Advertisement

 30

     கார்த்திக், தங்கரத்தினம், கவி, வைரம், வீரபாண்டி, மருது, கற்பகம் என்று அனைவரும், தத்தம் நிலங்களில் மூழ்கிப் போயிருந்த பயிர்களை எடுத்து வந்து குவித்துக் கொண்டிருக்க, சில மணி நேரத்திற்கு முன்பு அங்கு நீரில் பயிருடன் அமர்ந்து அழுது கொண்டிருந்த மனைவியைத் திட்டி இழுத்துச் சென்றதை எல்லாம் மறந்து, தானே இப்போது அவர்களின் உழைப்பையும், அவர்களின் இழப்பையும் உணர்ந்தவனாய் தேங்கிக் கிடந்த கலங்கிய நீரில் அமர்ந்திருந்தான் உள்ளம் தெளிவு பெற்று.

     ஆனால் அவன் அங்கு இருப்பதைக் கூட கவனிக்கத் தோன்றாமல், அனைவருமே தத்தம் கவலைகளில் மூழ்கியபடி வேலையில் ஈடுபட்டிருக்க, அங்கு அவர்கள் காட்டை ஒட்டி இருந்த சாலையில் ஒரு வேன் வந்து நின்றது.

     ‘யாரு இங்க வேனைக் கொண்டு வந்து நிறுத்தறாங்க?!’ என்று அனைவரும் பார்க்க, கண்ணனும் அதிலிருந்து இறங்கியவர்களை திரும்பிப் பார்த்தான்.

     அது ஒரு பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தின் வாகனம் என்றும் அதில் இருந்தவர்கள் பேட்டி எடுக்க வந்திருக்கிறார்கள் என்றும் அவனுக்குப் புரிந்து போனது.

     அங்கு இருந்த மற்றவர்களுக்கும் அவர்கள் செய்தி நிறுவனத்தினர் என்று புரிய, தங்கரத்தினம்,

     “இவங்களுக்கு நம்ம வேதனையும் ஒரு செய்தியா மாறிடுது”  என்று புலம்பியபடி வேலையைத் தொடர்ந்தார்.

     அவர்கள் நேரம், காட்டின் ஆரம்பத்தில் அம்ர்ந்திருந்த கண்ணனின் அருகே வந்து நின்று,

     “இது உங்க நிலமா? இப்படி பயிரெல்லாம் பாழாப் போயிருக்கே?! இதுக்கு நீங்க அரசாங்கத்துக்கு கிட்ட ஏதாவது கோரிக்கை வைக்க விரும்பறீங்களா?!” என்றார் அந்தச் செய்தியாளர்.

      கண்ணன் பொறுமையாய், “என்ன கோரிக்கை வைக்கணும்னு நினைக்கறீங்க? அதையும்  நீங்களே சொல்லிடுங்களேன்” என்றான்.

     “என்ன சார் இப்படிக் கேட்குறீங்க?! நீங்கதானே உழைச்சீங்க? நீங்கதானே இழப்பையும் சந்திச்சிருக்கீங்க, அப்போ உங்களுக்கு தானே அதோட வலியும் நஷ்டமும் தெரியும்?” என்றார் அந்த செய்தித் தொகுப்பாளர்.

      ஒரு நொடி அவரை நேருக்கு நேர் ஆராய்ந்து பார்த்தவன், “அப்போ உங்களுக்கு எந்த வலியும் நஷ்டமும் இல்லை. அப்படித்தானே?!” என, அந்தச் செய்தியாளர் என்ன பதில் சொல்வது எனப் புரியாமல் அமைதி காக்க, 

     “என்ன? அப்படிப் பார்க்குறீங்க?!”

     “ம்! உங்களைச் சொல்லி என்னங்க ஆகப் போகுது?! நானே இதோ, இப்போ சில மணி நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் கூட, என் ஜனங்களோட வலியை, ஏன், என் குடும்பத்தோட வலியைக் கூட புரிஞ்சிக்க முடியாதவனா தான் இருந்தேன்” என்று மெல்லிய பெருமூச்சு விட்டு,

     “நீங்க எதுக்கு வந்தீங்களோ அதை சூட் பண்ணிட்டுப் போங்க. உங்களால செய்ய முடிஞ்சதெல்லாம் என்ன? இங்க மூழ்கிக் கெடக்குற பயிரையும், இடிஞ்சு போன எங்க வீடுகளையும், எங்க அழுகையையும் சூட் பண்ணி சோக கீதத்தோடு, உங்க சானல்ல அதைப் போட்டுப் போட்டுக் காண்பிப்பீங்க? அதைப் பார்த்துட்டு மக்கள் ஐயோ பாவம்னு நினைப்பாங்க, சில பணக்காரங்க அதைப் பார்த்துட்டு அரசுக்கு நன்கொடையும் கொடுப்பாங்க மக்களுக்கு உதவணும்ங்கிறதுக்காக. ஆனா அதெல்லாம் நடந்திடுமா என்ன?! ஒருவேளை அரசாங்கமே சில உதவிகளை செய்ய முன்வந்தாலும், அதை வழங்குற பல அரசு அதிகாரிகள் அதுல வர தொகையில பாதியைப் பங்கு போட்டுக்கிட்டுதான் எங்களுக்குக் குடுப்பாங்களே. அதுக்காக அலைஞ்சு திரியுற செலவு, லஞ்சம் எல்லாம் போக, நாங்க விதைச்சு, உழைச்சு சம்பாதிக்க ஆசைப்பட்டதுல கால்வாசி காசு கூட எங்களுக்குக் கிடைக்காது. அப்படியே அது கிடைச்சாலும், எங்க முதலீடுக்குக் கூட அது காணாது” என்றவன்,

     “போங்க சார். போயி வேற ஏதாவது செய்தி இருந்தா சேகரிக்கப் பாருங்க.” என்று நகர்ந்து செல்ல,

      “சார் அப்போ அரசாங்கம் உங்களுக்கு எதுவுமே செய்யலைன்னு சொல்றீங்களா?!” என்றார் அவர் மீண்டும் அவனை விடாமல் பின்தொடர்ந்து.

     “செய்யலைன்னு நான் சொல்லலை! ஆனா எதுவுமே விவசாயிகளோட உழைப்புக்கும் நஷ்டத்துக்கும் ஈடாகலைன்னு சொல்றேன். எதுவுமே அவங்களுக்கு நியாயமான முறையில முழுமையா வந்தடயலைன்னு சொல்றேன்” என்ற கண்ணன்,

     “இவ்வளவு ஏன்? முதல்ல எங்க உழைப்புக்கும், எங்க பொருளுக்கும் நாங்க நிர்ணயிக்கிற விலையை எங்களுக்குக் கொடுத்துட்டு, மக்களுக்கும் அது நியாயமான விலையில சென்றடையிற மாதிரி ஒரு சின்ன மாற்றம் வந்தாலே போதும்ங்க, நாங்களும் நல்லா இருப்போம், பொது ஜனங்களும் விலைவாசியால பாதிக்கப் படாம இருப்பாங்க” என்றான்.

     “அப்போ உங்களுக்கு நியாமான விலை கிடைக்கிறது இல்லையா?!” என்று அவர் மீண்டும் கேள்வி எழுப்ப,

     “நியாயமான விலையா? ஒரு கிலோ தக்காளிய மூணு ரூபாய்க்கும், ஒரு இளநீரை, பத்து ரூபாய்க்கும் வாங்கி, பொதுமக்கள் கிட்ட கொண்டு சேர்க்கும் போது முப்பது ரூபாயாவும், அறுபது ரூபாயாவும் ஏத்தி விக்கிற அவல நிலை என்னிக்கு மாறுதோ அன்னிக்குதான் விவசாயிங்களும் பயனடைவாங்க பொது மக்களும் பயனடைவாங்க.” என்றான் ஆதங்கமாய்.

     இவன் என்ன பேசுகிறான் இவ்வளவு நேரமாய் அவர்களிடம் என்று அவன் வீட்டினரும், கார்த்திக்கும் சற்று முன்னே வந்து நின்று பார்த்துக் கேட்டுக் கொண்டிருக்க அவன் பேசியதைக் கேட்டு அனைவருக்குமே ஆச்சர்யமாய்ப் போனது.

     ‘என்னடா இது திடீர் ஞானோதயம் என் புள்ளைக்கு?!’ என்று ரத்தினம் மருமகளைப் பார்க்க, அவளுமே அதே எண்ணத்துடன் தான் அவனைப் பார்த்திருந்தாள்.

     “சார் நாங்க இங்க பேட்டி எடுக்க வந்தது, மழையினாலும் புயலினாலும் உருவான பாதிப்பைப் பத்திக் கேட்க. ஆனா நீங்க சொல்றதைப் பார்த்தா, எப்போதுமே விவசாயிகள் நஷ்டத்தை தான் சந்திச்சிக்கிட்டு இருக்காங்கன்னு தோணுது.” என்று அவர் சொல்ல,

     “நிச்சயமா” என்றவன்,

     “சினிமால வர மாதிரி விவசாயம் பார்த்து லட்சக்கணக்குல எல்லாம், எல்லா விவசாயியும் சம்பாதிச்சிடறது இல்லைங்க. ஏக்கர் கணக்குல நிலம் வச்சிருக்கிறவங்களும் தோப்பு வச்சிருக்கவங்களும் வேணா ஓரளவு வசதியா இருக்கலாம், ஆனால் எல்லார் நிலைமையும் அப்படி இல்லை. ஆனாலும் ஏன் இந்த ஜனங்க இன்னும் விவசாயத்தை விட்டுக் கொடுக்காம இருக்காங்க தெரியுமா?!” என்றவன், தனது மனைவியின் புறம் திரும்பி, அவளைக் கையசைத்து,

     “கவி இங்க வா” என அழைக்க, அவள்,

     ‘எதற்கு அழைக்கிறான் இவன்?!’ என்று யோசித்தபடி முன்னே வர,

     “அவ என் மனைவி, இந்த நிலம்தான் அவ உயிர். விவசாயம் தான் அவ மூச்சுக் காத்துன்னே சொல்லலாம்.” என்று சொல்லி முடிப்பதற்குள் கவி அவர்கள் அருகே வந்திருக்க,

     “நீ ஏன் கவிம்மா விவசாயம் பண்ற?” என்றான் அவளிடம்.

     ‘என்னடா கேள்வி இது?!’ என்பது போல் அவள் பார்த்து வைக்க,

     “சொல்லு கவி” என்றான் மீண்டும்.

     “இதென்ன கேள்வி, நீங்க எல்லோரும் ஏன் வேலை செய்யுறீங்க?!” என்றாள் அவள் எதிர் கேள்வியாய்.

     “நாங்க எல்லோரும் பணத்துக்காகதான் வேலை செய்யிறோம்” ஒரு நொடி கூட யோசிக்காமல் பதில் சொன்னவன்,

     “நீயும் பணத்துக்காகவா விவசாயம் பண்ணுற?” என்றான்.

     “ம்! பணத்துக்காகவா?!” என்று வேதனையாய்ச் சிரித்தவள்,

     “விவசாயம் எங்க மூச்சுக் காத்து மாதிரி, அதை நாங்க விட்டுட்டோம்னா எங்க உசிரு மட்டும் இல்லை, இந்த மண்ணுல இருக்க எந்த மனுஷனுமே உயிர் வாழ முடியாது” என்றாள் பொட்டில் அடித்தார் போல்.

     அவள் கூறியதைக் கேட்டு தலை குனிந்த செய்தியாளரைப் பார்த்து,

     “புரிஞ்சுதுங்களா, நீங்களும் நானும் பணத்துக்காக செய்யுற மாதிரி வேலை இல்லை இது?” என்றவன்,

     “இது நம்ம நாட்டோட தலையெழுத்து! இங்க எல்லாத்தையும் விளைவிக்கிறவன் ஏழையாகவே இருக்கணும்னும், ஏசி ரூம்ல உட்கார்ந்த இடத்துல இருந்து அதை வாங்கி வர்த்தகம் பண்ணுறவன் பணக்காரனா செல்வாக்கா வாழணும்கிறதும் எழுதப்படாத விதியா மாறிடுச்சு. ஆனா இனியும் என் கிராம மக்களோட உழைப்பையும் விளைச்சலையும் எவனோ ஒருத்தன் கிட்ட அடகு வைக்க நான் விட மாட்டேன்” என்று நிறுத்த, எல்லோரும் என்னவென்று புரியாமல் அவனை ஆர்வமாய்ப் பார்க்க,

     “என்ன அப்படிப் பார்க்குறீங்க? இதெல்லாம் சாத்தியமாகுறதுக்கு சில காலம் ஆகலாம். அப்போ நீங்களே மறுபடியும் எங்க ஊரைத் தேடி வருவீங்க” என்றுவிட்டு தன் மனைவியை அழைத்துக் கொண்டு தங்கள் நிலம் நோக்கி நடந்தான்.

     “கவிம்மா, எனக்கு இந்த வேலையெல்லாம் கொஞ்ச வருஷமா பழக்கமில்லாம போச்சு. கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கறேன். ஆனா நான் இங்க நிலத்துல மட்டும் இறங்கி வேலை செஞ்சா மறுபடியும் நம்ம ஊர்ஜனங்க நிலைமை மாறாமத்தான் இருக்கும். நாம கொடுக்குற இடத்துல இருக்கோம் கவி. அதனால நாமதான் அதோட பலனை முழுசா அனுபவிக்கணும்” என்று பேசியபடியே அவன் நடக்க, அவள் தன் மாமனைப் புதிதாய்ப் பார்த்திருந்தாள்.

                                         *****

     கண்ணனின் ஆளுமையான திறமையான செயல்பாடுகளை கார்த்திக் தங்களது அலுவகத்தில் பலமுறை பார்த்து வியந்திருந்தாலும், அவனால் இப்படி விவசாயம் சார்ந்த தொழிலிலும் இத்தனைத் திறமையாய் செயல் பட முடியும் என்று அவன் மேற்கொண்ட திட்டங்களிலும் செயலிலும் விளங்க, எல்லோருமே கண்ணனை எண்ணி வெகு ஆச்சர்யமும் பிரமிப்பும் தான் கொண்டனர்.

     அதன் முதல் கட்டமாக, அவன் தனது ஆசைக்காய் சென்னையின் முக்கிய நகரில் வில்லா கட்டுவதற்காய் வாங்கிப் போட்டிருந்த தனது இடத்தை விற்க ஏற்பாடு செய்திருந்தான்.

 

Advertisement