Advertisement

     “அட ஊட்டுக்கு உள்ள வந்ததும் பாருங்களேன்டி! அதுக்குள்ள என்ன அவசரம்?!” என்று பாட்டி கத்த,

    “கிழவி கத்த ஆரம்பிச்சுடுச்சு” என்று சிறுசுகள், முனகிக் கொண்டு,

     “உன் பிள்ளை அப்படியே செக்கச்செவேல்னு அவங்க அப்பனை உரிச்சு வச்சிருக்கான்டி உன் அழகையும் சேர்த்து” என்று மெச்சிவிட்டு,

     “அப்புறமா வீட்டுக்கு வந்து சாவகாசமா பார்க்குறோம்” என்று விலகிய நேரம், அவர்கள் வீட்டினருகே இன்னொரு கார் வந்து நின்றது.

     “யாரா இருக்கும்?!” என்றபடி வைரம் பார்க்க, உள்ளே தனது மருமகனைக் கண்டதும் அத்தனை ஆனந்தம் அந்த அத்தைக்கு.

     “அய்யா?!” என்று அவர் கண்ணன் வந்த காரின் அருகே செல்ல, கவியும் ஆர்வமாய் அவன்தானோ என்று திரும்பிப் பார்த்தாள்.

     அவன்தான் என்று தெரிந்ததும், மனம் துள்ளிக் குதிக்க, ‘வெட்டகங்கெட்ட மனசுடி உன் மனசு’ என்று அவளையே சாடிக் கொண்டாள்.

     அவன் கார் நின்றது முதலே கவியின் புறமே பார்வையைச் செலுத்தி இருக்க, ஒரு நொடி அவள் கண்கள் மகிழ்வில் துள்ளியதையும், பின் அவளே அதை அடக்கியதையும் கண்டு உள்ளுர சிரித்துக் கொண்டான்.

     மனைவியோடு, சேர்ந்து அவள் கையில் இருந்த தங்களது அன்பின் பாலத்தையும் பார்த்தவனுக்கு மனம் பூரிப்பில் திளைத்தது.

     கிஷோர் வந்துக் கதவைத் திறந்துவிட்டு அவனுக்கு கைகொடுக்க,  அவன் மெல்லத் தன் காலை இறக்கி நகர்ந்து வெளியே வர, வைரம்,

     “என்ன என்னடா கண்ணா அச்சு?!” என்று பதறிப் போய்க் கத்தினார்.

     “ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல அத்தை. லேசான சுளுக்கு தான்” என்று சமாளித்தான்.

     “ஐயோ! அதனாலதான் அன்னிக்கே வர முடியலையாய்யா?!” என்று வைரம் கண்கள் கலங்க கேட்க,

     “ஐயோ அத்தை, அதான் ஒன்னுமில்லைன்னு சொல்றேனே” என்று இறங்கியவனைப் பார்த்து கவிக்கும் சட்டெனக் கண்கள் கலங்கி விட்டது.

     “ஐயோ?! என்ன என்ன ஆச்சு மாமா?!” என்று பதறிவிட்டாள் தன் கோபமெல்லாம் ஒருநொடி மறந்து வெகு காலங்களுக்கு பின் மாமா என்ற அழைப்போடு.

     அவளின் அந்த ஒற்றை அழைப்பில் நெஞ்சுருகிப் போனவன்,

     “ஒண்ணுமில்லை கவிம்மா!” என்ற தலையசைப்போடு, மெல்ல கிஷோரின் உதவியோடு அவளருகே நடந்து வந்து பிள்ளையைக் கொடுக்கும்படி கைநீட்ட, அவள் கைகள் தாமாக பிள்ளையை அவனிடம் கொடுத்தது. பிள்ளையைக் கையில் வாங்கியதும் அதை உச்சிமுகர்ந்து நெகிழ்ந்து முத்தமிட்டவன், ஒருகையில் தன் மகனை மார்போடு சேர்த்தணைத்து,  மறுகையில் மனைவியின் தோளைச் சேர்த்தணைக்க, அங்கிருந்த அனைவருக்குமே அந்தக் காட்சியைக் காணப் பேரின்பமாய் இருந்தது

     “ம் இப்போ எடுங்க அத்தை ஆரத்தியை” என்று கார்த்திக் கற்பகத்திடம் சொல்ல,

     “ம். ம் மாப்ளை” என்றவர், மகிழ்ச்சியுடன் மூவருக்கும் ஆரத்தியை எடுக்க, கனகாம்புஜம் பாட்டி, வீரபாண்டி, மருது, கங்கா, முருகன் அனைவரும் அவர்களை ஆனந்தமாய் வரவேற்றனர்.

     கண்ணன், கவியின் தோளைக் கைத்தாங்கலாய் பற்றியபடியே நடக்க, அவள் அவனை நிமிர்ந்து பார்க்க,

     “ம்?!” என்று அவன் புருவம் உயர்த்த,

     “ம்ஹும்!” என்றாள் அவள் மெல்லிய குரலில்.

     “பயபுள்ளை வந்ததுமே பொண்டாட்டிக் கோபத்தைப் போக்க வழி தேடிட்டான்” என்று கார்த்திக் தன் மனைவியின் காதில் கிசுகிசுக்க,

     “ஏன் இங்க மட்டும் என்ன வாழுதாம்?!” என்று கங்கா, பதிலடி கொடுக்க,

     “என் பொண்டாட்டியை எல்லாம் நான் கோபப்படுற அளவுக்கு விடவே மாட்டேன்” என்றான் தன் உதடுகள் குவித்து ஒரு காதல் லுக் விட்டு.

     “ம்க்கும்!” என்று பிரதாப் கனைத்துக் குரல் கொடுக்க,

     “என்னடி திடீர்னு பக்கதுல ஏதோ ஒரு கழுதை கனைக்குது?!” என்று கார்த்திக் சொல்ல, பிரதாப்பின் முகம் அஷ்டகோணலாய் போன போக்கைக் கண்டு கங்காவிற்கு சிரிப்பு பீறிட்டது.

     “டேய்! பொண்டாட்டிங்க வந்துட்டா உங்களுக்கு பிரெண்ட்ஸ் குரல் எல்லாம் கழுதை குரல் மாதிரிதான் டா இருக்கும். எல்லாம் என் நேரம்! எனக்குன்னு ஒருத்தி வருவா இல்லை அப்போ கவனிச்சுகறேன் உன்னை” என்று முறைத்தபடி சொன்ன பிரதாப் கண்ணனது லக்கேஜையும் தங்களது லக்கேஜையும் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றான்.

     “கொஞ்ச நேரம் கூடத்துல உட்காருறியாடி, இல்ல ரூமுக்குள்ள போய் உட்காருறியா?” என்றார் வைரம் மகளிடம்.

     “பிள்ளையப் பார்க்க அக்கம்பக்கத்து ஆளுங்க வருவாங்க இங்கயே இருக்கட்டும்” என்று பாட்டி சொன்னதும், அவள் அவனைப் பார்க்க, அவன் மெலிதாய்ப் பெருமூச்சு விட்டான்.

     ‘உள்ள போன பக்கத்துல கூட உட்கார விடாம முறைப்பா அதுக்கே இங்கயே இருக்கலாம்’ என்று எண்ணியவன்,

      “என்னடா செல்லம் அப்படிப் பார்க்குறா?! அப்பா மேல கோவமா! அதான் இப்போ அப்பா வந்துட்டேன்ல! இனி எல்லாத்தையும் சரி பண்ணிடுவேன். நீங்களும் நல்ல பிள்ளையா கோபப்படாம அப்பாகிட்ட பாசமா இருப்பீங்களாம். சரியா” என்று மனைவிக்கும் சேர்த்து அவன் சொல்ல, அவனை முறைத்தவள், மெல்லத் தயங்கித் தயங்கி,

     “ரொம்ப வலிக்குதா?” என்றாள் அவனிடம்.

     “என் என்கிட்டயா கேட்ட கவிம்மா?!” என்று அவன் ஆச்சர்யமாய் கேட்க,

     ‘ம் இல்லை உங்க ஆயாகிட்ட!’ என்று மனதுள் முனகியவள் அவனை முறைக்க,

     “ஓ! என்கிட்டதானா?!” என்றுவிட்டு, மெல்ல யாருக்கும் கேட்கா வண்ணம்,

     “நீ என்கிட்டே பேசாம முகத்தைத் திருப்பிக்கும் போது இருக்கிற வலியை விட கம்மிதான்” என்றான்.

     ‘ம்! இதுகிட்ட கேட்டே இருக்கக் கூடாது!’ என்று எண்ணி அவள் திரும்ப,

     “பிள்ளையைக் குடுங்க அண்ணா எவ்ளோ நேரமா இங்க ஒருத்தி காத்துட்டு இருக்கேன்” என்று கங்கா பிள்ளையைக் கையில் வாங்கிக் கொஞ்ச ஆரம்பிக்க,

     “அப்படியே அவன் அப்பனை மாதரியே பாக்குறான் பாரு குறுகுறுன்னு!” என்று பிள்ளையின் கன்னம் பிடித்துக் கார்த்திக் கிள்ள, பிள்ளை வீல் என்று அழ ஆரம்பித்தது.

     “யோவ்! இப்படியா பிள்ளையைக் கிள்ளி விடுறது?!” என்று கங்கா அவன் கையில் பட்டென ஒரு அடி வைக்க,

     “ஏய் அதென்னடி மாப்பிள்ளையை அடிக்கிற?! கையை ஓடச்சுப்புடுவேன் ஓடச்சி!” என்று கற்பகம் மகளை மிரட்ட,

     “அத்தை இதுக்கே இப்படியா?! இன்னும் எங்க வீட்ல வந்து பாருங்க! என்னை எப்படில்லாம் அடிக்கிறா தெரியுமா?!” என்று கார்த்திக் பாவமாய்ச் சொல்ல,

     “அடிக்கழுதை! என்ன கல்யாணம் ஆகிப் போச்சே கைவைக்க மாட்டேன்னு தைரியமா? கைவச்சேன், விளாசிடுவேன் விளாசி!” என்று கற்பகம் கங்காவை அடிக்கக் கை ஓங்கிக் கொண்டு வர,

     “ஐயோ அத்தை!” என்று மனைவிக்கு முன் ஆபத்பாந்தவனாக சென்று நின்றான் கார்த்திக்.

     “நீங்க நகருங்க மாப்பிள்ளை! ரெண்டு போட்டாதான் அவ அடங்குவா!” என்று கற்பகம் சொல்ல,

     “அத்தை வயத்துல பிள்ளை வேற இருக்கு அத்தை!” என்று கார்த்திக் வக்காலத்து வாங்க,

     “அதுக்காகத்தான் நானும் பார்க்குறேன்! இல்லைன்னா இந்நேரத்துக்கு நாலு சாத்து சாத்தி இருப்பேன்” என்ற கற்பகத்தை,

     “போதும் விடு கற்பகம். அவளாச்சு அவ புருஷனாச்சு! கொஞ்சம் நீ இங்க வந்து எனக்குக் காய் வெட்டிக் குடு. மடமடன்னு சமைச்சிடறேன்” என்றார் வைரம்.

     “எதுக்காம் நான்தான் எல்லாருக்குமா சேர்த்து அங்கப் பொங்கி வச்சிருக்கேனே!” என்று கற்பகம் சொல்ல,

     “தம்பிங்க வேற ஊர்ல இருந்து வந்திருக்காங்களே?”

     “கொழம்பு பொரியல் எல்லாம் எல்லாருக்கும் காணும்! சோறு மட்டும் வடிச்சிக்கிட்டா போதும்”

     “சரி நான் போய் அரிசிக் களஞ்சி வைக்கிறேன்?” என்று சமயலறைக்குச் சென்றார் வைரம்.

     கற்பகமும், “நானும் வீட்டுக்குப் போய் கொழம்பு பொரியல் எல்லாம் கொண்டார்றேன்” என்று அவர்கள் வீட்டிற்குச் சென்றார் மகளை முறைத்தபடியே.

     “பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையா ஆட்டுற?! வீட்டுக்கு வா பார்த்துக்கறேன். அதுவும் என்ன சொல்ற? வயத்துல பிள்ளை இருக்கன்னுதான் அடிக்க விடாம தடுக்குறியா?! அப்போ நான் உனக்கு முக்கியமில்லை?!” என்று கங்கா கணவனின் காதோடு கடிக்க,

     “சும்மா சும்மா விளையாட்டுக்கு தானடி தங்கம்!” என்று கார்த்திக் மனைவியைத் தோளோடு சேர்த்தணைத்துத் தட்டிக் கொடுக்க,

     “டேய் கிஷோரு! இவனுங்க ரெண்டு பேரும் பண்ற அலும்பல்ல எனக்கும் சீக்கிரமாவே கல்யாணம் பண்ணிக்கணும் போல இருக்குடா. என்னமா வாழுறானுங்க!” என்று பிரதாப் வாய்விட்டுச் சொல்ல,

     “ம்க்கும்! வாழுறோம்! நாங்க! வாழ்ந்து பாருங்கடா அப்போ தெரியும்!” என்றான் கண்ணன் மனைவியைப் பாவமாய்ப் பார்த்தபடி.

     ‘ஏன் வாழலையா?!’ என்ற ரீதியில் கவி முறைக்க,

     ‘எங்க?! ஒரு நாள், ஒரே ஒரு நாள் ஏதோ தெரியாம ஒரு கோவத்துல, ஒரு வேகத்துல ஏதோ கசமுசா பண்ணிட்டேன்னு ஒரு வருஷமா ஒரு முத்தம் கூட இல்லாம வச்சு செய்யுறியேடி! அப்புறம் எங்கடி வாழுறது?!’ என்று அவன் மைன்ட் வாய்ஸில் கேட்டபடி மனைவியைப் பார்க்க,

     ‘நீ பண்ண வேலைக்குப் பக்கத்துல உன்னை உட்கார விட்டிருக்கேனே அதுவே வாழுறதாதான் அர்த்தம்!’ என்று கவியும் மைன்ட் வாய்சிலேயே பதில் சொல்ல,

     ‘வாழ்ந்துட்டாலும்!’ என்று சோகமே வடிவாய் பார்த்தவனைப் பார்க்கக் கவிக்குமே பாவமாய்த்தான் இருந்தது.

                                                          -உள்ளம் ஊஞ்சலாடும்…

    

    

       

     

  

                                 

Advertisement