு வந்தபிறகு சொல்றேன்… சீக்கிரமா கிளம்பி வா…

 

 

“நிரு இன்னைக்கு நைட் நான் கிளம்பறேன்… நாளைக்கு காலையில அங்க இருப்பேன் போதுமா…

 

 

“சரி சஞ்சு, அப்போ நான் நாளைக்கு காலையில உங்க வீட்டுக்கு வர்றேன்… அங்க வந்து உன்னை கூட்டிட்டு போறேன்…

 

 

“அய்யோ அதெல்லாம் வேண்டாம் நிரு… நான் எங்க வரணும்ன்னு சொல்லுங்க… அங்க வந்திடறேன்…

 

 

“ஏன் சஞ்சு நான் வீட்டுக்கு வரக்கூடாதா??

 

 

“அப்படியெல்லாம் இல்லை நிரு, நான் சாதாரணமா தான் சொன்னேன்… நீங்க வாங்க நான் காத்திட்டு இருப்பேன்… என்று சொல்லி அவள் போனை வைக்கவும் சுந்தரி அந்த அறைக்குள் நுழைந்தார்.

 

 

“அத்தை நாம எப்போ ஊருக்கு போறது, என்ன என்னை ஒரேடியா இங்க வைச்சுக்கறதா முடிவு பண்ணிட்டீங்களா… கல்யாணத்துக்கு முதல் நாள் தான் அனுப்பறதா திட்டமா?? என்றவள் முன்பு போல் சகஜநிலைக்கு திரும்பியிருந்தது அவள் குரலிலேயே தெரிந்தது.

 

 

“அடி வாயாடி… எங்களைவிட்டு உன் புருஷன் வீட்டுக்கு போக உனக்கு அவ்வளவு அவசரமா… கழுதை இவ்வளவு நாள் எங்களோட தானே இருந்தே… உனக்கு எங்க கூட இருக்கறது அவ்வளவு போரா… என்றதும் அவள் கண்கள் கலங்க ஆரம்பித்தது.

 

 

அதுவரை கலாட்டா செய்து கொண்டிருந்தவள் கண்களில் பொசுக்கென்று கண்ணீர் துளி வழிய ஆரம்பித்தது. “என்னடா சஞ்சும்மா எதுக்கு இப்போ கலங்குற… புருஷன் வீட்டுக்கு தானே போகப் போறே…

 

 

“அதுவும் உன் மனசுக்கு பிடிச்சவரே உனக்கு புருஷனா கிடைக்க போறார். அப்புறம் எதுக்கு அழற, நாங்க எல்லாம் எங்க போய்ட போறோம்… நீ சென்னையில தானே இருக்கப் போறே… நினைச்சா கிளம்பி வந்திட போறோம்…என்று ஏதேதோ சொல்லி சமாதானம் செய்தவர் அன்று நல்ல நாளாக இருப்பதால் ஊருக்கு கிளம்ப எல்லாம் எடுத்து வைக்கச் சொன்னார்.

 

 

“அத்தை நிஜமாவே நாம இன்னைக்கு ஊருக்கு போறோமா வாய்விட்டு கேட்டவள் மனதிற்குள் ‘அப்பாடா நாம பாட்டுக்கு நிருகிட்ட சொல்லிட்டோமே கிளம்பறோம்ன்னு சொன்னா அத்தை என்ன சொல்லுவாங்களோன்னு நினைச்சுட்டே இருந்தேன்… நல்லவேளை ஆண்டவா நீ காப்பாத்திட்ட… என்று நினைத்துக் கொண்டாள்.

 

 

மறுநாள் காலையில் வீடு வந்து சேர்ந்திருக்க சஞ்சு குளித்துவிட்டு சாவகாசமாக வந்து அவர்கள் வீட்டு வாயிலில் நின்றுக் கொண்டு முன்னிலிருந்த நித்தியமல்லி செடியையும் செம்பருத்தி செடியையும் ரோஜா செடியையும் வருடிக் கொண்டு நின்றிருந்தாள்.

 

 

அப்போது வாசலில் கார் ஒன்று வந்து நிற்க ‘நிரு மட்டும் தானே வரேன்னு சொன்னார். இது அவர் வண்டி கூட இல்லையே, யாரு வண்டி என்று யோசித்துக் கொண்டே ஒரு பக்க கேட்டை திறந்து மறுபக்க கேட்டின் மீது கைவைத்து நின்றுக் கொண்டு பார்த்தாள்.

 

 

காரில் இருந்து இறங்கியவர்களை கண்டதும் ‘அடேய் நிரு எல்லாரும் வர்றாங்கன்னு சொல்லாம விட்டுட்டியேடா என்று அவனை மனதிற்குள் திட்டிக் கொண்டே தடுமாறியவாறே ஒருவழியாக அவர்களை வாங்க என்று வரவேற்று உள்ளே அமர வைத்தாள்.

 

 

“அம்மா… என்று கத்திக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்தாள். “என்னடி எதுக்கு இப்படி கத்துற…

 

 

“அம்மா… அவங்க எல்லாம் வந்திருக்காங்க… அத்தை, மாமா எல்லாரும்…

 

 

“யாரைடி சொல்ற???

 

 

“ம்மா… நிருவோட அம்மா, அப்பா தங்கை எல்லாம் வந்திருக்காங்க… என்று மகள் கூறி முடிக்கவும் அவர் வெளியே சென்றுவிட்டார் அவர்களை வரவேற்க.

 

 

ஐந்து நிமிடத்தில் அவர் திரும்பி வரவும் சஞ்சு சமையலறையின் நீள அகலத்தை அலசுவதை பார்த்து ஓங்கி அவள் முதுகில் ஒன்று வைத்தார். ஆவென அலறியவள் “எதுக்கும்மா அடிக்கிற… என்றாள்.

 

 

“ஏன்டி எவ்வளவு நேரத்துக்கு நீ இந்த கோலத்தோடவே இருக்க போறே… உன் மாமியார், மாமனார் எல்லாம் வந்திருக்காங்க… போ… போய் புடவை கட்டிட்டு வர்ற வழியை பாரு… என்று மகளை விரட்டினார்.

 

 

“ம்மா நான் எப்படிம்மா இப்போ வெளிய போறது…

 

 

“உன்னை… என்று பல்லை கடித்தவர் அஞ்சனாவை அழைத்து அவளுடன் அனுப்பி வைத்தார். அவள் வெளியே வரவும் சுந்தரி வேறு ஒரு முறை வசவ முனகிக்கொண்டே அவள் அறைக்கு சென்றாள்.

 

 

புதுப்புடவை ஒன்று எடுத்து அவள் அணிந்து முடிக்கவும் அஞ்சனா அவளை திரும்பச் சொல்லி மல்லிகை பூவை சூடினாள். கண்ணாடியில் சென்று அப்படியும் இப்படியுமாக திரும்பி பார்த்தவள் “ஹேய் லூசு அஞ்சு… அரையடி கூந்தலுக்கு இப்படியா மூணு முழத்துல பூவை வைச்சு விடுவ

 

 

“அடியே பேசாம இருடி, அத்தை வந்தா சத்தம் போடுவாங்க… அவங்க தான் பூவை கொடுத்து உன் தலையில வைக்க சொன்னாங்க… என்று சொன்னதும் வாயை கப்சிப்பென்று மூடிக் கொண்டாள். அஞ்சு தெரிந்தே தான் சுந்தரி கொடுத்துவிட்டார் என்று கூறி அவள் வாயை அடைத்தாள்.

 

 

“ஆமா அவங்க எதுக்கு வந்திருக்காங்க…

 

 

“என்னை கேட்டா எனக்கெப்படி தெரியும்… உன் ஆளு உன்கிட்ட எதுவும் சொல்லலையா…

“அவர் மட்டும் தான் வருவேன்னு சொன்னார்… பார்த்தா குடும்பமே வந்து நிக்குது… அவரை காணோம்…

 

 

“சரி நான் கீழ போய் என்னன்னு பார்த்திட்டு வர்றேன்… என்று சொல்லி அஞ்சு இறங்கி சென்றுவிட்டாள்.

 

 

சற்று நேரத்தில் வாசலில் ஒரு பைக் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. உள்ளே வந்தவனை ஆவென்று எல்லோரும் பார்த்தனர். ரங்கராஜன், ராணி இருவரும் மருமகனை இன்று தான் சீருடையில் நேரில் பார்க்கின்றனர். உள்ளுக்குள் சற்றே பெருமை பொங்கியது.

 

 

அவன் உள்ளே வந்து பார்த்தால் அவன் குடும்பமே அங்கு உட்கார்ந்திருந்தது. “என்னம்மா இங்க வரப்போறீங்கன்னு நீங்க என்கிட்ட சொல்லவே இல்லை…

 

 

“நீ தான் ஊர்ல இருந்து வந்ததுல இருந்து வேலை வேலைன்னு சுத்திட்டு இருக்க, நாங்க எழ முன்னாடி எழுந்து போய்டற, நாங்க உறங்கின பிறகு தான் வர்றே… உன்கிட்ட எப்படி சொல்லிருக்கணும் நீ எதிர்பார்க்கிற என்றார்.

 

 

“ஆமா நீ கூட இங்க வர்றேன்னு சொல்லவேயில்லை… என்று அவர் கூற அவன் தங்கை கவிதா “அம்மா அண்ணா அண்ணியை சைட் அடிக்கலாம்ன்னு வந்திருப்பாரு… சரி தானே அண்ணா…

 

 

அவனோ அவளுக்கு பதில் சொல்லாமல் அவளை பார்த்து முறைத்ததில் அவள் வாயை மூடிக் கொண்டாள். “நான் வேலையா வந்திருக்கேன்… மாமா, அத்தை சஞ்சுவால எனக்கு ஒரு உதவி ஆகவேண்டி இருக்கு… நான் அவளை பார்க்கலாமா…

 

 

“அப்படியே வெளிய கூட்டிட்டு போக வேண்டி இருக்கு… நீங்க அனுமதிச்சா நானே கூட்டிட்டு போய் கூட்டிட்டு வந்திடறேன்… என்று பவ்வியமாக அவர்களை நோக்கி கேட்டான்.

 

 

“டேய் என்னடா இது நாங்க சம்மந்திக்கு பத்திரிக்கை கொடுக்க வந்திருக்கோம்… நீ சஞ்சுவை வெளிய கூட்டிட்டு போறேன்னு சொல்ற… என்று முறைத்தார் அவன் அன்னை ஸ்ரீமதி.

 

 

“அம்மா பத்திரிக்கை தானே கொடுக்க போறீங்க, அதுக்கு சஞ்சு என்ன பண்ணப் போறா… ஒரு முக்கிய வேலைம்மா புரிஞ்சுக்கோங்க… இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான் அதுக்கு பிறகு நான் தொந்திரவு பண்ண மாட்டேன்…

 

 

“பரவாயில்லை அண்ணி நீங்க மாப்பிள்ளை கோவிக்காதீங்க… ஏதோ முக்கிய வேலைன்னு சொல்றாங்க… என் பொண்ணு உதவி வேணும்ன்னு சொல்றாங்க… தாராளமா கூட்டிட்டு போகட்டும் என்றார் ராணி.

 

 

“நீங்க போய் பேசுங்க மாப்பிள்ளை… மாடியில தான் இருக்கா… என்று மருமகனுக்கு அனுமதி கொடுத்தார் ரங்கராஜன்.

 

 

மாடியறையில் சஞ்சுவோ அஞ்சுவை மனதார திட்டிக் கொண்டிருந்தாள். ‘போனாளே வந்து என்ன ஏதுன்னு சொல்லக் கூடாதா… இந்த நிரு வேற வர்றேன்னு சொல்லிட்டு இப்படி வராம இருந்திட்டார்…

 

 

‘அன்னைக்கு கோபமா ஊருக்கு கிளம்பினவர் பார்த்து மூணு நாளைக்கு மேல ஆகுது…வரட்டும் பேசிக்கறேன்… என்று அவனை காணாத ஏக்கத்தில் அமர்ந்திருந்தாள்.

 

 

யாரோ படியேறி வரும் அரவம் கேட்டு நிமிர்ந்து பார்க்க எதிரில் நின்றவனை பார்த்தது தான் தாமதம் வேகமாக வந்து அவனை அணைத்துக் கொண்டாள்.

 

 

‘அய்யோ மறுபடியும் ஆரம்பிக்குறாளே… என்று நினைத்தவன் “சஞ்சு என்ன இது… நான் கீழ எல்லார்கிட்டயும் ஆபீஸ் வேலையா வந்திருக்கேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்…

 

 

“நீ இப்படி வந்து என்னை கட்டிப்பிடிக்கிற, என்ன அந்த பேய் திரும்ப வந்திடுச்சா… அது வந்தா தானே நீ இதெல்லாம் செய்வ… என்றதும் அவள் நிமிர்ந்து அவனை முறைத்தாள்.

 

 

“உங்களை பார்த்து நாளாச்சேன்னு ஆசையா வந்து பிடிச்சா இப்படி பேசறீங்களே…ம்ம்… ச்சு போங்க… என்று விலகினாள்.

 

 

“நம்ம பஞ்சாயத்து எல்லாம் அப்புறம் சாவகாசமா வைச்சுக்கலாம், எனக்கு இப்போ அதுக்கு நேரமில்லை… என்றவன் கட்டிலில் சென்று அமர்ந்தான்.

 

 

‘சரியான பக்கி… இவனை போய் நான் எப்படி தான் லவ் பண்ணேனோ… ரொமான்ஸ் சுட்டு போட்டா கூட வராது போல… இவனுக்கா மூடு வந்தாலும் சரி நான் பக்கத்துல வந்தாலும் சரி மாட்டினது என்னமோ நான் தான்…பேசியே சாகடிப்பான்… லேசா தொட்டா கூட நாலு பக்கத்துக்கு டயலாக் பேசறான் அட்வைஸ் பண்ணுறான்… பக்கி… பக்கி…

 

 

“போதும்டி ரொம்ப திட்டாதே பாக்கி வை… இப்படி வந்து உட்காரு… என்றவன் வந்த விஷயத்தை கூற ஆரம்பிக்க அவனின் மனநிலை அப்போது தான் அவளுக்கு புரிந்தது.

 

 

அவன் கூறி முடிக்கவும் அவளுக்கு உதற ஆரம்பித்தது “நிரு இதெல்லாம் தேவையா… இதனால பாதிக்கப்படப் போறது யாரு… அதை பத்தி எல்லாம் கொஞ்சம் யோசிங்க ப்ளீஸ்

 

 

“அதை பத்தி எல்லாம் எனக்கு எந்த கவலையும் இல்லை சஞ்சு… இது தான் நடக்கணும், தப்பு செஞ்சவங்க தண்டனை அனுப்பவிக்கணும்… நீ கிளம்பு நான் எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன் என்று கூறி எல்லோரிடமும் விடைபெற்று அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.

 

____________________

 

 

மெரிடியன் ஹோட்டலில் மேகநாதன் அவர் அறையில் உறங்கிக் கொண்டிருந்தார். அறைக்கதவு திறக்கும் அரவம் கேட்க வெளியில் சென்றிருந்த மனைவி தான் வந்துவிட்டார் என்று எண்ணியவர் உறக்கத்தை தொடர்ந்தார்.

 

 

யாரோ அவர் அருகில் அமருவது போல் இருக்க கண்களை மூடியவாறே கைகளால் துழாவினார். துழாவும் அவர் கையை யாரோ இறுக்கிப்பிடித்து முறுக்க அலறித் துடித்தவர் எழுந்து அமர்ந்து சுற்றுமுற்றும் பார்த்தார்.

 

 

அறையில் அவரை தவிர யாருமேயில்லை… ‘ஊருக்கு கிளம்பி வருவதற்கு முன்பு இப்படி தான் யாரோ கொல்வது போன்று கனவு வந்ததே அது போல் இருக்குமோ என்று நினைத்துக் கொண்டு மீண்டும் பார்வையால் அந்த அறையை துழாவினார்.

 

 

இப்போது அவரின் இரு பக்கமும் யாரோ நின்றுக் கொண்டு ஆளுக்கு ஒரு பக்கமாக அவர் கழுத்தை இருக்கிப்பிடிக்க அவர் ஆவென்று கத்தினார்… ஆனால் பாவம் சத்தம் தான் வெளியில் வரவேயில்லை… அவர் கண்கள் மெல்ல மெல்ல செருகி நாக்கு வெளியே தள்ள ஆரம்பித்தது…

Advertisement