Advertisement

லேசாய் விசிலடித்தபடியே உற்சாகத்துடன் முன்னேறியவன், தனது ஷூக்காலோடு பனிக்கட்டியில் கால் வைக்க அது சடுதியில் அவனை வழுக்கி விட்டிருந்தது.

     அவன் பாலன்ஸ் செய்ய முயல்வதற்குள்ளேயே தொப்பென்று கீழே விழ,

     “ஐயோ சார்!!” என்று கத்திக் கொண்டே கார்க் கதவைத் திறந்து கொண்டு ஓடி வந்தார் ஜோசப்.

     சின்ன சறுக்கல்தான் ஆனால் கால்களை மடக்கிக் கொண்டு விழுந்ததில், கணுக்காலில் சொல்லொணா வலி எழ, அவனால் சட்டென எழ முடியவில்லை.

     ஜோசப் வந்து அவனுக்குக் கை கொடுத்து தூக்கி விட்ட பிறகே அவனால் மெல்ல சமாளித்து எழ முடிந்தது. ஆனாலும் வலது காலை தரையில் ஊன்றவே முடியாத அளவிற்கு வலி உயிர் போக, அவன் மெல்ல ஜோசப்பின் தோளைப் பற்றிக் கொண்டு இடது காலிலேயே ஊன்றி நின்றான் செய்வதறியாது.

     “என்ன சார் இப்படியே நின்னா எப்படி? வாங்க ஹாஸ்பிட்டல் போகலாம்” என்று அவர் அழைக்க,

     “இ இல்லை எனக்கு வீல் சேர் அரேஞ் பண்ணி கொடுக்கறீங்களா ஜோசப்.” என்றான் வலியைப் பொறுத்துக் கொண்டு.

     “என்ன சார் பேசறீங்க நீங்க?! உங்களால காலை ஊன்றி கூட நிக்க முடியலை! நீங்க விழுந்த வேகத்துக்கு மசில் ஸ்ப்ரெயின் ஏதும் ஆகி இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு. முதல்ல வாங்க ஹாஸ்பிட்டல் போகலாம்” என்றார் அவர்.

     “இ இல்லை! எதுவா இருந்தாலும் ஊருக்குப் போய் பார்த்துக்கறேன். ப்ளீஸ் என்னை பிளைட் மட்டும் ஏத்தி விட்டுடுங்க ஜோசப்” என்றான் வேண்டுகோளாய்.

     “சார் இது ரொம்ப ரிஸ்க் சார். ஹாஸ்பிட்டல் போய் ட்ரீட்மென்ட் எடுத்துட்டு டாக்டர் அட்வைஸ் கேட்டுட்டு வேணா கூட நீங்க கிளம்புங்க. ஆனா இப்போ முதல்ல ப்ளீஸ் ஹாஸ்பிட்டல் வாங்க” என்று அவர் அழைக்க, இதனிடையே இத்தனை நேரம் நன்றாய் இருந்த இயற்கை இப்போதும் மீண்டும் மனிதர்களின் கணிப்பைப் பொய்யாக்கும் வண்ணம் லேசாய் பனிப்பொழிவை ஆரம்பிக்க, விமான நிலையத்திற்கு வந்த அனைவருக்குமே ஐயோ என்றானது இன்றும் தங்கள் பயணம் ரத்தாகி விடுமே என்ற கலக்கத்தில்.

     “சார் பனிபொழிவு வேற ஆரம்பிக்குது. அநேகமா மறுபடியும் விமானங்களை ரத்து பண்ணதான் வாய்ப்பிருக்கு. சோ ப்ளீஸ் கிளம்புங்க சார். முதல்ல ஹாஸ்பிட்டல் போயிடலாம். பனி அதிகமாகிடுச்சுன்னா அப்புறம் வெளியே எங்கும் போக முடியாத நிலைமை ஆகிடும். அதுக்குள்ள உங்களை ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு போயிட்டு வந்துடறேன். வாங்க சார் ப்ளீஸ்” என்றார் மீண்டும் ஜோசப் அவன் மீது இருந்த அக்கறையில்.

     ‘அவர் சொல்றதும் உண்மைதான். பனிப்பொழிவு அதிகமானா விமானமும் ரத்தாகிடுமே! என்ன இப்படி சதி செய்யுது இந்த இயற்கையும் என் கவி கூட இருக்க முடியாம?!’ என்று வருந்தியவன் ஜோசப் மீண்டும் வற்புறுத்தி அழைக்கவும், அவரைக் கைத்தாங்கலாய் பற்றிக் கொண்டு வந்து வண்டியில் அமர்ந்தான் மருத்துவமனைக்குச் செல்ல.

     அவர்கள் எதிர்பார்த்தது போலவே, அவனுக்கு கணுக்காலில் தசை பிரண்டிருக்க, க்ரேப் பான்டேஜ் மட்டும் போட்டு, குறைந்தது ஒரு வாரத்திற்கு அவன் தந்து வலது காலை ஊன்றி நடக்கக் கூடாது என்று மருத்துவர் வலியுறுத்தி அனுப்ப, பனிப்பொழிவு இப்போது மீண்டும் பனிப்புயலாய் உருவெடுக்க ஆரம்பித்திருந்ததில் விமானப் பயணமும் ரத்தாகி எல்லாம் சொதப்பியது.

     அவனை மீண்டும் அவனின் அறைக்கே கொண்டு போய் விட்ட ஜோசப்,

     “சார் உங்களால தனியா மேனேஜ் பண்ண முடியுமா நான் வேணா உங்களுக்கு துணையா இங்க இருக்கட்டுங்களா?” என்றார் அவனால் அவர் உதவி இன்றி நடக்கக் கூட முடியாது தடுமாறுவதைப் பார்த்து.

     “இருக்க முடியுங்களா ப்ளீஸ்?” என்று இவனும் கேட்க,

     “கண்டிப்பா சார்” என்றவர், அவனைக் கைத்தாங்கலாய் அழைத்துச் சென்று அமர வைத்தார்.

                                         *****

     அவன் ஊருக்கு வருகிறான் என்ற சந்தோஷத்திலும் நாளையோ அல்லது மறுநாளோ தங்கள் பேரனோ, பேத்தியோ  வரப் போகிறார்கள் என்ற சந்தோஷத்திலும் அவன் வீட்டினர் அனைவருமே மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தனர். அவளுமே வெளிப்படையாய் தன் மகிழ்வைக் காட்டிக் கொள்ளாமல் இருந்தாலும், இம்முறை அவனின் வரவை எதிர்பார்த்துதான் காத்திருந்தாள் தங்கள் மழலையை அவர்கள் இருவரும் ஒன்றாய்க் கையில் ஏந்த வேண்டும் என்ற கனவாவது நிறைவேறி விடுமா என்று!

     ஆனால், அவன் வீட்டிற்கு வந்திருக்க வண்டிய நேரத்தில் அவனது கைப்பேசி அழைப்புதான் வந்தது வீட்டிற்கு.

      வீட்டிற்கு எப்படி விஷயத்தைச் சொல்வது என்று காலை முதல்  தவித்தவன், அவர்கள் தன் வரவிற்காய் காத்திருப்பார்கள், எப்படியேனும் விஷயத்தை சொல்லித்தான் ஆக வேண்டும்  என்று ஒருவாரு மனதைத் தேற்றிக் கொண்டு அவர்களுக்கு அழைத்திருந்தான்.

     அழைத்தவன், தனது காலில் அடிபட்டதைச் சொன்னால் எல்லோருமே பதட்டம் கொள்வார்கள் என்று எண்ணி, அதைச் சொல்லாது இங்கு பனிப்புயல் ஏற்பட்டதன் காரணமாய் வர முடியவில்லை என்று மட்டும் கூற அனைவரின் மகிழ்வும் ஒரே நொடியில் தகர்ந்து போனது.

     “என்னடா இப்படி ஆகிப்போச்சு?!” என்று குறைபட்ட ரத்தினம்,

     “நீ ஒழுங்கா வளைப்பூட்டு போதே கிளம்பி வந்திருக்கலாம். இப்போ குடுத்த லீவை இன்னும் கொஞ்ச நாள் சேர்த்து முன்னமே கொடுத்திருக்கலாம் இல்ல உன் ஆபீஸ்ல?!” என்றார் ஆதங்கமாய்.

     அவனுக்குமே இப்போது அப்படித்தான் தோன்றியது. யாருக்குத் தெரியும் கொஞ்சம் தள்ளி ஆரம்பிக்கிற பனி இவ்ளோ சீக்கிரமே ஆரம்பிக்கும்னு என்று வருந்தியவன்,

     “நான் இங்க நிலைமை சரியானதும் உடனே கிளம்பி வந்துடறேன் ப்பா.  கவி, கவி பக்கத்துல இருக்காளா?” என்றான் தயங்கியபடியே.

     “நீ வரலைன்னு தெரிஞ்சதும் பிள்ளை முகமே வாடிப் போச்சு! இப்போதான் உள்ள போனா. இரு போனை எடுத்துட்டுப் போய் குடுக்கறேன்” என்று சொல்லியபடி சென்று அவர் போனை அவளிடம் கொடுக்க, மெல்ல அதை வாங்கிக் காதில் வைத்தவள் அமைதியாய் இருந்தாள்.

      “கவி?!” என்று அவன் அழைக்க, அவளிடம் பதிலில்லை!

     இப்போது மட்டும் அல்ல, அவன் ஊருக்குச் சென்ற நாளில் இருந்தே இப்படித்தான். யாரேனும் போனைக் கொண்டு வந்து கொடுத்தால், நல்ல பிள்ளை போல் போனை வாங்கிக் கொண்டு தனது அறைக்குப் போய்விடுபவள் ஒரு வார்த்தை கூட அவனிடம் பேசுவது இல்லை!

     “கவிம்மா இ இங்க மறுபடியும் பனிப்புயல் ஆரம்பிச்சுடுச்சும்மா. அதனால எல்லா ப்ளைட்சும் கேன்சல் ஆகிடுச்சு” என்றான்.

     ‘இப்ப என்ன வரமுடியாதுன்னு சொல்ற. அதானே?!’ என்று மனதில் நினைத்துக் கொண்டவள், கோபமும் வருத்தமுமாய் பட்டென கைப்பேசியைத் துண்டிக்க அவனுக்கு அவளது வருத்தம் எண்ணி மேலும் வருத்தமே எழுந்தது.

     “என்னாச்சுங்க சார்?! உங்க வீட்டம்மா கோவிச்சுக் கிட்டாங்களா?” என்று ஜோசப் சிரித்தபடியே தான் தயார் செய்து எடுத்து வந்த சாண்ட்விச்சை அவனுக்கு ஒரு தட்டில் வைத்து நீட்ட,

     “எங்க வேதனை உங்களுக்கு சிரிப்பா இருக்கா?!” என்றான் இவன் அதை வாங்கியபடியே.

     “அவங்க கோபப் படலைன்னாதான் சார் கவலைப்படணும். இந்த மனைவிங்க எல்லாருமே இப்படித்தான். என் வொயிப் இருக்காளே அவ பக்கத்துல இருக்கும் போதெல்லாம் சண்டை போட்டுக்கிட்டே இருந்தா. ஆனா இப்போ எப்போ இந்த வேலையை விட்டுட்டு வருவீங்கன்னு தினமும் கேட்டு நச்சரிக்கிறா?! எனக்கு மட்டும் என்ன ஆசையா சார்?! இங்க வந்து பொண்டாட்டிப் பிள்ளையப் பிரிஞ்சு இருக்கணும்ன்னு. நல்ல கம்பனி நல்ல சம்பளம்னு வந்தேன். பார்த்த டிரைவர் வேலையக் குடுத்துட்டாங்க. ம்! என்ன சார் பண்றது?! செலவு பண்ணி வந்த காசு போக கொஞ்சமாவது லாபம் சம்பாதிச்சிட்டு தானே ஊருக்குத் திரும்ப முடியும். அதுவும் அஞ்சு வருஷ காண்ட்ராக்ட் வேற” என்று அவர் கலகலப்பாய் ஆரம்பித்து ஏக்கமாய் பெருமூச்சுவிட,

     “என்னவோ ஜோசப், எல்லோருமே பணத்தைத் தேடி ஓடி ஓடி வாழ்க்கையத் தான் தொலைச்சிக்கிட்டு இருக்கோம், தொலையிறது தெரியாமயே.” என்றான் கண்ணனும் ஏக்கமும் வருத்தமுமாய்.

                                       *****

     இரவு அனைவரும் நன்கு உறங்கியிருக்க அவள் மட்டும் இன்னமும் உறங்காமல்,

     ‘இன்னும் ஒரு வாரம் ஆகும் போல உன் அப்பா ஊருக்குத் திரும்ப, அதுவரைக்கும் நீ காத்திக்கிட்டு இருப்பியா டா செல்லம்?!’ என்று அவள் தனது வயிற்றுக்குள் இருந்த பிள்ளையிடம் கேட்க, அவள் இடுப்பில் சுருக்கென்று வலி.

     “அம்மா?!” என்று வலியில் அவள் அலறிய அலறலில் வீட்டினார் மொத்தமும் கண்விழித்தனர்.

                                           -உள்ளம் ஊஞ்சலாடும்…

    

    

    

             

 

     

           

     

 

             

       

     

 

Advertisement