Advertisement

   இத்தனை நாட்களாய் அவன் அவளை வேண்டாமென்றபோது வராத உணர்வு அவள் வாயால் அதைச் சொல்லும்போது வந்து ஒட்டிக் கொண்டது.

     அவன் பதில் ஏதும் உரைப்பதற்குள், “என்னடி மசமசன்னு நிக்க?! வா எல்லாத்தையும் எடுத்துட்டு போய் கூடத்துல வை. எல்லாரும் பசியாறனும்ல!” என்றார் வைரம் மகளைப் பார்த்து.

     “நான் ஹெல்ப் பண்றேங்க” என்று கார்த்திக்கும் அவள் உடன் சேர்ந்து பொருட்களை எடுத்துக் கொண்டு செல்ல,

     “அட உங்களுக்கு ஏன் தம்பி இந்த வேலையெல்லாம்?!” என்றார் வீரபாண்டி.

     “பரவாயில்லை அங்கிள் நம்ம வீடுதானே” என்ற கார்த்திக் அவர்கள் மறுக்க மறுக்கக் கேட்காமல், சமைத்த பொருட்களை எடுத்துக் கொண்டு சென்றதோடு அல்லாமல்,

     “நீங்க எல்லோரும் உட்காருங்க! ஆன்ட்டி நீங்களும்தான். இன்னிக்கு உங்க எல்லோருக்கும் நான் பரிமாறுறேன்” என்று வைரத்தின் கைபிடித்து அமர வைக்க,

     “ஐயோ என்ன தம்பி நீங்க?! வந்தவங்களை வேலை வாங்கிட்டு நாங்க உட்கார்ந்து சாப்பிடவா?” என்று எழ,

     “ப்ச் ப்ளீஸ் ஆன்ட்டி! உட்காருங்க. நேத்துல இருந்து நீங்கதானே எங்களுக்கு வேலை செய்யிறீங்க?! இந்த சின்ன விஷயம் கூட நான் செய்யக் கூடாத?!” என்ற கார்த்திக், யாரும் எதிர்பாராத வண்ணம்,

     “ப்ச்! கவி சொல்லிக்கிட்டே இருக்கேன்ல?! நீயும் வந்து ஆன்ட்டி பக்கத்துல உட்காரு” என்று அவளையும் கைபிடித்து இழுத்து அமர வைக்க, கண்ணனுக்கு மட்டுமல்லாது இப்போது அவளின் தாய்மாமன் ரத்தினத்திற்கும் ஏனோ அவனின் இச்செயல் சுத்தமாய் பிடிக்கவில்லை! கவியும் அவனது சட்டென்ற தொடுகையில் விதிர்விதிர்த்துதான் போனாள்.

    ஆனால் அவனது தொடுகையில் விகல்பமேதும் இல்லை என்பதையும் அவள் உணரத்தான் செய்தாள்.

     “அதென்ன பையா பொம்பிளைப் பிள்ளைய பொசுக்குன்னு கையைப்பிடிச்சு இழுக்குற?!” என்று கடிந்தார் கனாம்புஜம் பாட்டி.

     “அச்சோ சாரி பாட்டி. நான் பிரெண்ட்லியாதான் அவங்களை பிடிச்சு உட்கார வச்சேன்” என்று உடனே மன்னிப்புக் கோரினான் கார்த்திக்.

     கவியும், “இ இல்லை! பரவயில்லைங்க. நீங்க உட்காருங்க. அம்மாவுக்கும் சேர்த்து நான் பரிமாறுறேன்” என்று மறுக்க,

     “அட சொன்னாக் கேளுங்க” என்று அவளையும் அடமாய் பிடித்து அவன் உட்கார வைக்க, கண்ணனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

     ‘அவன் உட்காருன்னு சொல்லுப்போதே உட்கார்ந்து தொலையிறதுக்கு என்ன இவளுக்கு?!’ என்று வெகுவாய் அவளை முறைக்க, கார்த்திக் அப்படி நடந்து கொண்ட பதட்டத்தில் அவள் அதைக் கவனிக்கத் தவறி விட்டாள்.

     கார்த்திக் தான் சொன்னது போலவே அனைவரையும் அமர வைத்து ஆசை ஆசையாய் பரிமாறிக் கொண்டிருக்க, கங்கா, அவர்கள் வீட்டில் செய்த பலகாரங்களை எடுத்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.

     அங்கு நடப்பதைப் பார்த்தவள் கார்த்திக்கை முறைத்தபடியே வந்ததோடு நில்லாமல்,

     “என்ன அத்தை வீட்டுக்கு வந்த விருந்தாளியை வேலை வாங்கிட்டு இருக்கீங்க?!” என்றாள் வேண்டுமென்றே அவனை வம்பிழுக்க நினைத்து.

     “என்னங்க சட்டுன்னு இப்படிச் சொல்லிட்டீங்க?! நானும் உங்க குடும்பத்துல ஒருத்தர்தாங்க!” என்றான் கார்த்திக்கும் சட்டென பதிலுக்கு.

     “எதே?!” என்று அவள் முறைக்க,

     “ஐ மீன்! நீங்களும் இவங்களும் ஒரே குடும்பம் மாதிரிதானே பழகுறீங்க?! சோ நான் இவங்க குடும்பனா அப்போ உங்க குடும்பத்தையும் சேர்ந்தவன்தானே!” என்றான் உடனே.

     “ம்!!” என்று முறைத்தவள்,

     “இந்தா அத்தை. அம்மா இப்போதான் வடை போட்டுச்சு! சூடா சாப்பிடு!” என்று சொல்லி அவளும் தான் எடுத்து வந்த வடையைச் சுடச் சுட அனைவர் இலையிலும் பரிமாற, நெய் மணக்கும் வெண்பொங்கலுக்கும், மொச்சைக் குழம்பிற்கும், சூடான உளுந்து வடைக்கும் ருசி அள்ளிக் கொண்டுச் சென்றது.

     இருவரும் சேர்ந்து மற்றவர்களுக்கு உணவைப் பரிமாற, பந்தி இனிதாய் முடிவடைந்தது.

     நேரம் ஆகவும் கங்காவைத் தேடி வந்த முருகன், “அக்கா… இன்னும் சாப்பிட வராம நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க இங்க?!” என்று கேட்க,

     “நீங்க பார்த்துக்கோங்க. நான் வரேன்” என்ற கங்கா,

     “இதோ வந்துட்டேன்டா” என்று ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டாள்.

                                *****

     பொங்கல் பண்டிகை கோலாகலமாய் நிறைவுபெற, அடுத்த நாள் மாட்டுப் பொங்கலும் அவர்கள் வீட்டு பசு, எருது, காளை, கன்னுக்குட்டி என்று அனைத்தையும் குளிப்பாட்டி அலங்கரித்து பூஜை செய்து என வெகு அமர்க்களமாய் ஆரம்பமானது.

     அதோடு காளைகளின் ஜல்லிக்கட்டும் ஆரம்பமானது! முன்பகல் பதினொரு மணியளவில், ஜல்லிக்கட்டு ஆரம்பமாக, அவர்கள் வீட்டுக் காளையும் ஜல்லிக்கட்டில் இடம்பெற இருந்ததில்,

    “டேய் செவலை! இன்னிக்கு போட்டியில ஒருத்தரை நெருங்க விடக் கூடாது நீ! அதுக்காக யாரையும் குத்தியும் கிழிச்சுப்பிடக் கூடாது! பார்த்து பதிவிசா ஜெயிச்சுக்கிட்டு வரணும் என்ன?!” என்று அவள் தங்களது காளையின் முதுகை நீவி அதன் நெற்றியில் முத்தமிட, கண்ணனும் அவர்களது செவலையை தட்டிக் கொடுத்தான்.

     என்றும் இல்லாது இப்போது அவளது செவலை கூட அவன் தட்டிக் கொடுத்ததில் சிலிர்த்துக் கொண்டு அவனிடம் பாரா முகம் காட்ட,

     ‘செவலைக்கிட்டக் கூட நம்மளைப் போட்டுக் கொடுத்துட்டா போல?!’ என்று வெகுவாய் முறைத்தான் அவளை.

    ஆம்! அவன் நினைப்பதும் உண்மைதான். அவள் மனதில் உள்ளதை எல்லாம் தங்களது விளைநிலத்தை அடுத்து செவலையிடம்தான் அவள் ஒப்புவிப்பாள். அவன் கோபித்துக் கொண்டு ஊருக்கு வராத வரை செவலையின் காதில் தினந்தோறும் அவள் புலம்பித் தள்ளியதில்தான் இப்போது செவலையின் ரியாக்ஷன் இப்படி!

     “என்னங்க நீங்க?! மாட்டுகிட்ட போய்க் பேசிக்கிட்டு இருக்கீங்க?!” என்று கார்த்திக் சிரிக்க,

     “ம்! மனுஷங்களுக்குப் புரியாத பாசம் மாட்டுக்குப் புரியும்ணுதான்!” என்றவள்,

    “சரிடா தங்கம். நீ போய் களத்துல இறங்கு” என்று செவலையை வாடிவாசலுக்கு அழைத்துப் போய் நிற்க வைத்துவிட்டு வந்தாள்.

     “என்ன கவி கண்ணு?! இந்த வருசமும் உன் செவலைதான் பரிசைத் தட்டிக்கிட்டுப் போவானா?!” என்று ஊர் தலைவர் கேட்க,

     “பார்ப்போம் ஐயா” என்று புன்னகையுடன் பதில் சொன்னவள் தங்கள் குடும்பமும், கங்காவின் குடும்பமும் இருக்கும் இடத்திற்குச் சென்று நின்று கொண்டாள்.

     சிறிது நேரத்தில் அவர்களின் குள்ளூர்சந்தை கிராமத்தின்  ஜல்லிக்கட்டு அட்டகாசமாய் ஆரம்பமானது.

     இளசுகளும் களத்தில் இருப்பதால் மிக முரட்டுத்தனமானக் காளைகளை பின்னே அனுப்பி வைக்கலாம் என்று நிறுத்தி வைத்து கொண்டனர் செவலை உட்பட.

     ஒவ்வொரு காளையாக வாடிவாசல் கடந்து வரவும் இளசுகள் அதன் திமிலைப் பிடித்து கொண்டு ஓடி அடக்கவும், காளைகள் உதறித் தள்ளிவிட்டு ஓடவும், சில காளைகள் முட்டித் தள்ளப் பார்க்கவும் போட்டியளர்கள் தப்பிக்கவும் என்று விளையாட்டு வெகுவாய் சூடு பிடித்தது.

     ஒரு சில காளைகளை சிலர் அடக்கிய பின், அவர்கள் பக்கத்துக்கு ஊர்க்காரனான ரங்கன் களத்திற்கு வந்தான் முரட்டுக் காளைகள் உள்ளே இறங்கும் நேரம்.

     ‘’என்னமோ இந்த ஊர்ல மனுஷங்களை விட காளைங்கதான் ஜெயிக்கும்னு சொன்னாங்க?! என்கிட்ட எப்படி ஜெயிக்குதுன்னு பார்த்துடறேன்?!’ என்று எண்ணிக் கொண்டவன், எண்ணியபடியே அடுத்தடுத்து வந்த காளைகளை கொஞ்சம் விளையாட விட்டு, நிமிடங்களில் மண்ணில் சாய்க்க, அதைப் பார்த்திருந்தவர்களுக்கு,

     ‘அட என்னடா இது அதிசயமா இருக்கு?! இப்படி ஒரே ஆள் இத்தனை காளைகளை ஒரே நேரத்துல அடக்குறானே?!’ என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

     கவியுமே ஆச்சர்யமும் சந்தேகமுமாய் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

     “ப்பா! என்னடா இவன் இந்த போடு போடுறான்?!” என்று பிரதாப் கூட வாய்பிளந்துக் கேட்க,

     “எனக்கென்னமோ சந்தேகமா இருக்குடா?! ஆரம்பத்துல துள்ளிக்கிட்டு வர்ற காளைங்க இவன் அடக்குன பிறகு பசு மாதிரி அமைதியா போகுதுங்க?!” என்றான் கண்ணன்.

     அதையே யோசித்துக் கொண்டிருந்த கவியும், தன் மாமாவின் புறம் திரும்பிப் பார்க்க,

     “அடுத்ததாக, நம்ம கவிதாயினி பிள்ளையோட வீரசிங்கம், முரட்டுச் செவலை களம் இறங்கப் போறா…ன்!” என்று ஒலிபெருக்கியில் ஒலித்த பெரிய பில்டப்போடு  வாடி வாசல் திறக்கப் பட்டதும், கம்பீரமாய் வீர நடையிட்டு வந்தான் செவலை.

     அவன் மைதானத்தில் நுழைந்ததும், “செவலை!!” என்று கவி விசில் அடித்து அவனை அழைக்க, அத்தனை இரைச்சலிலும், அவள் குரல் வந்த திசையைச் சரியாய் கணித்து, அவளை நோக்கியவன், தனது தலையை உற்சாகமாய் அசைத்துவிட்டுத் திரும்பினான்.

     பின் மைதானத்தில் நின்றிருந்த போட்டியாளர்களை நோக்கித் திரும்பியவன், ஒரு சில நொடிகள் கம்பீரமாய் தன் பார்வையால் அளந்துவிட்டு, தன் முன்னங்காலால் மைதானத்தில் இருந்த மண்ணைக் கிளறி, கொம்பைக் கொண்டு முட்டி ஒரு வீசுவீசி,

     “விளையாட வாங்க!” என்பது போல் அழைப்பு விடுக்க, அவன் வீசிய வீச்சில் மணல் மேலெழும்பி காற்றில் புழுதி கிளம்பியது.

     ‘பார்றா! என்னமோ, சினிமால மொத சீன்ல வர ஹீரோ மாதிரி இப்படி சீனைப் போடுது!?’ என்று சிரித்துக் கொண்டான் ரங்கன்.    

     செவலையின்  செய்கையில் மக்கள் கூட்டம் அவனுக்குக் கைதட்டி உற்சாகமளிக்க, அவர்கள் ஊர் இளசுகள் எல்லாம் செவலையைக் கண்டதும் ஓரமாய் ஒதுங்கிக் கொண்டனர்.

     வெளியூர் ஆட்கள் ஒருசிலர் மட்டுமே அவனை நெருங்க, அவர்களை நெருங்கவே விடாமல் சீறியபடி அங்குமிங்கும் வலம் வந்தவன், தனது திமிலைப் பிடிக்க முயன்றவர்களை ஒரே சிலுப்பலில் உதறிக் கீழே தள்ளினான் பலமாய்.

     அவனது பலமான தள்ளளிலேயே தங்களது பலம் இழந்த வீரர்கள் சிறிது நேரத்தில் அவனை ஜெயிக்க முடியாமல் ஒதுங்கிக் கொள்ள, அவன் மற்றவர்களுடன் ஆடிக் களைத்ததாய் எண்ணி, ரங்கன் மிக தைரியமாய் தனது மீசையை முறுக்கிக் கொண்டு அவன் அருகே சென்றான்.

     ரங்கன் பின்னே இருந்து அவனது திமிலைப் பிடித்து அவனை நிறுத்த முடியாது போனதில், சற்றே முன் வந்து செவலையின் கொம்பையும் மூக்கையும் பிடித்து அவனை நிறுத்த முயல, செவலை ஒரே தள்ளில் அவனை முட்டித் தூக்கி எறிந்தான் ஆவேசமாய்.

Advertisement