Advertisement

அத்தியாயம் –17

 

 

ஹோட்டலில் இருந்து கிளம்பி நேரே வீட்டிற்கு சென்றவன் சற்றே படுத்து ஓய்வெடுத்தான். விடிந்து வெகுநேரம் கழித்து அவன் எழுந்து கொள்ள அவன் தந்தை எங்கோ வெளியில் சென்றிருந்தார்.

 

 

குளித்து சாப்பிட்டு அலுவலகம் கிளம்பியவனுக்கு மேலும் சில வேலைகள் வந்திருக்க அனைத்தும் சரி பார்த்து மேலும் சில முக்கிய கோப்புகளை தயார் செய்தான்.

 

 

அந்த கோப்புகளில் கையொப்பம் வாங்கிக் கொண்டவன் ஒரு முக்கிய வேலை இருப்பதாக கூறிவிட்டு விரைந்து கிளம்பி சென்றான். லீ ராயல் மெரிடியன் ஹோட்டலுக்கு அவன் வந்து சேர்ந்தான்.

 

 

வரவேற்ப்பில் மேகநாதன் அன்றும் அங்கு தங்கியிருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டான். அவர் ஹோட்டல் காரிலேயே எங்கோ வெளியில் சென்றிருக்கும் தகவலும் கூடுதலாக அவனுக்கு கிடைத்தது. அவனை முன்னமே அறிந்திருந்த அப்பெண் அவன் கேட்காமலே அதையும் சொல்லியிருந்தாள்.

 

 

சட்டென்று ஏதேதோ யோசித்தவன் அவன் வந்திருந்த அலுவலக வண்டியை அனுப்பிவிட்டு அவன் தந்தைக்கு போன் செய்தான். நாகேந்திரன் போனை எடுத்து “ஹலோ… என்றார்.

 

 

“அப்பா நான் தான்ப்பா… எங்க இருக்கீங்க… எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமாப்பா…

 

 

“என்னப்பா நிரஞ்சன் சொல்லு… நான் வேளச்சேரி வரைக்கும் வந்தேன்… என்ன உதவிப்பா…

 

 

“அப்பா நான் இங்க ராயல் மெரிடியன் ஹோட்டல்ல தான் இருக்கேன்… ஆபீஸ் வண்டியை ஒரு வேலை இருக்குன்னு அனுப்பிட்டேன், நீங்க பக்கத்துல தானே இருக்கீங்க வந்து என்னையும் அழைச்சுட்டு போறீங்களா…

 

“சரிப்பா… நான் வந்திடறேன்… என்றுவிட்டு அவர் போனை வைத்தார். அதற்குள் நிரஞ்சன் மனதிற்குள் வெளியே சென்றிருந்த மேகநாதன் வந்துவிட வேண்டுமே என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

 

 

அவன் வேண்டியது கடவுளுக்கு கேட்டதோ என்னவோ மேகநாதன் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார். அவர் உள்ளே நுழைந்ததை பார்த்ததும் நிரஞ்சனின் அடுத்த வேண்டுதல் அவன் தந்தை வந்துவிட வேண்டுமே என்று தான்.

 

 

ஆனால் இப்போது கடவுள் அதற்கு செவிசாய்க்கவில்லை போலும்… மேகநாதன் அவர் மனைவியுடன் அவர் அறையை நோக்கி நடையை போட்டார்.

 

 

நிரஞ்சனோ அவன் திட்டம் சொதப்பியதில் தலையில் அடித்துக் கொண்டான். பேசாமல் கதவை தட்டிவிட்டு அவர் அறைக்கே சென்றுவிடலாமா என்று கூட அவனுக்கு தோன்றியது.

 

 

ஆனால் அது இயல்பான சந்திப்பு போல் இருக்காதே என்று யோசித்தவன் வேறு வழியில் முயற்சிக்கலாம் என்று விட்டுவிட்டான். அவன் தந்தை அங்கு வந்து சேர அரைமணி நேரத்திற்கும் மேலானது.

 

 

வழியில் ட்ராபிக்கில் மாட்டிக் கொண்டதாக கூறியவர் மகனிடம் தாமதத்திற்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். நிரஞ்சனுக்கு மனதில் எதுவுமே பதியவில்லை. கடனே என்று அவருடன் கிளம்ப தயாரானான்.

 

 

அங்கு இருந்த ரெஸ்டாரண்ட்டில் ஒரு காபியை அருந்தினர் இருவரும். அப்போது மின்தூக்கி வழியாக வெளியில் வந்தார் மேகநாதன். நிரஞ்சன் வாசலுக்கு விரைந்திருக்க மேகநாதன் வரவேற்ப்பை நோக்கி சென்றார்.

 

 

நாகேந்திரன் அவரின் தோல்பையை எடுத்துக் கொண்டு வெளியில் வர வரவேற்ப்பில் நின்றிருந்த மேகநாதன் திரும்பினார். சில நொடிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே நின்றனர்.

 

 

மேகநாதனே முதலில் கண்டுபிடித்து ஓடிவந்து நண்பரை தழுவிக் கொண்டார். “நாகு… என்ற அழைப்பு நாகேந்திரனுக்கும் மேகநாதனை நினைவுக்கு  கொண்டு வர “மேகா… நீ எங்கடா இங்க… எங்கடா போனீங்க எல்லாரும்…

 

 

“இத்தனை வருஷமா உங்க ஒருத்தரோடையும் காண்டக்ட் இல்லாம போச்சே… எப்படிடா இருக்க… என்றார் நண்பரை பார்த்து.

 

 

“நல்லா இருக்கேன் நாகு… உனக்கு தான் தெரியுமே அப்பா எனக்கு வெளிநாட்டுல வேலை வாங்கி வைச்சிருந்தார்ன்னு… முதல்ல மலேசியா போனேன்… அப்புறம் அங்க இங்கன்னு மாறி இப்போ அமெரிக்காவில இருக்கேன்டா…

 

 

“அப்… அப்போ போனவன் தானா… இப்… இப்போ தான் வர்றீயா… என்று ஒரு கண்ணை வாசல் புறம் வைத்துக் கொண்டு மேகநாதனை பார்த்து கேட்டார். “டேய் நீ வேற அதெல்லாம் எதுக்கு ஞாபகப்படுத்திக்கிட்டு விடு…

 

 

“நான் என் பொண்டாட்டியோட வந்திருக்கேன்… ஒரு சொத்து விஷயமா தான் வந்திருக்கேன், அதை கைமாத்தி விட்டுட்டா உடனே ஊருக்கு கிளம்பிடுவேன்… ஆமா நீயேன் வாசலையே பார்த்திட்டு இருக்க…

 

 

“அங்க என்னோட பையன் இருக்கான்… அதான் பார்த்தேன்… ஒரு நிமிஷம் இரு அவனை கூப்பிடுறேன்… என்றவர் நிரஞ்சன் என்றழைத்தார்.

 

 

அவர்கள் இருவரும் பேச ஆரம்பித்ததை தற்செயலாக திரும்பி பார்த்திருந்த அவன் வேறு ஒரு இடத்தில் நின்று கொண்டு அவர்கள் பேச்சு காதில் விழுமாறு பார்த்துக் கொண்டான்.

 

 

“அப்பா… என்று கூறிக்கொண்டே மேகநாதனை யோசனையுடன் பார்த்துக் கொண்டே வருவது போல் வந்தான். “என்னப்பா… போகலாமா… என்றான் அவசரத்துடன் (எல்லாமே ஒரு நடிப்பு தான்… வேறென்ன…)

“நிரஞ்சன் இது என்னோட பால்ய சிநேகிதன் மேகநாதன்… நம்ம ஊர் பக்கம் தான் இவருக்கும்… பல வருஷம் கழிச்சு இப்போ தான் பார்க்கறோம்… என்று நிரஞ்சனுக்கு அறிமுகப்படுத்த அவன் மரியாதை நிமித்தமாக குசலம் விசாரித்துக் கொண்டான்.

 

 

“மேகா பார்த்தியா என்னோட பையன் நிரஞ்சன்… அசிஸ்டெண்ட் கமிஷனரா இருக்கான்… என்று மகனை பற்றிய அறிமுகத்தை நண்பருக்கு கொடுத்தார்.

 

 

“அப்பா நீங்க பேசிட்டு இருங்க இங்க எனக்கு ஒரு வேலை இருக்கு நான் முடிச்சுட்டு ஒரு பத்து நிமிஷத்துல வர்றேன்… என்றுவிட்டு அவர்களை தனியே விட்டு சென்றான்.

 

 

இருவருமாக ரெஸ்டாரென்ட் சென்று அமர்ந்தனர். “மேகா உன்கிட்ட நெறைய பேசணும்னு தோணுதுடா… ஆனா இங்க வைச்சு ஒண்ணும் பேச முடியாது, நீ எப்போ ஊருக்கு கிளம்புற, அதுக்கு முன்னாடி ஒரு தரம் எங்க வீட்டுக்கு வர்றியா… என்று நண்பருக்கு அழைப்பு விடுத்தார்.

 

 

“கண்டிப்பா வர்றேன் நாகு… எனக்கும் மனசுவிட்டு பேசணும் போல இருக்கு… என்ன தான் யாரும் இல்லாத இடத்தில போய் உட்கார்ந்துகிட்டாலும் சொந்த ஊரையும் சொந்தக்காரர்களையும் நட்பையும் ரொம்பவே மிஸ் பண்ணறேன்டா…

 

 

“இந்தா இது என்னோட விசிட்டிங் கார்ட்… நீ எப்போ வர்றேன்னு மட்டும் சொல்லு நான் ஸ்ரீகிட்ட சொல்லி வைச்சுடறேன்… என்றார் அவர்.

 

 

“ஸ்ரீயா… யாருடா அது…

 

 

“ஸ்ரீமதி என்னோட மனைவிடா…

 

 

“ஓ… சரி சரி… நான் நாளைக்கே உங்க வீட்டுக்கு வர்றேன்… ஏன்னா நாளன்னைக்கு நான் காரைக்குடிக்கு கிளம்பணும்… அதுக்கு முன்ன உன்னை பார்த்திடறேன்.. நீ உன் மனைவிகிட்ட சொல்லிடு…

 

“டேய் கண்டிப்பா உன்னோட மனைவியையும் கூட்டிட்டு வாடா… என்று நாகேந்திரன் கூற மேகநாதன் தலையசைத்து சம்மதம் தெரிவித்தார். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விடைபெற்று வெளியில் வந்தனர்.

 

 

வேகமாக ரெஸ்டாரண்ட்டிற்க்குள் நுழைந்த நிரஞ்சன் அவர்கள் அமர்ந்திருந்த மேஜையின் அடியில் இருந்த அந்த வயர்லஸ் மைக்கை எடுத்துக் கொண்டான்.

 

 

அவர்களை தனியே விட்டு செல்லும் எண்ணம் வந்ததுமே அவன் செய்த காரியம் அவன் பையில் எப்போதும் முன்னெச்சரிக்கைக்காக அவன் வைத்திருக்கும் மைக்கை எடுத்து வந்து முதலில் நிரஞ்சனும் அவன் தந்தையும் அமர்ந்திருந்த அந்த மேஜையின் அடியில் வைத்தான்.

 

 

அவன் கணிப்பு பொய்யாக்காமல் அவன் தந்தை நேரே அந்த மேஜையிலேயே வந்து அமர அவர்கள் பேசியதை கேட்டுவிட்டவன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று வேகமாக திட்டமிட்டுக் கொண்டான்.

 

 

நிரஞ்சனும் நாகேந்திரனும் காரில் பயணிக்க நிரஞ்சனோ பெருத்த யோசனையில் இருந்தான். நாகேந்திரன் மீதிருந்த மதிப்பு மொத்தமாக தரையில் வீழ்ந்து போனது.

 

 

போகும் வழியிலேயே இறங்கிக் கொள்வதாக சொன்னவன் வண்டியை நிறுத்தச்சொல்லி இறங்கிக் கொண்டான். ‘என்னை எதுக்கு கூப்பிட்டான் இப்படி பாதியிலேயே இறங்கிக்கறான் என்று மனதிற்குள் அலுத்துக் கொண்டார் நாகேந்திரன்.

 

 

நிரஞ்சன் எலெக்ட்ரானிக் கடைக்கு சென்று அவனுக்கு தேவையான சில உபகரணங்களை வாங்கிக் கொண்டவன் அலுவலகத்திற்கு சென்றுவிட்டு கமிஷனரிடம் பேசிவிட்டு வீட்டிற்கு சென்றான்.

 

 

இரவு சாப்பிடுவதற்கு அவன் தந்தை டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க எப்படியும் அவர் அறைக்கு வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்று கணித்தவன் அவன் வாங்கிய பொருட்களோடு அவன் தந்தையின் அறைக்கு சென்றான்.

 

 

அவன் நினைத்தது போல் எல்லாம் பொருத்தி முடித்தவன் அதை சரிபார்த்தும் கொண்டான். மாடியிலும் ஒரு மைக்கும் கேமராவும் பொருத்தியவன் சாப்பிட்டு முடித்ததும் எல்லோரும் உறங்க சென்ற பின்னர் ஹாலிலும் சமையல் அறையிலும் கூட மைக்கை பொருத்தினான்.

 

 

மறுநாள் வழக்கம் போல அவன் கிளம்பி அலுவலகம் சென்றுவிட்டான். அலுவலகம் சென்றதும் அவன் மடிக்கணியை எடுத்து மேசை மீது வைத்தவன்… அவர்கள் வீட்டை நோட்டம் விட்டான்.

 

 

எல்லாமே ஓரளவு அவன் எதிர்பார்த்தது போலவே நடக்க அவனுக்கு தேவையான தகவல்களை பதிவு செய்து கொண்டான். மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதையும் யோசித்து முடிவெடுத்துக் கொண்டான்.

 

 

நிரஞ்சன் சென்னையில் இப்படி துரிதகதியில் வேலை செய்துக் கொண்டிருக்க சிவகங்கையில் சஞ்சு ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டாள். நிரஞ்சன் அடித்து பிடித்துக் கொண்டு வரவேண்டி இருக்கும் என்று அவனே எதிர்பார்த்திருக்கவில்லை.

 

____________________

 

 

சஞ்சுவும் இரண்டு நாட்களாக செண்பகத்தையும் மாரியையும் பற்றிய தகவல்களை முடிந்த அளவு திரட்டியிருந்தாள். கூடவே நாகேந்திரனை பற்றிய தகவல்களும் அறிய முற்பட்டாள்.

 

 

அவ்வப்போது ஒரு குரல் இதெல்லாம் தேவையில்லாதது என்று அவளுக்கு கூறிக் கொண்டிருந்த போதும் அவள் நினைத்ததை முடிக்கும் முடிவுடன் அந்த குரலை அலட்சியம் செய்தாள்.

 

 

வெகு நாட்களாகவே பூட்டியிருந்த அந்த வீட்டை அவ்வப்போது நோட்டமிட்ட ஒரு கும்பல் அவர்களின் தற்காலிக இருப்பிடமாக அந்த இடத்தை தேர்வு செய்தது. ஊருக்கு வெளியே யாருமில்லாத இடத்தில் அந்த இடம் இருந்ததும் அவர்களுக்கு தோதாய் அமைந்தது.

 

 

யாருக்கோ அழைத்து விபரம் கூறியவர்கள் அந்த வீட்டை ஆக்கிரமிப்பு செய்தனர். இரண்டு நாட்களாக அந்த வீட்டில் வாசம் செய்தவர்கள் அறியாத ஒரு விஷயமும் உண்டு.

 

 

நிரஞ்சன் ஊருக்கு கிளம்பும் முன்னே நிகிதாவும் ஊரில் இருந்து வந்திருந்தாள். அம்பிகா அவனை நேரடியாக தனியொரு இடத்தில் சந்தித்த விஷயம் அவளுக்கு முன்னமே வந்திருந்தது.

 

 

ஆனாலும் நிரஞ்சன் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் எப்போதும் போல் அவளை நிக்கி என்று அழைத்ததும் இயல்பாக பேசியதும் அவளுக்கு சற்றே நெருடலாக இருந்தது.

 

 

ஒரு வேளை அம்பிகா அவர்களை எதேச்சையாக தான் சந்தித்து இருப்பாளோ…அல்லது அவர்கள் கூறியதை நம்பவில்லையோ என்று நினைத்தாள். ஏனெனில் அவர்களை கண்காணித்து சொன்ன அவளின் ஆட்கள் அவர்கள் பேசியதை முழுவதுமாக கேட்டிருக்கவில்லை. அதனாலேயே அவளால் எதையும் கணிக்க முடியவில்லை…

 

 

நிரஞ்சன் ஊருக்கு சென்றதும் அவள் சஞ்சனாவை பார்க்க வேண்டும் என்று நினைத்தாள். நிகிதா எப்போதும் போல் அம்பிகாவுடனே சென்றாள், அம்பிகாவை அவள் நோட்டமிடவும் தவறவில்லை.

 

 

இந்நிலையில் நிரஞ்சன் ஊருக்கு சென்ற இரண்டாம் நாள் சஞ்சனா அந்த தோப்பு வீட்டிற்கு போவது என்று முடிவு செய்தாள்… அவள் வீட்டிலும் யாருமில்லை, அன்று காலை தான் அவள் அத்தை சென்னைக்கு சென்றிருந்தார்.

 

 

கார்த்திக்கும் மாலை சென்னைக்கு கிளம்பிவிடுவான். பக்கத்தில் உள்ள அவள் தூரத்து உறவின் பெண்மணி ஒருவரை வீட்டிற்கு வந்து அவளுக்கு துணையாக படுத்துக் கொள்ள ஏற்பாடு செய்துவிட்டு தான் சென்றிருந்தார் சுந்தரி.

 

 

சென்ற முறை அங்கு சென்றிருந்த போது அவள் செண்பகத்தை பார்க்கவில்லை… இன்னமும் அவளால் அது பிரமையாக இருக்கக் கூடும் என்று எண்ணவில்லை…

 

 

அதனால் ஒரு முடிவெடுத்தவள் அம்பிகாவையும் உடன் அழைத்தாள். அம்பிகாவும் நிகிதாவிடம் வேறு வேலை இருப்பதாக கூறிவிட்டு சஞ்சனாவுடன் அந்த வர ஒத்துக் கொண்டு அவளுடன் சென்றாள்.

 

 

“ஆமா சஞ்சனா… அது யாரு வீடு?? அங்க என்ன இருக்கு??. நாம எதுக்கு போறோம்?? ஏன் போறோம்?? என்று ஒட்டுமொத்த கேள்விகளையும் ஒன்றாய் கேட்டு வைத்தாள்.

 

 

“கொஞ்சம் மூச்சு வாங்கு அம்பிகா… இவ்வளோ கேள்வியை மொத்தமா கேட்டா நான் என்ன பண்ணுவேன்… ஒண்ணுமில்லை அங்க பேய் இருக்கறதா சொன்னாங்க அதான் உண்மையா இல்லையான்னு பார்க்கலாம்னு போறேன்

 

 

“என்னது பேயா!!! அம்மா தாயே ஆளை விடு எனக்கு ரொம்ப பயம் நான் வரலை இந்த விளையாட்டுக்கு எல்லாம்… என்று அரண்டாள் மற்றவள்.“அம்பிகா நான் என்ன உன்னை நைட்லயா கூட்டிட்டு போறேன்… பாரு பங்குனி வெயில் பல்லிளிச்சுட்டு இருக்கு… நீ என்ன இப்படி பயப்படுற…சரி நீ கிளம்பு வழியில எதுவும் ஆட்டோ வரும் பிடிச்சுட்டு கிளம்பு…

 

 

“நான் தனியாவே போயிட்டு வர்றேன்… என்று சொல்லி சஞ்சனா வண்டியை நிறுத்த “இல்லை… இல்லை வேணாம் சஞ்சனா நானும் உங்ககூடவே வர்றேன்… என்று ஒத்துக் கொண்டாள் அம்பிகா…

 

 

“அப்புறம் ஒண்ணு நாம ரெண்டு பேரும் இனி ப்ரிண்ட்ஸ் சோ நமக்குள்ள வாங்க போங்க எல்லாம் வேண்டாம்… நீ வா போன்னே பேசிக்கலாம் ஓகேவா

 

 

“ஓகே டீல்… என்று அவளும் ஒத்துக்கொள்ள வண்டி ஊரை தாண்டி தோப்பு வீட்டுக்கு செல்லும் பாதையில் பயணித்தது.

 

 

மெயின் ரோடியில் இருந்து வளைந்து திரும்பியவள் தோப்பு வீட்டுக்கு செல்லும் அந்த குறுக்கு பாதைக்குள் புகுந்தாள்.

 

 

என்றுமில்லாமல் ஏனோ இன்று மனம் படபடப்பது போன்ற ஒரு உணர்வு தோன்றுவதை அவளால் தடுக்க முடியவில்லை… சம்மந்தமில்லாமல் பறவைகள் வேறு எதற்கு பயந்து ஓடுவது போல் கூட்டமாக சிறகடித்து வேறு புறம் நோக்கி சென்றது போல் தோன்றியது.

 

 

வண்டியை அந்த வீட்டின் கேட்டில் கொண்டு வந்து அவள் நிறுத்த அம்பிகா முதலில் இறங்கிக் கொண்டாள். சஞ்சனாவும் இறங்கிக் கொண்டு வண்டியை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டாள்.

 

 

“வா… அம்பிகா உள்ளே போகலாம் என்று அவளையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள். அவள் ஏற்கனவே பூட்டை உடைக்கவென்று கையில் ஒரு சுத்தியலை கொண்டு வந்திருந்தாள்.

 

 

வழக்கத்திற்கு மாறாக பூட்டு இல்லாமல் கதவு வெறுமையாக இருந்தது… ‘என்னது கதவுல பூட்டு இல்லாம இருக்கு…என்னாச்சு ஒருவேளை அவர் வந்திருப்பாரோ… என்று யோசனையானாள். எப்படியும் இந்நேரம் நிரஞ்சன் தான் இங்கே வருவதை கண்டுக்கொண்டிருப்பான் என்று அவளுக்கு தெரியும்.

 

 

ஆனால் சென்னையில் இருந்து அவ்வளவு விரைவாக அவன் வந்திருக்க முடியுமா என்று தான் அவளுக்கு புரியவில்லை.

 

 

“என்ன சஞ்சனா என்ன யோசனையா இருக்க… என்று அவளை உலுக்கினாள் அம்பிகா. “ஹ்ம்ம்… இல்லை ஒண்ணுமில்லை அம்பிகா… என்றவள் கதவை திறக்க முயல அது உள்புறம் பூட்டப்பட்டிருந்தது தெரிந்தது.

 

 

“அம்பிகா இங்க ஏதோ தப்பிருக்குன்னு நினைக்கிறேன்… இங்க வேற யாரோ வந்திருக்காங்க… இந்த வீட்டு கதவு எப்பவும் பூட்டி தான் இருக்கும் ஆனா இப்போ திறந்திருக்கு…

 

 

“இந்த கதவு இப்போ உள்பக்கம் பூட்டி வேற…… என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளிருந்து நால்வர் வேகமாக வந்து அவர்கள் இருவரையும் வாயை பொத்தி உள்ளே இழுத்து சென்றனர்.

 

 

அவள் என்ன ஏது என்று யோசிக்கும் முன்னே மூக்கில் வந்த நெடியால் அவள் மயங்கி விழுந்தாள். இருவரின் கையையும் கட்டியவர்கள் அவர்களை ஓரமாக கிடத்திவிட்டு நிகிதாஷாவுக்கும் அவளின் அண்ணன் ரஹீம்ஷாவுக்கும் போன் செய்து விபரமுரைத்தனர்.

 

 

அவர்களின் உரையாடல் ஹிந்தியில் இருந்தது. யாரோ இரு பெண்கள் வீட்டை சுற்றி வந்ததாகவும் அவர்கள் கதவை திறக்க முயன்றதால் மயக்க மருந்து கொடுத்து கட்டி வைத்திருப்பதாகவும் சொன்னான் ஒருவன்.

 

 

நிகிதாவும் மாற்று உடையில் யாரும் அறியாத வண்ணம் உடனே கிளம்பி அங்கு சென்றாள். அந்த வீட்டுக்கு வரும் போதே அவளுக்கு புரிந்து போனது வந்திருப்பது சஞ்சனா என்று.

 

 

அவள் வண்டியில் பின்பகுதியில் பிரஸ் என்ற எழுத்தும் முன்னில் அஞ்சு & சஞ்சு என்ற எழுத்தும் அவளுக்கு அதை உறுதிபடுத்தியது. ‘நானே அவளை பார்க்க நினைத்திருந்தேன், அவளே வசமாக வந்துவிட்டாள் என்று நினைத்துக் கொண்டாள்.

 

 

‘உடன் வந்தவள் யாராக இருக்கும் ஒரு வேளை அம்பிகாவாக இருக்குமா… இருந்தாலும் இருக்கும்… அவளையும் சேர்த்தே பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டே கதவை நான்கு முறை அவள் தட்ட கதவு திறக்கப்பட்டது.

 

 

உள்ளே சென்றவளுக்கு மயங்கி கிடந்த சஞ்சனாவும் அம்பிகாவுமே கண்ணில் தெரிந்தனர். சற்று நேரம் அவர்களருகில் ஒரு சேரை இழுத்து போட்டுக் கொண்டு உட்கார்ந்தாள் அவள்.

 

 

சஞ்சனாவையே வெகு நேரம் உற்று பார்த்துக் கொண்டிருந்தாள். ‘இவ என்ன அழகா இருக்கான்னு ரஞ்க்கு இவளை பிடிச்சுது… இவ ஒண்ணும் என்னை விட அழகில்லையே…

‘இவகிட்ட என்ன பிடிச்சு இந்த ரஞ் இவளை கல்யாணம் பண்ணிக்க நினைச்சார்… நல்லா பம்கின் மாதிரி இருக்கா, இவளா ரஞ்க்கு பொருத்தமா இருப்பா. என்னை விட இவ கலர்ல கூட உசத்தி இல்லையே… அப்புறம் எப்படி

 

 

‘நிச்சயம் இவ தான் ஏதோ பண்ணியிருக்கா அதான் என்னைவிட்டு இவளை பிடிச்சிருக்குன்னு இவ பின்னாடி சுத்திட்டு இருக்கார் இந்த ரஞ் என்று எண்ணியவளுக்கு சஞ்சனாவை பார்க்க பொறாமையாக வந்தது.

 

 

சஞ்சனாவுக்கு லேசாக விழிப்பு தட்டுவது போல் இருந்தது, அவள் கண்ணை கசக்கி விழித்து பார்க்க முயல எதிரே யாரோ அவளையே பார்ப்பது தோன்றியது.

 

 

தலை வேறு இன்னும் கனப்பது போல் இருக்க கண்ணை ஒரு முறை நன்றாக மூடி திறந்தாள். அவளுக்கு எதிரே வெறுமையாக இருந்தது. சற்று முன் யாரோ அவளை பார்ப்பது போலிருந்ததே… ஒரு வேளை செண்பகம் வந்திருப்பாளோ… என்று நினைத்தவள் சுற்றுமுற்றும் பார்த்தாள்.

 

 

கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு உணர்வு வந்திருக்க உடன் வந்த அம்பிகாவை காணவில்லை. அவள் நகரமுடியாத அளவுக்கு கையையும் காலையும் நன்றாக கட்டியிருந்தனர்.

 

 

வெளியே ஏதோ பேச்சு குரல் கேட்க காதை கூர்மையாக்கி கேட்க முனைந்தாள். ஆனால் அவர்கள் பேசியது ஏதும் அவளுக்கு கேட்கவில்லை… குசுகுசுவென்று பேசினார்கள் போலும்.

 

 

சற்று நேரத்தில் வெளியில் ஏதோ வண்டி கிளம்பும் சத்தம் கேட்டது. ஒருவன் மட்டும் உள்ளே நுழைந்தான். அவள் வாய் கட்டப்படாமல் இருந்ததை அப்போது தான் உணர்ந்தாள்.

 

 

“யாரு நீங்க? எதுக்கு என்னை அடைச்சு வைச்சு இருக்கீங்க? அம்பிகா எங்கே? என்றாள் சிரமமான குரலில். அவளருகே வந்தவன் நல்ல உயரமாக மைதா மாவு நிறத்தில் கருத்து அடர்ந்த தாடியுடன் சிகையை பங்க் வைத்திருந்தான். நிச்சயம் அவன் வடநாட்டவனாக தான் இருப்பான் என்று தெரிந்தது.

 

 

அவளுக்கு எந்த பதிலும் கூறாமல் சஞ்சனாவை நெருங்கியவன் அவளை பார்த்த பார்வையில் அவளுக்கு உடலெல்லாம் கூசியது. நெருங்கி வந்தவன் சட்டென்று விலகி சன்னல் வழியே எட்டி பார்த்தான். சற்றே திருப்தியுற்றவனாக கதவை தாழிட்டான்.

 

 

“எங்கள்ள யாருக்கும் பெண் ஆசை இருக்கக்கூடாது… ஆனா எனக்கு உண்டு… அப்பப்போ என் தேவைகளை ஏதாவது ஒரு பொண்ணை பார்த்து தீர்த்துக்கறது உண்டு…

 

 

“என்னமோ தெரியலை உன்னை பார்த்ததுல இருந்தே நீ வேணும்ன்னு தோணுது… என்று சொல்லிக் கொண்டே அவளருகில் நெருங்கி வந்தவன் அவள் கன்னத்தோடு கன்னம் வைத்து தேய்க்க முற்பட அவளுக்கு வந்த ஆத்திரத்தில் தலையை சிலுப்பி எம்பி அவன் கன்னத்தை கடித்து விட்டாள்.

 

 

இப்போது அவன் வெறிகொண்டவன் ஆனான்… ஓங்கி அவளை அறை விட்டான்.“உன்னை அடக்கி ஆளணும்ன்னு நினைச்சேன்… ஆனா மயக்கி தான் ஆளணும் போல என்று சிரித்தவன் கையில் இருந்த மயக்க ஸ்ப்ரேவை அவன் மூக்கை பொத்திக் கொண்டு அவள் மேல் அடித்தான்.

 

 

சஞ்சுவுக்கோ எல்லாமே கை மீறி போகிறது என்ற எண்ணத்தில் தன்னையும் மீறி கண்கள் கலங்கி வாய் “நிரு… என்று அழைத்து மூடியது. சஞ்சுவுக்கு மீண்டும் சுயநினைவு வந்த போது அவளை சுற்றி நான்கைந்து பேர் இருந்தனர்.

 

 

அம்பிகாவும் அவளருகே இருந்தாள், அங்கு பெண்ணொருத்தியும் இருந்தாள். சஞ்சு விழித்ததும் எல்லோரும் அவளை பார்த்து முறைப்பாக நின்றிருந்தனர். அவளிடம் தவறாக நடக்க முயன்றவனை தவிர மற்ற எல்லோருமே அங்கிருந்தனர்.

 

 

“ஹேய்… அவனை என்ன செஞ்ச, அவனை எதுக்குடி கொன்னே?? என்று அவளருகில் வேகமாக வந்த ஒருவன் ஓங்கி அவளை ஒரு அறை விட்டான். அவன் விட்ட அறையில் பல் பட்டு உதடு கிழிந்து ரத்தம் வந்தது.

 

 

கன்னம் எரிந்தது. ‘என்ன அவன் இறந்து போயிட்டானா?? என்ற கேள்வியை தனக்குள் கேட்டுக் கொண்டு சுற்று முற்றும் பார்த்தாள். ‘ஒரு வேளை மாரியும் செண்பகமும் தான் என்னை அவங்ககிட்ட இருந்து காப்பாத்தி இருப்பாங்களோ? அப்படி தான் இருக்கணும் என்று நினைத்தாள்.

 

 

அவளை அடித்தவனிடம் திரும்பி “எனக்கு தெரியாது, நீங்க சொல்லி தான் எனக்கு தெரியும் அவன் செத்துட்டான்னு… என் கை கட்டியிருக்கு நான் எப்படி அவனை கொல்ல முடியும் என்றாள்.

 

 

அவனுக்கும் அதே தான் அந்த கணம் தோன்றியது. “அப்போ இங்க வேற யாரோ இருக்காங்க… சொல்லுடி யாரது?? என்றான்

“நீ பத்திரிக்கைக்காரின்னு கேள்வி பட்டேன்… நீ தான் ஏதோ சதி பண்ணி எங்களை போலீஸ்கிட்ட காமிச்சு கொடுக்க வந்திருக்க, சொல்லுடி இங்க வேற யாரு இருக்கா?? என்றான்.

 

 

சஞ்சு திரும்பி அம்பிகாவை பார்க்க அவளை ஏற்கனவே அடித்திருப்பார்கள் போலும் அவள் மயக்கத்தில் தான் இருந்தாள். “இங்க பாருங்க சத்தியமாவே எனக்கு எதுவும் தெரியாது… நான் எந்த திட்டத்தோடவும் வரலை

 

 

அப்போது தான் சஞ்சனா அங்கிருந்த பெண்ணை நன்றாக கவனித்தாள், அவள் மற்றவர்களுக்கு ஏதோ கண் ஜாடை காட்ட அவர்கள் வெளியே சென்றனர். சஞ்சனாவிற்கு புரிந்து போனது அந்த பெண் நிகிதா என்று…

 

 

சஞ்சனாவின் அருகில் வந்தவள் அவளை பின்னில் கைவைத்து அவள் முடியை கொத்தாக பிடித்தாள். சஞ்சனாவிடம் அவள் உரையாடல் ஆங்கிலத்திலேயே இருந்தது.

 

 

“நானே உன்னை நேர்ல பார்க்கணும் நினைச்சேன்… நீயே என்னை தேடி வந்துட்ட?? என்றாள் நிகிதா.

 

 

“என்னை நீ எதுக்கு தேடினே??

 

 

“ரஞ் விரும்பறது உன்னை தானே, அதான் பார்க்க நினைச்சேன்… நீ என்னைவிட எந்த விதத்தில பெஸ்ட்ன்னு பார்க்க நினைச்சேன்… ஆனா நீ எந்தவிதத்திலும் என்னை விட பெஸ்ட் இல்லை… அப்புறம் எப்படி அவனுக்கு உன்னை பிடிச்சுது…

 

 

“ஐ நோ தி ரீசன்…

 

 

“வாட் யூ நோ டெவில், டெல் மீ??

 

 

“பீகாஸ் ஹீ லவ்ஸ் மீ என்று கண்களை மூடி அவன் நினைப்பில் பெருமிதமாக அவள் சொல்வதை கண்டு பொறுக்காதவள் சஞ்சனாவின் கன்னத்தில் மாறி மாறி அறைந்தாள்.

 

 

“போதும் நிறுத்து, என்னை நீ அடிக்கிற ஒவ்வொரு அடிக்கும் பதில் சொல்ல வேண்டி இருக்கும்… நிரு உன்னை சும்மா விடமாட்டார்… என்று சீறினாள் சஞ்சனா.

 

 

“இங்க நடந்ததை சொல்றதுக்கு நீ முதல்ல இங்க இருந்து உயிரோட போனா தானே?? நீ இங்க இருந்து போகும் போது உயிரோட இருக்க மாட்டே… ரஞ் வரும் போது உன்னை சிலர் நாசப்படுத்தி கொன்னு போட்டுட்டு போயிட்டாங்கன்னு தான் நினைப்பார்…

 

 

“பொதுவா நாங்க யார் மேலயும் ஆசை படக்கூடாது, ஆனா அதெல்லாம் மீறி எனக்கு ரஞ்ஜை பிடிச்சுது… நடக்காது, நடக்கக் கூடாதுன்னு தான் நினைச்சேன்…

 

 

“அவரோட கண்ணியம், நேர்மை எனக்கு பிடிச்சுது… அதுக்காக தான் அவரை விரும்பினேன்… என்னால அவரை விடமுடியாதுன்னு தான் அவர் மேல எனக்கிருந்த விருப்பத்தை சொன்னேன்…

 

“ஆனா ரஞ்க்கு என் மேல அப்படி எந்த விருப்பமும் இல்லைன்னு சொல்லிட்டார்… என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க, முறைப்படி எங்க வீட்டில இருந்து வந்து பேசுவாங்கன்னு சொன்னேன்…

 

 

“எனக்கு கல்யாணம் நடக்கும் போது உன்னை பத்தி என் அம்மாகிட்ட சொல்றேன், அவங்களுக்கு பிடிச்சா மேற்கொண்டு அவங்க முடிவெடுப்பாங்கன்னு சொல்லிட்டார்…

 

 

“காதல்ல ஏமாற்றம் இருந்தாலும் அவர்க்கு கல்யாணம்ன்னு பேச்சு வரும் போது என்னைபத்தி அவங்க வீட்டில பேசுவார்ன்னு நினைச்சேன்… ஆனா நீ குறுக்க வந்திட்ட, என் வாழ்க்கையை கெடுக்க…

 

 

“இங்க பாரு உன் வாழ்க்கையை நான் கெடுக்க வரலை… நிருவுக்கு என்னை சில வருஷமாவே தெரியும்… அப்போல இருந்தே அவர் மனசுல நான் தான் இருந்திருக்கேன்… அதுனால தான் உன்னை அவர் மறுத்திருக்கார்…

 

 

“உன் மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு உனக்கு நாசுக்கா சொல்லியிருக்கார், ஆனா உன்னோட மரமண்டைக்கு தான் அது புரியாமலே போய்டுச்சு…

 

 

“ஹேய்… என்ன வார்த்தை எல்லாம் ரொம்ப பெரிசா வருது… என்று குரலை உயர்த்திய நிகிதா மீண்டும் அவளை அறைந்தாள்.“இதுக்கு தான் நீ என்னை கடத்தினியா?? என்றாள் சஞ்சனா.

 

 

“இங்க பாரு உன்னை நான் கடத்தணும்னு நினைக்கலை… இங்க நடக்கறதே வேற… இங்க நீயா தான் வந்து சிக்கிக்கிட்ட… நான் இதுவரைக்கும் உன்னை எதுவும் செய்யணும்னு நினைச்சது இல்லை… நீ இங்க வந்த பிறகு தான் அப்படி ஒரு எண்ணம் எனக்கு வந்திருக்கு…

 

 

“அப்போ இங்க என்ன நடக்குது??? என்று சும்மா வாயை வைத்துக் கொண்டிராமல் சஞ்சனா கேள்வி கேட்டுக் கொண்டேயிருந்தாள்.

 

 

“அதை பத்தி உனக்கு தெரிஞ்சு எதுவும் ஆகப் போறதில்லை… என்று பொரிந்தாள் நிகிதா.

 

 

“எனக்கு தெரியும், இங்க நீங்க ஏதோ ஒரு திட்டத்தோட தான் வந்திருக்கீங்க… என்னோட கணிப்பு சரின்னா நீயும் உன் தீவிரவாத கும்பலும் இந்த ஊருக்கு வந்திருக்கறது உலகப்புகழ் பெற்ற விளையாட்டு வீரர் ரன்பீர் சிங்கை கொல்றதுக்கு சரி தானே… என்று நிகிதாவை பார்த்தாள் சஞ்சனா.

 

 

அவள் முகத்தில் தெரிந்த திகைப்பும் அதை அவள் மறைக்க முயன்று சாதாரணமாக காட்டிக் கொண்டு மீண்டும் சஞ்சனாவை பார்த்து முறைப்பதையும் அவள் கூர்மையாக கண்டுகொண்டிருந்தாள்.

 

 

“சும்மா வாய்க்கு வந்தது எல்லாம் பேசாதே… இது வேற விஷயம்… என்று பல்லைக் கடித்தாள் மற்றவள்.

 

 

“அவரை நீங்க ஏன் கொல்ல வந்திருக்கீங்கன்னு கூட என்னால சொல்ல முடியும், ஆனா நீ அதையும் இல்லைன்னு தான் சொல்லப் போறே… என்று அசைட்டையாக அவளை பார்த்தாள்.

 

 

நிகிதா கத்திய கத்தலில் வெளியில் சென்ற மற்றவர்கள் உள்ளே வந்தனர், அவர்கள் காதில் அவள் ஏதோ சொல்ல சஞ்சனாவை ஓங்கி அறைந்தான் ஒருவன். மற்றொருவன் அதை தடுத்து அவளை மீண்டும் மயக்கமடைய செய்தான்.

 

 

அங்கு மற்றவர் அறியாத ஒரு விஷயம் அம்பிகா உண்மையிலேயே மயக்கம் தெளிந்து எப்போதோ எழுந்திருந்தாள் என்பது. சஞ்சனாவிடம் தப்பாக நடக்க வந்தவன் அம்பிகா இடைஞ்சலாய் இருப்பாள் என்று எண்ணி முன்னெச்சரிக்கையாக அவளை அடுத்த அறையில் சென்று கிடத்திவிட்டான்.

 

 

அப்போதே அவளுக்கு லேசாய் மயக்கம் தெளிய ஆரம்பித்தது, முழுதான மயக்கம் தெளிந்திராததால் மீண்டும் சோர்வுடன் கண்களை மூடிக் கொண்டாள்…

அத்தியாயம் –18

 

 

சில மணிகளில் வெளியே ஆட்கள் பதட்டத்துடன் பேசும் குரல் கேட்டு கண் விழித்தவளுக்கு மயக்கம் முழுதும் தெளிந்திருந்தது. அவசரமாக அவள் குர்த்தாவின் பக்கவாட்டில் இருந்த பாக்கெட்டில் வைத்திருந்த கைபேசியை எப்படியோ வெளியே எடுத்தவள் அர்ஜுனுக்கு போன் செய்திருந்தாள்

 

 

அவன் எடுத்து ஹலோ ராதா… அம்பிகா… என்று சொல்லுவது மிகத்தெளிவாக அவளுக்கு கேட்க போனை எடுத்து மீண்டும் அவள் குர்த்தாவின் பக்கவாட்டு பாக்கெட்டில் போட்டுக் கொண்டாள்.

 

 

வேண்டுமென்றே “சஞ்சனா, எங்க இருக்க சஞ்சனா… இது என்ன இடம் நம்மளை இவங்க எதுக்கு இங்க அடைச்சு வைச்சு இருக்காங்க… அய்யோ கடவுளே என்னை காப்பாத்த மாட்டியா…

 

 

“சஞ்சனா எல்லாமே உன்னால தான் வந்திச்சு… நீ கூப்பிட்டேன்னு தானே நான் இங்க வந்தேன்…. என்று அவள் பாட்டுக்கு பேசிக் கொண்டிருக்க வெளியில் இருந்து உள்ளே வந்தவன் “ஹேய் எதுக்கு இப்போ கத்துற, வாயைமூடிட்டு சும்மா இருக்க மாட்டே… என்றுவிட்டு மயக்கமருந்தை அவள் மேல் அடித்தான்.

 

 

அவளோ முடிந்த வரை மூச்சை உள்ளே அடக்கி அந்த ஸ்ப்ரேவை சுவாசிக்காமல் இருந்தாள். எதிரில் நின்றவன் முன்பு மயக்கமானவள் போல் நடித்து கீழே விழுந்தவளை இழுத்துக் கொண்டு வந்து அடுத்த அறையில் போட்டான்.

 

 

அர்ஜுனால் நடப்பதை நம்ப முடியவில்லை. அந்த அழைப்பில் அம்பிகா வித்தியாசமாக பேச ஆரம்பித்ததுமே அவன் அதை பதிவு செய்ய ஆரம்பித்திருந்தான்.

 

 

அவன் வேறு வேலையாக நிகிதாவை பின் தொடர்ந்து வந்திருந்தான். அவனுக்கு தெரியாது அவர்கள் சிக்கியிருப்பது நிகிதாவிடம் தான் என்று…

 

 

இப்போது அம்பிகாவும் சஞ்சனாவும் வேறு எங்கேயோ மாட்டிக் கொண்டார்களே, இந்த நிரஞ்சன் வேறு இங்கு இல்லையேஎன்றிருந்தது அவனுக்கு.நிகிதாவை வேறுஇப்போது விட்டால் பிடிக்க முடியாது.

 

 

அம்பிகா மற்றும் சஞ்சனாவையும் காப்பாற்றி ஆகவேண்டும் அவனால் தெளிவாக எந்த முடிவும் எடுக்க முடியாமல் யோசனையுடனே நிற்க சரியாக அந்த நேரத்தில் நிரஞ்சனிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.

 

 

நிரஞ்சன் எப்போதுமே அர்ஜுனுடைய வெகு அந்தரங்கமான எண்ணுக்கு மட்டுமே அழைப்பான்… அது அவர்கள் இருவருக்கும் மட்டுமே தெரிந்த எண் என்பதால் நிரஞ்சனின் அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.

 

 

“சொல்லு நிரன்… என்றான்.

 

 

“அர்ஜுன் எனக்கு ஒரு உதவிடா, சஞ்சு நான் சொல்ல சொல்ல கேட்காம மறுபடியும் எங்களோட அந்த தோட்ட வீட்டுக்கு போயிருக்கா… நான் உன்கிட்ட ஏற்கனவே அந்த விஷயத்தை பத்தி சொல்லியிருக்கேன்ல…

 

 

“இவளுக்கு அங்க போனாலே உடம்புக்கு எதுவும் வந்திடுது, அதுவும் இல்லாம இப்போ அந்த வீடு அங்க இருக்க பொருள் எல்லாமே ஒரு சாட்சி இவ அங்க போய் எதையும் தொடாம இருக்கணும்…கார்த்திக்கு கூப்பிட்டேன் லைன் போகலை, சோ எனக்காக அவளை பார்த்து கூட்டிட்டு போய் வீட்டில விட்டுடுறியா… என்றான் நிரஞ்சன்.

 

 

“என்ன சொல்ற நிரன், சஞ்சனாவும் அம்பிகாவும் ஒண்ணா தான் இருக்காங்க… என்றவன் அம்பிகாவின் அழைப்பில் ஆரம்பித்து ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல நிரஞ்சனுக்கு பதட்டமாகியது.

 

 

“அர்ஜுன் நீ இப்போ எங்க இருக்க நான் அந்த வீட்டு அட்ரஸ் உனக்கு அனுப்பறேன் நீ போய் அவங்களை பாரு. நான் ஏற்கனவே இங்கிருந்து கிளம்பிட்டேன் வந்துட்டே இருக்கேன்… இன்னைக்கு நைட்குள்ள வந்திடுவேன்

“நிரஞ்சன் நான் இங்க நிகிதாவை பின்தொடர்ந்து வந்திருக்கேன், ஊருக்கு வெளியே ஆளில்லாத ஒரு வீட்டில சில தீவிரவாத ஆட்களோட அவ வந்திருக்கா, நாம ஏற்கனவே நினைச்ச மாதிரி தான் அவங்க திட்டம் போயிட்டு இருக்கு

 

 

“நான் இப்போ அவங்களை காப்பாத்த போறதா??? இல்லை நிகிதாவை கையும் களவுமா பிடிக்கிறதா??? எனக்கு ஒரே குழப்பமா இருக்கு என்று நிரஞ்சனிடம் புலம்பினான் அவன்.

 

 

அதுவரை அர்ஜுனின் மற்றொரு கைபேசியில் கசமுசாவென்று கேட்டுக் கொண்டிருந்த சத்தம் போய் தெளிவான குரல் கேட்க நிரஞ்சனிடம் போனை வைக்குமாறு கூறிவிட்டு அம்பிகா அவனுக்கு அழைத்திருந்த எண்ணில் இருந்து நிரஞ்சனுக்கு அழைத்து கான்பெரென்ஸ் அழைப்பை ஏற்படுத்தினான்.

 

 

சஞ்சனாவும் நிகிதாவும் நிகழ்த்திய உரையாடலை இருவருமாக முழுவதும் கேட்டனர். நிரஞ்சன் அர்ஜுனின் அந்தரங்கமான எண்ணிற்கு மீண்டும் தொடர்பு கொண்டு கார்த்திக்கும் அவனுக்கு உதவிக்கு வருவானென்றும் கூறினான்.

 

 

“உனக்கு எப்போ உள்ள போய் அட்டாக் பண்ணணும்னு தோணுதோ யோசிக்காம பண்ணு… எல்லாத்துக்கும் ஸ்பெஷல் பர்மிஷன் நான் ஏற்கனவே வாங்கிட்டேன்…அம்பிகாவும் சஞ்சனாவும் எந்தவித பாதிப்பும் இல்லாம மீட்டாகணும் பத்திரம் என்றுவிட்டு போனை வைத்தான் அவன்.

 

 

அர்ஜுன் தலைமேல் மிகப் பெரிய பொறுப்பொன்றுஏறி அமர்ந்ததில் சற்றே திகைத்தாலும் அடுத்து என்ன என்பதை வேகமாக திட்டமிட்டுக் கொண்டிருந்தான் அவன்.

 

 

அதே நேரம் அவனுடைய இன்னொரு கைபேசியில் ஒரு புது எண்ணில் இருந்து அழைப்பு வந்துக் கொண்டிருந்தது. அதை எடுத்து பேச அழைத்தது கார்த்திக் என்று அறிந்து அவனுக்கு விபரம் கூறி போனை வைத்தான்.

 

மீண்டும் ஏதோ யோசித்தவனாகநிரஞ்சனுக்கு அழைத்தான்அர்ஜுன், அந்த வீட்டுக்கு செல்வதற்குவேறு எதுவும் வழியிருக்கிறதா என்று அவனை விசாரித்து அறிந்துக் கொண்டான்.

 

 

எதுவாய் இருந்தாலும் கார்த்திக் வந்த பிறகு உள்ளே செல்லலாம் என்று முடிவெடுத்துக் கொண்டான். இந்நிலையில் தான் அவனுடைய கைப்பேசி தன் ஜீவனை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தது.

 

 

வெகு நேரமாக இருந்த அழைப்புடன் அதன் ஒலிப்பதிவும் ஓடிக்கொண்டிருக்க அந்த போன் தான் பாவம் என்ன செய்யும்… நிரஞ்சனும் அவனுடைய கைபேசியில் அர்ஜுன் ஏற்படுத்திய அந்த கான்பெரென்ஸ் அழைப்பையும் அதனுடன் தொடர்ந்த பேச்சுகளையும் பதிவு செய்து கொண்டிருந்தான்.

 

 

அர்ஜுனுக்கு தெரியும் இன்னும் ஒரு மணி நேரம் மட்டுமே அவன் கைபேசி ஜீவனுடன் இருக்கும் என்று… அதற்குள் ஏதாவது செய்தாக வேண்டும் என்று யோசித்தவன் கார்த்திக்கிற்கு அழைத்து அவன் கைபேசி மாடலை சொல்லி சார்ஜர் எடுத்து வர சொல்லியிருந்தான்.

 

 

சார்ஜர் எடுத்து வரச்சொல்லி விட்டானே தவிர அதை எங்கு போடுவது என்று யோசிக்க தூரத்தில் ஒரு சிறு அறை போல் ஒரு இடம் தெரிய மறைந்து மறைந்து எப்படியோ அங்கு சென்றான்…

 

 

பூட்டியிருந்த அந்த அறையை கல்லைக் கொண்டு அடித்து திறந்தான். உள்ளே செல்ல அது மோட்டார் அறை என்று தெரிந்தது, நல்லவேளையாக அங்கு பிளக் வசதி இருந்தது.

 

 

சரியாக அந்நேரம் கார்த்திக் அவனை அழைக்க அர்ஜுன் இருப்பிடம் சொல்லி யாரும் அறியாமல் அந்த அறைக்கு வரச்சொன்னான்.கார்த்திக்கும் தேடி கண்டுபிடித்து வந்துவிட அவன் கைபேசியை சார்ஜ் ஏற்றினான்.

 

 

கார்த்திக்கும் அர்ஜுனும் எப்படி உள்ளே நுழைய வேண்டும் என்று கலந்து பேசி சில மாறுதல்களுடன் எப்படி செல்வது என்று எண்ணிக் கொண்டு இருவரும் தனித்தனியாக பிரிந்தனர். இரவில் தான் அவர்கள் உள்ளே நுழைய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டனர்.

 

 

சஞ்சனா மீண்டும் கண்விழித்து எழ அம்பிகாவும் எழுந்திருந்தாள். சஞ்சனா அவளை திரும்பி பார்க்க அம்பிகாவின் வாயில் பெரிய பிளாஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

 

 

“ஏய் நிகிதா… என்று கோபமாக அழைத்தாள் சஞ்சனா.

 

 

“ஹேய் என்ன கொழுப்பா… பேர் சொல்லி கூப்பிடுற… என்ன?? என்று வந்தாள் நிகிதா.

 

 

“அம்பிகா வாயை எதுக்கு பிளாஸ்டர் போட்டு ஒட்டி வைச்சு இருக்க, முதல்ல திறந்துவிடு… என்றாள்.

 

 

“இவ வாயை திறந்தா உனக்கு மேல நிறுத்தாம பேசுறா… அதுக்கு தான் பிளாஸ்டர் போட்டிருக்கோம்…

 

 

“அவ இனிமே பேசமாட்டா, நீ திறந்து விடு… டேய் திறந்து விடுங்கடா என்று அங்கிருந்த ஆட்களை பார்த்தும் கூறினாள்.

 

 

“இவளை என்ன செஞ்சாலும் அடங்க மாட்டேங்குறாளே என்று அங்கிருந்த ஒருவன் கூற நிகிதா கண்ஜாடை காட்ட அம்பிகாவின் வாயில் ஒட்டப்பட்டிருந்த பிளாஸ்டர் எடுக்கப்பட்டது.

 

 

இப்போது அம்பிகா ஒரு தவறு செய்தாள், அவள் நிகிதாவிடம் ஹிந்தியில் அவசரமாக பாத்ரூம் போக வேண்டும் என்று சொல்ல அவள் கைகட்டு அவிழ்க்கப்பட்டது. அவள் சஞ்சுவின் கைக்கட்டையும் அவிழ்த்து விடச்சொன்னாள்.

 

 

இருவரையும் அனுப்பிவிட்டு நிகிதா வெளியில் காவலிருந்தாள். அம்பிகா சஞ்சனாவிடம் மிக மெதுவான குரலில் அவர்கள் இங்கு சிக்கியிருக்கும் தகவல் சொல்லப்பட்டுவிட்டது என்று கூற அதற்குள் நிகிதா உள்ளே வந்து நின்றாள்.

 

“என்ன என்ன பேசிட்டு இருக்கீங்க??

 

 

“ஒண்ணுமில்லை… என்றுவிட்டு சஞ்சனா அவளை தள்ளிக்கொண்டு வெளியில் சென்றாள். நிகிதாவிற்கு அப்போது தான் நினைவுக்கு வந்தது அம்பிகா தன்னிடம் ஹிந்தியில் பேசினாளே என்று.

 

 

ஒருவேளை அது நம் பிரமையோ இல்லையே என்று யோசித்தவள் அதை சோதித்து பார்க்க முடிவு செய்து, “என்ன ஆச்சா?? என்று ஹிந்தியில் கேட்க அம்பிகாவும் மறந்து போய் அவளுக்கு ஹிந்தியிலேயே பதில் சொல்லிவிட நிகிதா அவளை ஓங்கி அறைந்தாள்.

 

 

அவள் அறைந்ததில் நிலைகுலைந்து போய் அம்பிகா தூர விழ சஞ்சனா அவளை தாங்கிக் கொண்டாள். “இப்போ எதுக்கு இவளை அடிக்கிற… என்று கத்தினாள் சஞ்சு.

 

 

“என்னையே ஏமாத்த பார்க்கறீங்களா, அப்போ… அப்போ நீ நிரஞ்சனுக்கு என்னை பத்தி எல்லாமே சொல்லியிருக்க, உனக்கு ஹிந்தி தெரியாதுன்னு நீ சொன்னது எல்லாம் பொய்…

 

 

“நான் ஹிந்தில பேசினது எல்லாம் நீ ஒட்டுக்கேட்டிருக்க… என்று ஆங்காரமாய் கத்திய நிகிதா அம்பிகாவை அடிக்க தக்க ஆயுதம் ஒன்றை தேட அருகிலிருந்தவன் அவன் கையில் இருந்த கட்டையை கொடுத்தான்.

 

 

அம்பிகாவை அவள் அடிக்க முயல தடுத்த சஞ்சனாவையும் சேர்த்தே அடித்தாள் அவள். அம்பிகாவுக்கும் அவள் செய்த தவறு புரிந்தது. “தலைக்கு மேல வெள்ளம் போயாச்சு, இனி சாண் போனா என்ன முழம் போனா என்ன

 

 

“அப்போ ரஞ்க்கு எல்லாமே தெரிஞ்சு போச்சு… இவளை கொன்னு எப்படியாச்சும் அவனோட சேர்ந்திடலாம்ன்னு பார்த்தா எல்லாத்துக்கும் சேர்த்து இப்படி நெருப்பு வைச்சுட்டியே… என்று கன்னாபின்னாவென்று அம்பிகாவை திட்டவும் மாறி மாறி கன்னத்தில் அறையவும் செய்தாள்.

 

 

அம்பிகாவோ அவளின் வேகத்தில் தாளமுடியாமல் மயங்கி விழுந்தாள். நிகிதா கோபமாக அவர்களை தனியே விட்டு வெளியேறினாள். சஞ்சனா வாய்விட்டு செண்பகத்தை கூப்பிட்டாள்.“நாங்க இவ்வளோ கஷ்டப்படறோம் உனக்கு எங்களை காப்பாத்தணும்னு தோணலையா… உனக்கு அப்படி என்ன பழிவாங்குற வெறி…உனக்கும் இந்த நிகிதாவுக்கும் என்ன வித்தியாசம்…

 

 

“இதே வீட்டுக்குள்ள இருந்திட்டு நீ இப்படி பார்த்திட்டு இருக்கறது நல்லாவா இருக்கு…எனக்கு எதுக்கு போக்கு காட்டி ஒளிஞ்சுக்கற… எனக்கு தெரியும் நீங்க என்னை பார்த்திட்டு இருக்கீங்கன்னு அப்புறம் ஏன் இப்படி பண்ணுறீங்க… என்று வாய்விட்டு பேசினாள்.

 

 

அவள் பின்னே யாரோ நிற்பது போல் தோன்ற திரும்பி பார்க்க செண்பகமும் மாரியும் அங்கு நின்றிருந்தனர்.

 

 

“வெறி தான் பழிவாங்குற வெறி தான், அந்த நிரஞ்சனுக்காக தான் காத்திட்டு இருக்கேன்…வருவான்ல உன்னை காப்பாத்த வருவான்ல, எனக்கு அவனோட உயிர் வேணும்… என்று வெறியாய் சிரித்தாள் செண்பகம்.

 

 

“அவர் வருவார், என்னை காப்பாத்துவார்… இங்க இருந்து கூட்டிட்டு போவார்… உன்னால அவரை எதுவும் செய்ய முடியாது… அவர் ஒண்ணும் அவங்கப்பா மாதிரி இல்லை… இதை நீங்க ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்க… என்றவளின் கண்களில் நீர் நிறைந்திருந்தது.

 

 

செண்பகமோ வெகு அலட்சியமாகவே அவளை பார்த்தாள். சற்று நேரத்தில் இருவரும் மறைந்து போயினர். சஞ்சனா கண்களை மூடி ‘நிரு எங்க இருக்கீங்க… ப்ளீஸ் சீக்கிரம் வாங்க… நான் பண்ணது தப்பு தான்…

 

 

‘உங்க பேச்சை கேட்காம இங்க வந்தது தப்பு தான்… அதுக்கு தான் இவ்வளவு பெரிய தண்டனை எனக்கு… ஆனா இந்த நிகிதா பத்தி உங்களுக்கு முழுசா தெரியலை நிரு… இவளை பத்தி நான் எல்லா தகவலுமே சேகரிச்சு வைச்சு இருக்கேன்…

 

 

‘எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை… அம்பிகா இங்க இருந்து தப்பிக்கணும்… நிகிதாவும் அவளோட கும்பலும் நீங்க உயிரோட பிடிக்கணும்… அதுக்கு என்னால முடிஞ்சதை செய்வேன் என்று மனமார உறுதி பூண்டாள்.

 

 

நிரஞ்சன் இதுவரை அவ்வளவு வேகமாக காரை ஒட்டியவனில்லை, அந்த நெடுஞ்சாலையில் விரைவாக வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான். அம்பிகா அடிவாங்கியது வரை அவர்கள் பேசிய பேச்சு மட்டுமே கேட்டது.

 

 

அதன்பின்னே அம்பிகா அடிவாங்கி கீழே விழுந்ததில் அவள் போனுக்கு எதுவும் ஆகியிருக்கும் போலும், அந்த அழைப்பு நின்று போயிருந்தது. எதற்கும் அர்ஜுனுக்கு போன் செய்து அதை உறுதிபடுத்திக் கொண்டான்.

 

 

இன்னும் சிலமணி நேரத்தில் அவன் அங்கிருப்பான் என்பதை தெரியப்படுத்தினான். உள்ளே சுமாராக ஐந்தில் இருந்து ஆறு பேர் இருப்பார்கள் என்று அவர்களால் கணிக்க முடிந்தது.

 

 

நேரம் இரவை நெருங்க காத்திருந்த அர்ஜுன் கொஞ்சம் கொஞ்சமாக பதுங்கி பதுங்கி எப்படியோ அந்த வீட்டின் பின்பகுதிக்கு சென்றிருந்தான். எப்படியாவது உள்ளே செல்ல வேண்டும் அதற்கு என்ன வழி என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

 

 

வேறு புறமாய் பிரிந்திருந்த கார்த்திக் அர்ஜுனுக்கு முன்பாகவே அந்த வீட்டை அடைந்து அந்த வீட்டின் மாடியில் எப்படியோ அடைக்கலம் புகுந்திருந்தான்.

 

 

அர்ஜுனும் வெளியே நான்கு பேர் நிற்பதை பார்த்துவிட்டு சன்னலின் மேல் திண்டில் கால் வைத்து மெது மெதுவாய் சத்தம் வராதவாறு மேலே ஏறினான். இப்போது அவன் மொட்டை மாடியை அடைந்துவிட்டான்.அங்கு ஓரமாக டேங்கின் பின் நின்றிருந்த கார்த்திக்கை நோக்கி சென்றான்.

 

 

“கார்த்திக்… என்று மெதுவாக அழைக்க யாரோ என்னவென்று யோசித்தவன் சரேலென்று திரும்பினான். “ஓ சாரி அர்ஜுன் நான் பயந்துட்டேன்… ஆமா இவங்க யாரு இவங்களை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க… என்றான் கார்த்திக்.

 

 

“யாரை சொல்றீங்க கார்த்திக்… நான் யாரையுமே கூட்டிட்டு வரலையே… என்று அர்ஜுன் விழிக்க “இல்லை உங்க பக்கத்துல ஒரு பெண்ணும் ஆணும் நிற்கறாங்க… என்றான் கார்த்திக்.

 

 

அர்ஜுன் அவன் கூறியதும் திரும்பி அவனருகில் பார்க்க அங்கு யாருமில்லாதது கண்டு கார்த்திக்கிற்கு ஏதோ புத்தி பேதலித்துவிட்டது போலும் எதற்கு இப்படி உளறுகிறான் என்று பார்த்தான்.

 

 

“கார்த்திக் இங்க யாருமேயில்லை உங்களையும் என்னையும் தவிர… நீங்க யாரை பத்தி பேசிட்டு இருக்கீங்க… கனா எதுவும் கண்டீங்களா…

 

 

“அப்போ சஞ்…சஞ்சு சொன்னது தான் நிஜம்… இவங்களை அன்னைக்கு கூட பார்த்த ஞாபகம் எனக்கிருக்கு… நீங்க தானே சஞ்சு சொன்ன அந்த பேய்ங்க… என்று செண்பகத்தையும் மாரியையும் நோக்கி கேட்டான்.

 

 

அர்ஜுனோ அவன் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறான் என்று புரியாமல் அவனை பார்த்தான். “அர்ஜுன் என்னை எதுக்கு இப்படி பார்க்குற… உனக்கு ரஞ்சன் சொல்லியிருப்பாரே, சஞ்சு இங்க ஆவியை பார்த்ததை பத்தி, இது அவங்க தான்…

 

 

“இவங்க உங்க கண்ணுக்கு தெரியலைன்னு நினைக்கிறேன்… சஞ்சு இதுநாள் வரைக்கும் உளறிட்டு இருக்கான்னு தான் நானும் நினைச்சேன்… ஆனா அவ சொன்னது எல்லாம் உண்மைன்னு புரியுது… என்று சொல்லிவிட்டு திரும்பி பார்க்க செண்பகமும் மாரியும் அங்கில்லை…

 

 

சுற்றுமுற்றும் திரும்பி பார்த்தவன் யாருமில்லை என்றதும் யோசிக்க ஆரம்பித்தான். “அர்ஜுன்… வாங்க போகலாம்…

 

 

“என்ன கார்த்திக்… திடிர்னு அமைதியாகிட்டீங்க…

“ஒண்ணுமில்லை அர்ஜுன்… நாம வந்த வேலையை பார்க்கலாம்… என்றான்.

 

 

“கார்த்திக் கொஞ்சம் இருங்க… அவங்க வெளிய இருக்காங்களா இல்லை உள்ள போயிட்டாங்களான்னு பார்க்கறேன்… அப்புறம் கீழே போகலாம்… முதல்ல நான் மட்டும் போறேன்…

 

 

“ஒருவேளை என்னை பிடிச்சிட்டாங்கன்னா நீங்க மட்டுமாச்சும் இருக்கணும் தகவல் சொல்ல… நான் கீழே போய் அரைமணி நேரத்தில நீங்க இந்த நம்பர்க்கு போன் பண்ணி சொன்னீங்கன்ன கொஞ்ச நேரத்துல அவங்க வந்திடுவாங்க…

 

 

“அவங்க வர்றதுக்கு தாமதம் ஆனா மட்டும் நீங்க கீழே வாங்க… அதுவரைக்கும் அவங்களை சமாளிக்க என்னால முடியும் என்று அவனுக்கு சொன்னவன் சுவற்று மதிலின் கீழே அமர்ந்து கொண்டு மெல்ல வெளியில் எட்டி பார்த்தான்.

 

 

அவர்கள் இன்னமும் வெளியில் நின்றிருப்பது தெரிந்தது, அது தான் சமயம் என்று அர்ஜுன் அவன் மற்றொரு கைபேசியை கார்த்திக்கிடம் ஒப்படைத்துவிட்டு படியில் உட்கார்ந்து கொண்டே இறங்கினான்.

 

 

முதல் மாடிக்குள் எப்படியோ சென்றுவிட்டவன் முதல் மாடியில் இருந்து கீழே இறங்க செல்லும் படிகளில் மெதுவாக இறங்கினான். யாரும் இருக்கிறார்களா என்று குனிந்து பார்த்துக் கொண்டே வர அங்கு சஞ்சனாவும் அம்பிகாவும் இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில் படுத்திருந்தது தெரிந்தது.

 

 

சஞ்சனாவின் வீங்கிய முகமும் ரத்தம் ஒழுகிக்கொண்டிருந்த கடைவாயும் அம்பிகாவின் கன்னத்தில் இருந்து வழிந்த ரத்தமும் பார்க்க பார்க்க அவனுக்குள் ஆத்திரம் பொங்கியது.

 

 

ஒரு பெண் ராட்சஸி இப்படி ஆக்கி வைத்திருக்கிறாளே இவர்களை என்று எண்ணினான்.

 

 

வேறு யாரும் இருக்கிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்தவன் யாருமில்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்டவனாக மெதுவாக மிக மெதுவாக இறங்கி படிகளின் மறைவில் சென்று பதுங்கினான்.

 

 

எப்படியாவது நிரஞ்சன் வரும் வரை பொறுத்திருக்க வேண்டும் என்று முடிவு செய்தவன் உள்ளே நன்றாக பதுங்கிக் கொண்டு அவன் கைபேசியில் இருந்து நிரஞ்சனுக்கு மெசேஜ் அனுப்பினான்.

 

 

இன்னும் பதினைந்து நிமிடத்தில் அவன் அங்கிருப்பதாக கூறியிருக்க அவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தான். இந்நிலையில் நிகிதா யாருடனோ போனில் பேசிக்கொண்டே உள்ளே நுழைந்தாள்.

 

 

“எதுக்கு உனக்கு சந்தேகம் எல்லாமே திட்டப்படி நடக்கும்… நாளைக்கு அவன் அந்த ஸ்கூல் மைதானத்துக்கு வரும் போது நம்ம திட்டப்படி திடீர் கலவரம் நடக்கும்….

 

 

“இங்க அடிக்கடி அது போல நடக்கறதால யாரும் சந்தேகப்பட மாட்டாங்க… அங்க வைச்சு அந்த கலவரத்துல அவன் உயிர் போகும்… நெறைய உயிர் போகும், அப்போ தான் சந்தேகம் வராம இருக்கும்…

 

 

“நான் யாருன்னு இங்க இருக்க போலீஸ் ஒருத்தனுக்கு தெரிஞ்சிடுச்சு… அவன் எப்படியும் என்னை தேடி தான் வந்திட்டு இருப்பான்… நான் இன்னைக்கு நைட் இங்க இருந்து கிளம்பிடுவேன்…

 

 

“நான் இல்லைன்னாலும் நாம நினைச்ச திட்டம் நடக்கும்… சொல்றேன்ல எதுக்கு இப்படி கத்துற… இங்க பாரு என்னோட காதல் கத்திரிக்காய் எல்லாம் முடிஞ்சு போச்சு… இனி எதுவுமில்லை…

 

 

“நீ மேல மேல பேசி என்னை வெறி ஏத்தாதே… நான் சொன்ன மாதிரி தான் நடக்கும்… இனி பேச எதுவுமில்லை… என்று சொல்லி போனை வைத்தாள்.

 

 

நிரஞ்சன் அந்த தோட்ட வீட்டின் பாதையில் வண்டியை செலுத்தாமல் மெயின் ரோட்டிலேயே காரை நிறுத்திவிட்டு காலில் செருப்பை மாட்டிக் கொண்டு அவனுக்கு தேவையான சில உபகரணங்களை எடுத்து வைத்துக் கொண்டான்.

 

 

பதுங்கி பதுங்கி வந்தவன் தூரத்தே அந்த வீட்டை கண்டுகொண்டான்… வெளியில் யாரும் இருக்கிறார்களா என்று பார்க்க அருகில் யாருமில்லாததை பார்த்துவிட்டு மெல்ல முன்னேறினான்.

 

 

அப்போது தான் பக்கவாட்டில் இருந்து ஒருவன் வெளியே வருவது தெரிந்தது. அவன் வெளியில் வந்து நிற்பதற்குள் நிரஞ்சன் அந்த கரிய இருளில் விரைந்து வந்து நடந்து வந்தவனின் வாயை பொத்தி காலில் அடித்து மடக்கினான்.

 

 

அவன் வாயை அடைத்து கையை கட்டி போட்டு இருளில் ஒரு ஓரமாக அவனை வைத்துவிட்டு உள்ளே சென்றான். நிரஞ்சன் வருவதற்குள் அர்ஜுன் அவனை வெளிபடுத்த வேண்டியதாகி போய்விட அவனும் அவர்கள் பிடியில் இருந்தான்.

 

 

படிகளில் மறைவில் வேறுபுறம் திரும்பி முதுகுகாட்டிக் கொண்டு அவன் அமர்ந்திருக்க உள்ளே வந்த நிகிதா பயங்கரமான ஆத்திரத்தில் இருந்தாள். அருகில் நின்றிருந்த ஒருவனை அழைத்து அவன் காதில் ஏதோ சொன்னாள்.

 

 

அவனும் சந்தோசத்துடன் நிகிதாவிற்கு நன்றி கூறினான். அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்று அர்ஜுனுக்கு கேட்கவில்லை.

 

 

ஒருவன் சஞ்சனாவை நெருங்கி அருகில் வந்தான், சஞ்சனாவோ பயத்தில் பின்னாலேயே சென்றாள், அம்பிகா மயக்கத்தில் இருந்ததால் அவளையும் அழைக்க முடியவில்லை.

 

 

“எதுக்குடா இங்க வர்றே… தள்ளி போ… என்றவள் காலை நீட்டி அவனை எட்டி உதைக்க முயல அவன் அவள் காலை ஒரு கையால் இருக்க பிடித்துக் கொண்டான்.

 

 

ஏதோ வீபரீதம் நடப்பது புரிந்தவனாக அர்ஜுன் மறைவில் இருந்து சரேலென வெளியில் வந்தவன் சஞ்சனாவின் அருகில் சென்றவனின் நெற்றி பொட்டில் துப்பாக்கியை வைத்தான்.அவனை நோக்கி வந்த நிகிதாவை நோக்கி கீழேயிருந்த கட்டையை குறிபார்த்து வீச அது அவள் நெற்றி பொட்டில் பட்டு ரத்தம் சிந்த வைத்தது.

 

 

“ஹேய் யூ அர்ஜுன், ஹவ் டேர் யூ? என்று இறைந்தவள் கீழே விழுந்த கட்டையை எடுத்து அவனை நோக்கி வீச அவன் துப்பாக்கியில் இருந்து குண்டு வெடித்து சஞ்சனாவை நெருங்கியவனின் மேல் பாய்ந்து அர்ஜுனின் கையில் இருந்து நழுவி கீழே விழுந்தது

 

 

வெளி வாசலில் நின்றிருந்த மற்ற ஆட்கள் சத்தம் கேட்டு வேகமாக உள்ளே வந்தவர்கள் அர்ஜுனை சுற்றி வளைக்க நிகிதா இன்னும் ஆங்காரமாக கத்தினாள்.

 

 

அவள் பெண் என்பதையும் மறந்து அவள் மென்மையான உணர்வுகளையும் மீறி அவளின் தீவிரவாதம் குணம் தலைத்தூக்க மிகக்கேவலமான காரியம் ஒன்றை செய்தாள்.

 

 

உள்ளே வந்த இருவர் அர்ஜுனுனை வளைத்திருக்க மற்ற இருவரையும் நோக்கி அந்த இரு பெண்களையும் சின்னபின்னமாக்க சொன்னாள் அவள். அர்ஜுனின் கண்ணெதிரேயே ஒருவன் அம்பிகாவையும் மற்றுமொருவன் சஞ்சனாவையும் நெருங்கினான்.

 

 

அப்போது தான் அங்கு ஒரு விஷயம் நடந்தது. சஞ்சனாவையும் அம்பிகாவையும் நெருங்கிய இருவரையும் யாரோ பின்னிருந்து இழுப்பது போல் இருக்க அவர்கள் கைகள் இரண்டும் பின்பக்கமாக இழுக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

 

 

அர்ஜுன் அங்கு என்ன நடக்கிறது என்பதை விழியகலாமல் பார்க்க சஞ்சனாவின் முகத்தில் ஒரு நிம்மதி பரவியது. செண்பகமும் மாரியும் அந்த இருவரையும் இழுப்பது தெரிந்தது.

 

 

நிரஞ்சனின் அண்ணன் அருண் அர்ஜுனை பிடித்திருந்தவர்களை பிடித்து இழுக்க அங்கு நடப்பதை நம்ப இயலா தன்மையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர் அனைவரும்.

 

 

இழுக்கப்பட்டவர்களோ மாறி மாறி விடுங்கடா யாருடா அது என்னடா மேஜிக் பண்றீங்களாடா என்று கத்திக் கொண்டிருந்தனர். அப்போது துப்பாக்கி குண்டின் ஓசை கேட்டு மாடியில் இருந்து கார்த்திக் கீழிறங்கி வந்தான்.

 

 

அந்நேரம் அதிரடியாக நிரஞ்சனும் உள்ளே நுழைந்தான். சற்றும் தாமதிக்காமல் அர்ஜுன் அருகில் கைகள் பின்னால் இழுபட்ட நிலையில் நின்றிருந்தவன் காலில் சுடவும் அவன் கீழே சரிந்தான் காலை பிடித்தவாறே.

 

 

நொடிப்பொழுதில் சுதாரித்தவனாய் அர்ஜுன் தன் மொத்த பலத்தையும் சஞ்சனாவையும் அம்பிகாவையும் நெருங்கியவர்கள் மீது காட்ட, உதவிக்கு கார்த்திக்கும் சேர்ந்து கொண்டு அவர்களை வெளுத்து வாங்கினான்.

 

 

அர்ஜுன் சட்டென்று அவனை பிடித்திருந்தவனில் ஒருவனை மர்மபிரதேசத்தில் அடிக்க அவனும் வலி தாளாமல் கீழே விழுந்திருந்தான். நிரஞ்சன் கையோடு கொண்டு வந்திருந்த காப்பும் கயிறையும் வைத்து எல்லோரையும் பிணையாக்கினர்.

 

 

இந்த நொடிகளில் தான் நிகிதா நிரஞ்சனின் இறுக்கமான கைவளையில் நின்றிருந்தாள்.சஞ்சனாவையும் இன்னும் நினைவு திரும்பாமல் இருக்கும் அம்பிகாவையும் பார்த்தவனுக்குள் கோபம் கட்டுக்கடங்காமல் இருந்ததில், எப்போது நிகிதாவை வளைத்தான் என்று அவனுக்கே தெரியவில்லை.அவன் கை மேலும் மேலும் கோபத்தில் அவளை நெருக்க அவளோ மூச்சு கூட விடமுடியாமல் தவித்தாள்.

 

 

ஆனாலும் அவனின் நெருக்கத்தை அவள் ரசிக்க அதைக்கண்ட சஞ்சனாவிற்குள் ஆத்திரம் வந்தது. எழ முடியாமல் எழுந்தவள் நிரஞ்சனின் பிடியில் இருந்தவளை இழுந்து ஓங்கி அறைய முயல நிகிதா லாவகமாக அதை தடுத்தாள்.

 

 

ஏற்கனவேவெறிபிடித்தவளாகஇருந்தநிகிதாபதிலுக்குசஞ்சனாவை பிடித்திருந்த கையை இழுத்து அவள் பின்பக்கமாய் வளைத்து முறுக்கியவள் அவள் பேண்ட்டில் இருந்து நொடிப்பொழுதில் துப்பாக்கியை எடுத்து சஞ்சனாவின் நெற்றிப்பொட்டில் வைத்தாள்.

 

 

“நிகிதா அவளை விடு… இல்லைன்னா நான் உன்னை செய்வேன்னு எனக்கே தெரியாது… என்று நிகிதாவின் கழுத்தை அவன் நெரிக்கப் போக அவளோ  கொஞ்சம் கூட அசராமல் “யா டூ இட் ரஞ், ஐ யம் ஆல்வேஸ் யூவர்ஸ்… என்று அவனை பார்த்து கண்சிமிட்டினாள்.

 

 

ஆத்திரத்தில் பல்லைக் கடித்தவன் அவளை தொடாமலே கைகளை கீழே இறக்கினான். அவன் கையில் இருந்த துப்பாக்கியை அவளை நோக்கி சுட அவன் எடுத்த நேரம் தான் மீண்டும் அந்த அதிசயம் நடந்தது.

 

 

செண்பகம் நிகிதாவின் கழுத்தை இறுக்கி வளைக்க அவளோ நிரஞ்சன் தான் வளைக்கிறான் என்று ஆனந்தமாக இருந்தவள் நிரஞ்சன் அவள் எதிரில் நிற்பதை அப்போது தான் பார்த்தாள்.

 

 

யார் அவளை பிடித்து இழுக்கிறார்கள் என்று திரும்பி பார்க்க முயல ஒருவரும் இல்லாது திகைத்தவள் கத்த ஆரம்பித்தாள். அங்கு நடப்பதை நம்பமுடியாமல் நிரஞ்சனும் பார்க்க அவனருகில் வந்த சஞ்சனா, நிகிதாவின் பின்னே நோக்கி கையை நீட்டினாள்.

 

 

அவளுக்கு வாயில் இருந்து வார்த்தைகள் வராமல் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து நிற்காமல் ஓடியது.

 

 

சுதாரித்த நிரஞ்சனின் துப்பாக்கி அழுத்தி சஞ்சனாவின் கண்களை மறுகையில் மூடிவிட்டு நிகிதாவின் நெஞ்சை துளைத்தது. கார்த்திக்கின் அழைப்பில் அங்கு வந்திருந்த போலீசார் துப்பாக்கி குண்டின் சத்தம் கேட்டு விரைந்து வந்து உள்ளே நுழைந்தனர். கட்டிப் போடப்பட்டிருந்தவர்களை வெளியில் இழுத்துச் சென்றனர்.

 

 

அதன்பின் அவர்கள் பார்மாலிட்டிஸ் எல்லாம் பார்க்க ஆரம்பிக்க நிரஞ்சன் காரில் எல்லோரும் ஏறினர். அம்பிகாவை கையில் தூக்கிக் கொண்ட அர்ஜுனின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது.

 

 

எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கும் மற்றவர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் அர்ஜுனின் கண்கள் முதல் முறையாக கலங்கியதை பார்த்தான் நிரஞ்சன்.

 

 

காரில் கனத்த அமைதி நிலவியது, எப்போதும் வளவளவென்று பேசிக் கொண்டிருக்கும் அர்ஜுனோ அம்பிகாவின் தலையை மடிமீது சாய்த்துக் கொண்டு அவள் முடி கோதிக்கொண்டும் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டுமிருந்தான்.

 

 

வழியில் வந்த மருத்துவமனையில் அம்பிகாவை சேர்த்துவிட்டு அவள் வீட்டிற்கு தகவல் கொடுத்தனர். நிரஞ்சன் அர்ஜுனை அழைக்க அவன் அங்கேயே இருக்கப் போவதாக கூறினான்.

 

 

சஞ்சனாவிற்கும் முதலுதவி செய்துவிட நிரஞ்சன், சஞ்சனா, கார்த்திக் மூவரும் அர்ஜுனிடம் சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர். “கார்த்திக் நீங்க ஊருக்கு கிளம்புங்க… இங்க நடந்த எதுவும் சொல்ல வேண்டாம்…

 

 

“நீங்க ஊருக்கு போகலைன்னா என்ன ஏதுன்னு யோசிப்பாங்க… என்று நிரஞ்சன் கார்த்திக்கை பார்த்து கூற “அதெப்படி முடியும் நிரஞ்சன் நாளைக்கு பேப்பர்ல எப்படியும் நியூஸ் வந்திடுமே… என்றான்.

 

 

“சஞ்சு பத்தியோ அம்பிகா பத்தியோ நீ இங்க இருந்தது பத்தியோ நியூஸ் வராது… நான் ஏற்கனவே மாறன்கிட்ட அதெல்லாம் பேசிட்டேன்… என்றான்.

 

 

“அப்போ சஞ்சு… அவளை எப்படி இங்க தனியா அதுவும் இப்படி இருக்காளே… என்று அவன் விழிக்க “சஞ்சுவை நான் பார்த்துக்கறேன்… அவ எங்க வீட்டில இருப்பா… என்றான் நிரஞ்சன்.

 

 

“இல்லை நிரஞ்சன் அது சரியா வராது, அவளை நான் என்னோட கூட்டிட்டு போறேன்… என்று சிறுகுழந்தையாய் அடம் பிடித்தான். கார்த்திக்கை பொறுத்தவரை சஞ்சு அவன் தங்கை போன்றவள் சிறுவயதில் இருந்து ஒன்றாக வளர்ந்ததினால் அவளை அப்படியே நினைத்திருந்தான். அவளை தனியே விட்டுச் செல்லவும் மனமில்லாமலே அப்படி கூறினான்.

 

 

“என்ன பேசற கார்த்திக், நீ அவளை கூட்டிட்டு போனா வீட்டில எல்லாரும் பயப்பட மாட்டாங்களா?? ஒரு வேளை என்கிட்ட இவளை தனியா விட்டு போக யோசிக்கிறியா?? என்றான் ஒருமாதிரி குரலில்.

 

 

இப்போது சஞ்சனா நிரஞ்சனை முறைத்தாள். “என்னை எதுக்கு முறைக்கிற, உன் மாமனை பார்த்து முறை என்றான் அவன். “என் மேல இருக்கற அக்கறை தானே பேசறாங்க… நீங்க வேற எதுக்கு அவரை கஷ்டப்படுத்துற மாதிரி பேசறீங்க என்றாள் சஞ்சனா.

 

 

“சஞ்சு பேசாம இரு… என்ன நிரஞ்சன் நான் எதுக்கு சொன்னேன்னு புரிஞ்சுக்கோ… உன்கிட்ட இருந்தா அவ இன்னும் நிம்மதியா இருப்பான்னு எனக்கு தெரியும்… என்னமோ எனக்கு தான் இவளை இப்படி விட்டு போக மனசில்லை…

 

 

“மனசு இன்னும் படபடன்னு இருக்கு, துறுதுறுன்னு விளையாட்டா இருப்பாளேயொழிய இன்னமும் சின்ன குழந்தையா எனக்கு இவ தெரியறா… என் கையை பிடிச்சுட்டு முதல் நாள் ஸ்கூல்க்கு நான் கூட்டிட்டு போன அதே சஞ்சுவா தான் தெரியறா…

 

 

“கார்த்திக் நீ சொல்றது எனக்கு புரியுது, உன்னோட குழந்தையை நான் பத்திரமா பார்த்துக்கறேன்… இப்போ மட்டுமில்லை எப்பவும்… நீ தைரியமா ஊருக்கு போ… நீ வர்றேன்னு சொல்லிட்டு வரலைன்னா அவங்க ரொம்ப பீல் பண்ணுவாங்க…

 

 

“அதுவும் சரி தான் நிரஞ்சன், அஞ்சு வேற தேடுவா… வாயை திறந்து எதுவும் பேசிட மாட்டா… மனசுக்குள்ளேயே வைச்சு மறுகுவா… அப்புறம் ரஞ்சன் இவ கூட இன்னைக்கு நைட் படுத்துக்க எங்க பெரியம்மா வேற வருவாங்களே நான் அதை மறந்திட்டேனே அவங்களை என்ன செய்ய…

 

 

“ஓ… அது வேற இருக்கா… ஹ்ம்ம் அவங்களுக்கு போன் பண்ணி சஞ்சு அவளோட பிரிண்ட் வீட்டில தங்கிகிட்டான்னு சொல்லிடு… யாருன்னு கேட்டா அம்பிகா வீடுன்னு சொல்லி சமாளிச்சுடு… என்று வழி சொன்னான் நிரஞ்சன்.

 

 

கார்த்திக்கை சென்னை செல்ல பஸ் ஏத்திவிட்டு போகும் வழியிலேயே இரவு உணவு வாங்கிக் கொண்டு அவன் வீட்டை நோக்கி சென்றனர்….

Advertisement