Advertisement

                                                                    25

     அவள் அலறல் சத்தத்தில் கண்விழித்த அனைவரும், என்னவோ ஏதோவென்று பதறி எழ,

     “பிரசவ வலி வந்துடுச்சோ?!” என்றபடியே வைரம் அவள் அறை நோக்கி ஓடினார்.

     உடன் வீரபாண்டியும், ரத்தினமும் ஓடி வர, அவள் வலியில் துடிப்பதைக் கண்ட வைரம்,

     “என்னங்க நீங்க போயி கார்த்திக் தம்பியை கூப்பிட்டுக் காரை  எடுக்கச் சொல்லுங்க.”

     “அண்ணே, ஆத்தா நீங்க ரெண்டு பேரும் இவளைக் கைத்தாங்கலா  அழைச்சிட்டு போய் திண்ணையில உட்கார வைங்க. நான் போய் ஹாஸ்பத்திரிக்கு எடுத்துட்டு போக வேண்டிய பொருள்களை எடுத்துட்டு வந்துடறேன்” என்று விட்டு ஓட, கவியின் கண்களில் நீர் நிறைந்துவிட்டது வலியையும் தாண்டி அவன் இந்நேரத்தில் அவளுடன் இல்லையே என்று.

     அவள் அழுவது கண்டு, “ஒண்ணுமில்லை ராசாத்தி. புள்ளை பொறக்குற வரைதான் வலியெல்லாம். பிறகு ஒண்ணும் இருக்காது. எல்லாம் சரியாப் போயிரும் தாயி” என்று பாட்டி அவளைத் தேற்ற, அவள் பல்லைக் கடித்துக் கொண்டு அழுகையை அடக்க முயன்றாள்.

     ‘மாமா மாமா’ என்று நாளுக்கு ஆயிரம் முறை அவன் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தவள் இப்போதெல்லாம் மறந்தும் அந்த வார்த்தையைச் சொல்ல விரும்பாது தவிர்த்தாள்.

     வலியின் கொடுமையை விட, அவன் நினைவுகளின் கொடுமையே அவளை வெகுவாய் வாட்டி வதைக்க,

     ‘உ உன்னால இப்போகூட என் பக்கத்துல இருக்க முடியலை இல்ல?! நீ நீ அன்னிக்கு அன்னிக்கு எனக்கு குடுத்த வலியை விட இப்போ நீ என் பக்கத்துல இல்லாததுதான் எனக்கு ரொம்ப, ரொம்ப கஷ்டமா இருக்கு. மன்னிச்சிடு மன்னிச்சிடுன்னு வார்த்தைக்கு வார்த்தை உருகுனியே, இப்ப, இப்ப நீ என் பக்கத்துல இருந்திருந்தா ஒருவேளை ந நான் உன்னை மன்னிச்சிருப்பேனோ?!’ என்று எண்ணி மனதிற்குள் மறுகிக் கொண்டிருந்தாள் பிரசவ வலியோடு சேர்த்து அவனைப் பிரிந்திருக்கும் வலியையும் ஒருசேரத் தாங்க முடியாதவளாய்.

                                           *****    

     அங்கு, தனது கைப்பேசியின் திரையில் ஆட்டுக்குட்டியைத் தூக்கிக் கொஞ்சி முத்தமிட்டுக் கொண்டிருந்த கவியின் முகத்தை வருடியபடி, மெல்லச் சிரித்தவன்,

     ‘எனக்கு எப்போ கவிம்மா இப்படி ஆசையா அழுத்தமா  முத்தம் குடுப்பா?!’ என்றான் ஏக்கமாய்.

     ‘எப்போவோ குடுத்திருப்பா! கெடுத்து விட்டதே நீதானடா?!” என்று மனம் குத்திக் காட்ட,

     ‘ஆமாம்! எல்லாம் என்னால்தான்! எல்லா தப்பையும் நான் செஞ்சிட்டு என் கவியை குறை சொல்லலாமா?!’ என்று தன்னையே சாடிக் கொண்டவன்,

     ‘எல்லாம் சரியா நடந்திருந்தா இந்நேரம் நான் உன் பக்கத்துல உன்னையும், நம்மக் குழந்தைய சுமந்துக்கிட்டு இருக்க உன் வயிற்றையும் சுத்திக் கைப்போட்டு இறுகக் கட்டிப் பிடிச்சு உன் முகத்தோடு முகம் உரச உன்னை ரசிச்சிக்கிட்டே உன் பக்கத்துல படுத்துட்டு இருந்திருப்பேன்டி உனக்கும் நம்ம பிள்ளைக்கும் பாதுகாப்பா’ என்றவன் நெஞ்சில் ஒருநொடி அத்தனை இன்பம் எழ, அடுத்த நொடியே, அதையெல்லாம் இல்லாது செய்தது தனது முட்டாள்தனமான முடிவுகள்தானே என்றும் தோன்றி அவனைப் பெரும் துன்பத்தில் ஆழ்த்தியது.

     என்னவோ, அந்நேரத்திற்கு அவள் பேசாவிட்டாலும், அவள் ‘ம்’ என்று சொல்லும் அந்தக் குரலோசை கேட்டால் கூட பரவாயில்லை என்று தோன்ற, அங்கு நள்ளிலிரவு தாண்டி இருக்கும் என்று தெரிந்தும் அவள் கைப்பேசிக்கே அழைப்பு விடுத்தான் மற்றவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று.

                                              *****

     இதற்குள், கார்த்திக், கங்கா, அவள் வீட்டினர் அனைவரும் அங்கு வந்திருக்க, வைரமும், வீரபாண்டியும், ரத்தினமும், அவளை அழைத்துக் கொண்டு போய் கண்ணனின் காரில் அமர வைத்தனர்.

     “கற்பகம், அம்மாவை பார்த்துக்கோ. நாங்க ஹாஸ்பத்திரிக்கு போயிட்டு என்ன எதுன்னு போன் பண்றோம்” என்ற வைரம்,

     “வண்டியை எடுங்க தம்பி” என, கார்த்திக் வண்டியை வேகமாய் மருத்துவமனை நோக்கிச் செலுத்தலானான்.

                                         *****

     அவர்கள் வண்டிக் கிளம்பியதும் வீட்டின் உள்ளே வந்து பாட்டியின் அருகில் அமர்ந்த கங்காவிற்கு அவளது கைப்பேசியின்  அழைப்புச் சத்தம் கேட்க,

     ‘இந்நேரத்துக்கு யார் கவி நம்பருக்குக் கூப்புடுறது. அண்ணனா இருக்குமோ?!’ என்று எண்ணியவள் உடனடியாக எழுந்து கவியின் அறைக்குச் சென்று அவளின் கைபேசியை எடுத்தாள்.

     அவள் நினைத்தபடியே கண்ணனே அழைத்திருக்க, “அச்சோ போனை எடுக்கறதுக்குள்ள கட் ஆயிடுச்சே!” என்று எண்ணியவள்,

     “இந்த நம்பர்ல வெளிநாட்டுக்குக் கூப்பிட முடியமான்னு தெரியலையே?! வாட்ஸ்அப்ல தானே அவங்களே கூப்பிடுவாங்க அண்ணனுக்கு” என்று சொல்லிக் கொண்டவள்,

     “சரி இவ வாட்ஸ்அப்குள்ள போயி கூப்பிட்டுப் பார்ப்போம்” என்று எண்ணி அவள் கவியின் வாட்ஸ்அப்பினுள் சென்று அவனுக்கு வாட்ஸ்அப் கால் செய்ய, அவனோ, அவள்  தூங்கி இருப்பாள், அதனால் தான் போனை எடுக்கவில்லை போல என்று எண்ணி மீண்டும் அழைக்காமல் விட்டிருக்க, வாட்ஸ்அப் மூலம் அவளே கால் செய்வதை எண்ணி முகம் முழுக்கச் புன்னகையுடன் அதனை அட்டென்ட் செய்து,

     “கவிம்மா” என்றான் சந்தோஷம் பொங்க.

     “அண்ணே நான் கங்கா பேசுறேன்” என்று அவள் சொன்னதும் பதட்டமாகிப் போனவன்,

      “கங்கா, கவி கவி எங்க? நீ ஏன் இந்நேரத்துக்கு இங்க இருக்க? அ அவளுக்கு ஒண்ணும்” என்று பதட்டமாய் கேட்டவனின் குரலில் இருந்த அன்பை எண்ணி வியந்த கங்கா,

     “அண்ணா ஒண்ணுமில்லை பதறாதீங்க! கவிக்கு பிரசவ வலி வந்துடுச்சு! எல்லாரும் அவளை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டுப் போயிருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க பிள்ளை பொறந்துடுவாரு” என்றாள் சந்தோஷமாய்.

     “என்ன அதுக்குள்ளயா?! இன்னும் நாள் இருக்கே?!” என்று கேட்டவனின் குரலில் தெரிந்த கவலையையும், வலியையும் உணர்ந்து கொண்டவள்,

     “என்ன அண்ணே செய்யிறது காலம் கணிச்ச கணிப்ப யாரால மாத்த முடியும்?!”  என்றவள்,

    “சரிண்ணே குழந்தை பொறந்ததும் அவரே உங்களுக்கு போன் பண்ணுவாரு. நான் போனை வைக்கட்டுங்களா?” என,

     “ம் சரிம்மா” என்று அழைப்பைத் துண்டித்தான்.

     ‘கவி கவிம்மா! என்னை என்னை மன்னிப்பியாடி?! இந்த நேரத்துல கூட நான் உன் பக்கத்துல இருக்க முடியாதபடி செய்துட்டேனே! காலத்துக்கும் இது உனக்கும் எனக்கும் மறக்க முடியாத வேதனையா இருக்குமேடி! நா நான் செஞ்ச தப்புக்கு எனக்கு மட்டும் தண்டனைய கொடுத்திருக்கக் கூடாத கடவுளே!’ என்று கலங்கித் தவித்தவன்,

     ‘என் கவியை ரொம்பக் கஷ்டபடுத்தாம எங்க குழந்தைய இந்த உலகத்துக்குக் கொண்டு வந்துடு கடவுளே!’ என்று கண்மூடி சில நொடிகள் இறைவனைப் பிரார்த்தித்துவிட்டு, தன் தந்தையின் கைப்பேசிக்கு அழைத்தான்.

     “டேய் கண்ணா, புள்ளைக்கு பிரசவ வலி வந்துடுச்சுடா. ஹாஸ்பத்திரிக்குத்தான் கூட்டிட்டு போயிட்டு இருக்கோம்.” என்றார் எடுத்த எடுப்பிலேயே.

      ரத்தினம் போனில் பேசியதைக் கேட்டு அவன்தான் அழைத்திருக்கிறான் என்று கண்டுகொண்டவள் மனம் மேலும் கலங்கிப் போக, அவனிடம் அந்நொடி பேச வேண்டும் என்று எழுந்த ஆவலைக் கட்டுபடுத்திக் கண்மூடினாள்.

      ஆனால் அங்கு அவனுக்கோ, அவர் போனை அட்டென்ட் செய்ததுமே அவள் வலியில் முனகும் சப்தம் மட்டுமே செவிகளை நிரப்பியிருந்தது.

     “அம்மா அம்மா!” என்று அவள் வலியில் துடிக்க,

     “கவி கவிம்மா!” இவன் மனதிற்குள் துடித்துக் கொண்டிருந்தான் செய்வதறியாமல்.

      இருவருமே அனுபவிக்க வேண்டிய சொர்க்க நொடிகள் இன்று நரகமாய்க் கழிந்தது அவன் செய்த முட்டாள் தனத்தினால்.

      “டேய் கண்ணா லைன்ல இருக்கியா இல்லையாடா நான் சொல்றது கேட்குதா?!” என்று ரத்தினம் குரல் கொடுக்க,

     “ஹான் இ இருக்கேன் அப்பா” என்றவன் குரல் கலங்கி இருந்தது.

     “டேய் கண்ணா அழறியாடா?!” என்று மகனின் வேதனை அறிந்து ரத்தினமும் வருந்த, அவன் அழுகிறானா என்று ஆச்சர்யம் கொண்டான் கார்த்திக்.

     கவிக்குமே அவன் அழுகிறான் என்று தெரிந்தும், ஒரு நொடி மனம் நெகிழ்ந்துதான் போனது. தான் வலியில் முனகுவது கேட்டு அவன் அழுகிறானோ, என்று எண்ணியவள், பல்லைக் கடித்துக் கொண்டு வலியைப் பொறுத்துக் கொள்ள முயல அவள் கண்களிலும் தாரைத் தாரையாய் கண்ணீர் பெருக்கெடுத்தது.

     “எ எனக்கு வலிக்கலைன்னு சொல்லு மாமா” என்றாள் வலியைப் பொறுத்துக் கொண்டு அமைதியாய்.

     அவளின் இத்தனை நேரத் தவிப்பும் அவன் அழுகிறான் என்று தெரிந்த நொடி சட்டென அடங்கிப் போயிருந்தது. அடங்கிப் போனது என்பதை விட அடக்கிக் கொண்டாள் என்பது தான் பொருந்தும்.

     தன் வலியை அவன் அறியக் கூடாது என்று அதை மறைத்துக் கொண்டு பேசும் கவியையும், அவளுக்காக அவன் அங்கு அழுகிறான் என்பதையும் வீட்டுப் பெரியவர்கள் முதல் கார்த்திக் வரை அந்நேரத்திலும் கண்டு வியந்துதான் போயினர்.

     ‘இவ்ளோ பாசத்தை வச்சிக்கிட்டு ரெண்டும் ஏன் முட்டிக்கிட்டே திரியுதுங்க?!’ என்று அவர்களால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

      இதற்குள் வண்டி மருத்துவமனையை நெருங்கிவிட, “சரிய்யா ஹாஸ்பத்திரிக்கு வந்துட்டோம். அப்புறம் கூப்பிடுறேன்” என்று ரத்தினம் போனை வைத்துவிட, அவர்கள் ஊரில் இருக்கும் அந்த சிறிய அரசு மருத்துவமனையில், இரவுப் பணியில் ஒரு செவிலியரும் ஒரு ஆயாம்மாவும் மட்டுமே இருந்தனர்.

     மருத்துவர் வீடு அருகிலேயே இருந்ததால், இவர்கள் போன் செய்து அழைத்ததும் நொடிகளில் வந்துவிட்டார்.

     கவியைப் பரிசோதித்த மருத்துவர், “இப்போ வலி அதிகம் இருக்காம்மா?” என,

     “இ இல்ல டாக்டர். முதல்ல இருந்ததை விட கம்மியாதான் இருக்கு?!” என்றாள்.

      “குழந்தை  பொசிஷனுக்கு வந்துடுச்சும்மா! ஆனா உடனே டெலிவரி ஆகும்னு சொல்ல முடியாது. கொஞ்சம் நேரம் எடுக்கும். இப்போதைக்கு ஜெல் வைக்கிறோம். வலி அதிகமாகும் போது கூப்பிடுங்க” என்ற மருத்துவர்,

     “இவங்க அம்மாவா நீங்க?” என,

     “ஆமாங்க” என்றார் வைரம்.

     “பக்கத்துலயே இருங்க. ஜெல் வச்சதும். அடிக்கடி யூரின் வந்துட்டே இருக்கும். நீங்களும் அவங்க வீட்டுக்காரரும் கூடவே இருந்து பார்த்துக்கோங்க. தனியா விடாதீங்க” என்றுவிட்டுச் செல்ல, வைரத்திற்கு பெரும் கவலையாகிப் போனது.

     ‘என்ன இது அவ துடிச்ச துடிப்புக்கு வந்ததும் பிள்ளை பொறந்துடும்னு நினைச்சா, நேரமாகும்னு சொல்றாங்களே?!’ என்று கலங்கி நிற்க,

     “ம்மா கொஞ்ச நேரம் வெளிய இரும்மா. ஜெல் வைக்கணும் என்று வந்தார் அந்தச் செவிலியர்.

   

Advertisement