Advertisement

  “சரிம்மா” என்று அவர் வெளியேற,

     “ஏம்மா உன் புருஷன் ஏன் உள்ளே வராம வெளியவே நின்னுக்கிட்டு இருக்காரு வந்ததுல இருந்து?” என்றபடியே ஆயாம்மா உள்ளே வர,

      “ஆரம்பிச்சுட்டியா சரசு உன் வேலைய?” என்ற செவிலி,

     “உன்னை என்ன கொண்டு வர சொன்னேனோ அதை மட்டும் கொண்டு வந்து கொடுத்துட்டுப் போகணும்” என்றார் அதட்டலாய்.

     “இல்லைம்மா சும்மா தெரிஞ்சுக்கலாமேன்னு கேட்டேன்” என்றவரிடம்,

     “என் வீட்டுக்காரர் வெளிநாட்டுல இருக்கார்ங்க.” என்றாள் கவி மெல்லிய குரலில்.

     “ஓ?! அப்படியா?! அதானே பார்த்தேன். பொண்டாட்டி இப்படித் துடியா துடிச்சிட்டு கெடக்கும் போது பக்கத்துல கூட வந்து நிக்கலையேன்னு நினைச்சேன்” என்றார் அவரும்.

     “ம்மா. இப்போ வலி கொஞ்சம் குறைஞ்சிருக்கு இல்லை. ஆனா ஜெல் வச்சதும் அதிகமாகும். விட்டு விட்டுதான் வலி வரும். தொடர்ந்து வலிக்கும் போது கூப்பிடுங்க. நானும் அடிக்கடி வந்து பார்க்கிறேன்” என்றுவிட்டு செவலியர் செல்ல, ஆயாம்மாவும்,

     “உங்க அம்மாவை அனுப்பி வைக்கிறேன் மா.” என்றுவிட்டு வெளியேறினார்.

     அவர்கள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் மீண்டும் வலி ஆரம்பித்தது கவிக்கு. வலி வந்தவுடனேயே பிள்ளை பிறந்துவிடுவது எல்லாம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.

     அவள் உள்ளே வலியால் துடித்துக் கொண்டிருக்க, அவனோ நொடிக்கு ஒருதரம் கார்த்திக்கிற்கு போன் செய்து அவன் உயிரை எடுத்துக் கொண்டிருந்தான்.

     “டேய் ப்ளீஸ் டா வீடியோ கால் போட்டுக் குடுடா அவகிட்ட” என்று.

     “டேய் இது கவர்மென்ட் ஹாஸ்பிட்டல் டா. அதுவும் இல்லாம அவ பாவம் பெயின்ல துடிச்சிட்டு இருக்கா. இந்த நேரத்துல உன்கூட உட்கார்ந்து வீடியோ கால் பேசிட்டு இருப்பாளா அவ?!” என்று கத்தினான் கார்த்திக்.

     “ப்ளீஸ்டா ப்ளீஸ்?! அவ கூட, அவ பக்கத்துல இருக்கணும் போல இருக்குடா! ஆனா ஆனா?” என்றவன் உள்ளம் கலங்க,

     “ப்ளீஸ் கார்த்திக்” என்று கெஞ்சவே ஆரம்பித்திருக்க, கார்த்திக்கிற்கும் வேதனையாய்தான் போனது.

     “சரி இரு கூப்பிடுறேன்” என்றுவிட்டு அவன் வாட்ஸ்அப்பின் வாய்ஸ் காலில் இருந்து வீடியோ காலுக்கு மாற்றி அழைப்பதற்குள் கண்ணன் அவனுக்கு அழைத்திருந்தான்.

     “இருடா.. அவங்க இப்போதான் பாத்ரூம் போயிருக்காங்க வந்ததும் கூப்பிடுறேன்” என்று கார்த்திக் சொல்ல,

      “பரவாயில்லை நீ லைன்லயே இரு. அவ வந்ததும் நான் பேசிக்கறேன்.” என்றவனைப் பார்க்க கோபத்தோடு சேர்ந்து பரிதாபமும் எழுந்தது.

     நிறைமாத வயிறோடு, நடக்கக் கூட முடியாமல் இடுப்பைப் பிடித்தபடி, முகம் முழுக்க வலியின் ரேகைகள் படர நடந்து வந்து கொண்டிருந்த மனைவியை வீடியோ காலில் பார்த்தவனுக்கு, நெஞ்சை அடைத்தது.

     “கவி கவிம்மா?!” என்று உருகியவன் கண்கள் நீரால் நிறைந்தன.

     அவள் மெல்ல நடந்து சென்று கட்டிலில் அமர்ந்ததும், கார்த்திக் வைரத்தை அழைத்து,

     “கண்ணன் லைன்ல இருக்கான் ம்மா. கவிகிட்ட போனைக் கொடுங்க” என்று கொடுத்துவிட்டு வெளியே சென்றுவிட, நேரே மகளிடம் சென்று போனை நீட்டியவர்,

     “கண்ணன் பேசுறான் பேசு” என்று போனை அவள் கையில் கொடுத்துவிட்டுச் செல்ல, அவன் வீடியோ காலில் அழைத்திருப்பதை கண்டதும், வலியைப் பொறுத்துக் கொண்டு, முகத்தைச சாதரணம் போல் வைத்துக் கொள்ள முயன்றாள்.

      “என்னை என்னை மன்னிக்கவே மன்னிக்காதடி” என்றவனால் அதற்கு மேல் பேச முடியாது தொண்டை அடைக்க,  அவள் அவன் முகம் பார்க்காமல் எங்கயோ பார்த்திருந்தாள்.

     அவனாலும் அதற்கு மேல் அவளிடம் வேறு எதுவும் பேச முடியவில்லை! சில நொடிகள் அமைதியாய் அவளையே பார்த்திருந்தவன்,

     அவளின் மேடிட்ட வயிற்றைப் பார்த்து, “பாப்பா… நீங்க அப்பாவை மாதிரி இல்லைதானே. நீங்க நல்ல பாப்பா இல்லை?!” என்று அவன் கேட்ட நேரம் பிள்ளை நன்றாய் கைகால்களை அசைத்துத் துள்ளியது உணர்ந்தவள் ஆச்சர்யமாய் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.

     ‘உன் பிள்ளை உன் பேச்சுக் கேட்டு அசையுறான்! பிள்ளை எனக்குள்ள வந்து ஒருவாரம் தான் நீ எங்க கூட இருந்த! அப்போ எல்லாம் பிள்ளைக்கு உன் குரல உணரக் கூட தெரிஞ்சிருக்காது. ஆனா இப்போ நீ பேசினதும் எப்படித் துள்ளுது பாரேன்.’ என்றாள் தன் கண்ணிலிருந்து வெளியேறத் துடித்த கண்ணீரை உள்ளடக்கி மனதோடு.

     “நீங்க சமத்துப் பிள்ளையா அப்பாவை மாதிரி அம்மாவை கஷ்டபடுத்தாம சீக்கிரம் அம்மா கைக்கு வந்துடுவீங்களா?!” என மீண்டும் பிள்ளையிடம் துள்ளல்.

      அதோடு சேர்ந்து வலியும் அதிகமாக, “அம்மா…?!” என்றாள் வலியில் வாய்விட்டு.

     “கவி கவிம்மா என்னடா ஆச்சு?!” என்று அவன் பதற, அவள் குரல் கேட்டு வைரமும் ஓடி வந்திருந்தார்.

     “அம்மா மறுபடியும் ரொம்ப வலிக்குதும்மா!” என்றாள் கவி.

     “சரி கொஞ்ச நேரம் இரும்மா. தொடர்ந்து வலிச்சாதான நர்சம்மா கூப்பிடச் சொன்னாங்க” என்று வைரம் அவள் கையைப் பற்றித் தேற்ற, இவனோ,

     “அதென்ன அத்தை அவ இப்படி வலியில துடிக்கிறா! அவங்க தொடர்ந்து வலிச்சாதான் வந்து பார்ப்பாங்களா?! எதுக்கு இந்த ஹாஸ்ப்பிட்டலுக்கு கூட்டிட்டு வந்தீங்க?! தனியார் ஹாஸ்ப்பிட்டலுக்கு கூட்டிட்டு போக வேண்டியதுதானே?!” என்றான் கோபமாய்.

     “அடேய் பேசாம இருடா! யாராச்சும் வந்துடப் போறாங்க. அவ உண்டானதுல இருந்தே இங்கதான் மாசாமாசம் பரிசோதனைக்கு வர்றா! நல்லாதான் பார்க்குறாங்க. நம்ம ஊர் பிள்ளைங்க எத்தனை பேருக்கு இங்க பிரசவம் நடந்திருக்கு தெரியுமா?! நீ பேசாம போனை வையி.” என்றுவிட்டு வைரம் போனைத் துண்டித்து விட, இவன் மீண்டும் அழைத்தான்.

     வைரத்திற்கு மகளைப் பார்ப்பதா, இவனிடம் மல்லுக் கட்டுவதா என்று புரியவில்லை.

      “எப்பா கார்த்திக் தம்பி, இந்தப்பா உன் சிநேகிதன் போன் அடிச்சுக்கிட்டே இருக்கான். நீயே பேசு. இங்க புள்ளைக்கு மறுபடியும் ரொம்ப வலி வந்துடுச்சு.” என்று அவர் கார்த்திக்கை அழைத்து போனைக் கொடுக்க,

     “டேய் குழந்தை பிறந்த உடனே கூப்பிடுறேன்டா! ஒண்ணும் பயமில்லைடா. நார்மல் டெலிவரி தான் ஆகும்னு சொல்லி இருக்காங்க.” என்று கார்த்திக் போனை துண்டிக்கப் போக,

     “இல்லை இல்லை போனைக் கட் பண்ணாதடா! என் கவியோட குரலையாவது இந்த நேரத்துல நான் கேட்டுக்கிட்டே இருக்கனும்டா ப்ளீஸ் ப்ளீஸ்டா” என்றான் வேண்டுதலாய்.

     இதற்குள் செவலியர் மறுபடியும் அவளைப் பரிசோதிக்க வர,

     “குழந்தை இன்னும் கொஞ்ச நேரத்துல பிறந்திடும். நான் போய் டாக்டரை கூப்பிடறேன்.” என்றுவிட்டுத் துரிதமாக செயல்பட, நொடிகளில் மருத்துவரும் வந்து அவளைப் பிரசவ அறைக்கு அழைத்துச் சென்றனர்.

     இதையெல்லாம் வீடியோ காலில், கேட்டும் பார்த்தும் கொண்டிருந்தவனுக்கு மனம் பதைபதைத்துக் கொண்டிருந்தது மனைவியையும் பிள்ளையையும் எண்ணி. அருகே இருந்திருந்தால் ஒருவேளை இவ்வளவு பயமும் பதட்டமும் இருந்திருக்காதோ என்னவோ?!

     அவனின் பதட்டத்தையும், அவளின் வலியையும் ஒரே நேரத்தில் போக்கும் தெய்வமாய், அவர்களின் செல்வப் புதல்வன், வீல் என்று அழுதபடியே அவளின் மடியிலிருந்து வெளிவந்தான்.

     மருத்துவர் பிள்ளையைக் கையில் எடுக்க, செவிலியர் தாய்க்கும் பிள்ளைக்குமான பந்தமான தொப்புள் கொடியை துண்டித்து, பிள்ளையை மருத்துவரிடமிருந்து வாங்கித் தாயிடம் காண்பித்தார்.

     அவள் கண்களில் கண்ணீர் வழியப் பிள்ளையைப் பார்க்க, அவள் முகத்தின் அருகே இருந்த பிள்ளைக் கையை அசைத்து அசைத்து அவள் கண்ணீரைத் துடைப்பது போல் இருப்பது கண்டு செவிலியரே அசந்து போனார்.

     “பார்த்தியா உன் பிள்ளையா?! அப்பா உன் பக்கத்துல இல்லைன்னா என்னமா நான் இருக்கேன் பக்கத்துலயேன்னு சொல்லாம சொல்லுறான்.” என்று சிரித்தார் ஆத்மார்த்தமாய்.

     “ம்!” என்று அவள் தன் கையை உயர்த்திப் பிள்ளையைத் தன்னருகே சேர்த்தணைத்து அதன் முகத்தோடு முகம் வைத்து அழுந்த முத்தமிட்டாள் ஆசையாய்.

     சிறிது நேரத்தில் பிள்ளையையும், தாயையும், சுத்தம் செய்துவிட்டு நார்மல் வார்டிற்கு மாற்ற, அனைவரும் பிள்ளையைக் காண ஆவலாய் ஓடி வந்தனர்.

     “கார்த்தி, அ அவளைப் பார்க்கணும்டா” என்று அந்நேரம் வரையிலும் வீடியோ காலிலேயே இருந்த கண்ணன் கேட்க,

     “இருடா முதல்ல பாப்பாவை காட்டுறேன்” என்ற கார்த்திக்,

     “அம்மா பாப்பாவை இங்க காமிங்க” என,

      “இல்லை நான் என் கவியைத்தான் முதல்ல பார்க்கணும்?” என்றான் கண்ணன் பிடிவாதமாய்.

      “நீ இருக்கியே?!” என்றவன் கவியிடம் சென்று போனைக் கொடுக்க, அதை வாங்கியவள், இப்போதும் அவன் முகம் பார்க்காமல் சோதிக்கத்தான் செய்தாள்.

     சோர்ந்து போய் வாடிய மலராய்ப் படுக்கையில் கிடந்தவளைப் பார்க்க கண்ணனுக்கு கண்ணீர் அருவியாய் பெருகியது. அவளுமே முகத்தைத் திருப்பிக் கொண்ட போதிலும், கண்ணீரை அடக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டுதான் இருந்தாள்.

     அவளையே விழி எடுக்காமல் பார்த்திருந்தவன், பேசத் திராணியற்றுப் போய் வெகு நேரம் ஆகியும் அமைதியாகவே இருக்க, அவன் அழைப்பைத் துண்டித்து விட்டானோ என்று சந்தேகித்து திரும்பிப் பார்த்தவளுக்கு மனம் பதைத்துப் போனது அவன் விழிகளில் வழிந்த நீரைக் கண்டு. 

     ‘செய்றதை எல்லாம் செய்துட்டு எதுக்கு அழுதாம்?!’ என்று மனதிற்குள் திட்டியவள்,

     “இப்போ எதுக்கு அழற?! நாங்க நல்லாதானே இருக்கோம்?!” என்றாள் கோபமும் ஆதங்கமுமாய்.

     ஆனால் அவனோ பதிலேதும் கூறாமல் பட்டென அழைப்பைத் துண்டித்தான்…

                                        -உள்ளம் ஊஞ்சலாடும்…    

    

    

    

                 

     

          

         

    

      

        

         

Advertisement