Advertisement

   26

     அழைப்பைத் துண்டித்தவன், தனது முகத்தை இருகைகளாலும் ஆவேசமாய் அறைந்து கொண்டு அடக்கமாட்டாமல் வாய்விட்டுக் கதறி அழத் துவங்கினான் தான் செய்த தவறையெல்லாம் தீர்க்கும் வழி தெரியாதவனாய்.

     ஹாலில் படுத்திருந்த ஜோசப் அவனின் அழுகை சப்தம் கேட்டு,

     “சார், சார் என்ன ஆச்சுங்க சார்?! ஏன் சார் இப்படி அழறீங்க?! உங்க மனைவிக்கு நல்லபடியா குழந்தை பிறந்துடுச்சுதானே? இரண்டு பேரும் நல்லா இருக்காங்க தானே?!” என்றார் பதட்டமாய்.

     “ம் ம் ஜோசப்” என்று தலையசைத்தவன்,

     “நான் நாளைக்கே ஊருக்குப் போகணும்” என்றான்.

     “என்ன ஆச்சு சார்?! ஏதாவது பிரச்சனையா?!” என்றான் கலக்கமாய்.

     “இல்லை. ஆனா ஊருக்குப் போயே ஆகணும். இன்னிக்கு ராத்திரிக்குள்ள இந்தப் பனிப்புயல் நின்னே ஆகணும்!” என்றான் இயற்கைக்கே கட்டளை இடுவது போல்.

     அவன் தவிப்பும் அவள் வேதனையும் இயற்கைக்குப் புரிந்ததோ என்னவோ, போதும் இவர்களை சோதித்தது என்று, அடுத்த ஒரு மணி நேரத்தில் சற்றே சந்தமடையத் துவங்கி, அதிகாலை அளவில் முற்றிலுமாக அமைதி கொண்டது.

     மறுநாள் நடக்க முடிந்ததோ இல்லையோ, மெல்ல மெல்ல  ஜோசப்பின் உதவியோடு விமானம் ஏறி, சென்னைக்குப் புறப்பட்டும் விட்டான். பயணத்திற்கு முன் வெளிநாட்டிலிருந்த தங்களது அலுவலகத்திற்கும் சென்று செய்ய நினைத்ததை பிரச்சனை ஏதுமின்றி நல்லவிதமாகவே செய்து முடித்துவிட்டுக் கிளம்பி இருந்தான்.

     அதோடு சென்னை விமான நிலையத்திற்கு, கிஷோர், பிரதாப், இருவரில் ஒருவரை வந்து அவனைப் பிக்கப் செய்யும் படியும் அவன் சொல்லி இருக்க, இருவருமே அவனை வரவேற்க வந்திருந்தனர் அப்படியே அவனுடன் ஊருக்குச் சென்றுப் பிள்ளையையும் பார்த்துவிட்டு வரலாம் என்று.

                                             *****

     “என்ன மனுஷன் இவன், பிரசவம் வரைக்கும் போன்லயே தவம் கிடந்தவன், பிள்ளை பிறந்ததுல இருந்து அது முகத்தைப் பார்க்கணும்னு கூட ஒரு போன் போடலையே?! இவனுக்கு என்னதான் வந்திடுமோ ஆன்னா ஊன்னா?!” என்று வைரம், அவள் காதுபடவே திட்டிக் கொண்டே அவளுக்குக் காபியை ஆற்றிக் கொடுக்க,

       “சும்மா எதுக்கு இப்போ அதைத் திட்டுற?! அதுக்கு வேலை வந்துடுச்சோ என்னவோ?” என்றவளைப் பார்த்து முறைத்தவர்,

     “புரிஞ்சிக்க முடியலைடி! சத்தியமா புரிஞ்சிக்க முடியலை உன்னையும் உன் அருமைப் புருஷனையும்! என்னவோ போங்க” என்றுவிட்டு அவர் அழும் பிள்ளையைக் கையிலெடுத்து ஆட்டிக் கொடுத்தபடியே,

     “என்னடா ராஜா?! உன் அப்பனையும் ஆத்தாளையும் நீதான் வந்து அடக்கணும்! ரெண்டும் எங்ககிட்ட வித்தை காட்டுற மாதிரி உன்கிட்ட காட்ட முடியாதுல்ல?!” என, பிள்ளை,

     “ம் ம்!” என ம் கொட்ட அவருக்குமே சிரிப்பு எழுந்தது.

     “பாருடி! உன் பிள்ளை வந்துட்டானாம் உங்களை அடக்க, ம் கொட்டுறான் பாரு!” என்று வைரம் மகளிடமும் சொல்ல,

     “அடக்குவான் அடக்குவான் அவன் அப்பனை முதல்ல அடக்கச் சொல்லு” என்றாள் இவளுமே சிரிப்புடன்.

     ஆயிரம் துயரமிருந்தாலும், அமிழ்தினும் இனிய மழலையின் சிரிப்பில் துன்பமெல்லாம் தொலைந்து போய்விடாதோ என்ன!

                                            *****

     விமான நிலையத்தின் உதவிப் பணியாளர், கண்ணனை வீல் சேரில் உட்கார வைத்து அழைத்து வருவதைப் பார்த்து, கிஷோரும், பிரதாப்பும்,

     “ஏய் என்னடா இது?! என்ன ஆச்சு காலுக்கு?!” என்று பதறிக் கொண்டு அவன் அருகே வந்தனர்.

     “ஒண்ணுமில்லை. லேசா தசை பிரண்டிருக்கு அவ்ளோதான். என்னை அப்படியே இந்த வீல் சேரோடையே கார் கிட்ட கூட்டிட்டுப் போ” என்றான்.

     “ஏய் இந்த நிலைமையில எப்படிடா தனியா வந்த?!” என்றான் கிஷோர் மீண்டும்.

     “ப்ச் எல்லாத்தையும் இப்போவே சொல்லணுமா? போகும்போது சொல்றேன்டா.” என்று கண்ணன் சிடுசிடுக்க,

     “ப்ச்! எல்லாத்துலயும் உனக்கு நீ நினைச்சது நினைச்சவுடனே நடக்கணும்! இல்லை?!” என்று முறைத்தபடியே பிரதாப் வீல் சேரைத் தள்ளிக் கொண்டு செல்ல, கண்ணன் அந்தப் பணியாளருக்கு நன்றி சொல்லி அவனுடன் சென்றான்.

     கிஷோர் அவனின் லக்கேஜை எடுத்துக் கொண்டு பின்னே சென்று காரின் டிக்கியில் போட்டுவிட்டு வருவதற்குள், கண்ணன் பிரதாப்பின் உதவியுடன், காரில் ஏறி அமர்ந்திருந்தான்.

     “நீ கால் நீட்டியபடி கம்ஃபர்டபிலா பின்னாடி உட்காருடா. நான் முன்னாடி உட்கார்ந்துக்கறேன்.” என்றுவிட்டு கிஷோர் முன் சென்று அமர்ந்து கொள்ள, பிரதாப் வண்டியைக் கிளப்பி,

     “நேரா ஊருக்கு தானே?” என்றான்.

     “ஆமா வேற எங்க போக இவ்வளவு அவசரமா கிளம்பி வந்தேன்?!” என்று கண்ணன் குதர்க்கமாய் கேட்க,

      “இல்லை நீதான் சின்சியர் சிகாமணியாச்சே! ஆபீஸ்க்கு போயிட்டுப் போகணும்னு சொல்லுவியோன்னு பார்த்தேன்” என்று பிரதாப் நக்கலடிக்க,

      “என் நிலைமையைப் பார்த்தா எல்லாருக்கும் கிண்டலா  இருக்கா!” என்று முறைத்த கண்ணன்,

     “ரெண்டு பேருமே லீவ் போட்டுட்டீங்களா?!” என்றான்.

     “ஆமாடா நாங்களும் உன்னோட ஊருக்கு வந்து குழந்தையப் பார்த்துட்டு வந்துடலாம்னுதான்” என்று கிஷோர் சொல்ல,

     “அப்போ உங்க லக்கேஜ்” என்றான் கண்ணன்.

     “எங்களுக்கு என்ன ஒரு செட் ட்ரெஸ் இருந்தா போதும். எடுத்துகிட்டோம்.” என,

     “ம்” என்றான்.

     “சரி என்ன ஆச்சு உனக்கு? எப்படி அடிபட்டது?” என்று கிஷோர் கேட்க, கண்ணன் நடந்ததைச் சொன்னான்.

     “என்னவோ போடா, முதல்ல நீ எல்லாத்துக்கும் சதி பண்ண! இப்போ நேரம் உனக்கு சதி பண்ணுது!” என்றான் கிஷோரும் வருத்தத்துடன்.

     “அதான் வந்துட்டேன்ல எல்லா நேரத்தையும் சரி பண்ணிடுவேன்” என்று கண்ணன் நம்பிக்கையோடு சொல்ல,

     “சரியானா சந்தோஷம்தான். ஆனா நீதான் இன்னும் ரெண்டு வருஷத்துக்கு அங்க இருந்தாகணுமே?” என்று பிரதாப் கேட்க, கண்ணன் மெலிதாய்ச் சிரித்தான்.

     “என்னடா சிரிக்கிற?” என்று பிரதாப் மீண்டும் கேட்க,

     “ப்ராஜக்ட் ஹெட்கிட்டநேரடியாவே பேசிட்டேன்டா. இங்க நம்ம ஆபீஸ்ல பேசின போது அங்க இருக்க ஹையர் அபிசியல்கு பயந்தாங்க. ஆனா ஒரு வருஷமா அவரோட அங்க சேர்ந்து வொர்க் பண்ணதுல அவரும் ரொம்ப நல்லா பழக்கமாகிட்டார். சோ அவர்கிட்ட நேரடியாவே போய் பேசிப் பார்க்கலாம்னு பேசினேன். மனுஷன் முதல்ல ஏத்துக்கவே இல்லை! அப்புறம் நான் அங்க இருந்து என்னென்ன செய்யணுமோ, அதையெல்லாம் கண்டிப்பா இங்க இருந்தபடியே எந்த இடைஞ்சலும் இல்லாம நிறைவேத்திக் கொடுக்கறேன்னு சொல்லவும் ஒரு வழியா சம்மதிச்சுட்டார்” என்றான் நிம்மதிப் பெருமூச்சுடன்.

     “ஹேய் செம்மடா” என்று கிஷோர் சொல்ல,

     “என்ன?! உன் வெளிநாடு வாழ் கனவுதான் பறிபோயிடுச்சு” என்றான் பிரதாப்.

      “போடா! அதெல்லாம் அப்போ, இப்போ என் கவியோடயும் என் குடும்பத்தோடவும் இருக்கிறது மட்டும்தான் எனக்கு எல்லாத்தை விடவும் சந்தோஷம்” என்ற கண்ணனைப் பார்த்துச் சிரித்த கிஷோர்,

     “பட்டாதான் எல்லோருக்கும் புத்தி வருது.” என,

     “உண்மைதான்டா! என் சொர்க்கம் என் கைக்குள்ளயே இருக்கும்போது அதோட அருமை எனக்குத் தெரியலை! அதை நானே தவறவிட்டுட்டு இப்போ என் கைக்கு எடுக்க ஏங்கும் போது அது என்கிட்டே வரமாட்டேங்குது!” என்றான் கண்ணனுமே தன் சொர்க்கம் எதுவென்று உணர்ந்தவனாய்.

                                          *****

     “டேய் எங்கடா இருக்கீங்க?! ஹாஸ்பிட்டல்ல இருந்து கிளம்பிட்டீங்கன்னு சொல்றாங்க?!” என்று கண்ணன் கார்த்திக்கிற்கு அழைத்துக் கேட்க,

     “இப்போதான்டா வீட்டுக்குப் போயிக்கிட்டு இருக்கோம். நீ எப்படிடா வந்த?!” என்றான் கார்த்திக் ஆச்சர்யமாய்.

     “ம் பறந்துதான்” என்று கண்ணன் சொல்ல,

     “இதோடா?!” என்றவன்,

     “அப்படியே நேரா வண்டியை வீட்டுக்கு விடுங்க.” என்றான்.

     ‘யாரு? அதுவா இருக்குமோ?!’ என்று ஒரு நொடி யோசித்த கவி,

     ‘ஆமாம் அப்படியே வந்துட்டாலும்!’ என்று திட்டிக் கொண்டு அமைதியாகிவிட,

     “யாரு தம்பி வராங்க?” என்றார் வைரம்.

     “வீட்டுக்குப் போனதும் தெரிஞ்சிடும் ம்மா” என்றான் கார்த்திக் கண்ணன் வந்தது அவளுக்கும் அவர்களுக்கும் இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டுமே என்று.

     கார் வீட்டின் வெளியே வந்து நின்றதும், கற்பகம் ஆரத்தித் தட்டைக் கொண்டு வர, கங்கா, தோழியையும், தோழியின் மகனையும் பார்க்க ஆவலாய் ஓடி வந்தாள். பாட்டியும் கொள்ளுப் பேரனைப் பார்க்க ஆர்வமாய் எழுந்து வர, கவி, தான் ஈன்றெடுத்த பொற்செல்வனைக் கையில் ஏந்தியபடி வண்டியிலிருந்து இறங்கப் போனாள்.

     “கவி, இரும்மா. இறங்காம கொஞ்ச நேரம் அப்படியே உட்காரு” என்ற கார்த்திக் அவனுக்கு மீண்டும் அழைத்து,

      “எங்கடா வந்துட்டு இருக்கீங்க? நாங்க வீட்டுக்கு வந்துட்டோம்” என,

     “இதோ அஞ்சு நிமிஷத்துல வந்துடறோம்டா” என்றான் கண்ணன்.

     “எதுக்குப்பா புள்ளைய வண்டியிலேயே உட்காரச் சொல்லுற?” என்று ரத்தினம் வினவ,

     “அப்பா ஒரு அஞ்சு நிமிஷம்” என, அதற்குள், கவியின் வருகை அறிந்து அக்கம்பக்கத்து வீட்டினர்,

     “ஏய் கவியும் பிள்ளையும் வந்துட்டாங்க போல” என்று சொல்லி ஒவ்வொருவராய் கூடிவிட்டனர்.

Advertisement