Advertisement

                                                                     24

     அவன் தன் கைவிரல்களைக் கோர்ப்பதும் பிரிப்பதுமாய் மிகப் பதட்டத்துடன் அமர்ந்திருக்க, அவள் மிக சாவகாசமாய் அன்ன நடை நடந்து மெல்லக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள்.

     வந்தவள் கதவைத் தாழிடாமல் வெறுமென சாற்றிவிட்டு அவன் அருகில் வந்து பால் சொம்பை நீட்ட,

     “கதவை சாத்தலையே பேபி!” என்றான் பால் சொம்பைக் கையில் வாங்கியவாறே.

     “எல்லாம் காரணமாத்தான். பாலை மட்டும் குடிச்சிட்டு தூங்கப் போறோம். அதுக்கு எதுக்கு கதவைச் சாத்திக்கிட்டு?!” என,

     “என்ன?!” என்று அதிர்ச்சியில் அவன் பால் சொம்பை நழுவ விடப் போக, சட்டென அதனை விழாமல் பிடித்துக் கொண்டவள்,

     “ப்ச்! சுண்டச் சுண்டக் காய்ச்சி கொண்டு வந்த பசும்பால். என்ன ருசியா இருக்கும் தெரியுமா? கீழப் போடப் பார்க்குறீங்க? நல்ல வேலையாப் பிடிச்சுட்டேன். இருங்க நான் குடிச்சிட்டு தரேன்” என்றுவிட்டு அவள், அவன் அருகில் அமர்ந்து பாலை ரசித்து ருசித்து சப்புக் கொட்டி அருந்த, அவன் பேயறைந்ததைப் போல் பேந்த பேந்த அவளைப் பார்த்திருந்தான் தனது முதல் ராத்திரி சோக ராத்திரி ஆகிவிடுமோ என்ற துயரத்தில்.

     “ஹ்ம்ம்! ரொம்ப ருசியா இருக்கு. இந்தாங்க நீங்களும் குடிங்க” என்றவள் அவனிடம் நீட்ட,

     “ரொம்ப முக்கியம்!” என்றான் முணுமுணுப்பாய்.

     “என்ன வேணாமா?! நானே குடிச்சிடவா?” என்று கேட்டபடி, அவள் மீதியிருந்த பாலையும் அருந்தப் போக, பட்டென அவள் கையில் இருந்தப் பாலைப் பிடுங்காத குறையாக வாங்கியவன்,

     ‘கொடுத்துத் தொலைடி! பாலையாவது குடிச்சிக்கறேன். நீ குடுத்த ஷாக்ல, ஒரே ஜெர்க்ல தின்ன சோறெல்லாம் ஜீரணமாகிடுச்சு. உன்னை ஆசைப்பட்டுக் கட்டினப் பாவத்துக்கு மொத ராத்திரியில உன் முகத்தை மட்டும் பார்த்துகிட்டு தூக்கம் வராம சோக கீதம் வாசிக்கப் போறவனுக்கு பாலாவது கிடைச்சதா இருக்கட்டும்!’ என்று எண்ணியபடி கடகடவென பாலைக் குடித்து முடித்தான்.

     “சரி! பால் மட்டும் போதுமா?! வேற” என்று அவள் கேட்ட துவனியில்,

     “என்ன கேட்டாலும் குடுப்பியா பேபி?!” என்றான் ஆசையும் ஏக்கமுமாய்.

     “ஹான் குடுப்பேனே! சரி, சொல்லுங்க இங்க இருக்க ஜாங்கிரி, மைசூர்பாக்கு, லட்டு, பால்கோவா இதுல எது வேணும்னு சொல்லுங்க. எடுத்துத் தரேன்” என்றாள் அவளும் ஆர்வமாய்.

     அவளை ஏகத்துக்கும் முறைத்தபடி முகத்தை ஏழு கோணல் ஆக்கிச் சுளித்தவன்,

     “உன் ஆர்வத்துல தீயை வைக்க?!” என்று முணுமுணுத்துக் கொண்டு,

     “ஓ! ஒ ஓ! சாப்பிடலாமே” என அவன் மலச்சிக்கல் வந்த மங்கியைப் போல் இளித்து வைக்க,

     “ம்” என்று அவனிடம் ஒரு ஜாங்கிரியை எடுத்து நீட்டியவள், தனக்கு பால்கோவாவை எடுத்துக் கொள்ள, அவன் அவளையே ஏக்கத்துடன் பார்த்தான்.

     “என்ன பால்கோவாவும் வேணுமா?” என்றவள்,

     “சரி இந்தாங்க” என்று கொஞ்சம் எடுத்துக் கையில் கொடுக்க,

     “பால் கோவாவா தனித்தனியா திங்கிற இடமாடி இது?!” என்று சத்தம் வராது முனகியவன், மெல்ல தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,

     “பே பேபி! இ இன்னிக்கு நமக்கு பர்ஸ்ட்நைட்” என்றான் சிங்கிளாய் இருந்து மிங்கிள் ஆன சிம்பன்சியைப் போல் இளித்து.

     “ஹான்! பர்ஸ்ட்நைட்ல?!” என்றவள்,

     “அதை நான் சொல்லணும்” என்றாள் முகத்தை டெரராய் மாற்றிக் கொண்டு.

     “இதுக்கு ஏன்டி, இப்படி முறைக்கிற? ஏதோ வேண்டாத வில்லன் உன் முதல்ராத்திரி அன்னிக்கு உன் பக்கத்துல உட்கார்ந்து இருக்க மாதிரி. நான் உன் புருஷன்டி” என்றான் அவனுமே இப்போது கொஞ்சம் தைரியமாய்.

     “அது நான் விருப்பப்பட்டு கல்யாணம் பண்ணி இருந்தா. இப்போ நீ எனக்கு வில்லன் மாதிரிதான்” என்று அவள் பல்லைக் கடித்தபடி சொல்ல,

     “என்ன?!” என்று அவன் அதிர்வுடன் பார்க்க,

     “ஆமாம்! பின்ன என்னை ஒரு வார்த்தைக் கேட்டிருப்பியா நீ, எனக்கு இந்தக் கல்யாணத்துல இஸ்டமான்னு? பாவம் என் லவ்வர் எனக்காக எங்க வீட்டுப் பின்னாடி இருக்கத் தோட்டத்துல காத்துகிட்டு இருக்கான்” என்று அவள் மூக்கை உறிஞ்சியபடி சொல்ல,

     “ஐயோ?!” என்று பதட்டத்தில் எழுந்தே விட்டான் கார்த்திக்.

     அவன் ரியாக்ஷனைப் பார்த்து, எழுந்த சிரிப்பை வாய்க்குள்ளேயே அடக்கியவள்,

     “ம், ம்?! எதுக்கு இவ்ளோ பதட்டம்? ஒரு படத்துல பாண்டியாஜன் அவர் முதல் ராத்திரி அன்னிக்கு அவரைப் பிடிக்காம கல்யாணம் பண்ணிக்கிட்ட அவங்க மனைவியை அவரோட காதலனோட அனுப்பி வைக்கல? ஏன் நாடோடிகள் படத்துல சசிக்குமார் கூட அனுப்பி வச்சாரே.” என்றாள் சாதரணமாய்.

     “அடியே நான் ஒண்ணும் அப்படிப்பட்ட தியாகி எல்லாம் இல்லடி. சாவடிச்சுடுவேன் உன்னைய!” என்று கார்த்திக் ஒரே பாய்ச்சலாய் அவள் மீது பாய,

     “யோவ் யோவ் என்னய்யா பண்ற?!” என்று அவள் கத்தக் கத்த, அவள் இதழ்களைச் சிறை செய்து விடுவித்தவன், அவள் அதிர்ச்சியில் இருக்கும் நேரத்தில், அவளை  அணைத்தபடியே இழுத்துக் கொண்டுச் சென்றுக் கதவைத் தாழிட, குறும்புடன் அவனைப் பார்த்தும் பாராது அவன் பிடிக்குக் கட்டுப்பட்டிருந்தவள்,

      “நா நான் சொல்ல வர்றதைக் கொஞ்சம்” என ஏதோ சொல்ல வர, அவள் வாய்க்கு மீண்டும் தனது உதடுகளைப் பூட்டாக்கியவன், அவளைத் தூக்கிக் கட்டிலில் போட்டு அவள் மேல் படர, அவன் உடலெங்கும் அவள் மீது படிந்த சிலிர்ப்பில் அவள் கண்களைப் பொத்திக் கொள்ள, மெல்ல அவள் கைகளை விலக்கியவன், அவன் முகமலரை மொய்க்கும் வண்டாய் வட்டமிட்டுத் தேனெடுக்கத் துவங்கினான்.

     அவனது ஆண்மையின் தேடலில் அவளது பெண்மை நெகிழ்ந்து துவள, இருவருக்குள்ளும் அழகிய தாம்பத்தியத்தின் பந்தம் அங்கே  உருவாகத் துவங்கியது.

                                     *****

     நாட்கள் மிக மிக அழகாக, இனிமையாக நகர்ந்தது கார்த்திக்கிற்கும் கங்காவிற்கும். இருவரும் ஒன்றாய் சேர்ந்து விவசாயம் பார்ப்பதும், ஒருவருக்கொருவர் சீண்டிச் சண்டையிட்டுக் கொண்டும் அடுத்த நொடியே சமாதானம் ஆகிப் போய்ச் சிரிப்பதும், பார்க்கப் பார்க்க கவிக்கு ஒருபுறம் மிக மிக மகிழ்ச்சியாகவும், ஒருபுறம் ஏக்கமாகவும் இருந்தது.

     அதிலும் கங்காவுமே இப்போது இரண்டு மாதக் கருவைச் சுமந்து கொண்டிருக்க, கார்த்திக் அவளைத் தாங்குவதைப் பார்க்கப் பார்க்கக் கண்ணனை அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை! எவ்வளவெல்லாம் கனவு கண்டிருக்கிறாள்? தன் மாமன் தன்னையும் பிள்ளையையும் இப்படித் தாங்குவான் அப்படித் தாங்குவான் என்று. இன்று அவன் அவள் அருகே கூட இருக்கவில்லையே!

     அதனாலேயே நிறைமாதப் பிள்ளைத் தாய்ச்சியாய் இருந்த போதும் அவள் நாள் தவறாது வயல் வேலைக்குச் சென்று கொண்டுதான் இருந்தாள் யார் சொல்லியும் கேட்காது.

     அவள் வீட்டில் இருக்கும் போதெல்லாம் அவன் நியாபகமே வந்து அலைகழிக்க, கோபமும், வேதனையும் ஒன்றாய் எழுந்து அவள் மனதைப் பாடாய்ப் படுத்தி எடுத்தால் அவளும் தான் என்ன செய்வாள்? வேலையில் கவனம் சென்றாலாவது, மனம் அவனை நினைப்பதை சற்று மறக்கும் என்று விடியல் முதல் இருட்டும் நேரம் வரை வயலிலும் தோப்பிலுமே நேரத்தைக் கழித்தாள் தினந்தோறும்.

     அவள் வளைகாப்பிற்குக் கூட அவனால் வர முடியாது போனது, பிரசவ நேரத்தில் அவன் அவள் உடன் இருக்க வேண்டும் என்று விடுப்பு கேட்டிருந்ததால். அதுவே அவளுக்குப் பெருத்த ஏமாற்றமாக இருக்க, அங்கு அவன் கிளம்பவிருக்கும் முன்னிரவு முதல் பனி கொட்டித் தீர்க்க ஆரம்பித்திருந்தது அவன் செய்த தவறுக்கு தண்டனையாய் அவள் பிரசவ நேரத்தில் கூட அவள் உடன் இருக்க முடியாத நிலையை உருவாக்கி.

                                            ****

    

அங்கு அவன் தற்சமயம் வசித்து வரும் நியூயார்க் நகரத்தில், வானிலை மைனஸ் டிகிரிகளில் சென்றிருக்க குளிர் ஊசி போல் உடலைக் குத்தியதில் யாருமே வெளியே நடமாட முடியாத படி,  நகரம் முழுக்க பனியால் மறைந்திருந்தது.

     சரி, ஓரிரு நாட்கள் பொறுத்துப் பார்ப்போம், என்று பொறுத்தவன் ஆசைக்கு ஏற்றார் போல் அன்றைய நாள் பனிப்பொழிவு சுத்தமாய் நின்றிருக்க, மறுநாளே விமானங்களும் இயக்கப்பட அன்றே கிளம்பியிருந்தான் அவசரமாய்.

     வண்டிகள் அதிகம் காணப் படாத சாலையில், அவ்வப்போது சாலைத் துப்புரவுப் பணியாளர்கள் வந்து பனிக்கட்டிகளை விலக்கி விலக்கி பாதைக்கு வழிவகுக்க, அவன் ஏற்கனவே சொல்லி வைத்திருந்த தங்களது அலுவலக ஓட்டுனர் ஜோசப் தனது காரை எடுத்துக் கொண்டு வந்திருந்தார் அவனுக்காக.

     “சார் இந்த நேரத்துல இவ்ளோ ரிஸ்க் எடுத்துப் போகணுமா?!” என்று ஜோசப் கேட்க,

     “ம்!” என்றான் புன்னகையுடன்.

     “வொயிப் மேல அவ்ளோ பிரியமா சார்?!” என்று அவர் சிரிக்க,

     “அவ வச்சிருக்கிறதை விட கம்மிதான்” என்றவன்,

     “அவளுக்குன்னு நான் எதையுமே செய்தது இல்லை எங்க கல்யாணம் ஆனா நாளல்ல இருந்து. இந்த சந்தோஷத்தையாவது அவளுக்கு குடுக்கணும்னு நினைக்கிறேன்.” என,

     “புரியுது சார்! உங்க லக் இன்னையில இருந்து பனிப்பொழிவு இருக்காதுன்னு வெதர் ரிப்போர்ட் வந்ததுல விமானமும் மறுபடி இயக்கத் துவங்கிட்டாங்க!” என்றார்.

     “ஏற்கனவே புக் பண்ணி இருந்தது தானே. டூ டேஸ் முன்னாடி அவங்களே கேன்சல் பண்ணதுனால, எமர்ஜென்சின்னு சொன்னதும் அவங்களே மறுபடியும் அரேஞ் பண்ணிக் கொடுத்துட்டாங்க.” என்றான்.

     பனிப்பொழிவு நின்றிருந்த போதும் சாலைகள் முழுவதும் பனி படர்ந்திருக்க, அரைமணி நேரத்தில் அடைய வேண்டிய விமான நிலையத்தை அவர்கள் வந்தடைய, ஒரு மணி நேரம் ஆகியிருந்தது ஆங்காங்கே சாலையை சுத்தம் செய்து கொண்டிருந்ததால் நின்று நின்று வந்ததில்.

     ஏர்போர்ட்டை அடைந்ததும் தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு வண்டியில் இருந்து இறங்கியவன், உற்சாகமாய் ஓட்டுனரிடம் விடை பெற்றுக் கொண்டு தனது ட்ராலி பேகை இழுத்துக் கொண்டு நடக்க, அவளைக் காணப் போகும் மகிழ்வில் இருந்த சந்தோஷத்தில், அங்கே பாதையில் சுத்தம் செய்தும் தவற விடப்பட்டிருந்த பனிக்கட்டியில் ஒன்றை கவனிக்கத் தவறி இருந்தான்.

    

Advertisement