அத்தியாயம் –1
அந்தி வானில் சூரியன் தன் செந்நிற கதிரை இருள் போர்வைக்குள் கொஞ்சம் கொஞ்சமாக மறைத்துக் கொண்டிருக்க ஊருக்கு ஒதுக்குபுறமாக இருந்த அந்த பண்ணை வீடு ஒளி பெற்றது.
பரபரப்பாக வேலை நடந்து கொண்டிருக்க அவன் அப்பெண்ணை அழைத்தான். “என்ன செண்பகம் ரொம்ப சந்தோசமா இருக்கியா” என்று அவன் கேட்க பதிலுக்கு மனம் நிறைந்த புன்னகையை அவள் உதிர்த்தாள்.
“ஏன்னு உங்களுக்கு தெரியாதா???”
“ஹ்ம்ம் தெரியும் இன்னைக்கு விருந்தில்லையா!!!அதானே!!!”
“ஆமாம் தெரிஞ்சுகிட்டே கேட்குறீங்களே”
“சரி நான் போய் மத்த வேலைகளை கவனிக்கறேன்”
“ஆமாம் இன்னும் கொஞ்ச நேரம் தான் வந்திடுவாங்க” என்றவள் அங்கிருந்து நகர்ந்தாள்.
கதிரவன் முற்றிலுமாய் தன் கிரணத்தை மறைத்து இருளில் மறைந்திருக்க வெள்ளி நிலா மெல்ல எட்டி பார்த்து சிரித்தது.
இருள் சூழ்ந்த அடர்ந்த மரங்கள் அடர்ந்த அந்த தோப்பில் மெதுவாக நடந்து வந்துக் கொண்டிருந்தான் அருண். ‘ச்சே இந்த அப்பாவுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை. இப்பவே ஊருக்கு போ வேலையை முடிச்சுட்டு வான்னு என்னை அனுப்பி வைச்சுட்டார்’
‘இப்போ பார்த்தா வந்த வேலையும் முடியலை. சரி வேற வழியில்லை இன்னைக்கு நம்ம தோட்டத்து வீட்டிலேயே தங்கிட்டு நாளைக்கு வேலை முடிஞ்சதும் கிளம்ப வேண்டியது தான்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே நகர்ந்தான்.
தனியா போய்கிட்டு இருக்கோம் ஒரு ஆள் அரவமிருக்கா என்று மேலும் அவன் நடந்து கொண்டிருக்க அவன் கைப்பேசி அழைத்து நானிருக்கிறேன் என்று சொல்ல அதை எடுத்து காதுக்கு கொடுத்தான்.
“ஹலோ சொல்லுடா நிரஞ்சன். என்ன அதிசயம் உனக்கு நேரம் கிடைச்சு எனக்கு போன் பண்ணியிருக்க”
“அண்ணா என்ன இப்படி சொல்லிட்ட நான் உனக்கு போன் பண்ண மாட்டேனா என்ன???”
“உனக்கு நேரமிருக்காதே அதான் கேட்டேன். சொல்லுடா என்ன விஷயம்”
“போன வேலை எல்லாம் முடிஞ்சுதா???”
“எங்கடா முடிஞ்சுது நாளைக்கு வரைக்கும் இழுக்குது. அவ்வளவு அவசரமா இந்த இடத்தை நாம வித்து தான் ஆகணுமா. இந்த அப்பா சொன்னா கேட்க மாட்டேங்குறார்” என்றான் சலித்தவனாக
“அண்ணா அப்பா சொன்னா எதாச்சும் காரணமிருக்கும். நீ அப்பா சொன்ன ஆளை போய் பார்த்தியா, அவங்க என்ன சொன்னாங்க???”
“ஹ்ம்ம் பார்த்தேன்டா அவர் நாளைக்கு ஒருத்தர்கிட்ட கூட்டி போறேன் சொல்லி இருக்கார். அனேகமா அவர் தான் வாங்குவார்ன்னு நினைக்கிறேன், அவர்கிட்ட போன்ல பேசிட்டேன். நம்ம இடத்தை பார்த்திருக்காராம்”
“அவர்க்கு நம்ம இடம் ரொம்ப பிடிச்சிருக்காம், நாளைக்கு பேசிட்டோம்ன்னா அப்புறம் ஒரு நல்ல நாள் பார்த்திட்டு நாம வந்து ரிஜிஸ்டர் பண்ணி கொடுத்திட வேண்டியது தான்”
“சரிண்ணா நீ இப்போ எங்க இருக்க”
“நம்ம தோப்பு வீடு ஒண்ணு இங்க இருக்குல அங்க தான் போயிட்டு இருக்கேன். நைட் அங்க தங்கிட்டு காலையில போய் வேலையை முடிச்சுட்டு ஊருக்கு வந்திடுவேன்”
“ஓ!!! ஆமா அந்த இடம் ஊருக்கு வெளிய இல்ல இருக்கு. அங்கயா போறே??? ஏன்??? ஊருக்குள்ள உனக்கு வேற இடம் கிடைக்கலையா???”
“எதுக்குடா வெளிய வேற இடத்தில தங்கிட்டு, அதான் நம்ம வீடே இருக்குல அதான் அங்கேயே போயிட்டேன்”
“சரிண்ணா நீ வீட்டுக்கு போயிட்டு அப்புறம் போன் பண்ணு” என்று விட்டு நிரஞ்சன் போனை வைத்தான்.
மீண்டும் அந்த காரிருளில் நடக்க ஆரம்பித்தான் அவன். மேகங்கள் அவ்வப்போது நிலவை மறைக்க இருளும் ஒளியுமாக மாறி மாறி அவ்விடத்தை ஆக்கிரமித்தது.
‘அப்பா ஒரு வழியா வீட்டுக்கு வந்தாச்சு’ என்று நினைத்துக் கொண்டு கையோடு எதற்கும் இருக்கட்டும் என்று அவன் கொண்டு வந்திருந்த வீட்டு சாவியை வெளியே எடுக்க அந்த வீடு வெளிச்சமாக இருந்தது.
‘என்னடா இது இவ்வளவு வெளிச்சமா இருக்கு’ என்று நினைத்துக் கொண்டே வெளிக்கதவை திறந்து உள்ளே சென்றான்.
“வாங்க தம்பி எப்படி இருக்கீங்க நீங்க வருவீங்கன்னு ஐயா சொன்னாங்க” என்று முன்னே வந்தனர் செண்பகமும் அவள் கணவரும்.
‘யாருடா இது இவ்வளோ அழகா இருக்கா’ என்று செண்பகத்தின் மீது பார்வையை பதித்தவாறே நின்றிருந்தான்.
“ஐயா என்ன அங்கேயே நின்னுட்டு இருக்கீங்க??? உள்ளார வாங்க” என்றான் செண்பகத்தின் கணவன் மாரிசாமி.
“ஆமா நீங்கள்லாம் யாரு??? இங்க என்ன பண்ணுறீங்க நான் இங்க வர போறேன்னு அப்பாகிட்ட கூட சொல்லவே இல்லையே. உங்களுக்கு எப்படி தெரியும்???” என்று கேள்விகளை அடுக்கினான்.
“நீங்க இடம் முடிக்க தானேங்க வந்திருக்கீங்க, ஐயா காலையிலேயே போன்ல சொன்னாங்க நீங்க இங்க வந்தாலும் வருவீங்கன்னு அதான் எல்லாம் தயாரா வைச்சு இருக்கோம். நாங்க தான் இந்த வீட்டை பார்த்துக்கறோம் தம்பி”
“ஓ!!! அப்படியா பரவயில்லையே அப்பா நல்ல வேலை தான் செஞ்சிருக்கார். ஆமா இவங்க யாரு???” என்றவனின் பார்வை செண்பகத்தின் மீது இருந்தது.
“என் பொண்டாட்டிங்க நாங்க ரெண்டு பேரும் தான் வீட்டை பார்த்துக்கறோம்”
“ஹ்ம்ம்…. சரி” என்றவன் உள்ளே நுழைந்து அங்கிருந்த படுக்கையறைக்கு சென்றான். குளித்து உடைமாற்றிவிட்டு அவன் வர “ஐயா சாப்பிட வாங்க” என்று அவனை அழைக்க வந்தாள் செண்பகம்.
அவள் அழகில் மயங்கி நின்றவனின் பார்வை அவளறியாமல் அவளை மேய்ந்தது. ‘எவ்வளவு அழகா இருக்கா எப்படி அந்த ஆளை போய் கட்டிகிட்டா’
‘இந்த ஊருல இவ்வளவு அழகா ஒரு பொண்ணா, சும்மா பளிங்கு சிலை மாதிரி இருக்காளே. இவளை பார்த்தாலே என்னென்னமோ செய்யுதே. ஒரு முயற்சி செஞ்சு பார்ப்போமா’ என்று அவன் எண்ணம் கேவலமான சிந்தனைகளில் ஓடியது.
“ஐயா நான் ரொம்ப நேரமா கூப்பிட்டு இருக்கேன் நீங்க பேசாம இருக்கீங்க. சாப்பிட வாங்க” என்றாள்.
“நீ போ நான் இதோ வர்றேன்” என்றவன் எழவும் அவன் கைபேசி சிணுங்கவும் சரியாக இருந்தது.
மறுபடியும் இவன் தானா “சொல்லுடா நிரஞ்சன்”
“வீட்டுக்கு போயிட்டியா அண்ணா. பிரச்சனை ஏதுவுமில்லையே”
“அதெல்லாம் இல்லை நான் நல்லபடியா வந்துட்டேன் வீட்டுக்கு”
“சாப்பிட்டியா???”
‘இவன் வேற நேரம் காலம் தெரியாம கேள்வி கேட்டுட்டு. எங்கடா என்னை சாப்பிட விடறே’ என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டே “இல்லைடா இனிமே தான் சாப்பிட போறேன்”
“வரும் போதே சாப்பாடு வாங்கிட்டு வந்துட்டியா???”
“இல்லைடா இங்க தான் வேலைக்கு ஆள் இருக்காங்களே… ஹலோ… ஹலோ”
‘ச்சே போன் கட் ஆகிருச்சே, சிக்னல் சுத்தமா இல்லையே. சரி அப்புறம் போன் பண்ணிக்கலாம்’ என்று நினைத்துக் கொண்டு போனை அங்கேயே வைத்துவிட்டு சாப்பிட சென்றான்.
சாப்பிட்டுவிட்டு அவன் அறைக்குள் நுழைந்தவனின் எண்ணம் முழுக்க அப்பெண் சென்பகத்தை பற்றியே இருந்தது. அவள் பார்த்து பார்த்து பரிமாறியது அவனுக்குள் போதையை உண்டு பண்ணியது.
அந்த குளிரும் அவன் உடல் வேர்த்தது. அவளை பற்றியே எண்ணிக் கொண்டு படுக்கையில் விழுந்தான். ‘ச்சே அடுத்தவன் பொண்டாட்டியை நினைக்கிறோமே தப்பில்லையா’ என்று அவன் மனம் அவனுக்கு எடுத்துரைத்தது.
‘என்ன தப்பு அவ இவ்வளவு அழகா இருந்தா பார்க்காம என்ன செய்வாங்க’ என்று மற்றொரு மனம் சமாதானப்படுத்தியது. ஊருக்கு போறதுக்கு முன்ன ஒரு முயற்சி செய்து பார்த்திடணும் என்று நினைத்துக் கொண்டவனை உறக்கம் ஆட்கொண்டது.
காற்று சுத்தமாக நின்றது போல் இருந்தது, சட்டென்று வியர்வை அரும்பி அவன் தூக்கம் கலைந்தது. ‘என்னது கரண்ட் போயிடுச்சா’ என்று முணுமுணுத்தவன் எழுந்து அமர்ந்தான்.
காற்றில் நிஷாகந்தி பூவின் வாசம் வீச ‘இதென்ன பூ ரொம்ப வாசமா இருக்கே’ என்று நினைத்துக் கொண்டு அதை ஆழ்ந்து சுவாசித்தான். அவன் எழவும் அந்த அறைக்கதவு தட்டப்படவும் சரியாக இருந்தது. இருட்டில் கைகளை துழாவியவாறே எழுந்து சென்று கதவை திறக்க செண்பகம் கையில் மெழுகுவர்த்தியுடன் ஒரு தேவதை போல் நின்றிருந்தாள்.
அவன் கண்களில் அவளை மொத்தமாக விழுங்கியவாறே அவளை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். “கரண்ட் போச்சுங்க அதான் இதை கொண்டு வந்தேங்க”
“வந்து உள்ளே வைச்சுட்டு போ”
உள்ளே வந்து அவள் மெழுகுவர்த்தியை மேசை மீது வைத்துவிட்டு திரும்ப மெழுகுவர்த்தி அணைந்தது.
“அச்சோ மெழுகுவர்த்தி அணைஞ்சு போச்சே, நீங்க பயப்படாதீங்க” என்று சொல்லிக் கொண்டு அவளருகில் அவன் வந்து நிற்க திறந்திருந்த அறைக்கதவு படாரென அறைந்து மூடிக் கொண்டது.
மனதில் ஒரு பயம் வர நிமிர்ந்து பார்த்தவன் ‘ச்சே காத்தடிச்சு இருக்கும்’ என்று நினைத்துக் கொண்டு அவளை நோக்கி முன்னேறினான். அருகில் சென்று அவள் கைப்பற்ற கதவு படார் என்று திறந்தது.
ஏனோ அவனுக்கு எதுவோ சரியில்லை என்று தோன்ற பதட்டத்துடன் நிமிர்ந்து அவளை பார்க்க எதிரில் யாருமேயில்லை. ‘என்ன இது யாருமில்லையே அப்போ நான் யார் கையை பிடிச்சுட்டு இருக்கேன்’ என்று பார்க்க அவன் கையில் அப்பெண்ணின் கையை பிடித்திருந்தது.
அந்த கை மட்டும் அந்தரத்தில் மிதந்தது. அவன் உடல் முழுவதும் வியர்வையில் நனைய “யார் அது??? என்ன… என்ன வேணும் உங்களுக்கு” என்று பதட்டமானது.
அந்த அறையின் சன்னல் படார் படார் என சத்தம் எழுப்ப அவனுக்குள் குளிர் பிறந்தது. அறை விளக்கு விட்டு விட்டு எரிய வேகமாக திறந்திருந்த கதவினருகில் வர கதவு மீண்டும் அடைத்துக் கொண்டது.
அவன் கைபேசி மேஜையில் இருந்தது நினைவுக்கு வர வேகமாக சென்று அதை கையில் எடுத்து நிரஞ்சனுக்கு முயற்சி செய்தான். நிரஞ்சன் போனை எடுத்து ஹலோ என்று சொல்வது கேட்க பதிலுக்கு இவன் பேசுவது அவனுக்கு கேட்கவேயில்லை.
“ஹலோ நிரஞ்சன் நான் பேசுறது கேட்குதா… ஹலோ… ஹலோ”
“அண்ணா… ஹலோ அண்ணா போன் பண்ணிட்டு பேசாம இருக்க… ஹலோ… ஹலோ” என்று அவன் கத்திக் கொண்டிருக்க “நிரஞ்சன் நான் பேசுறது உனக்கு கேட்கலையாடா… எனக்கு பயமா இருக்குடா இங்க என்னென்னமோ நடக்குதுடா”
“நிரஞ்சன் பயமாயிருக்குடா” என்று மீண்டும் மீண்டும் அதையே சொல்லிக் கொண்டிருக்க போன் அணைந்து போயிருந்தது.
அவன் போனில் சுத்தமாக சிக்னல் விட்டு போயிருந்தது. “நான் பக்கத்துல இருக்கும் போது என்ன பயம்” என்ற இனிய குரல் அவனருகில் கேட்க அவன் நிமிர்ந்து பார்த்தான்.
எதிரில் அவள் நின்றிருந்தாள் பயத்தில் அவன் நாக்கு உலர்ந்து போனது. “நீ… நீங்க யாரு???”
“நான் யாருன்னா முக்கியம் நான் தானே உங்களுக்கு முக்கியம்” என்று அவள் ஒரு மாதிரி குரலில் சொல்ல அவன் விதிர்த்து போனான்.
“என்ன நான் வேணாமா” என்றவள் அவன் கையை பிடிக்க அவனுக்கு ஷாக் அடித்தது போல் இருந்தது.
“விடு… விடு… விடு என் கையை ஆ..ஆ….ஆஆஆஆஆஆ” என்று கத்தினான் அவன்.
“என் பொண்டாட்டி ரொம்ப அழகு இல்ல” என்று மறுபுறம் ஒரு குரல் கேட்க குரல் வந்த திசையில் திரும்பி பார்த்தான், செண்பகத்தின் கணவன் மாரி நின்றிருந்தான்.
“யார் நீங்க உங்களுக்கு என்ன வேணும். எதுக்கு என்னை இப்படி பயமுறுத்தி பார்க்கறீங்க” என்றவன் அதற்கு மேல் அங்கு நின்றால் எதுவும் தப்பாகி விடும் என்று யோசிக்க வேகமாக வெளியில் ஓடினான்.
அரக்க பரக்க வெளிக்கதவை திறந்துக் கொண்டு வேகமாக அவன் வந்த அந்த தோப்பின் வழியே வேகமாக ஓடினான். காற்று வேறு பயமுறுத்துவதாக வீச காய்ந்த சருகுகள் மிதிபடும் ஓசை வேறு அவனை மேலும் பயமுறுத்தியது.
தூரத்தில் இருவர் அத்தோப்பில் எதையோ பறித்துக் கொண்டிருக்க மூச்சிரைக்க அவர்கள் முன் சென்று நின்றான். அங்கும் காற்றில் நிஷாகந்தி மலரின் வாசம் வீசியது.
“சார்… சார்… ஊருக்குள்ள எப்படி போகணும் சார்… பஸ் எதுவும் கிடைக்குமா” என்று குனிந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தவரின் தோளை தொட்டு உலுக்க நிமிர்ந்த அவரை பார்த்ததும் அவனுக்கு மூச்சே நின்று விடுவது போல் இருந்தது.
அங்கு மாரி தான் நின்றிருந்தான் செண்பகமும் அவனருகில் வந்து நிற்க “ஊருக்கு போகணுமா??? நீ மேல போய்டு, போ… போ… போடா…” என்றவளின் கண்கள் பெரிதாகி அவனை மேலும் கலங்க வைக்க அவள் சிரிக்கும் சத்தம் நள்ளிரவை உலுக்க தூரத்தில் கேட்ட ஊளை சத்தம் அங்கு எதுவோ நிகழப் போவதாய் அறிவித்தது.
மறுநாளைய விடியலில் அந்த தோப்பு வீட்டில் நிரஞ்சனின் அண்ணன் அருண் இறந்து கிடந்தான்….
______________________
சஞ்சனாவுக்கு காலையில் இருந்தே பதட்டமாக இருந்தது. இன்னைக்கு தான் என்னோட முதல் அசைன்மென்ட் நல்லபடியா முடிக்கணும் ஆண்டவா என்று இறைவனை பிரார்த்தித்தவள் அவள் அன்னையிடம் சொல்லிக் கொண்டு வேலைக்கு சென்றாள்.
அவளுடைய ஸ்கூட்டியில் கிளம்பியவள் நேரே அவர்கள் பத்திரிகை அலுவலகத்திற்கு சென்றாள். எடிட்டரை பார்த்து பேசிவிட்டு அவள் முதல் அசைன்மென்டான பெருங்களத்தூர் காவல் நிலையத்திற்கு சென்றாள்.
அவளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலை அது, வேலைக்கு சேர்ந்து முதல் ஒரு மாதம் மற்றவர்களுடன் சேர்ந்து சென்றவள் இன்று தான் முதல் முறையாக தனித்து செல்கிறாள்.
அதுவும் அந்த ஏரியா சப்-இன்ஸ்பெக்டர் யாருக்கும் அவ்வளவு எளிதில் பேட்டி கொடுக்க மாட்டாராம். நல்ல பல காரியங்கள் செய்யும் அவரை எப்படியாவது பேட்டி எடுத்து வரவேண்டும் என்பதே அவளுக்கு கிடைத்த முதல் அசைன்மென்ட்.அப்படி அவர் என்ன தான் நல்ல விஷயம் செஞ்சிருக்கார் என்று உடன் இருந்தோரிடம் விசாரித்து தெரிந்து கொண்டாள்.
அவர் இருக்கும் காவல் நிலையத்தையும் அந்த பகுதியையும் சுத்தமாக வைத்திருப்பதும் மரக்கன்றுகள் நட்டு நீர் ஊற்ற வைப்பது என்று சத்தமில்லாமல் அவர் இருக்கும் பகுதியை தூய்மை பகுதியாக மாற்றி இருக்கும் அவரை பாராட்டாமல் அவளால் இருக்க முடியவில்லை.
காவல் நிலையத்தின் வாசலில் ஸ்கூட்டியை நிறுத்தியவள் வாசலில் துப்பாக்கி ஏந்தி நின்றிருந்த காவலரிடம் சென்று அவரை பற்றி லேசுபாசாக விசாரித்தாள். அவரும் எஸ்ஐ பற்றி எடிட்டர் சொன்னது போல் சொல்லவே எப்படி அவரிடம் பேட்டி எடுப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது காவல் நிலையத்தில் இருந்து போலீஸ் போல் இருந்த ஒருவர் வெளியில் வந்ததை பார்த்தவள் நேரே அவரிடம் சென்றாள். ‘ஆஹா ஒரு ஆள் வர்றான், யூனிபார்ம் போடாம வர்றான் ஒரு வேலை டியூட்டி முடிஞ்சு போறான் போல இவனை விசாரிப்போம்’ என்று அருகில் வந்தாள்.
“சார் ஒரு நிமிஷம்” என்றதும் அவன் திரும்பி அவளை பார்த்தான்.
‘என்ன’ என்பது போல் அவன் பார்வை இருக்க ‘வாய்விட்டு கேட்டா குறைஞ்சு போயிடுவானோ’ என்று நினைத்துக் கொண்டே வெளியில் சிரித்தவாறே அவனிடம் “சார் நீங்க இந்த ஸ்டேஷன்ல தான் வேலை பார்க்கறீங்களா?”
“அதை தெரிஞ்சுட்டு நீங்க என்ன பண்ணப் போறீங்க???”
“அது வந்து சார்… உங்க எஸ்ஐ எப்படின்னு கேட்கலாம்ன்னு தான்”
“அவரை பத்தி உங்களுக்கு என்ன?? நீங்க யாரு எதுக்கு அவரை பத்தி விசாரிக்கறீங்க???”
“சார் நான் நிழல்கள்!!! நிஜங்கள்!!! பத்திரிக்கையில இருந்து வர்றேன். உங்க சாரை பேட்டி எடுக்கணும் அதுக்கு தான் கேட்டேன்???”
“சார்க்கு அதெல்லாம் பிடிக்காது நீங்க கிளம்புங்க”
“ஏன் சார் இப்படி இருக்கறீங்க நீங்க??? இப்போ என்ன கேட்டேன் ஒரு பேட்டி தானே??? ஒரு ரெண்டு வார்த்தை பேசினா அவர் குறைஞ்சு போய்டுவாரா??? நாலு பேருக்கு நல்லது பண்றது தெரியாம பண்ணா எப்படி சார்”
“ஒரு நாலு வார்த்தை இவரை பத்தி போட்டா தானே நாளைக்கு மத்தவங்களுக்கும் கொஞ்சமாவது உரைக்கும். அவங்களும் தங்களை திருத்திக்க எதாவது செயவாங்க. பொது மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வு வரும்”
“இதெல்லாம் சொன்னா உங்க சாருக்கு புரியாதா??? முடியாது சார் நான் இங்க இருந்து அவரோட பேட்டி வாங்காம போக மாட்டேன். அவர் இப்போ உள்ள இருக்காரா இல்லையா???” என்று பொரிந்தவளை அமைதியாக பார்த்தான் அவன்.
“சார் வெளிய போறார்… போயிருக்கார்… வர்றதுக்கு ஒரு அரைமணி நேரம் ஆகும்” என்றான் அவன்.
“ரொம்ப தேங்க்ஸ் இந்த அளவுக்காச்சும் சொன்னீங்களே! ஆமா ஏன் சார் இப்படி தொடைநடுங்கியா இருக்கீங்க. உங்க சார் என்ன அவ்வளோ பெரிய அப்பாடக்கரா என்ன???”
“ரொம்ப பயமுறுத்தறீங்க!!! எனக்கு ஒரு சந்தேகம்” என்று நிறுத்தியவளை என்னவென்பது போல் பார்த்தான்.
“ஏன் சார்??? என்னன்னு கேட்டா கூடவா உங்க சார் திட்டுவார். சும்மா பார்வையாலே கேட்குறீங்க. இதெல்லாம் பார்த்தா அவர் ஒரு சர்வாதிகாரியா இருப்பார் போல இருக்கே???”
“உங்க சந்தேகம் என்னன்னு சொல்லுங்க???”
“அப்பா வாயை திறந்து பேச காசு கேட்பீங்க போல இந்த ஸ்டேஷன்ல இருக்க எல்லாரும்”
“சரி… சரி… முறைக்காதீங்க விஷயத்துக்கு வரேன். அதொண்ணுமில்லை போலீஸ் எல்லாம் ஒண்ணு தொப்பையோட இருக்காங்க. இல்லைன்னா உங்கள மாதிரி கரப்பான்பூச்சி மாதிரி இருக்காங்க”
“ஒரு சிங்கம் சூர்யா மாதிரி, சாமி விக்ரம் மாதிரி எல்லாம் கட்டுமஸ்தா பார்த்ததும் போலீஸ்ன்னு மரியாதை வர்ற போல இருக்க மாட்டாங்களா???” என்றவளை அவன் முறைத்தான்.
“எதுக்கு சார் முறைக்கறீங்க, கொஞ்சம் ஜிம்முக்கு போய் வொர்க் அவுட் பண்ணி உடம்பை தேத்த பாருங்க சார். அப்படியே தொப்பையா இருக்க போலீஸ் எல்லாம் தொப்பை குறைக்க சொல்லுங்க” என்று அவனுக்கு இலவச ஆலோசனை வழங்க அவன் நன்றாகவே அவளை முறைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
வாசலில் நின்றிருந்தவள் அரைமணி நேரம் கடந்தும் ஒருவரும் உள்ளே செல்லவில்லையே என்று அங்குமிங்கும் பார்த்தபடி நின்றிருந்தவளை உள்ளிருந்து வந்த ஏட்டு ஒருவர் எஸ்ஐ அழைப்பதாக கூறி அழைத்துச் சென்றார்.‘அப்பா அந்த பெரிய மனுஷனுக்கு இப்பவாச்சும் என்னை பார்க்கணும் தோணிச்சே’ என்று நினைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள்…
நீலவானில் மலர்ந்த நிலவாய்
மலர்ந்து நிற்கும்
வெள்ளைப் பூவே நீ பேரழகு…
இன்றுதான் மணம் முடித்து
விதவையான பெண்ணைப் போல்
உனக்கும் ஏன் இந்த
விதவை வாழ்க்கை…..
இரவில் பூத்த சிறுமணித் துளியில்
இதழ்வாடி உன் வாழ்வைப்
போக்கிக் கொண்டாயே…
வெண்மை நிறத்தில்
மனம் மயக்கும் மணத்தில்
அழகாய் மலர்ந்த அனந்தசயனப் பூவே…
இருள்வாசியான உனக்கு
இருவாட்சி என்ற பேரும் சரிதானோ…
அத்தியாயம் –2
ஸ்கூட்டியை ஓரமாக நிறுத்தி பூட்டிவிட்டு உள்ளே சென்றாள். ‘எங்க போய்ட்டார் இந்த எஸ்ஐ’ என்று யோசித்துக் கொண்டே சுற்று முற்றும் பார்க்க வெளியில் அவள் கடைசியாக விசாரித்தவன் ஒரு மேஜையில் அமர்ந்திருக்க ‘இவன்கிட்டேயே கேட்போம்’ என்று அருகில் சென்றாள்.
அருகில் சென்ற பின்னே தெரிந்தது அவன் தான் அந்த எஸ்ஐ என்று செய்வதறியாது அவள் திருதிருவென்று விழிக்க “என்ன மேடம்?? இவன் தான் எஸ்ஐன்னு பார்க்கறீங்களா???”
“என்ன செய்ய நீங்க சினிமா ஹீரோ மாதிரி போலீஸ் இருக்கணும்னு எதிர்பார்க்கறீங்க. ஆனா நிஜம்ன்னு ஒண்ணு இருக்கில்லை, உங்களுக்கு நிழல் பிடிச்ச அளவுக்கு நிஜம் பிடிக்கறது இல்லை”
“போலீஸ்ன்னா சிங்கம் சூர்யா மாதிரி மீசை முறுக்கிட்டு விரைப்பா கட்டுமஸ்தா எதிர்பார்க்கறீங்க. என்னை மாதிரி ஆளை பார்த்தா உங்களுக்கு போலீஸ் மாதிரி தெரியாதுல்ல???”
“இல்லை சார் அது… அது… வந்து… தெ… தெரியாம…” என்று அவள் இழுக்க “நான் தான் அந்த எஸ்ஐன்னு தெரிஞ்சா மட்டும் உங்க எண்ணம் மாறிடுமா என்ன??? நான்னு தெரியாம என்கிட்ட சொல்லிட்டீங்க, தெரிஞ்சு இருந்தா உங்க மனசோடவே அந்த எண்ணம் நின்னு போயிருக்கும் அப்படித்தானே???” என்று கூற அமைதியாக நின்றிருந்தாள் அவள்.
அவள் அமைதி அவனுக்கு இணக்கமாக தோன்ற அவனின் கோபம் சற்றே மட்டுப்பட்டது. “உட்காருங்க” என்றதும் தயங்கி கொண்டே அமர்ந்தாள்.
“நான் அவ்வளவு தூரம் சொல்லியும் என்னை பார்த்து பேட்டி எடுத்துட்டு தான் போகணும்ன்னு அப்படி என்ன பிடிவாதம் உங்களுக்கு. உங்க பேரு என்ன மிஸ்??” என்று அவன் இழுக்க “சஞ்சனா” என்றாள்.
நம்மை பேரை கேட்டானே இவன் பேரு என்ன என்று யோசித்தவள் அவன் சீருடையில் இருந்த பேட்ஜ்ஜை பார்த்தாள். ‘ஓ!! நிரஞ்சனா’ என்று நினைத்துக் கொண்டாள்.
“நான் கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லலை”
“சார் இது தான் என்னோட முதல் அசைன்மென்ட் நான் கண்டிப்பா உங்களை பேட்டி எடுத்தே தீருவேன்”
“அதுக்கு தான் என்ன அவசியம் இருக்கு”
“அந்த அவசியம் பத்தி நீங்க ஏன் சார் கவலைப்படுறீங்க???” என்றதும் அவனுக்குள் கோபம் உற்பத்தியானது. முகம் இறுக “என்ன சொல்ல வர்றீங்க???” என்று அடிக்குரலில்கடுமையாக வினவினான்.
“சாரி சார், உங்களை பத்தி நெறைய பேருக்கு தெரியணும். நீங்க இந்த ஸ்டேஷன் வந்த பிறகு நெறைய மாற்றம் இந்த பகுதியில வந்திருக்கு. நீங்க கொண்டு வந்திருக்கற மாற்றத்தை நானும் பார்த்தேன் சார். பார்க்கவே அழகா இருக்கு”
“இது எல்லாருக்கும் தெரிய வேண்டாமா??? மாற்றம் இங்க மட்டும் இருந்தா போதுமா??? வெளிய தெரிஞ்சா தானே மத்தவங்களும் முயற்சி எடுப்பாங்க. நான் அப்போவே உங்ககிட்ட இதை பத்தி சொன்னேனே” என்று ஏதேதோ சொல்ல அவன் சற்றே கரைந்தான்.
“ஹ்ம்ம்… ஓகே…” என்றவன் அவள் கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாரானான். அவள் கேள்விகளை ஆரம்பிக்க பத்து நிமிடத்திற்கு மேல் அவன் அவளுக்கு இடம் கொடுக்கவில்லை. “போதும் மிஸ். சஞ்சனா, இதோட முடிச்சுக்கலாம். உங்களுக்கு இந்த அளவுக்கு தகவல் போதும்ன்னு நினைக்கிறேன். அப்போ…!!!!” என்று நிறுத்தினான்.
‘பக்கி… பக்கி… என்னை வெளிய போன்னு சொல்லாம சொல்றான் பாரு. இதெல்லாம் எனக்கு தேவைதான் இவன் தானா எனக்குன்னு வந்து மாட்டணும். வேற யாராச்சும் ஒரு பிரபலத்தை போய் பேட்டி எடுக்குற மாதிரி வந்திருக்கக்கூடாது’ என்று மனதார அவனை திட்டி தனக்குள் புலம்பினாள்.
“அப்போ நான் கிளம்புறேன் சார்” என்று அவனிடம் விடைப்பெற்று கிளம்பினாள்.
அந்த வார இறுதியில் அந்த பத்திரிகையில்வெளியாகி இருந்த அவனை பற்றிய கட்டுரையை பார்த்தவனுக்கு ஆச்சரியமும் வியப்பும் மேலிட்டது.
ஏதோ அவள் அவனிடத்தில் பேசியதை வைத்து மட்டுமே அவள் எழுதியிருப்பாள் என்று அவன் நினைத்திருக்க அவளோ அவன் இதற்கு முன் வேலை செய்த அனைத்து காவல் நிலையத்திலும் அவனை பற்றி விசாரித்து ஒரு தொகுப்பாக்கியிருந்தாள்.
அதை பார்த்துவிட்டு அவனை பாராட்டி அவனுக்கு அழைப்புகள் வந்து கொண்டிருந்தது. ஏனோ அவளுக்கு போன் செய்து நன்றி தெரிவிக்க வேண்டுமென்று தோன்ற அந்த பத்திரிக்கையின் எடிட்டருக்கு போன் செய்து அவள் எண்ணை வாங்கினான்.
ஏதோ புது எண்ணிலிருந்து அழைப்பு வர யோசனையுடனே அழைப்பை ஏற்றவள் “ஹலோ…” என்றாள்.
“ஹலோ!!! நான் நிரஞ்சன் பேசறேன்”
“ஹலோ… சார் சொல்லுங்க சார் எனக்கு போன் பண்ணியிருக்கீங்க. என் நம்பர்… ஓ!!! எடிட்டர்கிட்ட வாங்கினீங்களா”
“எதுக்கு அவசரம்… உங்க எடிட்டர் தான் நம்பர் கொடுத்தார். உங்க கட்டுரை ரொம்ப நல்லா வந்திருக்கு அதை சொல்ல தான் கூப்பிட்டேன். தேங்க்ஸ்”
“யாரோ பாராட்டு எல்லாம் பிடிக்காது பேட்டி கொடுக்க முடியாதுன்னு சொன்ன மாதிரி இருக்கு” என்று குறும்பாக கேட்டாள்.
“இப்பவும் சொல்றேன் எனக்கு பாராட்டு பிடிக்காது”
“அப்போ எதுக்கு அந்த கட்டுரையை பார்த்திட்டு எனக்கு போன் பண்ணீங்களாம்”
“பாராட்டு தான் பிடிக்காது, பாராட்டுறது பிடிக்காதுன்னு சொல்லவே இல்லையே”
‘அய்யோ எப்போ பார்த்தாலும் எனக்கு பல்பு கொடுத்திட்டே இருக்கானே. மறுபடியும் நான் தான் அவுட்டா, ச்சே…’ என்று தலையில் அடித்துக் கொண்டாள்.
“ரொம்ப ரொம்ப நன்றி சார் உங்க பாராட்டுக்கு”
“என்னை பத்தி ரொம்பவும் அலசி ஆராய்ந்து எழுதியிருக்கீங்க”
“அது தானே சார் என்னோட வேலை. நீங்க பேசினது மட்டும் வைச்சு நான் எழுதி இருந்தா என்னை அன்னைக்கே வீட்டுக்கு அனுப்பி இருப்பாங்க”
“ஓகே மறுபடியும் நன்றி, நான் வைக்கிறேன்” என்றுவிட்டு போனை வைத்துவிட்டான்.
‘இவனையெல்லாம்… ச்சே இவரையெல்லாம் எப்படி போலீஸ்ல எடுத்தாங்க. எப்போ பார்த்தாலும் உர்ருன்னு இருக்காரு. சிரிக்க வருமா வராதா??? இவங்கம்மா இவரை எல்லாம் பெத்தாங்களா இல்லை செஞ்சாங்களா???’ என்று பல கேள்விகள் ஓடியது அவளுள்.
‘நான் பதில் சொல்றதுக்கு முன்னாடி அவ்வளோ தான் அப்படிங்கற மாதிரி இவரு பாட்டுக்கு போனை வைச்சுட்டு போய்ட்டார். லூசு லூசு’ என்று திட்டி தீர்த்தாள்.
உண்மையிலேயே அவனை பற்றிய அந்த கட்டுரை அவளுக்கு நல்ல பெயரையே வாங்கி கொடுத்திருந்தது. சில மாதங்கள் கழித்து அவனை பற்றிய அவள் அறிய முயற்சி தகுந்த தகவல் ஏதும் அதன் பின் அவளுக்கு கிடைக்கவில்லை.
அவன் வேலை பார்த்த காவல் நிலையத்தில் அவனுக்கு மாற்றல் வந்து வேறு ஊருக்கு சென்றுவிட்டான் என்று மட்டுமே கூறினர். மேற்கொண்டு அவனை பற்றி அவளால் ஒன்றும் அறியமுடியவில்லை. அவ்வப்போது அவளுக்கு அவனை பற்றிய நினைவுகள் வந்து கொண்டிருந்தது.
இரண்டு வருடங்கள் கடந்திருக்க அன்று காலையிலேயே அவளை அலுவலகத்தில் வந்து சந்திக்க சொல்லியிருந்தார் எடிட்டர். “அம்மா எனக்கு நேரமாகுது. நான் இன்னைக்கு வெளிய சாப்பிட்டுக்கறேன்”
“எடிட்டர் வேற இன்னைக்கு சீக்கிரம் வரச்சொல்லி இருக்கார்” என்று அவள் பரபரக்க அஞ்சனா அவளெதிரில் வந்து நின்றாள். அஞ்சனா சஞ்சனாவின் உடன் பிறந்த இரட்டை. முதலில் அவள் பிறந்ததால் தன்னை அக்காவென்று சொல்லிக் கொள்ளுவாள்.
“சஞ்சு நீ இன்னைக்கு சீக்கிரம் தானே போறே, ப்ளீஸ்டி நீ போகும் போது என்னை ஸ்கூல்ல விட்டுட்டு போய்டேன். நீ போற வழி தானே, எனக்கும் நேரமாகுது” என்றவளை முறைத்தாள் சஞ்சனா.
“உன்னோட வண்டி என்னாச்சு, எதுக்கு என்கூட வரணும்ங்கற”
“ஹேய் என்னடி ரொம்ப பண்ணுற அக்கான்னு ஒரு மரியாதை இருக்கா உனக்கு?? என்னோட வண்டி சர்வீஸ் கொடுத்து இருக்கேன், என்னமோ நான் தினமும் உன்னை வண்டியில கூட்டிட்டு போக சொன்னா மாதிரி அலட்டிக்கறே”
“யாருடி அக்கா??? நான் தான்டி உனக்கு அக்கா சயின்ஸ் தெரியுமா உனக்கு??? உனக்கு முன்னாடி கருவானது நான் தான் பின்னாடி வந்தவ முன்னாடி வந்துட்டா நீ அக்காவா ஆகிடுவியா” என்று எகிறினாள் சஞ்சனா.
“அம்மா தாயிங்களா வயித்துக்குள்ள இருக்கும் போதும் ரெண்டு பேரும் என்னை தொல்லை பண்ணீங்க. இப்போ வெளிய வந்தும் என்னை நிம்மதியா இருக்க விடுறீங்களா??”
“ஏன் சஞ்சு நீ அவளை ஸ்கூல்ல விட்டுட்டு போனா தான் என்ன உனக்கு?? அஞ்சு நீயும் தான் அவளை எதுக்கு வம்பிழுக்குற. இன்னும் அஞ்சு நிமிஷம் தான் உங்க ரெண்டு பேருக்கும் டைம் அதுக்குள்ள நீங்க கிளம்புறீங்க” என்று இருவரையும் பெற்ற மகராசி ராணி கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
“வந்து தொலை” என்று முணுமுணுத்துக் கொண்டே வெளியே சென்றாள் சஞ்சனா.
கதவை தட்டிவிட்டு எடிட்டர் அறைக்குள் நுழைந்தாள் அவள். “குட் மோர்னிங் சார்”
“என்னம்மா சொன்ன மாதிரியே வந்துட்டியே. இது தான் உன்கிட்ட எனக்கு பிடிச்சது, சொன்ன நேரத்துக்கு முன்னாடியே வந்துடுற, உன் வேலையும் நேரத்துக்கு முடிக்கற” என்று பாராட்டினார் அவர்.
“எல்லாம் உங்ககிட்ட கத்துக்கிட்டது தான் சார்” என்று எவரெஸ்ட்டை (அதாங்க நெறைய ஐஸ் வைக்கிறது) தூக்கி அவர் மேல் வைத்தாள்.
“புத்திசாலி பொண்ணும்மா” என்று மீண்டும் அவளை மெச்சியவர் “ஒரு முக்கியமான கட்டுரைம்மா நீ தான் அவங்களை பேட்டி எடுக்கணும். அதுக்கு தான் உன்னை சீக்கிரம் வரச்சொன்னேன்”
“புதுசா ஒரு ஐபிஎஸ் ஆபீசர் வந்திருக்கார் அவர் தான் சென்னை சிட்டியோட அசிஸ்டெண்ட் கமிஷனர். நீ அவரை தான் பார்த்திட்டு பேட்டி எடுத்துட்டு வரணும். கட்டுரை நல்லா வரணும்மா, நீ தான் பண்ணும்ன்னு என்னோட விருப்பமும். அப்புறம் ஒண்ணு சொல்ல மறந்திட்டேன் அங்கு உனக்கு ஒரு சின்ன சர்ப்ரைஸ் காத்திட்டு இருக்கும்.”
“சார் அவரோட பேரு, நான் அவரை எங்க போய் பார்க்கணும். என்ன சர்ப்ரைஸ் சார்??”
“என்னம்மா நீ எங்க போய் பார்க்கணும்ன்னு கேட்குற, அவரை கமிஷனர் ஆபீஸ்ல தான் போய் பார்க்கணும். நீ நேர்ல போய் பாரும்மா, நீ கிளம்பு இப்போ கிளம்பினா தான் சரியா இருக்கும். சரிம்மா நீ கிளம்பு நான் விட்டா பேசிட்டே இருப்பேன், நீ வெளிய போகும் போது சப்எடிட்டரை உள்ள வரச்சொல்லும்மா” என்று முடித்துவிட்டார் அவர்.
____________________
கார்மேகம் சில பல வருடங்களுக்கு முன் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறிவர், மீண்டும் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் திரும்பியிருந்தார். மனைவி மக்கள் எல்லோரும் சென்னையில் இருக்க அவர் தன் சொந்த ஊரை நோக்கி பிரயாணம் செய்துக் கொண்டிருந்தார்.
ஊருக்கு வந்ததும் அவர்கள் வீட்டு சாவியை கொடுத்து வைத்திருந்த அவர் நண்பர் பக்கத்து வீட்டு ராமசாமியின் வீட்டிற்கு சென்று சாவியை வாங்கி கொண்டு அடுத்திருந்த அவர் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் வரப்போகும் விஷயம் முன்பே நண்பருக்கு சொல்லியிருந்ததால் ஆள் வைத்து அவர் வீட்டை சுத்தப்படுத்தி வைத்திருந்தார்.
வீட்டிற்கு வந்ததும் அவர் மனைவிக்கு அழைத்து அவர் ஊருக்கு வந்துவிட்ட விபரம் உரைத்தவர் பேத்தியை பற்றி விசாரித்துவிட்டு மகன் எப்போது ஊருக்கு வருவான் என்று கேட்டுவிட்டு போனை வைத்தார்.
‘எத்தனை வருஷமாச்சு இந்த ஊருக்கு வந்து’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அங்குலம் அங்குலமாக வீட்டை ஆராய்ந்தார். மரஊஞ்சலின் மீது ஏறி அமர்ந்தவருக்கு நினைவுகள் சில வருடம் பின்னோக்கி சென்றது.
அவர் நினைவிலேயே உழன்றிருந்தவருக்கு வயிறு பசிக்க ஆரம்பிக்க வாசலில் அழைப்பு மணி ஓசை கேட்டது. கதவை திறந்து பார்க்க ராமசாமிஉணவுக்காய் அவரை அழைத்து சென்றார்.
சாப்பிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தவர் ஊஞ்சலிலேயே படுத்து உறங்கி விட யாரோ கதவை தட்டும் ஒலி கேட்க திடுக்கிட்டு விழித்தார். ‘யார் இந்த நேரத்துல’ என்று யோசித்துக் கொண்டே கதவருகே சென்றவர் “யாரது?” என்றார்.
“அப்பா நான் தான்ப்பா கதவை திறங்க” என்ற மகனின் குரலில் தெளிந்தவர் கதவை திறந்தார். “என்னடா இந்த நேரத்துல வந்திருக்க, லேட் ஆச்சுன்னா நாளைக்கு வந்திருக்க வேண்டியது தானே” என்றார்.
“இல்லைப்பா நீங்க தானே சொன்னீங்க வேலையிருக்கு கிளம்பி வான்னு அதான் கிளம்பி வந்துட்டேன்”
“சாப்பிட்டியா??? எம் பேத்தி உன்னை விட்டிருக்க மாட்டாளே அவளை எப்படி சமாளிச்ச”
“அதெல்லாம் சமாளிச்சாச்சுப்பா… டிபன் கையோட வாங்கிட்டு வந்துட்டேன் மணி எட்டு ஆகப் போகுதே அதான். ஆமா நீங்க சாப்பிட்டாச்சாப்பா?” என்றான் கேள்வியாக.
“ஹ்ம்ம் அப்போவே ஆச்சு… ராமு வீட்டில தான் சாப்பிட்டேன்”
“சரி நீ சாப்பிடு” என்றவர் அவனுக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வந்தார்.அவன் சாப்பிட்டு கொண்டிருக்க அவர் மனைவிக்கு அழைத்து அவர் பேத்தியுடன் பேசலாம் என்று போனை கையில் எடுத்தார். மூன்று ரிங் சென்றிருக்க அவர் மனைவி போனை எடுத்தார்.
“என்னங்க சாப்பிட்டாச்சா???”
“நான் சாப்பிட்டேன், நீ மருமக குட்டிம்மா எல்லாம் சாப்பிட்டாச்சா??”
“எல்லாரும் சாப்பிட்டோம் அப்புறம் நம்ம பையனுக்கு இன்னைக்கு வேலை இருக்காம். அதுனால நாளைக்கு கிளம்புறானாம் உங்ககிட்ட சொல்ல சொன்னான்” என்றதும் கார்மேகம் விழித்தார்.
“என்ன சொல்ற மரகதம்?? சங்கர் இப்போ தானே இங்க வந்தான், நீ என்ன இப்படி சொல்ற???”
“ஏங்க என் பக்கத்துல உட்கார்ந்திட்டு அவன் சொன்னதை தான் நான் உங்ககிட்ட சொன்னேன். வேணும்ன்னா நீங்க அவனையே கேளுங்க…” என்றவர் மகனிடம் போனை கொடுத்தார்.
“அப்பா என்னப்பா நான் நாளைக்கு தான் வரமுடியும்ப்பா…” என்று அவன் சொல்ல தூக்கி வாரிப்போட்டது கார்மேகத்திற்கு. மகனிடம் பேசிக் கொண்டே ஹாலுக்கு விரைய அங்கு யாருமேயில்லை.
போனில் ஏதேதோ பேசிவிட்டு வைத்தவருக்குள் நெஞ்சுக்குள் திகில் பரவியிருந்தது. என்ன நடக்கிறது என்று யோசித்துக் கொண்டு வீட்டை மீண்டும் சுற்றி அலசி ஆராய்ந்தார்.
மகன் வந்ததிற்கான அடையாளமே இல்லாதிருக்கவும் குழம்பிப் போனார். ச்சே… நான் தான் தூங்கி போனதுல கனவு கண்டிருப்பேன் போல என்று நினைத்துக் கொண்டு தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு விளக்கணைத்து படுத்தார்.
நடுஇரவில் மீண்டும் வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்க நன்றாக கண்விழித்து பார்த்தார். உள்ளுக்குள் திகில் பரவி உடல் சூடாகி வியர்த்தது அவருக்கு.
முயன்று வரவழைத்த தெம்புடன் “யாரது???” என்று கேட்க “அப்பா நான் தான்ப்பா??? நீங்க போன் பண்ணி வைச்சதும் அம்மா தான் என்னமோ ஏதோன்னு என்னை உடனே கிளம்பி போகச் சொன்னாங்க. அதான்ப்பா கிளம்பி வந்தேன்”
படாரென்று கதவை திறந்தார் எதிரில் மகன் நின்றிருக்க சற்றே ஆசுவாசமானார். “என்னடா வரலைன்னு சொல்லிட்டு வந்து நிற்குற”
“நீங்க வேற போன் பண்ணீங்களா… அம்மா தான் என்னை உடனே கிளம்பச் சொன்னாங்கப்பா அதான் கிளம்பி வந்தேன். தூக்கமா வருதுப்பா போய் தூங்கலாம், காலையில பேசிக்கலாம்” என்றுவிட்டு அவன் உள்ளே சென்றுவிட்டான்.
அவர் மகன் உள்ளே சென்றதும் ஏதோ தோன்ற கைபேசியை எடுத்தார் கார்மேகம். அவர் மனைவிக்கு அழைப்பு விடுக்க “ஹலோஎன்னங்க” என்று அரைத்தூக்கத்தில் சலித்தவாறே பேசினார் அவர் மனைவி.“நீ எதுக்கு சங்கரை இங்க அனுப்பி வைச்சே, நாளைக்கு தானே வர்றேன்னு சொன்னான். இப்போ நடுராத்திரில அவன் வரலைன்னா தான் என்ன???”
“என்னங்க என்ன உளர்றீங்க??? நான் தான் அப்போவே சொன்னேனே அவன் காலையில தான் வருவான்னு திரும்ப திரும்ப அவன் வந்துட்டான் வந்துட்டான்னு அதே சொல்லிட்டு இருக்கீங்க” என்றவரின் குரலில் தூக்கம் கலைந்துவிட்ட எரிச்சலும் கணவர் கேட்டதையே மீண்டும் மீண்டும் கேட்டதாலும் சலிப்பாக பதிலளித்தார்.
“சங்கர் இப்போ என்ன பண்ணுறான்???” என்ற கேள்விக்கு அவர் பின்னிருந்து பதில் வந்தது.
“உங்க பக்கத்துல தான்ப்பா நின்னுட்டு இருக்கேன்” என்ற பதிலில் திகைத்து திரும்ப சங்கர் புன்னகையுடன் அவர் பின் நின்றிருந்தான்.
“தூங்கிட்டு இருக்காங்க” என்று மனைவி அளித்த மறுமொழி காதில் விழுந்து கருத்தில் பதிய ‘அப்போ இவன் யாரு??’ என்று அவர் வாய்விட்டு கேட்க “என்னை தெரியலையாப்பா” என்று சொல்லிக் கொண்டே நெருங்கி வந்தான் அவன்.
“நீ யாரு??? நீ… நீ… என் பையன் இல்லை… உனக்கு என்ன வேணும்???” என்றார் திக்கிக் கொண்டே
திடிரென்று விளக்குகள் அணைந்து அறை முழுதும் இருளில் முழ்கியது. பயத்தில் கார்மேகத்திற்கு மூச்சடைத்தது.
கைபேசியை உயிர்பிக்க அதன் ஒளியில் தட்டுத்தடுமாறி கதவினருகில் வந்து நிற்க கதவை திறக்க முடியவில்லை.
பலம் கொண்ட மட்டும் கதவை திறக்க முயற்சி செய்ய முடியாமல் போனது கதவை தட்டவாவது செய்வோம் என்று நினைத்து அவர் தட்ட சத்தமே கேட்கவில்லை.
கார்மேகத்திற்கு வியர்த்து வடிய ஒன்றும் புரியாமல் நின்றிருந்தவர், மனைவிக்கு அழைப்பு விடுத்தார். மணி அடித்துக் கொண்டிருந்ததே தவிர அதை அவர் மனைவி ஏற்காமலே இருந்தார்.
பயத்தில் இதயம் விட்டு விட்டு துடித்தது, இதயம் நெஞ்சுக்குழிக்குள் வந்து நின்றது. இரவின் நிசப்தத்தை கிழித்தவாறே ஒரு சத்தம் கேட்டது. யாரோ அவரை நெருங்கி வரும் காலடியோசை கேட்டது. அவர் வேகமாக திரும்ப யாரோ அவரை இழுக்கவும் அவர் பயத்தில் கைபேசியை தவறவிடவும் சரியாக இருந்தது.
சட்டென்று அறையில் இருள் நீங்கி ஒளி வெள்ளம் பாய்ந்தது, அவர் பயத்துடனே திரும்பி இழுத்தது யாரென்று பார்க்க சுவற்றில் மாட்டி இருந்த ஹேங்கரில் அவர் போட்டிருந்த பனியன் மாட்டியிருந்தது.
மெதுவாக அவர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்றார். இனியும் அந்த வீட்டில் தன்னால் நிம்மதியாக உறங்க முடியாது என்று உணர்ந்தவர் தன் நண்பரும் பக்கத்து வீட்டில் வசிப்பவருமான ராமசாமியின் வீட்டிற்கு சென்று விடுவது என்று முடிவெடுத்தார்.
அப்போது தான் இரண்டு விஷயங்களை உணர்ந்தார், காற்றில் நிஷாகந்தி பூவின் வாசம் மிதந்து வந்தது. முதலில் அவர் கதவை திறந்து அவர் மகனை வரவேற்ற போது அவர் மகன் கையோடு கொண்டு வந்திருந்த உணவு பொட்டலம் சாப்பிட்டதற்கு அறிகுறியாய் கலைந்து மேஜையில் இருந்தது.
எது நிஜம் எது உண்மை என்று தன்னையே ஆராய்ச்சி செய்தவருக்கு வெளியே சென்று விடுவது ஒன்று மட்டுமே சரியாக பட விளக்கை கூட அணைக்காமல் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே சென்று கதவை இழுத்து பூட்டினார்.
வெளியில் வந்ததும் அமாவாசையின் கும்மிருட்டு மேலும் பயம் கொள்வதாய் இருந்தது. ராமசாமியின் வீட்டை நோக்கி எட்டி நடை போட்டார்.
அவரின் ஒவ்வொரு காலடிக்கும் மறுமொழி போல் அவர் பின்னோடே இன்னொரு காலடியோசையும் கேட்டது. அவர் வீட்டில் இருந்த போது உணர்ந்த அதே பூவின் வாசம் மீண்டும் அவர் நாசியை வந்தடைந்தது.
திரும்பி பார்க்கும் துணிவில்லாது நடையை தொடர முயல “கார்மேகம்” என்ற இனிய பெண் குரலின் அழைப்பில் தன்னை மீறி திரும்பி பார்த்தவர் அப்படியே உறைந்து போனார்.
எதிலிருந்தோ தப்பிப்பவர் போன்று நடையை விட்டு வேகமாக ஓட ஆரம்பித்தவர் எதன் மீதோ மோதி திரும்ப அதிர்ச்சியில் உறைந்தவரின் உணர்வுகள் மெல்ல மெல்ல இழக்க கண்கள் நிலைக்குத்தி ஆகாசத்தை பார்த்தவாறே அங்கேயே விழுந்தார்.
மறுநாளைய செய்தித்தாள்தனியே வீட்டில் இருந்த ஐம்பத்தி எட்டு வயது மதிக்கத்தக்கவர் இறந்துகிடந்தார் என்ற செய்தியை தாங்கி வந்திருந்தது…
பிறப்பொன்று இருந்தால்
இறப்பென்பது நிச்சயம்….
உயிரைப் பறிக்கும் உரிமை
கொடுத்தவனுக்கு மட்டுமே…
கிள்ளிப் போட என் உயிரென்ன
கிள்ளுக் கீரையா…..
சொல்லில் அடித்ததில்லை…
சொல்லாமல் அடித்ததில்லை…
என் உயிரை எடுத்தாய் நீ…
போகட்டும் என்று விட
அது ஒன்றும் இலவசமாய் கிடைத்ததல்ல….
என் வாழ்க்கை…. என் கனவையும்
சேர்த்தல்லவா அழித்து விட்டாய்….
மீண்டும் வருவேன்…..
அருவான உருவில் வந்து
உயிர் தன்னை குடிப்பேன்….
மீண்டும் நானே வருவேன்….