Advertisement

                                                                       3

 

     அத்தை சமைத்த ஆட்டுகாலின் ருசி, நாவைச் சுண்டி இழுக்க நாலாவது ஆப்பத்தை ரசித்து உண்டு கொண்டிருந்தவனின் தட்டில் இருந்து ஒரு ஆட்டுக்காலை நைசாக உருவியவள்,

      “அம்மாட்டா சொல்லாத மாமா!” என்று கண்களால் சைகை செய்ய,

     “அத்தை…” என்று குரல் கொடுத்தான் கண்ணன்.

     “மாமா!” என்று முறைத்தவள் மீண்டும் அவனது தட்டில் இருந்து எடுத்த ஆட்டுக்காலை அவன் தட்டிலேயே போட்டுவிட,

     “அந்த பயம் இருக்கட்டும்!” என்று சிரித்தான்.

     “பே!” என்று முகம் சுருக்கியவள்,

     “இதோ வரேன்டா கண்ணா!” என்றபடியே வைரம்  அடுத்த ஆப்பத்தை எடுத்து வரவும்,

     “ம்மா! எனக்கு ஒண்ணு சூடா!” என்று அவளது தட்டை நீட்டினாள் கவி.

     “டி இருடி ஊத்திட்டுதானே இருக்கேன்! அவன்தான் முதல்ல சாப்புட்டு முடிக்கட்டுமே!” என்று வைரம், அவன் தட்டிலேயே எடுத்து வந்த ஆப்பத்தை வைக்க,

     “ஆமாம்! அது முதல்ல சாப்ட்டு முடிச்சிட்டு எந்த காட்டுல இறங்கி மாடா உழைக்கப் போகுது?! படுத்துத் உறங்கத்தானே போவுது?!” என்று இவள் அவன் ஆட்டுக்கால் கொடுக்கவில்லையே என்ற கடுப்பில் வார்த்தைகளை விட்டுவிட,

     “ச்சே!” என்று பாதிச் சாப்பாட்டில் எழப் போனான் அவன்.

      “ஏன்டி?!” என்று மகளை முறைத்த வைரம்,

      “ராஜா, கண்ணா அவ பேசுறதை எல்லாம் பொருட்டா எடுத்துக்கிட்டு பாதிச் சாப்பாட்டுல எழலாமா?! அப்புறம் நம்ம மண்ணுக்கும் அது கொடுக்குற விளைச்சலுக்கும் என்ன மரியாதை?!” என்று வைரம் அவன் கைபிடித்து அமர வைக்க,

     அவளை அழுத்தமாய் ஒரு முறை முறைத்துவிட்டு அமர்ந்தவனை, இத்தனை நேரம் இருந்த விளையாட்டுத்தனம் போய் அமைதியாய்ப் பார்த்தவள்,

     ‘நான் உன்மேல எம்புட்டு பாசம் வச்சிருந்தாலும், இந்த ஒரு விஷயத்துல மட்டும் எனக்கும் உனக்கும் இருக்க வேறுபாடு இந்த செம்மத்துக்கும் மாறவே மாறாது மாமா!’ என்று எண்ணிக் கொண்டாள் மனதோடு.

     “ஏன் அத்தை இவளை மட்டும் இப்படி வளர்த்த?! எப்பவும் எல்லாத்துலயும் எனக்கு ஏட்டிக்குப் போட்டியாவே செய்யிறா?!” என்று அவன் கேட்க,

     “அதையே நாங்களும் சொல்லலாம்ல?!” என்று அவளிடமிருந்து பதில் வரவும்,

     “போதும் அடங்குடி!!” என்றவன், அவனது தட்டில் இருந்த ஆட்டுக்காலை எடுத்து வைத்து,

     “இந்த ஆட்டுக்காலை திரும்ப எடுத்துகிட்டேன்னு தானே இந்த பேச்சு?!” என்று வைரம் எதிரே போட்டுக் கொடுக்க,

     “டி! அவன் தட்டுல இருந்து எடுத்தியா?!” என்று முறைப்பிற்குத் தாவினார் வைரம்.

     “போட்டுக் கொடுத்துட்டியே மாமா!” என்றவள் அவன் தட்டில் இருந்த அந்த ஆப்பத்தையும் சேர்த்து எடுத்துக் கொண்டு ஓட்டமாய் ஓடிவிட,

     “கூறுகெட்டவ?! இவளுக்கு உன் தட்டுல இருந்து எடுத்துத் திங்கலைன்னா தின்ன மாதிரியே இருக்காது போல! கைல சிக்கட்டும்” என்று வைரம் திட்ட ஆரம்பிக்க,

     “விடு அத்தை. இன்னிக்கு நேத்தா இந்தப் பழக்கம் அவளுக்கு? முதமுதல்ல நீதான அவளுக்கு என் தட்டுல இருந்து சாப்பாடு எடுத்து ஊட்டிப் பழக்கிவிட்ட! வளர்ந்த பிறகு மட்டும் திட்டினா எப்படி?! என் கவிக்கு என்கிட்டே இல்லாத உரிமையா?!” என்றான் அன்பும் அக்கறையாய்.

     “அது சரி! அவ எதுக்க அவளை வையிறது! எழுந்து போன பிறகு அவளுக்கு பரிஞ்சிகிட்டு வரது!” என்று சிரித்தபடியே எழுந்த வைரம்,

    “நீ சாப்பாட்டுல இருந்து எழுந்துடாத கண்ணா இந்நேரம் அடுத்த ஆப்பம் வெந்திருக்கும். இந்தா கொண்டாந்துடறேன்” என்றுவிட்டு அவர் உள்ளே செல்ல, அவன் சிரிப்புடன் அவர்கள் அனைவரின் மேலும் அளவில்லா அன்பைப் பொழியும் அந்த ஜீவனை அன்பாய்ப் பார்த்திருந்தான்.

     அவனுக்கு அம்மாவின் முகம் கூட சரியாய் நினைவில் இல்லை! புகைப்படத்தில் இருக்கும் அம்மாதான் அப்பா அவனுக்கு விவரம் தெரியும் வயதாகும் போது அறிமுகப் படுத்திய அம்மா. ஆனால் அம்மா என்றதும் அவன் நினைவில் வரும் முகம் அவன் அத்தையினுடையதே!

     தாய்ப்பால் மட்டும்தான் அவனுக்கு அவரால் புகட்ட முடியவில்லை! ஏனெனில் அவன் பிறந்து பல வருடம் கழித்தே அவள் பிறந்ததால். இல்லையெனில் அந்தக் குறையையும் வைரம் அவனுக்கு வைத்திருக்க மாட்டார் வைரம். மகளை விட அவன்மேல் தான் உயிரையே வைத்திருந்தார். அவன் வளர்ந்து ஓரளவு விவரம் தெரியும் வரை தங்களுக்குப் பிள்ளை கூட வேண்டாம் என்றுத் தள்ளிப் போட்டுத் அண்ணன் மகனை தன் மகனாய்  பேணிப் பாதுகாத்தார் தாய் இல்லை என்ற எண்ணமே அவனுக்கு வராமல். அவர் மனதிற்கு ஏற்றார் போல் அவரது கணவர் வீரபாண்டியும் நல்ல மாமனாய் அமைந்துவிட கண்ணன் ராஜாவைப் போல் அவர்கள் வீட்டில் வளர்ந்தான் தன் தந்தை இருந்தும், அவரின் அன்பைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்காமல் அத்தை, மாமாவின் பரிபூரண அன்பில் திளைத்தபடி.

     வார்த்தையில் மட்டுமே அவனைப் பொறுத்தவரை அவர் அத்தை. மனதால் அவர் என்றுமே அவனின் தாய்தான். அதே சமயம் அத்தை பெத்த முத்தாய் தன் கைக்குக் கிடைத்த அத்தை மகளையும் அவனால் தங்கையாய் எல்லாம் நினைத்துப் பார்க்க முடியவில்லை! காரணம் சிறுவயது முதலே, அவளை வைரத்திடமும், வீரபாண்டியிடமும் அவன் நெருங்க விடாததே! சிறுவயதில் அவனைப் பொறுத்தவரை, பெற்றுக் கொடுத்ததோடு வைரத்தின் கடமை முடிந்தது. அவளை செல்லம் கொஞ்சி சீராட்டிப் பாராட்டி வளர்த்ததெல்லாம் அவனின் அப்பா தங்கரத்தினம்தான். அதனாலேயே இருவரின் அன்பும், தத்தம் பெற்றவர்களை விட அத்தை மாமன் மீது இடம்மாறி இருந்தது.

     ஆனால் வளர வளர, இருவருமே ஒருவருக்கொருவர் விவரம் புரிந்து தங்களின் போட்டிகளையும், கோபங்களையும் விட்டுக் கொடுத்து விட்டிருந்தாலும், அன்பை மட்டும் இடம் மாற்றிக் கொள்ள முடியவில்லை!

     “கண்ணா!! என்ன அப்படியே பார்த்துகிட்டே உட்கார்ந்து இருக்க?! வெரசா சாப்புட்டு போய் ஓய்வெடுக்கலாம்ல!” என்று வைரம் குரல் கொடுக்கவும்தான் பழைய நினைவுகளில் இருந்து மீண்டான் கண்ணன்.

     “ஆமாமாம்! நல்ல அயித்தை! நல்ல மருமவன்!” என்று சாப்பிட்ட தட்டைக் கழுவி எடுத்துக் கொண்டு உள்ளே வந்தவள்,

     “ம்மா நான் காட்டுக்குக் கிளம்புறேன்! எல்லோருக்கும் கட்டி வச்ச உணவைக் கொண்டா” என்றாள் அதிகாரமாய்.

     “ஏன்டி எருமைமாடு மாதிரி வளர்ந்திருக்கியே! அத்தைக்கு கூட உதவியா இருக்காம எப்போ பாரு காட்டுக்குப் போறேன் களத்துக்குப் போறேன்னு கிளம்பிப் போயி அங்க அந்த கங்கா பிள்ளையோட கும்மாளம் அடிச்சிக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்க?!” என்று இவன் மீண்டும் ஆரம்பிக்க,

    “ஆமாம்! இவுக பாத்தாகளாக்கும்! நானும் அவளும் சேர்ந்து கும்மாளம் அடிக்குறதை! வீணா வாயைக் கிளராத மாமா! ஏதாச்சும் வஞ்சிப்புடுவேன் வஞ்சி!” என்று அவள் சிலிர்த்துக் கொண்டு வர,

     “என்ன என்னடி?!” என்று இவனும் எகிறிக் கொண்டு எழ,

     “ய்யோ! போதும் நிறுத்தறீகளா?!” என்று கத்திய வைரம்,

     “டி! மரியாதையா சோத்து மூட்டையை எடுத்துக்கிட்டுக் காட்டுக்குக் கிளம்புற வழியைப் பாரு!” என்று அவளை மிரட்ட,

     “ம்க்கும்! மருமகப் பிள்ளையை ஒண்ணு சொல்லிடக் கூடாதே! வந்துரும் கோபம் உச்சந்தலைக்கு மேல!” என்று தோள் பட்டையில் இடித்துக் காட்டியவள்,

     “போயிட்டு வரேன்!” என்றாள் இருவருக்கும் பொதுவாய்.

     “ம் ம் கெளம்பு!” என்று வைரம் சொல்ல,

     “போயிட்டு வரேன்னு உனக்கு மட்டும் சொல்லலை!” என்று அடமாய் அவன் பதிலுக்கும் காத்து நின்றவளை முறைத்தவன்,

     “போடி!” என,

     “போடின்னு சொல்லாத மாமா! போயிட்டு வான்னு சொல்லு!” என்றாள் அன்பும் ஏக்கமுமாய்.

      அவள் குரலில் நொடியில் நெகிழ்ந்தவன், “ம் போயிட்டு வா” என்றான் சமாதானமாய்.

     “அதைக் கொஞ்சம் சிரிச்சுட்டே சொன்னாதான் என்னவாம் மாமா?!” என்று சிரிக்காமல் சொன்ன அவனது உதடுகளை அவளே தன் இரு கை ஆட்காட்டி விரல் கொண்டு விரித்து சிரிக்க வைத்துச் சிட்டாய்ப் பறக்க அவன் முகத்தில் இப்போது தானாக புன்னகை மலர்ந்தது.

     “இந்த அன்புக்காகவும், சந்தோஷத்துக்காகவும் தான் அத்தை, எவ்வளவு வேலைப் பளு இருந்தாலும், எத்தனைக் கிலோமீட்டர் தூரமிருந்தாலும் வாராவாரம் இங்க ஓடிவந்துடுறது!” என்று அவன் சிரிக்க,

     “அது சரி!” என்று வாய்விட்டுச் சிரித்தவர்,

     “நீங்களும், உங்க சண்டையும்! உங்க பஞ்சாயத்துக்கு வரவங்கதான் மண்டையைப் பிச்சுக்கிட்டுப் போகணும்!” என்றுவிட்டு வைரமும் நகர்ந்தார்.

     பொழுது சாயும் முன் காட்டில் இருந்து ஆண்கள் இருவரும் மட்டும் வீடு வந்து சேர,

     “என்ன மாமா அவளைக் காணலை?! எங்க ஊர் சுத்தப் போனா அவ?!” என்றான் கண்ணன்.

     “ஏலே! எம் மருமவ உனக்காக ஓடி ஓடி காட்டுல நண்டு புடிச்சிக்கிட்டு கெடக்கா! நீ என்னன்ன, எங்க ஊர் சுத்தப் போனான்னு கேட்குற?!” என்று பரிந்து கொண்டு வந்தார் மருமகளுக்காக.

     “எதுக்கு கடையில போய் வாங்கிக்கிட்டா போகுது?! எதுக்கு அவ ஓடி ஓடி போயி நண்டு புடிக்கணும்?!” என்றான் அவனும் ஏட்டிக்குப் போட்டியாய்.

     “அதெல்லாம் பாசம்ல! உனக்குப் புரியாது!” என்ற ரத்தினம்,

     “எம்மா வைரம், ஒரு மடக்கு கருப்பட்டிக் காப்பி போட்டுக் கொண்டா! என்னமோ இன்னைக்கெல்லாம் தலை சுருக்கு சுருக்குங்குது!” என்றதும்,

     “என்ன அண்ணே?! என்ன ஆச்சு திடீர்னு?! காய்ச்சல் ஏதும் அடிக்குதா என்ன?! உடம்புக்கு முடியலைன்னா அப்போவே பொறப்பட்டு வர வேண்டியதுதானே?!” என்றார் வைரம் அண்ணன் அருகே வந்து அவர் நெற்றியில் கை வைத்துத் தொட்டுப் பார்த்து.

     “அடக் காய்ச்சல் எல்லாம் ஏதும் இல்லைம்மா! வயசாகுதுல்ல! ஒண்ணு ரெண்டு வலி வரத்தான் செய்யும்!” என்று அவர் சாதரணமாய்ச் சொல்ல,

     “வயசாகுதுன்னு தெரியுதுல்ல! புள்ளை சம்பாதிச்சு அனுப்புற காசுல, ஒழுங்கா வீட்ல உட்கார்ந்து சாப்பிடுறதை விட்டுட்டு எதுக்குக் காட்டுல போய் கஷ்டப்படணும்னு கேளு அத்தை!” என்றான் கண்ணன் தந்தையிடம் நேரடியாகக் கேட்காமல்.

     “ஏன்டா! உன்னை மாதிரி நானும் இந்த மண்ணை விட்டுக் கொடுத்துட்டு வெள்ளைக்காரன் கொடுக்குற காசுல சொகுசா வாழவா?!” என்று ரத்தினம் ஆரம்பிக்க,

     “அய்யா சாமிங்களா வந்ததும் வராததுமா உங்க பஞ்சாயத்தை ஆரம்பிச்சுடாதீக!” என்று இருவரின் பேச்சுக்கும் முற்றுப்புள்ளி வைத்த வைரம்,

     “எய்யா கண்ணா நீ எழுந்து போயி பின்னாடி தோட்டத்துல மேஞ்சிக்கிட்டு இருக்க ஆடுங்களை எல்லாம் தொட்டில அடைச்சிட்டு வா!” என்று குரல் கொடுத்தபடியே அண்ணனுக்காய் மட்டும் அல்லாது கருப்பட்டிக் காப்பியை அனைவருக்குமாய் சேர்த்து அடுப்பில் வைத்தார்.

     “விடுங்க மாமா! அவன் நம்ம கூட இருக்குறதே  வாரத்துல ரெண்டு நாள்! உங்க மேல இருக்க பாசத்துலதான அப்படிப் பேசுறான்! அதைப் புரிஞ்சிக்காம நீங்களும் வாதாடிகிட்டு!” என்று ரத்தினத்தைச் சமாதானப் படுத்தி விட்டார் வீரபாண்டியும்.

     ஒரு வழியாய் அனைவரும் சமாதானம் ஆகி காபியை அருந்தும் சமயம்,

     “எம்மா… இன்னிக்கு செமத்தியான நண்டு வேட்டை!” என்று தெருவாசலில் இருந்தே கத்தியபடி வீட்டினுள் நுழைந்தாள் கவி.

     “டீ… எதுக்குடி இப்படிக் கத்துற?! நீ நண்டு புடிச்சிட்டு வந்தது தெருவுக்கே தெரியணுமாக்கும்?!” என்று அதட்டினார் வைரம்.

     நண்டைக் ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்து விட்டு வந்தவள்,

     “மாமா என்ன இது கருப்பட்டிக் காபியா?! என்னைய உட்டுட்டு நீ மட்டும் குடிக்கிற?!” என்று ரத்தினத்தின் கையில் இருந்தக் காபியை அவள் பிடுங்கிக் கொண்டு அமர,

     “அடியே அவரே தலைவலிக்குதுன்னு சொல்லி அதிசயமா காபி கேட்டாரு! அதையும் பிடுங்கிக் குடிக்குற?!” என்று வைரம் வைய,

     “அய்யோ! என்ன ஆச்சு மாமா?! ஏன் தலைய வலிக்குது?! என்று பதறிப் போய் மாமனைத் தொட்டுப் பார்த்தவள்,

     “எம்மா உடம்பும் லேசா சுடுறாப்புல இருக்கு பாரு!” என்று கூச்சலிட,

     “ஐயோ அதெல்லாம் இல்ல டா கன்னுக்குட்டி, வெக்கையில அப்படித் தெரியுது!” என்று அவர் சமாளிக்க,

     “உடம்புக்கு முடியிலைன்னா நீ ஏன் இவ்ளோ நேரம் அங்க இருந்த?! உடனே கெளம்பி வீட்டு வர வேண்டியதுதானே!” என்று மாமனை வைதவள்,

     “இந்தா நீ காபியைக் குடி. நான் போய் நண்டை உடைச்சு சுத்தம் பண்ணி, நல்ல காரா சாரமா மிளகு போட்டு சமைச்சுக் கொண்டாருறேன். சீதலம் இருந்தா சட்டுன்னு எடுத்துரும்!” என்று ஓட்டமாய் ஓடியவளைப் பார்த்து நெஞ்சம் பூரித்துப் போனார் தங்கரத்தினம்.

     “எந்த ஜென்மத்துல பண்ணப் புண்ணியமோ, இது மாதிரி ஒரு தங்கச்சியையும், மருமவளையும் அந்தச் சாமிக் கொடுத்திருக்கு!” என்று சொல்லிக் கொண்டார் நெகிழ்வாக.

     “ஏன் மாமா, அப்போ நானும் நம்ம கண்ணனும் கிடைச்சதுல உங்களுக்கு சந்தோஷமில்லையா?!” என்று வீரபாண்டி கேட்க,

      “இருக்காதா பின்ன?!” என்றவர், லேசாய்ப் பெருமூச்சு விட்டு,

     “உங்களை மாதிரி மச்சான் கிடைக்கலைன்னா நானும் என் புள்ளையும் என்ன கதி ஆகி இருப்போமோ?!” என்றார் மனைவி அவரை விட்டுப் போன நொடி முதல் ஆலமரமாய்த் தாங்கிய தங்கையின் கணவரைத் தோளோடு அணைத்துத் தட்டிக் கொடுத்து.

     “அட போங்க மாமா, நீங்க இல்லாட்டி நாங்க மட்டும் என்ன வாழ்ந்திருப்போம்?!” என்றார் வீரபாண்டியும், தன் இளவயதில், சிறு குடிசை வீட்டைத் தவிர தாய், தந்தை என்று எல்லாவற்றையும் இழந்து கூலி வேலை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த தனக்குப் பெண்ணைக் கொடுத்ததோடு அல்லாமல், ரத்தினம், தனது சொத்துக்களில் பாதியையும் அவருக்கு எழுதிக் கொடுத்து, விவசாயத்தில் இன்று நல்ல நிலையை அடைய உறுதுணையாய் இருந்ததை மனதில் நன்றி கூர்ந்து.

                         *****

     “இங்கதான் ஆடுகளை அடைச்சிக்கிட்டு இருக்கியா மாமோய்!?!” என்றவாறே, ஒரு நண்டைக் கையில் எடுத்துக் கொண்டு அவன் பின்னே சென்றவள்,

     “மாமா…” என்று ஆசையாய் அவனை அழைக்க,

     “என்னடி?!” என்றான் ஆடுகள் அனைத்தும் உள்ளே சென்றதை உறுதி செய்து கொண்டு தொட்டியை அடைத்தவாறே.

     “ஒண்ணுமில்லை மாமா. இங்க பாரேன்” என்று அவள் நண்டை எடுத்து அவன் முகத்துக்கு நேரே ஆட்டிக் காண்பிக்க,

      “சீ! தூர எடுத்துப் போடி” என்று அவன் விலக,

     “அட! ஆக்கி வச்சா மட்டும் மூக்குப் புடிக்க திண்பியாம்! இப்போ என்ன சீ!” என்றவள், அவன் எதிர்பாரா வண்ணம் அவனது டி சர்ட்டை இழுத்து நண்டை உள்ளே போட்டுவிட்டு ஓடப் பார்க்க,

    “ஏய்!” என்று கத்தியவன் நண்டை நொடியில் உதறிவிட்டு எட்டி அவள் கைபிடித்து நிறுத்தினான் உடும்புப் பிடியாய்.

     “ஹா! வலிக்குது விடு விடு மாமா!” என்று அவள் கத்தக் கத்த, உதறியதில் கீழே விழுந்த கிடந்த நண்டை எடுத்து அவள் முதுகில் வைத்தவன், அவள் அதைத் தட்டிவிட முடியா வண்ணம் அவளின் இரு கைகளையும் பற்றிக் கொள்ள, அது அவள் முதுகில் ஊற ஊற அதன் குறுகுறுப்பில்,

      “ஹா! ஹா! எடு எடுத்து விடு மாமா!” என்று அவள் கத்தக் கத்த, நமுட்டுச் சிரிப்புச் சிரித்தபடி அவள் குறுகுறுப்பில் நெளிவதை ரசித்திருக்க,

     “இப்போ நீ எடுக்கலை! அப்புறம் ஏடாகுடமா ஏதாச்சும் செஞ்சிப்புடுவேன் மாமா!” என்று அவள் நெளிந்தபடியே மிரட்ட,

     “என்னடி செய்வ?!” என்றான் அவனும் மிரட்டலாகவே.

     “வேணாம்! வேணாம் மாமா!” என்று அவள் சொல்லச் சொல்ல,

     “என்ன என்னடி வேணாம்! என் சட்டைக் குள்ள போடும் போது மட்டும் சுகமா இருந்துதோ!” என்றான் இப்போதும் அவன் பிடியை விடாமல்.

     “ஹ ஹா!!” என்று குறுகுறுப்பில் சிரித்தபடி கத்தியவள், அவன் கொஞ்சமும் எதிர்பாரா வண்ணம், சட்டென அவன் மார்போடு துவள, அவன் விதிர்விதிர்த்துப் போய் பட்டென அவள் கைகளை விடுவிக்க, நொடியில் நண்டைத் தட்டிவிட்டவள்,

     “எப்புடி?!” என்றுவிட்டுக் காற்றாய்ப் பறக்க, அவன் இதுநாள்வரை இல்லாத அவளது புதுத் தீண்டலின் ஸ்பரிசத்தில் ஸ்தம்பித்து நின்றான்…    

                               -ஊஞ்சல் ஆடும்…

           

     

 

   

    

      

    

     

Advertisement