Advertisement

     “வேணாம், வேணாம் கவி பாவம்” என்று கண்களால் கெஞ்சியபடி சொன்னவன்,

     “அப்போவெல்லாம் வாரத்துக்கு ஒருமுறை அடிப்போம். இப்போ பல மாசத்துக்கு ஒருமுறைதான்” என்று பாவமாய்ச் சொல்ல,

      “என்ன வாரம் ஒருமுறையா?!” என்று முறைத்தவள்,

     “அப்போ நீயும் குடிச்சிருக்கியா?!” என்றாள் கண்களை உருட்டிக் கோபமாய்.

     “இல்ல இல்ல கவிம்மா” என்றவன்,

    “குடிச்சிக்கவா?!” என்றான் ஆசையாய் அவள் கன்னம் தொட்டு.

     “ம்?!” என்று அவள் ஏகத்திற்கும் முறைக்க,

     “நீ வேணான்னா வேணாம்” என்றவன்,

     “நான் முன்னாடியே குடிச்சிருப்பேன். ஆனா குடிச்சிட்டு ஏதாவது ஏடாகுடமா செஞ்சுட்டேன்னா, அதான்” என்று உளறிவிட,

      “ஏடாகுடமான்னா?!” என்று அவளும் விடாமல் கேட்க,

     “அதான் அன்னிக்கு நடந்த மாதிரி நமக்குள்ள ஜலபுலஜல்சா” என்று அவன் கண்ணடிக்க,

      “எதே?!” என்று அவள் கேவலமாய் ஒரு லுக் விட,

     “அதான் ம்மா அது” என்று அவன் மீண்டும் விம் போட்டு விளக்க முனைய,

     “போதும்!” என்று அவன் வாயைப் பொத்தியவள்,

     “அவ்ளோ தைரியம் இருக்கா உனக்கு?!” என்று பல்லைக் கடிக்க,

     “அ அப்படி எல்லாம் இல்லடா கவிம்மா. நீ ஆசைபட்டா” என்று தொபுக்கடீரென பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு அவன் சொல்ல,

     “நீ மட்டும் இன்னிக்குக் குடிச்சுப் பாரேன். நம்ம வாழ்க்கையில இந்த ஜென்மத்துல” என்று சொல்ல வந்தவளின் வாயைப் பொத்தியவன், சட்டென அவள் எதிர்பாரா வண்ணம் தூக்கிக் கொள்ள,

     “ஏய் என்ன என்னப் பண்ற மாமா?!” என்று அவள் கேட்கக் கேட்க, அவளைக் கையில் ஏந்தியபடியே சென்று தனது புல்லட்டின் அருகே இறக்கிவிட்டவன் தான் வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டு அவளையும் அமரச் சொல்ல, அவள்,

     “எங்கப் போறோம்னு சொல்லு அப்போதான் ஏறுவேன்” என்றாள்.

     “அதெல்லாம் சொல்ல முடியாது. ஏறுடி முதல்ல” என்றவன்,

     “அத்தை பிள்ளைய பார்த்துக்கோ. நானும் கவியும் வெளில போறோம். காலையிலதான் வருவோம்” என்றுவிட்டு,

     “ஏறுடி” என,

     “என்ன? காலையில தான் வருவோமா?! அவ்ளோ நேரமெல்லாம் பிள்ளைய விட்டுட்டு என்னால வர முடியாது?!” என்று அவள் முரண்டு பிடிக்க,

     “ப்ச் பேசாம வண்டியில ஏறுடி. அதெல்லாம் அத்தை உன்னைவிட அவனை நல்லா பாத்துப்பாங்க” என்று கண்டிக்க,

     “ப்ச்!” என்று சலித்தபடியே வண்டியில் ஏறி அமர்ந்தவள்,

     “எங்க மாமா போறோம்?! ஏதாவது கோயில்ல ராத் தங்கவா?” என்று அவள் சாதாரணமாய் கேட்டு வைக்க,

     “ஆமாம்டி கோவில்ல ராத் தங்கி பஜனை பண்ற வயசுதான் நமக்கு” என்று நக்கலடித்தவன்,

     “ஆளையும் மூஞ்சையும் பாரு” என்றான் பைக் கண்ணாடி வழியே அவளை முறைத்து.

      “போ! என் மூஞ்சிக்கு என்னவாம்?!” என்று அவன் முதுகில் ஓங்கிக் குத்தியவள்,

     “எங்க போறோம்னு சொல்லு மாமா” என்று அவன் முதுகில் ஒய்யாரமாய் சாய்ந்து அவனைக் கட்டிக் கொள்ள,

     “அடியே இது கிராமம்டி” என்றான் அவன்.

     “அதுக்கென்ன எல்லாரும் சாப்ட்டுட்டு நல்லா தூங்குறாங்களே, அப்புறம் யாரு நம்மைப் பார்க்கப் போறா?” என்றவள் அவனை இன்னமும் இறுக்கமாய்க் கட்டிக் கொள்ள,

      “அடியே ஒரு முடிவோடதான் இருக்கப் போல!” என்றான் மையலாய்.

     “ம்!” என்று முறைத்தவள்,

     “வேணும்னா கால் அடி தள்ளி உட்கார்ந்துக்கட்டுமா?!” என்று  கேட்டு அவள் தள்ளி அமரப் போக,

     “ஏய் கொன்னுடுவேன் அப்படியே உட்காருடி” என்றவன் சில நிமிடங்களில் தங்கள் தென்னத்தோப்பின் உள்ளே வண்டியை விட, 

     “இங்க எதுக்கு மாமா போற?!” என்றாள் புரியாமல்.

     அவன் சிரித்தபடியே ஏதும் சொல்லாமல் வண்டியை இயக்க, அங்கே உள்ளே ஏற்கனவே இருந்த அவர்களின் சிறியத் தோப்பு வீடு வெள்ளை அடிக்கப் பட்டு புதிதாய் மாறியிருந்தது கண்டு ஆச்சர்யப்பட்டுக் கொண்டே இறங்கினாள்.

     முன்பு வெறும் வீடு மட்டுமே அங்கே இருக்க, இப்போது வீட்டைச் சுற்றிலும் பூக்கொடிகளும், செடிகளும் வளர்க்கபட்டிருக்க, வீட்டின் வலது புறம், சின்னதாய் ஒரு இயற்கைக் குளம் வெட்டி அதில் ஊற்றெடுத்திருந்த நீரில் இரு அன்னப் பறவைகளும் தாமரைகளும், அல்லிக் கொடிகளும் மலர்களுடன் மிதந்து கொண்டிருந்தன. அவற்றை எல்லாம் ரசனையோடு பார்த்துக் கொண்டே வந்தவளை, அவளின் அன்பிற்குரிய செவலையின் அழைப்பு திரும்பிப் பார்க்க வைக்க,

     வீட்டின் வெளியே பாதுகாப்பின் காவலானாய் அவர்களின் கம்பீரக் காளை செவலை நின்றிருப்பதைக் கண்டு,

     “டேய் செவலை நீ எப்போடா இங்க வந்த?! வீட்டுலதானே இருந்த?!” என்று அவள் செவலையின் அருகே சென்று அவன் முதுகின் மேல் சாய்ந்து முத்தமிட்டுக் கொஞ்சியபடிக் கேட்க, அவன் தலையை இப்படியும் அப்படியுமாய் உலுக்கித் தான் அவள் மேல் வைத்திருந்த அளவிலா அன்பை  வெளிப்படுத்தினான்.

     “பார்த்தியா என் மாமனை! என்னமோ தெரியலை, திடீர்னு பாசம் பொங்கி வழியுது?!” என்று கண்ணனைப் போட்டுக் கொடுக்க, அவனும் செவலையின் அருகே வந்து அதன் முதுகை வருடிக் கொடுக்க, செவலையும் இப்போது ஆசையாய் தலையை ஆட்டி அவன் தொடுதலை ஆதரித்தது.

     “பாருடி இவனை! இப்போ மட்டும் எப்படித் தலையை ஆசையா ஆட்டிக் கொடுக்கறான்! இத்தனை நாளா எப்படிச் சிலுப்பிக்கிட்டு இருந்தாங்குற?!” என்றான் ஆசையாய் செவலையின் முகத்தையும் வருடி.

     “எப்போ மாமா இதெல்லாம் செய்த?! இதுக்குத்தான் கொஞ்ச மாசமா என்னை இங்கத் தோப்புப் பக்கம் வரவே விடலையா யாரும்?!” என்று அவள் ஆச்சர்யம் கொண்டு கேட்க, அவன் அழகாய்ச் சிரித்தான்.

     “உனக்கு கூட இப்படியெல்லாம் யோசிக்கத் தெரியுமா?!” என்று அவள் ஆச்சர்யத்தில் கன்னத்தில் கைவைத்து வினவ,

      “எப்படியெல்லாம்?!” என்றான் அவன்.

     “அதான் இப்படி ரொமான்டிக்கா?!” என்று அவள் கேட்க,

     “ஹஹா” என்று வாய்விட்டுச் சிரித்தவன்,

     “இது உனக்கு ரொமான்டிக்காடி?! நான் என்னமோ சுவிஸ்க்கு கூட்டிட்டு போன ரேஞ்சுக்கு பீல் பண்ற?!” என்றான்.

     “போ! எனக்கு என் ஊரும் காடும், தோப்பும்தான் எல்லா நாட்டையும் விட அழகு” என்றவள், அவன் மார்பில் ஆசையாய்ச் சரிய,

     “என்னடி?! இப்படி பேசிக்கிட்டே இருக்கியே மண்டு மாமான்னு சொல்லாம சொல்லுறியா?!” என்று தன் மார்பில் சாய்ந்தவளை ஆசையாய் நெருக்கி அணைத்துக் கொண்டவன்,

     “ம் போ மாமா!” என்று அவள் கொஞ்சவும், அவளை அப்படியே தூக்கிக் கொண்டு, வீட்டின் உள்ளே சென்று, அதன் உள்ளே இருந்த பழைய தேக்கு மரக் கட்டிலில் கிடத்த, அவள் வெட்கத்தில் தன் இரு கைகள் கொண்டு கண்மூடினாள்.

     “என்னடி இது?! புதுசா வெட்கமெல்லாம் படற?!” என்றபடியே அவன் வாயிற்கதவை அடைத்துவிட்டு வந்து அவள் அருகே அமர,

     “ப்ச் போ மாமா!” என்று அவள் திரும்பிப் படுத்துக் கொள்ள,

     “போகவா சொல்ற?! சரிப் போறேன்” என்று அவனுமே அவளை வெறுப்பேற்றும் விதமாய் எழுந்து கொள்ள முயல, சட்டென அவன் வேட்டியைப் பிடித்து இழுத்தவள், அப்படியே அவனைத் தன்மேல் இழுத்துப் போட்டுக் கொள்ள,

      “இவ்ளோ ஆசையையும் எப்படிடி உள்ளுக்குள்ளயே மறைச்சு வச்சிருந்த இத்தனை வருஷமா?! இந்த இரண்டு வருஷத்துக்கே நான் என்ன பாடு பட்டுட்டேன் தெரியுமா?!” என்றவன், அவள் வெகு நேரம் தன் பாரம் தாங்க மாட்டாள் என்று தான் திரும்பிப் படுத்து அவளைத் தன்மேல் போட்டுக் கொள்ள,

     “ஏன் மாமா எனக்கு வலிக்கல்லாம் இல்லை! எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்தே உன்னை இந்த நெஞ்சுல சுமந்துட்டு இருக்கேனே, கொஞ்ச நேரம் உன்னை என் மேனியில சுமக்க மாட்டேனா?!” என்று அவள் காதலுடன் கேட்க,

     “சுமக்க வேண்டிய நேரத்துல சுமந்துக்கோடி” என்று குறும்பாய்க் கண்சிமிட்டிச் சொன்னவன் உதட்டில் பட்டென்று ஒரு அடி வைத்தவள், அவன்மேல் தன் மனதின் பாரம், உடலின் பாரம் அனைத்தையும் கிடத்திவிட்டு பஞ்சைப் போல் இலகுவாய் மிதந்திருந்தாள் பரவசத்தில்.

     சில நொடிகள் இருவரிடமுமே எந்தப் பேச்சும், எந்த அசைவும் இல்லை! இருவருமே ஒருவரை ஒருவர் ஆசையாய் நோக்கியபடி, காலம் காலமாய் சொல்ல நினைத்த காதலை எல்லாம் கண்வழியே கிடத்திக் கொண்டிருக்க, மீண்டும் செவலையின் சத்தமே அவர்களை நிஜத்திற்கு மீட்டுக் கொண்டு வந்தது.

     “பார்த்தது போதும் செயல்ல இருங்குடான்னு உன் தம்பி சொல்றான்” என்று கண்ணன் அவளைத் தன்மேல் இருந்துப் புரட்டிக் கீழே படுக்க வைக்க,

     “ம்!” என்று சிணுங்கலாய்க் கொஞ்சியவள், கண்மூடி அவன் ஆசைக்கு இடம் கொடுக்க, அவளின் அங்கம் முழுவதும் தன் உதடுகளால் முத்தெடுத்துக் கொண்டிருந்தவனின் தாடியை ஆசையாய்ப் பற்றி அவனை மேலே இழுத்தவள், அழுத்தமாய் அவனைக் கட்டி இறுக்கி ஆனந்தக் களிப்போடு முத்தமழை பொழிய, அவளின் காதலும், அவனின் காமமும் ஒன்றிணைந்து, வெறும் கவிதாயினியாய் இருந்தவள், இப்போது கண்ணதாசனின் கைகளில் கவிதையாய் மொழிபெயரத் துவங்கி என்றும் நீங்காக் கவிதையாய் அவன் உள்ளமெனும் ஊஞ்சலில் ஆடலானாள்!

                                     முற்றும்.

    

 

   

 

     

    

Advertisement