Advertisement

                                                                      5

     “டி! இன்னிக்கும் ரூமை விட்டு வெளிய வாரதா உத்தேசம் இல்லையா?!” என்று அதிகாலை எழுந்ததுமே வைரம் குரல் கொடுக்க அவளிடம் எந்த பதிலும் இல்லை!

     “அடியே!” என்று மெல்ல வைரம் அவள் இருந்த அறையின் கதவைத் திறந்து பார்க்க, அவளை அங்குக் காணவில்லை! அவர் நெஞ்சம் பகீரென்றது.

     “என்னங்க?!” என்று அவர் பயத்தில் கத்த,

     “என்ன என்ன ஆச்சும்மா?!” என்று மருதுவும், ரத்தினமும் அவரின் ஒரு குரலுக்கு ஓடி வந்திருந்தனர்.

     “என்னங்க அவளைக் காணலைங்க!” என்று வைரம் பதட்டமாய் கண்கள் கலங்கச் சொல்ல,

     “அட எங்க போயிருக்க போறா வைரம்?! கொல்லைப்புறத்துக்கு குளிக்கப் போயிருப்பா!” என்றார் ரத்தினம் சாதாரணம் போல்.

     “இல்லை இல்லை அண்ணே! தோட்டத்துக்கு பக்கம் விளக்கு எதுவும் எரியலையே!” என்ற வைரத்திற்கு அன்று போல் வயக்காட்டிற்குச் சென்றுவிட்டாளோ என்ற எண்ணம் உதிக்க,

     “என்னங்க, ஒரு எட்டு நம்ம வயக்காட்டு வரைக்கும் போய் பார்த்துட்டு வரீங்களா?!” என்றார் கலக்கமாய்.

     “என்ன வைரம் இது?! அவ ரொம்ப தைரியசாலிம்மா! இதுக்காகவெல்லாம் அவ கலங்கி உட்கார்ந்துட மாட்டா! ஒருவேளை கெளம்பி வயலுக்குப் போயிருந்தா இந்நேரம் வேலையில இறங்கி இருப்பா!” என்றார் ரத்தினம் மருமகளை நன்கு அறிந்தவராய்.

     “மாமா சொல்றதும் சரிதான்தான். நீ கலங்காத வைரம். இதோ இன்னும் கொஞ்ச நேரத்துல நாங்களும் அங்கதானே கெளம்பப் போறோம்!” என்றார் மருதுவும்.

     அவர்கள் சொன்னது போலவே இருக்கட்டும் என்று மனதைச் சமாதானப் படுத்திக் கொண்ட வைரம், தனது மாற்று உடைகளை எடுத்துக் கொண்டு குளிப்பதற்காக கொல்லைப் புறத்திறத்தில் இருந்த குளியலறைக்குச் செல்ல, அங்கு நேற்று அவள் உடுத்தி இருந்த உடைகள் துவைத்துக் கொடியில் காயப் போட்டிருப்பதைப் பார்த்ததும் தான் வைரத்திற்கு நிம்மதி எழுந்தது.

     ‘இவ்ளோ சீக்கிரம் எழுந்து குளிச்சுக் கிளம்பினவ, ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போறதுக்கு என்ன?! என்ன ஆனாலும் எங்ககிட்ட எதையும் மனசு விட்டுச் சொல்றதும் இல்லை! கேட்குறதும் இல்லை! எப்போவும் அந்த மண்ணும் பயிரும் தான் அவளுக்கு மொதல்ல!’ என்று எண்ணிக் கொண்டவர்,

     ‘என்னமோ பூமித்தாயே, என்ன கஷ்டம்னாலும், என்ன சந்தோஷம்னாலும் எப்போதும் அந்தப் பிள்ளை உன்னைத்தான் உசுரா நம்பிக் கெடக்கு! அவளுக்கு நீதான் தாயே எல்லா விதத்துலயும் துணை நிக்கணும்!’ என்று வேண்டிக் கொண்டார் தாங்கள் மலை போல் நம்பும் பூமித்தாயிடம்.

     “அயித்தை அயித்தை!” என்று அந்நேரம் கங்கா அங்கு வர,

     “வாடிம்மா! உன் கூட்டாளி காலையிலேயே எழுந்து வயலுக்குப் போயிட்டா போலடி! வெரசா நீயும் கெளம்பிப் போய் அவ கூட துணைக்கு இரேன்!” என்றார் வைரம் மனம் தாளாமல்.

     “அப்படியா?! எப்போ போனா அத்தை!” என்று கங்கா ஆச்சர்யமாய் கேட்க,

     “தெரியலைடிம்மா! சொல்லாம கொள்ளாம வெள்ளெனவே கிளம்பிட்டா! நீ போய் அவகிட்ட கொஞ்சம் எடுத்து சொல்லுடிம்மா!” என்று வைரம் கவலையுடன் சொல்ல,

     “அட என்னம்மா நீயி! நான்தான் சொல்றேன்ல! அவளை அவ போக்குல நிம்மதியா விடுங்க! அவளே தன்னால சரியாகிடுவா! சும்மா அவளை சீண்டி ஏதும் சொல்லி மேலும் மேலும் காயப் படுத்தாதீங்க” என்று போகிற போக்கில் ரத்தினம் மீண்டும் வைரத்திற்கு அறிவுரை சொல்லிவிட்டுப் போக,

    ‘இதென்ன இந்த அண்ணன் நமக்கு முன்னாடி அவளுக்கு ஒண்ணுன்னா முன்ன போயி நிப்பாரு! இப்போவெல்லாம் இவரு போக்கே சரியில்லையே!’ என்று நினைத்துக் கொண்ட வைரம்,

     “சரி கண்ணு எதுக்கும் நீ அங்க போனதும், அவ அங்கதான் இருக்கான்னு ஒரு போனை மட்டும் போட்டுச் சொல்லிடு! அப்போதான் என் மனசு ஆறும். நான் மாமாங்கிகிட்ட உங்களுக்கும் சேர்த்து எதுனா பொங்கிக் கொடுத்து அனுப்புறேன்.” என்றுவிட்டு குளிக்கச் சென்றார்.

     வந்திருந்த உறவினர்கள் எல்லோரும் இன்னும் உறக்கத்தில் இருக்க, ‘ஐயோ இவுக எல்லாம் வேற எழுந்ததும் அவ எங்க எங்கன்னு கேட்டு ஊரக் கூட்டுவாங்க! இந்தப் புள்ளைங்க பண்ற கூத்துக்கு ஊருக்கு பதில் சொல்லி சொல்லியே நம்ம உசுருதான் போவுது!’ என்று புலம்பிக் கொண்டே குளித்து முடித்தவர், விறுவிறுவென அனைவருக்குமாய் சேர்த்து சமையலை ஆரம்பித்தார்.

     “என்னடி வைரம்! இன்னமும் உன் பொண்ணுக்கு வெளியே எழுந்து வர மனசில்லையோ?! அதான் உங்க ஆசைப்படிதான எல்லாம் நடந்து முடிஞ்சிருக்கு! பொறவு என்னவாம் அவளுக்கு?! வந்து ஆத்தாளுக்கு கூடமாட ஒத்தாசையா இருக்காம இன்னும் என்ன அறைக்குள்ள அடைஞ்சுக்கிட்டு?!” என்று கேட்டபடியே வைரத்தின் சித்தி மங்களம் வர,

     ‘ஆண்டவா!’ என்று எண்ணிக் கொண்டவர், “அது வந்து சித்தி.. அவ வெள்ளெனவே எழுந்து குளிச்சு முடிச்சு வயக்காட்டுக்குப் போயிட்டா!” என்றார் வைரம்.

     “இதென்னடி கூத்தா இருக்கு?!” என்று கிராமத்துப் பெருசுகள் பலரும் செய்வது போல், அவர் கையை எடுத்துக் கன்னத்தில் வைத்துக் கொள்ள,

      “என்ன சித்தி செய்யச் சொல்ற?! அவன் இப்படி திடுதிப்புன்னு தாலியைக் கட்டினக் கையோட வேலைக்குக் கெளம்பிப் போயிட்டா அவளும்தான் வீட்டுல கெடந்து என்ன செய்வா? அதான் வேலைக்குப் போயிட்டா!” என்று சமாளித்தார் சட்டென.

     “அதுச் சரி! நல்லா புள்ளைங்களை வளர்த்திருக்கடி! ரெண்டும் ரெண்டு தினுசா இருக்குங்க!” என்றுவிட்டு,

     “சரி குடு ஒத்தையாளா நீ எம்புட்டுப் பேருக்கு சமைப்ப? கொண்டா அந்தக் காயை நான் நறுக்கிக் கொடுக்கறேன்! நீ போயி எல்லோருக்கும் காபி தண்ணி வேணும்னா போட்டுக் கொடு!” என்று சொல்லிக் காய்களை வாங்கி நறுக்கத் துவங்கினார் மங்களம்.

     “உங்க அக்கா எழுந்துட்டாகளா?!” என்றார் வைரம் சன்னமான குரலில்.

     “எழுந்தாச்சுடி எழுந்தாச்சி! உன்னைப் பெத்தவளுக்கு இன்னும் என்ன மிச்சம் வச்சிருக்க?! அதான் நீ வளர்த்து வச்சிருக்கியே ரெண்டும் நேத்தே செய்ய வேண்டியதை செஞ்சு ஊர் சிரிக்க வச்சுடுச்சுங்களே!” என்று கேட்டபடியே கனகாம்புஜம் பாட்டி எழுந்து வர,

     ‘ஆத்தீ இவங்க கிட்ட வாயைக் கொடுத்து மீள முடியாது!’ என்று எண்ணிக் கொண்ட வைரம்,

     “ஒண்ணுமில்லை ஆத்தா! காபி தண்ணி ஏதும் வேணுமான்னு கேட்கத்தான்!” என்று மெல்லிய குரலில் சொல்ல,

     “நான் என்னிக்குக் காப்பி தண்ணிக் குடிச்சிருக்கேன்! ஒரு சொம்புக் கூழை கரைச்சு வை. போயி குளிச்சிட்டு வந்துறேன்!” என்று கனாம்புஜம் பாட்டி செல்ல,

     ‘நல்ல வேலை அவளைப் பத்தி எதுவும் கேட்கலை!’ என்று எண்ணியபடியே ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து, கட்டிக் கூழை அதில் எடுத்துப் போட்டு சிறிது வெங்காயம், பசுந்தயிர் கல்உப்பு எல்லாம் சேர்த்துக் கரைத்து வைத்தார் பெரியவர்கள் பலரும் காலையில் கூழ்தான் கேட்பார்கள் என்பதால்.

     மற்றவர்களுக்காக இட்டிலித் தட்டுகளில் மாவை ஊற்றி பாத்திரத்தில் வைத்து அடுப்பைப் பற்ற வைத்தவர், நிமிடங்களில் மங்களம் நறுக்கிக் கொடுத்த வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், எல்லாவற்றையும் சட்டியில் போட்டு மிளகாய்த்தூள் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி வேக வைத்தார். வெந்து வந்ததும், உப்பு சேர்த்துக் கடைந்து தேங்காய் அரைத்து ஊற்றி ஒரு கொதி வைத்து, அதன் தலையில் கொஞ்சமாய், கடுகு,உளுந்து சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, அனைத்தையும் தாளித்துக் கொட்டி தக்காளிக் குருமாவும் தயார் செய்துவிட்டார்..  

     உறவுக்காரப் பெண்மணிகள் ஒவ்வொருவராய் எழுந்து வர, அவர்களும் வைரத்திற்கு உதவி செய்ய, மதியதிற்கான சமையலையும் செய்து இறக்கினார் கையோடு.

     காலை உணவை அனைவரும் உண்டு முடித்ததும், ஒரு உறவினர், “ஏம்பா மருது! நாங்க எல்லாரும் உங்க மக்களுக்காக எங்க சோலிய விட்டுபுட்டு வந்து இங்க உட்கார்ந்து கெடந்தா, அதுங்க ரெண்டும் சோலிதான் முக்கியம்னு கெளம்பிப் போயிடுச்சுங்களே!” என்றார் கேலியாய்.

     “நீங்க ஏன் அண்ணே ஜோலியை விட்டுட்டு உட்கார்ந்திருக்கீங்க! அதான் நடக்க வேண்டியது எல்லாம் நல்ல படியா நடந்து முடிஞ்சுடுச்சே! தாலியைக் கட்டினவன் வந்து குடும்பம் நடத்தாமையா போயிடப் போறான்!” என்றார் மருதுக்கு பதில் ரத்தினம்.

     “என்ன ரத்தினம் இப்படி சுருக்குன்னு பேசிப்புட்ட?! அப்போ எங்களைக் கிளம்புன்னு சொல்லாமச் சொல்லுறியா?!” என்றார் அந்த மனிதர்.

     “எண்ணே நான் போயி அப்படிச் சொல்லுவேனா? நீங்கதான சோலிய விட்டுட்டுன்னு வெசனமா சொன்னீங்க! அதான் அப்படிச் சொன்னேன்!” என்று ரத்தினம் அவருக்கு ஏற்றார் போலவே பதில் கொடுத்துவிட்டு அமைதியாகி விட்டார் மேலும் வம்பு வளர்க்க வேண்டாம் என்று.

     “சரி சரி! நீ சொன்னதும் சரிதான் அம்புட்டு அடமா நின்னு தாலியைக் கட்டினவனுக்கு அவன் பொண்டாட்டியை பார்த்துக்கத் தெரியாதா! ஏதோ வேலைன்னு கெளம்பிப் போயிட்டான் போல!” என்று அவரும் இறங்கி வர, ஒரு வழியாய் வந்தவர்கள் அனைவரும், அவன் வேலை விஷயமாகத்தான் உடனடியாக பட்டணத்திற்குச் சென்றுவிட்டான் என்று பேசத் துவங்கினர் வேறு எதுவும் திரித்துப் பிரச்சனையை ஊதி விடாமல்.

     “சரி உள்ளுருல இருக்கவங்க எல்லாம் போயி காட்டு வேலையைப் பார்க்க கெளம்புவோம்! மதியம் சாப்பாட்டுக்கு இங்க வந்துடுவோம் எல்லோரும்” என்றார் ரத்தினம் மீண்டும்.

     “இதுவும் நல்ல யோசனைதான். எதுக்கு இன்னைய பொழுத வெட்டியா உட்கார்ந்து ஓட்டிக்கிட்டு! சிறுசுங்க அதுங்களே கல்யாணம் முடிச்சக் கையோடு வேலை பார்க்குதுங்க நமக்கென்ன?!” என்று அதே ஊர்கார சொந்தங்கள் பலரும் கிளம்ப,

     “ரொம்ப நன்றிண்ணே!” என்று அண்ணனைப் பார்த்துக் கைகூப்பினார் வைரம்.

     “ஏ! என்ன தாயி நீயி! அதுங்க ரெண்டும் என் புள்ளைங்களும் தானே!” என்ற ரத்தினம்.

     “ஏ ஆத்தா! வைரத்த எதுவும் போட்டுக் குடையாம சும்மா உன் சொந்த பந்தங்களோட கதையளந்துகிட்டு இரு. என்ன நான் சொல்றது புரியுதா?” என்று அவரது அம்மா கனகாம்புஜத்தையும் சற்று அதட்டிவிட்டே காட்டிற்குக் கிளம்பினார் ரத்தினம் தனது மச்சான் மருதுவுடன்.

     ஆனாலும் அவர்கள் தலை மறைந்ததுமே, “ஒரு, ஒரு வாரம் நான் உன் வூட்ல இருந்துட்டு வாரதுக்குள்ள இந்த பயபுள்ளைங்க என்னவெல்லாமோ செய்து முடிச்சுடுச்சுங்கடி மங்களம்! முத அவன் வேணான்னானாம்! அப்புறம் அவ” என்று ஆரம்பிக்க,

     “ஐயோ! ஆத்தா போதும் இதோட இந்தப் பேச்சை விடுறியா?! நீ இப்படியே பேசிக்கிட்டுக் கெடந்தன்னா நான் சீக்கிரமே போய்ச் சேந்துருவேன்!” என்று வைரம் வேதனையாய்ச் சொல்ல,

     “அடிக்கழுதை! என்ன பெரிய வார்த்தை எல்லாம் பேசிக்கிட்டு! நான் பேசலடி எம்மா பேசலை!” என்று அத்துடன் வாயை மூடிக் கொண்டார் அவரின் அம்மா.

                                  *****

     தங்கள் காட்டை நெருங்கும் முன்பே சற்று தூரத்திலிருந்து கவி அங்கே வேலை செய்து கொண்டிருப்பது தெரிய வர, சற்றே நிம்மதி அடைந்த கங்கா,

     “டி கவி…!!” என்று குரல் கொடுத்துக் கொண்டே அவளை நெருங்க, அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் வேலையில் கவனமானாள் கவிதாயினி.

     “ஏன்டி வீட்ல ஒரு வார்த்தை சொல்லிட்டு வர மாட்டியா? அயித்தை கெடந்து எம்புட்டு அலையிது!” என்று அவள் தோழியை வைய,

     “ஏன் அலையணும்?! வீட்டை விட்டா இங்கதான் இருப்பேன்னு தெரியாதா அவுங்களுக்கு?!” என்றாள் கவி காய்கறிச் செடிகளின் ஊடே விளைந்திருந்த தேவையற்ற களைகளைப் பிடுங்கிக் கொண்டே.

     “அது சரி! நீ நேத்து இருந்த இருப்புக்கு நாங்க இல்ல கெடந்து அல்லாடிக் கிட்டு கெடந்தோம்! இன்னைக்கு என்னன்னா எதுவுமே நடக்காத மாதிரி நீ இங்கன வந்து ஜம்முன்னு உட்கார்ந்திருக்க?!” என்ற கங்காவை முறைத்து,

     “ஹான்! தினத்தோறும், கவலையிலேயே மூழ்கிக் கெடந்தா இங்க காட்டை யாரு பார்ப்பா?! எதுவா இருந்தாலும் நாமதானே செய்தாகணும்” என்றாள் கவி.

     “அது எல்லாம் சரிதான்! ஆனா கல்யணம் ஆனா மறுநாளே வீட்ல அவ்வளவு சொந்தக்காரங்க இருக்கையில இப்படி யார்கிட்டயும் சொல்லாம கொள்ளாம கெளம்பி வந்தா எல்லோரும் வீட்டுப் பெரியவங்களைதானடி சத்தம் போடுவாங்க?! ஏற்கனவே அயித்தை மனசு நொந்துக் கெடக்கு! இதுல அவுக பேச்சையெல்லாம் வேற வாங்கணுமா?!” என்றாள் கங்கா வைரத்தை பற்றிக் கவலை கொண்டவளாய்.

     “அதெல்லாம் மாமா சமாளிச்சுக்குவாரு! நீ போன எடுத்துட்டு வந்திருந்துப்ப இல்லை! அம்மாவுக்கு போனைப் போட்டுக் குடு. பேசுறேன்” என்றாள்.

     “ம்! ம் என்னையுமே போன் பண்ண தான் சொன்னங்க!” என்றபடியே அவள் தனது கைபேசியை எடுத்து வைரத்தின் எண்ணுக்கு அழைக்க, கங்கா போன் போடுவாள் என்று இடுப்பிலேயே போனை செருகி வைத்துக் கொண்டிருந்தவர்,

     “சொல்லு பிள்ளை! உன் கூட்டாளி அங்கதானே இருக்கா?!” எனவும்,

     “ம்மா நான்தான் பேசுறேன்! ஒழுங்கா சாப்பிடு! எல்லாம் நேத்தோட சரியாகிடுச்சு. உன் மருமவனை நினைச்சு வெசனப் பட்டுக்கிட்டே உட்கார்ந்திருக்காம எப்போவும் போல வேலையைப் பாரு!” எனவும்,

     “அதென்னடி மருமகனை மட்டும்தான் நினைச்சு வெசனப் படுவேனா என் பொண்ணைப் பத்தி எனக்கு வெசனம் இருக்காதா?!” என்று வைரம் குரல் தழுதழுக்க,

     “நல்லது தானே நடந்திருக்கு! பொறவென்ன கவலை?!” என்றவள்,

     “நானே எதையும் மனசுல வச்சுக்காம எப்போவும் போல எழுந்து காட்டுக்கு வந்துட்டேன்! கண்டதையும் யோசிச்சு மனசைக் குழப்பிக்கிட்டு இருக்காதம்மா. அம்மம்மாட்ட போனைக் குடு!” என்றாள்.

     “ஏன்டி அவங்ககிட்ட போயி?!” என்று வைரம் இழுக்க,    

     “ம் என்னை பார்த்துக்க சொல்லி நீ கங்காகிட்ட சொல்லி அனுப்புன இல்லை! உன்னைப் பார்த்துக்க சொல்லி உன்னைப் பெத்தவகிட்ட சொல்லத்தான்” என்று சொல்ல,

     “ரொம்பத்தான் அக்கறைப் பொங்கி வழியுதுடி” என்றபடியே தாயிடம்,

     “இந்தா ஆத்தா அவ பேசணுமாம்!” என்று போனைக் கொடுக்க,

     “ஏன்டி கூறுகெட்டவளே! இப்படியா கல்யாணம் முடிச்ச கையோட புருஷனும் பொண்டாட்டியும் வேலைக்கு ஓடுவீங்க!” என்று கனகாம்புஜம் ஆரம்பிக்க,

     “போதும் போதும் கத்தாதா அம்மம்மா! உன் பேரனே அங்க பட்டணம் கெளம்பியாச்சு! நான் மட்டும் அங்க இருந்து அவரை நினைச்சுகிட்டே என் காட்டை வாட விடணுமா?!” என்று கேட்டவள்,

     “சும்மா எங்க அம்மாவை குடைஞ்சுக்கிட்டே கெடக்காம போயி ஒழுங்கா அம்மாவா சாப்பிட வையி! நேத்துல இருந்து என் வைரம் முகமே சிறுத்துப் போச்சு!” எனவும்,

     “அதெல்லாம் எங்களுக்குத் தெரியும், அம்புட்டு அக்கறை இருக்குறவ, காலையில எந்திருச்சு ஆத்தாளுக்கு கூடமாட ஒத்தாசை செஞ்சி அவளைச் சாப்பிட வச்சிட்டு கெளம்பி இருக்கணும்!” என்றார்.

     “உனக்குத்தான் ரொம்ப அறிவுன்னு நினைக்காத கிழவி! நான் அங்கேயே இருந்தா என்னைப் பார்த்து பார்த்து உன் பேரப்புள்ளை இப்படி தாலி கட்டினக் கையோடு பொண்ணை விட்டுட்டுப் கெளம்பிட்டானேன்னு கெடந்து என் ஆத்தா மருகிக்கிட்டே இருக்கும்னுதான் எழுந்ததும் ஓடியாந்துட்டேன்! அது புரியாம பேசிக்கிட்டு. ஒழுங்கா எங்க அம்மாவை சாப்பிட வையி.” என்றுவிட்டு போனை அணைத்தும் விட்டாள் அவள்.

     “இதெல்லாம் நல்லாத்தான்டி யோசிக்குற! ஆனா நேத்து மட்டும் ஏன்டி அப்படி மூஞ்சியைத் தூக்கி வச்சிக்கிட்டுக் கெடந்த?!” என்றாள் இப்போது கங்கா.

     “ம்! நானும் மனுஷித்தான்டி! ஒரு நேரம் இல்லாட்டியும் ஒருநேரம் எனக்கும் மனசு கெடந்து மருகும்தானே! எம்புட்டுக் கனவோட அது கையால தாலியை வாங்கிக்கணும்னு சுத்திக்கிட்டுக் கெடந்தேன்னு உனக்குத் தெரியாதாடி?! ஆனா கடையில எந்த நிலைமையில அது என் கழுத்துல மூணு முடிச்சைப் போட்டுது?!” என்று அவள் கேள்வியோடு நிறுத்த, கங்காவிற்கும் மனதில் பாரம் ஏறிக் கொண்டது.

                             *****

     “டேய் நீ பண்ணது கொஞ்சம் கூட சரியில்லைடா! அவ உன் அத்தைப் பொண்ணுதானே, மொதல்லயே அவளை நீயே கல்யாணம் பண்ணிக்கிறதை விட்டுட்டு, இப்படிக் கடைசி நேரத்துல, எல்லாரையும் கதிகலங்க வச்சு தாலி கட்டினியேடா! நல்ல வேலை கார்த்திக்கு அம்மா, அப்பா சொந்த பந்தம்னு யாரும் இல்லை! அவ ஆர்பனேஜ்ல வளர்ந்தவங்கிறதுனால அவன் சைட்ல பெருசா பிரச்சனை இல்லை! இல்லைன்னா என்ன ஆகி இருக்கும்?!” என்றான் பிரதாப் அன்று மாலை பாரில் அமர்ந்து நன்றாய் தண்ணி அடித்துக் கொண்டிருந்தவனிடம்.

     அவனிடம் எந்தப் பிரதிபலிப்பும் இல்லை!

     “டேய் நான் ஒருத்தன் இங்க கேட்டுக்கிட்டு இருக்கேன்!” என்று பிரதாப் மீண்டும் குரல் கொடுக்க, கிஷோரும் இப்போது ஆரம்பித்தான்.

     “ஆமாம்டா! இருந்தாலும் அவன் பாவம்டா! அந்தப் பொண்ணும் உங்க வீட்டு ஆளுங்களும் மட்டும் என்ன?! அவங்களுக்கும் எவ்ளோ அதிர்ச்சியா இருந்திருக்கும்?!” என்றான் கிஷோரும்.

     அவர்களைப் படு நக்கலாய் முறைத்தவன், போதையின் குழறலோடு, “என்னமோ உங்க அத்தைப் பொண்ணுங்க கழுத்துல தாலியைக் கட்டிட்ட மாதிரி எதுக்குடா இவ்ளோ ரியாக்ட் பண்றீங்க?! அவ என் அத்தைப் பொண்ணு! என் கவிதாயினி! இந்தக் கண்ணதாசனோட கவிதாயினி! அவ எனக்கு மட்டும்தான்!” என்றான் கையில் இருந்த டம்ப்ளரை அழுத்தமாய்ப் பற்றியபடி போதையிலும் அத்தனை அழுத்தமும் உறுதியுமாய்…

                               -உள்ளம் ஊஞ்சலாடும்… 

    

 

    

           

                

Advertisement