Advertisement

   அதில் வந்த பணத்தில், புயல் பாதிப்பால் தாங்கள் வசித்திருந்த மணலாலும் குடிசையாலும் கட்டப்பட்திருந்த சிறு வீடுகள் கூட இடிந்து போய் மீண்டும் கட்டுவதற்கு வசதியற்ற நிலையில் இருந்த தங்கள் கிராமத்து மக்கள் ஐந்து பேருக்கு சமையல் மேடையோடு கூடிய ஒற்றை அறை கொண்ட கல் வீடு கட்டி, சிமென்ட் சீட் போட்டு கொடுத்தான். 

     அதற்கே வீட்டில் உள்ளவர்களும் ஊரில் உள்ளவர்களும் அவனை மெச்சிக் கொண்டிருந்த வேளையில், அன்று அவனது அடுத்த கட்ட நடவடிக்கையைப் பற்றித், தன் குடும்பத்தினரிடம் பேச ஆரம்பித்தான்.

     “அப்பா நம்ம தோப்புல இருக்க நல்ல வளர்த்தியான தேக்கு மரங்கள வெட்டி வித்தா எவ்ளோப்பா வரும்?” என்றான் அன்று அவர்கள் வீட்டினர் அனைவரும் இரவு உணவுண்ணும் நேரம்.

     “ஏன் ப்பா என்ன விஷயம்?!” என்று ரத்தினம் கேட்க,

     “நான் நம்ம ஊர்ல ஒரு கம்பெனி ஆரம்பிக்கலாம்னு இருக்கேன் பா.”

     “கம்பெனியா?! கிராமத்துக்குள்ள கம்பெனிங்க வந்தா எப்படிய்யா? என்று ரத்தினம் விருப்பமின்றிக் கேட்க,

     “அப்பா இது உணவு பொருட்கள் தயாரிக்கவும், ஏற்றுமதி செய்யவும் ஆரம்பிக்கிறது ப்பா. நம்ம ஊர்லயும், நம்ம பக்கத்து கிராமங்கள்லயும் இயற்கையா விளையுற விளைச்சலைக் கொண்டு உற்பத்தி செய்யுற நெல்லு, பருப்பு, மிளகாய், தனியா, பயர் வகைங்க, சிறுதானிய வகைங்க, எள்ளு, கடலைன்னு நம்ம கிராமங்கள்ல விளையுறதை நாமே மொத்த விலைக்கு வாங்கி விற்பனைக்கு உகந்ததா தயார் பண்ணி நாமே விலையையும் நிர்ணயிச்சி மத்த ஊர்களுக்கும் நாடுகளுக்கும் ஏற்றுமதி பண்ணலாம்னு ஒரு யோசனை. இந்த ஆச்சி, சக்தி மசாலா, உதயம் இந்த நிறுவனங்க எல்லாம் பண்றாங்க இல்லை, அது போல. ஆனா அதைப் பெரிய அளவுல பண்றதுக்கு கோடிகள்ல செலவாகும். நாம எடுத்தவுடனே அப்படி எல்லாம் செய்ய முடியாது. முதல்ல சின்ன அளவுல ஆரம்பிச்சு, குறைஞ்சது ஆறு மாசமாச்சும் அதை லாபகரமா நடத்தணும். அதுக்கப்புறம் பேங்க் லோன் வாங்கி அதை விரிவு படுத்திக்கலாம். இது மூலமா நம்ம ஊருல இருக்குற நிறைய பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் ப்பா” என்று அவன் விளக்கமாய் சொல்ல, கவி உட்பட, அவன் வீட்டினர் அனைவரும் அவனை அதிசயமாய்ப் பார்த்தனர்.

     “டேய் மவனே மூணே மாசத்துல இவ்ளோ பெரிய பேச்செல்லாம் பேசி எனக்கு அதிர்ச்சி மேல அதிர்ச்சிக் குடுக்காதடா” என்றார் ரத்தினம் சிரித்துக் கொண்டே.

     “என்ன அண்ணே நீ? புள்ளை அம்புட்டு அறிவா பேசுது? நீ இப்படி கேலி பண்ணுற?!” என்று வைரம் வக்காலத்துக்கு வர,

     “அது சரி, ஆனா சின்ன அளவுல ஆரம்பிக்கிறதுக்கு கூட லட்சக்கணக்குல செலவாகுமே? அம்புட்டுக் காணாதே! வளர்த்தியான மரங்களை வெட்டி வித்தாலும், அதிகபட்சம் பதிமூணுல இருந்து பதினஞ்சு லட்சம் தான் வரும். அதெல்லாம்  காணுமா?!” என்றார் ரத்தினம்.

     “இல்லைப்பா பத்தாதுதான். நான் சென்னையில வித்த இடத்துல, இங்க வீடுங்க கட்டிக் கொடுத்தது போக, ஒரு இருபது லட்சம் இருக்கு. கார்த்திக்கும் அவன் பங்கா கொஞ்சம் போடுறேன்னு சொல்லி இருக்கான். கம்பெனிக்கு நிலம் புதுசா வாங்கப் போறதில்லையே நம்ம நிலத்துலயே நாலு கிரவுண்டு எடுத்துக்குவோம்” என,

     “ஓ! அப்படின்னா நான் அதுக்கு ஏற்பாடு பண்றேன். ஆனா நீதான் இன்னும் இந்த பட்டணத்து வேலைய வேற பார்த்துக்கிட்டு இருக்கியே? இதுல இங்க வேற எப்படி?!” என்று அவர் கேள்வி எழுப்ப,

     “இங்க ஊர்லயே இருந்து பண்ணுற மாதிரி கேட்டுப் பார்க்கணும், இப்போ வெளிநாட்டுல இருந்து செய்ய வேண்டிய வேலைய சென்னையில இருந்து செய்யலையா? எல்லாம் ஆன்லைன்ல செய்யுற வேலைதானே, செய்துக் கொடுத்துடலாம். காலையில இந்த வேலைகளைப் பார்த்துட்டு ராத்திரி ஆபீஸ் வொர்க் பார்க்க வேண்டியதுதான்.” என்றான்.

     “ஐயோ அது எப்படிப்பா ரோமப் கஷ்டமா இருக்குமே? உடம்புப் போயிடும் பா” என்று வீர பாண்டி இடையிட,

     “வேற வழியில்லை மாமா, காண்ட்ராக்ட் முடியுற வரைக்கும் செய்து கொடுத்துதான் ஆகணும். இன்னும் ஒரு வருஷம்தானே அப்புறம் வேலையை விட்டுட்டு இங்கயே இருந்துடுவேன்” என்றபடியே கவியைப் பார்க்க, அவள் அமைதியாய் எந்தப் பிரதிபலிப்பும் இல்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

     ‘ப்ச் ரொம்பத்தான் பண்ணுறா இவ!’ என்று அப்போதும் மனைவியை சலித்துக் கொண்டவன்,

     ‘இன்னிக்கு இந்த நிராகரிப்புக்கு எல்லாம் ஒரு முடிவு கட்டுறேன்டி’ என்று எப்போதும் போல் நினைத்துக் கொண்டான். ஆனால் முடிவுதான் கட்டமுடியவில்லை அவள் முறைத்து கொண்டே இருந்ததால்.

                                         *****

     அன்று இரவு, தங்கள் அறையில் பிள்ளையைத் தட்டிக் கொடுத்தபடி படுத்திருந்தவளின் அருகே சென்று அவன் படுக்க, அவள் சட்டெனப் பிள்ளையைத் தூக்கி அந்தப் புறம் இடம்மாற்றி அவனுக்கு முதுகு காட்டிப் படுத்தாள்.

     பல நாட்களாய், ஏன் பல மாதங்களாய் பொறுமையைக் கட்டிக் காப்பாற்றி வந்தவனுக்கு, இன்று அவன் ஊரிலேயே இருந்து விடுகிறேன் என்று சொன்ன பிறகும் அவளின் இந்தப் பாராமுகம் மிகுந்த வேதனையோடு, பெரும் கோபத்தையும் ஏற்படுத்தியது.

     எழுந்து மீண்டும் இப்புறம் வந்து அவள் முகம் பார்த்தபடி அவன் படுக்க,

     ‘இத்தனை நாள் திரும்பிப் படுத்துகிட்டா பேசாமதான தூங்கும் இப்போ மட்டும் என்ன?!’ என்று அவனை முறைத்துப் பார்த்தவள், மறுபடியும் பிள்ளையைத் தூக்க முயல அவள் கையை இறுக்கமாய்ப் பற்றியவன்,

     “அதான் ஊரோடவே இருக்கிறேன்னு சொல்லிட்டேன்ல, அதுக்கப்புறமும் இப்படி மூஞ்சியை தூக்கி வச்சிருந்தா என்ன அர்த்தம்?!” என்றான் சீற்றமாய்.

     அவள் மௌனமாகவே இருக்க, “கடுப்பா இருக்குடி! இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படியே இருக்கிறதா உத்தேசம்?!” என்றான் மீண்டும்.

     “ம்?!” என்று அவள் ஏதோ சொல்ல வரும் முன்,

     “போதும் கேட்டுக் கேட்டு காது புளிச்சுப் போச்சு!” என்று எரிச்சலாய்ச் மொழிந்தவன்,

     “நீ சொல்ற மாதிரி எல்லாம் இந்த ஜென்மத்துல நடக்காது. காலம் முழுக்க மன்னிக்க முடியாத அளவுக்கு நான் அப்படி ஒண்ணும் எவளையோ” என்று கோபமாய் வார்த்தைகளை விட எத்தனித்தவன், சட்டென்று சுதாரித்து,

     “என்னை எடாகுடமா பேச வைக்கிறதே நீதான்டி! அன்னிக்கே கார்த்திக்கிட்ட நீ பேசினதுக்கு பதிலா என்கிட்ட பேசி அந்தக் கல்யாணத்தை நிறுத்தச் சொல்லி இருந்தா நமக்குள்ள இப்படி ஒரு பிரச்சனையே வந்திருக்காது. பெரிய இவ மாதிரி அவன்கிட்ட போய் சொல்லுவாளாம், உடனே  எல்லாருமா சேர்ந்து நான் உன்னை விரும்பறேனா இல்லையான்னு டெஸ்ட் வைக்க கல்யாண ட்ராமா போடுவீங்களாம். அது தெரியாம நானும் பையித்தியம் பிடிக்காத குறையா சுத்திக்கிட்டு, குடிச்சி அடிபட்டு எழுந்து வந்து உன்னை விட்டுக் கொடுக்க முடியாம அவனை அடிச்சு தள்ளிட்டு தாலி கட்டுவேணாம். எல்லாம் என்னை சொல்லணும்! அன்னிக்கு மட்டும் நான் உன் கழுத்துல தாலி கட்டாம இருந்திருக்கணும்டி. அப்போ தெரிஞ்சிருக்கும் உனக்கு!” என்று அவனுமே இப்போது அவர்கள் செய்த தவறையும் சேர்த்து சுட்டிக் காட்டிச் சொல்ல, 

     “வேற எவனும் என் கழுத்துல தாலி கட்டி இருக்க முடியாது” என்றாள் அவளும் அழுத்தமாகவே.

     “ஹான்! டயலாக்கெல்லாம் நல்லாதான் இருக்கு! இதெல்லாம் மட்டும் நல்ல வியாக்கியானமா பேசு! தாலி மட்டும் கட்டிக்குவ, ஆனா பேசமாட்டா, சிரிக்க மாட்ட, என்னைப் பார்த்தா மட்டும் அப்படியே மூஞ்சியை கடுவன் பூனை மாதிரி வச்சுக்குவ! நான் இருக்குற இடத்துல இருந்து அஞ்சு அடி தள்ளிதான் இருப்ப” என்று அவனுமே காண்டாகி பேச,

     அவன் குற்றச் சாட்டில் வெகுண்டவள், “யாரு, நான், நான் பேசலை! கல்யாணம் ஆகி ஒரு மாசம் கழிச்சு வந்ததுக்கு அப்புறம் கூட, நான் உனக்காக எல்லாம் பார்த்து பார்த்துதான செஞ்சேன். நீதான தாம்தூம்னு குதிச்ச?!” என்றாள் அவன் சீண்டி விட்டதில் பழையக் கவியாக மாறி.

     “என்ன என்னடி பண்னேன்? நீ என் மேல உசிர வச்சிருக்கேன், மசிர வச்சிருக்கேன்னு சொல்லிட்டு எவனையோ கட்டிக்க சம்மதிச்சா காண்டாகாம, எங்கிருந்தாலும் வாழ்கன்னு பாட்டுபாடவா?! நான் அவ்ளோ எல்லாம் நல்லவன் இல்லை” என்றான் நக்கலாக. 

     “நான் ஒண்ணும் உன்னை பாட்டு பாட சொல்லலை?! ஆனா அவங்களையும் என்னையும் உன்னால எப்படிச் சேர்த்து வச்சுப் பேச முடிஞ்சுது?! பேசினதையே என்னால தாங்க முடியாம திணறிக் கெடந்தப்போ, அவரை நான் நினைக்கக் கூடாதுன்னு சொல்லிட்டு நீ செஞ்ச பாரு ஒரு காரியம். அப்படியே உன்னைக் கொன்னுப் போட்டுட்டு நானும் செத்துடலாம்கிற அளவுக்கு வெறி வந்தது தெரியுமா அன்னிக்கு!” என்று அவள் அன்றைய நாளை எண்ணி ஒரு வேகத்தில் இன்று தன் எதிரே இருப்பவனைக் கொன்றுவிடுவது போல் கைகளை எடுத்துச் செல்ல,  சட்டென அவள் கைகளைப் பற்றித் தன் கழுத்தில் வைத்தவன்,

     “உன் ஆத்திரம் தீர எவ்ளோ நேரம் வேணா என் கழுத்தை நெறிச்சுக்கோடி. ஆனா உயிரை மட்டும் விட்டு வைடி, அது உனக்காக உன் கூட வாழணும்கிறதுக்காக தான் ஒவ்வொரு நொடியும் காத்துக்கிட்டு இருக்கு” என்றான் காதலும் வேதனையும் போட்டியிட.

                                                          -உள்ளம் ஊஞ்சலாடும்…

    

     

       

Advertisement