7

     இரவு அனைவரும் உறங்கும் வரையிலும் கூட அவள் வெளியே வரவே இல்லை பிடிவாதமாய்!

     அவன் வீட்டிற்கு வந்தும் அவள் முகம் காணாது இருப்பது இதுவே முதன்முறை என்பதில் மனம் முழுக்க கோபத்தில் திளைத்திருந்தான் கண்ணன். அங்கு அவளோ?

     நீண்ட நாட்களுக்குப் பிறகு அவனது கார் சத்தத்தைக் கேட்டதற்கே அத்தனை சந்தோஷம் கொண்டவள், அவன் குரலைக் கேட்டதும் மொத்தமாய் உருகித்தான் போய்விட்டாள். ஆனாலும் பிடிவாதம்! அவன் தன்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டானே என்ற பிடிவாதம்! அதிலும் இந்தப் பேச்சை எடுக்கக் கூடாது என்பதற்காகவே அவன் ஒரு மாதமாய் ஊர் பக்கமே வராது போனது அவளையும் வெகுவாய் கோபப் படுத்தி இருந்தது.

     வெறுமென சாற்றி இருந்த தனது அறைக் கதவை அனைவரும் உறங்கியது அறிந்து, எழுந்து வந்து தாழிட்டவள், தனது உடைகளின் நடுவே மறைத்து வைத்திருந்த அவனது டிஷர்டை எடுத்துப் போட்டுக் கொண்டு தங்கள் அறையில் இருந்த பழைய மர பீரோவின் கண்ணாடி முன் சென்று நின்றாள்.

     “என்ன மாமா அப்படிப் பார்க்குற?! உன் சட்டையை எடுத்துப் போட்டுக்கிட்டேன்னு கோவம் வருதா உனக்கு?!”

     “கோவப்படு நல்லா கோவப்படு! உன் கோபம் கூட எனக்குத்தான் மாமா சொந்தம்!”

     “ஊருலயே இருந்த வரைக்கும் நீ எவ்ளோ பாசமா இருப்ப?! ஆனா பட்டணத்துக்குப் போன பிறகு எப்போ பாரு வேலை வேலைன்னு எனகிட்ட சிடுசிடுன்னு விழுந்த?! சரி அதெல்லாம் கூட எனக்குப் பெருசாத் தெரியலை! ஆனா இப்போ திடுதிப்புன்னு பட்டணத்துப் பொண்ணைக் கட்டிக்கணும், இந்த ஊரு வாழ்க்கை எல்லாம் சரிவராதுன்னு என்கிட்டயே சொன்னியே எனக்கு எப்புடி இருந்திருக்கும்?!” என்று குரல் கரகரக்கக் கேட்டவள்,

     “நெசமா உன் முகம் பாக்காம, போன்ல கூட உன் குரலைக் கேட்காம என்னால இருக்கவே முடியலை மாமா! ரொம்பத் தவிச்சு போயிட்டேன் தெரியுமா மாமா?! உன் கார் சத்தம் கேட்டதும்தான் எனக்குப் போன உசிர் திரும்ப வந்த மாதிரி இருந்துச்சு?! அதுவும் நீ சாப்பிடும் போது என்னைக் கேட்டயில்ல, அப்போ அப்படியே ஓடி வந்து உன் முன்னாடி நின்னு உன் சட்டையைப் பிடிச்சு இழுத்து சண்டை போடணும்னு தோணுச்சு!”

     “ஆனா? ஆனா உனக்கு என் பாசம், கோபம் எதுவுமே புரியலல்ல! எவ்ளோ தைரியம் இருந்தா என் முன்னாடியே எனக்கு மாப்பிள்ளை பார்ப்பேன்னும், பட்டணத்துப் பொண்ணுதான் உனக்கு வேணும்னும் சொல்லுவ நீ?!” என்று தான் அணிந்திருந்த அவனது சட்டையை இழுத்துப் பிடித்து அவனைக் கேள்வி கேட்டவள், நொடியில் மாமன் மேல் இருந்த பாசத்தில் சட்டையை விட்டுவிட்டு,

     “ப்ச்! பாரு! உன் மேல உசுரையே வச்சிருந்தவளை இப்படிக் கோவப்படுத்திப் பார்க்குற நீ?!” என்றாள் வேதனையுடன்.

     “ஒருமாசம் கிட்ட ஆச்சு மாமா உன்னை நேர்ல பார்த்து! இமைக்குற நொடியெல்லாம் என் கண்ணுக்குள்ள நீ இருந்தாலும், நாளுக்கு நூறு தரம் உன் போட்டோவ பிடிச்சு முத்தம் கொடுத்தாலும், உன் பக்கத்துல நிக்கும் போது உன் கண்கள்ல தெரியுற பாசத்துல நான் மயங்கிப் போற அந்த நொடி இல்லாம தவிச்சுக் கெடக்கேன் மாமா! உனக்கு அது மாதிரி எதுவுமே தோணலையா?!” என்றாள் குரல் கம்ம.

     ஆனால் அவள் எதிரில் இருந்த கண்ணாடியில் தோன்றியதெல்லாம் அவனின் சிரித்த பிம்பம் மட்டுமே.

     “போ சிரிக்காத மாமா! நான் கடுங்கோவத்துல இருக்கேன் கையில கிடைச்ச பிராண்டிடுடுவேன்!” என்றவள், அதற்கு மேலும் தன்னால் அவனைப் பார்க்காமல் இருக்க இயலாது என்று முடிவு செய்து, அவனது சட்டையை கழட்டி வைத்துவிட்டு, மெல்ல தனது அறைக்கதவைத் திறந்து கொண்டு, கூடத்தில் அம்மா, பாட்டி, அப்பா, மாமா அனைவரும் நன்கு உறங்குகிறார்களா என்று பார்த்துக் கொண்டு அவனது அறை நோக்கி நடந்தாள்.

     நண்பர்கள் நால்வரும் படுத்து உறங்கக் கட்டில் போதாது என்பதால், நால்வருமே தரையில் பாய் விரித்துப் படுத்திருந்தனர்.

    மூவரும் நல்ல உறக்கத்தில் இருக்க அவன் மட்டும் ஏனோ உறக்கம் வராது அமைதியாய் கண்கள் மூடிப் படுத்திருந்தான் உறக்கத்தை எதிர்பார்த்து. ஆனால் வந்ததோ அவனின் உறக்கத்தை கலைக்க வந்த அவனின் தேவதையே!

    யாரோ வரும் அரவம் கேட்டதுமே கண்கள் திறந்து சட்டெனப் பார்த்தவன் அவள் தங்கள் அறைக்குள் நுழைவதைப் பார்த்ததும், படக்கெனக் கண்களை மூடிக் கொண்டான்.

     ‘வந்ததுல இருந்து வெளியே எட்டிக் கூடப் பார்க்காதவ இந்த அர்த்த ராத்திரில எதுக்கு வந்திருக்கா?!’ என்று யோசித்தபடியே அவன் அமைதியாய் இருக்க, அவள் யாரேனும் விழித்திருக்கிறார்களா என்று கூர்ந்து கவனித்து விட்டு நண்பர்கள் நால்வருக்கும் முதலாய் படுத்திருந்த அவன் அருகே வந்து அமர்ந்தாள்.

    உறங்குவது போல் அவன் கண்மூடிப் படுத்திருந்தது அறியாமல், அவன் முகத்தையே சில நொடிகள் பார்த்திருக்க அவள் கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது.

     “ந நான் வேணாமா மாமா உனக்கு?!” என்றாள் மெல்லிய குரலில். அவள் அழுகிறாள் என்று அவள் குரலிலேயே தெரிந்தது. அந்தக் குரல் அவனை எதுவோ செய்தது. ஆனாலும் மனதை இறுக்கமாகவே வைத்திருந்தான் அங்கு நண்பர்களும் படுத்திருக்கிறார்கள், பேசினால் எழுந்து விட வாய்ப்பிருக்கிறது என்று.

     அவ்வளவுதான் அந்த ஒற்றை வார்த்தைதான் அவள் பேசினாள். அதன்பின் அவளிடமிருந்து எந்த அசைவும் இல்லை! சில நிமிடங்களில் அவள் மெல்ல எழுந்து செல்வதை உணர்ந்தான்.

     என்னவோ இதுநாள் வரை இல்லாத ஒரு உணர்வு அவனுள்! எப்போதுமே அவள் அழுதால் அவனால் தாங்க முடியாதுதான். இன்று அவனாலேயே அவள் அழுகிறாள் எனும்போது அவனுள் சொல்ல முடியாத வலி!

     ‘இவங்களுக்கு ஏன் என்னோட உணர்வுகள் புரியமாட்டேங்குது?! எல்லாம் இந்த வீட்ல இருக்கிறவங்களைச் சொல்லணும்! தேவையில்லாம அவ மனசைக் கெடுத்து வச்சிட்டு இப்போ எல்லோருமா சேர்ந்து கஷ்டப் படுறோம்! இவ இவளுக்கு நான் எப்படி புரிய வைப்பேன்?!’ என்று மனதிற்குள்ளேயே வருந்திக் கொண்டிருந்தான் அவனும்.

     தங்கள் அறைக்குள் சென்றவள் தன் மாமனின் சட்டையைத் தன்மேல் போட்டுக் கொண்டு அதை மறைத்தவாறு போர்வையையும் போர்த்திக் கொண்டு படுத்துக் கொள்ள உறக்கம் மட்டும் வரவே இல்லை!

     விடியற்காலை நான்கு மணி. அவளும், அவள் தந்தையும், தாய்மாமனும் எழுந்து போகி கொண்டாடுவதற்காக கொளுத்துவதற்கு எடுத்து வைத்திருந்த பழைய பொருட்களை எல்லாம் எடுத்துச் சென்று வீட்டின் எதிரே தெருவாசலில் போட்டுக் குவித்துக் கொண்டிருக்க, வைரமோ அவனது அறை வாசலின் வெளியே நின்று, 

     “கண்ணா! எழுந்து வாப்பா! போகி கொண்டாட நேரமாகுது! உன் கூட்டாளிங்களையும் எழுப்பிக் கூட்டியா” என்று குரல் கொடுக்க இரவு முழுதும் அவள் கேட்டுச் சென்ற அவ்வொற்றை வரியால் சிறிது நேரம் கூட உறங்க முடியாது தவித்திருந்தவன், அவரது கண்ணா என்ற அழைப்பிற்கே எழுந்து அமர்ந்து,

      “ஹான் வரோம் அத்தை” என்று குரல் கொடுத்தான் பதிலுக்கு.

     “டேய் டேய் எந்திருங்கடா!” என்று அவன் குரல் கொடுக்க,

     “என்னடா நீ நடுராத்திரியில எழுப்பிக்கிட்டு இருக்க?!” என்று கார்த்திக் புலம்ப,

     “போடா இப்போதான் நல்லா தூக்கம் வருது” என்றான் பிரதாப்.

     “அது சரி! ஊர்ல வந்து போகி கொண்டாடணும்னு சொல்லிக்கிட்டு இங்க வந்து இழுத்துப் போர்த்திட்டு தூங்குறீங்க! எழுந்து வாங்கடா எல்லோரும் நமக்காக போகி கொண்டாடாம வெளிய காத்துகிட்டு இருக்காங்க” என்றான் கண்ணன்.

     “ப்ச் என்னடா?!” என்று பிரதாப் புலம்பியபடியே எழ,

     “டேய் எருமை எழுந்திரு! ஊருக்கு வந்ததே எல்லா பண்டிகையும் ஊர் முறைப்படி கொண்டாடத்தானே!” என்று கிஷோர் கார்த்திக்கை தட்டி எழுப்ப,

     “நீங்க மட்டும் போங்கடா” என்றவனை,

     சரி வாங்கடா நாம மட்டும் போவோம்” என்று கண்ணன் சொல்ல, அவனும் இழுத்துப் போர்த்திப் படுத்துக் கொண்டான். ஆனால் அடுத்த நொடி,

     “டீ! கவி… இன்னுமாடி பழையப் பொருளுங்க இருக்கு! எம்புட்டு நேரமா கொண்டு வந்து போட்டுக்கிட்டே கிடப்ப?!” என்ற வைரத்தின் குரலுக்கு,

     “இதோ இன்னும் கொஞ்சதான் ம்மா” என்ற கவியின் பதில் குரல் கேட்டு சடக்கென எழுந்து அமர்ந்தான் கார்த்திக்.

     நண்பர்கள் மூவரும் வெளியே சென்றுவிட, வேகமாய் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றவன், தானும் அவர்களுடன் சேர்ந்து நின்று கொள்ள, மூவரும்,

     “நீ எப்படா எழுந்து வந்த?!” என்ற ரீதியில் முறைத்து வைத்தனர்.

     “ஈ!” என இளித்து வைத்தவன்,

     “உங்க மனசு எல்லாம் கஷ்டப் படக் கூடாதுல்ல அதான் வந்துட்டேன்.” என்றவன் இருட்டில் நின்றிருந்த கவியின் முகம் தெரியாது போனதில் ஆர்வமாய் அவள் புறமே பார்த்திருந்தான்.

     “ஏலே வீரா கற்பூரம் வைக்கலாமா?!” என்று மருது தங்கள் வீட்டின் தெருவாசலில் நின்று குரல் கொடுக்க,

     “ஹான் சரிப்பா” என்றார் வீரா இங்கிருந்தபடியே.

     “கவிம்மா! கற்பூரம் ஏத்தி வையி” என்று வைரம் சொல்ல,

     “அப்படியே உன்னைப் பிடிச்ச கஷ்டமெல்லாம் நீங்கி இன்னையில இருந்து சந்தோஷம் மட்டும்தான் என் மனசுல நிறைஞ்சிருக்கணும்னு நினைச்சுக்கிட்டு ஏத்து கண்ணு” என்று ரத்தினம் சொல்ல, அவன் அவரை வெகுவாய் முறைத்தான்.

     கவி கற்பூரத்தை ஏற்றி பழையப் பொருட்களை எரிய விட்டதும் ஒளிரத் துவங்கிய தீ ஜுவாலையில், அவளின் பூ முகம் பொன்நிறமாய் ஜொலிக்கத் துவங்க, அவளின் களையான முகத்தில் தனைத் தொலைத்து நின்றான் கார்த்திக்.

     ஆனால் ரசிக்க வேண்டியவனோ, ரசிக்காமல் அவளை தீர்க்கமாய்ப் பார்த்தபடி நின்றிருந்தான்.

     எப்போதும் பண்டிகையின் போது அவள் அடிக்கும் மேளச் சத்தத்தில் தெருவே திரும்பிப் பார்த்து ரசிக்கும்படி இருக்கும் அந்த வீடு, அவளின் அமைதியால் இன்று மிக அமைதியாய் இருப்பதைப் பொறுக்க முடியாத கங்கா,

     “டேய் முருகா, நீ போயி அங்க வந்திருக்க அண்ணனோட கூட்டாளிங்ககிட்ட இந்த மேளத்தைக் கொடுத்து அடிக்கச் சொல்லுடா, வீடே அமைதியா கொண்டாட்டமே இல்லாம இருக்கு! எப்பவும் அண்ணன்தான் அடிக்காதுன்னா இப்போ இவளும் உம்முன்னு கெடக்கா!” என்றாள் தனது தம்பியிடம்.

     அதன்படியே அங்கு ஓடிவந்த முருகன், “மாமா இந்தாங்க இந்த மேளத்தை அடிங்க” என்று கார்த்திக்கிடம் மேளத்தை நீட்ட,

      “மாமாவா நீ யார்ரா புது சொந்தம்?!” என்று ஆச்சர்யத்துடன் கேட்ட கார்த்திக்,

     “நான் பக்கத்துக்கு வீட்ல இருக்கேன். எங்க அக்காதான் உங்கக்கிட்ட கொடுத்து மேளத்தை அடிக்கச் சொல்லுச்சு! வீட்டுல கொண்டாட்ட களையே இல்லைன்னு” என்று அவன் சொல்ல,

     ‘அக்காவா அது யார்றா அந்தப் புது பிகரு?!’ என்று யோசித்தபடியே,

     “யார்ரா உங்க அக்கா?!” என்று கார்த்திக் கேட்க,

     “அதோ அங்க நிக்குறா பாருங்க” என்றுவிட்டு அவன் ஓடிவிட, அந்தபக்கம் பார்த்த கார்த்திக்,

     “என்னடா இது கிராமத்துப் பொண்ணுங்களைப் பத்தி நாம வச்சிருந்த கணிப்பை எல்லாம் பொய்யா ஆக்கிட்டாங்களே இந்த ரெண்டு பொண்ணுங்களும்?! ஏன்னா கலரு ஏன்னா பிகரு?!’ என்று எண்ணி வியந்தான் மனதோடு.