Advertisement

                                                                  23

     அவள் பதட்டமாய் எழுவதைப் பார்த்தவன், சட்டென கையைப் பின்னிழுத்துக் கொண்டு,

     “ஒ ஒண்ணுமில்ல கவி! நா நான் கு குழந்தைய,” என்று அவன் திணறவும், அவள் புரிந்து கொண்டாள், பிள்ளையை உணர ஆசைப்படுகிறான் என்று.

     அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை! ஒருபுறம் அவன் மேல் கடும்கோபம் இருந்தாலும், இது அவன் உணர வேண்டிய உரிமை அல்லவா?! அதிலும் அவன் இன்னும் ஓரிரு நாட்களில் வெளிநாட்டிற்குத் கிளம்பி விடுவான் அல்லவா? அதன் பிறகு அவனுக்கு இந்தச் சந்தர்ப்பம் கிடைக்குமோ இல்லையோ?! என்றெல்லாம் மனம் சிந்திக்க, அவள் அமைதியாய் அமர்ந்திருந்தாள்.

     “க கவி நான் ஒருமுறை ஒரே ஒருமுறை குழந்தையை” என்று அவன் மனம் கலங்க உள்ளே சென்ற குரலில், வெகு தயக்கமாய் வினவ, அவளுக்குமே நெஞ்சம் கனத்துப் போனது.

     ‘எவ்வளவு உரிமையாய் இந்த சந்தோஷங்களை உணர வேண்டியவர்கள்?! இன்று,’ என்று எண்ணியவள், சில நொடி தயக்கத்திற்குப் பின்,

     “ம்!” என மெல்லத் தலையசைக்க,

     “கவி?!” என்று கண்கள் பளிச்சிட அவள் அனுமதி கொடுத்துவிட்டாளா என்று அவன் மீண்டும் அவளையே பார்க்க,

     “ம்!” என்றுவிட்டு முகம் திருப்பிக் கொண்டாள் மறுபுறமாய்.

     “தேங்க் யு! தேங்க் யு சோ மச் டி கவி!” என்றவன், ஆசையும் ஆவலுமாய், தன் கைக்கொண்டு அவளின் மேடிட்ட வயிற்றைத் தீண்ட, அந்நொடி இருவருக்குள்ளுமே இனம் புரியா சிலிர்ப்பையும் பந்ததத்தையும் தோற்றுவித்தது அவர்களின் புத்தம்புதிய சொர்க்கம்!

     எப்படியெல்லாம் கொண்டாட வேண்டிய தருணம்?! இப்படி அனுமதி கேட்டும் அனுமதி பெற்றும் நிகழவேண்டியதாகி விட்டதே என்று எண்ணியவர்களின் கண்ணோரம் மெலிதாய் கண்ணீர்த் துளிர்திருக்க, இருவருமே ஒருவர் அறியாது ஒருவர் தத்தம் கண்ணீரைத் தங்கள் கண்களை விட்டு வெளியேறாமல் உள்ளடக்கினர்.

     அதன் பின்னும் சில நொடிகள் அப்படியே உடல் சிலிர்த்து அமர்ந்திருந்தவன், பிள்ளையிடம் அசைவு எதுவும் தென்படாததால்,

     “ப பாப்பா உதைக்கவே இல்லையே?! அமர்க்களம் பண்ணாதா உள்ள?!” என்றான் புரியாமல்.

     “ம்?!” என வெடுக்கென அவன் புறம் திரும்பியவள்,

     ‘நியாயமா உன்னை உதைச்சித்தான் இருக்கணும்! உன் புள்ளையாச்சே, உன்னை மாதிரிதானே இருப்பான்!’ என்று முறைத்தபடியே அவள் மைன்ட் வாய்சில் திட்ட,

     “என்னடி அப்படிப் பாக்குற?! நியாயமா உதைச்சி இருக்கணும்தானே நினைக்கிற?!” என்றான் இவன் அவள் மனதில் நினைத்ததை சரியாய் கணித்து.

     “ஆமாம்! இப்போ என்ன?” என்றாள் அவளும் நேரடியாகவே.

     “வேணும்னு உதைச்சுக்கோங்க!” என்று அவன் சட்டென அவள் பாதங்களை எடுத்துத் தன் மார்பில் வைத்துக் கொள்ள,

     “எ என்ன பண்ற நீ?!” என்றாள் காட்டமாய்.

     “உதைச்சுடுடி! எத்தனை முறை வேணும்னாலும் உதைச்சுடு! நான் செஞ்ச தப்புக்கு இதெல்லாம் ஒண்ணுமே இல்லை!” என்று அவன் அவள் பாதங்களை விடாமல் சொல்ல, அவள் முயன்று தன் பாதங்களை அவனிலிருந்து விடுவிடுவித்துக் கொண்டு,

     “அதான் பிள்ளைய தொட்டுப் பார்க்கணும்னு நினைச்சது நடந்துடுச்சு இல்ல! இன்னும் எதுக்கு இந்த நாடகமெல்லாம்?!” என்று நெருப்பாய் வார்த்தைகளை வீசியவள், சட்டென அவனிடமிருந்து விலகி சற்று தூரம் தள்ளி அமர்ந்து கொள்ள,

      “நாடகமா? நானா?!” என்றவனுக்குமே இப்போது லேசாய் கோபம் துளிர்த்திருந்தது.

     “என் பிள்ளைய நான் கொஞ்சறதுக்கு, நான் எதுக்குடி நாடகமாடணும்?! உனக்கு அவன் எந்த அளவுக்கு உரிமையோ அதேதான் எனக்கும். ஏதோ உன் வயத்துக்குள்ள இருக்கானேன்னு தொட்டுப் பார்க்க சம்மதம் கேட்டா ரொம்பதான் ஓவரா பேசுற நீ?!” என்றவன், இதுவரை இருந்த பொறுமையைக் கைவிட்டு, சட்டென அவள் அருகே நெருங்கியவன், அவன் என்ன செய்யப் போகிறான் என்று அவள் யூகிப்பதற்குள்ளேயே அவள் வயிற்றைக் கட்டி அணைத்து அழுந்த முத்தம் பதித்திருக்க,

     “ஏய் என்ன என்ன பண்ற நீ?! போ!” என்று அவள் அவனை விலக்கித் தள்ளத் தள்ள, மீண்டும் மீண்டும் சில முத்தங்களைப் பதித்து மீண்டவன்,

     “உனக்கெல்லாம் ஒண்ணும் கொடுக்கலை! என் பிள்ளைக்கு மட்டும்தான் கொடுத்தேன். உனக்குக் குடுத்தேன்னு நினைச்சு குதிக்காதே!” என்று தெனாவட்டாய்ச் சொல்லிவிட்டு அவனது பாயில் சென்று படுத்துக் கொள்ள,

     “ஹா!!!” என்று பல்லைக் கடித்தபடி அவனைப் பிடித்து இழுத்துத் தன் புறம் திருப்பியவள், அவனது தலை முடியை கொத்தாய்ப் பற்றி உலுக்க,

     “என்னடா கவிம்மா உனக்குக் குடுக்கலையேன்னு கோவமா?! இதோ வரேன்” என்று எழுந்தவன் அவள் தலையை தன்னருகே இழுத்துப் பிடித்து அவள் இதழைச் சிறை செய்ய,

     “ஐயோ இதுதான் தேடிப்போய் சூனியம் வச்சுகிறதா?!” என்ற நொந்து போனவள், தனது பலம் முழுவதும் ஒன்று திரட்டி அவனைத் தள்ளிவிட முயல அவனோ அசைந்தால்தானே,

     “இப்ப என்ன? போதும்! அவ்ளோதானே? சரி போதும். அப்புறமா குடுத்துக்கறேன்” என்று தானே அவளை விடுவித்து விலகியவனை, இப்போது அவளால் கொலைவெறியுடன் பார்க்க மட்டும்தான் முடிந்ததே தவிர வேறு எதுவும் செய்ய இயலவில்லை! பின்னே அவள் வேறு ஏதும் செய்யப் போய் அவன் மீண்டும் முத்தக்காட்சியை அரங்கேற்றி விட்டால்!

     “முறைச்சது போதும் கவிம்மா. படுத்துத் தூங்கு” என்றுவிட்டு அவன் கூலாக விசிலடித்தபடியே குப்புறக் கவிழ்ந்துப் படுத்துக் கொள்ள, இவளுக்குத்தான் தூக்கம் பறிபோனது அவனது திடீர் முத்தத் தாக்குதலில்.

     “ஹ!!” என்று பல்லை கடித்தபடி படுத்திருந்தவனை ஓங்கிக் குத்தலாம் என்று கையை ஓங்கிக் கொண்டு போனவள் சட்டெனக் கையைப் பின்னிழுத்துக் கொண்டாள். அவள் மீண்டும் அடிக்கப் போய் அவன் மீண்டும் வேண்டுமென்றே ஏதேனும் ஏடாகுடம் செய்வான் என்று.

     அன்றைய இரவு அவனுக்கு நிம்மதியான தூக்கத்தையும், இவளுக்கு நிம்மதியற்ற தூக்கத்தையும் கொடுத்து விடிந்தது.

     இரண்டு நாட்கள் கழித்து அவன் கிளம்பும் நேரம் அனைவருமே இம்முறை அவனை மனமே இன்றி போனாலும், முன்போல் திட்டி வழியனுப்பாமல், அவர்களின் வாழ்வு சந்தோஷமாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையில் அவனை வழியனுப்பிக் கொண்டிருந்தனர். ஆனால் அவள் மட்டும் இப்போதும் வெளியே வரவே வராது சதி செய்து கொண்டிருந்தாள் தனது அறையில் தன் பிள்ளையிடம் அவனை முறையிட்டபடி.

     “அடியே கவி இன்னும் என்னடி பண்ற உள்ளேயே உட்கார்ந்துகிட்டு?!” என்று வைரம் குரல் கொடுக்க,

     “அதான் நீங்க எல்லோரும் இருக்கீங்களே உன் மருமவனை வழியனுப்ப” என்று உள்ளிருந்தே அவள் சிடுசிடுத்தாள்.

     “நீ  இரு அத்தை நான் போய் கூட்டிட்டு வரேன்” என்று அவன் உள்ளே வர,

     “இப்போ கூட உன் அப்பன் அந்த வேலைதான் முக்கியம்னு போறாரு பாரு! நான்தான் அதுக்கு முக்கியமில்ல, உனக்காக வாச்சும் இங்கயே இருக்கலாம்ல?!”  என்று அவள் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டவனுக்கு நெஞ்சம் கனத்துப் போனது.

     ஆனாலும் வேறு வழியில்லையே ஒப்புக் கொண்ட வேலையை முடித்துத் தானே ஆக வேண்டும்! மெலிதான பெருமூச்சொன்றை இழுத்துவிட்டவன்,

     “கவி” என, அவள் திரும்பிக் கூட அவனைப் பார்க்கவில்லை.

     “கவிம்மா” என்று இப்போது அவன் அவள் தோள் தொட்டுத் திருப்ப,

     “இன்னும் ரெண்டரை வருஷம் நான் இந்த வேலையை செய்துதான் ஆகணும் கவிம்மா. அதுக்கப்புறம் உன்னை விட்டு நான் எங்கயுமே போக மாட்டேன்” என்று அவன் சொல்ல, அவள் மனதில் ஒரு நொடி சந்தோஷம் எழுந்தாலும், மறுநொடியே,

     ‘ரெண்டரை வருஷம்?!’ என்ற வார்த்தை அந்த சந்தோஷத்தை அப்படியே அழித்துப் போட்டது.

     ‘ரெண்டரை அருஷம் கழிச்சு வந்துட்டாலும், நீ அந்தப் பட்டணத்து விட்டு இங்கயே இருந்துடுவியா என்ன?!’ என்று எண்ணி அவள் பெருமூச்செறிய,

     அந்த ஒற்றை மூச்சுக் காற்றிலிருந்தே, இப்போது அவள் மனதைப் படிக்கக் கற்றுக் கொண்டிருந்தவன்,

     “கண்டிப்பா இங்கதான் இருப்பேன் கவிம்மா! உன்னை விட்டு இந்த மண்ணைவிட்டு எங்கயும் போக மாட்டேன். நிஜம்மா” என்றான் வாக்குறுதியாக.

     ஆனால் இப்போது அவளால் எதையுமே நம்பவும் முடியவில்லை. ஏற்கவும் முடியவில்லை! எதுவுமே பேசாமல் அமைதியாய் மட்டும்தான் நின்றிருந்தாள்.

     “சரி. நீ இப்போ நம்ப வேணாம். நடக்கும் போது நம்பு” என்றவன், சட்டென அவள் முன்புறம் வந்து, அவள் நெற்றியில் இதழ்பதித்து மீண்டு, பின் அவள் வயிற்றிலும் இதழோற்றி எழ, அவள் லேசாய் கலங்கத் துடித்தத் தன் கண்களை கட்டுப்படுத்தி நின்றாள்.

     “நான் கிளம்பறேன் கவிம்மா” என்றவனுக்கு அவள் விடை கொடுக்கவும் இல்லை அவன் முகம் பார்க்கவும் இல்லை! அவனாலும் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் போக, விருட்டென்று அங்கிருந்து கிளம்பிவிட்டான் எங்கு இன்னும் சில நொடிகள் அங்கே நின்றால் தன்னால் கிளம்பவே முடியாது என்ற எண்ணத்தில்.

                                        *****

     “கெட்டிமேளம் கெட்டிமேளம்!” என்று அயர் சொல்ல, ஜோராய் மங்கள வாத்தியம் முழங்க, ஊர் மக்களின் அட்சதையும் வாழ்த்தும் தங்களை நிறைக்க, தான் கைபிடிக்க ஆசைபட்டவளின் கழுத்தில் மங்களக்கயிற்றைப் பூட்டினான் கார்த்திக்.

     அவனைப் பார்க்கும் போதெல்லாம் முகம் திருப்பிக் கொண்டும், முறைத்துக் கொண்டும் சுற்றிக் கொண்டிருந்தவள், இன்று மனம் நிறைய, முகம் முழுக்க புன்னகையுடன் அவன் சூட்டிய மாங்கல்யத்தை ஏந்திக் கொண்டாள் தன் நெஞ்சில்.

     கவி, கார்த்திக்கின் தங்கை முறையில் நின்று தன் தோழிக்கு நாத்தனார் முடிச்சு போட, மூவருக்குமே மிக நெகிழ்வான தருணமாய் அது அமைந்துப் போனது.

     கண்ணனால் தான் அவன் ஊருக்கு வந்து திரும்பிய அதே மாதத்தில் திருமணம் என்பதால், மறுபடியும் உடனடியாக திருமணத்திற்கு வர முடியாது போனது. ஆனாலும் பிரதாப்பின் உதவியால் அவனது கைபேசி மூலம் தனது கைப்பேசியில் திருமணத்தை லைவில் பார்த்துக் கொண்டிருந்தான்.

     அனைவரின் சந்தோஷமும் கவி, கண்ணனையும் சூழ்ந்திருக்க, மனைவியின் முகத்தில் இருந்த சிரிப்பை ஒருநொடி கூட தவற விட மனமில்லாமல் கண்ணன் மாப்பிள்ளைப் பெண்ணை விட்டு விட்டு தனது மனைவியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான் வைத்த கண் வாங்காமல்.

     பிரதாப் தனது மொபைல் கேமராவில் மாப்பிள்ளை பெண்ணையே ஜூம் செய்து காண்பிக்க,

     “டேய்! நீ ஒண்ணும் சூமெல்லாம் பண்ண வேணாம் அப்படியே புல் வியுவே காமிடா” என்றான் கண்ணன்.

      “என்ன இவன் சும்மா சும்மா புல் வியுவே காமின்னு சொல்றான்?!” என யோசித்த நொடி, அவனுக்குப் புரிந்து போனது.

     “அடேய்! உனக்கு என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது?! உன் பொண்டாட்டியைப் பார்க்கணும்னா அவங்க போனுக்கு வீடியோ கால் போட்டுப் பேச வேண்டியதுதானே?! என்னை என்னை லைவ் டெலிகாஸ்ட் பண்றவன்னு நினைச்சிட்டியா?!” என்றான் சிடுசிடுப்பாய்.

     “ம்கும்! அவன் நார்மல் காலே பேச மாட்டா இதுல வீடியோ கால் வேற?!” என்று முணுமுணுத்தவன்,

     “டேய் மச்சான் சொன்னாப் புரிஞ்சிக்கோடா, ப்ளீஸ் அவளைப் பார்த்து எவ்ளோ நாள் ஆகுது தெரியுமாடா?!” என்ற கண்ணனைப் பார்க்கவும் அவனுக்குப் பாவமாய்த்தான் போனது.

     “என்னமோ போடா! நீ பண்ணி வச்ச வேலை கடைசியில உனக்கே ஆப்பு வச்சிடுச்சு பார்த்தியா?!” என்று சலித்துக் கொண்டு அவனது மனைவியை இப்போது ஜூம் செய்து காண்பிக்க, கவி இப்போது இன்னும் சற்று பூசினார் போல் கர்ப்பகாலத்தின் மெருகூட்டிய அழகோடு மிளிர்ந்ததைப் பார்க்க அவன் உள்ளம் மகிழ்ச்சியில் ஊஞ்சல் போல் ஆடியது.

     “சாரிடி கவி!” என்று மனதோடு முனகியவன்,

     “நான் செஞ்ச தப்பால இன்னிக்கு உன்னையும் தவிக்க வச்சுட்டேனேடி! வந்துடறேன் சீக்கிரமே உன்கிட்ட வந்துடறேன்.” என்றான் மெல்ல.

     “பார்த்துட்டியாடா கை வலிக்குதுடா! எவ்ளோ நேரம் ஒரே பொசிஷன்ல போனைப் பிடிச்சிட்டு இருக்கிறது?” என்று பிரதாப் கேட்க,

     “டேய் டேய் இன்னும் கொஞ்ச நேரம் டா” என்றவனிடம்,

     “இரு நான் வேணா உன் வொய்ஃப்கிட்டயே கொண்டு போய் போனைக் குடுக்கறேன்!” என்றதும்,

     “டேய் டேய் டேய் டேய்! இருடா! அவளே இப்போதான் சந்தோஷமா இருக்க என்னைப் பார்த்தா டென்ஷன் ஆகிடுவாடா. வேணாம் விடு” என்று அவன் சோகமாய்ச் சொல்ல, பிரதாப்பிற்குப் பாவமாகிப் போனது.

     “ஆனாலும் நீ பண்ண வேலைக்கு இதெல்லாம் உனக்கு வேணும்தான். அந்தப் பொண்ணைக் கொஞ்சமாவா பாடு படுத்தின?!” என்றவன்,

     “சரி சரி! போனப் போகுது! இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே கால்ல இருக்கிறேன்” என்றான் கொஞ்சமே மனம் இறங்கி.

     மனைவியை ஆசை தீர சில நிமிடங்கள் ரசித்திருந்தவன், “டேய் அப்படியே கார்த்திகிட்ட போனைக் குடுடா. அவனுக்கு விஷ் பண்ணிடறேன்” என, பிரதாப் கார்த்திக்கிடம் சென்று போனைக் கொடுக்க,

     “டேய் மச்சான். ஹேப்பி மேரீட் லைஃப் டா! கங்கா உனக்கும் என்னோட நல்வாழ்த்துக்கள் மா” என,

     “ஹே தாங்க்ஸ்டா தாங்க்ஸ்டா மச்சி!” என்று கார்த்திக் குஷியாய் சொல்ல, கங்கா,

      “நன்றிங்க அண்ணா” என்றாள் நாணப் புன்னகையுடன்.

      இதையெல்லாம் பின்னே இருந்துப் பார்த்திருந்தவளோ, அவனைப் பார்த்தும் பாராமல் கவனித்திருக்க,

     ‘இப்போ கூட ஒரு பார்வை நேரடியா பார்க்குறாளா பாரு?!’ என்று எண்ணியபடியே அவ்வப்போது அவன் தன் மனைவியைக் கண்களால் வருட, அதை கவனித்துவிட்ட கங்கா,

     “அண்ணே கவி பின்னாடிதான் இருக்கா. இருங்க கொடுக்கறேன்” என்று சொல்லிச் சட்டென பிரதாப் கையில் இருந்த போனை வாங்கி அவளிடம் கொடுக்க, அவளால் சபையில் அத்தனை பேர் முன்னிலையில் எதுவும் சொல்லி மறுக்க முடியாது போக, போனைக் கையில் வாங்கினாள்.

     “கவி, கவிம்மா” என்று அவன் குரல் கொடுக்க,

     “ம்!” என்று போனை வாங்கிக் கொண்டு சற்றே மணமேடையை விட்டுத் தள்ளி வந்தவள், அவனை வீடியோவில் பார்க்க,

     “கவிம்மா” என்றான் அவன் மீண்டும்.

     ஆனால் அவளோ, எதுவுமே பதில் சொல்லாமல், “அ அம்மா கூப்பிடறாங்க” என்று பட்டென வீடியோ காலை கட் செய்துவிட்டுச் சென்றுவிட, அவனுக்கு ஏதோ போல் ஆனது.

                                        -உள்ளம் ஊஞ்சலாடும்…

    

    

  

    

     

           

         

         

Advertisement