Advertisement

அத்தியாயம் –15

 

 

டைரியை படித்து முடித்ததும் நிரஞ்சனுக்கு தலையை வலிப்பது போல் இருந்தது. தான் என்ன மாதிரி உணர்கிறோம் என்றே அவனுக்கு புரியவில்லை. எவ்வளவு கேவலமான ஒரு செயலை தந்தை செய்திருக்கிறார் என்றறிந்தவன் அருவருத்து போனான்.

 

 

யோசித்து பார்த்தால் அவர் யாருக்கும் உண்மையாக இல்லை என்பதே பெரும் உண்மையாக இருந்தது. ஒரு மகனாக, ஒரு பெண்ணுக்கு கணவனாக, தந்தையாக எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு மனிதாக கூட அவர் இல்லையே…

 

 

அடுத்து என்ன செய்ய என்ற யோசனையில் இருந்தவன் அப்போது தான் அந்த GPS ட்ராகிங்கை கவனித்தான்… அது வெகு நேரமாக ஒளிர்ந்தும் ஒலி கொடுத்தும் கொண்டிருந்தது கண்டு அதை கவனித்தான்.

 

 

‘இந்த சஞ்சுவுக்கு இதே வேலையா போச்சு, மறுபடியும் எதுக்கு அங்க போறா… என்று அவளை திட்டிக் கொண்டே டைரியை டீபாயின் மேல் வைத்துவிட்டு அவன் பைக் சாவியை கையில் எடுத்தான்.

 

 

ஏதோ தோன்ற ‘இவ எப்படியும் மயங்கி விழுவா, பைக்ல போனா சரியா வராது என்று முடிவெடுத்தவனாக கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தான்.

 

 

அவன் நினைப்பதற்கு நேர்மாறாக நடக்கும் என்று அறிந்திருந்தால் அவன் சாதாரணமாகவே கிளம்பி சென்று இருப்பான்.

 

 

சஞ்சு தன் ஸ்கூட்டியில் அந்த வீட்டை வந்தடைந்தவள் வண்டியை நிறுத்திவிட்டு கேட்டை திறந்து உள்ளே சென்றாள். வீடு வேறு பூட்டியிருந்ததால் முதல் நாள் போல் பின் புறம் சென்றாள்.

 

 

நிரஞ்சன் இதற்கு முன் அங்கு வந்திருந்த போது பின்புறம் திறந்திருந்த அந்த சன்னலை அடைத்திருந்தான். சஞ்சுவும் சுற்று முற்றும் பார்த்தாள், அந்த வீட்டையே இரண்டு மூன்று தரம் வலம் வந்திருப்பாள்.

‘என்னால தான் உள்ள போக முடியலை, அவங்களாச்சும் என் முன்னாடி வரலாம்ல என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். படியேறி மொட்டை மாடிக்கு சென்றாள். சிறிது நேரம் வாசலிலேயே அமர்ந்து பார்த்தாள்.

 

 

யாரும் அவள் கண்ணுக்கு தென்படுவதாயில்லை… ‘நிருவோட அண்ணா அன்னைக்கே ஏதோ பேச வந்தாரே… ச்சே நாம தான் அவரை பேச விடாம கதவை அடைச்சுட்டோம்…

 

 

மொட்டை மாடியில் நின்றிருக்கும் போது தூரத்தே வேலி போட்டு தனியாக ஒரு இடம் செடிகள் எல்லாம் காய்ந்து போயிருக்க அங்கு போவோம் என்று எண்ணியவள் ஸ்கூட்டியை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு அந்த பகுதியை நோக்கி நடக்கலானாள்.

 

 

மூங்கில் தட்டியை திறந்து உள்ளே சென்றவளின் மனம் வாடி கிடந்த அந்த செடிகளை கண்டு இன்னும் வாடியது. வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற ராமலிங்க அடிகளின் கூற்று அவள் எண்ணத்திற்குள் வந்து போனது.

 

 

சுற்று முற்றும் பார்த்தவளுக்கு அங்கிருந்த குழாய் கண்ணில் பட வெளியில் அவள் பார்த்த பைப்பை கொண்டு வந்து அதனுடன் இணைத்தாள். செடிகளுக்கு நீர் பாய்ச்சினாள்.

 

 

அப்போது தான் அவள் ஒன்றை கவனித்தாள், அங்கிருந்த அத்தனை செடிகளும் வாடியிருந்த போதும் ஒரு செடி மட்டும் வாடாமல் இருந்தது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அருகே சென்று அதை தன் கைபேசியில் படமெடுத்துக் கொண்டாள்.

 

 

சஞ்சுவை தேடி வந்த நிரஞ்சன் அவள் ஸ்கூட்டி மட்டும் அந்த வீட்டின் வாசலிலே இருப்பதை கண்டான். உள்ளே சென்று சஞ்சுவை தேடி சுற்று முற்றும் பார்க்க அவளோ அங்கு இல்லை.

 

 

வீடு பூட்டியிருப்பதால் எங்கு சென்றிருப்பாள் என்று அவனுக்குள் லேசான பதட்டம் எழுந்தது. ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்த வேளை யாரோ அவன் எதிரில் நின்றிருப்பது போல் தோன்ற நிமிர்ந்து பார்த்தால் யாரும் அங்கில்லை.

 

 

படியேறி மாடிக்கு சென்று பார்த்தான், விளிம்பில் கால் வைத்து அவன் எட்டி பார்த்த நொடி கால் தடுமாறி விழப் போனவன் சட்டென்று அருகில் இருந்த சுவற்றை பிடித்துக் கொண்டான்.

 

 

கொஞ்சம் தாமத்திருந்தால் நிச்சயம் கிழே விழுந்திருப்பான். யாரோ அவனை தள்ளி விட்டது போன்ற உணர்வு அதற்கு மேல அங்கு நிற்க தோன்றாமல் அவன் திரும்பிய அந்த நொடி தூரத்தே சஞ்சு செடிகளுக்கு நீர் பாய்ச்சுவதை கண்டான்.

 

 

படிகளில் இறங்க முற்படும் போது யாரோ அவனுக்கு முன்னே இறங்குவது போன்று தோன்றியது. ச்சே என்ன இது எனக்கு ஏன் இப்படி தோன்றுகிறது என்று யோசித்தவன் தலையை சிலுப்பிக் கொண்டான்.

 

 

இரண்டிரண்டு படிகளாக தாவி இறங்கியவன் வேகமாக சஞ்சு இருக்குமிடம் நோக்கி விரைந்தான். ஏனோ அந்த கணம் அவனுக்குள் அந்த செண்பகத்தை எங்கு புதைத்திருப்பார்கள் என்று தோன்ற கண்களை விட்டு அலச ஓரிடத்தில் கருவேல முட்கள் ஓரிடத்தில் பரப்பப் பட்டது போல் தோன்ற அந்த இடத்தை கண்களுக்குள் நிறைத்துக் கொண்டான்.

 

 

சஞ்சுவை நோக்கி முன்னேறியவன் தட்டியை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான். அவனுக்கு முதுகு காட்டிக் கொண்டு நின்றிருந்தவள் சட்டென்று திரும்ப அவனை கண்டு அதிர்ந்தாள்.

 

 

“நீ இங்க என்ன பண்ற சஞ்சு… இங்க தான் உன்னை வரவேணாம்ன்னு சொல்லியிருக்கேன்ல

 

 

“நிரு நீங்க எப்படி இங்க… நாங்க இங்க தான் இருக்கேன்னு எப்படி தெரியும் உங்களுக்கு???

 

 

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம நீ என்னையே கேள்வி கேட்குற???

“நிரு நான்… நான் சு… சும்மா தான் வந்தேன்… ஆனா நீங்க எப்படி வந்தீங்க நிரு சொல்லுங்க… என்றவளுக்கு ஏதோ தோன்ற “நிரு நீங்க என்னை ட்ராக் பண்றீங்களா?? என்று அவன் முகத்துக்கு நேரே கேட்டுவிட்டாள்.

 

 

சில நொடிகள் அமைதி காத்தவன் “ஆமாம் ட்ராக் தான் பண்ணேன்

 

 

அவள் முகம் நொடிகளில் கோபத்தில் சிவந்தது. “எதுக்கு… நான் என்ன நீங்க பாலோ பண்ற கைதியா… என்… என்னை எதுக்கு நிரு ட்ராக் பண்ணுறீங்க… அதுக்கென்ன அவசியம் என்றாள்.

 

 

அவள் குரலோ அழுவது போல் இருக்க சஞ்சுவின் அருகில் வந்தான். “இங்க பாரு சஞ்சு நான் கைதிகளை தான் ட்ராக் பண்ணணும்னு அவசியம் இல்லை. என் பொண்டாட்டிக்கு ஒரு ஆபத்துன்னா நான் எப்படி தெரிஞ்சுக்கறது…

 

 

“நீ வேற நான் என்ன சொன்னாலும் கேட்க மாட்டே… உன் பிடிவாதம் உன்னை இங்க தான் கொண்டு வந்து நிறுத்துது… உனக்கு என்னாச்சு ஏதாச்சுன்னு என்னால பயந்துட்டே இருக்க முடியலை…

 

 

“என்னோட வேலையால கூட உனக்கு ஆபத்து வரலாம்… அதான் அப்படி செஞ்சேன்… நீ எப்படி எடுத்துகிட்டாலும் சரி எனக்கு அதை பத்தி கவலையில்லை… இது என்னோட கடமை நான் அதை செய்வேன்… இப்போ மட்டுமில்லை எப்பவும்… என்றவன் இறுக்கத்துடன் நின்றான்.

 

 

அவனின் பதில் அவளுக்கு இளக்கத்தை கொடுக்க அருகே வந்து அவன் கைகளை பிடித்துக் கொண்டாள். “போகலாம் நிரு…

 

 

“எங்கே???

 

 

“வீட்டுக்கு தான் நீங்க என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போக தானே வந்தீங்க…

 

 

“ஹ்ம்ம்… உனக்கு என்னை டிரைவராவே ஆக்கிட்டியா…

 

“ஏன் நிரு என்னை கூட்டிட்டு போக மாட்டீங்களா… என்றவள் அவன் கைப்பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தவள் ஆவென்று கத்த “என்னாச்சு சஞ்சு… என்று நிரஞ்சன் பதற “கால்… நிரு… என்றவள் குனிந்து காலை பார்த்தாள்.

 

 

“முள்ளு நிரு… என்று கூற குனிந்து அவள் காலை பார்த்தவன் ஒரு காலை தரையில் ஊன்றி மறு காலை முட்டி போட்டவன் அவன் பாதத்தை தன் மீது எடுத்து வைத்துக் கொண்டான்.

 

 

பெரிய முள்ளொன்று அவள் காலில் ஏறியிருந்தது. அதை எடுத்துவிட அவள் காலில் இருந்து புள்ளி புள்ளியாக ரத்தம் வெளியே வர தன் கைகளால் துடைக்க முயல சஞ்சு அவனை தடுத்தாள்.

 

 

“விடுங்க நிரு… என்று தடுத்தவளை தடுத்தவன் அவன் கைக்குட்டையை எடுத்து துடைத்தான். “சரி வா போகலாம்… என்று கூறி அவள் பாதத்தை கீழே வைக்க குத்திய முள்ளால் அவளுக்கு கால் வலித்தது.

 

 

வலியில் அவள் முகம் சுளிக்க இருகைகளால் அவளை தாங்கியவன் அவளை தூக்கி வந்து அவள் காரில் அமர வைத்தான். “நிரு என்னோட வண்டி… எனக்கு தெரியும் நான் பார்த்துக்கறேன் என்று சைகை செய்தான்.

 

 

அவள் வண்டியை அலேக்காக தூக்கியவன் அவனுடைய டவேராவின் மேல் புறம் வைத்தான், வண்டி விழாமல் இருக்க வண்டியின் பின் புறம் வைத்திருந்த கயிற்றை எடுத்து வந்து கட்டினான்.

 

 

அவனை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள், அவன் வந்து வண்டியில் ஏற யாரோ அவனுடனே பின்னே வந்தது போல் இருந்தது. வண்டியில் ஏறி அமர்ந்தவன் மீண்டும் அந்த இடத்தை கண்களால் ஒரு முறை துழாவினான்.

 

 

செண்பகத்தின் கதறல் எங்கோ இன்னமும் கேட்டுக் கொண்டிருப்பது போன்ற உணர்வு அவனுக்கு எழுந்தது. இது போன்ற எண்ணம் அவனுக்கு தோன்றுவது இதுவே முதல் முறை.

மீண்டும் தலையை சிலுப்பி தன்னிலைக்கு வந்தவனை சஞ்சு இமைக்காமல் பார்த்தாள். “இது போல எத்தனை வண்டியை உங்க வண்டியில ஏத்தியிருக்கீங்கஎன்றாள் கிண்டலாக

 

 

“நெறைய வண்டியை ஏத்தி இருக்கேன்… என்றான் அவனும் பதிலுக்கு.

 

 

“நான் ஒரு பேச்சுக்கு சொன்னா நீங்க பதிலுக்கு பதில் சொல்றீங்க… என்று சிணுங்கினாள்.

 

 

“சரி உன்னை வீட்டுக்கு கொண்டு போய் விட்டிறேன்

 

 

“இல்லை…

 

 

“என்ன இல்லை…

 

 

“இல்லை நான் வீட்டுக்கு அப்புறம் போய்க்கறேன், உங்… உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க… என்றவளை ஆச்சரியமாக பார்த்தான்.

 

 

“உங்களுக்கு என்ன பிடிக்கும் சொல்லுங்க நிரு… நான் இன்னைக்கு உங்களுக்கு சமைச்சு தர்றேன்… ப்ளீஸ்

 

 

“என்னை ரிஸ்க் எடுக்க சொல்ற?? அதெல்லாம் வேண்டாம் சஞ்சு நான் எப்பவும் போல வெளியில சாப்பிட்டுக்கறேன், இல்லைன்னா நானே செஞ்சு சாப்பிட்டுக்கறேன்

 

 

“போங்க நிரு… நான் உங்களுக்காக அத்தைக்கிட்ட சமைக்க கத்துக்கிட்டேன்… நான் சரியா சமைக்க மாட்டேன்னு நினைச்சு தானே வேண்டாம்ன்னு சொல்றீங்க…

 

 

“சரி தாயே… நீயே சமைச்சு கொடு… ஆனா இன்னைக்கு வேண்டாம் இன்னொரு நாள், இன்னைக்கு நான் அர்ஜுனை பார்க்க போறேன்… நம்ம நிச்சயம் முடிஞ்சு நான் இன்னும் அவனை பார்க்கலை…

 

 

“சோ… நான் உன்னை வீட்டில விட்டுட்டு அவனை பார்க்க போறேன்… ஒன் ஹவர் கழிச்சு தான் வீட்டுக்கு வருவேன்… நான் வழக்கம் போல சாப்பாடு வெளிய பார்த்துக்கறேன்…

 

 

“முடியாது… முடியாது… நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்… இதுல உங்க பேச்சை நான் எப்படி கேட்பேன்… என்னை வீட்டில விட்டுட்டு போங்க… நான் சமைச்சு வைக்கிறேன்…

 

 

“நீங்க வந்த பிறகு சாப்பிட்டு அப்புறம் என்னை வீட்டில கொண்டு போய் விடுங்க… ஓகேவா என்று சிறுகுழந்தையாய் அடம் பிடிக்க அவள் பிடிவாதம் தெரிந்தவன் “சரி கூட்டிட்டு போறேன்… என்றான்.

 

 

போகும் வழியிலேயே சமையலுக்கு தேவையான காய்கறிகளை வண்டியை நிறுத்தச் சொல்லி வாங்கிக் கொண்டவள் அவன் வீட்டில் இறங்கிக் கொண்டாள்.

 

 

பின்னோடு வந்தவன் சமையலறையில் எது எது எங்கு இருக்கிறது என்று அவளுக்கு சொல்லிவிட்டு அவளை பத்திரமாக இருந்து கொள்ளுமாறு கூறிவிட்டு கிளம்பினான்.

 

 

அவன் சென்றதும் கதவை சாத்திவிட்டு சமையலறைக்கு சென்றாள். அரைமணி நேரம் கழித்து சமைத்துக் கொள்ளலாம் அப்போது தான் சூடாக இருக்கும் என்று எண்ணி சமையலுக்கு தேவையானவற்றை நறுக்கி வைத்துவிட்டு ஹாலில் வந்து அமர்ந்தாள்.

 

 

டிவியை ஆன் செய்து சேனலை மாற்றி மாற்றி வைத்து பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்ணில் டிபாயின் மீதிருந்த DIARY என்ற எழுத்து கண்ணில் பட ஆர்வமாக அதை கையில் எடுத்தாள்.

 

 

‘அடடா இந்த நிரு டைரி எல்லாம் எழுதுவாரா… என்னை பத்தி எழுதியிருப்பாரா… அவளுக்கு அதை படிக்கும் ஆர்வம் வந்துவிட ஆர்வக்கோளாறாக அதன் பக்கங்களை புரட்டினாள்.

 

 

அதை படிக்க படிக்க அவளுக்கு சொல்லொணாத உணர்வொன்று ஏற்பட்டது. ஒரு மணி நேரம் கடந்தது கூட அறியாமல் அந்த டைரியை கையில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

 

 

அதை படித்து முடிக்கவும் அவள் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது. கண்ணை மூடி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

 

 

அவள் எண்ணத்தை கலைப்பது போல் நிரஞ்சனிடம் இருந்து அழைப்பு வந்தது. “சொல்லுங்க நிரு… என்று போனை காதில் வைத்தாள்.

 

 

“நான் கிளம்பிட்டேன் சஞ்சு, வீட்டுக்கு தான் வந்திட்டு இருக்கேன்… உனக்கு நேரமாச்சுன்னா நீ கிளம்பு சஞ்சு… வீட்டில உன்னை தேடப் போறாங்க… என்றான்.

 

 

அப்போது தான் இன்னும் சமைக்கவில்லை என்ற ஞாபகம் வர “இல்லை நிரு நீங்க வாங்க… நாம ஒண்ணா சேர்ந்து சாப்பிட்டுவோம், அப்புறம் நான் வீட்டுக்கு போறேன்…வீட்டில யாரும் தேடமாட்டாங்க, அவங்க கேட்டா நான் சொல்லிக்கறேன்…

 

 

“நானே கார்த்திக்கிட்ட சொல்லிட்டேன்… இருந்தாலும் நீ ஒரு வார்த்தை போன் பண்ணியாச்சும் சொல்லிடு…

 

 

“அதான் நீங்களே சொல்லிட்டீங்களே, சரியான உண்மை விளிம்பி… என்று கிண்டலடித்து விட்டு போனை வைத்தாள்.

 

 

அவன் வருவதற்கு முன் சமைத்துவிட எண்ணி துரிதமாக வேலை பார்த்து கொண்டிருந்தாள். வெஜிடபிள் புலாவ் செய்தவள் கோபி மஞ்சூரியன் செய்து கொண்டிருக்கும் வேளை வாசலில் பைக் நிறுத்தும் சத்தம் கேட்டது.

 

 

‘அய்யோ வந்துட்டார் போலயே… என்று எண்ணிக் கொண்டு சமையலை கவனித்துக் கொண்டிருந்தாள். “சஞ்சு… என்று அழைத்துக் கொண்டே அவன் உள்ளே வந்தான்.

 

“இங்க இருக்கேன் நிரு… என்று குரல் கொடுக்க அவன் சமையலறைக்குள் நுழைந்தான். “இன்னும் முடிக்கலையா, பாரு மணி எட்டாக போகுது… நீ செஞ்ச வரைக்கும் போதும்… நேரமாச்சு கிளம்பு…. நான் உன்னை வீட்டில கொண்டு போய் விட்டுட்டு வர்றேன்…

 

 

“அட போங்க நிரு எப்போ பார்த்தாலும் பரபரத்திட்டு அதெல்லாம் நான் அத்தைக்கு போன் பண்ணி சொல்லிட்டேன்… சாப்பிட்டு அப்புறம் கிளம்பறேன்…

 

 

“சரி நான் போய் ரெப்ரெஷ் பண்ணிட்டு வர்றேன்… என்று அவன் வெளியில் கிளம்ப “ஒரு பொண்ணுதனியா இங்க இருக்காளே… கொஞ்சமாச்சும் ரொமான்ஸ் பண்ணுவோம்னு இவருக்கு தோணவே தோணாதா…

 

 

“ச்சே இவருக்கெல்லாம் ரொமான்ஸ் வரவே வராது போல… ஆமா இவருக்கெல்லாம் எப்படி போலீஸ்ல வேலை கொடுத்தாங்க… சஞ்சு உன் பாடு பெரும்பாடா இருக்கும் போல இருக்கே… என்று வாய்விட்டே புலம்பினாள்.

 

 

“ஓ இது புதுசா இருக்கே… ஆமா சஞ்சு ரொமான்ஸ்க்கும் போலீஸ் வேலைக்கும் என்ன சம்மந்தம்… எனக்கு கொஞ்சம் சொல்லேன் தெரிஞ்சுக்கறேன்… என்ற குரலில் சஞ்சுவுக்கு தூக்கிவாரி போட திரும்பினால் நிரஞ்சன் நின்றிருந்தான். “சொல்லு சஞ்சு என்ன சம்மந்தம்…

 

 

“இல்…இல்லை அது சு… சும்மா…சும்மா.. விளையாட்டுக்கு சொன்னேன்… நீங்க பிரெஷ் ஆகிட்டீங்களா…

 

 

“அதெல்லாம் அப்புறம்… சரி சரி வா… என்றவனிடம் எங்கே என்பது போல் பார்த்தாள்.

 

 

“அதான் ரொமான்ஸ் பண்ணத் தெரியலைன்னு சொன்னியே… வா… வா… வந்து சொல்லிகொடு…

 

 

“என்னது… என்று வாயை பிளந்தவளின் அருகே வந்து இரு விரலால் அவள் வாயை மூடினான்.

 

 

“எதுக்கு வாயை பிளக்குறே… போலீஸ் ட்ரைனிங்ல எனக்கு இதெல்லாம் சொல்லி தரலை வாயேன் சஞ்சு… நீ வந்து எனக்கு சொல்லிக் கொடு… பெண் கைதிங்க கிட்ட நான் எப்படி நடந்துக்கணும்னு நீ சொல்றது வைச்சு நடக்கறேன்…

 

 

“என்னது… என்ன கொழுப்பா உங்களுக்கு… நீங்க எதுவும் படிக்க வேணாம்… போங்க போய் ரெப்ரெஷ் பண்ணிட்டு வாங்க… எனக்கு பசிக்குது, எனக்கு நேரமாகுது, கொஞ்சமாச்சும் என்னை வீட்டில தேடுவாங்கன்னு நினைப்பிருக்கா உங்களுக்கு… என்று திருப்பினாள்.

 

 

“உன்னை… என்றவன் வந்து பேசிக்கறேன் என்று கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறினான். அந்த டைரியை படித்த போது இருந்த மனக்கலக்கம் சஞ்சுவுடனான பேச்சில் புண்ணுக்கு புனுகு பூசியது போல் மனம் சற்றே அமைதியடைந்திருந்தது.

 

 

குளித்து வேறு உடைக்கு மாறி வந்தவன் அவளை தேட அவளோ சமையலறையை ஒட்டியிருந்த டைனிங் டேபிளில் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

 

 

அவனுக்கு முதுகுகாட்டிக் கொண்டு நின்றிருந்தவளின் வெற்றிடை அவன் கண்ணில் பட கைகள் அவளை தழுவ துடித்தது. அருகே வந்து பின்னிலிருந்து அவளை அணைத்தான்.

 

 

கூச்சத்தில் அவள் நெளிய அவளை தன் புறம் திருப்பியவனுக்கு என்ன தோன்றியதோ அவளை இருகைகளாலும் தூக்கி கொண்டான்.

 

 

சஞ்சுவும் எந்த மறுப்பும் சொல்லாமல் அவன் தோளில் முகம் புதைத்துக் கொள்ள ஹாலில் இருந்த சோபாவில் அவளை சாய்த்தவன் அவளை நோக்கி குனிந்தான்.

 

 

அவள் இதழை தன் வசமாக்கியவனின் கைகள் அவளின் மேனியில் விளையாட, மூளையில் அலாரம் அடித்தது போல் அவன் தந்தையின் செயல் ஞாபகம் வந்தது.

 

 

சட்டென்று அவளிடம் இருந்து விலகியவனுக்கு ‘ச்சே என்ன இருந்தாலும் என் தந்தையின் புத்தி எனக்கும் இருக்கிறது தானே, இப்படி திருமணத்திற்கு முன்… ச்சே என்ன செய்ய இருந்தேன் என்ற குற்ற உணர்வு தோன்றியது.

 

 

அவன் மேலேயே கோபம் எழ அதை சஞ்சுவின் மேல் காட்டினான். “நீ… நீ கிளம்பு… என்று அவன் கூற “என்… என்ன நிரு திடீர்னு என்றாள்.

 

 

“நீ முதல்ல இங்கிருந்து கிளம்பு சஞ்சு, இனிமே இங்க வராதே… கோபமாக பேச அவள் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. அதை பார்த்ததும் மனம் தாளாதவன் சட்டென்று கண்ணை மூடி தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தான்.

 

 

‘இவளை சத்தம் போட்டால் தான் இங்கிருந்து கிளம்புவாள் என்றெண்ணியவன் “இப்போ கிளம்புறியா இல்லையா… என்று சத்தமாக கூற வேகமாக எழுந்தவள் சோபாவின் விளிம்பில் இடித்துக் கொண்டாள்.

 

 

அவள் வலியால் முனக “பார்த்து நடக்கவே மாட்டியா… எப்போ பார்த்தாலும் கனவிலேயே இருக்கறது… என்று அதற்கும் அவன் பேச வேகமாக அவள் கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றாள்.

 

 

அவள் சென்றதும் அவன் மனம் உடைந்து போனவனாக தொப்பென்று சோபாவில் அமர்ந்தான். அந்த டைரி அவனையே பார்ப்பது போல் தோன்றியது. வெளியில் சென்ற சஞ்சுவோ மீண்டும் உள்ளே வந்தாள்.

 

 

“நீ இன்னும் போகலையா?? என்று அவன் ஆரம்பிக்க “என்னோட ஸ்கூட்டி… என்று வெளியே கைக்காட்ட அப்போது தான் நினைவு வந்தவனாக அவள் ஸ்கூட்டியை அவன் வண்டியில் இருந்து இறக்கிக் கொடுத்தான்.

அதில் ஏறி அமர்ந்தவளின் விழிகளில் இருந்து கண்ணீர் வழிவதை ஒரு இயலாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

 

 

மனம் கேளாதவனாக “சாரி சஞ்சு… என்று கூற அது காற்றோடு கலந்து போனது. தன் மேலேயே அவனுக்கு கோபம் எழுந்தது. அவன் தந்தை செய்த தவறு ஏனோ அவனே செய்தது போல் அவனுக்கு தோன்றியது.

 

 

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று நிதானமாக அமர்ந்து பட்டியலிட்டுக் கொண்டான். சஞ்சு ஆசையாக சமைத்து வைத்ததை ஆவலாய் பார்த்தவன் கார்த்திக்கிற்கு போன் செய்தான்.

 

 

“சொல்லுடா… என்றான் கார்த்திக் எதிர்முனையில்.

 

 

“சஞ்சு வந்திட்டாளா

 

 

“ஹ்ம்ம் இப்போ தான் வந்தா… என்ன நல்ல சாப்பாடா, ஒழுங்கா சமைச்சு தந்தாளா… கொடுத்து வைச்சவன்டா செம ரொமான்ஸா

 

 

“அதெல்லாம் ஒண்ணுமில்லை கார்த்திக்… சாரிடா நான் அவளை கோபமா பேசிட்டேன்… அவ சாப்பிட்டிருக்க மாட்டா, ப்ளீஸ் அவளை சாப்பிட வையேன்…

 

 

“என்னாச்சு??? மறுபடியும் எதுவும் பிரச்சனையா???

 

 

“அதெல்லாம் ஒண்ணுமில்லை கார்த்திக்… நான் தான் வேலை டென்ஷனை அவ மேல காட்டிட்டேன்… தப்பு என் பேர்ல தான்… இப்போ நான் போன் பண்ணா பேச மாட்டா… அவளை சாப்பிட மட்டும் வை… ப்ளீஸ்நான் போனை வைக்கிறேன் என்றான்.

 

 

“ரஞ்சன் கொஞ்சம் இரு… அவளை நான் சாப்பிட வைச்சுக்கறேன், அவளை திட்டிட்டோமேன்னு நீ சாப்பிடாம இருக்காதே… உனக்காக கஷ்டப்பட்டு உலக அதிசயமா இன்னைக்கு தான் அவளே அவ கையால சமைச்சு இருக்கா…

 

 

“கண்டிப்பா சாப்பிடுறேன்…என்றுவிட்டு போனை வைத்தவன் டைனிங் டேபிளில் அமர்ந்தான். தட்டை எடுத்து வைத்து சாப்பிட அவள் முதல் முறையாக செய்தது போலவே இல்லை.

 

 

மனதிற்கு பிடித்தவர்களுக்காக சமைத்தால் உணவும் ருசியாகி விடும் போலும்… அவனுக்காக அவள் பார்த்து பார்த்து சமைத்திருக்க அது வேறு மேலும் அவனை குற்ற உணர்ச்சிக்கு ஆட்படுத்தியது.

 

 

சாப்பிட்டுவிட்டு அவன் யோசனையில் அமர்ந்திருக்க புதிய எண் ஒன்றிலிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. நெற்றி சுருக்கி யோசித்தவன் அதை எடுத்து காதுக்கு கொடுத்தான் ஹலோ என்றவாறே.

 

 

“சார் நான் அம்பிகா பேசறேன்…

 

 

“அம்பிகாவா… என்று யோசித்தவனுக்குள் “ஓ நிக்கிக்காக அன்னைக்கு வந்தீங்களே… அவங்க தானே… என்றான்.

 

 

“ஆமா சார் அந்த அம்பிகா தான்…

 

 

“ஆமா என்னோட நம்பர் உங்களுக்கு எப்படி தெரியும்

 

 

“சஞ்சுகிட்ட வாங்கினேன் சார்… உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்… நாளைக்கு ஆபீஸ் வரலாமா சார்…

 

 

“ஓ தாராளமா வாங்க… ஆனா நிக்கி சென்னை போயிருக்காளே… நீங்க வந்து என்னை பார்த்து அது வேஸ்ட் தானே… நிக்கி வந்ததும் வந்து பாருங்க…

 

 

“தெரியும் சார் அவங்க இன்னைக்கு காலையில சென்னை கிளம்பி போயிருக்காங்கன்னு தெரியும்… நான் உங்ககிட்ட தான் பேசணும் சார்…

 

 

“சரி நாளைக்கு ஆபீஸ்க்கு வாங்க… என்றுவிட்டு போனை வைத்தான், என்னவாக இருக்கும் என்று யோசனையிலாழ்ந்தான்.

மறுநாள் அவன் அலுவலகத்திற்கு சென்றவன் அர்ஜுன் கொடுத்த குறிப்புகளை ஆராய்ந்து கொண்டிருக்க அவனை பார்க்க இருவர் வந்திருப்பதாக கூறவும் அவர்களை வரச்சொல்லிவிட்டு மீண்டும் கோப்புகளில் ஆழ்ந்தான்.

 

 

“குட் மார்னிங் சார்… என்ற குரலில் அவன் நிமிர்ந்து பார்க்க அம்பிகாவும் சஞ்சுவும் உள்ளே நுழைந்தார்.

 

 

முதலில் நிமிர்ந்து அம்பிகாவை பார்த்தவனின் பார்வை இரவில் தூங்காமல் கண்ணை சிவக்க வைத்து முகமெல்லாம் ஊதிப் போயிருந்த சஞ்சுவின் மேல் பதிந்தது.“உட்காருங்க… என்று இருக்கையை காட்டியவன் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் அமர்ந்திருந்தான்.

 

 

சஞ்சு உள்ளே நுழைந்ததும் அவனையே பார்த்தவள் கண்ணுக்குள் அவனை நிறைத்துக் கொண்டு இருக்கையில் அமர்ந்தாள். “சொல்லுங்க அம்பிகா… என்ன முக்கியமான விஷயம்

 

 

“சார் அது வந்து… என்று இழுக்க “சொல்லுங்க சொல்லத் தானே வந்தீங்க… அப்புறம் எதுக்கு தயக்கம்…

 

 

“சார் அந்த நிகிதா சரியில்லை சார்… அவங்ககிட்ட நெறைய தப்பு இருக்கு சார்… என்று நேரடியாக போட்டு உடைத்து விட்டாள்.

 

 

நிரஞ்சனோ கொஞ்சம் கூட பதட்டப்படாமல் திரும்பி சஞ்சுவை ஒரு முறை முறைத்தான். “இவங்க தான் அப்படி சொல்லச் சொன்னாங்களா… என்றதும் சஞ்சு கோபமாக இருக்கையில் இருந்து எழுந்தாள்.

 

 

“எதுக்கு இப்படி தேவையில்லாம பேசறீங்க… அம்பிகா கூப்பிட்டாளேன்னு தான் நான் வந்தேன்… இந்த நிமிஷம் வரைக்கும் அவ உங்ககிட்ட என்ன பேசப் போறான்னே எனக்கு தெரியாது…

 

 

“உங்களுக்கு எப்பவும் என் மேல சந்தேகப்படுறதே வேலையா போச்சு… என்றவள் அம்பிகாவிடம் திரும்பி “நீ பேசிட்டு வா… நான் வெளிய இருக்கேன்… என்று வேகமாக கதவை திறந்து வெளியில் சென்றுவிட்டாள்.

 

 

“நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலை அம்பிகா…

 

 

“சார் நீங்க எதுக்கு சஞ்சனா மேல கோபப்பட்டீங்க… அவ சொன்னது உண்மை தான் சார்… நான் என்ன பேசப் போறேன்னு அவளுக்கு தெரியாது…

 

 

“சரி நீங்க மேல சொல்லுங்க…

 

 

“நான் ஒரு வாரமா அவங்க கூட தான் இருக்கேன்… அவங்க நடவடிக்கை எதுவும் சரியில்லை சார்… எனக்கு ஹிந்தி தெரியாதுன்னு நினைச்சு அவங்க பேசினது எல்லாம் நான் கேட்டேன் சார்… என்று அவள் சொல்லிக் கொண்டே போக கையமர்த்தி அவளை தடுத்தான்.

 

 

“ஒரு நிமிஷம் இருங்க… என்றவன் போனை எடுத்து பேசினான். “சாமியை உள்ள வரச் சொல்லுங்க…

 

 

அவன் அழைத்த இரண்டே நொடிகளில் அவர் உள்ளே நுழையவும் அவன் சந்தேகம் ஊர்ஜிதமானது. “சாமி இவங்க அம்பிகா நீங்க பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்…

 

 

“நிக்கி இவங்களோட தான் வெளிய போயிருப்பா, அப்போ பார்த்திருப்பீங்க… இப்போ இவங்க அந்த இளையான்குடியில ஒருத்தர் இறந்து போனார்ல அதை பத்தி டீடைல்ஸ் கேட்டு வந்திருக்காங்க… கொஞ்சம் அந்த பைல் எடுத்துட்டு வர்றீங்களா…

 

 

“ஓ!!! இவங்க அதுக்கு தான் வந்திருக்காங்களா… சரி சார் நான் இப்போவே பைல் எடுத்திட்டு வர்றேன்… என்று வெளியில் சென்றுவிட்டார்.

 

 

“என்ன சார்… நீங்க என்னென்னமோ சொல்றீங்க…

 

 

“அம்பிகா நீங்க இங்க வைச்சு எதுவும் சொல்ல வேணாம்… சாமி இப்போ திரும்ப வருவார்… நீங்க இன்னைக்கு சாயங்காலம் இந்த அட்ரஸ்க்கு வாங்க… எதுவும் அவசரம்ன்னா இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க… என்று அவள் கையில் அவசரமாக ஒரு பேப்பரில் எழுதிக் கொடுத்தான்.

 

 

“ஓகே சார்… அப்போ நான் கிளம்புறேன்…

 

 

“இருங்க அம்பிகா… சாமி வந்ததும் பேருக்காக அந்த டீடைல் எல்லாம் பார்த்திட்டு போங்க… என்று அவன் கூறி முடிக்கவும் சாமி உள்ளே நுழைந்தார்.

 

 

அன்று மாலை அவனுக்கு போன் செய்துவிட்டு அவன் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தனர் சஞ்சுவும் அம்பிகாவும்… “உனக்காக தான் அம்பிகா வந்திருக்கேன்…

 

 

“நீ அவங்களை பார்த்து பேசிட்டு சொல்லு… நான் பக்கத்துல வண்டியில போயிட்டு வர்றேன்… நீ பேசி முடிச்சதும் சொன்னா நான் வந்து உன்னை கூட்டிட்டு போறேன்… என்று விட்டு அவள் கிளம்பப் போக நிரஞ்சனும் அர்ஜுனும் வந்து சேர்ந்தார்கள்…

 

 

சஞ்சு அவளிடம் தலையசைத்து கிளம்ப அர்ஜுனோ “என்னங்க சஞ்சனா எங்க கிளம்பிட்டீங்க… வாங்க… வாங்க… உட்காருங்க… என்று அவன் கூற அவளோ நிரஞ்சனை பார்த்தாள்….

அத்தியாயம் –16

 

 

“அவனை என்ன பார்க்கறீங்க… அதெல்லாம் அவனுக்கு நீங்க இங்க இருக்கறது சந்தோசமா தான் இருக்கும்… ஆனா அதெல்லாம் அவன் வெளிய காமிச்சுக்க மாட்டான்…

 

 

“நீங்க சொல்ற மாதிரி அவன் காலையில் ஆபீஸ் கிளம்பும் போது கஞ்சி தொட்டிக்குள்ள விழுந்து எழுந்து தான் வருவான்… என்று அர்ஜுன் கூற அம்பிகா எல்லோரையும் புரியாத ஒரு பார்வை பார்த்தாள்.

 

 

நிரஞ்சனோ ‘டேய் மடையா சஞ்சுவை சாந்தப்படுத்துற மாதிரி பேசச் சொன்னா… நான் எழுதி கொடுக்காத டயலாக் எல்லாம் பேசிட்டு இருக்கானே… இவனை எப்படி ஸ்டாப் பண்ணுறது…

 

 

“அர்ஜுன் போதும் நாம வந்த வேலையை கவனிப்போம்… என்று கூற மீண்டும் சஞ்சுவின் முகம் சுருங்கியது. ‘ஐயோ இவ வேற முகம் சுளிக்கிறாளே என்று நினைத்தவன் “வாங்க அப்படி உட்கார்ந்து பேசுவோம்… என்றான்.

 

 

சஞ்சுவோ அங்கு அமராமல் நின்றுக் கொண்டேயிருக்க அவள் கையை பிடித்து அவனருகே அமர வைத்தான் நிரஞ்சன். அவள் மனம் இன்னமும் சமாதானமடையாமலே இருந்தது. அவன் மேல் இருந்த வருத்தம் அப்படியே இருந்தாலும் அவன் அருகாமையில் நிம்மதி வந்தது.

 

 

நிரஞ்சன் அவளை யோசிக்க விடாது பேச ஆரம்பித்தான். “அர்ஜுன் நான் போன்ல சொன்னேன்ல அது இவங்க தான்… இவங்க பேரு அம்பிகா…

 

 

“அடடா நீங்க தான் அம்பிகாவா… ராதா எப்படியிருக்காங்க??? என்றதும் மற்ற மூவரும் குழப்பமான பார்வை பார்த்தனர்.

 

 

“ராதாவா… யாரு அவங்க

 

“என்னங்க நீங்க அம்பிகான்னா உங்க தங்கை ராதா தானே… அவங்க எப்படியிருக்காங்க… என்றதும் அம்பிகாவுக்கு சுருசுருவென்று வந்தது, “நீங்க கூட தான் அர்ஜுன்… அதுக்காக நீங்க ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகிடுவீங்களா???

 

 

“ஹேய் சூப்பருங்க… எப்படி கண்டுபிடிச்சீங்க… என்னை எல்லாருமே அப்படி தான் சொல்லுவாங்க என்னடா நிரன் நான் சொன்னது சரி தானே… என்று அவன் நிரஞ்சனை பார்க்க அவனோ இவனை முறைத்துக் கொண்டிருந்தான்.

 

 

“யாரு சார் இவரு… லூசு மாதிரி பேசுறாரு… என்று சொல்லியே விட்டாள் நிரஞ்சனிடம். ‘இது உனக்கு தேவையா என்பது போல் நிரஞ்சன் பார்க்க அர்ஜுன் அசடு வழிந்தான்.

 

 

“சாரி அம்பிகா இவனும் நானும் ஒண்ணா தான் வேலை பார்க்கறோம்… என்னோட ஆபரேஷன் டீம்ல தான் இவனும் இருக்கான்… எப்பவும் விளையாட்டா பேசுறது தான் இவன் வேலை…

 

 

“நீங்க இவனை விடுங்க வந்த விஷயத்தை சொல்லுங்க… என்றான்.

 

 

“கான்ஸ்டபிளா சார்??? என்று அம்பிகா கேட்கவும் சஞ்சுவும் நிரஞ்சனும் வாய்விட்டு சிரிக்க அர்ஜுனின் நிலைமை பரிதாபமாக இருந்தது.

 

 

“ஹேய் அம்பிகா அவரும் ஐபிஎஸ் ஆபீசர் தான்… நீ வேற… என்று சஞ்சு கூற அம்பிகாவின் முகம் கலவரத்தை சுமந்தது. அவள் கலக்கமாக அர்ஜுனை பார்க்க அவனோ “மன்னிச்சுட்டேன்… மன்னிச்சுட்டேன் நீங்க வந்த விஷயத்தை ஆரம்பிங்க… என்று கூற அம்பிகாவுக்கும் சிரிப்பு வந்தது.

 

 

“சார் அந்த நிகிதாவோட செயல் எதுவுமே சரியா இல்லை… என்று அவள் ஆரம்பிக்க அர்ஜுனோ இடையிட்டு “என்ன சரியில்லை ஒழுங்கா நடக்க மாட்டேங்குறாளா… நான் அவகிட்ட சொல்லி வைக்கிறேன்… சரியா நடக்க சொல்றேன்… என்றவனை முறைத்தாள் அம்பிகா.

“சார் இவரை கொஞ்சம் வாயை மூடிட்டு இருக்க சொல்லுங்க… இல்லைன்னா நான் கிளம்பறேன் சார்… என்று நிரஞ்சனை பார்த்து அவள் கூற இப்போது நிரஞ்சன் திரும்பி அர்ஜுனை முறைத்தான்.

 

 

‘எல்லா பக்கிகளும் சேர்ந்து என்னையே முறைக்குதுங்க… இவனுக்கென்ன ஜாலியா ஒரு பொண்ணை திட்டி திட்டியே கரெக்ட் பண்ணிட்டான்… நான் சிரிக்க வைச்சு கரெக்ட் பண்ணனும்னு நினைச்சது ஒரு தப்பா… என்று மனதிற்குள் பேசிக் கொண்டான் அர்ஜுன்.

 

 

“சரி சரி நான் வாயை திறக்கலை… என்றவன் அவள் என்ன கூறப் போகிறாள் என்று அவளையே பார்த்தான். ‘அழகா தான் இருக்கா, ஆனா அர்ஜுன் உனக்கு தான் எதுவுமே செட் ஆகமாட்டேங்குதே… என்று பெருமூச்சு விட்டுக் கொண்டான்.

 

 

அம்பிகா அவள் கூற வந்ததை தொடர்ந்தாள். “அன்னைக்கு ஒரு இடத்துல கலவரம்ன்னு நாங்க போய் அதை கவர் பண்ண போனோம். நிகிதா மேடம் என்னன்னா கலவரம் பண்ண வந்தவங்ககிட்ட போய் இப்போதைக்கு நிறுத்தாதீங்க…

 

 

“கலவரம் இன்னும் பெரிசாகணும், அப்போ தான் இந்த பெரிய கலவரத்துல நாம செய்யறது வெளிய தெரியாதுன்னு சொல்லிட்டு இருந்தாங்க…

 

 

“ஆமா அவங்க பேசினதை நீங்க எப்படி கேட்டீங்க… என்று இடைமறித்தான் அர்ஜுன்.

 

 

“நான் எதேச்சையா தான் அவங்க பேசினதை கேட்டேன்… என்னோட மைக் அவங்க பேக்ல இருந்துச்சு அதை எடுக்காம நான் வேற ஒருத்தர்கிட்ட பேசிட்டு இருந்தேன். நான் ஞாபகம் வந்து அவங்ககிட்ட கேட்க போனப்போ தான் அவங்க பேசினது எல்லாம் கேட்டேன்…

 

 

“இதை தவிர்த்து இன்னொரு விஷயம் சார்… ஆக்சுவலா எனக்கு பதில் சஞ்சனா தான் வந்திருக்க வேண்டியது… அவங்களை வரவிடாம செஞ்சதும் அவங்க தான்…

இந்த விஷயம் நிரஞ்சனுக்கு புதிது அவன் திரும்பி சஞ்சுவை பார்க்க அவளோ நிச்சலனமாக இருந்தாள். குழம்பியவனாக “அம்பிகா நீங்க என்ன சொல்றீங்க புரியற மாதிரி சொல்லுங்க… என்றான் அவன்.

 

 

“சார் சஞ்சனாவை அவங்களுக்கு முன்னாடியே கொஞ்சம் தெரிஞ்சிருக்கு… சஞ்சனா எல்லாத்தையும் ரொம்பவும் ஷார்ப்பா கவனிப்பாங்க… இதை அவங்க முதல் நாள் எங்க ஆபீஸ்க்கு வரும் போது பார்த்திருக்காங்க…

 

 

“அதுக்கு அப்புறம் அவங்க தான் எங்க சார்கிட்ட பேசி என்னை அனுப்ப சொல்லி இருக்காங்க… நிகிதாவை பொறுத்தவரை நான் தத்தி மாதிரி தெரிஞ்சுருக்கேன்…

 

 

“அதுவும்மில்லாம எனக்கு ஹிந்தி தெரியுமான்னு அவங்க கேட்டப்ப, நான் சும்மா விளையாட்டுக்காக தெரியாதுன்னு சொன்னேன்… அதுவும் ரொம்ப நல்லதா போச்சு அந்த நிகிதா பத்தி நான் தெரிஞ்சுக்க…

 

 

“இந்த விஷயத்தை அவங்க போன்ல யாருகிட்டயோ சொல்லிட்டு இருக்கும் போது நான் கேட்டுட்டேன்… அவங்க ஏதோ ப்ளான் பண்ணுறாங்க, இந்த ஊர்ல பெருசா ஏதோ பிரச்சனை நடக்கப் போகுது…

 

 

“நிகிதா பேசினதை வைச்சு பார்க்கும் போது அவ… அவங்க… ஏதோ தீவிரவாத கூட்டத்துக்கு சப்போர்ட் பண்றவங்க மாதிரி தெரியுது சார்… என்று கூறி முடித்தாள்.

 

 

‘இவளா தத்தி மாதிரின்னு அந்த நிகிதா நினைச்சா… இவ செம தில்லாலங்கடியா இருப்பா போலருக்கே… என்று நினைத்துக் கொண்டிருந்த அர்ஜுன் நிரஞ்சனை பார்த்தான்.

 

 

“நிரன் எனக்கும் இவங்க சொல்றதுல உடன்பாடு இருக்கு… நீ ஊர்ல இல்லாத இந்த நாட்கள்ல எனக்கு கிடைச்ச தகவல்களும் அதை ஓரளவு உறுதிபடுத்துச்சு…

 

 

“முழுசா தெரிஞ்சுக்காம உன்கிட்ட சொல்ல வேணாம்ன்னு பார்த்தேன்… அம்பிகா சொல்றதை பார்த்தா எனக்கும் நிக்கி மேல சந்தேகமா தான் இருக்கு… நீ கொஞ்சம் கவனமா இரு… என்று அவன் சேர்த்து சொல்ல சஞ்சுவின் முகம் கலவரமானது.

 

 

நிரஞ்சன் சற்றே யோசனையாக இருந்தவன் அம்பிகாவை பார்த்தான். “அம்பிகா நீங்க இதை பத்தி யாருகிட்டயும் இப்போதைக்கு சொல்ல வேண்டாம்… நீங்க தொடர்ந்து நிக்கியை கண்காணிங்க…

 

 

“என்ன தகவல் கிடைச்சாலும் எனக்கோ இல்லை அர்ஜுனுக்கோ சொல்லுங்க

 

 

“சரி சார்… என்று தலையாட்டினாள் அவள். நிரஞ்சன் அர்ஜுனிடம் திரும்பி “அர்ஜுன் அனேகமா நாம வந்த வேலை முடியப் போகுதுன்னு நினைக்கிறேன்… இதை பத்தி நான் உன்கிட்ட அப்புறம் பேசறேன் என்று சைகை செய்ய அர்ஜுனும் புரிந்ததாக தலையசைத்தான்.

 

 

“சரி கிளம்புவோம்… என்று எழுந்தான் நிரஞ்சன். “அடப்பாவி… இப்படி ஹோட்டல்க்கு கூட்டிட்டு வந்து ஒண்ணுமே வாங்கிக் கொடுக்காம திருப்பி அனுப்பலாம்ன்னு பார்க்கறீயா??

 

 

“பேசாம உட்காருடா… நான் சாப்பிட ஏதாச்சும் வாங்கிட்டு வரேன்… என்றவன் ஆவென்று வாயை திறந்தவாறு அமர்ந்திருந்த அம்பிகாவிடம் திரும்பி “ஏங்க அம்பிகா இப்படி ஆன்னு வாயை திறந்து என்ன பார்த்திட்டு இருக்கீங்க…

 

 

“வாங்க நாம போய் சாப்பிட வாங்கிட்டு வருவோம்… அவங்க பேசிட்டு இருப்பாங்க… என்று சொல்லி அவளை அழைத்துக் கொண்டு போனான். அவளும் திரும்பி பார்த்துக்கொண்டே அவனுடன் எழுந்து சென்றாள்.

 

 

அர்ஜுனுடன் சென்ற அம்பிகாவோ “என்னை எதுக்கு வர சொன்னீங்க… நான் பாட்டுக்கு கிளம்பியிருப்பேன்ல… என்று அவனை பார்த்து முறைத்தாள்.

 

 

“ஏங்க உங்களுக்கு விவரமே பத்தலைங்க… அவங்க ரெண்டு பேரும் ஆளுக்கொரு பக்கமா முகத்தை திருப்பிட்டு உட்கார்ந்திருக்காங்க…. அவங்களை பேச வைக்க தான் நான் உங்களுக்கு ஜாடை காட்டி வர சொன்னேன்….

 

 

“நீங்க என்னடான்னா அதுக்கு போய் கோவிச்சுக்கறீங்களே… என்று அவன் கூற அம்பிகா பேய் முழி முழித்தாள். “என்னங்க நான் பாட்டுக்கு சொல்லிட்டு இருக்கேன்… நீங்க என்ன முழிக்கிறீங்க…

 

 

“இல்லை அவ.. அவங்க எதுக்கு பேசிக்கணும்… சஞ்சனாவை நான் தானே கூட்டிட்டு வந்தேன். இங்க என்ன நடக்குது எனக்கு புரியலை… என்றாள் அம்பிகா.

 

 

“நீங்க சஞ்சனாவோட தோழி தானே… என்று அர்ஜுன் கேட்க “இல்லை… எனக்கு அவங்களை கொஞ்ச நாளா தான் தெரியும்… அவங்க இந்த ஊருக்கு ஒரு வேலையா வந்திருக்காங்க… இங்க கொஞ்ச நாள் தானே இருப்பாங்க… ஒண்ணா வேலை செய்யறோம், நல்லா பேசுவாங்க… அந்த அளவுக்கு தான் எனக்கு அவங்களை தெரியும்…

 

 

“நல்லா தெரிஞ்சு வைச்சு இருக்கீங்க போங்க… அவங்க ரெண்டு பேருக்கும் போன வாரம் நிச்சயதார்த்தம் முடிஞ்சிருச்சு… ஏதோ சின்ன ஊடல் அவங்களுக்குள்ள அதான் அவங்க பேசட்டும்ன்னு உங்களை நான் தள்ளிட்டு வந்துட்டேன்

 

 

“என்ன முறைக்கறீங்க…ஓ!! தள்ளிட்டு வந்துட்டேன் சொன்னதுக்கா… அது சென்னை பாஷை அதெல்லாம் மனசுல வைச்சுக்காதீங்க… நான் மனசுல நினைக்கறதை அப்படியே பேசிடுவேன்… தப்பா எடுத்துக்காதீங்க…

 

 

“நானும் அப்படி தான்…

 

 

“சூப்பருங்க… நாம ரெண்டு பேருக்கும் இந்த விஷயத்துல நல்லா ஒத்து போகுது… என்று ஒரு மாதிரியாக அவளை பார்க்க அவளோ அவன் பார்வையில் சிரித்துவிட்டாள். ‘அப்பா சிரிச்சுட்டா… என்று நினைத்துக் கொண்டான்.

 

 

“அங்க பாருங்க ரெண்டு பெரும் பேசிக்கற மாதிரி தெரியலை… வாங்க நாம போய் பேச வைப்போம்… என்று அவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு போனாள் அம்பிகா.

 

 

அர்ஜுனோ அவள் பிடித்திருந்த கையை பார்த்தவன் ‘அர்ஜுன் நிஜமாவே நீ ஆக்சன் கிங் தான்டா… உனக்கு வொர்க் அவுட் ஆகிடுவா போலயே… என்று நினைத்துக் கொண்டே அவளை பார்த்து ஜொள்ளிக் கொண்டான்.

 

 

“என்ன பேசிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்… கண்ணும் கண்ணும் கலந்து உள்ளம் கொண்டாடுதேன்னு பாட்டு எதுவும் பாடறீங்களா… ஆனாலும் சஞ்சனா நீங்க உங்களுக்கு நிச்சயம் ஆனதை ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லிருக்கலாம்…

 

 

“சார் நீங்களும் தான் சொல்லியிருக்கலாம்… எங்களுக்கு ட்ரீட் எல்லாம் கிடையாதா சார்… என்று அம்பிகா வளவளக்க நிரஞ்சனோ திரும்பி அர்ஜுனை பார்த்தான். ‘நான் தான் சொன்னேன் என்று அவன் பதில் பார்வை பார்த்தான்.

 

 

“ட்ரீட் தானே அம்பிகா கொடுத்திடலாம்… உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க போய் வாங்கிட்டு வர்றேன் என்று எழுந்தவனை “சார் நீங்க உட்காருங்க நாங்க ரெண்டு பேரும் போய் பிடிச்சதை ஆர்டர் பண்ணிட்டு வந்திடறோம்… நீங்க பைசா கொடுத்திடுங்க…

 

 

“அப்போ நீங்க ரெண்டு பேரும் இவ்வளோ நேரம் அங்க போய் என்ன பண்ணிட்டு இருந்தீங்க… எதுவும் ஆர்டர் கொடுக்கவே இல்லையா…

 

 

“இவர் பேசிட்டே இருந்தார்… அதான்… என்று அம்பிகா சமாளிக்க நிரஞ்சன் அர்ஜுனை பார்த்தான். ‘இவன் ஒருத்தன் ஆனா ஊன்னா என்னையே பார்க்கறான். நான் என்ன இவன் சைட் அடிக்கிற பொண்ணா என்ன… என்று நினைத்துக் கொண்டான் அர்ஜுன்.

“அதான் சொல்லிட்டாங்கள்ள நீ வேற எதுக்கு அப்பப்போ என்னை பார்த்து லுக் விட்டு வைக்கிற… உன் ஆளு பக்கத்துல இருக்கு அவங்களை பார்த்து லுக் விடு… நான் என் ஆளை தள்ளிட்டு போறேன்… என்று நிரஞ்சனின் காதில் சொல்லிவிட்டு எழுந்தான் அவன்.

 

 

அவர்கள் இருவரும் சென்ற பின்னர் மீண்டும் இருவர் விழிகளும் பேச ஆரம்பிக்க, இப்போது நிரஞ்சனே அவன் மௌனத்தை கலைத்தான். “என் மேல இன்னமும் கோபமா சஞ்சு…

 

 

சஞ்சுவோ பதிலேதும் கூறாமல் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாள். “ப்ளீஸ் சஞ்சு ஏதாச்சும் பேசேன்… எப்பவும் நீ என்கூட சண்டை தானே போடுவ, ஆனா இப்ப என்னமோ பேசாம இருக்கே… மனசுக்கு கஷ்டமா இருக்கு சஞ்சு பேசு என்றான் அவன்.

 

 

“என்ன பேசணும்னு எதிர்பார்க்கறீங்க…

 

 

“கோபமா பேசு… சண்டை போடு…

 

 

“போட்டா மட்டும் என்னாகும்… இந்த விஷயத்துக்கு நான் சண்டை போட முடியுமா… எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு… என்னை விலக்கி வைச்சது நீங்க… விளக்கம் சொல்ல வேண்டியது நீங்க…

 

 

“நான் உங்ககிட்ட கேள்வி கேட்கணும்னு எப்படி எதிர்பார்க்கறீங்க சொல்லுங்க நிரு… என்று அவள் கூற அவன் மெளனமாக இருந்தான். “சரி நிரு… என்னோட தயக்கத்தை எல்லாம் விட்டு நானே கேட்கிறேன்…

 

 

“உங்களுக்கு என்ன பிரச்சனை, நேத்து ஏன் அப்படி நடந்துக்கிட்டீங்க… உங்களுக்கு ஒரு மூடு இருந்தா நல்லா இருப்பீங்க இல்லைன்னா போடி வெளியன்னு சொல்லுவீங்களா… சொல்லுங்க நிரு… உங்களுக்கு அப்படி என்ன என் மேல கோபம்

 

“சஞ்சு எனக்கு உன் மேல என்ன கோபம் இருக்க போகுது… என்னோட கோபம் உன் மேல இல்லை… அப்படி பார்க்காதே சஞ்சு, நிஜமாவே என் கோபம் உன் மேல இல்லை… என் மேல தான்…

 

 

“எங்க என்னோட கட்டுப்பாட்டை நான் இழந்திடுவேனோன்னு தான் எனக்கு பயம்… என்னோட கையாலாகாத்தனம் தான் உன் மேல கோபப்பட வைச்சுது… எங்க தப்பு பண்ணிடுவோம்ன்னு தோண ஆரம்பிச்சுது…

 

 

“அதனால தான் கோபப்பட்டு உன்னை வெளிய அனுப்பிட்டேன்… சாரிடா சஞ்சு… என்றவனின் குரலில் உண்மையிலேயே மன்னிப்பு இருந்ததை அவள் உணர்ந்தாள். மிகப்பெரிய அதிகாரியான அவன் தன்னிடம் மன்னிப்பு வேண்டுவது அவளுக்கு சங்கடமாக இருந்தது.

 

 

அவன் மனதில் அவன் தந்தை செய்த செயல் நெருடலை கொடுக்கிறது என்பதை அவன் சொல்லாமலே புரிந்து கொண்டவளாக பேச்சை மாற்றினாள். “அதெல்லாம் போகட்டும் விடுங்க… நான் ஆசையா சமைச்சதை சாப்பிட்டீங்களா??? இல்லையா???

 

 

“ஓயெஸ் சாப்பிட்டேனே… உன்னை தான் சாப்பிட விடாம பண்ணிட்டேன்… அதான் கஷ்டமா போச்சு… சாப்பாடு வேஸ்ட் ஆகாம பிரிட்ஜ்ல வைச்சு காலையில சூடு பண்ணி சாப்பிட்டேன்… அவ்வளோ டேஸ்ட்… என்று சிலாகித்து சொன்னான் அவன்.

 

 

“அய்யோ அதையே காலையிலும் சாப்பிட்டீங்களா… எதுக்குங்க… நான் இன்னைக்கு நைட் உங்களுக்கு என் கையால டின்னர் செஞ்சு தரவா??? என்று ஆர்வமாக கேட்டாள்.

 

 

“அதெல்லாம் வேண்டாம் தாயே… இன்னும் ஒரு இருபத்தியெட்டு நாளு தானே இருக்கு… அது வரைக்கும் எனக்கு என்ன சமைக்க வருமோ அதை சாப்பிடுறேன்… இல்லைன்னா வெளிய சாப்பிட்டுக்கறேன்…

 

 

இருவரும் சமாதானமாகியிருக்க அர்ஜுனும் அம்பிகாவும் உணவு தட்டுகளுடன் வர எல்லோருமாக பேசிக் கொண்டே சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினர். கிளம்பும்முன் சஞ்சுவிடம் தனியே வந்தான் நிரஞ்சன்.

 

 

“சஞ்சு நான் கொஞ்சம் முக்கியமான வேலையா இருப்பேன் இன்னும் கொஞ்ச நாளைக்கு… அநேகமா நாளைக்கோ இல்லை நாளை மறுநாளைக்கோ நான் சென்னை போக வேண்டி இருக்கும்…

 

 

“சில பல பிரச்சனைகள் இருக்கு, அதெல்லாம் முடிக்க வேண்டி கொஞ்சம் பிஸியாவே இருப்பேன்… நீ என்னை தேடாம இருக்கணும்… முக்கியமா அந்த வீட்டுக்கு நீ போகக் கூடாது…

 

 

“என்னால் உன்கிட்ட சரியா பேசக் கூட முடியாம போகும்…. அதுக்காக வருத்தப்படாதே… என்னோட வேலை அப்படி, எல்லாம் சரியா முடிஞ்சதும் தான் என்னால நிம்மதியா இருக்க முடியும்…

 

 

“அப்புறம் இந்த பொண்ணு அம்பிகாவை பார்த்துக்கோ… ரொம்ப துறுதுறுன்னு இருக்கா?? தேவையில்லாத பேச்சு கொடுத்து எதுலயும் மாட்டிக்காம பார்த்துக்கோ??? என்னமோ அர்ஜுனுக்கு அவளை பிடிச்ச மாதிரி தெரியுது…

 

 

“என்னது உங்க நண்பருக்கு அம்பிகாவை பிடிச்சிருக்கா???

 

 

“ஆமா அப்படி தான் தெரியுது… பையன் இவ்வளவு ஆர்வமா பேசிட்டு இருக்க மாட்டான், அவன் பேசுறதை பார்த்தா அப்படி தான் தெரியுது… கொஞ்சம் அந்த பொண்ணுகிட்ட அடக்கி வேற வாசிக்கிறானே…

 

 

“ஓ… சரிங்க நீங்க கவலைப்படாம உங்க வேலையை பாருங்க… என்னைப் பற்றிய கவலை உங்களுக்கு வேணாம்… நீங்க எடுத்துக்கற காரியம் நீங்க நினைச்ச மாதிரியே வெற்றியா அமையும்…. பத்திரமா போயிட்டு வாங்க…

 

 

“தேங்க்ஸ்டா சஞ்சு… என்று அவள் வலது உள்ளங்கையை எடுத்து தன் கைகளுக்குள் அடக்கிக் கொண்டு சிறிது நேரம் ஆறுதல் தேடினான். அவன் தேடிய நிம்மதி அதில் கிடைத்தது போல் ஒரு ஆழ்ந்த மூச்சுடன் அவள் கையை விடுவித்துவிட்டு அவளுக்கு விடையளித்தான்.

சஞ்சனா அம்பிகாவை வண்டியில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து பறந்தாள். யாருமற்ற இடம் என்று அவர்கள் நினைத்திருக்க அவர்களை தொடர்ந்த அந்த விழிகள் யாருக்கோ கைப்பேசியில் விவரம் கூறிவிட்டு போனை வைத்தது.

 

 

இதை நிரஞ்சன் நன்றாகவே கண்டு கொண்டான். மேலும் ஐந்து நிமிடம் நின்று அர்ஜுனிடம் பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் அவன். வண்டியில் செல்லும் போது சஞ்சனா அம்பிகாவை எச்சரிக்கையாக இருக்குமாறு கூறினாள்.

 

 

“ஏன் சஞ்சனா அப்படி சொல்றீங்க… அந்த நிகிதா என்ன அவ்வளவு மோசமானவளா?? நீங்க ஏன் இப்படி சொல்றீங்க…

 

 

“நீ அவளை தப்பா எடை போடாதே அம்பிகா… அவக்கிட்ட ஏதோ தப்பிருக்குன்னு அவளை பார்த்த மாத்திரமே என் மனசுக்கு தோணிடுச்சு… அது இப்போ நீ சொன்ன விஷயத்துனால என்னோட கணிப்பு உண்மைன்னு தெரிஞ்சுது….

 

 

“அதே போல நிகிதா உன்னை கண்டுக்கலைன்னு நீ நினைக்கிற, ஆனா அவ லேசுபட்டவள் இல்லை… கண்டிப்பா உன்னை அவளுக்கு தெரிஞ்சிருக்கும்… இதுவரைக்கும் தெரியலன்னா கண்டிப்பா தெரிஞ்சுக்குவா…

 

 

“அவகிட்ட உனக்கு ஹிந்தி தெரியாதுன்னு நீ சொல்லியிருக்க, எனக்கென்னமோ இந்நேரம் அவ அதையும் கண்டுபிடிச்சிருப்பான்னு தோணுது… சோ நீ எப்பவும் கவனமா இருக்கறது தான் நல்லது அம்பிகா…

 

 

“எந்த பிரச்சனைன்னாலும் எந்த நேரமானாலும் எனக்கு போன் பண்ண தயங்காதே… என்றவள் அவளை அவள் வீட்டில் இறக்கிவிட்டு தன் வீடு நோக்கி சென்றாள்.

 

 

‘கண்டிப்பா இவங்க ரொம்ப ஷார்ப் தான்… நிகிதா சரியா தான் கணிச்சு சொல்லியிருக்கா… அதே மாதிரி இவங்க நிகிதா பத்தி சொல்றதும் சரியா தான் இருக்கும்ன்னு தோணுது… பார்ப்போம்… இனி கொஞ்சம் கவனமாவே இருப்போம் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள் அம்பிகா.

 

 

நிரஞ்சன் சஞ்சனாவிடம் சொன்னது போல் வேலை வேலை என்றே அலைந்து கொண்டிருந்தான். இரண்டு நாட்கள் கழித்து சென்னைக்கு முக்கிய வேலையாக செல்லப் போவதாகவும் வருவதற்கு இரண்டு மூன்று நாட்கள் ஆகும் என்று கூறிவிட்டே கிளம்பியிருந்தான்.

 

 

அவன் கிளம்புவதற்கு முன் சில முக்கிய தகவல்களையும் தடயங்களையும் சேகரித்து கிளம்பியவன் அதை பற்றிய அவன் கணிப்புகளை கோர்வையாக்கி கோப்பு ஒன்றை தயாரித்திருந்தான்.

 

 

சஞ்சனாவும் இது போன்ற ஒரு தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தாள். நிரஞ்சன் இல்லாத சமயத்தில் தான் அவள் மீண்டும் அந்த தோப்பு வீட்டிற்கு போக முடிவு செய்திருந்தாள்

 

 

அதற்கு முன் அவள் செண்பகம் பிறந்த ஊருக்கு சென்று விசாரிக்க அங்கு அவளுக்கு தேவையான தகவல் ஏதும் பெரிதாக கிடைக்காததில் நிரஞ்சனின் தாத்தா பாட்டி இருந்த ஊருக்கு சென்றாள்.

 

 

அங்கு தான் அவள் அவர்கள் வீட்டில் வேலை செய்த பொன்னனை சந்தித்தாள். அவரிடம் பேசி சில பல தகவல்களை திரட்டினாள். அவரிடம் “ஏங்க நீங்க நம்புறீங்களா செண்பகம் யார் கூடயாச்சும் ஓடிப்போயிருப்பாங்கன்னு

 

 

“இல்லைம்மா எனக்கு அப்படி தோணலை… மாரி இருக்கும் போது நான் அப்பப்போ அந்த வீட்டுக்கு மாரியை கூப்பிடவும் தோட்ட வேலை செய்யவும் அந்த பக்கம் போயிருக்கேன்…

 

 

“அந்த பொண்ணு எப்பவும் ஒரு மரியாதையா தான் பார்க்கும்… குனிஞ்ச தலை நிமிராது… ரொம்பவும் மரியாதையான பொண்ணு… என்னென்னமோ நடந்து போச்சு…என்ன செய்ய…

 

 

“உங்க முதலாளி வீட்டில எல்லாரும் எப்படிங்க… அவங்க பையன் எல்லாரும் ரொம்ப நல்ல மாதிரியா… என்று கொக்கி போட்டாள்.

“அய்யாவும் அம்மாவும் ரொம்ப ரொம்ப நல்ல மாதிரியான ஆளுங்க… நாகு அய்யா பத்தி தான் அரசல்புரசலா தப்பான சேதி எல்லாம் காதுல விழுந்துச்சு… ஆனா யாரும் எதுவும் நேர்ல பார்க்கலை…

 

 

“அவர் வீட்டில எல்லார்கிட்டயும் ரொம்ப மரியாதையா தான் நடந்துகிட்டார்… அய்யாவும் அவங்க கூட்டாளிங்களும் தான் மாரி இறந்து போன விஷயமும் அந்த புள்ள போன விஷயமும் கேள்விப்பட்டு ஊருக்குள்ள வந்து சொன்னாங்க…

 

 

“என்னமோ எது உண்மைன்னு இன்னைக்கு வரைக்கும் புரியாத புதிரா தான் இருக்கு… ஆமா நீங்க இதெல்லாம் விசாரிக்கறீங்களே என்ன விஷயம்…

 

 

“ஒண்ணுமில்லைங்க நான் செண்பகத்துக்கு உறவு தாங்க… அவங்களை பத்தி எங்க வீட்டில சொன்னதை நானும் நம்பலைங்க அதான் உண்மையை கண்டுபிடிக்க முடியுமான்னு பார்த்தேன்… நீங்க சொல்றதை பார்க்கும் போது எனக்கும் புரியாத புதிரா தான் இருக்கு…

 

 

“ஆனா ஒண்ணும்மா அந்த புள்ளையை நெறைய பேரு அந்த தோப்பு வீட்டு பக்கம் பார்த்தா சொல்றாங்க… அதுவும் ஆவியா…

 

 

“சிலர் ஓடி போன அந்த பிள்ளையை மாரி தான் ஆவியா போய் கொன்னுட்டான்னும் அதுனால அவளும் அங்க தான் பேயா இருக்கறதாவும் பேசிக்கறாங்க…

 

 

“இன்னும் சிலரோ அந்த பொண்ணு மேல பொய் பழி போட்டுட்டதாவும் அது பொறுக்க முடியாம அந்த பொண்ணு தற்கொலை பண்ணி செத்து போச்சும்ன்னு அதுனால தான் ஆவியா அந்த வீட்டையே சுத்தி வருதுன்னும் சொல்றாங்க…

 

 

“என்னமோ நான் எத்தனையோ முறை அங்க போயிருக்கேன்… ஆனா நான் எதுவும் கண்ணால கண்டதில்லை… என்றார். “ரொம்ப நன்றிங்க அய்யா… என்றவள் அவரிடம் விடைபெற்று வெளியே வந்தாள்.

 

 

அப்போது அவள் காதில் ஒரு அமானுஷ்ய குரல் “உனக்கு இது தேவையில்லாத ஆராய்ச்சிஎன்றது. “தேவையானதுன்னு நான் நினைக்கிறேன்… என்று அவள் வாய்விட்டே முணுமுணுப்பது போல் கூறினாள்.

 

____________________

 

 

அழகான இளம் மாலை பொழுது சூரியன் தன் கிரணங்களை மெல்ல மெல்ல மறைத்துக் கொண்டு கிழீறங்கி கொண்டிருந்தான். மேகநாதன் அவர் வீட்டு பலகணியில் நின்று அந்த இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தார்.

 

 

இப்போ இந்தியாவில் விடிகாலை பொழுதா இருக்கும்ல என்று எப்போதும் போல் அப்போதும் நினைத்துக் கொண்டார். அவர் சொந்த ஊரான காரைக்குடியில் இருந்து அவர் இந்த ஊருக்கு வந்து வருடங்கள் பல கடந்து போனது.

 

 

கடைசியாக அந்த தோப்பு வீட்டு சம்பவத்திற்கு பிறகு சொந்த ஊரான காரைக்குடிக்கு சென்றவர் அவர் தந்தை வாங்கி வைத்திருந்த வெளிநாட்டு வேலைக்கு செல்ல இரண்டொரு நாளிலேயே அங்கிருந்து கிளம்பி விட்டார்.

 

 

தந்தையும் தாயும் இறப்பிற்கு கூட வராமலே இருந்துவிட்டவர், உடன்பிறந்தோரை வைத்து அவர்கள் காரியத்தை பார்த்துக் கொண்டார்.

 

 

வெளிநாடு வாழ் இந்திய குடும்பத்து பெண்ணை மணந்து அங்கேயே தங்கிவிட்டார். சென்ற மாதம் உடன் பிறந்த தம்பியும் ஒரு விபத்தில் இறந்து போயிருக்க அதற்கும் கூட இந்தியாவிற்கு வராமல் இருந்து கொண்டார்.

 

 

இப்போது தான் சொத்து பற்றி பேச வேண்டும் கட்டாயம் மேகநாதன் வந்தாக வேண்டும் என்று அவர்களின் குடும்ப வக்கீல் கூறிவிட வேறு வழியில்லாமல் இன்னும் ஓரிரு நாட்களில் ஊருக்கு கிளம்ப ஆயத்தமானார் அவர்.

அந்த சொத்து அவருக்கு வேண்டாம் என்று ஏற்கனவே அவர் கூறியிருந்தாலும் அதை உறுதி படுத்தும் பத்திரம் ஏதும் போட்டிராததால் அவர் ஊருக்கு செல்ல வேண்டியதாய் இருந்தது.

 

 

கண்ணை மூடி நடந்த நிகழ்வுகளை அசை போட யாரோ அவர் கழுத்தை இறுக்கி பிடிப்பது போல் தோன்றியது… மூச்சு விட முடியாமல் அவர் திணற நாக்கு வெளியே தள்ளிக் கொண்டிருந்தது.

 

 

மூடியிருந்த கண்கள் இன்னமும் திறக்கப்படாமலே இருக்க அவரின் முனகல் கேட்டு அவர் மனைவி அருகில் வந்தார். “என்னாச்சுங்க… என்ற குரலில்  படீரென்று கண்கள் திறந்தவர் திகைத்தார்.

 

 

இதென்ன என்றும் இல்லாமல் இன்று இது போல் ஒரு சிந்தனை… அதுவும் விழித்துக் கொண்டே கனவா… இல்லையே உண்மையாக நடந்தது போல் இருந்ததே… இதோ எனக்கு தொண்டை கூட வலிக்கிறதே…

 

 

நாக்கு கூட உலர்ந்து போய்விட்டதே… மூச்சு கூட இப்போது தானே சீராக விட முடிகிறது… எல்லாம் என் கற்பனையாக இருக்குமோ… என்று நினைத்தவர் அதற்கு பிறகு அந்த நிகழ்வை அசை போட விரும்பவில்லை…

 

 

அவர் ஊருக்கு கிளம்பும் நாளும் வந்தது… மனைவியையும் உடன் அழைத்துக் கொண்டே ஊருக்கு கிளம்பினர். சென்னை விமான நிலையத்திற்கு அவர் வந்து இறங்கும் போது நள்ளிரவு இரண்டு மணியானது…

 

 

செக்கிங் எல்லாம் முடிந்து வெளியே வந்தவர் டாக்ஸி பிடித்து ராயல் மெரிடியனுக்கு சென்றார். அங்கு ஏற்கனவே அவர் பதிவு செய்து வைத்திருந்த அறை தயாராய் இருக்க அடையாள அட்டை காண்பித்து உறுதி செய்துக் கொண்டு அவர்கள் அறைக்கு சென்றனர்.

 

 

நிரஞ்சன் சென்னை வந்திறங்கியதுமே வீட்டிற்கு எப்படி போவது தந்தை முகத்தில் எப்படி பார்ப்பது என்ற எண்ணமே அவனுக்குள் வட்டமிட்டது… எப்படியும் வீட்டிற்கு போயே ஆகவேண்டும் என்று தோன்ற அவர்கள் வீட்டிற்கு சென்றான்.

 

 

அவன் தந்தை அவனிடம் இயல்பாக பேச முயன்ற போது அவனால் அவரிடம் இயல்பாக நடந்து கொள்ள முடியவில்லை. கண்முன்னே அவர் செய்த துரோகம் மட்டுமே வந்து போனது. குளித்து உடைமாற்றி சாப்பிட்டு விட்டு வேகமாக வீட்டிலிருந்து கிளம்பினான்.

 

 

நிரஞ்சன் சென்னை வந்ததும் முதல் வேலையாக கமிஷனரை தனியே சந்தித்து பேச அவகாசம் வாங்கியிருந்தான். அவரிடம் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் மதியத்தை தொட்டிருக்க இருவரும் கலந்து பேசி உள்துறை அமைச்சரை பார்ப்பது என்று முடிவு செய்து கொண்டனர்.

 

 

அதன்படி அன்று மாலை அவர்கள் உள்துறை அமைச்சரை ஒரு ஹோட்டலில் சந்தித்து கலந்துரையாடினர். கோப்புகள் சிலவற்றை தயார் செய்து கையொப்பம் வாங்கிக் கொண்டு அவன் வெளியே வரும் போது அதிகாலை பொழுதாகியிருந்தது.

 

 

அவன் நல்ல நேரமா இல்லை யதேச்சையாக நடந்ததோ தெரியவில்லை, அங்கு அவன் மேகநாதனை சந்தித்தான். முதலில் அவரை கண்டதும் எங்கோ பார்த்தது போல் மட்டுமே தோன்ற கண்ணை மூடி யோசிக்க சட்டென்று பலவேசத்தின் போட்டோவில் இருந்தவர் என்று மட்டும் ஞாபகம் வந்தது அவனுக்கு.

 

 

அவன் கைபேசியில் அந்த புகைப்படத்தை படம் பிடித்திருந்தான். அதை எடுத்து பார்க்க அவனுக்கு புரிந்து போனது வந்திருப்பவர் மேகநாதன் என்று. அறையில் இருந்து வெளியில் வந்தவன் அவர் செல்லும் திசையை பார்த்துக் கொண்டான்.

 

 

அவன் வெளியில் இருந்து வந்த அறைக்கே மீண்டும் சென்றவன் மேலும் ஏதோ பேசிவிட்டு வெளியில் வந்து ரிசப்ஷனில் மேகநாதன் பற்றி விசாரித்துக் கொண்டான்…

 

 

அவன் தந்தையை எப்படியாவது அங்கு வரவைக்க வேண்டும் என்று எண்ணமிட்டுக் கொண்டவன், அதை பற்றி சிந்திக்க தொடங்கினான்…

 

 

 

Advertisement