Advertisement

   32

     “நளபாகம் உணவுப் பொருட்கள் தொழிற்கூடம்” என்ற பெரிய பெயர்ப் பலகையைப் பூரிப்போடும் ஆச்சர்யத்தோடும் பார்த்தபடியே அவனது புல்லட்டில் இருந்து இறங்கியவள்,

     “எப்படி மாமா இப்படில்லாம்?! நளபாகம்னு பேரெல்லாம் கூட தமிழ்லயே யோசிச்சிருக்க?!” என்றாள் அவனை ரசித்தவாறே தலைசாய்த்துக் கன்னத்தில் ஆச்சர்யமாய்க் கைவைத்துச் சிரித்து.

     “முதல்ல வைரம் ஃபுட் ப்ராடக்ட்ஸ்னுதான் வைக்கலாம்னு நினைச்சேன். அப்புறம் அத்தைதான் சொல்லுச்சு. பொதுவா ஏதாச்சும் தமிழ்ப் பேரு வையின்னு. அதான்” என்றவன் வண்டியிலிருந்து இறங்கி அதை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு நடக்க, அவன் கையைப் பெருமையாய்ப் பற்றிக் கொண்டாள் கண்ணனின் கவி.

     அவன் வேட்டி சட்டையில் கம்பீரமாய் நடந்து வர, அவள் அத்தனைப் பூரிப்புடன் அவனின் கைக்கோர்த்து பட்டுப்புடவையில் அவனுக்கு இணையான கம்பீரத்தோடு அனைவரையும் பார்த்துப் புன்னகயுடன் நடந்து வருவதைப் பார்க்க, ஊரே ரசித்தது எனில், அவன் குடும்பத்தினரும், நண்பர்களும், கார்த்திக்கும், கங்காவும் ரசிக்காமல் இருப்பார்களா என்ன?! 

     “வா மருமவளே, முதலாளி அம்மாவே இவ்ளோ தாமதமா வர்றதா?!” என்று தங்கரத்தினம் மருமகளை வம்பிழுக்க,

     “ம் உன் பிள்ளையைக் கேளு மாமா?! அதுதான் ஒருமணி நேரமா கிளம்புது” என்று அவனை மாட்டிவிட்டவள்,

     “வாங்க வாங்க நேரமாவுதுல்ல” என்று அனைவரையும் அழைக்க, அவன் ரிப்பனை கட் செய்யும் படி கவியிடம் கத்தரிக்கோலைக் கொடுக்க,

     “இது எதுக்கு மாமா வெள்ளைக்காரன் பழக்கமெல்லாம்? நம்ம முறைப்படி, அழகா வாசல்ல விளக்கேத்தி வச்சுட்டு வலது கால் எடுத்து வச்சு எல்லோரும் உள்ள போவோம்” என்றவள்,

     “அம்மா குத்துவிளக்கு எடுத்து வச்சேனே, கொண்டு வந்திருக்கதானே?” என்றாள் வைரத்திடம்.

     “இருக்குடி. ஆனா உள்ள சாமிக்கிட்ட வச்சு ஏத்த வேணுமே” என,

     “இங்க ஒண்ணு ஏத்தி வச்சிட்டு, உள்ள லட்சுமி விளக்கோட சேர்த்து ஒண்ணு ஏத்திடலாம்ல கெழவி” என்று கவி அத்தனை பேர் முன்னிலையிலும், தன் பாட்டியை கெழவி என அழைக்க, பாட்டிக்கு கோவம் வந்துவிட்டது.

     “சரிதான்டி குமரி, நீ எம்புட்டு நாளைக்கு கெழவி ஆகாம குமரியாவே இருக்கேன்னு பார்க்கறேன்” என்றார் கனகாம்புஜம் பாட்டி.

     அவர் கோபத்தில் அனைவரும் வாய்விட்டுச் சிரிக்க, “அவ கெடக்குறா அப்பத்தா நீ எப்போவுமே எங்களோட கோல்டன் பியூட்டிதான்” என்று பேரன் அவர் கன்னம் பிடித்துக் கொஞ்ச,

     அவருக்கு என்ன புரிந்ததோ, அவனது கொஞ்சலில் ஏதோ தன்னைப் பற்றி உயர்வாய் சொல்கிறான் என்பது மட்டில் புரிய,  வாய்விட்டுச் சிரித்தபடி,

     “என் ராசா!” என்று அவன் கன்னம் வழித்து திருஷ்டி எடுத்தார்.

     விளக்கிற்கு பூ வைத்து எண்ணெய் ஊற்றித் திரி போட்டவள், “கெழவி, நீ வந்து முதல்ல விளக்கை ஏத்து” என்று அழைக்க,

     “அடி ஏன்டி?! நான் இதெல்லாம் செய்யக் கூடாது. உன் அம்மாவை ஏத்தச் சொல்லு” என்றார் பாட்டி.

     “அட என்ன அம்மா நீ?! எங்க எல்லோருக்கும் மூத்தவங்க நீதான், நாங்க எல்லோரும் நல்லா இருக்கணும்னு உன்னைவிட யாரு நினைப்பாங்க. நீயே வந்து ஏத்து” என்று வைரமும் சொல்ல, பாட்டி அப்போதும் தயங்க,

     “பாட்டி” என்று கண்ணனும், கார்த்திக்கும் வந்து அவர் கையைப் பிடித்து அன்புடன் அழைக்க, பாட்டி வாய்கொள்ளாச் சிரிப்புடன் அவர்கள் உடன் சென்று குத்து விளக்கின் ஒரு முகத்தை ஏற்றி வைத்தார்.

     அதன்பின், “அத்தை, அம்மா நீங்க வந்து ஏத்துங்க” என்று கற்பகத்தையும் வைரத்தையும் கவி அழைக்க, இருவரும் ஒருவரை ஒருவர் புன்னகையோடு பார்த்துக் கொண்டு,

      “நீயும், கங்காவும் ஏத்துங்கடி” என,

     “நீங்க முதல்ல ஏத்துங்க. அப்புறம் நாங்க ஏத்துறோம்” என்றனர் கவியும், கங்காவும் ஒருசேர.

     வீட்டுப் பெண்கள் அனைவரும் குத்துவிளக்கேற்றி வைத்து, உள்ளே செல்ல, அவர்களைப் பின்தொடர்ந்து வீட்டு ஆண்களும், நண்பர்களும், உறவினர்களும், ஊர்மக்களும் உள்ளே சென்றனர்.

     மிகப் பெரிய அளவில் இல்லை என்றாலும் ஓரளவு விஸ்தாரமாய் நெருக்கடி இன்றி ஆங்காங்கே இயந்திரங்கள் நேர்த்தியாக வரிசையில் இடைவெளி விட்டு வைக்கபட்டிருக்க, ஒரு புறத்தில், பேக்கிங் செய்யவும், பேக்கிங் செய்த  பொருட்களைப் பிரிவு வாரியாய் அடுக்கவும் இடம் ஒதுக்கி அலமாரிகள் அமைத்திருந்தார்கள்.

     “ரொம்ப அழகா நேர்த்தியா இருக்குய்யா!” என்று வைரம் பாராட்ட,

     “ஆமாமாம்” என்றனர் மற்றவர்களும்,

     “சரி சரி பூஜைக்கு நேரமாச்சு போய் பூஜையை முடிச்சிட்டு வந்து ஒவ்வொன்னா பொறுமையா சுத்திப் பார்க்கலாம்” என்று ரத்தினம் குரல் கொடுக்க,

     “ஹான் இந்தா வரோம் அண்ணே” என்று வைரம் ஓடினார்.

     சிறிது நேரத்தில் பூஜை நல்லவிதமாய் முடிவடைந்து வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவும் பரிமாறப் பட, அனைவரும் கண்ணனையும், கார்த்திக்கையும், கவியையும், கங்காவையும் அவர்கள் குடும்பத்தினரையும் வாழ்த்திவிட்டுச் சென்றனர்.

     ஊர்ப் பெரிய வீட்டுகாரர்கள் சிலர், “எங்களுக்கு இந்த யோசனை தோணாம போச்சே ப்பா” என்றும்,

     “அப்படியே இருந்தாலும் எங்க வீட்டுப் பிள்ளைங்க எங்க இதில எல்லாம் ஆர்வம் எடுத்து செய்யுங்க” என்றும் சொல்லி கண்ணனிடம் அங்கலாய்க்க,

     “ஏன் செய்யாம ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் அவங்களும் என்னைப் போல கிராமங்களோட அருமையையும், விவசாயத்தோட அருமையையும் உணருவாங்க. அப்போ எல்லாமே நல்ல விதமா நடக்கும்” என்றான் அவர்கள் பொறாமையில் சொல்வதைக் கூட பெருந்தன்மையாகவே எடுத்துக் கொண்டு.

     அவன் பேச்சில் அவர்களுக்குமே மனதில் நல்லெண்ணம் எழ, “சரி தம்பி, நீங்க முதல்ல நல்லா முன்னேறிக் காட்டுங்க. அப்போதான் இந்தப் பட்டணத்தையும், வெளிநாட்டையும் தேடி ஓடுற பசங்களுக்கு ஒரு நம்பிக்கையாவும், முன்னுதாரணமாவும் இருப்பீங்க” என்று மனதார வாழ்த்திவிட்டுச் சென்றனர்.

     “சத்தியமா என் கண்ணையே என்னால நம்ம முடியலைடா” என்று பிரதாப் கண்ணனின் அருகே வந்து அவனைச் சுற்றிச் சுற்றிப் பார்க்க,

     “டேய் பையித்தியக்காரா என்னடா பண்ற?!” என்றபடியே வந்தான் கார்த்திக்.

     “இதோடா” என்ற பிரதாப்,

     “நீயெல்லாம் சென்னையில பொண்ணுங்க பின்னாடி சுத்திகிட்டு இருந்த இருப்பென்ன, இப்போ நல்ல பிள்ளையாட்டமா உன் பொண்டாட்டிப் பின்னாடி பம்முறது என்ன?! என்னல்லாம் நீ கலாய்க்கிற? ம்!” என்று கங்காவின் முன் கோர்த்துவிட,

     கங்கா, கார்த்திக்கை ஒரு வெட்டும் பார்வை பார்த்துவிட்டு, “அதெல்லாம் எங்க ஊட்டுக்காரர் நல்லவருதேன். நீங்க எல்லோரும் கூட சேர்ந்து சுத்தினதுலதான் அவரு அப்படி இருந்திருக்காரு. இன்னொரு முறை அவரை என் முன்னாடி அப்படிப் பேசினீங்க” என்று கங்கா கார்த்திக்கிற்கு வக்காலத்து வாங்கிவிட்டுச் செல்ல,

     “ஈஈஈஈ” என்று ஜிலேபி சாப்பிட்ட சிம்பன்சி போல் கார்த்திக் காது வரை இளித்து வைக்க, அவன் அருகே வந்த கங்கா,

     “ரொம்ப இளிக்காதய்யா ராத்திரிக்கு மொத்த பல்லையும் பேர்த்துடுவேன்” என்று காதோரம் கிசுகிசுத்துவிட்டுச் செல்ல, கார்த்திக்கின் வாய் பெவிகிவிக் போட்டதைப் போல் ஒட்டிக் கொண்டது.

     “என்ன மச்சி சிரிப்பு சடன்னா நின்னுடுச்சி?!  ஏதோ பல்லு பேர்த்துடுவேன்னு எல்லாம் வேற கேட்ட மாதிரி இருக்கு?!” என்று அப்போதும் பிரதாப் விடாமல் கார்த்திக்கை ஓட்ட,

     “டேய் போதும் விடுடா அவனை” என்று கார்த்திக்குப் பரிந்து வந்தான் கிஷோர்.   

     யாருமே எதிர்பார்க்காத விதமாய், ஏன் கண்ணனே கடந்த சில  மாதங்களுக்கு முன் தான் இப்படி ஒரு உணவுப் பொருட்கள் சாகுபடி, மற்றும் கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையைத் துவங்குவான்  என்று நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டான். ஆனால் இன்று கவியின் ஆசைப்படியும் அவன் குடும்பத்தாரின் ஆசைபடியும் அவன் தங்கள் ஊரில் இருந்தே செய்யுபடியான தொழிலை, அதிலும் விவசாயம் மற்றும் மக்கள் நலம் காக்கும் தொழிலைத் தேர்ந்தடுத்து இதோ இன்று அவர்களின் நளபாகம் உணவுப் பொருட்கள் தொழிற்சாலையின், துவக்க விழாவும் இனிதே முடிவடைந்திருந்தது.

                                            *****

     விழா முடிந்த அன்று, இரவு உணவைச் சாப்பிட்டு முடித்த ஆண்கள் அனைவரும் சற்று நேரம் மொட்டை மாடியில் அமர்ந்து பேசிவிட்டு வருவதாக எஸ்கேப் ஆகி இருந்தனர் தண்ணீர் விருந்தைக் கொண்டாட.

     தங்கள் வீட்டு மொட்டை மாடியில் கார்த்திக், கிஷோர், பிரதாப், தங்கரத்தினம், வீரபாண்டி, மருது என்று அனைவரும் ஒன்றாய் சேர்ந்து அமர்ந்து ஜலக்ரீடையில் இறங்கி இருக்க, கண்ணன் பாவமாய் அவர்கள் எல்லோரும் உல்லாசமாய் உளறுவதைப் பார்த்தபடி நல்ல பிள்ளைப் போல் அமர்ந்திருந்தான். அவனுக்கு அவன் பயம்!

     “டேய் வாடா வந்து நீயும் ஒரு கட்டிங் போடு. கவி ஒண்ணும் சொல்ல மாட்டா” என்று கார்த்திக் அவனை அழைக்க,

     “அவளுக்கெல்லாம் யாரு பயந்தா?! தண்ணி போட்டா நான் சும்மா இருக்க மாட்டேனே!” என்று முணுமுணுத்தவன்,

     “வேணாம் வேணாம் எதுக்கு வம்பு!” என்று தலையை உலுக்கிக் கொண்டு எழுந்து கொள்ள,

     “டேய் என்னடா” என்று பிரதாப் அவன் கைப்பற்றி இழுக்க,

     “இல்லை, இல்லை. வேணா” என்று கண்ணன் திணற,

     ‘இன்னும் என்ன செய்யுறாங்க இவங்க? சும்மா பேசிட்டு இருக்குறேன்னு சொல்லிட்டு போனவங்க, இவ்ளோ நேரமாவா பேசுவாங்க?!’ என்று எண்ணியபடி கவி வர, அப்போதுதான் இந்தக் கூத்து நடந்து கொண்டிருந்தது.

      “அடப்பாவி மனுஷங்களா அப்போவே கங்கா சொன்னா. நான்தான் நம்பலை” என்று சொல்லிக் கொண்டவள்,  

     “இருக்கட்டும் இருக்கட்டும். அம்மாவைப் போய் கூட்டிட்டு வந்தா தான் இவங்க அடங்குவாங்க” என்றுத் திரும்பிப் போக எத்தனிக்க, படிக்கட்டில் அவள் ஏறி வரும்போதே பார்த்து விட்டக் கண்ணன் சட்டென அவளை நெருங்கி, அவள் கைப்பற்றித் தடுத்து நிறுத்தினான்.

Advertisement