Advertisement

                                                  29

     சமயலறையில் ஏற்றி வைத்திருந்த சிம்னி விளக்கை எடுத்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாய்  சென்று கொண்டிருந்தவளின் கால்கள், சாலையில் தேங்கிக் கிடந்த நீரைக் கடந்து நடந்த படியால் சலக் சலக் என்று பெரும் சப்தம் எழும்பியது.

     அந்த நிசப்தமான வேளையில் அந்தச் சிறு சப்தமே பெரிதாய் ஓசை எழுப்ப, மழைக்காய் வீட்டோரத் திண்ணைகளில் ஒதுங்கிக் கிடந்த தெரு நாய்கள் அனைத்தும் ஒன்றாய் சேர்ந்துக் கத்தத் துவங்கியது பெருங்குரலெடுத்து.

     சில்வண்டுகளின் ரீங்காரங்களும், தவளையின் கூக்குரலும், நாய்களின் ஓலமும் ஏதோ ஒருவித பயத்தை மனதில் தருவித்தாலும், அதை எல்லாம்  பொருட்படுத்தாமல் அவளது கால்கள் வெகு வேகமாய் அவர்கள் காட்டை நோக்கியே நடை போட்டுக் கொண்டிருந்தன.

     இந்நிலையில் வழியில் ஒரு வீடு இடிந்து போய் இருப்பதையும், அவ்வீட்டினர் வெளியே தங்கள் பொருட்களை எல்லாம் சேகரித்து மூட்டை கட்டுவதையும் பார்த்தவள் பதறிப் போய் அவர்கள் அருகே ஓடினாள்.

     “ஐயோ கண்ணம்மா அக்கா? வீடு இப்படி சரிஞ்சு போய் கெடக்கே? புள்ளைங்க புள்ளைங்க எங்க? பெரியவர் எங்க? யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லையே?!” என்றாள் பதட்டமாய்.

      “இல்லை கவி, நல்லவேளையா பெருமழை ஆரம்பிச்சதுமே புள்ளைங்களையும் மாமனாரையும் கோவில் மண்டபத்துல கொண்டு போய் விட்டுட்டு வந்துட்டோம். நாங்களும் தூங்காம கண்ணு முழிச்சேதான் கெடந்தோம், சடுதியில இப்படிச் சரிஞ்சிடுமா?! அவருக்குதான் லேசாய் அடி பட்டுருச்சு!” என்று அப்பெண்மணி கண்ணீருடன் சொல்ல,

     “சரி நீங்க வாங்க. நம்ம வீட்டுக்குப் போவோம்” என்று அவளும் உடன் சேர்ந்து அவர்கள் பொருட்களை எடுக்க,

      “இல்லை இல்லை கவி, நீ சொன்னதே போதும்மா. ஊர்ல இந்நேரம் எத்தனை பேரு வீடு இந்த நிலைமையில கெடக்கோ! அத்தனை பேருக்கும் அங்க அடைக்கலம் கொடுக்க முடியுமா?! நாங்க கோயில் மண்டபத்துல போய் இருக்குறோம் மா. நம்ம ஊரு பூசாரி ஒண்ணும் சொல்ல மாட்டாரு.” என்றார் கண்ணம்மா.

     “ம் எத்தனை பேருன்னு கோவில்ல தங்குவீங்க அக்கா?! அங்க சோறு கஞ்சி எல்லாம் பொங்க முடியுமா? சொன்னதைக் கேளுங்க. முதல்ல புள்ளைங்களையும், பெரியவரையும் கூட்டிட்டு வீட்டுக்கு வாங்க” என்றவள், கையோடு மூட்டையைத் தூக்கிக் கொள்ள,

     “ஐயோ சொன்னாக் கேளு கவி. ஒருத்தருக்கு ஒத்தாசை பண்ணா, இன்னொருத்தருக்கு மனக்கஷ்டம் வரும். யாருக்கும் சங்கடம் வேணாம் தாயி” என்றவர்,

     “வேணும்னா பொழுது விடிஞ்சதும் கஞ்சி காய்ச்சக் கொஞ்சம் காஞ்ச விறகு மட்டும் கொண்டாந்து தாம்மா. இங்க எல்லாமே நனைஞ்சு போச்சு” என்றார்.

     அப்போதும், அவர்களை அப்படியே விட்டுவிட்டுச் செல்ல மனமில்லாமல் அவள் தயங்கியே நிற்க,

     “சொன்னக் கேளு கவி. நாங்க சமாளிச்சுக்குவோம்” என்றவருக்கு, அப்போதுதான் அவள் ஏன் இந்நேரம் இங்கு வந்தாள் என்ற எண்ணம் எழ,

      “அது சரி, நீ ஏன் பச்சபுள்ளையா தனியா வீட்ல விட்டுட்டு இந்நேரத்துல வெளிய வந்த?!” என்றார் கேள்வியாய்.

     “அ அது வந்துக்கா ஒரு எட்டு, காடு வரைக்கும் போய் பார்த்துட்டு வரலாம்னு” என்று அவள் சொல்ல,

     “ஆமாம், காடெல்லாம் என்ன கதியா கெடக்கோ?! அடிச்ச காத்துக்கும் மழைக்கும் பெரிய பெரிய மரங்களே அங்கங்க விழுற சத்தம் கேட்டுது. கூலி வேலை செய்யுறவங்களுக்கு வீட்டுக்கு பங்கம் வந்தா, நெலம் வச்சிருக்கவங்களுக்கு காட்டுக்கே மோசம் வந்துடுது!” என்று அவர் எதேச்சையாய் சொன்னாலும், அவ்வார்த்தைகள் அவளை மேலும் கலக்கமுறச் செய்ய,

     கவி மேலும் கவலையுற்றவளாய், “சரி நீங்க போய் மண்டபத்துல இருங்க, நான் ஒரு எட்டு காடு வரைக்கும் போய்ப் பார்த்துட்டுக் காலையில எல்லாம் கொண்டாந்து குடுக்கறேன்” என்றுவிட்டு மீண்டும் ஓட்டம் பிடித்தாள்.

                                          ****

     இதற்குள், வீட்டில் நன்றாய் உறங்கிக் கொண்டிருந்த கவிதாசன் கண்விழித்ததுமே பசியில் பெருங்குரலெடுத்து அழத் துவங்க, கண்ணன் அவன் அழுகுரல் கேட்டு, சட்டென எழுந்தான்.

     அருகே கவியைக் காணாது, “பாத்ரூம் போயிருக்காளோ?” என்று எண்ணியபடி, பிள்ளையைத் தட்டிக் கொடுத்து,

     “ஒண்ணும் இல்ல, ஒண்ணும் இல்லடா செல்லம். பசி வந்துடுச்சா உனக்கு? இரு அம்மாவைப் போய் கூட்டிட்டு வரலாம்” என்றபடியே மகனைத் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்து சமாதானப் படுத்தியபடியே வெளியே வந்தவன்,  பின்கட்டிற்குச் சென்று கொல்லைப் புறத்தை எட்டிப் பார்க்க, அவள் அங்கு இருப்பதாய்த் தெரியவில்லை.

     ‘எங்க போயிருப்பா இந்நேரத்துக்கு?!’ என்று எண்ணியபடியே அவன்,

     “கவி, கவி” என்று குரல் கொடுத்து பார்க்க,

     பிள்ளையின் அழுகுரலிலும், கண்ணனின் அழைப்பிலும் கண்விழித்த வைரம்,

     “என்ன, எங்க போனா அவ இந்நேரத்துக்கு? ஏன் பிள்ளை இப்படி அழறான்?” என்றபடியே எழுந்து வந்தார்.

     “தெரியலையே அத்தை” என்றவனுக்கு சட்டென அவள் எங்கே போயிருப்பாள் என்று பிடிபட்டுவிட,

     “கடவுளே இவ இருக்காளே?!” என்று பதட்டத்துடன் வாய்விட்டுப் புலம்பி,

     “அத்தை இவனைப் பிடி.” என்று பிள்ளையை அவர் கையில் கொடுத்துவிட்டு, அவன் வேகமாய் வெளியேற, அவருக்கு புரிந்து போனது மகள் எங்கே சென்று இருப்பாள் என்று.

      “இந்தப் பொண்ண என்னதான் செய்யிறதோ?! இப்படி காடு காடுன்னு பழியா கெடக்குறாளே, அந்தக் காடு என்ன நிலையில இருக்கோ?! அதைப் பார்த்தா என்ன கதி ஆகப் போறாளோ?!” என்று வைரத்திற்கும் கவலைத் தொற்றிக் கொண்டது.

                                          *****

     அங்கு வேக எட்டில் நிமிடங்களில் காட்டை நெருங்கி இருந்தவளுக்கு, தூரத்தில் இருந்து பார்ப்பதற்கே நெஞ்சை அடைத்துக் கொண்டு உடல் வெலவெலத்து வந்தது அதன் கதியைப் பார்த்த மட்டில்.

     “ஐயோ கடவுளே?!” என்று  ஓட்டமாய் ஓடியவள், நீரில் மூழ்கிச் சாய்ந்து கிடந்த பயிர்களையும், சற்றுத் தொலைவே தெரிந்த தோப்பில் அடியோடு ஆங்காங்கே சரிந்து கிடந்த தென்னைகளையும் பார்க்கப் பார்க்க சுக்குநூறாய் உடைந்து போனாள்.

    நிலத்தோடு மண்டியிட்டு வீழ்ந்து நீரில் மூழ்கிக் கிடந்தப் பயிரை வாரி அணைத்தவள், ஓவென்றுக் கதறினாள் கட்டுமீறி.

      இதெல்லாம் தவிர்க்க இயலாதது என்று உணர்ந்து கொள்ளும் மனநிலையை அவள் அப்போது கொண்டிருக்கவில்லை! நிலத்தின் மீதும் விவசாயத்தின் மீதும் அவள் வைத்திருந்த அளவு கடந்த பற்றும், பாசமும் அவளது நெஞ்சத்தை வெகுவாய் கலங்கச் செய்திருந்தது.

     சற்று நேரத்தில், அவளைத் தேடிக் கொண்டு அங்கே வந்து சேர்ந்திருந்தவன், அவள் இருந்த நிலையைக் கண்டுத் திகைத்துப் போனான்.

     பிள்ளையைப் பறி கொடுத்த தாயைப் போல் அவள் நீரோடு நிலத்தில் வீழ்ந்து மண்டியிட்டுப் பயிர்களை தன் மகவைப் போல வாரி அணைத்துக் கதறிக் கொண்டிருந்த காட்சி அவனுக்கு ஒருபுறம் சொல்லொணா வேதனையைக் கொடுத்தாலும், இப்படி இருண்ட வேளையில், மரங்கள் அங்கங்கே சரிந்தும், மின்சாரக் கம்பிகள் ஆங்காங்கே அறுந்து கிடப்பதையும் பொருட்படுத்தாமல், பெற்ற பிள்ளையைப் பற்றிக் கூட எண்ணாமல், இங்கு மூழ்கிய பயிரோடு அவளும் மூழ்கி அமர்ந்து தனைமறந்து கதறிக் கொண்டிருப்பதைப் பார்க்கப் பார்க்க, வேதனையை விட கோபம்தான் அதிகமாய் எழுந்தது.

     அதே கோபத்தோடு, அவளை வேகவேகமாய் நெருங்கியவன், அவள் கையைப் பிடித்துத் தூக்கி நிறுத்த,

     “மாமா மாமா?!” என்று கதறலுடன் எல்லாம் மறந்தவளாய் ஆறுதல் தேடும் பிள்ளையாய் அவனைக் கட்டிக் கொண்டவள்,

     “எல்லாம் போச்சு மாமா! எல்லாமே போச்சு” என்று கதறி அழ, அவனுக்கு இன்னுமே கோபம்தான் எழுந்தது.

     “பையித்தியமாடி நீ?!” என்று அவளைத் தன்னிலிருந்து பிரித்தெடுத்து தரதரவென மண்சாலைக்கு இழுத்துச் சென்றவன்,

     “இந்த நேரத்துல இப்படித் தண்ணியில உட்கார்ந்து அழுதுட்டு இருக்கியே, எவ்ளோ பாம்பும் விஷ ஜந்துக்களும் ஊர்ந்து கெடக்கும். ஏதாவது ஒண்ணுகெடக்க ஒண்ணு ஆகியிருந்தா?” என்று அவன் முடிப்பதற்குள்,

     “போறேன் நானும் போய்த் தொலையறேன். நான் மட்டும் இருந்து என்ன புண்ணியம்?!” என்று கேட்ட நொடி அவள் கன்னத்தில் பளீரென்று அறைவிட்டான் அவன்.

     அத்தனை நேரம் தாரை தாரையாய் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தவளுக்கு அவனின் ஒற்றை அடி அவளின் வேதனையை எல்லாம் கோபமாய் மாற்ற,

     “என்ன? என்ன?! நான் இருந்தா உனக்கென்ன செத்தா உனக்கென்ன?!” என்றாள் கோபம் எல்லை மீற.

     “ஏய்?!” என்று அவனுமே குரல் உயர்த்தி அவளை மீண்டும் அடிக்கக் கையோங்க,

     “ம்! நீ நினைச்சா நான் உனக்கு வேணும். நீ வேணான்னா நான் விலகிடனும்?!” என்று ஆதங்கமாய்க் கேட்டவள்,

     “இப்போ, இந்த நிலையில கூட உனக்கு உன் ஆசையும், உன் வாழ்க்கையும் தான் பெருசா தெரியுதுல்ல?! நாங்க உசுரக் குடுத்துப் பாடுபட்ட இந்த நெலமும், நாங்க சாமியா நினைக்கிற இந்த ஊரும் சிதைஞ்சு போய் கெடக்குற கதி உன் கண்ணுக்குத் தெரியலை இல்ல?!” என்றாள் வெறுப்பும் விரக்தியுமாய்.

     “என்னடி சும்மா நெலம் நெலம்ன்னு கிட்டு?! மழையும் புயலும் வந்தா எல்லாம் தான் பாதிக்கும்? என்னமோ உசுரே போன மாதிரி இங்க வந்து ஒப்பாரி வச்சுட்டு இருக்க?!” என்று கத்தினான் அவன் இன்னமுமே அவள் வலி உணராதவனாய்.

     “ஆமாம்! ஆமாம்! என் உசுரே போன மாதிரிதான் வலிக்குது! அன்னிக்கு நீ என்னை வேணான்னு தூக்கி எறிஞ்சிட்டுப் போனதை விட, இன்னிக்கு என் நெலமும், பயிரும் கெடக்குற கதியைப் பார்த்து தான் என் உசுரே போகுது” என்று அவன் சட்டையைப் பிடித்து உலுக்கியவள்,

     “சீ! உன்கிட்ட போயி இதையெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கேன் பாரு?!  உனக்கு என்னிக்கு எங்க உணர்வுகளும், பாசமும் புரிஞ்சிருக்கு? அப்படிப் புரிஞ்சிருந்ததான் நீ என்னிக்கோ எங்க எல்லார் மனசையும் உணர்ந்திருப்பியே?!” என்று விரக்தியாய்ச் சொல்லி அவன் மேல் வெறுப்பை உமிழ்ந்துவிட்டு, அவனை விட்டு விலகி மீண்டும் தங்கள் நிலம் நோக்கி நடக்க, அவனுக்கு அவள் என்ன திட்டினாலும் சரி, இனி ஒருநிமிடம் கூட அவளை அந்த ஆபத்தான சூழ்நிலையில் அங்கே விட்டு வைக்கக் கூடாது என்ற எண்ணமே மேலோங்க, இரண்டே எட்டில் அவளை நெருங்கியவன், அவளைத் தூக்கித் தோளில் போட முயல அவள் திமிறிக் கொண்டு  இறங்க,

     “பையித்திக்காரி மாதிரி பண்ணாதடி?! நீ போய் உட்கார்ந்து அழுதா மட்டும் எல்லாம் சரியாகிடுமா?! குழந்தை அங்க பசியில கத்திட்டு இருக்கான்” என்று சொன்னதும்தான் அவளுக்குப் பிள்ளையின் நினைவே வந்தது.

     “ஐயோ?!” என்றவள் பிள்ளையின் நினைவு வந்ததும், மீண்டும் திரும்பி நீரில் மூழ்கி இருந்த பயிர்களையே கண்ணீருடன் பார்க்க, அவனுக்குமே என்ன செய்வதென்று புரியவில்லை.

     பிள்ளையை விட அதிகமாய் நிலத்தை நேசிப்பவள் என்று தெரிந்தாலும் அவள் இப்படி இங்கு உட்கார்ந்து அழுது புலம்புவதால் ஏதேனும் மாறிவிடப் போகிறதா என்ன என்றுதான் தோன்றியது அவனுக்கு.

     “விடிஞ்சதும் வரலாம் இப்போ வா கவி. குழந்தை பாவம் பசில அழுதுட்டே இருந்தான். தயவு செஞ்சு இப்போ வாடி” என்று அவன் மீண்டும் அவள் கைப்பிடித்து அழைக்க, தங்கள் நிலத்தையே திரும்பித் திரும்பிப் பார்த்தபடி பிள்ளைக்காய் அவன் உடன் நடந்தாள்.

                                            *****

     பொழுது விடிந்தது. ஒருவருக்குமே உறக்கம் இல்லை! விடியாததுமாக கிராமத்து மக்கள் பலரும், பதறித் துடித்தபடி அழுதுபுலம்பிக் கொண்டு  தத்தம் நிலம் நோக்கி ஓடிக் கொண்டிருந்ததைப் பார்க்கப்  பார்க்க கண்ணனுக்கு முதன்முதலாய் மனதில் பெரும் பாரம் அழுந்தியதைப் போன்றொரு உணர்வு.

     அவர்கள் வீட்டினரும் கூட தங்கள் நிலத்திற்கும் தோப்பிற்கும் தான் சென்றிருந்தனர் பிள்ளை, பாட்டி, கண்ணன் மூவரையும் தவிர.

     இவனோ, மாறி மாறிப் புலம்பியபடியே சென்ற மனைவியையும் அத்தையையும் கூட தேற்ற வழி தெரியாமல் அமர்ந்திருந்தான் பிள்ளையுடன்.

     மனம் நோக செய்வதறியாமல் எதையோ சிந்தித்தபடி அமர்ந்திருந்தவன், கார்த்திக்கும் கங்காவும் கூட தங்கள் வயலுக்குக் கிளம்பிக் கொண்டிருப்பதைக் கண்டு,

     “டேய் கங்காவை ஏன்டா கூட்டிட்டுப் போற? அங்க ரொம்ப சேரும் சகதியுமா இருக்கு.” என்றான் எழுந்து அவர்களை நெருங்கி.

     “எங்கடா, அவங்க அம்மா கிளம்புற வரைக்கும் அவங்க விடமாட்டாங்கன்னு பொறுமையா இருந்தா. அவங்க அப்படிக் காட்டுக்குக் கிளம்பினதும் இவளும் கிளம்புறா. சொன்னாக் கேட்கவே மாட்டேங்குறா?!” என்றான் கார்த்திக்கும் கவலையோடே.

     “என்னம்மா நீ? இவ்ளோ சின்னப் பிள்ளையைத் தூக்கிட்டு அங்க போகணும்ங்கிற?! நீங்க எல்லாரும் அங்க போயி பார்க்குறதுனால மட்டும் ஏதாவது மாறிடப் போகுதா என்ன?! முதல்ல இதுல இருந்து எல்லாரையும் எப்படி மீட்டுக் கொண்டு வர்றதுன்னு யோசிச்சு செயல்படணும்” என்று கண்ணன் சொல்வதைக் கேட்டு ஆச்சர்யமாய்ப் பார்த்த கார்த்திக்,

      “என்னடா சொல்ற? இதுல நாம என்ன செய்ய முடியும்?!” என்றான் புரியாமல்.

     “தெரியலடா? ஆனா செய்யணும் ஏதாவது செய்யணும்” என்றவனைப் பார்த்து,

     “என்ன அண்ணா செய்ய போறீங்க?! எல்லாரையும் இந்த விவசாயத்தை விட்டுட்டு உங்களை மாதிரி பட்டணத்துக்குப் போயி, வெளிநாட்டுக்காரங்க கம்பெனிக்கு உழைச்சுக் கொட்டி பணம் சம்பாதிக்கச் சொல்லப் போறீங்களா? இல்லை அரசாங்கத்துல நஷ்ட ஈடு கொடுப்பாங்களே, அதை வாங்கிக் குடுத்து எங்க நஷ்டத்தையும் உழைப்பையும் ஈடு செய்யப் போறீங்களா?!” என்றாள் கங்காவுமே கோபமும் வேதனையுமாக.

     அவள் கோபம் புரிந்து மிக அமைதியாக அவளைப் பார்த்தவன்,

     “நீ குழந்தையைத் தூக்கிட்டு உள்ள போ கங்கா, இவனையும் பார்த்துக்கோ” என்று சொல்லி, கவிதாசனையும் இறக்கிவிட்டுவிட்டு, கார்த்திக்கை பார்த்து,

     “வாடா” என்று அழைத்துக் கொண்டு நடந்தான்.

     இருள் சூழ்ந்த நேரத்தில் கவியை அழைக்கச் சென்றபோதும், அழைத்துக் கொண்டு திரும்பிய போதும், அவளையும் பிள்ளையையும் பற்றியே எண்ணிக் கொண்டு வந்ததில்  அவன் அகக்கண்ணுக்கும், புறக்கண்ணுக்கும் புலப்படாத அந்தக் கோரக்   காட்சிகள், இப்போது வெளிச்சத்தில் அவன் மனதை உலுக்கிப் போட்டன.

     ‘இதெல்லாம் தவிர்க்க முடியாத விஷயம்தானே? இதுக்கு ஏன் இவங்க எல்லாம் இவ்ளோ ரியாக்ட் பண்றாங்கன்னு புரியலை’ என்று சற்று நேரம் முன்புவரை கூட யோசித்திருந்தவனுக்கு இப்போது அவர்களின் வேதனை புரியத் துவங்கியது.

     அதிலும் வழியில் ஒரு சிலர் குடியிருக்கும் வீட்டைக் கூட இழந்து தெருவில் மூட்டை முடிச்சுக்களோடு சென்று கொண்டிருப்பதைப் பார்க்க அவனுக்குக் கண்களே கலங்கி விடும் போல் இருந்தது.

     மேலும் சில நிமிட நடையில் அவர்கள் நிலம் இருந்த இடத்தைச் சென்றடைந்தபோது, அத்தையும், மனைவியும், அப்பனும், மாமனும், மூழ்கிச் சாய்ந்திருந்த பயிர்களை எல்லாம் அழுது கொண்டும் புலம்பிக் கொண்டும் எடுத்து வந்து குவித்துப் போட்டுக் கொண்டிருந்ததைக் கண்டு மேலும் கலங்கிப் போனான்.

     அப்போது, “ஐயோ!! எல்லாம் போயி எஞ்சி இருந்த அரை ஏக்கருல கடனை உடனை வாங்கி பயிரிட்டோமே இப்படி மொத்தமா போச்சே!” என்று சற்றுத் தொலைவில் கேட்ட ஏதோ ஒரு பெண்மணியின் ஓலக் குரல் அவனைக் கதிகலங்கச் செய்தது என்றே சொல்லலாம்.

     உயிருக்கு உயிராய் நேசிக்கும் ஒருவரது மரணம் என்பது எந்த அளவு நிதர்சனத்தோடு கூடிய வலியையும் பிரிவையும் மனிதனுக்குள் புகுத்திவிட்டு  செல்கிறதோ, அதே போன்றதொரு வலிதான் இவ்வித இயற்கைச் சீற்றத்தின் போது நேரும் இழப்பின் போதும் ஏற்படும் என்பதை அவன் கண்ணாரக் கண்டு நெஞ்சார உணர்ந்தான் முதன்முதலாய்.

     இத்தனைக் காலமாய் மனைவியும் தகப்பனும், நிலம் நிலம் என்று அடித்துக் கொண்டதன் அர்த்தம் இப்போதே அவனுக்கு விலங்கியது.

     அவர்கள் எடுத்து வந்து குவித்துப் போட்டிருந்த பயிர்களை ஏதோ ஒரு உந்துதலில் தொட்டுப் பார்த்தவனுக்கு உடல் மொத்தமும் நடுங்கி அடங்க, அவன் கண்களில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் அவர்களது நிலத்தில் தேங்கி இருந்த நீரில் வீழ்ந்துக் கலந்தது.

                                                        -உள்ளம் ஊஞ்சலாடும்…  

    

 

         

     

               

Advertisement