Advertisement

   6

     ‘கண்ணதாசனோட கவிதாயினியாம்! லூசுப் பயலே! யார்ரா இல்லைன்னா?!’ என்று மனதிற்குள் நக்கலடித்தபடியே சற்று தூரத்தில் நின்று கொண்டு அவன் பேசியதை மொபைலில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த கார்த்திக், அவன் பேசி முடித்ததும், கையில் கிளாசுடன் அவன் முன்னே இருந்த சேரில் வந்து அமர்ந்து,

     “ஆமா! தண்ணியடிச்சா மட்டும் தான் சார் தெளிவா யோசிச்சுப் பேசுவிங்களோ?! இல்லை… அவ உன் அத்தை பொண்ணு, உனக்கு மட்டும்தான் சொந்தம்ன்னு தண்ணியடிச்சா மட்டும்தான் தெரியுமான்னு கேட்டேன்?” என்றான் நக்கலாய்.

     “இவனை யார்றா இங்க வரச் சொன்னது?!” என்றான் கண்ணன் கார்த்திக்கை எரித்து விடுவது போல் முறைத்து.

     “இதோடா! நியாயமா என் லைஃபை நீ பிடுங்கிக்கிட்டன்னு நான்தான்டா டென்ஷன் ஆகணும்! நானே சரி போனாப் போகுதுன்னு அமைதியா உட்கார்ந்திருந்தா என்கிட்டயே எகுறியா?!” என்று கார்த்திக்கும் எகிற, ஏற்கனவே அவன் மேல் மிகுந்த கடுப்பில் இருந்த கண்ணன், கார்த்திக்கின் சட்டையை எட்டிப் பிடித்திருந்தான் கோபமாய்.

     “போதும் அடங்குடா! நீ என்னைவிட பலசாலியா இருக்கேன்னு சும்மா சீனைப் போடாத! நீ செஞ்சத தானே சொன்னேன். அதுக்கு ஏன் இவ்ளோ கோவம் வருது?!” என்றான் கார்த்திக் முன்பு போல் பயம் கொள்ளாமல் தைரியமாய்.

     “டேய் வேணாம்டா மேல மேல பேசி வெறியேத்தாத!” என்று அவன் கர்ஜிக்க,

     “அவ்ளோ பாசம் அக்கறை இருக்குறவன், அவளைக் கல்யாணம் பண்ணக் கையோடு இங்க வந்து உட்கார்ந்து தண்ணியடிச்சிக்கிட்டு இருப்பியா?! சும்மா உனக்கு வயத்தெரிச்சல்டா! அவ என்னைக் கட்டிகிறேன்னு சொல்லிட்டாளேன்னு வயத்தெரிச்சல். அதான் செய்ய வேண்டியதை எல்லாம் சிறப்பா செஞ்சிட்டு இப்போ இங்க வந்து உட்கார்ந்திருக்க” என்றான் கார்த்திக்கும் கோபம் அடங்காமல்.

     “டேய் கார்த்திக் ஏன்டா நீயும்?! முடிஞ்சது முடிஞ்சு போச்சு விடேன்டா” என்று கிஷோர் சொல்ல,

     “பின்ன என்னடா?! கல்யாணம் பண்ணவன் பெரிய இவனாட்டம் அங்க அவளை அப்படியே விட்டுட்டு இங்க வந்து கூத்தடிச்சிட்டு இருந்தா என்னடா அர்த்தம்?! அப்போ வீம்புக்குன்னு தானே இவன் அந்தப் பொண்ணைக் கல்யாணம் செஞ்சிருக்கான்?!” என்று கார்த்திக்கும் விடமால் கேட்க, கார்த்திக்கின் மீதிருந்த அவன் பிடியை விடுவித்து விட்டு, பையித்திக்காரனைப் போல்,

     “இல்லை! இல்லை! இல்லை! அவ, அவ எனக்கு வேணும். அவதான் எனக்கு எல்லாம்!” என்றான் கத்தினான் கண்ணன் ஆவேசமாய்.

     “வேணும் வேணும்னு சொல்லிட்டுதானே போய்த் தாலி கட்டுன அப்புறம் என்ன மயிருக்கு இங்க வந்து உட்கார்ந்திருக்க?” என்று கார்த்திக் மேலும் அவனை வம்பிழுக்க,

     “அது எனக்கும் அவளுக்கும் இருக்கப் பிரச்சனை! அதை உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை! இனி எங்க விஷயத்துல தலையிட்ட பிரெண்டுன்னு கூட பார்க்க மாட்டேன்” என,  

     “ஹேய் போதும் அடங்குடா! உனக்கு மட்டும்தான் கை ஓங்கத் தெரியும்னு நினைக்காத. எங்களுக்கும் கை இருக்கு! ஆனா கவிக்காக பார்க்கிறேன்” என்று கார்த்திக் அவள் பெயரைச் சொல்ல,

     கவி என்ற அவள் பெயரை அவன் சொல்லக் கேட்டதும் அவன் கோபம் இன்னும் அதிகமானது.

     “இன்னொரு முறை, அவ பேர் கூட உன் வாயில இருந்து வரக் கூடாதுடா! மீறி வந்தது?!” என்றவன் அருகே இருந்த பாட்டிலைக் கையில் எடுத்து அவன் தலையை நோக்கி அடிக்க ஓங்க,

     “ஏய் என்ன என்னடா இது?!” என்று பட்டென அவன் கையில் இருந்த பாட்டிலைக் பிடுங்கிய கிஷோர்,

     “விடு விடு கண்ணா அவனை! அதான் உனக்கும் அவளுக்கும் கல்யாணம் முடிஞ்சிடுச்சே! அப்புறம் எதுக்குடா இன்னும் இவனை போட்டு இம்சை பண்ற?!” என்றான்.

     “இம்சையா நானா இவனையா?! இவனை என்னிக்கு நான் ஊருக்குக் கூட்டிட்டுப் போனேனோ அன்னையில இருந்து நான்தான் டா இம்சைய அனுபவிக்கிறேன்! இவன், இவன் எதுக்குடா என் வீட்டு விஷயத்துல தலையிடணும்?! நீங்களும்தானே என்கூட வந்தீங்க?! ஆனா அமைதியா இருக்கலை! இவன் மட்டும் பெரிய புடுங்கி மாதிரி நடுவுல வந்து ஏன்டா பேசினான்?!” என்றான்.

     “அது ஒண்ணுதான்டா நான் செஞ்ச பெரிய தப்பு! ஆனா நான் செஞ்ச அந்தத் தப்புனாலதான் இன்னிக்கு அந்தப் பொண்ணு உனக்குக் கிடைச்சிருக்கா!” என்றான் கார்த்திக் நிமிர்வாய்.

     “என்னடா புதுசு புதுசா கதைவிடுற?!” என்றான் கண்ணன் இப்போதும் கோபம் குறையாமல்.

     “ம் போயி உன் பொண்டாட்டிக்கிட்ட கேளு!” என்றவன்,

     “பயித்திக்காரன் மாதிரி மனசு முழுக்க அவளை வச்சுக்கிட்டு, அது உனக்கே புரியாம எல்லார் உயிரையும் வாங்கிட்டு இருக்காதடா கல்யாணம் முடிச்சும்!!” என்று கார்த்திக் உண்மையை அவன் முகத்தில் அறைந்தார் போல் சொல்ல, கண்ணனுக்கு இத்தனை நேரம் இருந்த கோபமும், ஆவேசமும் சற்றே குறைந்து,

     ‘ஆமாம்! அவன் சொல்றது உண்மைதானே!’ என்று புத்தியும் எடுத்துரைக்க,  

     ‘ஆனா அவ, அவ அப்படி உயிருக்கு உயிரா என்னை நேசிச்சது உண்மைன்னா, என்னை, என்னை விட்டுட்டு எப்படி அவனைக் கல்யாணம் செய்துக்க சம்மதிக்கலாம்?!’ என்று வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாய் மீண்டும் அதே கேள்வியில் வந்து நின்றான் கண்ணன்.

     கண்ணனின் முகத்தில் தெரிந்த குழப்ப ரேகைகளைப் பார்த்த கார்த்திக்,

     “உன் குடும்பத்து மேல உயிரையே வச்சிருக்க நீ, அவங்க மனசையும் கொஞ்சம் புரிஞ்சிக்க முயற்சி பண்ணுடா! அப்போ உனக்கு எல்லாம் புரியும்?!” என்று கார்த்திக் பூடகமாய் சொல்ல, கண்ணனின் மனதில் மேலும் குழப்பம் சூழ்ந்தது.

     “டேய் அவன் சொல்றதுலயும் அர்த்தம் இருக்கு! இனியும் சும்மா அவனைக் கை ஓங்காத டா அவனே பாவம்!” என்றான் இப்போது பிரதாப்பும்.

     தவறு தன் மீதா இல்லை அவளின் மீதா இல்லை கார்த்திக்கின் மீதா என்று ஒரு முடிவிற்கு வர முடியாமல் தவித்தவன், மெல்ல தள்ளாட்டமாய் எழுந்து கொள்ள,

     “டேய் என்னடா இப்படி தடுமாறுற?!” என்று அவனை தாங்கிக் பிடித்தான் கிஷோர்.

     “ம்!” என்று அவன் கையைத் தன்னிலிருந்து விலக்கிவிட்டு மெல்ல தள்ளாட்டமாய் கண்ணன் நடந்து செல்ல, நண்பர்கள் மூவரும் அவனைக் கவலையுடன் பார்த்திருந்தனர்.

     “என்னடா இவன் கல்யாணம் முடிச்சும் இப்படி எல்லாரையும் கஷ்டப் படுத்திக்கிட்டு தானும் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கான்?!” என்று பிரதாப் கேட்க,

     “காதல்டா அந்தப் பொண்ணுமேல அவன் வச்சிருக்கக் காதல்! ஆனா அது இன்னும் அவனுக்கே புரியலை!” என்று கார்த்திக் சொல்ல நண்பர்கள் இருவரும் அவனைப் புரியாமல் பார்த்தனர்.

                               *****

     சில வாரங்களுக்கு முன்பு, திருமணப் பேச்சை எடுத்ததும், இனி ஊருக்கு வரக் கூடாது என்று நினைத்துக் கொண்டுப் போனவன், அவன் பிடிவாதத்தில் உறுதியாய் இருந்தான் வாரங்கள் கடந்த பின்னும்.

     வைரம், மருது, பாட்டி என்று அனைவரும் அவனுக்கு போன் போட்டு வருந்தி அழைத்தும் கூட அவன் வரவே இல்லை பொங்கல் பண்டிகை வரை. ஆனால் அவன் மீது உயிரையே வைத்திருந்தவள் மட்டும் அவனிடம் முதன்முறையாய் இத்தனை நாட்கள் பேசாமல் இருந்தாள்.

     அவனிடம் பேசாதது, அவனைக் கிட்டத்தட்ட ஒரு மாதமாய் பார்க்காதது அவளுக்கு எத்தனை வேதனையை அளித்தது என்று அவளால் வார்த்தையில் வடிக்க இயலாது!

     அவன் தனது முடிவைச் சொன்ன நாளில் இருந்தே, அவள் சரியாக உண்ணவில்லை, உறங்கவில்லை! தன் துள்ளல் பேச்சு, சந்தோஷம்  எல்லாவற்றையும் தொலைத்திருந்தாள் அவனின் முட்டாள்தனமான முடிவால்! அவளை எண்ணி எண்ணி வீட்டில் இருப்பவர்கள்தான் உடைந்து போயினர்.

     இவள் இங்கு இப்படி இருக்க, வீட்டில் இருக்கும் அத்தனை பேரும் அவனை அழைத்துக் கொண்டிருக்க, அழைக்க வேண்டியவளோ, ஒருமுறை கூட அவனுக்கு அழைக்கவில்லை! அவனாய் பல முறை போன் செய்தும் கூட எடுத்துப் பேசாமல் அவனைத் தவிக்க விட்டதில் அவனின் கோபமும் பிடிவாதமும் கூட கூடிக் கொண்டே போனது.

     இதனிடையே இருவரின் பிடிவாதத்திற்கும் முடிவுகட்ட அந்தத் தைத் திருநாள் வெகு விரைவாய் நெருங்கிக் கொண்டிருந்தது புது திருப்பத்தைக் கொண்டு வர.

     “எய்யா… கண்ணா என்னய்யா இம்புட்டு புடிவாதமா உட்கார்ந்திருக்க நீயி?! ஒருமாசதுக்கும் மேல ஆச்சுய்யா உன்னைக் கண்ணுல நிறைச்சு?! இப்படி என் வயசான காலத்துல அப்பத்தாவைக் கலங்கடிக்குறியே?! உன் அத்தை உன்னை நினைச்சு நினைச்சே சோறு தண்ணிக் கூட சரியா பொழங்காம, அடிக்கடி உடம்புக்கு முடியாம படுத்துக்குறா?! நீ இப்படி செய்யிறது சரியாய்யா?!” என்று கனகாம்புஜம் கண்ணீர் வடிக்க,

     “ஏன் அப்பத்தா எல்லோரும் எனக்காக உடம்பைக் கெடுத்துகிட்டு?! நீங்க எல்லோரும் இப்படியே பண்ணிட்டு இருந்தீங்கன்னா நான் பட்டணத்தையும் விட்டுட்டு எங்கயாச்சும் வெளியூருக்கு போயி சேர்ந்துடுவேன்” என்று அவன் கோபம் கொள்ள,

     ரத்தினம் ஸ்பீக்கரில் போட்டு தாயிடம் கொடுத்திருக்க, அதைக் கேட்டுக் கொண்டிருந்த அனைவருக்கும் பேரும் வேதனை சூழ்ந்தது,

     ஆனால் அதுனால் வரை கோபம் கொண்டிராத வைரம், “போடா! போ! உனக்கு எங்களை விட உன் பிடிவாதம்தானே பெருசா போச்சு! போ! ஆனா ஒண்ணு அப்படி மட்டும் செஞ்சயானா இந்த செம்மதுக்கும் நான் உன் முகத்துல முழிக்க மாட்டேன் பார்த்துக்கோ” என்று வைரம் கோபமாய் கத்த, அந்தப் பக்கம் முதன்முதலாய் அத்தையின் கோபத்தைப் பார்த்தவனுக்கு உள்ளம் நொந்து போனது.

Advertisement