அவர் சொன்னதைக் கேட்டு பொத்திக் கொண்டு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்ட கார்த்திக்,

    “டேய் இவனுக்கு அவுங்க மாமா கத்துக் கொடுக்குறாராம்டா! கேட்க தமாஷா இல்லை!” என்று கிஷோர் காதில் கிசுகிசுக்க,

    “டேய் சும்மா இருடா” என்றான் கிஷோர்.

    ‘எப்படி மெயின்டெயின் பண்ணி இருக்கான் பாரு பச்சை புள்ளையாட்டம்?!’ என்று பிரதாப்பும் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு நினைக்க,

     வைரம் மருமகனைப் பார்த்த கோபப் பார்வையில், “அத்தை ம மன்னிச்சிடு அத்தை!” என்றான் கண்ணன் சற்றே உள்ளே சென்ற குரலில்.

     “செய்யிறதெல்லாம் செஞ்சுட்டு மன்னிப்பு என்ன வேண்டி கெடக்கு?!” என்றவர்,

     “அடியே! அடியே கவி! இன்னும் செவலைகிட்டேயே உட்கார்ந்திருக்கியா? வந்து சோறை எடுத்து வையி” என்று இவர்களிடம் காட்ட முடியாத கோபத்தை மகளிடம் குரல் உயர்த்தித் காண்பிக்க, ஆண்கள் அனைவரும் அமைதியாய் பெட்டிப் பாம்பாய் அடங்கி உறங்கச் செல்ல,

     “ம்! எல்லாரும் சாப்புட்டுப் போய் படுங்க! கண்டதையும் ஊத்திக்கிட்டு சோறு திங்காம படுத்துக் குடல் வெந்து போகவா?!” என்று அதற்கும் அதட்டிய வைரம், அவர்கள் வயிற்றை நிரப்பிய பின்னே உறங்கச் செல்ல அனுமதித்தார்.

     இரவு கண்ணனைத் தவிர மற்ற ஆண்கள் அனைவரும் மது அருந்தி இருந்ததின் நிமித்தம் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கி இருக்க, இவனுக்கு மட்டும் ஏனோ, உறக்கம் வர மறுத்தது இங்கு வந்த நாள் முதல் தன் அத்தை மகள் நினைவால்.

     ‘ச்சே! எனக்கு என்னதான் ஆச்சு?!’ என்று போர்வையை உதறிக் கொண்டு எழுந்து அமர்ந்தவன்,

     ‘நான்தானே அவளை வேண்டாங்குறேன்! அப்புறம் அவ சரியா பேசலைன்னா மட்டும் ஏன் இவ்ளோ கோவம் வருது எனக்கு?!’ என்று எண்ணியவனுக்கு அவளின் பாரா முகத்தால் நெஞ்சம் கனத்து மூச்சு முட்டியது.  

     ‘ச்சே!’ என்று மீண்டும் சலிப்புடன் எழுந்தவன், சிறிது நேரம் வெளியிலாவது சென்று நடந்து விட்டு வரலாம் என்று எழுந்து வந்தான்.

     சிறிது நேரம் மாடிக்கு சென்று உலாவி விட்டு வந்தவன், பாத்ரூம் சென்றுவிட்டு வந்து படுக்கப் போகலாம் என்று கொல்லைப் புறம் செல்ல, அங்கு மெலிதாய் விசும்பல் சத்தம்.

     ‘யார் இந்நேரத்துல இங்க?! அதுவும் அழற மாதிரி தெரியுது!’ என்று சுற்றும் முற்றும் அவன் பார்வையைச் சுழலவிட, அங்கு மாட்டுத் தொழுவத்தில் அமர்ந்திருந்த செவலையின் மேல் தலை சாய்ந்து  படுத்தபடி, அவள் ஏதோ முனகிக் கொண்டிருப்பது கேட்டது.

     ‘என்னதான் ஆச்சு இவளுக்கு?! ஏன் இப்படி என்னையும் வதைச்சு இவளையும் வதைச்சுக்குறா?!’ என்று எண்ணிக் கொண்டே அவள் அருகே செல்ல,

     “ஏன்டா விளையாட்டுக்கு போயி வந்ததுல இருந்து இப்படியே இருக்க?! உடம்புக்கு என்னதான்டா பண்ணுது?! கொஞ்ச நேரம் இப்படி சோர்ந்து உட்கார மாட்டியேடா?! ஏற்கனவே இந்த மாமா இப்படி இருக்கிறதே என்னால தாங்க முடியலை! இதுல நீயும் இப்படி இருந்தா எனக்கு எப்படிடா இருக்கும்?!” என்று அவள் கேட்டுக் கொண்டிருக்க அவனுக்கு சிரிப்பதா கோபம் கொள்வதா என்று தெரியவில்லை செவலையையும் தன்னையும் மனதில் ஒரே இடத்தில வைத்திருக்கிறாள் என்று.

     “டீ! என்னடி பண்ணிட்டு இருக்க இந்நேரத்துல?!” என்று கேட்ட அவனின் திடீர்க் குரலில் பட்டென அவள் திரும்பிப் பார்க்க, அவள் அருகே வந்து நின்றவனைப் பார்த்து மீண்டும் கோபமாய்  செவலையின் புறம் திரும்பிக் கொண்டாள்.

     “அவனுக்கு ஒண்ணுமில்லைடி! அந்த லூசுப் பையன் கையில மயக்க மருந்த போல எதையோ தடவிட்டு களத்துல இறங்கி இருக்கான். அதை மோர்ந்ததுனால தான் காளைங்க சோர்வா கெடக்கு” என்றான் அவள் அருகே வந்து அமர்ந்து.

     “என்ன?! ஐயோ அப்போ ஏன் செவலையை ஆஸ்பத்திரிக்குக் கூட கூட்டிப் போகாம எங்க கூட அனுப்பின?! அதான் அவன் இந்நேரம் வரைக்கும் இப்படி சோர்வா கெடக்கானா?!” என்று பதறியவள்,

     “கொஞ்சமாச்சும் அறிவிருக்கா உனக்கு?! அவன் இப்படி பண்ணான்னு தெரிஞ்சும், நீ அவனை ஜனங்களுக்குக் காட்டிக் கொடுக்காம ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வச்சு வையித்தியம் பார்க்க வச்சிட்டு, இங்க செவலை இப்படி இருக்கான்னு கொஞ்சம் கூட கவலைப் படாம தண்ணியும் அடிச்சிட்டு வர?!” என்றாள் படபடவென.

     “என்னடி ஓவரா பேசுற?!” என்று அவனுக்கு கோபம் வர,

     “வேற உனக்கு ஊர்ல இருக்க எல்லார் மேலயும் கரிசனம் வரும்! ஆனா ஊட்ல இருக்க எங்களை பத்தி கவலையில்லை!” என்றாள் இருந்த கோபத்தையெல்லாம் சேர்த்து வைத்து.

     “இப்போ என்னடி பண்ணிட்டேன் உங்களை எல்லாம்?!” என்று அவனும் எகிற,

     “ம்! இன்னும் என்ன பண்ணனும்?!” என்றாள் அவளும் கோபமாகவே.

     “இப்போ உனக்கு என்னதான்டி பிரச்சனை?! அதான் உங்க இஷ்டப்படி கட்டிக்கணும்னா கட்டிக்கறேன்னும் சொல்லிட்டேன்ல?!” என்று அவனும் கோபம் கொண்டான்.

     “ம்! வாழ்க்கை பிச்சைப் போடுறியா மாமா?!” என்று அவள் சட்டென கோபம் தணிந்து விரக்தியுடன் கேட்க,

     அந்தக் கேள்விக்கு அவனால் பதில் சொல்ல இயலவில்லை! ஆனால் அவளோ,

     “சீக்கிரமே நீ இதுக்காக ரொம்ப வருத்தப்படுவ மாமா. ஆனா அப்போ நீ நினைச்சாலும் நான் உனக்குக் கிடைக்கமாட்டேன்” என்றாள் என்ன பேசுகிறோம் ஏன் இப்படிப் பேசுகிறோம் என்று உணராமல் ஒரு வேகத்தில் அவனைக் காயப்படுத்தும் பொருட்டு. ஆனால் அதுவே நாளை உண்மையாகவும் ஆகிவிடும் என்று அவள் நினைக்கவே இல்லை!

     மறுநாள் அவனும் அவன் நண்பர்களும் ஊருக்கு கிளம்புவதாக இருந்ததால் தங்களது உடமைகளை பேக் செய்து கொண்டிருக்க, தங்கரத்தினம்,

     “இப்போ என்ன அவசரம்? இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டுப் போங்களேன்” என்றார்.

     “ஏன் அதான் பண்டிகை முடிஞ்சிடுச்சுல்ல?!” என்றான் கண்ணன்.

     “பண்டிகை முடிஞ்சிடுச்சு! ஆனா நிச்சயம் முடியலையில்ல!” என்று அவரும் பட்டென போட்டு உடைத்தார் தான் செய்திருந்த ஏற்பாட்டை மறையாமல்.

     “நிச்சயமா யாருக்கு?!” என்று அங்கிருந்த அனைவருமே புரியாமல் பார்க்க,

     “உனக்கும் என் மருமவளுக்கும் வர்ற புதன்கிழமை நிச்சயம் முடிவு பண்ணி இருக்கேன். அடுத்த முகுர்த்தத்துலையே கல்யாணம்” என்றார் தடாலடியாய்.

     நண்பர்கள் அனைவரும் அதிர்ச்சியாய் அவனை நோக்க, வீட்டினர் அனைவரும் என்ன இவர் திடீர்னு இப்படி ஒரு முடிவு எடுத்துட்டார் யார்கிட்டயும் ஒருவார்த்தை கூட சொல்லாம என்று அதிர்ச்சியாய் நின்றிருந்தனர்.

     நேற்றும் அன்றும், அவளிடம் பேசும் போதெல்லாம் ஏதோ அவளுக்காய் கட்டிக் கொள்கிறேன் என்று விட்டுக் கொடுத்துச் சொன்னவனால், இப்போது தந்தையின் அதிகாரமான அடாவடித்தனமான முடிவு பெரும் கோபத்தையும் எரிச்சலையும் உண்டு பண்ண, தான் அடுக்கி வைத்துக் கொண்டிருந்த துணிகள் நிறைந்த பையைத் தந்தை என்றும் யோசிக்காமல் அவன் வேகமாய் அவர் முன்னே விட்டெறிந்தான் ஆவேசமாய்.

     அது சரியாய் அவர் காலருகே சென்று சிதறிக் கொண்டு விழ, என்றும் இல்லாமல் வைரத்திற்கும் அவனின் அச்செயல் பெரும் கோபத்தைத் தூண்டியது.

     “கண்ணா??!!” என்று அவர் கத்திய சத்தத்தில் அவர் அருகே நின்றிருந்த கவி திகைத்துப் போக,

     தன் அண்ணனின் வேதனை நிறைந்த முகத்தைப் பார்த்த வைரம், “என் பொண்ணு அவனுக்கு வேண்டான் அண்ணா!” என்றார் அழுத்தமும் திருத்தமுமாய்.

     அந்த வார்த்தையில் கண்ணன் சட்டென்று அவரை நிமிர்ந்து பார்க்க,

     “எப்போ உங்களையே அவன் அவமதிச்சானோ, அப்போவே அவன் உங்க மருமகளைக் கட்டிக்குற தகுதியை இழந்துட்டான்” என்றார் வெறுப்போடும் வேதனையோடும்.

     “அப்போ என்னைப் பத்தி உங்களுக்குக் கவலையில்லை அப்படித்தானே?!” என்றான் கண்ணன் இப்போதும் தன் புற நியாயத்தை மட்டுமே முன்னிறுத்தி.

     அதற்கு பதிலேதும் சொல்லாமல், விரக்தியாய் ஒரு பார்வையை அவன் புறம் வீசி மீட்டவர்,

     “என் பொண்ணு தலைஎழுத்து என்னவோ அதுவே நடக்கட்டும் அண்ணா! இனி அவளுக்காக அவனைக் கஷ்டபடுத்தி நீங்களும் கஷ்டப்படாதீங்க. அவன் ஆசைப்படி அவன் வாழட்டும்” என்று வைரம் முடித்துவிட, அங்கு யாருமே எதிர்பாராத விதமாய்,

     “ஏன் ஆன்ட்டி இப்படி பேசுறீங்க?! உங்க பொண்ணுக்கு என்ன?! அவங்களை மாதிரி ஒருத்தர் மனைவியா அமைய, அவங்களோட வாழ புண்ணியம் செய்திருக்கணும்! உங்க எல்லோருக்கும் விருப்பம்னா எனக்கு உங்கப் பொண்ணைத் தருவீங்களா?! நான் அவங்களை மகாராணி மாதிரித் தாங்குவேன்” என்று கண்ணன் செய்த செயலாலும் அவர்கள் குடும்பத்தினர் கொண்ட வேதனையாலும் சடுதியில் மனதில் தோன்றிய எண்ணத்தை அப்படியே போட்டு உடைத்தான் கார்த்திக்.

                                      -உள்ளம் ஊஞ்சலாடும்…