“டேய் கொடுத்துட்டுப் போன மேளத்தை அடிக்காம அங்க என்னடா லுக்கு?! கிராமத்துக்கு வந்தும் உன் வேலைய ஆரம்பிச்சுடாத! தோலை உரிச்சிடுவாங்க” என்று கிஷோர் அவன் காதைக் கடிக்க,
‘போடா!’ என்ற ரீதியில் பார்த்தவன், மேளத்தை அடிக்கத் துவங்க, அமைதியாய் இருந்த வீட்டில் நண்பர்களின் வரவால் கொண்டாட்டம் ஆரம்பமானது.
அனைவரும் போகிக் கொண்டாட்டத்தில் இருக்க, அவளால் ஒரு கட்டத்திற்கு மேல் தன் மாமனின் கூர் பார்வையைத் தாங்க முடியாது போனதில்,
“எம்மா, நான் போய் பயிலர்ல தண்ணி போட்டது காஞ்சிடுசான்னு பார்த்துட்டு வந்துறேன்” என்றுவிட்டு அவ்விடம் விட்டு வேகமாய் பின்புறம் விரைந்தாள்.
அவள் சென்ற சில நொடிகளுக்கெல்லாம் கண்ணனும் மெல்ல அவ்விடம் விட்டு நகர,
“என்னடா அத்தைப் பொண்ணு பின்னாடியே நழுவற?!” என்று கார்த்திக் கவனித்துக் கிண்டலடிக்க,
“அடச்சீ வாயை மூடு” என்று கடுப்புடன் மொழிந்தவன், கொல்லைப்புறத்தில், பயிலரில் மேலும் சில வரட்டி உருண்டைகளை போட்டு நெருப்பை மூட்டிக் கொண்டிருந்தவளின் கைகளைப் பிடித்து இழுத்து தன்புறம் திருப்பினான்.
இருட்டிய வேலையாக இருந்தாலும் அவனின் வாசத்தையும், ஸ்பரிசத்தையும் நன்கு உணரக் கூடியவள் ஆதலால், அவன்தான் என்று தெரிந்து, நிமர்ந்து கூட பார்க்காமல் அவள் அடமாய் நிற்க,
“என்னை நிமிர்ந்து பாருடி” என்றான் அதட்டலாய்.
அவள் கொஞ்சமும் மதிக்காமல் நிலம் நோக்கியே நிற்க, “என்னைப் பாருன்னு சொன்னேன்!” என்று அவன் மீண்டும் அதட்ட, தனது கண்களில் துளிர்த்த கண்ணீரைத் தரையில் சிந்த விட்டவள், அப்போதும் அமைதியாகவே இருந்தாள்.
“அப்போ நான் உன்னைக் கல்யாணம் பண்ணிகிட்டதான் நீ என்னைப் பார்த்து என்கிட்டே பேசுவ? இல்லைன்னா என்னைத் தூக்கிப் போட்டுட்டுப் போயிடுவ?!” என்றான் குத்தலாய்.
அவ்வார்த்தைகளில் அவள் வெடுக்கென நிமிர்ந்து அவன் முகம் பார்க்க,
“வேற எப்படிடி யோசிக்கச் சொல்ற?!” என்றவன்,
“ஒட்டுமொத்தக் குடும்பமும் சேர்ந்து உங்க முடிவை என்மேல திணிக்கப் பார்க்குறீங்க! உங்க ஆசைப்படிதான் எல்லாம் நடக்கணும். அப்படித்தானே?!” என்றான் எகத்தாளமாய்.
“நான் உன்னை உசுரை விட மேலா என் மனசுல வச்சிக்கிட்டு உன்னைக் கட்டிக்க ஆசைப்படுறேன். ஆனா நீ?!” என்றவள், தன்னை இறுகப் பற்றியிருந்த அவன் கையை மெல்லத் தன்னிலிருந்து விடுவித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
அவளின் பேச்சும், பார்வையும் அவனுள் பெரும் கோபத்தையும், அதே நேரம் வேதனையும் உண்டு பண்ண,
‘இதுக்கு மேலயும் இவ என்னை என்னதான் செய்யச் சொல்றா?!’ என்று எண்ணிக் குமுறியவனுக்கு, அவள் தன்னிடம் பாராமுகமாய் இருப்பதையே தன்னால் தாங்க முடியவில்லையே, அவள் தன் வாழ்விலேயே இல்லாமல் போய்விட்டால், தான் எப்படித் தாங்கிக் கொள்வோம் என்பதை அறியும் புத்தி அப்போது இல்லாமல் போனது!
போகிப் பண்டிகை, எல்லோரும் எண்ணெய் தேய்த்துத் தலைமுழுகி கறிவிருந்தோடு இனிதே முடிவடைய, நாளை பொங்கல் கொண்டாடுவதற்காய் அவர்கள் ஊர் சந்தைக்கு சென்று காய்கறிகள் வாங்கி வர கிளம்பினர் நண்பர்கள் பட்டாளமாய்.
“டேய் உனக்கு என்னடா தெரியும் அத்தையும், கன்னுக்குட்டியும் போய் வாங்கிட்டு வருவாங்க. நீ போய் உன் கூட்டாளிங்களுக்கு நம்ம ஊரை சுத்திக் காட்டிட்டு வா” என்று ரத்தினம் தடுக்க,
“அது யாரு கன்னுக்குட்டி?!” என்று கார்த்திக் சிரிக்க,
“டீ கெளம்பியாச்சா?! நாங்களும் வந்துட்டோம்” என்றபடியே வந்தாள் கங்காவும், அவள் அம்மாவுடன்.
“வாடி எம்புட்டு நேரம் காத்துகிட்டு இருக்கிறது உனக்காக?” என்ற வைரம்,
“சரிண்ணே நீங்க மூணு பேரும் எங்கயும் போகாம வூட்ல இருங்க. நாங்க ஒரு மணி நேரத்துல வந்துடுவோம்” என்று சொல்லிவிட்டு கிளம்பினார் வைரம்.
“யாரு நீங்க ஒரு மணி நேரத்துல?!” என்று வீரபாண்டி சிரிக்க,
“ப்ச் ஒரு பேச்சுக்கு சொன்னோம்! ஒண்ணுங்கிறது ரெண்டு மூணு மணி நேரம் கூட ஆவலாம்!” என்று வைரமும் பதில் கொடுத்துக் கொண்டே நடந்தார்.
பொங்கல் என்பதால் ஊர் சந்தை மிக ஜோராகக் கூடியிருந்தது. ஒரு புறம் ராட்டினத்தில் சிறுசுகள், இளசுகள் உற்சாகமாய் வலம் வர, தின்பண்டக் கடைகளிலும் கூட்டம் கூட்டமாய் சிறுசுகள், இளசுகள் கூட்டம் அலைமோதியது. ஆடை அணிகலன் கடைகளில் எல்லாம் லைட் செட்டுகளைப் போட்டு மக்களின் கவனத்தைத் தங்கள் புறம் ஈர்த்துக் கொண்டிருந்தனர் கடைக்காரர்கள். காய்கறி, விளையாட்டுச் சாமான் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.
“என்னடா இது இவ்ளோ கூட்டமா இருக்கு?!” என்றான் பிராதாப்.
“ம்! பொங்கத் திருவிழாவாச்சே கூட்டம் இருக்காதா?!” என்று கங்கா கேட்க,
“ஊரைப் பொருத்தமட்டும் பொங்கல்தான் பெரிய திருவிழாவே! தீபாவளி, மத்த பண்டிகை எல்லாம் கூட இங்க ரொம்ப சாதரணமாதான் இருக்கும். ஆனா பொங்கல்னா ஒருத்தர் விடாம எல்லாரும் ரொம்ப விமரிசையா கொண்டாடுவோம் தம்பி” என்றார் வைரம்.
“ஓ!” என்று பிரதாப் தலையசைக்க,
“ஆன்ட்டி நீங்க எல்லோரும் பொங்கலுக்கு ட்ரெஸ் எடுத்துக்கோங்க. இந்த முறை நான் எடுத்துத் தரேன்” என்றான் கார்த்திக்.
“அட ஏன் தம்பி எங்களுக்கெல்லாம்?! சும்மா இருங்க” என்று கற்பகமும் மறுக்க,
“அவுககிட்ட பணம் கொட்டிக் கெடக்கு போலம்மா! அதான் எல்லோருக்கும் கொடுக்க நினைக்கிறாரு!” என்று நக்கலடித்தாள் கங்கா அவனை முறைத்துக் கொண்டே.
ஏனோ கங்காவிற்கு அவனைக் கண்ட நொடி முதலே அவனது பார்வையையும் பேச்சையும் சுத்தமாய்ப் பிடிக்கவில்லை!
“அப்படி எல்லாம் இல்லைங்க! எனக்கு சொந்தம்னு சொல்லிக்க யாரும் இல்லை! முதன்முதலா இப்படி குடும்பத்தோடு ஒரு பண்டிகையைக் கொண்டாடுறேன். அதான் எல்லோருக்கும் செய்யனும்னு தோணுச்சு! மத்தபடி ஒண்ணுமில்லை” என்றான் உள்ளத்தில் உள்ளதை அப்படியே.
அதைக் கேட்டதும், வைரத்தின் உள்ளமும் கற்பகத்தின் உள்ளமும் மொத்தமாய் இளகிவிட,
“ஏன் உங்க வீட்ல யாரும் இல்லையா?!” என்றாள் கவியும் மனம் தாளாமல்.
“இல்லைங்க. நினைவு தெரிஞ்சதுல இருந்து ஆசிரமம்தான். ஆசிரமத்துலயும் எல்லோரும் அன்பாதான் இருப்பாங்க. ஆனா படிச்சு வேலை கிடைச்சு வெளிய வந்தபிறகு மோஸ்ட்லி தனியாதான் எல்லா பண்டிகையும். சில நேரத்துல மட்டும் ஆசிரமத்துக்கும் போய் கொண்டாடுவேன்.” என,
“சரி அதெல்லாம் யோசிக்காதீங்க தம்பி. வாங்க வந்து எடுத்துக் குடுங்க. நாங்க வாங்கிக்கறோம்” என்று வைரம் சொல்ல, அவன் மலர்ந்த முகத்துடன்,
“நீங்களே பார்த்து எடுங்க” என்றுவிட்டு, தன் நண்பர்களிடமும்,
“டேய் நீங்களும் எடுத்துக்கோங்கடா!” என,
“டேய் எப்பா சாமி!! முடியலைடா?! உன் பாசத்துல நெஞ்சு வெடிக்குதுடா!” என்று கிண்டலடித்தான் பிரதாப்.
கங்காவோ, ‘இவன் சொல்றதுல்லாம் உண்மையா பொய்யா?!’ என்ற ரீதியில் பார்த்திருந்தாள்.
கண்ணனுக்கு இந்த விஷயத்தில் அவனைத் தப்பாய் எடுத்துக் கொள்ள முடியவில்லை! எனென்றால், அவன் எப்போதுமே இதுபோல குடும்பத்திற்கும் பாசத்திற்கும் ஏங்குபவன் என்பதால். ஆனால் அவன் தன் குடும்பத்தையே மொத்தமாய் எடுத்துக் கொள்ள விழையும் போது?!
வந்திருக்கும் பெண்மணிகளுக்கு மட்டும் அல்லாமல், மருது, வீரன், ரத்தினம் என்று வீட்டு ஆண்களுக்கும் உடைகளைத் தேர்ந்தெடுத்த கார்த்திக்,
“ஏங்க, அந்தக் குட்டிப் பையன் உங்க தம்பிதானே அவனை ஏன் அழைச்சிட்டு வரலை?! அவனுக்கும் நீங்களே பார்த்து எடுங்க” என்றான் கங்காவிடம்.
“எனக்கே வேண்டாங்குறேன்! என் தம்பிக்கு எதுக்காம்?!” என்று கங்கா பொரிய,
“டீ அவுக ஆசையா எடுத்துக் கொடுக்குறாக இல்லை! ரொம்ப பிகு பண்ணாம எடுத்துக்கோடி” என்று தோழியைக் கடிந்த கவி, தனது அம்மாவின் காதில் ஏதோ சொன்னாள்.
அவர் சரி எனத் தலையாட்டியதும், ஆண்கள் உடைகள் இருக்கும் இடத்திற்குச் சென்று, ஒரு பட்டு வேட்டியையும், சட்டையையும் எடுத்துக் கொண்டு வந்து கார்த்திக்கிடம் நீட்டி,
“நல்லா இருக்கா?!” என்றாள்.
“நல்லா இருக்குங்க! கண்ணனுக்கா?” என்று கார்த்திக் கேட்க,
“ம்ஹும்! மாமாக்குதான் நீங்க எடுத்துக் கொடுத்துட்டீங்களே, உங்களுக்குத்தான் எடுத்துட்டு வந்தேன்” என்று அவள் சிரித்த முகத்துடன் சொல்ல, அந்த சின்ன விஷயத்திற்கே கரைந்து போன கார்த்திக்,
“சூப்பரா இருக்குங்க!!” என்றான் சந்தோஷமாய்.
“சரி அப்போ இதையே எடுத்துக்கலாம்” என்றவள்,
“இதுக்கு மட்டும் தனியா பில்லு போடுங்க. நாங்க குடுத்துடறோம்” என்று கடைக்காரரிடம் சொல்ல, கார்த்திக்கின் மனதுள் பட்டாம்பூச்சி பறந்தது. கண்ணன் மனதிலோ?!