Advertisement

     “என்னடா வாங்கப் போற பாப்பாக்கு?!” என்று கார்த்திக் ஆர்வமாய்க் கேட்க,

     “கூடதான் வர்ற இல்லை. வந்ததும் தெரிஞ்சிக்கோ? நானே இங்க அதுபோல செய்து கொடுப்பாங்களான்னு டென்ஷன்ல இருக்கேன்” என்றான் கண்ணன் யோசனையாய்.

     “எதுபோல?!” என்று கார்த்திக் மீண்டும் கேட்க,

     “டேய். கொஞ்ச நேரம் பொறுடா” என்று சொல்ல, கார்த்திக் வாயை மூடிக் கொண்டான்.

     சிறிது நேரத்தில் கார் கடை வீதியை அடைய,

     “கார்த்திக் அதோ அங்க இருக்க நகைக் கடைக்கிட்ட காரை நிறுத்துடா” என்றான் கண்ணன்.

     கடைக்குச் சென்றவன், எந்த மாடலையும் பார்க்காது, “இங்க டைமன்ட்ல செயின்ல மாட்டுற டாலர் செய்து தருவீங்களா?” என்றான்.

     “டைமன்ட்லயா? என்ன மாதிரி மாடல் சார்?” என்று கடைக்காரர் கேட்க,

     “பெயரையே டாலரா செய்து தரணும்” என,

     “தங்கத்துல ஸ்டோன் வச்சு செய்து இருக்கோம் சார். ஆனா டைமன்ட்ல?! இருங்க சார் நான் முதலாளி அய்யாகிட்ட கேட்டு சொல்றேன்.” என்றவர், கடை முதலாளியிடம் சென்று கேட்டு வர, அவரே வந்து,

     “செய்து கொடுக்கலாம் சார்” என்றார்.

     அவன் பெயரை எழுதிக் கொடுக்க, கார்த்திக், “ஹேய் செம்மடா எப்படிடா?! நீ கூட இப்படி எல்லாம் யோசிக்கிற?!” என்றான் ஆச்சர்யமாய்.

     “ஏன் உனக்கு மட்டும்தான் உன் பொண்டாட்டி பிள்ளைக்காக யோசிக்கத் தெரியுமா?! நாங்களும் யோசிப்போம்” என,

     “யோசி யோசி. ஆனா கவிக்கு தெரியுமா நீ இந்த பேரை செலக்ட் பண்ணது?!” என்று கார்த்திக் கேட்க,

     “இல்லை! டாலரை செய்து கொண்டு போய்தான் காட்டணும்னு இருக்கேன்”

     “ஓ! சர்ப்ரைஸ்” என, அதற்குள்,

     “சார் ஃபான்ட் மாடல் பார்த்து சொல்லுங்க சார்” என்று கடை ஊழியர், கேட்லாகை அவனிடம் கொடுக்க, அவன் மாடல் பார்த்துச் சொல்லிவிட்டு,

     “கண்டிப்பா அஞ்சு நாள்ல கிடைச்சுடும்தானே? ஏன்னா ஃபன்ஷனுக்கு போடணும்” என்று கேட்டு உறுதி செய்துக் கொண்டு, அட்வான்சும் கொடுத்துவிட்டுக் கிளம்பினான்.

     விழாவிற்கு முதல் நாள் இரவு, கண்ணன் தான் வாங்கிக் கொண்டு டாலரை எடுத்துக் கொண்டு அவள் அறைக்குச் செல்ல,

     “டேய் நீ எதுக்குடா அங்கப் போற?!” என்று குரல் கொடுத்தார் பாட்டி.

     “இந்தக் கெழவி வேற?” என்று முணுமுணுத்தவன்,

     “என் பொண்டாட்டிகிட்ட தனியா பேசக் கூடக் கூடாதா என்ன?!” என்றான் காண்டாகி.

     “சரி சரி போ” என்று பாட்டி அனுமதி கொடுக்க, அவன் புலம்பிக் கொண்டே வந்ததைப் பார்த்து இவளுக்கும் லேசாய் சிரிப்பு எட்டிப் பார்த்தது.

     ஆனாலும் அதை வெளிக்காட்டாது, “என்ன?!” என்ற ரீதியில் அவள் அவனை முறைக்க,

     “சும்மா சும்மா இப்படி முறைக்காத கவிம்மா! நீ இப்படி முறைச்சா நான் ஆசையா பேசணும்னு நினைக்கிறதெல்லாம் மறந்து போயிடுது!” என்று சொல்லியபடி அவன் அருகே வர,

     “எதே?!” என்று முறைத்தாள் அவள் மீண்டும்.

     “ஐ மீன் ஆசையான்னா பாசமா” என்று அவன் விளக்க,

     “ம்கும்!” என்று சலித்துக் கொண்டவள், என்னவென்பது போல் பார்க்க, அவன் தனது கையில் இருந்த நகைப் பெட்டியைத் திறந்து அவளிடம் காட்டினான்.

      அதில் இருந்த வைரக் கற்களின் ஜோலிப்பை விட அந்தப் பெயரே அவளது கருத்தில் பதிய, அவள் கண்கள் மிளிர அவன் கண்களை ஒரு நொடி சந்தித்தாள்.

     “பாப்பா பேரு. பிடிச்சிருக்கா கவிம்மா?!” என்றான்.

     ஒரு நொடி அமைதியாகவே அவனைப் பார்த்திருந்தவள், “ம்!” என்று தலையசைத்து,

     “பெயர்ல மட்டும்தான் இனிமே நாம சேர்ந்து இருக்க முடியும்!” என்றாள் வார்த்தைகளாலேயே அவனைக் கொன்று.

     “கவி?!” என்று அவன் வேதனை ததும்ப அவளைப் பார்க்க,

     “உன்னைப் பார்க்கும் போதெல்லாம், நீ செஞ்ச செயலை விட, நீ பேசின வார்த்தை என்னை ஒவ்வொரு நொடியும் ஈட்டியால குத்திக் கிழிக்கிற மாதிரி வலியைக் கொடுத்துக்கிட்டே இருக்கு தெரியுமா?!” என்று அவள் நேசம் தொலைத்த நெஞ்சத்தோடு மொழிய அவன் நெஞ்சிலும் அதே வலிதான் இப்போது எழுகிறது என்பதை அவள் எப்போது உணருவாள்?!

     மறுநாள் பெயர் சூட்டு விழாவிற்கு வெளியாட்கள் வருவதற்கு முன், அவன் தான் வாங்கி வந்த டாலரை தனது அத்தையிடம் கொடுத்துப் பிள்ளைக்குப் போடச் சொல்லிவிட்டுச் சென்றுவிட, அதில் தமிழில் எழுதி இருந்த அந்த அழகிய பெயரைப் படித்துப் பார்த்த வைரம் அகமகிழ்ந்து போய் அந்த டாலரை எடுத்துக் கொண்டுச சென்று தனது அண்ணனிடம் காட்டினார்.

     “அட! பாருடா எம்மவனுக்குக் கூட இப்படில்லாம் யோசிக்கத் தெரியுது?!” என்று சொல்லி ரத்தினம் சிரிக்க, பாட்டி,

     “அதென்னா அப்படி வாங்கிட்டு வந்திருக்கான்?!” என்றதும்,

     “நான் என் பையன் பொறந்த போது, கண்ணதாசன் அய்யாவோட கவி மேல எனக்கு இருந்த காதல்ல அவரு பேரை அவனுக்கு வச்சேன். அப்புறம்   எம்மருமவ பொறந்த போது கண்ணதாசன் அய்யாவுக்கு கவி மேல இருந்த காதலை எண்ணி, என் பிள்ளையும் எம்மருமவ மேல தீரக் காதலோட, கண்ணதாசனும் கவிதையும் போல சேர்ந்தே இருக்கணும்னு நினைச்சு, கவிதாயினின்னு பேரு வச்சேன்ல?” என,

      “ஆமா, அந்தக் கதை எல்லாம் இப்போ எதுக்கு?! என் பேரன் என்ன வாங்கிட்டு வந்தான்னு சொல்லுடான்னா!” என்று பாட்டி சலித்துக் கொள்ள,

     “சொல்றேன் இரு ஆத்தா! என் புள்ளை, அவனும், எம்மருமவளும் என் பேரனுக்குள்ள சேர்ந்தே இருக்கணும்னு கவிதாசன்னு பேரு வச்சிருக்கான்” என்றார் ரத்தினம் ஆனந்தமாய்.

     “கவிதாசனா?! என்ன பேருடா இது?! அதை விட, நம்ம குலதெய்வம் பேரு, முனியாண்டின்னு வச்சா எவ்ளோ நல்லா இருக்கும்?!” என்று பாட்டி சொல்ல, கண்ணனின் முகம் கடுப்பபின் உச்சத்திற்குப் போக, கவிக்கோ அவன் முகம் பார்த்து அந்நேரத்திலும் சிரிப்புதான் எழுந்தது.

     “அட என்னமா நீ? பிள்ளை எவ்ளோ ஆசையா பேரு யோசிச்சு வைரக் கல்லுல டாலர் செஞ்சு கொண்டாந்திருக்கான் குழந்தைக்கு போட. நீ இப்படி பொசுக்குனு நல்லா இல்லைன்னு சொல்லுற?!” என்ற வைரம், பேரனுக்காய் தான் வாங்கி வந்திருந்த தங்கச் சங்கிலியில் அவன் வாங்கி வந்திருந்த டாலரைக் கோர்த்து, பிள்ளைக்கு அணிவித்தார்.

     அதன்பின் உறவினர்களும் அக்கப்பக்கத்தினரும் ஒவ்வொருவராய் வரத் துவங்க, பிள்ளையைப் பூக்கூடையில் போடும் சடங்கு ஆரம்பனாது.

     பிள்ளையை முதலில் தொட்டிலில் போடாமல், அவர்கள் வழக்கப்படி, ஒரு கூடையில் தாயின் கல்யாணக் கூரைப்பட்டைப் மடித்துப் போட்டு அதில் தங்க நகைகள், நவதானியங்கள், பூக்கள் இவையெல்லாம் இட்டு, அதன்மேல் பிள்ளையைப் படுக்க வைத்து அவர்கள் குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை பிள்ளையின் காதில் கூறினர் வீட்டுப் பெரியவர்கள் அனைவரும் ஒவ்வொருவராய்.

                                           *****

       இரண்டு வாரத்தில் கண்ணனின் காலும் நன்றாகவே குணமாகிவிட, அவன் சென்னைக்குக் கிளம்ப வேண்டிய கட்டமும் வந்தது.

     “எய்யா வெளிநாட்டுல இருந்து வந்த மாதிரி இந்த பட்டணத்து வேலையையும் தூக்கிப் போட்டுட்டு வந்துடேன்ய்யா. நம்மகிட்ட இல்லாத தோப்பா நெலமா? அதை நல்லா பார்த்துக்கிட்டாலே தலைமுறை தலைமுறையா நல்லா வாழலாமே” என்றார் ரத்தினம் மகனை அனுப்ப மனதே இல்லாமல்.

     “எனக்கு மட்டும் என்ன ஆசையாப்பா?! இப்போ எடுத்துட்டு இருக்க இந்த ப்ராஜக்ட் முடியுற வரைக்கும் நான் ரிலீவ் ஆகிறது கொஞ்சம் கஷ்டம் ப்பா. அப்புறம் கண்டிப்பா நானே வேலையை விட்டுட்டு வந்துடலாம்னு தான் இருக்கேன்” என்றான் கண்ணன் சற்றுத் தொலைவே பிள்ளையை மடியில் போட்டபடி அமர்ந்திருந்த மனைவியைப் பார்த்து.

     ‘விட்டுட்டு வந்துட்டாலும்!’ என்று எண்ணி அவள் அவனைக் நம்பிக்கை அற்றுப் பார்க்க,

      “நெஜம்மா கவிம்மா. இன்னும் ரெண்டு வருஷம்தான். அப்புறம் எப்போவும் இந்த ஊரை விட்டுப் போகவே மாட்டேன்” என்றான் மனைவியிடம் நேரடியாகவே.

     அவள் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக பிள்ளையைத் தட்டிக் கொடுத்துக் கொண்டிருக்க, அவள் அருகே சென்றவன், பிள்ளையைக் கையில் வாங்கி, அதன் நெற்றியில் அழுத்தமாய் முத்தம் பதித்தான் பிரிய மனதே இல்லாமல். அவள் அப்போதும் எதுவுமே பேசவில்லை! அவனுக்கும் எப்படிதான் அவள் கோபத்தைத் தணிய வைப்பது என்று சத்தியமாய்ப் புரியவில்லை. ஆனால் முன்பை விட தற்போது பரவாயில்லை என்பதால், அவனும் அவளாகவே தணிந்து வர சற்று அவகாசம் கொடுத்து விலகித்தான் நின்றான் இப்போது வரையில்.

    சென்னைக்கு வந்த பிறகு அவன் தனது ஆபீஸ் ப்ராஜெக்டில் பிசியாகிப் போனதில், வாரம் ஒருமுறை கூட ஊருக்குச் செல்ல முடியாது போக, மாதம் ஒருமுறை மட்டுமே வந்து சென்று கொண்டிருந்தான். மாதங்கள் வெகு வேகமாய் நகர்ந்தது. பிள்ளைக்கு பத்து மாதம் முடிந்து பதினோராம் மாதமும் ஆரம்பித்து விட்டிருந்தது. ஆனாலும் கணவன் மனைவிக்கு இடையே இருந்த விரிசல் அப்படியேதான் இருந்தது அவளின் உடைந்த மனதைப் போல!

                                          *****

      வீட்டில் தீபத் திருநாள் கொண்டாட இருப்பதால், வைரம் அவனை வெள்ளிக்கிழமையே புறப்பட்டு வரும்படி சொல்லி இருக்க, அவன் வியாழனன்று டே, அண்ட் நைட் ஷிப்ட் இரண்டும் சேர்த்து முடித்துவிட்டு வெள்ளிக்கிழமை விடுப்பு எடுத்துக் கொண்டு காலையே ஊருக்குக் கிளம்பி இருந்தான்.

     மாலை அவன் ஊருக்குள் நுழையும் நேரம் ஊரே தீபஒளியின் வெளிச்சத்தில் மிளிர, அவர்களின் வாழ்வின் இருளும் இந்த தீபத்தின் வெளிச்சத்தால் விலகிய இருளைப் போல விலகி விடுமா என்ற ஏக்கத்தோடு வண்டியைத் தங்களது கிராமத்தின் வீதிகளில் செலுத்திக் கொண்டுச் சென்று அவர்கள் வீட்டின் முன் நிறுத்தினான் முன்பெல்லாம் தன் கவி தனக்காய் ஓடி வரும் காட்சியை மனக்கண்ணில் ஏந்திக் கொண்டே…

                                             -உள்ளம் ஊஞ்சலாடும்…

       

 

    

Advertisement