Advertisement

     27

     குட்டிக் கண்ணனின் வருகையால் வீடே கோலாகலமாய் இருந்தது அன்று மதியம் முதல்.

     இரவு ஏழு மணி வரை கூட ஊரில் உள்ள சொந்த பந்தங்கள், அக்கம் பக்கத்தினர் என்று பலரும் பிள்ளையப் பார்க்க வந்து கொண்டே இருக்க, கண்ணனும் கவியும் தங்கள் அறைக்குச் சென்று ஓய்வெடுக்கக் கூட முடியவில்லை.

     இரவு  ஏழு மணிக்கு மேல் வந்திருந்த உறவினர்கள் கிளம்பிய பின் வைரம் மகளுக்கு உணவு கொண்டு வர, 

     “நீங்கல்லாம் சாப்பிடும் போது சாப்பிடுறேனே மா” என்றாள் கவி.

     “ம்ஹும்! பச்சை உடம்புக்காரி. நேரமா சாப்பிட்டுடணும்.” என்று சொல்லி அவளிடம் சாப்பிடும்படி தட்டை நீட்டியவர், பிள்ளையை வாங்கிக் கொண்டார்.

     “ஏன் வைரம், இன்னும் ஒரு மணி நேரத்துல நாமும் சாப்பிடப் போறோம். அதுக்கு இப்பயே எல்லோருக்கும் பரிமாறிட வேண்டியதுதானே” என்று வீரபாண்டி கேட்க,

     “நல்லா இருக்கு! எல்லோரும் சாப்பிட உட்கார்ந்துட்டா, என் பேரப் பிள்ளையை யாரு பார்த்துக்கறது?!” என்று வைரம் பேரனைச் சீராட்ட,

     “கெழவியைக் கையில புடிக்க முடியலைடா ராஜா நீ வந்ததுல இருந்து!” என்று பேரனின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டார் வீரபாண்டி. 

     “என்ன மச்சான் பொசுக்குன்னு என் தங்கச்சிய இப்படி சொல்லிப்புட்டீங்க?!” என்று ரத்தினம் தங்கைக்கு பரிந்து வர,

     “அட நீங்க என்ன அண்ணா, அவரு கெழவரா ஆனதுனால என்னையும் கெழவின்னு சொல்லுறாரு போல?!” என்று வைரமும் கணவரை வார, பேரன் பாட்டியின் முகத்தில் பன்னீர் சொரிய, ககாம்புஜம் பாட்டி தன் போக்கை வாயைத் திறந்து வாய்விட்டுச் சிரித்தபடி,

     “அதான் பேரன் வந்துட்டேன்ல! இனி ரெண்டு பேருமே கெழவன் கெழவிதான்னு உங்க பேரனே சொல்லிட்டான்” என்றார் மகளையும் மருமகனையும் பார்த்து.

     “அதென்ன கெழவி அப்படிச் சொல்லிட்ட?! என் அம்மா, அப்பாவுக்கு என்ன உன்னை மாதிரி எம்பது வயசா ஆகிடுச்சு?! இப்போதான் அவங்க அம்பதையே தொட்டிருக்காங்க!” என்று கவி பெற்றவர்களுக்கு பரிந்து வர,

     “சரிதான்டி யம்மா! உன் ஆத்தாளும், அப்பனும் என்னிக்கும் இளஞ்ஜோடிதான் தாயி! இளஞ்ஜோடிதான்” என்று பாட்டி நீட்டி முழக்க,

     “அப்படிச் சொல்லு” என்று பேத்தி சிரிக்க, கவியின் முகத்தில் வெகு நாட்களுக்குப் பின் எந்த சோகமும் கலவாத சிரிப்பைப் பார்த்தவனுக்கு மனம் பூரித்தது.

    இதற்குள் வைரம், “பிள்ளையைப் புடிடா! மாத்துத் துணி கொண்டாறேன்” என்று பேரன் ஈரம் செய்த துணியைக் கழற்றி எடுத்துக் கொண்டு கண்ணனின் கையில் பிள்ளையைக் கொடுத்துவிட்டுப் போக,

 

     பிள்ளையை அள்ளி அணைத்தபடி தோளோடு வைத்துக் கொண்டவன்,

     ‘தாங்க்ஸ்டா பட்டுக்குட்டி! உன்னால்தான் இன்னிக்கு உன் அம்மா இவ்ளோ சந்தோஷமா இருக்கா! என்னால பறிபோன உன் அம்மாவோட சந்தோஷம் உன்னால தான் அவளுக்குத் திரும்பக் கிடைச்சிருக்கு! இனி நீதான் உன் அம்மாவை எப்போவும் சந்தோஷமா வச்சுக்கணும். சரியா” என்றான் மனதோடு.

     இரவு கவியும் பிள்ளையும் உறங்க, அவளது அறைக்குச் செல்லச் சொல்லி வைரம் கூற,

     “ஏன்? அவ ஏன் அங்க படுக்கணும். இந்த ரூம்ல தானே கட்டில் இருக்கு இங்க போய் படுக்கட்டும்” என்றான் கண்ணன்.

     “இல்லைடா உனக்கு கால் அடிபட்டிருக்கு உனக்கு கீழ உட்கார்ந்து எழுந்துக்கக் கொள்ள சிரமமா இருக்கும். நீ உன் ரூம்ல படுத்துக்கோ. அவ அங்க படுத்துக்கட்டும்” என்று வைரம் நாசுக்காய் சொல்ல,

     “ஏன் அவ்ளோ பெரிய கட்டில்ல ரெண்டு பேர் படுக்க முடியாதா? என்றான் அவர் சொல்ல வருவது விளங்காமல்.

      ‘ஐயோ இது இருக்கே!’ என்று கவி தலையில் அடித்துக் கொள்ள,

     “போடா லூசுப் பயலே” என்றுவிட்டு வைரம் சென்றுவிட,

     “அடேய் பிள்ளை பொறந்து நாலஞ்சு மாசத்துக்கு புருஷன் பொண்டாட்டி தள்ளிதான் இருக்கணும்” என்று பட்டென பாட்டி சொல்ல,

     “கடவுளே!” என்று கவி சட்டென பிள்ளையுடன் எழுந்து சென்றுவிட, கண்ணன்,

     ‘ஓ!’ என்று அசடு வழிய தலை குனிந்து கொண்டான்.

    ‘ஆனாலும் இவங்க பண்றது அநியாயம்! நானே ஏதோ கொஞ்சம் நஞ்சம் பேசிப் பேசியாச்சும் அவளைச் சமாதானப் படுத்தலாம்னு இருந்தா, இப்படி மொத்தமா ஆப்பு வைக்கிறாங்களே?!’ என்று சலித்துக் கொண்டான் மனதோடு. (நீ?! பேசிப் பேசி சமாதானப் படுத்துவ! நம்பிட்டோம்டா!)

     இங்கு இவர்கள் வீட்டில் பேசுவதற்கு கூட இயலாமல் பெரியவர்கள் தடை விதித்து விட்டிருக்க, அங்கு கார்த்திக் வீட்டிலோ,

     “பேபி, பேபி தப்புதான் நான் செஞ்சது தப்புதான்டா! ஏதோ சும்மா விளையாட்டுக்கு எல்லார் முன்னாடியும் உன்னை அத்தைக்கிட்ட கோர்த்து விட்டுட்டேன். அதுக்காக பாய் தலைகாணியைத் தூக்கி வெளில போடுவியா?! இதெல்லாம் அநியாயம் செல்லம்” என்று கெஞ்சிக், கொஞ்சிக் கொண்டிருந்தான் மனைவியை.

     “ம்! அது போட்டுக் கொடுக்குறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும். நீ பாட்டுக்கு போட்டுக் குடுத்துட்ட! எங்க அம்மா வீட்டுக்கு வந்து என் காது கிழிய கத்திட்டுப் போகுது. அடிக்க மட்டும்தான் இல்லை. அதுக்கூட பிள்ளை வயித்துல இருக்கிறதுனால!” என்றவள் மீண்டும் ஏதோ யோசனை வந்தவளாய்,

     “ஹான் இதை மறந்துட்டேன் பாரு, என்ன, என்ன சொன்ன நீ? பிள்ளை வயத்துல இருக்கு விட்டுடுங்க அத்தைன்னுதானே?! அப்போ நான் அடி வாங்கினா உனக்கு சந்தோஷம் அப்படித்தானே!?” என்று மறுபடியும் ஒரு சண்டையை ஆரம்பிக்க,

     “ஐயோ இதுக்கு மேல தாங்க முடியாதுடி!” என்றவன், அவளை சட்டென அணைத்து அவள் இதழ்களைத் திறக்க இயலாதவாறு செய்ய,

     “டேய் கருவாப்பயலே விடு விடுடா என்னை” என்று இவள் நறுக்கென்று அவன் இதழைக் கடித்து வைக்க,

     “ஹா!” என்று வலியில் அலறியவன்,

     “ராட்சசி!” என்று பதிலுக்குக் கடித்து வைத்து,

     “நானாடி கருவாப் பைய, செக்கச் செவேல்னு உன் ஊருக்கு வந்தேன்டி, உன் ஊர் வெயிலும், உன் கருப்பும் சேர்ந்து ஒட்டி என்னையும் கருப்பாக்கிடுச்சுடி!” என்றபடி அவன் எல்லைகள் மீற,

     “என்ன? என்ன?! என் கருப்பு ஒட்டிக்கிடுச்சா?! அப்போ ஏன்டா இப்படி என்னை ஓட்டிக்கிட்டு இருக்க?! போ தள்ளிப் போ!” என்று அவள் அவனைப் பிடித்துத் தள்ள,

     “முடியாது போடி!” என்றவன் மேலும் மேலும் அவளுடன் ஒன்ற,

     “கொன்னுடுவேன் போடா!” என்று அவள் அருகில் இருந்த தலையணை எடுத்து அவன் தலையில் அடிக்க, அதை தூசு போல் தட்டிவிட்டவன்,

     “இந்தக் கருப்பும் ஊரும் பிடிச்சுக்போகப் போய்தானடி கிறங்கிப் போயி இங்கயே பழியா இருக்கேன்” என்று அவன் அவள் காதோரம் முத்தமிட்டபடி கிசுகிசுக்க,

     “ம்! அப்புறம் எதுக்கு என் கருப்பு ஒட்டிக்கிடுச்சுன்னு சொல்லுற?!” என்று அவள் சிணுங்க,

     “அது ஆசையா சொல்றதுடி என் கருப்புத் தங்கமே!” என்று அவன் மேலும்  மேலும் அவளை கிறங்கச் செய்ய,

     “ம் நான் ஒண்ணும் அம்புட்டு கருப்பு இல்லை மாநிறம்தான்” என்றாள் அப்போதும்.

     “ம் சரி மாநிறம்தான்.” என அவன் ஒப்புக் கொள்ள,

     “மாநிறம் கூட இல்லை! கொஞ்சம் வெள்ளைதான் நானும்” என்று இவள் குதர்க்கம் பேச,

     “ம் சரிடி வெள்ளைதான். அந்த வெள்ளைக்காரி மாதிரி வெள்ளைதான்” என்று கார்த்திக் கிறக்கத்துடன் சொல்ல,

     “ஹான்?! எந்த வெள்ளைக்காரி?!!” என்று இவள் சட்டென அவனைப் பிடித்துத் தள்ளி அவனைக் கொன்றுவிடும் நோக்கில் முறைக்க,

     “ஐயோ டங் ஸ்லிப்பாகி, வெள்ளைக்காரிங்கன்னு சொல்றதுக்கு பதில் வெள்ளைக்காரின்னு சொல்லிட்டேன் தாயே!” என்று கார்த்திக் பதற,

      “என்னாது?! வெள்ளைக்காரிங்களா?! அடப்பாவி! என்னை இப்படி அநியாயமா ஏமாத்திட்டியேடா?!” என்று கங்கா அவனைக் கன்னாபின்னாவென திட்ட வாயெடுக்கும் முன்,

      “தெய்வமே, சத்தியமா நான் எந்த வெள்ளைக்காரிகிட்டயும் தனியா கூட பேசினதே இல்லை! எங்க ஆபீஸ் கூட எந்த வெள்ளைக்காரியும் வேலை செய்யவே இல்லை!” என்று கார்த்திக் அழாத குறையாக சொல்ல,

     “நெஜம்மா?!”

     “நெஜம்மா”

     “சத்தியமா?!”

     “சத்தியமா” என்றவன்,

     “என் செல்லம்மா தவிர எந்தப் பொண்ணையும் நான்,”

     “யோவ் யோவ் வேணாய்யா ஏறெடுத்தும் பார்த்ததில்லைன்னு மட்டும் சொன்ன, கண்ணை நொண்டிப்புடுவேன் நொண்டி” என்றவள் அவனை இழுத்து அணைத்து அவன் இதழ்களைக் கொய்ய, அவனும் தனது காதல் விளையாட்டை ஆரம்பித்தான் மனைவியிடம். (வாழ்றடா! கண்ணதான் பாவம்! ரீடர்ஸ் மைன்ட் வாய்ஸ்)     

                                           *****

     நாட்கள் அவர்களது செல்லப் புதல்வனின் வருகையால், மிக அழகாகவும், கூடவே அவளது சின்னச் சின்ன முறைப்புகளுடனும், அவனது செல்லச் சீண்டல்களுடனும் வெகு வேகமாய் நகர்ந்தன. பிள்ளைக்கு தண்ணீர் ஊற்றிப் பெயர் சூட்டும்  விழாவிற்கான ஏற்பாடுகளும் வெகு ஜோராய் ஆரம்பித்திருந்தனர் வீட்டினர்.

     பிள்ளைக்கு தாய்வீட்டுப் பாட்டன், பாட்டி சீராய் தங்கச் சங்கலி, கைகாப்பு, என வைரமும், வீரபாண்டியும் வாங்கி வந்திருக்க, தங்கரத்தினம் அவர் சொன்னது போலவே தங்களது தேக்குத் தோப்பிலிருந்த ஒரு மரத்தை வெட்டி அழகிய வேலைப் பாட்டிலான தேக்கு மரத் தொட்டில் செய்யக் கொடுத்திருந்தார் பேரனுக்காக. அதோடு சேர்ந்து பேரனுக்கு காற்தண்டையும் தங்கத்தில் வாங்கி வந்திருக்க,

     “எல்லாத்தையும், தாத்தாங்களும், பாட்டியுமே செய்து போட்டுடீங்கன்னா அம்மா, அப்பா நாங்க என்ன செய்து போடுறதாம் எங்க பிள்ளைக்கு?!” என்று கண்ணன் அவர்களிடம் சண்டையே பிடித்துக் கொண்டான் அவர்கள் நகைகளை வாங்கிக் கொண்டு வந்து காட்டியபோது.

     “உன் மவனுக்கு நீ இன்னும் நல்லா யோசிச்சு செய்டா வித்தியாசமா” என்று ரத்தினம் சொல்ல, என்ன செய்வது என்று மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டவனுக்கு சட்டென அந்த யோசனை தோன்றியது.

     ஆனால் அந்தச் சிறிய கிராமத்தில் அவன் நினைத்ததை வாங்க முடியாது என்று எண்ணியவன், கார்த்திக்கை அழைத்துக் கொண்டு விருதுநகரின் பெரிய கடை வீதிக்குச் சென்றான்.

Advertisement