Advertisement

                                                  31

     அவனது வார்த்தைகளில் இருந்த வேதனையும் காதலும் நெடு நாட்களுக்குப் பின் அவள் மனதை அசைத்துத்தான் பார்த்தது. ஆனாலும், ஏதோ ஒரு கோபம் இன்னுமே அவளுள் உழன்று அவனின் காதலை ஏற்க விடாமல் தடுத்தது.

     சற்று நேரத்திற்கு முன் அவன் சொன்னது போல் கார்த்திக்கிடம் சொல்லாமல், அவனிடமே சொல்லி கூட இந்தக் கல்யாணத்தை நிறுத்தி இருக்கலாம் தானே? ஏன் அப்படிச் செய்யவில்லை! அவன் தன் காதலை உணர்ந்து அவளைத் தேடி வர வேண்டும் என்று தானே அவர்கள் அப்படி ஒரு நாடகத்தை நடத்தினார்கள். அப்போது தவறு தங்கள் மீதும் தானே இருக்கிறது என்று உணர்ந்தாள் அவளும்.

      ஆனாலும் ஏதோ ஒரு கோபம், அது அவன் அவள் அன்பை உதாசீனப் படுத்தியதா, இல்லைக் கார்த்திக்கை வைத்துப் பேசி அன்று அப்படி அரக்கத்தனமாய் நடந்து கொண்டதா, இல்லை அவள் அந்த நிலையில் இருக்கும் போது கூட அவளைத் தனியே விட்டுவிட்டு வெளிநாட்டிற்குச் சென்றதா? எதுவென்று தெரியவில்லை! ஆனால் முன்பு போல் அவன் மீது உயிரையே வைத்திருந்த அந்தக் காதலை மட்டும் அவளால் அவனுக்காய் மீண்டும் உணரவே முடியவில்லை! அது எப்படி எதனால் எப்போது மீண்டும் துளிர்க்கும்?!

     அவன் அவ்வளவு கேட்டும் அவள் மௌனமாய் திரும்பிப் படுக்க முயல, அதற்கு மேல் பொறுக்க முடியாதவனாய், அவளை வேகமாய்த் தன் புறம் திருப்பியவன்,

      “நான் இவ்ளோ சொல்லியும் உன் மனசு மாறலை இல்லை?!” என்றவன்,

     “சரிடி விடு! இனி நீயா என்னைத் தேடி வர வரைக்கும் நானா ஒரு வார்த்தை, ஒரு வார்த்தை கூட உன்கிட்ட பேசமாட்டேன். ஆனா நீயா வந்து ஒருவார்த்தை  என்கிட்டே பேசிட்டாலும், அதுக்கப்புறம் இந்த மூஞ்சியைத் தூக்கி வச்சிக்கறது, திருப்பிக்கிட்டுப் போறது இதெல்லாம் ஒரு நொடி கூட அனுமதிக்க மாட்டேன்.” என்று தீர்க்கமாய்ச் சொன்னவன், கோபமாய்த் திரும்பி அவளுக்கு முதுகு காட்டிப் படுத்துக் கொள்ள, அவளுக்குமே பெரும் வேதனை தான் எழுந்தது.

                                         *****

     நாட்கள் ரெக்கை கட்டிக் கொண்டு பறந்தது. ஐந்து மாதத்தில் அவனது தீவிர முயற்சியாலும், கார்த்திக்கின் உதவியாலும், அவன் ஆரம்பிக்க நினைத்த அந்த சிறிய உணவுப் பொருட்கள் தயாரித்து ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை அன்று இனிதே துவங்க இருந்தது.

     வீட்டினர் அனைவருக்குமே கண்ணனின் இந்த மாற்றமும், புதிய முயற்சியும் பெரும் மகிழ்ச்சியைத் தருவித்திருக்க, எல்லோரும் மிக உற்சாகமாய் தொழிற்சாலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தனர்.

     அவன் தொழிற்சாலையின் துவக்க விழா ஏற்பாடு விஷயமாக இரவு முதலே வீட்டுக்கு வராது, விழா துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் கார்த்திக் தயாராகி வந்ததும் அவனிடம் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்திருந்தான்.

     வேலை வேலை என்று ஓடியதில், தூக்கம் இல்லாது கண்கள் சிவந்து போயிருக்க, முகமும் வெகு வாட்டாமாய்த் தெரிந்த மாமனைப் பார்க்க அவளுக்கு மனதைப் பிசைந்தது. குளிப்பதற்காக துண்டை எடுக்கத் தங்கள் அறைக்கு வந்தவனுக்கு, அவள் தான் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த துண்டை நீட்ட,

     அவள் முகத்தைக் கூட ஏறிட்டுப் பார்க்காமல் அவன் வாங்கிக் கொண்டுச் செல்ல, அவள் மனம் சுணங்கியது.

     அவன் அப்படிச் சென்றதும், அவன் விழாவிற்காய் அனைவருக்கும் புதுத் துணி எடுத்தது போல் அவளுக்கும் எடுத்துக் கொடுத்துக் கொடுத்திருந்த அந்தப் பட்டுப்புடவையை எடுத்தவள், அதைத் தன் தோள் மீது போட்டுப் பார்த்து இப்படியும் அப்படியும் கண்ணாடியில் தன்னைத் திரும்பிப் பார்த்துப் பார்த்து ரசிக்க, பிள்ளை,

     “ம்மா!” என்று தனது புதுத் துணியை எடுத்துக் கையில் கொடுத்தான்.

      “ஓ! என் தங்கத்துக்குப் புதுத் துணி போட்டுவிடணுமா?!” என்று பிள்ளையைக் கையில் தூக்கியவள், 

     பிள்ளைக்காய் அவன் வாங்கி வைத்திருந்த குட்டி பட்டு வேஷ்டியையும், பட்டுச் சட்டையையும் போட்டு விட, பிள்ளை அப்படியே குட்டி கண்ணதாசனை ஜெராக்ஸ் எடுத்ததைப் போல் இருக்கவும்,

     “அப்படியே என் குட்டி கண்ணதாசனைப் போலவே இருக்கடா செல்லம்?!” என்று பிள்ளையின் கன்னத்தில் ஆசையாய் அழுத்தமாய் அவள் முத்தம் வைக்க, பிள்ளை வாய்விட்டுச் சிரித்தது.

     அதற்குள் கண்ணன் குளித்துவிட்டு வர, “இருந்தாலும் உன் அப்பனுக்கு ரொம்பத்தான் வீம்பு! என் முகத்தைப் பார்க்க மாட்டாராம் ஆனா நான் கொடுத்தத் துண்டை மட்டும் வாங்கிட்டுப் போவாராம்” என்று அவள் சொன்னது அவன் காதிலும் கேட்டுவிட,

     “நான் எப்போ இவ முகத்தைப் பார்க்காம இருந்தேன்?!” என்று முணுமுணுதத்தவன்,

     ‘ஓ! நேரமாகுதுன்னு பதட்டத்துல துண்டை வாங்கிட்டு ஓடினதை இவ அப்படி நினைச்சுக்கிட்டாளா?!’ என்று எண்ணிக் கொண்டவன்,

      “கவி குட்டி கெளம்பிட்டீங்களா?!” என்றான் பிள்ளையைப் பார்த்து,

     அப்பன் கேள்வி கேட்டதும் பிள்ளை, அவனிடம் ஆசையாய் ஓடி வர,

     “அப்பன் வந்ததும் ஓடுறதைப் பாரு” என்று அவள் முணுமுணுக்க,

     “இவதான் பேசமாட்டா என் பிள்ளை என்கிட்டே வரதைப் பார்த்தும் காண்டாகுறா?!” என்று அவனும் முணுமுணுத்தபடியே பிள்ளையைத் தூக்கி முத்தம் வைக்க, ஏனோ அவளுக்கு எப்போதும் ஏற்படும் ஏக்கம் இப்போதும் வந்து போனது.

      “ம்!” என்று சின்னதாய்ப் பெருமூச்சு விட்டுக் கொண்டவள், சட்டென ஏதோ நினைவு வந்தவளாய், சமையற்கட்டிற்கு ஓடினாள்.

     ஒரு தட்டை எடுத்து அதில் நான்கு இட்டிலிகளை வைத்து, சாம்பார் ஊற்றி எடுத்து வந்தவள், ஏதும் சொல்லாமல் தட்டை மட்டும் கணவனிடம் நீட்ட, அவன் தட்டை வாங்காமல், பிள்ளையிடம்,

     “கவிகுட்டி அப்பாக்கு நேரமாகுதுடா செல்லம், கொஞ்ச நேரம் இப்படிக் கட்டில்ல உட்காருங்க, அப்பா ட்ரெஸ் மாத்திக்கிறேன்” என்றான்.

     “நான் ஒருத்தி இங்க தட்டை நீட்டிட்டு இருக்கேன்னு கண்ணு தெரியுதாடா கண்ணா?!” என்றாள் அவளும் பிள்ளையிடமே.

     அதற்கு அவன் பதிலேதும் கூறாமல், மும்முரமாய் உடை அணிந்து கொண்டிருக்க,

      “காதும் கேட்கலையாடா கண்ணா?!” என்றாள் மீண்டும்.

     அவன் அப்போதும் பதில் பேசாமல் தலை சீவ, “டேய் லூசுப் பயலே இப்போ நீ சாப்பிடப் போறியா இல்லையா?!” என்றான் மீண்டும் பிள்ளையைப் பார்த்து.

     அதற்குள் தயாராகி இருந்தவன், “கவிகுட்டி அப்பாவும் ரெடி, வாங்க போகலாம்” என்று பிள்ளையைத் தூக்கிக் கொண்டு அவன் வெளியேறப் போக, அவன் தோள் மீது கைவைத்துத் தடுத்து நிறுத்தியவள், 

     “ம்!” என்றாள் மீண்டும் தட்டை எடுத்து அவனிடம் நீட்டி.

     அவன் இப்போதும் அவளை மேலும் மேலும் வெறுப்பேற்றும் விதமாய்த் திரும்பி நடக்க,

       “ப்ச்!” என்று காலை ஓங்கித் தரையில் உதைக்கப் போனவள்,

     “அச்சோ மன்னிச்சிடும்மா” என்று தனது நிலமகளிடம் மன்னிப்பு வேண்டிவிட்டு,

     அவன் சாப்பிடாமலேயே கிளம்பிவிடப் போகிறான் என்ற பதட்டத்தில், சட்டென அவசரமாய்,

     “சாப்பிட்டுப் போ மாமா” என்று கத்திவிட்டு சட்டென நாக்கைக் கடித்துக் கொண்டாள். வெளியே மற்றவர்கள் முன் பெயருக்கென இருவரும் பேசிக் கொண்டாலும், தனியாய் இருக்கையில் ஒரு வார்த்தை கூட கடந்த ஐந்து மாதமாய் இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை, அன்று அவன் அப்படிச் சொன்னதற்குப் பிறகு.

     அதனாலேயே அவளது மாமா என்ற அழைப்பு, அவனைக் கயறு கட்டி இழுத்ததைப் போல் பட்டென நிறுத்த, அவள் சட்டென அங்கிருந்து வெளியே செல்லப் பார்க்க, அவள் கையை இறுக்கமாய்ப் பற்றி அவள் செல்ல முடியாமல் தடுத்தவன், பிள்ளையை கீழே இறக்கிவிட்டு,

     “கவி குட்டி, தாத்தாகூட போய் கார்ல ஏறி உட்காருங்க” என, காரில் போகப் போகிறோம் என்ற ஆசையில் பிள்ளை ஒரே ஓட்டமாய் ஓடினான்.

      பிள்ளை அந்தப் புறம் நகர்ந்ததுமே சட்டென தங்கள் அறைக் கதவைத் தாழிட்டவன், அவள் கொஞ்சமும் எதிர்பாரா வண்ணம் அவள் இடை வளைத்து அவளைப் பற்றி இழுத்துத் தன் மேல் சாய்த்தவன்,

     “என்னடி சொன்ன இப்போ?!” என்றான் அவள் கண்களை நேருக்கு நேர் முறைத்து.

     அவள் மெல்ல இமைகள் தாழ்த்த, “திரும்ப சொல்லு” என்றான் மிரட்டலாய்.

     “ம்ஹும்!” என்று அவள் மறுப்பாய்த் தலையசைக்க,

     “சொல்ல மாட்ட?!” என்றவன், அவள் இடையை மேலும் நெருக்கக் அவள் உடல் மொத்தமும் அவன்மேல் உரசியது.

     அதன் இம்சையில் அவள் கூச்சத்தால் வெகுவாய் நெளிந்தாலும், கடந்த சில மாதங்களாய் அவன் அவளிடம் சொல்லியது போலவே அவளிடம் பேசக்கூட முயலாமல் கடைபிடித்து வந்தப் பொறுமையும், அவர்கள் கிராமத்திற்காக அவன் மேற்கொண்ட நல்முயற்சிகளும், தங்கள் பிள்ளையைக் கொஞ்சும் போதெல்லாம் அவளுள் எட்டிப் பார்த்த அந்த ஏக்கமும் சேர்ந்து அவளை அவனை விட்டு விலக விடமால் பிடித்து வைத்திருந்தது இப்போது.

     “சொல்லுடி” என்று அவன் காதலும், ஏக்கமுமாய் மீண்டும் கேட்க,

      சில நொடிகள் அவன் விழிகளை தன் விழிகளால் வட்டமிட்டவள்,

     “ம்!” என புருவம் உயர்த்த,

     “ஒரு முறை, ஒரே ஒருமுறை சொல்லுடி” என்றான் கெஞ்சலாய்.

     “ம்!” என்று தன் கீழ் உதட்டைக் கடித்துச் சில நொடிகள் கண்மூடியவள், மெல்ல மீண்டும் கண் திறந்து,

     “ச சாப்பிட்டுப் போ மாமா” என, அவள் முழுதாய் சொல்லி முடிக்கும் முன்பே அவள் அதரங்களைச் சுவைக்கத் துவங்கினான் தனது  நீண்டகாலக் காதல் பசியைப் போக்கும் விதமாய்.

     பல வருடமாய் அவள் ஏங்கிக் கிடைக்கக் காத்திருந்த அவனின் காதல் கசிந்த ஆசை முத்தம் முதன்முதலாய் அவள் மனமொன்றி ஏற்றுக் கொண்டிருக்கும் அந்த இனியத் தருணம் மிக மிக அழகான காதல் மயக்கத்தைக் கொடுத்திருந்தது அவளுள்ளும்.

     இருவருமே நிமடங்கள் கடந்தும் அந்த இதமான இம்சையிலிருந்து விலக இயலாமல், மூழ்கி முகிழ்ந்திருக்க, மூடியிருந்த கதவிற்கு வெளியே நின்று,

     “டேய் கண்ணா நாங்க எல்லாரும் பொடி நடையா நடந்தே கம்பெனிக்கு போறோம். நீயும் உன் பொண்டாட்டியும் சீக்கிரம் வந்து சேருங்கடா” என்றுவிட்டு, தங்கரத்தினம் பேரனைத் தூக்கிக் கொண்டு நடக்க, சட்டென அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டவள்,

     “ஐயோ, எல்லாரும் கிளம்பியே கிளம்பிட்டாங்க! போ போ மாமா வெளில! நான் இன்னும் புடவை கூட மாத்தலை!” என்று அவள் தவிப்பாய்க் கூற,

     “போகட்டும்” என்றான்.

     “என்ன?!” என்று அவள் முறைக்க,

     “நாம ரெண்டு பேரும் தனியா வரணும்னுதான் அவங்க விட்டுட்டுப் போறாங்க” என்று அவன் சொல்ல,

      “நினைப்புத்தான்” என்றவள்,

     “நீ போ. வெளிய போ. நேரமாகுது நான் புடவை மாத்தணும்” என்றாள் மீண்டும்.

     “மாத்து” என்று விட்டு அவன் திண்ணமாய்க் கட்டிலில் அமர்ந்து கொள்ள,

     “இப்படி மரமாட்டம் இங்கயே உட்கார்ந்திருந்தா, நான் எப்படி மாத்துறதாம்?!” என்று அவள் சீற,

     “அப்படியேதான்” என்றான் ஒற்றை வார்த்தையில்.

     “விளையாடாத மாமா. எழுந்து போ” என்று அவள் சிணுங்கலாய் மொழிய,

     அவளது சிணுங்கல் மீண்டும் அவனை அவளருகே இழுக்க, அவளைப் பட்டென தன்னருகே இழுத்துத், தன் மேல் சாய்த்துக் கொண்டவன்,

     “இரண்டு வருஷமா தவிக்க வச்சிட்டியேடி இந்த வார்த்தையைக் கேட்க” என்றான் தன் உதடுகளால் அவள் கன்னம் வருடி.

     “நீ செஞ்ச வேலை அப்படி” என்று அவள் முறைக்க,

     “சும்மா சும்மா முறைக்காதடி. நான் உன்னைக் கொஞ்ச நாள் தவிக்க வச்சதுக்கு, நீ என்னை மொத்தமா வச்சி செஞ்சிட்டடி” என்றபடியே அவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து, முதன் முதலாய் அவளின் மேனி வாசம் நுகர,

     “ஐயோ! என்ன பண்ற மாமா நீ அங்க போயி சாமி எல்லாம் கும்பிடணும்” என்று அவள் விலக,

     “சரி, அப்போ ஒரே ஒரு முத்தம் குடு. நான் உன்னை விட்டுடறேன்” என்று அவன் தன் முகத்தை அவள் அருகே கொண்டு செல்ல,

     “யாரோ சொன்னாங்களாம் என்கிட்டே ஒரு வார்த்தைக் கூட பேச மாட்டேன்னு! இப்போ முத்தம் கேட்குறாங்க!” என்று அவள் அவன் முகத்தை ஆசையாய்ப் பார்த்தபடி சொல்ல,

     “ஆமாம் சொன்னேன்தான். அது நீயா என்கிட்ட வந்து பேசுற வரைக்கும் தான்னும் சொன்னேன்ல” என்றான் அவனும் விட்டுக் கொடுக்காமல்.

     “அது சரி” என்றவளிடம்,

     “பேச்ச மாத்தாம ஒரே ஒரு முத்தம் ஒழுங்கா குடுத்துட்டன்னா நான் பாட்டுக்கு நல்லவனா கிளம்பிடுவேன்” என்று அவன் மீண்டும் ஆரம்பித்ததில் வந்து நிற்க,

     “அதெல்லாம் முடியாது. எனக்க எப்போ தோணுதோ அப்போதான் குடுப்பேன்” என்று அவள் அவனை விட்டு விலக முயல,

     “ஏய் நிஜம்மா சொல்றீ?! நீ எத்தனை முறை எனக்கு முத்தம் குடுக்க வந்திருப்ப?! இப்போ நான் கேட்டா மட்டும் இப்படி சீனைப் போடுற?!” என்று அவனும் முறைக்க,

     “ஐயோ!” என்று வெட்கம் கொண்டவள்,

     “உனக்கு எப்படி அதெல்லாம் தெரியும்?!” என்று அவள் அறியாப் பிள்ளையாய் கேட்க,

     “அதெல்லாம் அன்னிக்கு நீ நண்டை எடுத்து என்மேல விட்டியே அதுக்கெல்லாம் முன்னாடியே தெரியும்” என்றான் சகலமும் அறிந்தவனாய்.

     “ஓ!” என்று ஆச்சர்யமாய்க் கேட்டவள்,

     சட்டென கோபம் கொண்டவளாய், “அப்போ அதெல்லாம் தெரிஞ்சும் நீ என்னை வேணாம்னு சொல்லிக்கிட்டுத் திரிஞ்சிருக்க?!” என்று புருவம் உயர்த்தி மிரட்ட,

      “என்ன பண்றது? அப்போதான் மாடர்ன் பொண்ணும், சிட்டி லைஃபும் தான் வேணும்னு மனசு அடிச்சுக்கிச்சே!” என்று அவன் மனதில் தோன்றியதை அப்படியே சொல்லிவிட,

     “என்ன?!” என்று வெகுண்டவள்,

     “மாடர்ன் பொண்ணா மாடர்ன்?!” என்று அவன் தலை முடியைக் கொத்தாய்ப் பற்றி ஆட்டியவள்,

      “இன்னொரு முறை மாடர்ன் கிடர்ன்னுங்கிற வார்த்தை உன் வாயில் இருந்து வந்துது?!” என்றவள், தனது முதல் முத்தமாய் இல்லாது முதல் கடியாய் அவன் அதரங்களைக் நறுக்கென்று கடித்து வைத்தாள்.

     “ஹா” என்று அவன் குரல் எழுப்பவும்,

     “அச்சோ வலிக்குதா மாமா?!” என்று அவள் பதற,

     “ம்ஹும்! இதமா இருக்குடி!” என்று அவன் கிறங்கிப் போய்ச் சொல்ல,

     “ம் போ! உன் பேச்சே சரியில்லை! விடு விடு என்னை.” என்றதும்,

     “இன்னும் ஒன்னே ஒண்ணு” என்று அவன் ஆசையாய்க் கெஞ்ச, அவன் முகத்தைத் தன்னருகே இழுத்து தன் ஆசையும் அவன் ஆசையும் தீர, அழுத்தமாய் ஒரு கடியும், ஆசையாய் ஒரு முத்தமும் கொடுத்து மீண்டவள், பட்டென அவனிடமிருந்து விலகி தனது புதுப்புடவையை எடுத்துக் கொண்டு ஒரே ஓட்டமாய் தனது பழைய அறைக்கு உடை மாற்ற ஓட, அவன் இத்தனை நாட்களாய் இருந்த மனதின் பாரமெல்லாம் மொத்தமாய் நீங்க அவள் செல்வதையே மென் புன்னகையுடன்  ரசித்திருந்தான்.

                                                 -உள்ளம் ஊஞ்சலாடும்…

 

          

    

 

    

 

     

Advertisement