Advertisement

28

      தீப ஒளித்திருநாளின் முதல் நாள் மிக ரம்மியமாகக் காட்சியளித்த அக்கிராமம் மறுநாள் உதயத்தின் போதே இருளைச் சுமந்து கொண்டே விடிந்தது அவன் மனதின் இருளைப் போக்கும் விதமாய்.

     காலையில் வாசல் கூட்டிக் கோலமிட வந்த வைரம், “என்ன இது? மணி ஆறாகுது. இன்னும் சூரியனைக் கண்ணுலேயே காணலையே?!” என்று சொல்லியபடி, வாசல் கூட்ட ஆரம்பிக்க,

     “ஒரு பொட்டுக் காத்துக் கூட விசலியே வைரம்! ஒருவேளை இந்த டிவியில புயல் வருது வருதுன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்களே போன வாரத்துல இருந்து, நிஜமாவே  புயலு வந்துடுச்சோ?!” என்றார் வீரபாண்டி, வேப்பங்குச்சியில் பல்துலக்கியபடி மனைவியிடம்.

     “அட ஏங்க நீங்க வேற? காலங்கார்த்தால நல்லதைச் சொல்லாம!” என்று வைரம் சலித்துக் கொள்ள,

      “இல்லை அத்தை, புயல்தான் உருவாகி இருக்கு. இன்னிக்கு சாயந்திரம் கரைகடக்கும்னு சொல்லி இருக்காங்க” என்றான் பிள்ளையைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்த கண்ணனும்.

     “சரியாப் போச்சு! இப்போதான் ஊர் சனங்க பயிரெல்லாம் நல்ல விளைச்சல்ல இருக்கு! இந்நேரம் பார்த்து புயலு பெருமழைன்னு வந்தா என்ன ஆகும்?! ஆத்தா மகமாயி, நீதான் எங்களுக்கு துணை” என்று வைரம் வேண்டிக் கொள்ள,

     “இயற்கையைத் தடுக்க யாரால முடியும் வைரம்? எது வந்தாலும் சமாளிச்சுதான் ஆகணும். அதுதானே நம்ம விதி” என்றார் தங்கரத்தினம் நிதர்சனமாய்.

     “என்னண்ணே நீயும் இப்படிச் சொல்லிக்கிட்டு?!” என்று வைரம் குறைபட,

     “அந்த நாள்ல இருந்தே இயற்கை சீற்றம் இருக்கத்தானே செய்யுது! என்ன இப்போ நாம மனுஷங்க எல்லாம் சேர்ந்து, இயற்கைக்கு கேடு பண்ண பண்ண அதோட தாக்கமும் பயங்கரமா இருக்கு” என்றார் ரத்தினம் மேலும் வருத்தமாய்.

     “அது வரும்போது வரட்டும் அண்ணே. நீ காலையிலேயே பயங்கொள்ள வைக்காத” என்றுவிட்டு வைரம் கோலம் போட்டு முடித்து உள்ளே செல்ல,

     “ஏன் ய்யா அவ இன்னும் எழுந்து வரலையா?! நீ அழுற புள்ளைய வைச்சு சமாதானப் படுத்திக்கிட்டு இருக்க?” என்றார் பாட்டி.

     “எங்க அப்பத்தா?! இவன் ராத்திரி முழுக்க தூங்காம அமர்க்களம் பண்ணிட்டு இருந்ததுல ரெண்டு பேரும் சேர்ந்து இவனோட கொட்ட கொட்ட முழிச்சிட்டு உட்கார்ந்திருந்தோம். நாலு மணிக்குதான் இவன் தூங்கின பிறகு அவளும் தூங்கினா. அதான் இவன் எழுந்ததும் சட்டுன்னு வெளிய தூக்கிட்டு வந்துட்டேன். இவன் குரல் கேட்டா முழிச்சிடுவான்னு” என்று கண்ணன் சொல்ல, வெளியே இவர்களின் பேச்சுக் குரல் கேட்டு தூக்கம் களைந்த கவி,

     “ரொம்பதான் அக்கறை” என்றவாறே எழுந்து, தன் தலை முடியை சீர் செய்து கொண்டை போட்டுக் கொண்டு வெளியே வந்தவள், கொல்லைப் புறத்திற்குச் சென்று காலைக் கடன் முடித்து, பல்துலக்கி முகம் கழுவி வந்து, பிள்ளைக்காக தானியக் கஞ்சி காய்ச்சி எடுத்து வந்தாள் புகட்டுவதற்கு.

     அம்மாவின் கையில் கிண்ணத்தைப் பார்த்ததுமே, பிள்ளைப் படுவேகமாய் தகப்பனின் கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொள்ள, கண்ணனுக்குச் சிரிப்பு வந்தது.

     “சிரிக்கிறதைப் பாரு!” என்று முணுமுணுத்துக் கொண்டே,

     “பிள்ளையைக் குடு” என்று அவள் கை நீட்ட, கவிதாசன் தகப்பனின் சட்டையை இறுக்கமாய் பற்றிக் கொள்ள,

     “டேய் செல்லக் குட்டி.. என் தங்கம் இல்லை, என் பட்டு இல்லை” என்று அவள் கொஞ்சி அழைத்தும் கவிதாசன் முகத்தை இப்புறம் திருப்பக் கூடவில்லை.

     சிறிது நேரம் கொஞ்சியும், கெஞ்சியும் பார்த்தவள், “டேய்! இப்போ நீ வரப் போறியா இல்லையா?” என்று இறுதியாய் மிரட்டலுக்குத் தாவ,

     “எதுக்கு இப்போ குழந்தைய மிரட்டுற?! குடு நான் ஊட்டி விடுறேன்” என்று கண்ணன் கேட்க,

     “அதெல்லாம் உன்னால முடியாது” என்றாள் இவள்.

     “என்ன? என் பிள்ளைக்கு சாப்பாடு ஊட்ட என்னால முடியாதா?!” என்று கேட்டபடி இவன் கெத்தாய்க் கஞ்சிக் கிண்ணத்தை வாங்க, என்ன புரிந்ததோ பிள்ளைக்கு, கிண்ணம் இவன் கைக்கு மாறிய மறுகணமே தகப்பனிடமிருந்து தாயிடம் தாவியது.

     “அடேய் என்னடா அதுக்குள்ள கட்சி மாறிட்ட?!” என்று கேட்டபடியே கண்ணன் பிள்ளையைக் கெட்டியாய்ப் பிடிக்க,

     “ம்ம்! ஹ!” என மழலை மொழியில் மறுப்பாய்த் தலையசைத்தபடியே பிள்ளை அவனிடமிருந்து இறங்க முற்பட,

      “டேய் கவி செல்லம், என் அம்மா இல்லை, என் அப்பா இல்லை,  நல்ல பிள்ளையா அப்பாகிட்ட ஊட்டிக்கோடா தங்கம்” என்றபடி, பிள்ளையின் காதினருகே சென்று,

     “உன் அம்மா முன்னாடி என் மானத்தை வாங்காம சாப்பிட்டுடா”  என்றான் மெல்ல.

     அவன் பேச்செல்லாம் பிள்ளையிடம் எடுபடுமா என்ன? அவன் திக்கித் திணறி ஒரு வாய் ஊட்டியதுமே, பிள்ளை உதடு பிதுக்கி,

    “ஹ்ப்! ஹ்ப்!” என்று கஞ்சியை ஊதி வெளியே தள்ள, கஞ்சி அவன் முகத்தில் எல்லாம் பட்டுச் சிதறியது.

     “ஏய் என்னடா பண்ற?!” என்று கண்ணன் பாவமாகப் பார்க்க, பிள்ளை கெக்கலித்துச் சிரிக்க,  கண்ணன் ஒரு துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டு, மீண்டும் ஊட்ட, மீண்டும்  அதே அட்டகாசம் நடக்க, கண்ணன்,

     ‘என்னால முடியலைடி!’ என்ற ரீதியில் பாவமாய் கவியைப் பார்த்து வைக்க,

     “பேச்சைப் பாரு பேச்சை! வாய்தான். குடு இப்படி” என்று பிள்ளையை வாங்கியவள்,

      “வெளிய துப்புன அடி விழும் பார்த்துக்க,” என்ற மிரட்டலுடன் அடுத்த வாய்க் கஞ்சியை ஊட்டத் துவங்க, பிள்ளையும் வாங்கியக் கஞ்சியைத் துப்பாமல் வாய்க்குள்ளேயே வைத்திருந்தான் வெளியேயும் துப்பாமல், உள்ளேயும் விழுங்காமல்.

     “ரொம்பக் கஷ்டம்டா உன்னையும் உன் அம்மாவையும் சமாளிக்கிறது!” என்றபடி கண்ணன் நழுவப் பார்க்க,

      “என்ன என்ன கஷ்டமாம் இவருக்கு?! தப்பு பண்றதெல்லாம் இவரு. நாங்க என்னமோ தப்பு பண்ண மாதிரி சொல்லிட்டுப் போறதைப் பாரு!” என்று கவியும் சிலிர்த்துக் கொண்டு சொல்ல,

     “என்ன என்ன தப்பு பண்ணேன் நான்?! சும்மா சும்மா தப்பு பண்ணேன் பண்ணேன்னு,” என்று மறுபடியும் அவள் முன்னே வந்து நின்றான் கண்ணன்.

     “ம்?!” என்று அவள் முறைக்க,

     “சரி! சரி!” என்றவன், வெளியே அமர்ந்திருந்த பாட்டியின் காதில் விழா வண்ணம்,

     “நான் எத்தனையோ மன்னிக்க முடியாத தப்பு பண்ணி இருக்கேன் தான். ஆனா நான் செஞ்ச ஒரு அழகான தப்புதான் இன்னிக்கு நம்ம வாழ்க்கைக்கே அர்த்தத்தைக் கொடுத்துருக்கு கவிம்மா” என்றான் அவளை சற்றே நெருங்கி. 

     அவளுக்குமே அந்த நாளின் கோபம் இன்றும் மனதில் ஓயாமல் ஓடிக் கொண்டிருந்தாலும், அவன் சொல்வதிலும் உண்மை இருக்கத்தானே செய்கிறது!

     அவன் செய்த அந்த இனியத் தவறின் நொடிகளால் வந்த பொக்கிஷமல்லவா பிளவுபட்டிருந்த அந்த இதயங்களின் வாழ்விற்கு இன்று அர்த்தத்தையும், ஆறுதலையும் கொடுத்துக் கொண்டிருந்தது.

     “இன்னும் எத்தனை நாளைக்குடி என்னை இப்படி தவிக்க விடப் போற?! முடியலை! சத்தியமா முடியலைடி!” என்று வேதனையுடன் கூறியவனை, அவள் அப்போதும் சலனமில்லாமல் பார்த்து வைக்க, வருடங்கள் கடந்த பின்னும் அவள் சாதிக்கும் மௌனம் அவனை வெகுவாய் சோதித்தது.

     ஏனோ அதுநாள் வரை கடைபிடித்து வந்த பொறுமையைக் காற்றில் பறக்க விட்டவன்,

     “போதும் கவி! என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு! மறுபடியும் அதை மீற வச்சிடாத!” என்று எச்சரித்துவிட்டு செல்ல, அவள் இப்போதும் கோபம் தணியாமல் முறைத்துதான் நின்றாள் அவன் சென்ற திக்கையே வெறித்தபடி.

                                            *****

     காட்டில் நெற்பயிர் போட்டிருந்த படியாலும், களைகளையும் அவ்வப்போது வீட்டு ஆண்களே சென்று களைந்து விட்டு, தினமும் நீர் மட்டும் பாய்ச்சி விட்டு வந்து கொண்டிருந்ததாலும், எல்லோரும் வீட்டில்தான் இருந்தனர் அன்றைய மதிய வேலையில்.

     “உச்சி நேரத்துல கூட இப்படி வானம் மூடிக்கெடந்து புழுங்கித் தள்ளுதே. இன்னிக்கு ராத்திரி மழை நல்லா வெளுத்து வாங்கப் போவுது” என்றார் பாட்டியும் காலை வீரபாண்டி கூறியதைப் போலவே.

     “வாயை வைக்காத கெழவி, அங்க காட்டுல பாடுபட்டது நாங்க. எங்களுக்கில்ல கஷ்டம் தெரியும்” என்று கவி புலம்ப,

     “அது சரி நாங்கல்லாம் பாடு பட்டதே இல்லையா என்ன? இதுல நான் சொல்லி என்ன ஆகப் போவுது. நடக்கிறதுதான் நடக்கும்” என, கவிக்கு பெரும் கவலையாகிப் போனது.

     ‘என்ன இது நியுஸ்ல சொன்ன மாதிரி நிஜமாவே புயல் வந்துருமோ?!’ என்று கலக்கம் கொண்ட கவி, அழுத பிள்ளையை வேடிக்கைக் காட்டி சமாதானப் படுத்துவதற்காக, வெளியே தூக்கிக் கொண்டு வந்து திண்ணையில் அமர, சற்று தூரத்தில் தோப்பில் தெரிந்த தென்னை மரங்கள் லேசாய் அசையத் துவங்கின.

     அவள் அதையே கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்க, நிமிடங்களில் லேசாய் அசைந்து கொண்டிருந்த மரக்கிளைகள் கொஞ்சமாய் ஆட்டம் ஆடத் துவங்கியது.

     காற்று அடிக்கத் துவங்கியதில் வீட்டின் உள்ளே இருந்தவர்களும் உள்ளே புழுக்கம் தாளாமல், வெளியே வந்து அமர,

     “நான்தான் சொன்னேன்ல!” என்றார் பாட்டி மீண்டும்.

     “ஆமா அதான் சொன்னேன் நீ வாயை வைக்காதன்னு” என்று கவி சிடுசிடுக்க,

     “அடி என்னடி இவ கூறுகெட்டவ மாதிரி பேசிக்கிட்டு?! நான் சொல்லித்தான் மழையும் காத்தும் வீசுதா!” என்று பாட்டியும் அவளை வைய,

     “ஏம்மா விடும்மா. அவ ஏதோ வெசனத்துல சொல்லுறா!” என்ற ரத்தினத்திற்குமே உள்ளுர கவலைத் தொற்றிக் கொண்டது.

     “இந்த டிசம்பர் மாசம் வந்தாலே ஏதாச்சும் ஒரு கண்டம் வந்துடுது!” என்று கவி மீண்டும் புலம்ப,

     ‘இப்ப எதுக்கு இவ இப்படிப் புலம்பித் தள்ளுறா?! வருஷா வருஷம் வர்ற மழைதானே?!’ என்று கண்ணன் தனக்குள்ளேயே நினைத்துக் கொண்டான்.

Advertisement