Advertisement

13

     வெகு நேரமாக கண்ணன் மண்டபத்தில் தென்படவே இல்லையே என்று தங்கரத்தினம் அவனைத் தேடிக் கொண்டும் ஒரு சிலரிடம் விசாரத்துக் கொண்டும் இருக்க,

     “அவன் எப்போவோ காரை எடுத்துக்கிட்டுக் கிளம்பிப் போனானே” என்றார் ஒருவர்.

     “ஓ! சரி சரி” என்றவர், அவரிடம் பதட்டத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,  

     ‘எங்க போய்த் தொலைஞ்சான் இவன்?! கல்யாண நேரத்துல எவ்ளோ வேலை இருக்கு இங்க எடுத்துப் போட்டுச் செய்யாம?!’ என்று எண்ணியபடியே அவர் நடந்து வர, அவர் எதிரே வந்தவளைப் பார்த்து, சட்டென திரும்பிச் செல்லப் பார்த்தார்.

     “நில்லு மாமா!” என்று அவள் குரல் கொடுக்கவும், வேறு வழியின்றி நின்றவர்,

     “ரொம்ப சந்தோஷமா இருக்க போல?!” என்றாள் நக்கலாக.

     ஒரு நொடி அவளது கேள்வியால் மனம் கலங்கினாலும், சட்டென்று சமாளித்து,

     “பின்னே இருக்காதா?! என் கன்னுக்குட்டியோட கல்யாணமாச்சே!” என்றார் முகம் கொள்ளாச் சிரிப்புடன்.

     “உன்னால எப்படி மாமா இப்படிச் சிரிக்க முடியுது?! இந்தக் கல்யாணம் முடிவான நாள்ல இருந்து எனக்கு ஒவ்வொரு நொடியும் நெஞ்சில நெருப்பள்ளி கொட்டுனாப்புல இருக்கு! ஆனா நீ?!” என்று முறைத்தவளைப் பார்த்து,

     “அட! என்ன பேச்சு பேசுற மருமவளே?! நல்ல நாள் அதுவுமா?!” என்று ரத்தினம் கண்டிக்க,

     “ம்! மருமவளே வா?! நாளையில இருந்து நீ அப்படி உரிமையா கூப்பிட்டுட முடியுமா என்ன?!” என்றாள் கோபமாய்.

     “ஏன் ஏன் முடியாது?! என் கன்னுக்குட்டி எப்போவும் என் மருமகதான்” என்று தீர்க்கமாய்ச் சொன்னவர்,

      “போ மருமவளே! போய் கொஞ்ச நேரம் கண்ணுறங்கி எழு! விடியக்காலையிலயே எழும்பணும்ல” என்றுவிட்டு அவள் பதிலேதும் பேச முனைவதற்குள் அவர் அங்கிருந்து கிளம்பிவிட, அவளுக்கு மேலும் ஆத்திரம் பொங்கியது.

     ‘இந்த ரெண்டு மாமாங்களும் சேர்ந்து என்னை உசுரோடவே கொல்லுறாங்க!’ என்று எண்ணியவளுக்கு அப்போதுதான் கண்ணன் நெடுநேரமாய் அவள் கண்ணில் படவே இல்லை என்று நினைவு வந்தது.

     ‘ஐயோ! எங்க? எங்க போச்சு இந்த கண்ணன் மாமா?!” என்று பதறியவள்,

     ‘ஒ ஒருவேளை அவங்க கூட்டாளிங்களோட இருக்கோ?!’ என்று எண்ணிக் கொண்டு, மெல்ல தான் மணப்பெண் என்பதையும் மறந்து, கண்ணனை ஒருமுறையாவது அப்போதைக்கு பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் எழ, கார்த்திக்கின் அறை நோக்கி நடந்தாள். ஆனால் அங்கு மணமகன் அறையிலும் கார்த்திக்கும் அவனது மற்ற நண்பர்களும் இருந்தார்களே தவிர அவனைக் காணவில்லை!

     இருவரும் கண்ணனை எவ்வளவோ தேடித் பார்த்தும் இரவு முழுவதுமே அவன் கண்ணில் படாது போக, அவ்வளவு தைரியமாய் இருந்த ரத்தினத்திற்கே மனம் கலங்கிவிட்டது! ரத்தினதிற்கே இப்படி என்றாள் கவியின் நிலை சொல்லவா வேண்டும்?!

     விடியற்காலை வைக்கப்படும் எண்ணெய் நலங்கும் வைத்தாகிவிட்டது. இதோ அவள் அழுகையில் கரைந்தபடியே குளித்துக் கொண்டிருந்தாள். குளித்து முடித்து வந்தவளை அலங்கரித்து மணமேடைக்கு அழைத்துச் சென்றனர். ஒவ்வொரு சம்பிரதாயங்களும் சடங்குகளும் நிறைவடைய அடைய, அவளின் உயிர் கொஞ்சம் கொஞ்சமாய் அவள் உடலைவிட்டுப் பிரிந்து கொண்டிருந்தது போல் இருந்தது அவளுக்கு. அதைக் காக்க வேண்டியவனோ, இன்னமும் நல்ல உறக்கத்தில்தான் இருந்தான் எல்லாம் மறந்து.

     “என்ன இந்த பைய இன்னும் எந்திரிச்ச பாடாயில்லை?! எங்க ஊட்டு அம்மாவே இவன் அயித்தை மக கல்யாணத்துக்குக் கிளம்பிப் போயிருச்சு!” என்றபடியே வந்த அந்தப் பெரியவர்,

     கையில் ஒரு சோம்பு நீரை எடுத்து அதிலிருந்து நீரை அள்ளி அவன் முகத்தில் அடித்து ஊற்றினார் வேகமாய்.

     சில்லென்ற நீர் பட்ட உணர்வில், மெல்ல கண்களைத் திறந்தவன், எதிரே நின்றிருந்த பெரியவரைக் கண்டு, தான் எங்கே இருக்கிறோம் என்று புரியாமல் நினைவு கூற, நேற்று நடந்த சம்பவங்கள் நினைவில் எழுந்தது. அதோடு இன்று அவளின் திருமணம் என்பதும்.

     “ச்சே!” என்று சடக்கென எழுந்தவன், அங்கு நின்றிருந்த அந்தப் பெரியவரைத் தாண்டிக் கொண்டு வேகமாய் சென்று அவனது காரைக் கிளப்பிக் கொண்டு விரைந்தான் மண்டபத்திற்கு.

     மேடையில் நின்றபடியே, “அண்ணே எங்கண்ணே போனான் இவன்? ராத்திரியில இருந்து கண்ணுல படவே இல்லை?! எதாச்சும் வேலையா அனுப்பி இருக்கியா என்ன?!” என்று வைரம் தன் அண்ணனிடம் கேட்டுக் கொண்டிருக்க,

     ‘அது தெரியாம தானே ம்மா நானே ராத்திரியில இருந்து தவிச்சுக் கெடக்கேன்!’ என்று மனதிற்குள்ளேயே ரத்தினம் புலம்ப,

     அப்போது பார்த்து கண்ணனைப் பற்றிய விவரம் சொல்ல அவர்கள் அருகே வந்த அந்தப் பெரியம்மா, வைரம் தன் அண்ணனிடம் விசாரித்துக் கொண்டிருப்பதைக் கேட்டதும்,

     “நல்லா இருக்கு நீங்க பிள்ளைய வளர்த்த லட்சணம்! உங்க வீட்டுப் பிள்ளை எங்க வீட்டுத் திண்ணையிலதான் படுத்துக் கெடக்கான். நேத்து ராத்திரி ரொம்ப தண்ணி போட்டிருப்பான் போல! வண்டியை கொண்டு போய் மோதி அடிபட்டுடுச்சு! எங்க வூட்டுக்காரர்தான் பார்த்துக் கூட்டியாந்து மருந்து போட்டு படுக்க வச்சார்” என்று அந்த அம்மா மெல்ல கிசுகிசுப்பாய் வைரத்திற்கும், ரத்தினத்திற்கும் மட்டும் கேட்கும்படி சொல்ல,

     “ஐயோ அடியா?!” என்று பதறிவிட்டனர் இருவரும்.

     “பதறாதீங்க பதறாதீங்க!! லேசான காயம்தான். குடிச்சதுனாலதான் இன்னும் கண்ணு முழிக்கலை!” என்றார் அந்தப் பெரியம்மா அவர்கள் பயத்தைப் போக்கும் விதமாய்.

      “அண்ணே இருந்தாலும் நீ போய் புள்ளைய பாத்துக் கூட்டியாந்துடு  அண்ணே!” என்று அப்போதும் மனம் தாளாமல், வைரம் பதட்டமும் கலக்கமுமாய் மொழிய, அதற்கு அவசியமே இல்லை என்பது போல், அவன் அங்கு ஆவேசமாய் திருமண மண்டபத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தான்.

     நொடி தவறாமல் அவனையே சுற்றும் முற்றும் தேடிக் கொண்டிருந்த அவள் விழிகள், புயலென இருந்த அவன் வருகையைக் கண்டதும் நொடியில் நிம்மதி கொண்டாலும், அடுத்த நொடியே பயத்தைத் தத்தெடுத்துக் கொண்டது.

     களைந்த உடையுமாய், நேற்று அடித்த போதையின் உபயத்தில்  லேசாய் உப்பி தூங்கி எழுந்த முகமுமாய், சிவந்த கண்களுமாய், முறுக்கேறிய புஜங்களுமாய் வேக நடையிட்டு வந்த கண்ணனைப் பார்க்க, அங்கிருந்த அனைவருக்குமே ஏதோ தவறாக நடக்கப் போகிறது என்று அப்பட்டமாய்த் தெரிந்தது.

     மற்றவர்களுக்கே தெரிந்தது என்றால், அவளுக்கும், கார்த்திக்கிற்கும் அவன் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் தெரியாமலா இருக்கும்?!

     ‘என்ன என்ன ஆச்சு இந்த கண்ணன் பயலுக்கு?!’ என்று வீர பாண்டி கவலையாய் அவனை நோக்கி விரைய, அவர் கைகளைப் பற்றி தடுத்து நிறுத்தினார் தங்கரத்தினம்.

     “என்ன மாமா இந்தப் பைய ஏன் இப்படி இருக்கான்? இந்தக் கல்யாணம் முடிவான நாள்ல இருந்து அவன் போக்குக் கொஞ்சம் கூட சரியில்லை!” என்று குறைபட்டுக் கொண்டிருக்க, அதற்குள் அவன் மணமேடை அருகேயே வந்துவிட்டிருந்தான்.

     அவள் கலக்கமும் கோபமுமாய் அவனையே விழி எடுக்காமல் பார்த்திருக்க, கார்த்திக்கும் அவனைத்தான் தெனாவட்டாய் பார்த்திருந்தான்.

     ‘என்ன நெஞ்சழுத்தம்டி உனக்கு?!’ என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவளையே பார்த்தபடி கார்த்திக்கை நெருங்கியவன்,

     “எந்திர்றா” என்றான் அதட்டலுடன் கண்ணசைவிலேயே மிரட்டல் விடுத்து.

     “என்ன?! என்ன அண்ணா பண்றான் இவன்?!” என்று வைரம், அவனைத் தடுக்கப் போக, அவரையும் தடுத்து நிறுத்தினார் ரத்தினம்.

     வீரபாண்டி, வைரம், மருதுபாண்டி, கற்பகம், கங்கா, பிரதாப், கிஷோர் மேடையின் முன் வரிசையில் அமர்ந்திருந்த கனகாம்புஜம் பாட்டி என்று அனைவரும் என்ன பையித்தியக்காரத்தனம் செய்கிறான் இவன் என்று கோபம் கொள்ள, அவள் மட்டும் இப்போதும் அவனைக் கோபமாகவும் நிமிர்வாகவும் தான் பார்த்திருந்தாள்.

     கார்த்திக்கின் எகத்தாளமான நக்கல் கலந்த முறைப்பும், கவியின் கோபம் கலந்த பார்வையும், கண்ணனை மேலும் கோபமுறச் செய்ய,

     “எந்திரிடாங்குறேன்! என்னடா லுக்கு வேண்டி கெடக்கு?!” என்று உருமியபடியே, கண்சிமிட்டும் நொடியில் கார்த்திக்கை அவன் சட்டையைப் பற்றி இழுத்துத் தூக்கி தூரத் தள்ளிவிட்டு, அவளருகே அமர்ந்து தாலியைக் கையில் எடுக்க, அனைவரும் கலக்கத்துடனும் குழப்பத்துடனும் பார்த்திருந்தனர். ஆனால் யாருக்குமே அவனைத் தடுக்கும் தைரியம் வரவில்லை! தடுக்க வேண்டியவரோ, தடுக்க நினைத்த தங்கையையும், மச்சானையும் கூட அடக்கிவிட்டு மௌனம் காக்கச் சொல்லி அமைதியாய் நின்றிருந்தார்.

     அவனது செயலில் ஐயர் பயத்துடன் மந்திரம் சொல்வதா வேண்டாமா என்று திருதிருவென முழிக்க,

     “ம்!” என்று மந்திரம் சொல்லும்படி அவரையும் மிரட்ட, அவர் தந்தியடித்தபடியே மந்திரத்தைச் சொல்லத் துவங்கினார்.  

     அவனின் செயலில் அவள் கொலைவெறியுடன் நேருக்கு நேர் அவனை முறைக்க, அவனும் இப்போது யாருக்காகவும், எதற்காகவும் இன்றி, தனக்காக, அவள் தனக்கு மட்டுமே உரியவள் என்ற உரிமையோடும் உணர்வோடும் அவள் பார்வைக்குச் சளைக்காமல் பதில் பார்வை வீசியபடியே மூன்று முடிச்சினை இட்டு அவளைத் தன்னவளாக்கிக் கொண்டான்…

Advertisement