Advertisement

அத்தியாயம் –11

 

 

நிரஞ்சன் அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியில் வந்தான். “சஞ்சு நீ ஏன் இப்படி இருக்க?? என்றான் குரலில் மெலிதான கோபத்துடன்.

 

 

“எப்படி இருக்கேன்னு தெரிஞ்சுதானே உங்களுக்கு என்னை பிடிச்சுது… கொஞ்சம் பூசினா போல இருந்தா இப்படி தான் என்னை கிண்டல் பண்ணுவீங்களா??? என்று அவனை முறைத்தாள்.

 

 

திரும்பி அவளை நன்றாகவே முறைத்தான் நிரஞ்சன். “எதுக்கு முறைக்கிறீங்க??

 

 

“நான் என்ன கேட்குறேன் நீ என்ன பதில் சொல்லிட்டு இருக்க

 

 

“அப்போ நீங்க நான் குண்டுன்னு எல்லாம் சொல்ல வரலையா??? அப்போ என்ன கேட்க வந்தீங்க… புரியற மாதிரி கேளுங்க

 

 

“நீ நல்ல தைரியமான பொண்ணு தானே அப்புறம் ஏன் இப்படி பொசுக்கு பொசுக்குன்னு மயக்கம் போட்டு விழுந்து பீதியை கிளப்புற?? இதுல இவ பூசணிக்காய்ன்னு இவளே சொல்லிக்கிறா?? உன் வெயிட் எல்லாம் அன்னைக்கே செக் பண்ணியாச்சு… என்று நிறுத்தினான்.

 

 

“என்ன ஒரு ஐம்பத்தி எட்டுல இருந்து அறுபது கிலோ இருப்பே அவ்வளோ தானே என்றான் கூலாக.

 

 

“என்னது வெயிட் செக் பண்ணீங்களா?? எப்போ?? எங்க?? என்று விழித்தாள்.

 

 

“நீ முதல் முறை இங்க வந்தப்போ உன்னை வீட்டுல கொண்டு போய் விட்டேனே… அன்னைக்கு அம்மணிக்கு தூக்கமோ இல்லை மயக்கமோ… சரி போனா போகுதுன்னு நானே தூக்கிட்டு போய் உன் அறையில படுக்க வைச்சேன்

 

 

“இவ்வளோ நடந்திருக்கு இதை ஏன் என்கிட்ட சொல்லவேயில்லை…

 

 

“யார் சொல்லணும்???

 

 

“நீங்க தான்…

 

 

“அதான் இப்போ சொல்லிட்டேனே. சரி நீ அதை விடு, நான் கேட்டதுக்கு பதில் சொல்லு எதுக்கு இப்படி நீ கோழையா இருக்கே

 

 

“ஏன் பேசமாட்டீங்க நீங்க?? பேய்ன்னு ஒண்ணு இருக்கறது பார்க்காத வரைக்கும் எவனுமே நம்புறதில்லை. பார்த்தவனுக்கே தானே தெரியும் என்ன நடக்கும்ன்னு

 

 

“என்ன தெரியும் உனக்கு… ஒரு பழமொழி இருக்கு அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்ன்னு… உனக்கு இப்போ அந்த வியாதி தான் வந்திருக்கு

 

 

“சும்மா வெறுப்பேத்தாதீங்க நிரு… எனக்கு ஒண்ணும் வியாதி எல்லாம் இல்லை. அது பேய் தான், அது உங்க முன்னாடி வந்தா தான் உங்களுக்கு தெரியும் என்று சொல்லி முகம் வாடினாள்.

 

 

“அப்படி ஒண்ணு இருந்து அது என் முன்னாடி வந்தா நான் என்ன செய்வேன் தெரியுமா???

 

 

அவன் என்ன சொல்லப் போகிறான் என்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். “என்ன செய்வீங்க??? என்றாள். “ஹ்ம்ம் இதை மட்டும் நல்லா கேளு என்று முறைத்தான் அவளை.

 

 

“நீ ஒரு பயங்கரவாதிகிட்டயோ இல்லை ஒரு ரோடு சைடு ரோமியோகிட்டயோ மாட்டிக்கிட்டா உனக்காக நீ போராடுவியா… மாட்டியா… உன் கண்ணு முன்னாடி இருந்தா தான் போராட்டம் எல்லாமா

 

 

“உருவமில்லாத ஒண்ணுக்கு பயந்து அது அதை சொல்லிச்சி இதை சொல்லிச்சு உங்களுக்கு அப்படி ஆகும், இப்படி ஆகும்ன்னு பயப்படுறது எப்படி சரியா இருக்கும்

 

 

“எதையும் துணிஞ்சு எதிர்த்தா பயமே நம்மை கண்டு பயந்து போகும். உண்மையாவே அப்படி ஒண்ணு இருந்தா கூட உனக்கு பயமே வேண்டாம். இது இப்படி தான்னு எதிர்த்து நிமிர்ந்து நில்லு… இப்படி பயந்து செத்தா எல்லாம் ஆகிடுமா?? என்று அவளுக்கு கிளிப்பிள்ளை போல் சொன்னான்.

 

 

“நமக்கு எதிரியே நாம பயப்படுறது தான்… துணிஞ்சு நிக்கறதை விட்டு எப்போ பார்த்தாலும் மயக்கம் போட்டு விழுந்தா என்ன அர்த்தம் என்று முறைத்தான்.

 

 

சஞ்சுவுக்கு அவன் சொல்ல வருவது புரிந்தது. நிரஞ்சன் இவ்வளவு தூரம் இறங்கி பேசுவது அவளுக்காகவே என்று புரிய சந்தோசமாகவும் இருந்தது.

 

 

‘ச்சே… சஞ்சு நீ இவ்வளவு தானா… நிரு சொல்ற மாதிரி நீ ஏன் இப்படி இருக்க… உனக்கு ஏன் பயம் வருது… நீ பயப்படுறதுல லாஜிக் எதுவுமே இல்லையே… நிருவுக்கு யார் என்ன செய்ய முடியும்… என்று யோசித்துக் கொண்டே தலையில் தட்டிக் கொண்டாள்.

 

 

“நீ எதுக்கு தட்டிக்கிற நானே தட்டுறேன்… என்று சொல்லி அவள் நெத்தியை அவனே தட்டினான். “முறைக்காதே, உனக்கு அவ்வளவு மூளை எல்லாம் இல்லை…

 

 

“நீங்க சொன்னது ரொம்ப சரி தாங்க எனக்கு மூளை கொஞ்சம் கம்மி தான்… அதான் உங்களை செலக்ட் பண்ணிட்டேன்… என்று கிண்டலடித்தாள்.

 

 

“ஆமா ஒரு குடும்பத்துக்கு ஒருத்தர் தான் அறிவாளியா இருக்க முடியும். அதான் நானும் உனக்கு ஓகே சொல்லிட்டேன் என்று பதிலுக்கு திருப்பிக் கொடுத்தான் அவன்.

 

 

அவளிடம் பலவிதமாக போதனை செய்து அவளை வீட்டில் விட்டுவிட்டு கிளம்பினான்.

 

 

மாறன் அவனிடம் கொடுத்திருந்த கோப்புகளை புரட்டிக் கொண்டிருந்தான் நிரஞ்சன். இறந்தவர்களின் விபரங்களை இம்மிவிடாமல் படித்து முடித்தான். ஒரு குறிப்பேடை கையில் எடுத்தவன் வேகமாக எதையெதையோ கிறுக்கினான்.

 

 

எல்லாவற்றுக்கும் ஏதோ சம்மந்தம் இருப்பது போலவும் இல்லாதது போலவும் தோன்றியது. வேறு பக்கத்தை புரட்டி இறந்தவர்கள் வாரியாக பெயரை எழுதினான். அருணில் ஆரம்பித்து மயில்வாகனன் வரை எழுதினான்.

 

 

ஒருவருடன் மற்றவருக்கு ஏதாவது வகையில் தொடர்புண்டா என்பதை வரிசைப்படுத்தினான். இறந்து போன கார்மேகம் நிரஞ்சனின் தந்தைக்கு நெருங்கிய நண்பர்.

 

 

சிறுவயது முதலே ஒன்றாக வளர்ந்தவர்கள், ஆனால் இதற்கும் அருணுக்கும் என்ன சம்மந்தமாக இருக்க முடியும். தந்தையை பழிவாங்க அருணை கொன்றிருப்பார்களோ…

 

 

இல்லை தந்தைக்கும் அவர் நண்பருக்கும் பொதுப்படையான எதிரி யாரும் இருப்பார்களோ என்று ஆராய்ந்தான். இறந்தவர்கள் அத்தனை பேருக்கும் உள்ள ஒற்றுமை என்னவெனில் எல்லோருமே வெளியூரில் இருந்து ஊருக்கு வந்தவர்கள் மயில்வாகனன் மட்டும் வெளிநாட்டில்.

 

 

வந்த இடத்தில் இருந்து போனது மட்டும் ஒன்று போல் இருந்தது. இதில் இறந்த போன மயில்வாகனனுக்கு சொந்த ஊர் சிவகங்கையை அடுத்த ஒரு சிறிய கிராமம்.

 

 

ஒரு மெல்லிய கண்ணுக்கு தெரியாத முடிச்சொன்று எல்லாவற்றையும் இணைப்பதாக தோன்றியது அவனுக்கு. எங்கு தொடங்குவது என்று யோசித்தவனின் எண்ணம் ஆரம்பித்த இடத்திற்கே வந்தது.

 

 

ஒரு முடிவெடுத்தவனாக கணவனின் இறப்பிற்கு வந்த மயில்வாகனனின் மனைவி மாலதியை சந்திக்க முடிவெடுத்தான். அவரை பற்றிய விபரங்களை ஒரு முறை எடுத்து பார்த்துக் கொண்டவன் முகவரியை குறித்துக் கொண்டு அலுவலகத்தில் இருந்து கிளம்பினான்.

 

 

வெளியில் வந்து சஞ்சுவுக்கு அழைத்தான். “சொல்லுங்க என்றாள் அவள் எதிர்முனையில். “எங்க இருக்க சஞ்சு??? என்றவனிடம் “ஒரு வேலையா வெளிய வந்திருக்கேன். இப்போ தான் முடிஞ்சது என்றாள் மறுமொழியாக.

 

 

“சரி என்னோட வெளிய வரமுடியுமா?? நான் பர்சனலா ஒரு கேஸ் பார்த்திட்டு இருக்கேன். அதுக்கு உன்னோட உதவி வேணும்

 

 

“உங்க… உங்க அண்ணா கேஸா???

 

 

“எதுவா இருந்தா என்ன சஞ்சு… உன்னால வரமுடியுமா இல்லையா அதை மட்டும் சொல்லு

 

 

“வர்றேன்… என்று ஒற்றை பதிலாக அவள் சொல்ல “சரி உன்னை எங்க பிக்கப் பண்ணனும். இல்லை நீயே வண்டில வந்திடுவியா??

 

 

“என்கிட்ட வண்டியை எங்க கொடுக்குறாங்க… நீங்க தான் வந்து கூட்டிட்டு போகணும்… எங்க ஆபீஸ் வெளில காத்திட்டு இருக்கேன், வந்திடுங்க என்றாள்.

 

 

“சரி என்று போனை வைத்தவன் அவளை அழைத்துக் கொண்டு மாலதியை சந்திக்க சென்றான். செல்லும் வழியில் சஞ்சுவிடம் அவரிடம் என்ன பேச எப்படி பேச என்று விபரமுரைத்தவன் அவளையே அவரிடம் கேள்விகள் கேட்க வைத்தான்.

 

 

மாலதியிடம் பேசியதில் ஒன்று மட்டுமே விளங்கியது, அவர் திருமணமாகி வெளிநாட்டிற்கு சென்றவர் பல வருடங்கள் கழித்து இப்போது தான் சொந்த ஊருக்கே வருகிறார் என்பது.

 

மேலும் அவரை விசாரிக்க மயில்வாகனன் பெண்கள் விஷயத்தில் சற்று முன் பின் என்றவரை யூகிக்க முடிந்தது. ஆனால் இந்த கேசுக்கும் மற்ற கேசுக்கும் எதுவும் சம்மந்தம் இருக்குமா என்று ஆராய்ந்தவனுக்கு அவர் பதிலில் இருந்து எதையுமே கண்டு பிடிக்க முடியவில்லை.

 

 

அவரிடம் விடைபெற்று இருவரும் கிளம்பி வந்தனர். “சஞ்சு நாளைக்கு நீ ஆபீஸ் வரவேண்டி இருக்கும் நினைக்கிறேன் என்றான் மொட்டையாக. “அப்படியா என்ன விஷயங்க?? என்றாள்.

 

 

“அதை நீ அங்க வந்தே தெரிஞ்சுக்கோ… அப்புறம் நமக்கு இன்னும் நாலு நாள்ல நிச்சயம் உனக்கு ஞாபகம் இருக்கா?? என்றான் சுவாரசியமாக அவளை நோக்கிக் கொண்டே. “ஓ உங்களுக்கு அதெல்லாம் கூட ஞாபகத்தில இருக்கா?? மறந்து இருப்பீங்கன்னு நினைச்சேன் என்று நக்கலடித்தாள் அவள்.

 

 

“என்ன கிண்டலா???

 

 

“இல்லை நக்கல்

 

 

“வாய் வாய்… வாய் ஓயுதா உனக்கு… உன் வாய்க்கு பெரிசா ஒரு பூட்டு போடுறேன் இரு… அப்புறம் நீ அதை திறக்கவே முடியாம செஞ்சுடுவேன்…

 

 

“அய்யோ பயமாயிருக்கே… என்று பயந்தவள் நடித்தவள் அவன் முறைப்பில் அவனுக்கு ஒழுங்கு காட்டிவிட்டு “போதும் போதும் நம்ம பஞ்சாயத்து. நான் ரெண்டு நாள்ல ஊருக்கு கிளம்பறேன். நீங்க எப்போ வர்றீங்க நம்ம நிச்சயத்துக்கு

 

 

“உனக்கு எதுக்கு அவசரம்… கொஞ்சம் பொறு நீயும் நானும் சேர்ந்தே போகலாம்… என்றவன் நெருக்கமாக அவளருகில் நின்று கொண்டு அவள் கையை பிடித்தான். அவனின் நெருக்கம் எதுவோ செய்ய கைகள் சில்லென்றிருந்தது.

 

 

“நிரு என்ன இது?? வண்டி எடுங்க போகலாம், எனக்கு நேரமாச்சு அத்தை தேடுவாங்க என்றாள்.

 

 

“அன்னைக்கு நடுராத்திரில சொல்லாம கொள்ளாம போனியே அப்போ அத்தை எதுவும் சொல்லலையா???

 

 

“நீங்க வம்பு பண்ணுறீங்க… இப்போ கிளம்புறீங்களா இல்லை நானே ஆட்டோ பிடிச்சு போகவா

 

 

“போடி… உன்கிட்ட போய் பேசினேன் பாரு, என்னை உதைக்கணும், இவ்வளோ நாளா பேசலை பேசலைன்னு என் உயிரை எடுத்த, இப்போ பேசினா தள்ளி போற…வண்டியில ஏறு உன்னை ட்ராப் பண்ணிட்டு போறேன் என்று பைக்கை உதைத்தான்.

 

 

அவள் ஏறிக்கொள்ளவும் வண்டி சீறி புறப்பட பிடிமானம் இல்லாமல் அவன் இடுப்பை சுற்றி கையை போட்டு இறுக்கினாள் அவள்.

 

 

அவளை இறக்கிவிட்டு வீட்டுக்கு சென்றவனுக்கு மீண்டும் அருணின் இறப்பு கார்மேகம், சங்கர்… என்று பொறி தட்டியதும்… நெற்றி பொட்டில் அடித்துக் கொண்டவன் ‘சங்கரை எப்படி மறந்தேன்

 

 

‘அவனுக்கு இப்படி ஆனதும் இங்க தானே. ஆனா என்னாச்சுன்னு அவனை விசாரிக்க முடியாத நிலையில இருக்கானே என்று பலவாறாக யோசித்து குழம்பினான்.

 

 

உள்ளுக்குள் ஏதோ ஒரு குரல் எல்லாவற்றுக்கும் ஒரு சம்மந்தம் இருக்கிறது என்று கூறிக் கொண்டேயிருந்தது. அந்த குரல் அவன் காதில் கேட்பது போல் இருந்தது.

 

 

ஒரு கணம் நிஜமா என்று சுற்று முற்றும் திரும்பி பார்த்தவன் யாருமற்று இருந்த அறையை முழுவதுமாக அலசி ஆராய்ந்தான். தலையில் தட்டி தன்னை சமன்படுத்திக் கொண்டான்.

 

 

மாறன் கொடுத்த கோப்புகளை எடுத்து மீண்டும் ஆராய்ந்தவன் எதையோ எழுதி வைத்துவிட்டு அர்ஜுனிடம் இருந்து வந்த தகவல்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

____________________

 

 

பலவேசம் மிலிட்டரியில் சர்வீஸ் முடிந்து சொந்த ஊரை நோக்கி பயணமானார். மகனும் அவரை பின்பற்றி ஆர்மியில் சேர்ந்திருந்தவன், சில வருடங்களுக்கு முன் நடந்த கார்கில் போரில் இறந்திருந்தான்.

 

 

மகன் சென்ற வேதனை தாங்காத பலவேசத்தின் மனைவி நாச்சியம்மையும் உடல் நலம் குன்றி போனார், இதோ அவரும் சில மாதங்களுக்கு முன் இறந்து போனார்.

 

 

பலவேசம் இனி யாருக்காக வாழ்கிறோம் என்று எண்ணியவர் சொந்த ஊரை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்தார். அவர் சொந்த ஊருக்கு செல்ல சில முக்கிய காரணங்களும் இருந்தன.

 

 

ஒன்று தன் கடைசி காலத்தை சொந்த ஊரில் சொந்த வீட்டில் உற்றார் உறவினருடன் கழிக்க வேண்டும் என்று எண்ணியதும், செய்த பாவத்திற்கு பலனாக புண்ணியம் தேடவும் தான்.

 

 

ஓடும் ரயிலின் வேகத்திற்கு இணையாக அவருக்குள் பழைய நினைவுகளின் தாக்கமும் ஓடிக் கொண்டிருந்தது. என்றோ செய்தது, வாலிப முறுக்கில் பணம் கொட்டி கிடந்ததில் தவறான ஒன்றை தனக்கு சரியென்று பட்டதினால் செய்த தன் மடத்தனத்தை எண்ணி உள்ளம் வெந்தார்.

 

 

என்ன வருந்தி என்ன நடந்துவிடப் போகிறது, நடந்தது நடந்தே முடிந்துவிட்டது. அதனால் இழந்தது திரும்ப வந்துவிடுமா என்ன, காலம் அறியாமல் மூடிமறைத்த விஷயம் புதைந்தே போய்விட்டது என்று எண்ணிக் கொண்டிருந்தவருக்கு தெரியுமா, புதைந்தது புகைந்து கொண்டிருக்கிறது என்று.

 

 

பகை தீர்க்க பழி தீர்க்க தன் வரவை நோக்கி காத்திருக்கும் அருவத்திற்கு பலியாக ரயிலில் வந்துக் கொண்டிருந்தார் அவர்.

 

 

தன் பாவத்தை எதை கொண்டு போக்கினாலும் போகாது என்பதை உணர்ந்தாலும் மனதின் ஓரத்தில் நாட்டுக்கு நல்லது செய்துவிட்டேன், என் பாவம் கழுவப்பட்டு விட்டது என்று தன்னை தானே சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார் அவர்.

 

 

சென்னைக்கு வந்து ரயிலில் இறங்கியவர் இரண்டு நாள் அங்கு தங்கிவிட்டு தன் பயணத்தை சொந்த ஊருக்கு தொடங்கினார். விடிகாலை வேளை புலர்ந்தும் புலரா அரையிருளில் ஊரை வந்தடைந்திருந்தார் அவர்.

 

 

தோளில் சுமந்த ஒரு பையுடனும் கையில் ஒரு பெட்டியுடனும் தன் வீட்டை நோக்கி நடையை எட்டி போட்டார். எங்கோ பசு ‘ம்மா என்ற ஒலி அழகாய் கேட்டது.

 

 

அதை ரசித்தவாறே அந்த தெருவை கடந்து அடுத்த தெருவில் நுழைந்தவரின் காதுகளில் அபஸ்வரமாய் தெரு நாய் ஒன்று ஊளையிடும் சத்தம் கேட்டது.

 

 

‘இந்த சத்தம் நல்லதிற்கில்லையே, இந்த சத்தம் கேட்டால் ஏதோ அசம்பாவிதம் நடப்பதாக தானே பொருள் என்று எண்ணிக் கொண்டு நடையை தொடர்ந்தார்.

 

 

அது முழுதும் புலராத பொழுதென்பதால் ஊரில் ஆட்கள் நடமாட்டமில்லாமல் இருந்தது. பலவேசத்தின் பின்னே மெல்ல கொலுசொலியும் தொடர்ந்து இன்னொரு காலடியோசையும் கேட்க மீண்டும் அபஸ்வரமாய் கேட்ட நாயின் ஊளை சத்தமும் பட்டாளத்தானையும் சற்றே பதட்டம் கொள்ள வைத்தது.

 

 

அறிவு ஊடே புகுந்து வேலை செய்ய தைரியமாக பின்னால் திரும்பி பார்த்தவருக்கு ஏமாற்றமே யாருமற்ற சாலையே பதிலாகியிருந்தது. மீண்டும் நடை போட்டவருக்கு தொடர்ந்த அந்த சத்தத்துக்கு மதிப்புக் கொடுக்க தோன்றாமல் தொடர்ந்த நடையுடன் அவர் வீட்டை வந்தடைந்தார்.

 

 

முதல் நாளே அவர் உறவினரிடம் சொல்லி வைத்திருந்ததினால் வீட்டு சாவியை அவர் வீட்டின் நிலைப்படியில் ஒளித்து வைத்திருக்க அதை எடுத்துக் கொண்டு சுவாதீனமாக கதவை திறந்து உள்ளே சென்றார் பலவேசம்.

 

 

அவர் உள்ளே நுழைந்து விளக்கை போட அதிர்ந்து அப்படியே நின்றுவிட்டார். முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து வைத்துவிட்டதாக அவர் உறவினர் சொல்லியிருக்க வீடு முழுதும் அடைத்துக் கொண்டிருந்த கருவேல முட்களை பார்த்ததும் பலவேசம் இரண்டடி பின்னே நகர்ந்தார்.

 

 

கருவேலம் எல்லாம் வீட்டுக்குள் எப்படி வந்தது, இது ஊருக்கு வெளியே உள்ள காட்டில் தானே உண்டு. இங்கே எப்படி வந்தது அதுவும் சுத்தம் செய்த்திருந்த வீட்டில் என்று யோசித்துக் கொண்டே முன்னே செல்ல கருவேல முட்கள் இப்போது அவரை சுற்றியிருந்தன.

 

 

இப்போது அவர் முட்கள் கூட்டத்தின் நடுவிலிருந்தார், உண்மையிலேயே இப்போது பயம் அவரை தொற்றிக் கொண்டிருந்தது. அவர் முட்களை நகர்த்த பார்க்க அது அவரை குத்திவிடும் போல் அருகில் வந்தது.

 

 

அவர் நடந்து வரும் போது கேட்ட கொலுசொலி மீண்டும் கேட்க வீட்டை சுற்று முற்றும் ஆராய்ந்தவர் எதிரில் நின்ற உருவத்தை பார்த்தவர் திகைத்து போய் நிற்க பலமாய் சிரித்து அது மேலும் அவருக்கு கிலியை கொடுத்தது.

 

 

தன்னை மன்னித்து விடுமாறு பலவேசம் கதறிய சத்தம் வெளியில் கேட்காமலே போக அவர் கத்தி கத்தி தொண்டை அடைத்து சட்டென்று நெஞ்சில் ஒரு வலி எழ பொத்தென்று அருவத்தின் காலில் சாஷ்டாங்கமாய் விழுந்தவர் எழாமலே போனார்.

 

 

மறுநாள் செய்தித்தாள் வீட்டு வாசலில் இறந்து கிடந்த பலவேசத்தை பற்றி விதவிதமாய் செய்தியை பரப்பி தாங்கி வந்திருந்தது.

 

 

நிரஞ்சனுக்கு அழைத்து மாறன் விஷயத்தை சொல்லி அவனையும் உடன் வரச்சொல்லியிருக்க இருவருமாக சம்பவ இடத்தை நோக்கி பயணமாகினர். சம்பவ இடத்தில் சஞ்சுவும் அவள் பங்குக்கு தகவல் சேகரிக்க வந்திருந்தாள்.

 

 

அக்கம் பக்கத்திலுள்ளோர் இது ஆவியின் சேட்டை, தெய்வக்குத்தம் என்று மீண்டும் ஆரம்பித்துக் கொண்டிருந்தனர். சஞ்சுவும் அவளறிந்த வரை விசாரித்துவிட அவருக்கு ஊரில் எந்த பகையும் இல்லை என்பதும் பலவருடங்கள் கழித்து அவர் சொந்த ஊருக்கு வந்திருப்பதும் அறிந்தாள்.

 

 

ஏனோ மனதிற்குள் சட்டென்று இதுவும் அந்த பேயின் வேலையாய் இருக்குமோ என்று தோன்றியதை நிரஞ்சன் வார்த்தைகள் வந்து அழித்து போயின.

 

 

நிரஞ்சன் வருவதற்கு முன்னே தனியே அந்த வீட்டின் பின்னே சென்று சுற்றி பார்க்க காற்றில் வீசிய ஏதோ மலரின் வாசம் அவள் கவனத்தை ஈர்த்தது. இதே வாசம் இதே வாசம் தானே நிரஞ்சனின் தோட்ட வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் வரும் என்று அவசரமாக அவள் மனம் ஆராய்ந்தது.

 

 

மாலை நெருங்கியிருந்த வேளை சீக்கிரமே சூரியன் மறைந்து இருளை பரப்பியிருந்தான் அந்த பகுதியில்.

 

 

அந்த வீட்டின் நேர் பின்பக்கத்தில் இருந்தவள் சுற்றிக் கொண்டு முன்னே வரவும் அவள் காதில் ‘இவனை போலவே உன் மனசுக்கு பிடிச்சவனும் போய் சேர்ந்திடுவான் என்ற குரல் கேட்க கைகள் சில்லிட்டது அவளுக்கு.

 

 

“யார் நீங்க?? என்ற அவள் குரலுக்கு எந்த பதிலுமில்லை. அவளை கடந்து இரு உருவம் செல்ல அடிவயிற்றில் மீண்டும் பயம் குமிழியிட்டது, வியர்க்க ஆரம்பித்த முகத்தை துடைக்கக் கூட தோன்றாமல் வேகமாக நடந்து வந்து ஆட்களுடன் இணைந்து கொண்டு சகஜமாக இருக்க முயற்சித்தாள்.

 

 

வண்டியில் இருந்து இறங்கியதுமே சஞ்சுவின் முகம் தெளிவில்லாதிருப்பதை நிரஞ்சன் கண்டுகொண்டான். மாறனிடம் தேவையில்லாமல் இங்கு யாரும் இருக்க வேண்டாம் அனுப்பிவிடு என்று கூறிவிட்டு சஞ்சுவை துளைக்கும் ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே சென்றான்.

 

 

உள்ளே சென்று சடலத்தை பார்த்துவிட்டு சுற்று முற்றும் பார்த்தான், பலவேசம் கொண்டு வந்திருந்த உடைமைகள் அங்கே இருக்க ஒரு காவலரை அழைத்து அதையெல்லாம் எடுத்து பத்திரபடுத்துமாறு கூறினான்.

 

 

பலவேசத்தின் உறவினரை அழைத்து ஏதேதோ விசாரித்தவனுக்கு முதலில் நடந்த இழப்புக்கும் இதற்கும் கூட ஏதோ சம்மந்தம் இருப்பதாகவே தோன்றியது. ஏனெனில் இறந்து போனவரும் பலவருடங்களாக வேறு இடத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்த பின்னே இறந்து போயிருந்தார்.

 

 

அவனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை இதுவரை நடந்த எல்லா இறப்பையும் சம்மந்தப்படுத்தும் ஒரு விஷயம் பலவேசத்தின் பையில் இருக்கிறது என்பதும் அதை விரைவில் அவன் தெரிந்து கொள்ளப் போவதும்.

 

 

வெளியில் வந்து பார்க்க சஞ்சுவோ அவன் முதலில் பார்த்த இடத்திலேயே அசையாது நின்றிருக்க அவனுக்கு எரிச்சலாக இருந்தது. பயந்து போயிருக்கிறாள் என்பது அவள் முகத்தில் தெரிந்ததினால் தான் மாறனிடம் சொல்லி அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்த சொல்லியிருந்தான்.

 

 

அவளோ நகராமல் அங்கேயே சிலை போல் நின்றிருக்க அவள் முன் கோபத்துடன் சென்று நின்றான். ஆனால் அவளோ அவனை பார்த்தால் தானே எதையோ வெறித்துக் கொண்டு கைகள் சில்லிட நின்றிருந்தாள்.

 

 

அவள் நின்றிருந்த கோலம் அவனுக்கு கலக்கத்தை கொடுக்க அவள் கையை பிடித்து உலுக்கினான்.

 

 

பயந்திருந்தவள் சட்டென்று அவன் மார்ப்பில் அடைக்கலம் புக சூழ இருந்தவர்கள் பார்த்த பார்வையில் அவளை விலக்கி நிறுத்தியவன் மாறனிடம் சொல்லிக் கொண்டு அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்….

 

அத்தியாயம் –12

 

 

மாறனும் நிரஞ்சனும் வேறு ஒரு கேஸ் விஷயமாக வெளியே சென்றிருந்தவர்கள் நேரே நிரஞ்சனின் காரிலேயே பலவேசம் இடத்திற்கு வந்திருந்தனர். சஞ்சுவை அவன் காரிலேயே ஏறிக் கொள்ள சொன்னவன் மாறனை பிறகு சந்திப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

 

 

பலவேசத்தின் உடைமைகளை போலீஸ் வந்த ஜீப்பில் ஏற்றாமல் நிரஞ்சனின் காரில் அங்கிருந்த ஏட்டு வைத்ததை அவன் கவனிக்காமலே வண்டியை கிளப்பினான்.

 

 

வழியிலும் சஞ்சுவிடம் பேச முயற்சிக்க அவள் வாயை திறந்தால் தானே, காலையில் வேறு அவனுக்கும் அவளுக்கும் சின்ன மனஸ்தாபம் வேறு. அந்த நினைவுகள் அவன் கண்முன்னே வந்தது.

 

_____________________

 

 

நிரஞ்சன் முதல் நாள் சொன்னது போலவே சஞ்சு அவளுடன் வேலை செய்யும் அம்பிகாவை கூட்டிக் கொண்டு அவன் அலுவலகம் வந்தாள். அங்கு நிரஞ்சனுடன் வேறு ஒரு பெண்ணும் இருந்தாள்.

 

 

பார்ப்பதற்கு மைதா மாவை உருண்டையாக பிசைந்து வைத்தது போன்ற முகம் அவளுக்கு. தலை முடியை கிராப் செய்திருந்தாள். கண்களில் மையை தீட்டி விழியை கூர்மையாக்கி வைத்திருந்த அவள் தோற்றம் ஏனோ கண்டதுமே சஞ்சுவுக்கு பிடிக்கவில்லை.

 

 

நிரஞ்சனோ சஞ்சுவுடன் வந்தவளை ஏறிட்டுவிட்டு சஞ்சுவை கேள்வியாய் நோக்கினான். அவளே வந்த விஷயத்தை ஆரம்பித்தாள், “நீங்க எங்க சார்கிட்ட ஒரு ரிப்போர்ட்டர் வேணும்ன்னு சொல்லியிருந்தீங்க இல்லையா இவங்களை அதுக்கு தான் கூட்டிட்டு வந்திருக்கேன்

 

 

சஞ்சு அதை சொல்லி முடித்ததும் நிரஞ்சனின் முகத்தில் குழப்ப ரேகைகள் அவன் சஞ்சுவை எதிர்பார்த்திருக்க அவளோ வேறு ஒருத்தியை கூட்டி வந்தது அவனுக்கு கேள்வியாய் இருந்தது.

 

 

இருந்தும் நேரடியாக அந்த சூழ்நிலையில் எதுவும் சொல்லாதிருந்தவன் அடுத்து அவள் சொல்லப் போவதை கேட்டான். “இவங்க பேரு அம்பிகா, நீங்க என்ன விஷயம்ன்னு சொன்னீங்கன்னா வசதியா இருக்கும் என்றாள்.

 

 

நிரஞ்சன் அவளிடம் எதுவும் சொல்லாமல் அங்கிருந்த பெண்ணை அழைத்தான். “நிக்கி… என்ற அவன் அழைப்பே சஞ்சுவுக்கு எரிச்சலை கொடுத்தது.

 

 

“ஷி இஸ் நிகிதா, ஷி இஸ் கோஆர்டினேடிங் வித் மீ… வீ நீட் யுவர் ஹெல்ப் என்று திடுமென ஆங்கிலத்தில உரையாடியவன் சட்டென்று “நிகிதாவுக்கு தமிழ் தெரியாது அதான் என்றுவிட்டு தொடர்ந்தான்.

 

 

அவன் நிகிதா என்றதுமே சஞ்சு அவளை மீண்டும் ஒரு முறை நோட்டம் விட்டாள். ஏனோ அவளுக்கு அந்த நிகிதாவை கண்டதுமே பிடிக்கவில்லை. அவளிடம் ஏதோ பொய்த்தன்மை இருப்பதாக தோன்றியது அவளுக்கு.

 

 

“நிக்கி ஷி இஸ் சஞ்சனா ரிப்போர்ட்டர் அண்ட் ஷி இஸ் அம்பிகா. அம்பிகா இஸ் வித் யூ. வாட் இஸ் யுவர் நீட் யூ வில் எக்ஸ்ப்ளைன் ஹர். ஐ ஹவ் சம் வொர்க் என்றவன் “யூ கோஹெய்ட் என்று நிகிதாவிடமும் அம்பிகாவிடமும் சொல்லிவிட்டு, “மிஸ் சஞ்சனா என்று அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியே சென்றான்.

 

 

சஞ்சனாவும் அம்பிகாவிடம் வெளியே இருப்பதாக சொல்லிவிட்டு அவன் பின்னேயே சென்றாள். “என்ன நடக்குது சஞ்சு, நான் உன்னை வரச்சொன்னா நீ வேற யாரையோ கூட்டிட்டு வந்திருக்க, என்ன நினைச்சுட்டு இருக்க என்று பாய்ந்தான்.

 

 

“ஓ!! நீங்க என்னை தான் வரச்சொல்லி என்கிட்டே சொன்னீங்களா. அப்படி எதுவும் எனக்கு ஞாபகம் இல்லையே என்றாள் பதிலாக.

“நான் தான் நேத்தே உன்கிட்ட சொன்னேனே நீ இங்க வருவன்னு. உங்க சார்கிட்டயும் சொல்லிட்டு தானே வந்தேன்

 

 

“என்ன சொல்லிட்டு வந்தீங்க நான் தான் வரணும்ன்னா

 

 

“இல்லை அப்படி சொல்லலை, இப்படி எனக்கு ஒரு ஹெல்ப் தேவை. ஒரு ஆள் வேணும்ன்னு சொல்லியிருந்தேன்

 

 

“ஹ்ம்ம் அதான் விஷயம் அவர் அம்பிகாவை அனுப்பி வைச்சு இருக்கார். எனக்கு இந்த இடம் நல்லா தெரியும்ங்கறதால என்னை அவளுக்கு துணையா அனுப்பி வைச்சார்

 

 

“நான் நீ ஏன் வரலைன்னு கேட்டேன், நீ வேற என்னமோ சொல்லிட்டு இருக்க

 

 

“நானும் அதுக்கு தான் நிரு பதில் சொல்லிட்டு இருக்கேன். அம்பிகாவை தான் சார் கூட்டிட்டு போகச் சொன்னார். அதுவும் இல்லாம நான் ஒரு நாலு நாளைக்கு லீவ், இன்னைக்கு நைட் ஊருக்கு கிளம்பணும்

 

 

அவன் கேள்வியாய் அவளை நோக்க “நிச்சயத்துக்கு ரெண்டு மூணு நாள் முன்னாடியே அம்மா கிளம்பி வரச்சொல்லி காலைல தான் போன் போட்டாங்க அதான்

 

 

“சரி விடு, நீ வந்திருந்தா நிகிதாவுக்கு உதவியா இருக்கும்ன்னு நினைச்சேன். அவளுக்கு பாவம் இந்த ஊர் புதுசு, ஒரு கேஸ் விஷயமா அவ எனக்கு ஹெல்ப் பண்ண வந்திருக்கா

 

 

“ஓ!! என்றவள் “இது அந்த நிகிதாவா… என்றாள். சற்று யோசித்தவன் ‘இவள் என்ன கேட்கிறாள், அடக்கடவுளே! இவள் இன்னும் அதையே நினைத்து கொண்டிருக்கிறாளா

 

 

“அதுக்கென்ன சஞ்சு, அவ அவளோட வேலையை பார்க்க வந்திருக்கா. நீ தேவையில்லாம எதையும் நினைச்சு குழம்பாதே சரியா

 

 

“நான் எதுவும் குழப்பிக்கலை, சும்மா தான் கேட்டேன். நான் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே

 

 

“என்ன சொல்லு??

 

 

“எனக்கு அவளை பிடிக்கலை, அவகிட்ட பார்த்து இருந்துக்கோங்க. அவக்கிட்ட ஏதோ கள்ளத்தனம் இருக்கு

 

 

பெண்களின் சில உள்ளுணர்வு இது போன்ற சில விஷயங்களை துல்லியமாகவே சொல்லிவிடும். சஞ்சுவும் அப்படி தான் நிகிதா பற்றி நிரஞ்சனிடம் கூறினாள்.

 

 

ஆனால் அவனோ கோபத்துடன் “சஞ்சு கொஞ்சம் நிறுத்துறியா, உனக்கு அவளை பிடிக்கலைங்கறதுக்கு நீ என்ன வேணும்ன்னாலும் சொல்லலாம்ன்னு நினைக்காதே சஞ்சு. நீ என்ன சொன்னாலும் நான் அப்படியே கேட்டுட்டு இருக்க மாட்டேன்

 

 

“நிகிதா பத்தி உனக்கு என்ன தெரியும், அவளை எனக்கு ஒரு வருஷமாவே தெரியும். என்னோட ரொம்ப நல்ல பிரிண்ட் அவ, எனக்கு உதவி பண்றதுக்காக வந்தவளை நீ தப்பா பேசுறது எனக்கு பிடிக்கலை என்றான் கடும்கோபத்துடன்.

 

 

“நான் சொல்றதை எப்பவும் போல நீங்க கேட்க போறதில்லை. அவ சரியில்லை நான் அவ்வளோ தான் சொல்லுவேன். அவளால நீங்க எதுலயாச்சும் மாட்டிக்கும் போது தான் நான் சொன்னது சரின்னு உங்களுக்கு புரியும். நான் கிளம்பறேன் என்றுவிட்டு அவனை திரும்பியும் பாராமல் அங்கிருந்து சென்றாள்.

 

____________________

 

 

நிரஞ்சன் காலையில் நடந்ததை மனதிற்குள் ஓட்டி பார்த்தவன் வண்டியை அவன் வீட்டிற்கு செலுத்தினான். அவளை கூட்டிக் கொண்டு வந்து வீட்டில் சோபாவில் அமரவைத்துவிட்டு கார்த்திக்கிற்கு போன் செய்தான். “கார்த்திக் நீ எங்க இருக்க, கொஞ்சம் வீடு வரைக்கும் வரமுடியுமா??

 

“என்னாச்சு நிரஞ்சன் எதுவும் அவசரமா, நாங்க இப்போ ஊருக்கு கிளம்பணுமே. சஞ்சு ஆபீஸ் போயிருக்கா, அவ வந்ததும் நாங்க கிளம்பிடுவோம்.

 

 

“கார்த்தி நான் அதை பத்தி பேச தான் கூப்பிட்டேன். சஞ்சு இப்போ என்னோட தான் இருக்கா எங்க வீட்டில தான் இருக்கா

 

 

“என்ன நிரஞ்சன் மறுபடியும் அந்த வீட்டுக்கு போயிட்டீங்களா?? திரும்பவும் மயங்கிட்டாளா?? என்றான் கோபமான குரலில்

 

 

“கொஞ்சம் பொறு கார்த்திக். நான் இவளை எங்கயும் கூட்டிட்டு போகலை, நீ கொஞ்சம் நேர்ல வா. நான் சொல்றேன் அவளை பார்த்தா தான் உனக்கு புரியும்

 

 

“என்னன்னு சொல்லு நிரஞ்சன் எனக்கு பயமாயிருக்கு

 

 

“அவளுக்கு ஒண்ணும்மில்லை நல்லா தான் இருக்கா நீ வீட்டுக்கு வா என்றுவிட்டு போனை வைத்தான்.

 

 

அவனே உள்ளே சென்று சூடாக காபி போட்டு கொண்டு வந்தவன் அவளிடம் கொடுக்க இயந்திரமாக அதை வாங்கி குடித்தாள். கொஞ்சம் கொஞ்சமாக சுற்றுப்புறம் விளங்க ஆரம்பித்தது அவளுக்கு.

 

 

அதற்குள் கார்த்திக் உள்ளே அவசரமாக நுழைய “என்னாச்சு என்று கொண்டே வந்தான்.

 

 

“இன்னைக்கு இவளை யாரு வேலைக்கு போக சொன்னது கார்த்திக். போன இடத்துல சும்மா இல்லாம பக்கத்து ஊர்ல திடிர்னு ஒருத்தர் இறந்து போய்ட்டார். நான் அதை விசாரிக்க சாயங்காலம் போயிருந்தேன்

 

 

“அங்க போனப்ப தான் இவளை பார்த்தேன், பேயறைஞ்ச மாதிரி நின்னுட்டு இருக்கா. என்னன்னு கேட்டா பதிலும் சொல்லலை. வீட்டுக்கு போக சொன்னா போகாம அப்படியே சிலை மாதிரி வெறிச்சு பார்த்திட்டு இருக்கா

 

 

“நான் கேள்வி கேட்கவும் வழக்கம் போல் என் பக்கத்துல வந்திட்டா, நான் நேரா அங்கேயே கூட்டிட்டு வந்திருப்பேன். தேவையில்லாம எல்லாரும் பயப்படுவீங்கன்னு தான் இங்க கூட்டிட்டு வந்தேன்

 

 

“நீயே அவளை வீட்டுக்கு கூட்டிட்டு போ கார்த்திக். அவகிட்ட பேச்சு கொடுங்க எதுவும் பேசாம உம்முன்னு இருக்கா என்று கோபத்துடன் ஆரம்பித்து வருத்தத்துடன் சொல்லி முடித்தான் அவன்.

 

 

“சஞ்சு… சஞ்சு என்று கார்த்திக் அவளை பலமுறை உலுக்கி பார்த்தும் அவளிடம் பதிலில்லாமல் போக “சரி நிரஞ்சன் நான் பார்த்துக்கறேன் என்று அவள் கையை பிடித்து அழைத்து சென்றான்.

 

 

“கார்த்திக் ஒரு நிமிஷம், நீங்க எத்தனை மணிக்கு ஊருக்கு கிளம்புறீங்க

 

 

“நைட் ஒன்பது மணிக்கு வண்டி வரச்சொல்லி இருக்கேன் ரஞ்சன், வந்ததும் கிளம்பிடுவோம்

 

 

“ஹ்ம்ம்… கார்த்திக் நானும் உங்களோடவே வர்றேனே

 

 

“என்னாச்சு ரஞ்சன்??

 

 

“இல்லை இவளை இந்த நிலைமையில அனுப்ப எனக்கு மனசில்லை. இவ என்னை தேடினாலும் தேடுவா. நானும் உங்களோடவே வர்றேனே என்றான்.

 

 

“அதுவும் சரி தான் அப்போ நீயும் இப்போவே எங்களோட வந்திடு ரஞ்சன் கிளம்புவோம்

 

 

“இல்லை கார்த்திக் நான் டிரஸ் எல்லாம் எடுத்து வைச்சுட்டு கொஞ்சம் ரெப்ரெஷ் பண்ணிட்டு சாப்பிட்டு வந்திடறேன்

“நீ அங்க வந்து சாப்பிடு ரஞ்சன், உன் டிரஸ் எல்லாம் மட்டும் எடுத்திட்டு கொஞ்ச நேரத்துல வந்திடு என்றுவிட்டு கார்த்திக் சஞ்சுவை அழைத்து சென்றான்.

 

 

அப்போது தான் சுயஉணர்வு வந்தவளாக “நிரு… என்று ஓடிவந்து அவனை இறுக்கிக் கொண்டாள். ‘இவளுக்கு இதே வேலையா போச்சு, ஒண்ணு மயக்கம் போட்டு விழுகறா, இல்லையா இப்படி வந்து கட்டி பிடிக்கிறா என்று செல்லமாக அவளை வைதான்.

 

 

“சஞ்சு… என்னாச்சு உனக்கு ஏன் இப்படி இருக்க. நீ எப்படி அங்க போனே??

 

 

“நிரு… என்னைவிட்டு போகாதீங்க ப்ளீஸ்… என்று பழைய பல்லவியை தொடர்ந்து கண்ணீர் விட ஆரம்பித்தாள்.

 

 

“சஞ்சு போதும் ஆரம்பிக்காதே, நீ இப்போ கார்த்திக் கூட வீட்டுக்கு கிளம்பு. நானும் உங்களோட ஊருக்கு வர்றேன். இப்போ நீ எந்த கலாட்டா பண்ணாம பேசாம கிளம்பு சஞ்சு

 

 

“நீங்க கண்டிப்பா வருவீங்களா நிரு…

 

 

“வர்றேன்ம்மா நீ கிளம்பு

 

 

“மாமா வாங்க போகலாம்… என்று கார்த்திக்கின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள். ‘என்னடா நடக்குது இங்க என்று வழக்கம் போல் கார்த்திக் தன்னையே கேட்டுக் கொண்டான்.

 

 

சஞ்சு வீட்டிற்கு வந்ததும் அவள் அறைக்கு சென்று குளியல் போட ஏனோ அந்த உருவம் சொன்னது அவள் காதில் மீண்டும் ரீங்காரமிட்டது. அதுவரை அவளை பயமுறுத்தி மட்டுமே கொண்டிருந்த அந்த உருவத்தின் வார்த்தைகள் நிஜமாகிவிடும் என்று உறுதியாக சஞ்சு நம்ப ஆரம்பித்தது அங்கு தான்.

 

 

அப்போது தான் அவளுக்கு ஒன்று உரைத்தது அது இறந்து போன அந்த நபர் மற்றும் அருண் இவர்களுக்குள் எதுவோ தொடர்ப்பு இருக்க வேண்டும் என்று.

 

 

அந்த வீட்டிற்கு சென்ற போது நிழலான அந்த பெண்ணுருவம் அருணிடம் நீ இறந்ததிற்கு பாவம் தான் காரணம் என்றது அவளுக்கு ஞாபகம் வந்தது.

 

 

“அப்போ அப்போ… அருண் மாமா சம்மந்தப்பட்டவங்களால அந்த பொண்ணுக்கு ஏதோ ஆகியிருக்கணும். அதுக்கு தான் அவங்க பழிவாங்குறாங்களோ…

 

 

“அது என்னன்னு கண்டுபிடிச்சு அந்த பாவத்தை கழுவினா என் நிருவுக்கு எதுவும் ஆகாதுல என்று வாய்விட்டே பேசிக் கொண்டிருந்தாள் அவள் குளியலறையில்.

 

 

வாசலில் “சஞ்சு இன்னும் எவ்வளோ நேரம் தான் குளிப்ப, இப்போ நிரஞ்சன் வந்திடுவார். சாப்பிட்டு கிளம்ப வேண்டாமா என்று சுந்தரி அழைப்பது கேட்டது. “இதோ வந்திடறேன் அத்தை என்றாள்

 

 

“அம்மாடி நீ பாட்டுக்கு உன் ஜீன்ஸ் எடுத்து போட்டுக்கிட்டு வராதே, அன்னைக்கு உனக்கு கொஞ்சம் புடவை எல்லாம் எடுத்தோமே, அதுல இருந்து ஒண்ணை எடுத்து கட்டிக்கிட்டு வா

 

 

கதவை படாரென்று திறந்து நைட்டியுடன் வெளியில் வந்தவள் “ஓயெஸ் அத்தை புடவை தானே கட்டிட்டா போச்சு

 

 

“நீயே கட்டிக்குவியா இல்லை அஞ்சுவை அனுப்பனுமா

 

 

“அதெல்லாம் நானே பார்த்துக்கறேன் அத்தை, நீங்க போங்க

 

 

“என்னமோ போ என்றுவிட்டு அவர் அங்கிருந்து சென்றார். நிரஞ்சன் அன்று அவள் புடவை அணிந்திருந்தது பற்றி பேசிய ஞாபகம் வர அதுவரை இருந்த கலக்கம் எல்லாம் மாறி அவளை வெட்கம் சூழ்ந்தது.

 

அவளுக்கு எடுத்திருந்த புடவையை எல்லாம் வரிசை படுத்தியவள் அடர்ந்த வாடாமல்லி நிறத்தில் லேசாக தங்கநிற சரிகை கரையிட்ட ஜார்ஜெட் புடவையை எடுத்து அணிந்துக் கொண்டாள்.

 

 

உடலை வழுக்கியவாறு இருந்தது அந்த புடவை, கண்ணாடியில் பார்க்க கொஞ்சம் ஒல்லியாக தெரியவும் ‘சஞ்சனா நீ ஒல்லியாகிட்ட, இது எப்படி சாத்தியம் என்று அவளே அவளுக்கு சபாஷ் போட்டுக் கொண்டு அறையில் இருந்து வெளியில் வந்தாள்.

 

 

நிரஞ்சனும் வந்திருக்க அவளை பார்த்தவன் பார்த்தவனே இப்படி அப்படி கூட இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தான். “ரஞ்சன் எனக்கு ரொம்ப பசிக்குது சாப்பிடலாமா. உனக்கு இப்போ பசி எடுக்காது எனக்கு தெரியும். எனக்கு ரொம்ப பசிடா

 

 

அவனை பார்த்து அசடு வழிந்தவன் சாப்பிட அமர்ந்தான். சஞ்சனாவும் அஞ்சனாவும் பரிமாறியாவாறே எல்லோரும் சாப்பிட்டு முடிக்க சுந்தரி சாமி கும்பிட்டுவிட்டு கிளம்ப சொல்ல அவர்களும் அப்படியே செய்துவிட்டு கிளம்பினர்.

 

 

சுந்தரி விபூதி வைத்துவிட அவர்கள் உடைமைகளை ஒவ்வொன்றாக கொண்டு வெளியில் வைக்கவும் வண்டி வரவும் சரியாக இருந்தது. கார்த்திக்கும் நிரஞ்சனும் ஒவ்வொன்றாக வண்டியில் ஏற்ற ஒவ்வொருவராக எல்லோருமே ஏறி அமர்ந்தனர்.

 

 

கார்த்திக் அவர்கள் செல்ல வேனை புக் செய்திருந்தான். வண்டியில் முதலில் சஞ்சு, அஞ்சு மற்றும் சுந்தரி ஏறி முதல் இருக்கையில் அமர்ந்து கொள்ள கார்த்திக்கும் நிரஞ்சனும் அவர்களுக்கு பின்னிருந்த இருக்கையில் அமர்ந்தனர்.

 

 

வண்டி அங்கிருந்து கிளம்பி சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. நிரஞ்சன் கார்த்திக்கின் காதில் கிசுகிசுத்துக் கொண்டிருந்தான்.

 

 

“டேய் கார்த்திக் இப்படி பின்னாடி உட்காருறதுக்கா நான் உங்ககூடவே வந்தேன் என்று புலம்பினான்.

 

 

“பின்னே சார் வேற என்ன ஐடியால வந்தீங்க என்றான் அவன் பதிலுக்கு

 

 

“சஞ்சுவோட ஜாலியா பேசிட்டே வரலாம்னு தான் வேறென்ன… இவ பயந்துகிட்டு என் பக்கத்துல வந்து உட்காருவான்னு தான் வந்தேன். இவ என்னமோ இப்போ என்னை கண்டுக்க கூட மாட்டேங்குறா என்று அங்கலாய்த்தான் அவன்.

 

 

“இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை… நானும் தான் அஞ்சு பார்ப்பாளான்னு பார்த்திட்டு இருக்கேன்… நான் யாரோங்கற மாதிரி போய் முன்னாடி உட்கார்ந்துகிட்டா

 

 

“கார்த்திக் இப்போ கொஞ்ச நேரத்துல அம்மா தூங்கிடுவாங்கல, அப்போ நீ முன்னாடி போய் உட்கார்ந்து அஞ்சுகிட்ட பேசு. சஞ்சுவை பின்னாடி அனுப்பி வைச்சுடு நான் அவகிட்ட பேசிட்டு வர்றேன் என்றான் தாராள மனதினனாக.

 

 

கார்த்திக் அவனை நன்றாக முறைத்தான், “ஏன்டா நான் மட்டும் முன்னாடி போய் உட்கார்ந்துக்கணும் நீ ஜாலியா ரொமான்ஸ் பண்ணிட்டு வருவா… நீ ரொம்ப நல்லவன்டா

 

 

“என்னால முடியாது அஞ்சு பின்னாடி வரட்டும்… நீ முன்னாடி போய் சஞ்சுகிட்ட பேசிட்டு இரு… நிச்சயம் முடிஞ்சிடுச்சுன்னு தான் பேரு… அவளை நான் இப்போ தான் பார்க்கறேன்… சோ நான் தா பேசுவேன் என்றான் கார்த்திக் மறுப்பாக

 

 

“டேய் உனக்காச்சும் நிச்சயம் முடிஞ்சுடுச்சு… எனக்கு இன்னும் எதுவும் ஆகலைடா… டேய் கார்த்தி கொஞ்சம் எனக்கும் பாவம் பாரு…

 

 

“அடப்பாவி உனக்கென்ன நீ நல்லா ரொமான்ஸ் பண்ணிட்டு தான் இருக்க, என் முன்னாடியே ரெண்டு பேரும் ப்ரீ ஷோ தான் காட்டுறீங்க எப்பவும்…

 

 

“ஆமா நல்லா ரொமான்ஸ் பண்ணிட்டாலும் இவளோட… அடப்போடா நீ வேற, இவ என்னைக்காச்சும் ரொமான்ஸோடா வந்து என்னை கட்டிப்பிடிச்சிருக்கா… எப்போ பார்த்தாலும் பயத்தோட தான் வந்து பிடிச்சிருக்கா….

 

 

“அது உனக்கு பொறுக்கலையா… மனுஷனை இப்படி தான் அவ இம்சை பண்ணுறா… நாங்க பேசினாலே பெரும்பாலும் சண்டையில தான் முடியுது… இன்னைக்கு காலைல கூட ஒரு பஞ்சயாத்து தான் எங்க ரெண்டு பேருக்கும்…

 

 

“சரி விடுடா புலம்பாதே… அம்மா தூங்கட்டும் அப்புறம் நான் அங்க போறேன்… என்று கார்த்திக் விட்டு கொடுத்தான் பெரிய மனதுடன்.

 

 

இருவரும் இப்படி தங்களுக்குள் மெதுவாக நடத்திய உரையாடல் காதுகளை பின்பக்கம் வைத்திருந்த சஞ்சுவின் காதுகளில் ஸ்பஷ்டமாகவே விழுந்தது.

 

 

சற்று நேரத்தில் சுந்தரி மாத்திரை சாப்பிட்டுவிட்டு தூங்கி விட சஞ்சு மெதுவாக எழுந்து பின்னே வந்தாள்…

 

 

“டேய் சஞ்சு வர்றாடா… உனக்கு மேல செம பாஸ்ட்டா அவ… என்று நிரஞ்சனின் காதில் கிசுகிசுத்தான் கார்த்திக்.

 

 

“என்னங்க நீங்க முன்னாடி வந்து உட்காருங்க… என்று நிரஞ்சனை பார்த்து சொன்னவள் “அஞ்சு நீ பின்னாடி போய் உட்காரு… என்றுவிட்டு மீண்டும் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

 

 

வேறு வழியில்லாமல் நிரஞ்சன் கார்த்திக்கை பார்க்க அவனோ பதிலுக்கு நிரஞ்சனை பரிதாப பார்வை பார்த்தான்…

 

 

நிரஞ்சன் முன்னால் சென்று சுந்தரியும் சஞ்சுவும் அமர்ந்திருந்த எதிர் இருக்கைக்கு சென்று அமர்ந்தான். அஞ்சு எழுந்து பின்னால் சென்று விட்டிருந்தாள்.

 

 

சன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த சஞ்சு சுந்தரியை அவள் மடியில் சாய்த்துக் கொண்டு வெளியில் வேடிக்கை பார்க்கலானாள்.

 

‘சரியா லூசு இவ… நான் நினைச்ச காரியத்தை கெடுத்துவிட்டுட்டு வந்து எப்படி ஜாலியா வெளிய வேடிக்கை பார்த்திட்டு வர்றா பாரு… என்று அவளை மனதிற்குள் நன்றாக திட்டினான்.

 

 

சாலையில் இரவு நேர சோடியம் விளக்கின் ஒளியில் அவள் மிகவும் அழகாக வேறு தெரிந்து தொலைத்தாள் அவனுக்கு. அவனால் பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது.

 

 

சற்று நேரம் இமைக்காமல் அவளை மேலிருந்து கீழ் வரை அங்கம் அங்கமாய் பார்த்துக் கொண்டிருந்தான். சஞ்சு மெல்ல கண்களை மூட உறங்கும் அவள் அழகை கண்களில் நிறைத்துக் கொண்டான்.

 

 

கார்த்திக் எழுந்து வந்தவன் அவனை பின்னால் செல்லுமாறு கூற “பரவாயில்லை கார்த்திக்… நீ போய் பேசிட்டு இரு, பாவம் அவ தூங்கிட்டா, என்னை பார்த்ததுல இருந்து அவளுக்கு நிம்மதியான தூக்கமே இல்லை…

 

 

“இப்போ தான் அசந்து தூங்குறா… அவளை தொல்லை பண்ண வேண்டாம்… அவ தூங்கட்டும்… என்று சொல்லி கார்த்திக்கை பின்னால் போக சொன்னான்.

 

 

விழிகளை மூடியிருந்தாலும் உறங்காதிருந்த சஞ்சுவின் காதில் அவன் பேச்சு விழ அவள் உருகிப் போனாள்.

 

 

சுந்திரியை மடி தாங்கியிருந்தவளுக்கு கால் வலிக்கும் என்று எண்ணியவன் மெதுவாக கீழே தொங்க விட்டிருந்த கால்களை அவள் பாதம் பிடித்து எடுத்து தன் மேல் வைத்துக் கொண்டான்.

 

 

பிஞ்சாய் இருந்த பாதத்தை மெல்ல கைகளால் வருடிக் கொடுத்தான். விரலால் அவள் கால் கொலுசை சுற்றி கோலமிட்டான். சஞ்சுவுக்கு அவனின் செயலில் கூச்சமாக அவன் மடியில் கிடந்த காலை உறக்கத்தில் அசைப்பது போல் மெல்ல அசைத்தாள்.

 

 

அவள் உறக்கம் கலைந்து விடுமோ என்று எண்ணியவன் அவள் பாதத்தை இருக்கையில் கிடத்தினான். கண்கள் அவனையும் மீறி செருக இருக்கையில் அமர்ந்தவாறே உறங்க ஆரம்பித்தான்.

 

 

அவன் உறங்கியதும் விழித்து பார்த்த சஞ்சு எதிரில் உறங்கியிருந்தவன் கால்களை வண்டியின் மீது முட்டு கொடுத்து உறங்கியிருக்க அவன் கால்களை மெதுவாக எடுத்து அவள் சற்று நகர்ந்து அவளருகில் வைத்தாள்.

 

 

‘ச்சே பாவம்… என் கூட பேசணும்ன்னு ஆவலா இருந்தார்… நான் தான் கெடுத்துட்டேன்… சாரி நிரு… என்று மனதார அவனிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள்.

 

 

அதிகாலை விடியலில் அவர்கள் சென்னையை அடைந்திருக்க வண்டி பெருங்களத்தூர் தாண்டி தாம்பரதிற்குள் நுழைய விழித்திருந்த நிரஞ்சன் வண்டியை நிறுத்தச் சொன்னான்.

 

 

“என்ன ரஞ்சன் இங்கேயே இறங்க போறியா… இங்க தான் உங்க வீடா என்றான் கார்த்திக்.

 

 

“ஆமாடா கார்த்திக் என்றவன் “அம்மா நான் இங்கயே இறங்கிக்கறேன்… நீங்க பத்திரமா கிளம்புங்க… என்றான்.

 

 

“ஏன்ப்பா நாங்க உன்னை வீட்டிலேயே இறக்கி விட்டுடுறோம்… கார்த்திக் சொல்லுப்பா என்றார் சுந்தரி.

 

 

“ஒண்ணும் பிரச்சனையில்லைம்மா… நான் போய்டுவேன், நீங்க கிளம்புங்க… என்றவன் அஞ்சுவிடம் சொல்லிக் கொண்டு சஞ்சுவை பார்த்து தலையசைத்து விட்டு விடைபெற்றான்.

 

 

அதுவரை உடனிருந்தவன் இறங்கி சென்றதும் சஞ்சுவுக்கு பெரும் வலியாக இருந்தது. அவன் கண்ணில் இருந்து மறையும் வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

 

மறுநாள் தான் மகன் ஊரில் இருந்து வருவான் என்று எண்ணியிருந்த ஸ்ரீமதி காலையிலேயே தரிசனம் கொடுத்த மகனை பார்த்து ஆச்சரியமானார். “என்னப்பா இப்படி சொல்லாம கொள்ளாம வந்திருக்கே… என்றவர் வெகு நாளைக்கு பின் கண்ட மகனை வாஞ்சையுடன் பார்த்தார்.

 

 

இதுவரை பெண்ணை நேரில் பார்க்கவில்லை என்பதால் புதனன்று எல்லோரும் சஞ்சுவின் வீட்டிற்கு சென்றனர் அவளை நேரில் பார்க்க… சஞ்சுவின் வீட்டினரும் நிரஞ்சனை நேரில் பார்க்கவில்லை என்பதால் அவனையும் உடன் அழைத்து சென்றனர்.

 

 

சஞ்சுவுக்கு இது நாள் வரை நிரஞ்சனை பார்க்கும் போது வேறாகவே தோன்றியதில்லை. ஏனோ இன்று பெண் பார்க்க எல்லோரும் வருகிறார்கள் என்பது உள்ளுக்குள் பதட்டத்தை கொடுத்தது.

 

 

ஊரில் கூட அவன் மட்டுமே தனியே வந்து அவளை பார்த்திருக்க அதை அவள் எப்போதும் போல் இயல்பாக எடுத்துக் கொண்டாள். இன்று அவர்கள் வீட்டில் வேறு எல்லோரும் வருவார்களே…

 

 

கை கால் எல்லாம் சில்லிட்டு போனது அவளுக்கு. அஞ்சுவோ அவளை பார்த்து நன்றாக சிரித்துக் கொண்டிருந்தாள். “என்னடி என்னை பார்த்து எதுக்கு இளிக்கிற

 

 

“இல்லை உனக்கு கூட பயம், வெட்கம் எல்லாம் வருமான்னு யோசிச்சேன் சஞ்சு… அதான் சிரிச்சேன்… உனக்கு எல்லாமே வருதுடி… என்று அஞ்சு கலாய்த்தாள்.

 

 

“உனக்கென்ன மாமாவையே கட்டிக்க போற, டென்ஷன் எதுவும் இல்லை… எனக்கு அப்படியா அவரோட அம்மா, அப்பா தங்கைன்னு எல்லாரும் வருவாங்க… நான் எப்படி நடந்துக்கணும்னு தெரியலை பயமாயிருக்குடி அஞ்சு என்று அவள் கைகளை பிடித்துக் கொண்டாள்.

 

 

அவளின் பயம் அஞ்சுவுக்கு புரிந்தது. ஆதரவாக உடன்பிறந்தாளின் கைகளை பற்றிக் கொண்டாள். “சீய் லூசாடி நீ, உனக்கு எதுக்கு பயம். நிரஞ்சன் மாமாவை உனக்கு பிடிச்சு இருக்குல. எதுக்கும் பயப்படாதே அவங்க அப்பா அம்மாவை நம்ம அப்பா அம்மா மாதிரி பாரு உனக்கு பயம் வராது…

 

 

“அவரோட தங்கைக்கு நம்ம வயசு தான் இருக்கும், பிரிண்ட்டுன்னு நினைச்சுக்கோ சரியா… என்று ஆறுதல் கூறினாள்.

 

 

சஞ்சுவுக்கு அவளின் பேச்சு சற்ற நிம்மதி கொடுத்தது, “ஹேய் சஞ்சு எல்லாம் இருக்கட்டும், நீ ஏன் நிருவை மாமான்னு கூப்பிட்டே…

 

 

“அக்காவோட கணவரை வாடா போடான்னா கூப்பிட முடியும். மாமான்னு மரியாதையா தானே கூப்பிட முடியும். நீ மட்டும் என்ன முதல்ல கார்த்திக்குன்னு தானே அவரை கூப்பிட்டு இருந்த எங்க கல்யாணம் நிச்சயம் ஆனதும் மாமான்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டே அது மாதிரி தான்

 

 

“எப்படியோ நான் அக்கான்னு ஒத்துக்கிட்டியே… என்றாள் சஞ்சுவிடம் “ஆமா நீயே அக்காவா இருக்கு… உன்னை பார்த்தா எனக்கு தங்கச்சி மாதிரியா இருக்கு… அக்கா மாதிரி தானே இருக்கு அதான் அப்படி சொன்னேன்…. என்று சொல்லி முடிக்க சஞ்சு அவளை துரத்திக் கொண்டிருந்தாள்.

 

 

வாசலில் கார் வந்து நின்றதையும் அதிலிருந்து நிரஞ்சன் குடும்பத்தினர் வந்து இறங்கியதையும் கவனிக்காமல் சஞ்சுவும் அஞ்சுவும் ஒருவரையொருவர் துரத்திக் கொண்டிருந்தனர்.

 

 

சத்தம் கேட்டு உள்ளிருந்து வந்த சுந்தரி இருவரையும் ஒரு அதட்டல் போட்டுவிட்டு வந்தவர்களை வரவேற்க சஞ்சனாவோ வேகமாக உள்ளே சென்று மறைந்தாள்.

 

 

நிரஞ்சனின் தங்கை அவளை பார்க்க உள்ளேயே வந்துவிட்டாள். “ஹாய் அண்ணி… என்று சிநேகமாக புன்னகைத்தவளை பார்த்து பதிலுக்கு சஞ்சுவும் புன்னகைத்தாள். “ஹலோ ரெண்டு பேரும் ஐடென்டிகல் ட்வின்ஸ் இல்லை போல இருக்கே

 

 

“ரெண்டு பேருக்கும் நெறைய வித்தியாசம் இருக்கு. நீங்க அஞ்சு அண்ணி தானே… என்று அவளுக்கும் கை கொடுத்தாள் கவிதா. அஞ்சு அர்த்தத்துடன் சஞ்சனாவை பார்த்தாள்.

 

 

“என்ன அண்ணி அம்மா அப்பா எல்லாரும் உங்களை நேர்ல பார்க்க தான் காத்திட்டு இருக்காங்க. வெளிய போவோமா…

 

 

“ஹ்ம்ம் போகலாம், உங்க ஹஸ்பன்ட் வரலையா… உ… உங்க…உங்க அண்ணா வரலையா??? என்றாள் சஞ்சு.

 

 

“பார்த்தீங்களா அஞ்சு அண்ணி… உங்க சகோதரி முக்கியமா யாரை விசாரிக்கறாங்க பாருங்க… என்னோட ஹஸ்பன்ட் வந்திருக்கார். எங்க அண்ணனை நாங்க விட்டுட்டு வந்திடுவோமா… அவரையும் இழுத்துட்டு தான் வந்திருக்கோம்…

 

 

“சரி வாங்க போவோம்… என்று கூற சஞ்சுவை கவிதாவும் அஞ்சுவும் அழைத்துக் கொண்டு வந்தனர். சஞ்சுவுக்கு தான் பெரும் அவஸ்தையாக இருந்தது. படப்படப்பாக வந்தது அஞ்சுவின் கைகளை இறுக்கி பிடித்துக் கொண்டாள்.

 

 

நல்லவேளையாக யாரும் அவளை நமஸ்கரிக்க சொல்லி வற்புறுத்தவில்லை. அதுவே அவளுக்கு நிம்மதியாக இருந்தது, ஸ்ரீமதி அருகே வந்து அவளிடம் இயல்பாக பேசிக் கொண்டிருக்க அவளுக்கும் அவரை பிடித்து போனது.

 

 

சுந்தரி வந்ததில் இருந்து நிரஞ்சனின் தந்தை நாகேந்திரனை முறைத்துக் கொண்டிருந்ததை யாருமே கவனிக்கவில்லை. நிரஞ்சன் சஞ்சுவின் தந்தை ரங்கராஜனிடம் சகஜமாக பேசியதில் அவருக்கு பெருமிதம் தாங்கவில்லை.

 

 

எவ்வளவு பெரிய உயரதிகாரி எந்தவித பந்தாவும் இல்லாமல் வெகு சாதாரணமாக உரையாடுகிறார் என்று வியந்து போனார். நிரஞ்சனும் கார்த்திக்கும் ஒரு நண்பர்கள் போல் பேசிக் கொண்டதில் மகள்களை பற்றியும் அவர்கள் வாழ்க்கை பற்றியும் மனதின் ஓரத்தில் இருந்த கவலை அவரை விட்டு நீங்கியது.

நிரஞ்சனின் பார்வை மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது அவளையே நோட்டமிட்டுக் கொண்டிருந்தது. சஞ்சு அவனை கண்டு கொண்டால் தானே அவள் சுவாரசியமாக மாமியாரிடமும், நாத்தனாரிடமும் கடலை வறுத்துக் கொண்டிருந்தாள்.

 

 

கொஞ்சம் நேரம் பார்த்துவிட்டு கடுப்பாகியவன் “மாமா… என்று சஞ்சுவின் தந்தையை அழைத்தான். “சொல்லுங்க மாப்பிள்ளை… என்று அவர் நிரஞ்சனை பார்க்க “உங்க பொண்ணுகிட்ட கொஞ்சம் பேசணும், உங்க அனுமதி வேணும்… என்று நேரடியாக போட்டு உடைத்தான்.

 

 

“டேய் ஆனாலும் உனக்கு இது ஆகாதுடா… நேத்து பேச முடியலைன்னு இன்னைக்கு மாமாகிட்டவே நேரடியா கேட்டுட்டியே பெரிய ஆளு தான்டா… நான் தான் வாயை திறந்து எதுவும் கேட்க முடியலை நீயாச்சும் கேளு என்று பெருமூச்செறிந்தான் கார்த்திக்.

 

 

“என்னது பேசணுமா, ஏன் நீங்க தினமும் பார்த்துட்டு தானே இருக்கீங்க… அப்புறம் என்ன தனியா வேற பேசணும்… என்றாள் அவன் தங்கை கவிதா.

 

 

அவனோ யாருக்கும் மறுமொழி கூறாமல் ரங்கராஜன் என்ன பதில் சொல்லுவார் என்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

 

அவரோ “சஞ்சு என்று அழைக்க “ப்பா… என்றவள் அவர் முன் நின்றாள்.

 

 

“மாப்பிள்ளை உன்கிட்ட பேசணுமாம்…

 

 

“ப்பா… என்றாள் சற்றே ஏறிய குரலில்

 

 

“மாப்பிள்ளையை மேல உன்னோட ரூம்க்கு கூட்டிட்டு போய் பேசு என்று அவர் தொடர “அப்பா…..என்றாள் இன்னும் சத்தமாக

 

 

“என்னம்மா ப்பா… ப்பான்னு சொல்லிட்டு இருக்க, போம்மா நான் தானே சொல்றேன் போ… என்று அவர் விரட்ட நிரஞ்சனை திரும்பி பார்த்தாள்.

 

“தேங்க்ஸ் மாமா… என்றவன் “நாங்க தினமும் பேசிக்கறோம்ன்னு கேட்டீங்களே… நாங்க பேசிக்கறது என்னனு கார்த்திக்கிட்ட கேளுங்க என்று போகிற போக்கில் ஒரு வெடியை கொளுத்திவிட்டு நமுட்டு சிரிப்பு சிரித்துவிட்டு போக எல்லோரும் திரும்பி கார்த்திக்கை பார்த்தனர்.

Advertisement