உயிரே நமக்காக

அத்தியாயம் 09

“நானும் அவங்க கூட போய்ட்டு வரட்டுமா தேவி?” 

 விஜயன் சாதாரணமாக கேட்டாலும், அந்த கண்களில், மனைவி அனுமதி தந்துவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பு மின்னியதைக் கண்டுகொண்ட தேவகிக்கு, மறுப்பு சொல்ல ஏனோ மனம் வரவில்லை. 

 பைக் பந்தயங்கள் எந்த அளவிற்கு விஜயனை ஈர்க்குமோ, அதே அளவிற்கு நீண்ட தூர பைக் பிரயாணங்களின் மீதும் கணவனுக்கு காதல் உண்டு என்பதை, தங்களுக்கு திருமணம் ஆன இந்த ஒருவருடத்தில் தேவகி நன்கு அறிந்திருந்தாள். எனவே, கணவனின் ஆசைக்கு மறுப்பு சொல்ல அவளுக்கு மனம் வரவில்லை. 

 சம்மதம் சொன்ன மனைவியை, கட்டி அணைத்து முத்தம் கொடுத்து நன்றி சொன்னான் விஜயன். 

தேவகி சம்மதிக்கவும், தங்கள் பிரயாணத்திற்கான ஏற்பாடுகளை, துரிதமாக செய்ய ஆரம்பித்தார்கள் நண்பர்கள். 

அந்த பயணம் எப்படியும் பத்து நாட்களுக்கு மேல் நீளும் என்பதால், தேவகியோடு தங்கள் வீட்டில் ரோஸியைத் தங்கச்சொல்லி விஜயன் கேட்டுக் கொண்டான். ஹாஸ்டலில் தங்கியிருந்த ரோஸியும் அதற்கு சம்மதித்தாள். 

திட்டமிட்டபடி அவர்கள் புறப்படும் நாளும் வந்தது. ஒரு அதிகாலை நேரத்தில் தங்கள் பயணத்தை தொடங்கினார்கள் நண்பர்கள். மனைவிக்கு ஆயிரம் பத்திரங்கள் சொல்லி, கிளம்பி சென்றிருந்தான் விஜயன்.

“உன் புருஷனை சீக்கிரம் உன் கையில் கொண்டு வந்து ஒப்படைச்சிடுவோம். இந்த ஒரு தடவை மட்டும் இந்த அண்ணன்களுக்காக, பொறுத்துக்கோம்மா” என்று வசந்த் சொல்ல, ராகுலும், சுனிலும் அப்படித்தான் என்பது போல, தேவகியைப் பார்த்து சிரித்து வைத்தார்கள்.

ஆளுக்கொரு பைக்கில் தான் கிளம்பியிருந்தார்கள். பைக் பில்லியனில் தங்களுக்கு தேவையான பொருட்களை, பெரிய ட்ராவல் பேக்கில் வைத்து கட்டிக் கொண்டார்கள்.  

அவர்கள் கிளம்பி செல்லவும் வீட்டுக்குள் வந்த தேவகிக்கு, மொத்தவீடும் வெறுமையாக காட்சியளித்தது. ‘கணவன் தன்னோடு இல்லாத இந்த நாட்களை எப்படி கழிக்கப் போகிறேனோ தெரியவில்லையே?’ என்று அப்போதே மலைப்பாக இருந்தது தேவகிக்கு. 

 அன்று வேலைக்கு போய்விட்டு, திரும்ப வீட்டுக்கு வரும்போது, ரோஸி தேவகியோடு வருவதாக சொல்லியிருந்தாள்.

 ‘எத்தனை பேர் என்னோடு இருந்தாலும், என் விஜூ என்னோடு இருந்தது போலாகுமா?’ என்று நினைத்தாள் தேவகி. தன் எண்ணத்தின் போக்கில், தேவகிக்கே சிரிப்பு வந்தது. 

 கணவன் மீது காதலாகி கசிந்துருகி நின்ற இந்த புதிய அனுபவமும் கூட நன்றாகத்தான் இருந்தது தேவகிக்கு.

ஒருவழியாக புறப்பட்டு மருத்துவமனைக்கு வந்திருந்தாள் தேவகி. தேவகியின் சோர்ந்திருந்த முகத்தைப் பார்த்து, “என்னடி?… அண்ணா கிளம்பின அன்னைக்கே இப்பிடி டல்லடிக்குற? இதுக்கு பேசாம, நீங்க போக வேண்டாம்னு அண்ணா கிட்ட சொல்லியிருக்கலாம்ல. நீ அப்படி சொல்லியிருந்தா அண்ணா கண்டிப்பா போயிருக்க மாட்டாங்க” என்றாள் ரோஸி. 

‘என் மனதை முகம் அப்படியா பிரதிபலிக்கிறது!’ என்று வியந்து போன தேவகி, “கண்டிப்பா நான் சொல்லியிருந்தா, விஜூ கிளம்பியிருக்கமாட்டாங்க தான். இது எனக்கும் தெரியும் ரோஸி. அதே போல அவங்க விருப்பத்துக்கு நான் தடைசொல்லவே மாட்டேங்குறது, அவங்களுக்கும் தெரியும். அப்படியிருக்கும் போது அவங்க நம்பிக்கையை நான் எப்படி பொய்யாக்க முடியும்? சொல்லு..” என்றாள். 

“யப்பா சாமி… தப்பித்தவறி கூட, உங்கிட்ட இதைப்பத்தி இனி கேட்கவே மாட்டேன் ஆத்தா. எப்பிடி தான், இப்படி எல்லாம் பதில் சொல்லுவீங்களோ, தெரியலை” என்று ரோஸி கைகளை விரிக்க, சிரித்தாள் தேவகி. 

அதன்பிறகு வேலை அவர்களை இழுத்துக்கொண்டது. பணிமுடிந்து சாயங்காலம் இருவரும் வீட்டுக்கு வந்தார்கள். அங்கிருந்த இன்னொரு படுக்கையறையில் ரோஸி தங்கிக் கொண்டாள். 

தினமும் இரவு ஏழுமணியிலிருந்து எட்டு மணிக்குள், ஏதாவது ஒரு எஸ் ட்டி டி பூத்திலிருந்து ( S T D booth) போன் செய்து விடுவான் விஜயன். 

அந்த நேரத்திற்காக, அறைக்குள் நடையாய் நடக்கும் தோழியை கிண்டலடித்தே ஒருவழியாக்குவாள் ரோஸி. ஆனால், கணவனும் மனைவியும் பேச ஆரம்பித்ததும், அவர்களுக்கு தனிமை கொடுத்து விலகியும் விடுவாள்.

தங்களுடைய பயண அனுபவத்தைப் பற்றி தினமும் கதைக்கதையாக சொல்லும் விஜயன், “உன்னைப் பிரிஞ்சு, என்னால முடியலை தேவி. ஏன்தான் இந்த பசங்க கூட புறப்பட்டு வந்தேனோ தெரியலை? பேசாம நீங்களே போய்ட்டு வாங்க ராசாக்களா ன்னு அனுப்பி வச்சிருக்கணும்” என்று பிரயாணத்தின் மூன்றாவது நாளே புலம்ப ஆரம்பித்து விட்டான். 

தனக்கு குறையாமல் தன் கணவனும் தன்னைத் தேடுகிறான் என்று கணவனின் புலம்பலில் இருந்து தெரிந்த போது, புளகாங்கிதம் அடைந்தது தேவகியின் மனது. ஆனால், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சிரித்து வைப்பாள் தேவகி‌.

 “நீயில்லாமல், என் பொழுதுகளும் ஸ்தம்பித்து தான் போகின்றன” என்று பதில் சொன்னால், பயணம் மேற்கொண்டிருப்பவனின் சிந்தை ஒரே நேர்க்கோட்டில் பயணம் செய்யாது, சிதறிவிடக்கூடும் என்ற காரணத்திற்காகவே, தன் எண்ணங்களை மனதிற்குள் அடைத்து, மௌனம் எனும் பூட்டைக்கொண்டு பூட்டிக்கொண்டாள் தேவகி.

“ஹூம்… என்னைப் போல ஃபீலிங்ஸ், உனக்கில்லையா  தேவி?” என்று அதற்கும் மனைவியிடம் சிணுங்கி வைப்பான், அந்த ஆறடி ஆண்மகன். 

ஐந்தாவது நாள் இரவு போன் செய்தவன், “தேவி… நாங்க கிட்டதட்ட டெல்லியை ரீச் பண்ணிட்டோம் தெரியுமா?” என்றான் சந்தோஷமாக. 

“ஓ… அப்பிடியா? அப்போ ஒரு ரெண்டு நாள் சுத்தி பாத்துட்டு, கிளம்பிடுவீங்க தானே” என்றாள் தேவகியும் உற்சாகமாக.

“எங்க தேவி?… இவ்வளவு தூரம் வந்துட்டு சிம்லா போகாமல் போனா நல்லாவா இருக்கும்னு கேக்குறான் வசந்த். இன்னொருத்தன் குலு போகணுங்குறான்.  அடுத்தவன் மணாலி ங்குறான். அவனுங்களுக்கு எங்கடி தெரியும் நீயில்லாமல்  ‌நான்படுற அவஸ்தை? நீயும் என்கூட வந்துருந்தாலாவது நல்லாயிருந்திருக்கும்.

நீ எங்கூட இல்லாம நான், சிம்லா, குலு, மணாலின்னு போய் தான் என்னத்துக்கு?”  

மெல்லிய குரலில் கணவன் அலுத்துக் கொள்ள, வாய்விட்டு சிரித்த தேவகி, “இது முதல்லயே இல்ல ஆஃபீஸருக்கு தெரிஞ்சிருக்கணும். ஏதோ அவுத்து உட்டது மாதிரி ஓடுனீங்க ல்ல, இப்போ அனுபவிங்க” என்றாள் கிண்டலாக. 

“பட்டாதானே புத்தி வருது… இனிமே என் காலத்துக்கும் இப்படி எல்லாம் உன்னை விட்டுட்டு கிளம்ப மாட்டேன்ல” என்று சொன்னவனுக்கு, இன்னும் சில நாட்களில், மனைவியை காலமெல்லாம் தான் தவிக்கவைக்கப் போகிறோம் என்று தெரிந்திருக்கவில்லை. 

“நீங்க சொல்லுற மாதிரியே எல்லா இடமும் போகலாம் டா. ஆனா, வீட்டுக்கு திரும்பி போகும் போது, டெல்லி வரைக்கும் பைக்ல போய்ட்டு, அங்கேயிருந்து நாம சென்னைக்கு ஃப்ளைட்ல போறோம். நம்ம பைக் எல்லாம் ஏதாவது பார்சல் சர்வீஸ்ஸ போட்டு விட்டுடலாம். ஓகே யா?” என்று தோழர்களோடு டீல் பேசினான் விஜயன்.

 “தலைவனைப் பிரிந்த தலைவிக்கு தான் பசலை நோய் வரும்னு படிச்சிருக்கோம். ஆனா, இங்க எல்லாம் உல்டாவா ல்ல இருக்கு” என்று விஜயனை கலாய்த்தாலும், நண்பனின் யோசனையை ஏற்றுக் கொண்டார்கள் அனைவரும். 

டெல்லியிலிருந்து சிம்லா, குலு, மணாலி என்று பைக் மூலமாகவே சென்று, அந்த இயற்கையின் வனப்புகளை இரசித்து விட்டு, மனம் கொள்ளா இனிய நினைவுகளோடு திரும்பி வந்து கொண்டிருந்தார்கள் அந்த நண்பர்கள் குழுவினர்‌. இந்த இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்ப்பதற்காக  மட்டும், அவர்கள் எடுத்துக் கொண்ட தினங்கள் ஐந்து.

ஓங்கி வளர்ந்திருந்த பனிமூடிய மலைகள், பச்சைப் பசேலென்ற மரங்கள், பனிபடர்ந்த பள்ளத்தாக்குகள், அருவிகள், ஆறுகள், என வழிநெடுகிலும் அமைந்திருந்த இயற்கை பிண்ணனியில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தது, தங்கள் வாழ்நாள் சாதனையாக எண்ணி, மனம் பூரித்து கிடந்தது அவர்களுக்கு. 

சிம்லாவுக்கு பக்கத்தில் அவர்கள் வந்து கொண்டிருக்கும் போது, முந்தைய தினம் அங்கே பெருமழை பெய்திருக்க கூடும் என்பதற்கான சாத்தியங்கள் ஆங்காங்கே தெரிந்தன. 

அது உண்மைதான் என்பதை பக்கத்தில் இருந்த ஆற்றில், கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த பெருவெள்ளம் சொல்லியது. 

அந்த ஆற்றை கடந்து செல்ல போடப்பட்டிருந்த நீண்ட பாலத்தில்,  சிலர் நின்று தங்கள் கேமராக்கள் மூலம் புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பதை பார்த்த இவர்களும், தங்கள் பைக்குகளை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கினார்கள்.

‘தாங்கள் போகும் போது சாந்த சொரூபியாக ஓடிய ஆறா இது?!’ என்று ஆச்சர்யமாக இருந்தது அவர்களுக்கு. அவ்வப்போது வேரோடு பிடுங்கப்பட்ட மரங்களும் கூட, ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டது. 

ஆக்ரோஷமாக வெள்ளம் புரண்டோடும் அந்த ஆற்றை, தானும், சில புகைப்படங்கள் எடுத்து கொள்ளலாம் என்று தன் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த காமராவால் கோணம் பார்க்க ஆரம்பித்தான் ராகுல். 

நால்வரில், ராகுலுக்கு மட்டும் எப்போதுமே புகைப்படங்கள் எடுப்பதில் நாட்டம் அதிகம். இப்போதைய தங்கள் பயணத்தை கூட, முடிந்த அளவு புகைப்படங்களாக தன் காமராவுக்குள் சுருட்டிக்கொண்டு தான் வருகிறான் ராகுல்.

  ஆற்றின் பிண்ணனியில் நண்பர்களையும் வைத்து புகைப்படங்களாக எடுத்து கொண்ட ராகுல், காமராவை விஜயனிடம் கொடுத்து விட்டு நண்பர்களோடு புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க போய் நின்று கொண்டான்.  நண்பர்களை காமராவுக்குள் புகைப்படமாக்கும் முயற்சியில் மும்முரமாக இறங்கினான் விஜயன். 

அப்போது, அந்த ஆற்றுப்பாலத்தில் தறிகெட்டு வந்த லாரி ஒன்று, விஜயன் மீது மோதியதில் ஆற்றில் தூக்கி எறியப்பட்டான் விஜயன். அந்த லாரியும் பாலத்து சுவரை இடித்து கொண்டு ஆற்றில் விழுந்திருந்தது.

 

எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்திருந்தது. நடந்தது என்ன? என்று நண்பர்களின் மூளை கிரகிக்கும் முன்னே, சிறு புள்ளியாக அவர்களின் கண்களிலிருந்து மறைந்தே போயிருந்தான் விஜயன். அத்தனை வேகமாக இருந்தது நீரின் வேகம். 

நடந்தது புரியவும், நண்பனை காப்பாற்றிவிட வேண்டும் என்ற வேதத்தில் வசந்த் கதறிக்கொண்டு ஆற்று நீரில் விழ முயற்சிக்க, அருகில் நின்றிருந்தவர்கள் பாய்ந்து வந்து அவனை தடுத்திருந்தார்கள். 

ஆற்றுநீரில் குதித்தாலும், அந்த பெருவெள்ளத்தை தாண்டி  தன்னாலும், நண்பனைக் காப்பாற்ற முடியாது என்பது புரிந்தாலும், தன் இயலாமையால் ஆவேசமாக கத்தினான் வசந்த். கிட்டத்தட்ட பைத்தியங்கள் போல கதறினார்கள் நண்பர்கள் மூவரும். 

தகவல் தெரிந்து வந்த தீயணைப்பு படையினர், எவ்வளவோ தேடுதல் வேட்டையில் ஈடுபட்டும், அன்று முழுவதுமே விஜயனை கண்டுபிடிக்க முடியவில்லை. 

“தண்ணியோட ஃபோர்ஸ் அதிகமா இருக்கு. அதனால இதுக்கு மேல உயிரோட கிடைக்குறதுக்கு சான்ஸ் இல்ல” என்று அந்த நாளின் முடிவில் அவர்கள் சொல்ல, முகத்தில் அறைந்து கொண்டு அழுதார்கள் நண்பர்கள் மூவரும். 

நடந்ததை நம்ப மறுத்து சண்டித்தனம் பண்ணியது அவர்களின் மனது. இந்த விஷயத்தை தேவகியிடம், எப்படி சொல்லுவது என்று தெரியாமல் தவித்தார்கள். 

 உள்ளூர் போலீஸில் விஷயம் கேஸாகவும் பதியப்பட்டது. விஜயனின் விபரங்களை அவன் நண்பர்களிடமிருந்து வாங்கிய காவல்துறை அவன் தகப்பனுக்கும், மனைவிக்கும் தகவல் சொல்லச் சொன்னது. 

மகனின் திருமணத்தை வேண்டுமானால் தகப்பனுக்கு தெரியாமல் முடித்து விடலாம். ஆனால்…, இதை எப்படி முடியும்? அதனால் சுந்தரத்துக்கு ஃபோன் பண்ணத் தயாரானான் வசந்த்‌.

****

கொடைக்கானலில், இரவு உணவை முடித்துக்கொண்டு, தன்னறைக்குள் அங்கும் இங்கும் நடைபோட்டுக் கொண்டிருந்த சுந்தரத்துக்கு, கண்மண் தெரியாமல் கோபம் வந்தது. 

 மாதந்தோறும் மகனுக்கு பணம் அனுப்புவதை நிறுத்திவிட்டால், ஒரு ஆறே மாதத்தில் மகன் கதறிக்கொண்டு தன் காலில் வந்து விழுவான் என்று கணக்கு போட்டிருந்தார். 

ஆனால் அவனோ, தான் உயிரென நினைத்திருந்த பைக் ரேஸைக் கூட சற்றே ஒதுக்கி வைத்து, வேலைக்கு செல்ல ஆரம்பித்து, மனைவியை தங்கத் தாம்பாளத்தில் வைத்து தாங்க ஆரம்பித்து விட்டான். 

‘இப்படி யாரென்றே அடையாளம் தெரியாத ஒருத்தியை கல்யாணம் செய்து, என் குடும்பத்திற்குள் கொண்டு வருவதற்காகவா, அவனை ஒரு இராஜகுமாரனைப் போல வளர்த்தேன்?’ என்று கோபத்தில் கொதித்தார் மனிதர். 

சுந்தரம், கங்கா தம்பதியருக்கு விஜயனோடு, பூர்ணிமா என்ற மகளும் உண்டு. பூர்ணிமா, விஜயனுக்கு தங்கை.

 பூர்ணிமாவின் இருபது வயதிலேயே, தங்களைப் போன்ற, பணக்கார வீட்டு வாரிசு ஒன்றை, தன் மருமகனாக்கி இருந்தார் சுந்தரம். பூர்ணிமாவை, குணத்தில் தகப்பனுக்கு தப்பாத பிள்ளை என்றுகூட சொல்லலாம். 

ஆனால், தன் இரண்டு பிள்ளைகளில், ஆண்பிள்ளை என்பதால், விஜயன் மீது அதீத பாசம் உண்டு சுந்தரத்துக்கு. அது தனக்கு பின், தன் சாம்ராஜ்யத்தை கட்டியாளப் பிறந்தவன் மகன், என்ற எண்ணத்தால் வந்தது. 

இந்த எண்ணம் சுந்தரத்தை வியாபித்திருந்ததால், விஜயன் நினைத்ததெல்லாம் நடந்தது. அவன் கேட்டதெல்லாம் கிடைத்தது. 

சிறுவயதிலேயே பைக் மீது காதல் கொண்ட விஜயன், தான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போதே, தந்தையிடம் பைக் வாங்கி கேட்டான்.

அவரும், லைசென்ஸ் எடுக்க போதுமான வயது வராத மகனுக்கு, அப்பொழுதே லட்சங்களில் பைக் வாங்கித் தந்தார். 

வயதுக்கு மீறிய வளர்ச்சியோடு இருக்கும் மகன் வண்டியோட்ட, அவன் பின்னால் உட்கார்ந்து செல்வதில் அவருக்கு அத்தனை பெருமையாக இருக்கும். 

 தன்னைப் போல வசதியானவர்களின் வட்டத்தில், என் மகனிடம் தான், இவ்வளவு விலை உயர்ந்த பைக் இருக்கிறது என்று காட்டிக் கொள்வதில் அவருக்கு ஒரு மகிழ்ச்சி. 

சென்னைக்கு படிக்க என்று சென்ற மகன் பைக் ரேஸில் தனக்கு ஈடுபாடு இருக்கிறது என்று சொன்ன போதும், மகனின் விருப்பத்திற்கு எதிராக எதுவும் சொல்லவில்லை சுந்தரம்.

மாறாக பயிற்சிக்கென்று மகன் கேட்ட பணத்தை, “கவனமாக விளையாட வேண்டும்” என்ற ஒற்றை வார்த்தையோடு, வங்கி மூலம் அனுப்பி வைத்திருந்தார்.

அவனும் ரேஸில் வெற்றி பெற்று பதக்கங்களை பெற ஆரம்பிக்கவும், தன்னைப் போல பணக்கார வர்க்கத்தினர் கூடும் அத்தனை இடங்களிலும், மகனின் புகழை தம்பட்டம் அடிக்க ஆரம்பித்தார். 

விஜயனின் அம்மாவுக்கோ எப்போதுமே மகனின் இந்த பைக் ரேஸ் பைத்தியத்தைப் பார்த்து பயமாக இருக்கும். 

“நமக்கு இந்த விளையாட்டெல்லாம் வேண்டாம், விட்டுடு ராஜா” என்று மகனிடம் அவர் கெஞ்சிக் கேட்டாலும், இந்த ஒரு விஷயத்தில் மட்டும் எப்போதுமே விஜயன் தாயின் சொல்லை கேட்கவில்லை. 

“நான் சொன்னா கேட்க மாட்டேங்குறான். நீங்களாவது பணத்தை கொடுத்து, அவனை விளையாட தூண்டாம இருக்கலாமே” என்று கங்கா கணவரிடம் சொல்லும் போது, 

“எம்பையன் விஷயத்தில எப்போ, என்ன செய்யணும்னு எனக்கு தெரியும். உன் நாட்டாமைதனத்தை எங்கிட்ட காட்டாத” என்று சொல்லி மனைவியின் வாயை அடைந்துவிடுவார் சுந்தரம். 

 ‘மகன் இஷ்டப்படி, ஆடும் வரை ஆடட்டும். அதன்பிறகு, அப்சரஸ் மாதிரி தங்கள் அந்தஸ்துக்கு தகுந்தாற்போல் ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் செய்து வைத்து, தங்கள் ஹோட்டல் தொழிலை அவன் கைவசம் ஒப்படைத்து விட்டால், மகன் இங்கே இருந்துவிட்டு போகிறான்’ என்ற எண்ணம் சுந்தரத்துக்கு. 

அப்பேற்பட்ட அவரின் பட்டத்து இளவல், அனாதை இல்லத்தில் வளர்ந்த ஒரு சாதாரணமான பெண்ணை திருமணம் செய்து கொண்டதை, அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. 

தன் பணத்தால் மகனை தன் பக்கம் வளைக்க முடியவில்லை என்றானபின், என்ன செய்து அவனை தன் வசம் இழுப்பது, என்று யோசிப்பதே அவரின் தினசரி வேலைகளில் ஒன்றாகிப்போனது.