Advertisement

                               9

     ‘என்ன இவன் இவ்ளோ கோபமாகிட்டான்?!’ என்று கவிதாயினி யோசிக்க,

     செவலையோ கீழே விழுந்த ரங்கனை மற்றவர்களைப் போல் போனால் போகட்டும் என்று விட்டுவிடாமல், மேலும் அவன் அருகே ஓடி அவனைத் தன் கொம்பால் முட்டி மண்ணில் உருட்டிவிட,

     “என்ன ஆச்சு இவனுக்கு?!” என்று வாய்விட்டு முனகியவள், ரங்கன் படுத்தபடியே செவலையின் கொம்பைப் பிடித்து நிறுத்தி, மீண்டும் அவன் நாசியில் கைவைக்க, செவலையின் ஆவேசம் மேலும் அதிகமானது.

     ‘ஆடுடா ஆடு இன்னும் ஒரு நிமிஷத்துல அடங்கிடுவ?!’ என்று எண்ணியபடியே ரங்கன் அதன் கொம்பை இறுக்கமாய் பற்றித் தன்னை முட்டித் தூக்கி எறிய விடாதபடி காத்துக் கொள்ள முயல,

     செவலையோ அவன் பலத்தை ஒரு சில நொடிகளில் முறியடித்து, மீண்டும் தன் மூக்கில் அவன் கைபட்டதுமே மிக மூர்க்கமாய் அவனை உதறிக் கொண்டு தன் கொம்பால் அவன் வயிற்றைக் குத்திக் கிழித்தான் கண்ணிமைக்கும் நொடியில்.

     “டேய் செவலை! என்னடா பண்ற?!” என்று கவிதாயினி கத்திக் கொண்டே மைதானத்திற்கு ஓடிவர,

     “கவி போகாதடி!” என்று கத்தியபடியே அவளைப் பின்தொடர்ந்து சென்றான் கண்ணன்.

     ஏதோ சரியில்லை இந்த ரங்கனிடம் என்று இருவருக்குமே தோன்றிக் கொண்டே இருந்தாலும், என்னவவென்றுப் புரியவில்லை இருவருக்குமே! ஆனால் செவலையோ அதை நன்கு உணர்ந்து கொண்டான் ரங்கனின் கை அவனது நாசிகளைத் தொட்டதுமே! அதனால்தான் அவனைப் போட்டுப் புரட்டி எடுத்துக் கொண்டிருந்தான்.

     ரங்கன் தனது உள்ளங்கையைச் சுற்றிக் கட்டியிருந்த அந்தக்  கைக்குட்டையில் இருந்த மருந்தின் வாசம் எல்லா காளைகளையும் சற்றே கிறக்கமுறச் செய்ய, செவலையோ தன் கிறக்கத்தையும் மீறி அவனைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தான் ஆவேசமாய்.

     மற்ற காளைகளைப் போல் செவலையையும் தவறாய் எடை போட்டுவிட்ட ரங்கன், அவன் பலசாலி மட்டுமல்ல கெட்டிக்காரனும் கூட என்று வயிற்றில் குத்து வாங்கியபிறகே புரிந்து கொண்டான் வலியால் துடித்தபடி.

     ஆக்ரோஷமாய் குத்திய பின்னும் மேலும் மேலும் செவலை அவனைப் புரட்டித் தள்ளிக் கொண்டே இருக்க,

     “டேய் என்னடா பண்ற நீ?!” என்று கோபத்துடன் கவி அவனை நெருங்கி அவனின் மூக்கணாங்கயிறைப் பற்றி செவலையைத் தன்புறம் திருப்ப, மருந்தின் தாக்கத்தில் இருந்த செவலை ஆவேசத்தில் அவளையும் ஒரே தள்ளில் தள்ளிவிட்டு மீண்டும் ரங்கனை குத்திக் கிழிக்கப் பார்க்க,

     அவனது தள்ளலில் தடுமாறிக் கீழே விழப் போனவளை பாதுகாப்பாய் பற்றி நிறுத்திய கண்ணன்.

     “போடி இங்கிருந்து!” என்று அவளுக்குக் கட்டளையிட்டு விட்டு, செவலையை நெருங்கினான்.

     செவலை இப்போதும் யாரையும் தன்னை நெருங்க விடாமல் விரட்ட, அவனின் பலத்தை எதிர்கொண்டு அவனது கொம்பினைப் பற்றித் தன புறம் வளைத்துத் திருப்பியன், அதன் மூக்கணாங்கயிறைப் பற்றி தன் பலம் முழுதும் ஒன்று திரட்டிப் போராடி சில நொடிகளில் அவனைக் கீழே தள்ளி மண்ணில் சாய்த்தான்.

     செவலை மண்ணில் அமர்ந்ததும், அதன் அருகே அமர்ந்து அவனை மெல்லத் தட்டிக் கொடுத்து அதனை ஆசுவாசப் படுத்திய கண்ணன்.

     “என்னடா ஆச்சு?! ஏன் இவ்ளோ கோவம் உனக்கு! கூல்! கூல்!” என்று அன்பாய் வருடிக் கொடுக்க, அவன் அன்பின் வருடலில் மெல்ல ஆவேசம் குறைந்த செவலை, மெல்ல அவனது தலையை ஆட்டி ரங்கனின் புறம் பார்க்க, அவன் பார்த்த பார்வையில் ரங்கனிடம் ஏதோ தவறு இருப்பது ஊர்ஜிதமானது.

     அதன்பொருட்டு, எழுந்து ரங்கனை நோக்கிச் சென்றவன், “என்னடா பண்ணித் தொலைச்ச?!” என்று மிரட்டலாய் வினவ,

     “ஓ! ஒண்ணுமில்லை!” என்றான் ரங்கன் பயந்த விழிகளுடன்.

     “மரியாதையா சொல்லிடு! அவன் குதி கிழிச்சதுல வெளியேறுற ரத்தத்துல இன்னும் கொஞ்ச நேரத்துல உன்னை ஆஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போகலைன்னா ஒரேயடியா பரலோகம் போய்ச் சேந்துருவ!” என்றான் கண்ணன் ரங்கனின் சட்டையைப் பிடித்து கொத்தாய் தூக்கி நிறுத்தி.

     ரங்கன் கண்களில் கலக்கத்துடன் தனது கையை நோக்க, ‘என்ன இது இவனும் கையையே பார்க்குறான்?! செவலையும் அவன் கையையேதான் முறைச்சான்?!’ என்று எண்ணியவன் சட்டென அவனது கையைப் பற்றி அவன் ஏதோ வைத்திருக்கிறானோ என்று பார்க்க, எதுவுமே இல்லை! ஆனால் கையைச் சுற்றி அவன் கட்டியிருந்த கைக்குட்டையைப் பார்த்த கண்ணன், பட்டென்று அதனை உருவி முகர்ந்து பார்க்க, அதில் வீசிய மருந்தின் வாசம் அவனுக்கு எல்லாவற்றையும் உணர்த்திவிட்டது.

     “முட்டாள்!!” என்று அவனைப் பார்த்து கர்ஜித்தவன்,

     “இது வீர விளையாட்டுடா! இதுல கூட மனுஷங்களோட சகுனித்தனத்தைக் காட்டி இருக்க?!” என்று கத்தினான்.

     செவலை அங்கு இன்னமும் அமர்ந்திருந்ததில், பலரும் அங்கே வர பயந்து தொலைவிலேயே நின்றிருக்க, இவர்கள் பேசுவது சரியாய் அவர்களுக்குப் புரியவில்லை! ஆனால் ரங்கன் ஏதோ தில்லு முல்லு செய்திருக்கிறான் எனும் அளவு மட்டும் புரிந்தது. அத்தனை காளைகளும் அவனிடம் அடங்கிப் போய் போனதையும், சேவலை மூர்க்கமானதையும் வைத்து யூகித்ததில்.

     “நீ செஞ்ச வேலை மட்டும் ஊர்க்காரங்களுக்குத் தெரிஞ்சதுன்னா உன்னை அவங்களே கொன்னுப் புதைச்சுடுவாங்க!” என்றவன்,

     “காளையோட பலத்தோட போராடி ஜெயிக்கிறதுதான்டா இந்த விளையாட்டுக்கே உரிய அம்சம்! அதை விட்டுட்டு?!” என்று அவனை கேவலமாய்ப் பார்த்து வைத்தவன்,

     “உன்னை மாதிரி சில கேடுகெட்ட ஜென்மங்கள் பண்ற தப்புனாலதான் அவனவன் காளையைக் கொடுமைப் படுத்தறோம் வதைப்படுத்தறோம்னு கிளம்பிடுறானுங்க! ஆனா அதை வளர்க்குறவங்களுக்குத் தான்டா தெரியும் அது அவங்க குழந்தைன்னு!”

      “இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும்! போய்த் தொலை!” என்றவன், சற்றுத் தொலைவே நின்றிருந்த இளைஞர்களை கையசைத்து அருகே வருமாறு சைகை செய்ய, அவர்கள் தயங்க,

     “ஒண்ணும் பண்ண மாட்டான். நான்தான் பக்கத்துல இருக்கேனே வாங்க” என்றான் கண்ணன்.

     அவன் கொடுத்த தைரியத்தில் அவர்களிடம் வந்த இளைஞர்களிடம்,

     “இவனைக் கூட்டிட்டுப் போய் ஹாஸ்ப்பிட்டல்ல சேருங்க” என்றுவிட்டு, செவலையை எழுப்பிக் கொண்டு நடந்தான்.

     கண்ணனின் கோபத்தை பலமுறை நண்பர்களாய், குடும்பத்தினராய் அனைவரும் பார்த்திருந்தாலும் அவனது வீரத்தையும், விவேகத்தையும் இன்றுதான் அனைவரும் கண்ணெதிரே கண்டனர்.

     வேலையில் அவன் மிகத் திறமைசாலி என்று நண்பர்களுக்குத் தெரியும், ஆனால் வீரத்திலும் அவன் திறமைசாலி என்று செவலையை அவன் அடக்கியதை வைத்தே நண்பர்கள் புரிந்து கொண்டனர்.

     “டேய் செமடா! ஒரு செகண்ட் பாகுபலில வர்ற ராணாவைக் கண்ணுல கொண்டு வந்து நிறுத்திட்டடா!” என்று பிரதாப் புகழ,

     “டேய் டேய் போதும்டா! ஓவரா புகழாத! இது இவங்க வளர்த்த காளை. அதை அடக்குறது அவனுக்கு கஷ்டமா” என்று வாரினான் கார்த்திக்.

     “அதென்ன தம்பி அப்படிச் சொல்லிட்டீங்க?! பட்டணத்துக்கு வர்றதுக்கு முன்ன இந்தச் சுற்று வட்டாரத்துல என் மருமவன் அடக்காத காளையே இல்ல தெரியுமா? வருஷா வருஷம் மொதோ களத்துல இறங்குறது என் மருமகனாத்தான் இருக்கும். இப்போவெல்லாம் தான் போட்டியில இறங்குறது இல்ல!” என்றார் வீரபாண்டி.

     அதற்குள் கவி செவலையை நெருங்கி, “என்னடா ஏன்டா?! இப்படிப் பண்ண?! என்ன ஆச்சு உனக்கு?!” என்று கேட்க, செவலை தலையைக் கூட அசைக்காமல் அமைதியாய் ஏதோ போல் நின்றிருந்தான் செவலை.

     “என்னடா ஏன்டா ஏதோ போல இருக்க?! ஏதாவது அடிகிடி பட்டுடுச்சா?!” என்று அவள் மீண்டும் கேட்டபடி ஆராய,

     “அதெல்லாம் ஒண்ணுமில்லை அவனை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போ” என்றான் கண்ணன்.

     “ம்!” என்றவள், என்னவாயிற்றோ என்று கவலையுடன் செவலையை அழைத்துப் போக, அங்கே மீண்டும் மற்ற காளைகள் களமிறங்க மீண்டும் ஆட்டம் துவங்கியது.

     அதே சமயம் ரங்கன் அடக்கிய காளைகள் அனைத்துமே ஒருவிதமான சோர்வில் இருக்க அதை வளர்ப்பவர்களுக்கு மட்டுமே அது தெரிந்ததால் மற்றவர்களுக்கு பெரிதாய் சந்தேகம் இல்லாமல் போய்விட்டது. கண்ணனும் ஊர்காரர்களுக்குத் தெரிந்தால் பிரச்சனை பெரிதாகிவிடும் என்று சொல்லாமலேயே விட்டுவிட்டான்.

     கவி, கங்கா, வைரம், கற்பகம் என்று பெண்கள் நால்வர் மட்டுமே செவலையுடன் வீடு திரும்பியிருக்க, கண்ணனும், மற்றவர்களும் விளையாட்டு முடிந்த பிறகே வீடு திரும்பினர்.

     ஆனால் வீடு திரும்பிய முதலே கவி புலம்பிக் கொண்டே இருந்தாள் வைரத்திடம்.

     “எம்மா இவனுக்கு என்னம்மா ஆச்சு?! அப்போ என்னமோ அப்படி ஆவேசம் வந்தவனாட்டம் அவனை அந்தப் புரட்டு புரட்டினான். இப்போ என்னன்னா இப்படி சோர்வா உட்கார்ந்தே கெடக்கான்?! என்ன ஆச்சுன்னே தெரியலையே?!” என்று.

     “ஒண்ணும் இருக்காதுடி! சும்மா கெடந்து புலம்பாத!” என்று வைரம் சமதானப் படுத்தியும் அவள் நிறுத்தவில்லை!

     இவள் இங்கு இப்படி செவலையை எண்ணிக் கலவை கொண்டிருக்க, ஆண்கள் அனைவரும் ஒரே உற்சாகமும் சந்தோஷமுமாய் ஒன்றாய் சேர்ந்து சரக்கடித்துவிட்டு வீடு திரும்பினர் நேரம் கழித்தே.

     “என்ன வரும்போதே தள்ளாட்டமா இருக்கு?! எல்லோருமா சேர்ந்து தண்ணியப் போட்டுடீங்களா?!” என்று வைரம் கணவனிடம் கோபம் கொள்ள,

     “ஒருநாள் தானடி வைரம்!” என்று வீரபாண்டி கொஞ்சலும் கெஞ்சலுமாய் அவர் அருகே செல்ல,

     “ம்க்கும்! ஒருநாள் ஒரு நாள்னு தீவாளி, பொங்கல்னு ஒருநல்ல நாள் விடாம தண்ணியைப் போட்டுட்டு வர்றது” என்று கடிந்த வைரம்,

     “எண்ணே இதெல்லாம் நல்லா இருக்கா?! மாமன் மச்சான் நீங்கதான் சேர்ந்து கூத்தடிக்கிறீங்கன்னா, புள்ளைங்களையும் கூட்டிட்டுப் போய் கெடுத்து வைக்கிறீங்க!” என்று முதன் முதலாய் அவர்கள் முன்னே தண்ணி போட்டு வந்திருந்த கண்ணனைப் பார்த்து  வைரம் வெகுவாய்க் கோபம் கொண்டார்.

     “அட விடுடி! ஒருநாள்தானே என்னமோ, தினமும் குடிச்சிட்டு வர மாதிரி வையுற?!” என்று கனகாம்புஜம் பாட்டி பரிந்து கொண்டு வர,

     “நீ சும்மா இரு ஆத்தா! நீ உன் புள்ளைய சிறுசுலயே கண்டிக்காததுனாலதான். அது மச்சானுக்கு கத்துக் கொடுக்க, இப்போ ரெண்டு பேரும் சேர்ந்து என் மருமவனுக்கும் கத்துக் கொடுக்குறாங்க” என்று தன் அம்மாவிடமும் சீறினார் வைரம்.

   

Advertisement