Advertisement

      ஆனால் வருடா வருடம் வரும் மழையைப் போல் அல்ல, இம்முறை பல கிராமங்களை சூறையாடிப் போகும் அளவிற்கு இயற்கை தன் ஆட்டத்தை ஆடவிருக்கிறது என்று தெரியாது போனது அவனுக்கு. அப்படியே தெரிந்தாலும் அவனுக்கு என்ன கவலை வந்துவிடப் போகிறது அவர்களின் வேதனை புரியும் வரை?!

     “கண்ணா அந்தப் போனுங்க எல்லாத்தையும் சார்ஜ் போட்டு வையிப்பா. கரட்டு ஆப் பண்ணிடுவாங்க காத்து அதிகமான” என்று ரத்தினம் சொல்ல,

     “அதுசரி, காத்து அதிகமானா மட்டும்தானா கரண்ட் ஆப் பண்றாங்க? நம்ம கிராமங்கள்ல மாசத்துல பாதி நாள் கரண்ட்டு இல்லாமதான கெடக்குது” என்றார் வைரம் சலிப்புடன்.

     “என்னவோ, நம்ம ஊர் கிராமங்களோட நிலைமை எப்போதான் வளர்ச்சி அடையுமோ” என்று கவியும் பெருமூச்செறிந்தாள் சோர்வாய்.

     நேரம் ஆக ஆக, காற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டே மழையும் பிடிக்க ஆரம்பிக்க, அவர்கள் நினைத்தது போல் மின் இணைப்பும் துண்டிக்கப் பட்டுவிட்டது.

     மாலை வேளையில் லேசாய் ஆரம்பித்த மழை போகப் போக சோவெனக் கொட்டித் தீர்க்க, கவிக்கு வீட்டில் இருக்க இருப்புக் கொள்ளவில்லை! காற்று லேசாய் வீசத் துவங்கியதுமே வீரபாண்டி, ரத்தினம், மருது, கார்த்திக் நால்வரும் சேர்ந்து தங்கள் காட்டிற்குச் சென்று வரப்பை வெட்டி விட்டு வந்திருந்தனர் நீர் தேங்காது வெளியே வழிந்தோடும்படி. ஆனால் அடிக்கும் பெருமழை இரவவெல்லாம் தொடர்ந்தால் மொத்த நிலமுமே நீரால் நிறைந்து விடும் அபாயம் இருக்க வீட்டில் உள்ளோரின் மனம் காட்டின் மேலேயே அடித்துக் கொண்டது. மற்றவர்களுக்கே அப்படி என்றால், காடு காடு என்று பழியாய் கிடப்பவளுக்குக்கோ கேட்கவே வேண்டாம்.

     இரவு, அனைவரும் சாப்பிட உட்கார, அவள் மட்டும் உண்ண மனமில்லாமல்,

     “எப்பா ஒரு எட்டு காடு வரைக்கும் போயி வந்துடுவோம் வா?!” என்றழைத்தாள்.

     “ஏன்டி நீங்க போயி மட்டும் என்ன ஆகப் போவுது? கண்ணன் கோவர்தனகிரி மலையைப் பெயர்த்துக் கொண்டு வந்து ஊருக்கே கொடையா புடிச்சாரே அது போல மொத்த கிராமத்துக்கும் கொடை புடிக்க முடியுமா என்ன?!” என்றார் பாட்டி.

     கவி பாட்டியை முறைக்க, “இந்த பேய்க் காத்துலயும் மழையிலயும் வெளிய போவிங்களா பேசாம சாப்பிட்டுப் படுடி. மழையும் காத்தும் நின்னதும் காலையில போய் பார்க்கலாம்” என்றார் வைரமும் அதட்டலாய்.

     கவி செய்வதறியாது அமைதியாக ஒரு வாய் சோற்றை எடுத்துப் பருக அவள் கண்களில் கண்ணீர் பெருகியது.

     பெயருக்கெனே கொஞ்சமாய் சாப்பிட்டவள், “ம்மா போதும், மீதியை நீ எடுத்துக்கோ” என்று தாயிடம் தட்டைத் தள்ளிவிட்டு எழுந்து செல்ல, மற்றவர்களுக்கு மட்டும் என்ன மனதாரவா உண்ண முடிந்தது.

     ஆனால் கண்ணன் மட்டும் அவள் எழுந்து செல்லும் வரை நன்றாகத்தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் அவன் குடும்பத்தில் உள்ளவர்களின் கவலை புரியாமல். அவனுக்கு இந்த மழையும் காற்றும் இப்போது வரை பெரிய விஷயமாகவே தெரியவில்லை அவர்களுடைய உழைப்பும் உணர்வும் புரியாததால்.

     இரவு ஒருவருக்கும் தூக்கமே இல்லை. நடுஜாமம் வரை கவலையோடு கண்விழித்துப் படுத்திக் கிடந்தனர் அனைவரும். என்றுமில்லாத அதிசயமாய் அவளது கவிதாசன் மட்டும் தந்தையின் மார்பில் படுத்து உறங்கிப் போயிருந்தான் அன்று. பிள்ளையோடு சேர்ந்து அவனும் நன்றாய் உறங்குவதைப் பார்த்தவளுக்கு ஏனோ கோபம் கோபமாய் வந்தது.

     ‘எப்போவுமே உனக்கு எங்க கஷ்டத்தப் பத்திக் கவலையே இல்லை இல்ல?!’ என்று அவனை எழுப்பி சட்டையைப் பிடித்துக் கேட்க வேண்டும் போல் எழுந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு மெல்ல எழுந்தாள்.

     அவள் வெளியே வந்த போது கூடத்தில் இன்னமும் பாட்டி உறங்காமல் அமர்ந்திருப்பது கண்டு அப்படியே பின்வாங்கி பின்கட்டின் வழியாக வெளியே வந்தாள்.

     காரிருளில் மரங்கள் தலைவிரிகோலமாய் பேய் பிடித்த பெண்கள் ஆடும் ஆட்டத்தைப் போல் சுழன்று சுழன்று ஆடிக் கொண்டிருப்பதைப் பார்க்கப் பார்க்கக்  கவிக்கு அடிவயிறெல்லாம் கலங்கியது.

     ‘ஐயோ இந்த ஆட்டம் ஆடுதே! தென்னையும், தேக்குமே தாக்குப் பிடிக்குமான்னு தெரியலையே! பயிரும், வாழையும் என்ன கதி ஆகி இருக்குமோ?! குடிசை வீடுக்காரங்க எல்லாம் எப்படித் தவிச்சுக் கெடக்குறாங்களோ?!’ என்று கலங்கினாள் மனம் கேளாதவளாய்.

     “கடவுளே போதும்பா போதும்! இதோட நிறுத்திக்கக் கூடாதா இந்தப் பேய் மழையையும் காத்தையும்!” என்று அவள் வானத்தைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டுக் கண்ணீர் சிந்தினாள் செய்வதறியாதவளாய்.

     என்னதான் வேண்டினாலும் உருவான புயல் சட்டென்று நின்று போக அதென்ன மாயாஜால வித்தையா?! படிப்படியாகத் தானே குறையும். ஆனால் அதற்குள் ஊரே துன்பக் கடலில் மூழ்கும் நிலை வந்துவிடுமே!

     இங்கு கவி வீட்டினர் மட்டுமல்ல, அங்கு அவர்கள் கிராமங்களிலும், அக்கம் பக்கத்து கிராமங்களிலும் விவசாயம் செய்யும் மொத்த ஜனங்களுமே, இரவெல்லாம் பொட்டு உறக்கமில்லாமல் தவியாய்தான் தவித்துக் கொண்டிருந்தனர்.

     இதில் பழைய மண்வீடு கொண்டவர்களும் குடிசை வீடு கொண்டவர்களும் வீடு எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில், பெரும் துயரத்தோடு தங்கள் பிள்ளைகளை மட்டும் பத்திரமாய் அழைத்துச் சென்று கோவில் மண்டபத்தில் உறங்க வைத்துவிட்டு வந்து, கண்விழித்துக் காவல் கொண்டிருந்தனர் இறைவனை வேண்டியபடி.

                                          *****

     அங்கு கார்த்திக் வீட்டில், கங்கா, தங்களது நான்கு மாதக் கைக்குழந்தையைத் தட்டிக் கொடுத்தபடியே, கண்ணீருடன் படுத்திருந்தாள் கார்த்திக் எவ்வளவோ சமாதானம் கூறியும் கேட்க மனமில்லாமல்.

     “இந்த இயற்கைக் கூட இப்போ இருக்க மனுஷங்க மாதிரி நிலையில்லாம ஆகிடுச்சு பார்த்திங்களா?! பெய்தும் கெடுக்குது காய்ந்தும் கெடுக்குது!” என்றாள் ஆதங்கமாக.

     “என்னமா பண்றது?! எது வந்தாலும் சமாளிச்சுதானே ஆகணும். நீ அழுதா மட்டும் எல்லாம் சரியாப் போயிடுமா?!” என்றான் கார்த்திக்.

     “நாளைக்கு காலையில மழை நின்னதும் எல்லோரும் அவங்கவங்க காட்டுக்குப் போயி பார்த்தாங்கன்ன உசிரே போனாப்புல வலிக்கும்ங்க. இந்த கவிப் பொண்ணு இருக்காளே?! அந்தச் சின்ன வயசுலேயே ஒரு முறை இப்படி ஒரு புயலும் மழையும் வந்ததுல அவங்க காடு ஆன கதியைப் பார்த்து பேச்சுமூச்சில்லாம அப்படியே மண்ணுல சாஞ்சிட்டா! இப்போ என்ன பண்ணுவான்னே தெரியலை! ஏற்கனவே அவ முன்ன மாதிரி இல்லாம ரொம்பவே சோர்ந்து போயிதான் கெடக்குறா. அவ மனசுல என்னதான் இருக்குன்னே தெரியலை! அவ ஆசைப்பட்ட மாதிரிதான் அவ வாழ்க்கை அமைஞ்சது. ஆனா, ஏன்னு தெரியலைங்க, ஏதோ ஒன்னு அவளுக்குள்ள கெடந்து அவளை உருக்குது!”

     “குழந்தையே வந்துடுச்சே அவங்க நல்லா சந்தோஷமாதான் வாழுறாங்கன்னு நான் நினைச்சது தப்போன்னு தோணுதுங்க இப்போ எல்லாம்” என்றாள் கார்த்திக்கிடம் தன் மனதில் சில நாட்களாகவே குடைந்து கொண்டிருந்த விஷயத்தை உடைத்து.

     “உனக்கு மட்டும் இல்ல, எனக்கும் இதேதான் தோணுது. கண்ணனும் மேல் பார்வைக்கு நல்லா பேசுற மாதிரி இருந்தாலும் அவனுமே சகஜமா இல்லைன்னுதான் தோணுது. அவங்க ரெண்டு பேருக்குள்ளயும், இன்னமும் எதுவுமே சரியாகலையோன்னு இருக்கு!” என்றான் கார்த்திக்கும் கவலை தோய்ந்த குரலில்.

     “என்ன செய்யிறதுன்னே புரியலைங்க” என்று கங்காவும் வேதனை கொள்ள,

     “நாம என்ன செய்யிறது? நாம என்ன கேட்டாலும் ரெண்டு பேருமே மனசுவிட்டு எதுவும் சொல்ல மாட்டாங்க. அவங்களா மாறினாதான் உண்டு. பார்ப்போம், காலம் தான் எல்லாத்தையும் மாத்தணும்” என்றான் காலத்தின் மேல் பாரத்தைப் போட்டு.

                                            *****    

     இங்கு, கங்கா, கவியைப் பற்றிக் கவலை கொண்டதற்கு ஏற்றார் போலவே, காற்றையும், மழைச் சாரலையும் பொருட்படுத்தாமல், பின்கட்டின் கதவைத் திறந்து கொண்டு வாயிலின் உட்புறமாய் அமர்ந்து இயற்கையின் வெறியாட்டத்தை மனபாரத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்  வானத்திற்கு துணையாய் அவளும் கண்ணீர் விட்டபடி.

     ‘ஒருநாள் சீற்றத்துக்கே நம்ம மனசு இந்த பாடு படுதே, இந்த மனுஷங்க தினம் தினம் அந்த இயற்கையை பாடாப் படுத்துறாங்களே, அப்போ அதுக்கும் கோவம் வரத்தானே செய்யும்?!’ என்றும் மனம் முரணாய் நினைக்க,

     “சரிதான். ஆனா இந்தக் கோவத்துனாலயும் பாதிக்கப்படப் போறது இல்லாத வர்க்கம் தானே?! பணக்கார வர்க்கம் எல்லாம் இப்போவும் சொகுசா இன்வர்டரை போட்டுக்கிட்டு பஞ்சு மெத்தையில சோகமா தூங்கிட்டு தானே இருப்பாங்க! இப்போவும் எங்களை மாதிரி விவாசாயிங்களும், ஏழை ஜனங்களும்தானே  தவிச்சுக் கெடக்குறோம்” என்று ஏதேதோ புலம்பியடி வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு என்பார்களே, அப்படி அமர்ந்திருந்தாள் எப்போதடா இந்த மழையும் காற்றும் ஓயும் என்று.

     அவள் மனதின் வேதனை உணர்ந்தோ, இல்லை, ஊர்மக்களின் வேதனை உணர்ந்தோ, ஒருவழியாய் வருண பகவானும், வாயு பகவானும் கொஞ்சமாய் கருணை கொண்டு, மூன்று மணிக்கு மேல் படிப்படியாய் தங்கள் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ள, அதற்கு மேலும் பொறுக்க இயலாமல், ஊரையும், காட்டையும் பார்த்தே ஆக வேண்டும் என்ற பரிதவிப்போடு, ஓட்டமாய் ஓடத் துவங்கினாள் தூங்கிக் கொண்டிருக்கும் தன் பிள்ளையைக் கூட மறந்தவளாய்.

                                                -உள்ளம் ஊஞ்சலாடும்…

 

                

      

    

      

     

Advertisement