சில நொடிகள் அமைதி காத்தவன், “இப்ப என்ன பொங்கலுக்கு நான் ஊருக்கு வரணும் அவ்ளோதானே?!” என்றவன்,

     “ஆனா ஒண்ணு, நான் ஊருக்கு வந்த பிறகு மறுபடியும் எனக்கும் அவளுக்கும் கல்யாணப் பேச்சை எடுக்க மாட்டேன்னு சொல்லுங்க! நான் வரேன்” என்றான் அவனும் விடாப்பிடியாய்.

     மற்றவர்கள் சட்டென அமைதியாகிவிட, பாட்டியோ, “சரிய்யா சரி. எடுக்க மாட்டோம். நீ பண்டிக்கைக்கு வந்துட்டுப் போனா போதும்!” என்றார் இறங்கிப் போய்.

     அனைவரும், பாட்டியின் முகத்தைப் பார்க்க, அவரோ, “பேசாம இருங்க” என்று கையசைவில் சொல்லிவிட்டு,

     “சரிய்யா வந்துடு” என்றுவிட்டு போனை வைத்தார்.

                              *****

     “என்னடா லீவ் சொல்லி இருக்க டீம்ல? ஊருக்குப் போறியா?” என்றனர் அவனின் டீம் மெட்டான மூன்று நண்பர்களும்,

     “ஆமாம்டா! எனக்கும் அவங்களை எல்லாம் பார்க்காம இருக்கவே முடியலைடா! ஆனா அங்க போனா கல்யாணப் பேச்சை எடுப்பாங்களேன்னே போகாம இருந்தேன் இத்தனை வாரமா” என்றான்.

     “டேய் இந்த முறையாச்சும் எங்களை ஊருக்குக் கூட்டிட்டுப் போடா! கிராமங்கள்ல எல்லாம் பொங்கல் பண்டிகை ரொம்ப விசேஷமா இருக்கும். நான் இதுவரைக்கும் பொங்கல் பண்டிகையை கொண்டாடினதே இல்லைடா! பொங்கல்ன்னு இல்லை எந்தப் பண்டிகையுமே கொண்டாடினது இல்லையே” என்றான் கார்த்திக் ஆசையாய்.

     “ம்!” என்று யோசித்தவன்,

     “சரிடா! நீ வருவ. ஆனா இவங்க? அவங்க வீட்லயும் கொண்டாடுவாங்க இல்லை?” என்று கண்ணன் கேட்க,

     “எங்க வீட்ல ஒண்ணும் சொல்ல மாட்டாங்கடா. நான் இல்லைன்னா அம்மாவும் அப்பாவும் அக்கா வீட்டுக்குப் போயிடுவாங்க!” என்று கிஷோரும்,

     “எனக்கும் ஒன்னும் பிரச்சனையே இல்லை! எங்க அண்ணி நான் வரலைன்னா சந்தோஷம்தான் படுவாங்க” என்றான் பிரதாப்பும்.

     “சரிடா. ஆனா உங்க எல்லோருக்கும் லீவ் கிடைக்கணுமே?!” என்று கண்ணன் யோசனையாய் கேட்க,

     “அடேய்! டீம் லீடே நீதானடா?! நீதானா பெர்மிஷன் கொடுக்கணும். தயவு செஞ்சு சொதப்பிடாதடா” என்று கார்த்திக் கெஞ்ச,

     “அப்போ உன்னோட எல்லா பெண்டிங் வோர்கையும் டூ டேஸ்ல முடிக்கிற வழியைப் பாரு” என்றவன்,

     “புதன்கிழமை கிளம்பணும். அதுக்கு ஏற்ற மாதிரி வேலையை எல்லாம் முடிச்சிட்டு ரெடியாகிடுங்க” என்றான் முடிவாய்.

                              *****

     நண்பர்கள் நால்வரும் ஒன்றாய் சேர்ந்து, பேச்சோடும் அரட்டையோடும் பயணித்ததில் இத்தனை நாட்களை விட வெகு வேகமாய் ஊர் வந்து சேர்ந்தது போல் இருந்தது கண்ணனுக்கு.

     வைரத்திடம் மட்டும் ஏற்கனவே சொல்லி வைத்திருந்தான் தன நண்பர்களும் உடன் வருகிறார்கள் என்று. அதனால் அவனது அறையை எப்போதும் போல் சுத்தம் செய்து வைத்ததோடு, நால்வருக்கும் தேவையான போர்வை தலையணை, பாய் எல்லாமும் தயார் செய்து அவன் அறையில் வைத்திருந்தார் வைரம்.

     “எதுக்காம் இப்போ பொம்பிளை பிள்ளை இருக்க வீட்ல ஆம்புளைப் பசங்களைக் கூட்டிட்டு வாரான் அவன்?!” என்று புலம்பினார் கனகாம்புஜம் பாட்டி.

    “அட என்ன அத்தை நீங்க?! எல்லாம் பட்டணத்துப் பிள்ளைங்க. அவுங்களுக்கும் ஆசை இருக்காதா? கிராமத்துப் பண்டிகையை கொண்டாடணும்னு! வந்து இருந்துட்டுப் போகட்டுமே ஒரு வாரம்.” என்றார் மருது.

     “அதானே ஆத்தா. நீ எதுவும் சொல்லிடாத அவங்க எதிருல! பிள்ளைங்க மனசு கஷ்டப் பட்டுடப் போகுது!” என்றார் வைரமும்.

     “ஆமாம்! ஆமாம்! நீதான் உன் மருமவனையும், அவன் கூட்டாளிங்களையும் மெச்சிக்கணும்!” என்று மட்டும் சொல்லிவிட்டு கவி எழுந்து உள்ளே சென்றுவிட,

     “இவ என்ன அண்ணே இப்போவும் இப்படியே பேசிக்கிட்டு இருக்கா? அவன் வந்ததும் எதுவும் வம்பு வளர்க்காம இருக்கணுமே?!” என்று வைரம் கவலை கொள்ள,

     “அவ பக்கமும் நியாயம் இருக்குல்ல” என்ற அண்ணனைப் பார்த்து,

     “அண்ணே தயவுசெஞ்சி பொங்கல் முடியுற வரைக்கும் அவன்கிட்ட எதுவும் பெசிடாதீங்க நீங்களும் உங்க மருமகளும்! பிள்ளைய கண்ணுல பார்த்து ஒருமாசம் கிட்ட ஆகப் போகுது! அவன் மறுபடியும் கோவிச்சுகிட்டு கிளம்பிடப் போறான்.” என்று அண்ணனோடு சேர்த்து மகளுக்கும் சொல்லி வைத்தார் வைரம்.

     அவர்கள் பேசி முடித்த சில நிமிடங்களிலேயே அவன் கார் வரும் சப்தம் கேட்க, எப்போதும் ஓட்டமாய் ஓடுபவளோ, அன்று அமைதியாய் அவள் அறைக்குள் சென்று புகுந்து கொண்டாள்.

     ரத்தினம் கூட அவன் மீது இருந்த கோபத்தில் எழுந்தே செல்லாமல் கூடத்திலேயே அமர்ந்திருக்க, வைரமும், மருதுவும் மட்டும் எழுந்து சென்று வந்தவர்களை வரவேற்றனர்.

     ஆனால் அவன் கண்கள் முதலில் தேடியதோ அவளைத்தான்.

     ‘திமிரு பிடிச்சவ! ஊருக்கு முன்னாடி ஓடி வருவா! இன்னிக்கு வந்தாளா பாரு? அவ்ளோ அடம்!’ என்று எண்ணியவன், நண்பர்கள் முன்னிலையில் எதுவும் கேட்க வேண்டாம் என்று எண்ணி அமைதியாய் இருந்தான்.

      “வாங்கய்யா… எல்லோரும் நல்லா இருக்கீங்களா? வீட்ல எல்லோரும் சௌக்கியங்களா?” என்றார் வைரம் அன்பும் அக்கறையுமாய்.

     அவரின் அன்பான வரவேற்ப்பும் அவரின் புன்னகை முகமும் பார்த்த மாத்திரத்திலேயே அனைவருக்கும் பிடித்துப் போக,

     “எல்லோரும் நல்லா இருக்கோம்மா” என்றனர்.

     “கொல்லைபுறத்துல இருக்க அடுப்புல சூடா தண்ணி காய போட்டிக்கேன். அம்புட்டு தூரம் வந்ததுல களைப்பா இருக்கும். போயி குளிச்சிட்டு வந்துடுங்கய்யா. சாப்பிடலாம்.” என்ற வைரம்,

     “கண்ணா உன் அறையிலேயே எல்லோரும் தங்குற மாதிரி சுத்தம் பண்ணி வச்சிருக்கேன்” என்றும் மருமகனிடம் கூறினார்.

     அனைவரும் சிறிது நேரத்தில் குளித்துவிட்டு உடை மாற்றி வர,

     கிராமத்துச் சமையலான கம்பங்களியோடு, இட்டிலியும், நாட்டுக்கோழிக் குழம்பும் சூடாய் மணக்க மணக்க அவர் பரிமாற,

     “ஏன் அத்தை நாளைக்கு போகிக்குதான் கறி எடுப்பீங்கல்ல? இப்போ வேற எதுக்கு செஞ்சீங்க?” என்றான் கண்ணன்.

     “அட இருக்கட்டும்ய்யா. புள்ளைங்க எல்லோரும் வந்திருக்காங்கல்ல?” என்று சொல்லியபடியே வைரம் பரிமாற,

     “நீங்க எல்லோரும் சாப்டீங்களா?!” என்றான் கண்களால் அவளைத் தேடியபடியே.

     “நாங்க எல்லோரும் வெள்ளனவே சாப்பிட்டுடுவோம்ல ய்யா” என்றார் வைரமும்.

     “வண்டர்புல் டேஸ்ட் ஆன்ட்டி! நான் என் லைப் டைம்ல இந்த மாதிரி களியெல்லாம் சாப்பிட்டதே இல்லை!” என்று கார்த்திக் சொல்ல,

     “ஜெயிலுக்குப் போடா! தினமும் போடுவாங்க” என்றான் கிஷோர் கிண்டலாய்.

     அவனை முறைத்தபடியே, “டேய்! நான் சொல்ல வந்தது இப்படி ஒரு டேஸ்ட்ல சாப்பிட்டதே இல்லைன்னு. இது ஆன்ட்டி கையால செய்ததுனால வந்த டேஸ்டா, இல்லை அவங்க இப்படி அன்பா பரிமாறுறதுனால வந்த டேஸ்டான்னு தெரியலை.” என்றான் மனதார.

     “அது என்னவோ உண்மைதான். கண்ணன் ரொம்பக் குடுத்து வச்சவன் ஆன்ட்டி! அவனுக்கு அம்மா இல்லைனாலும் அவனை அம்மாவை விட மேல பார்த்துக்க நீங்க கிடைச்சுட்டீங்க! ஆனா எனக்கு கார்த்திக்கெல்லாம் அப்படி இல்லை!” என்றான் பிரதாப்பும் தனது அண்ணி அவன் எப்போதாவது ஊருகுச் செல்லும் போது கூட அவனுக்கு அத்தனை முகம் சுளித்துக் கொண்டே பரிமாறுவதை நினைத்து.          

     “ஏன்ய்யா அப்படிச் சொல்றீங்க?! நீங்களும் எங்க புள்ளைங்க மாதிரிதான். என்னையவே உங்க அம்மாவா நினைச்சுக்கோங்க” என்று அந்த தேவதை அவர்களுக்கும் அன்பை வழங்கத் தயாராக, தனது அத்தை பேசுவதையே பார்த்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் மனதுள் பாசமும், கூடவே தங்கள் திருமணப் பேச்சால் ஏற்பட்ட மனக்கசப்பும் வந்து போக,

     ‘ச்சே இந்தக் கல்யாணப் பேச்சு மட்டும் வராம இருந்திருந்தா எவ்ளோ சந்தோஷமா இருந்திருக்கும் இந்நேரம்?!’ என்று எண்ணியபடியே,

     “அவ எங்க போனா?” என்றான் அதற்கு மேலும் பொறுமையைக் கடைபிடிக்க முடியாமல்.

     “அவ எங்க போகப் போறா? ரூமுல தான் கெடக்கா” என்றார் பாட்டி.

     “ஏனாம் உங்க பேத்திக்கு வெளிய வந்து வான்னு சொல்லக் கூட மனசு வரலையோ?!” என்றான் அவன்.

     “நீ பேசிட்டுப் போனப் பேச்சுக்கு, அவ சிரிச்சிக்கிட்டே வந்து நிப்பாளாக்கும்?!” என்றார் இப்போது ரத்தினமும் குதர்க்கமாய்.

     “அண்ணே! கொஞ்சம் சும்மா இருங்களேன்.” என்றவர்,

     “டீ கவி மாமா கூப்பிடுறான் பாரு. வந்து என்னன்னு கேளு” என்று வைரம் அழைக்கவும்,

     “ஹான்! நான் தூங்கிட்டேன்னு சொல்லு!” என்று குரல் கொடுத்தாள் அவளும் உள்ளிருந்தபடியே. அவள் சொன்னதில் மற்ற நண்பர்கள் சிரித்துவிட அவனுக்குதான் கோபம் ஏறியது.

    ‘கொழுப்புக் கூடிப் போச்சு அவளுக்கு!’ என்று நினைத்தவன், முகத்தை கடுகடுவென வைத்துக் கொண்டு சாப்பிட,

     ‘மாமனுக்கும் மருமவளுக்கும் என் பிள்ளையச் சீண்டுறதே வேலையாப் போச்சு!’ என்று மனதோடு எண்ணிக் கொண்டவர்,

     “அவ கெடக்கா திமிரு பிடிச்சக் கழுதை! நீ சாப்டுடா ராஜா. எம்புட்டு நேரம்தான் உள்ளேயே கெடப்பா? வெளிய வந்துதான ஆகணும்!” என்று மருமகனை சீராட்டினார் வைரம்.

     “இருந்தாலும் நீங்க பண்றது ரொம்ப ஓவர்ங்க ஆன்ட்டி. உங்க பொண்ணை விட்டுட்டு இவனுக்கு நீங்க சபோர்ட் பண்ணக் கூடாது. பாவம் அவங்க!” என்று கார்த்திக் அவளைப் பார்க்கும் முன்பே அவளுக்கு பரிந்து பேச,

     “பார்றா இவுக கூட்டாளிங்கள்ல இம்புட்டு நல்லவங்களாம் கூட இருக்காங்களா?!” என்று சொல்லிக் கொண்டாள் அவள் உள்ளிருந்தபடியே.

     “போதும் அடங்குடா” என்றபடி கண்ணன் அவனை முறைத்து வைக்க,

     ‘இவன் ஒருத்தன் ஆனா ஊன்னா முறைக்க ஆரம்பிச்சிடுவான்?! நானும் இவன் அத்தை பெத்த முத்தை வந்ததுல இருந்து பார்க்கணும் பார்க்கணும்னு நினைக்கிறேன். வெளிய வரமாடேங்குறாளே?! அப்படி என்ன பேரழகி அவ? இப்படி வெளியே கூட எட்டிப் பார்க்காம சீனைப் போடுற அளவுக்கு?!’ எப்படியும் ஊர்ல வயக்காட்டுல வேலை பார்க்குற பொண்ணு. கன்னங்கரேல்னு தானே இருப்பா! அதுக்கே இவளோ சீனு!’  என்று மனதிற்குள்ளேயே நினைத்துக் கொண்ட கார்த்திக் மறுநாள் போகிப் பண்டிகையின் போது அவளைப் பார்க்கையில் அசந்துதான் போனான் அவள் அழகில்…

                                 -உள்ளம் ஊஞ்சலாடும்…