Advertisement

     அவளது முகமாற்றம் அவனுக்குமே பழைய நினைவுகளை தோற்றுவிக்க, மெலிதாய் அவன் முகத்திலும் புன்னகை.

     “என்னடி உனக்கு புட்டு சுத்தும் போது அண்ணன் பூ கொண்டு வந்த நியாபகம் வந்துடுச்சா?!” என்று அவள் அருகே வந்து கிசுகிசுத்தாள் கங்கா.

     “ம்!” என்று அவள் தலையசைக்க,

     “சரி சரி போதும், உன் சிநேகிதி காதை கடிக்காம சட்டு புட்டுன்னு பூவை கோர்த்துக் குடுடி! வயித்துப் புள்ளைக்காரி ரொம்ப நேரம் உட்கார வைக்க முடியாது.” என்றார் ஜடை தைக்கும் பெண்மணி.

     “ஹான் ஹான்! எங்களுக்குத் தெரியும்” என்ற கங்கா, வட்ட வடிவில் கத்தரித்து வைத்திருந்த வாழைப்பட்டையின் நடுவில் குங்கும நிற ரோஜாவையும், சுற்றிலும் மகிழம்பூவையும், வைத்துத் தைத்து, சின்னச் சின்னச் செண்டுகளை உருவாக்க, அதைப் பார்த்து அருகே இருந்த  பெண்மணிகளும் அப்படியே செய்ய விரைவில் ஜடை தைக்க தேவையான பூச்செண்டுகள் தயாரானது. பின்னலில் சூட மற்றவர்கள் அனைவரும் செண்டு தயாரித்துக் கொண்டிருக்க, ஜடை தைக்க வந்தப் பெண்மணி குட்டிக் குட்டி மகிழம் பூமாலையும் ரோஜா மாலையும் கட்டிக் கொண்டிருந்தார் தலையில் சூட்ட.

     சிறிது நேரத்தில் அவளுக்கு ஜடை தைக்க ஆரம்பிக்க, அந்த சந்தன நிற மகிழத்தின் வாசமும், குங்கும நிற ரோஜாவின் அழகும் ஒன்று சேர்ந்து அவளின் நீண்ட ஜடை அழகை மேலும் கூட்டி இருந்தது.

     கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஆகி இருந்தது ஜடை தைத்து முடிக்க.

     “அப்பாடா ஒரு வழியா அழகா அமைஞ்சிருக்கு!” என்று ஜடை தைத்த பெண்மணி, அவளுக்கு அருகே இருந்த கண்ணாடியை எடுத்துக்  காண்பிக்க, அதில் தன்னைப் பார்த்தவளுக்கு தனக்கு சற்றுத் தொலைவில் பக்கவாட்டில் நின்று தன்னையே பார்த்திருந்தவன் தான் தெரிந்தான்.

     சில நொடிகள் அவளும் தனை மறந்து அவனையே பார்த்திருக்க, அவளுக்கே தான் என்ன உணர்கிறோம் என்றுப் புரியவில்லை!

     ‘ச்சே! நான் என்ன பண்றேன்! ஒரு மகிழம்பூவுக்காக அது செஞ்ச தப்பை மன்னிச்சிட முடியுமா?!’ என்று கேட்டுக் கொண்டவள்,

     சட்டெனக் கண்ணாடியை விலக்கி, “நல்லா இருக்குக்கா!” என்றாள் அந்தப் பெண்மணியிடம்.

     “ம்! சரி சரி ஆவட்டும்! புருஷன் பொஞ்சாதி ரெண்டு பேருமே சேர்ந்து சாமிக்கு படைச்சிட்டு வந்து சாப்பிட உட்காருங்க! புள்ளைதாச்சிக்கு  பரிமாறின பிறகுதான் மத்தவங்களுக்கு பரிமாறணும்” என்று பாட்டி சொல்ல, வைரமும், கற்பகமும், வைரத்தின் ஒன்றுவிட்ட அக்காவும் சேர்ந்து பூஜை வேலையை ஆரம்பித்தனர்.

     சாமிக்கு படையலிட்டு முடிந்ததும் படைத்த இலையை எடுத்து வைத்து தம்பதிகள் இருவரையும் ஒன்றாய் அமர்ந்து சாப்பிடச் சொல்ல, அவள் வேறு வழியின்றி அவனருகே அமர, அவன் முதல் வாய் உணவைத் தனது இலையில் இருந்து எடுத்து அவளுக்கு ஊட்ட, அவள் அதை வாங்காது அவனை வெகுவாய் முறைத்தாள்.

     “அட என்ன கவி நீ? கண்ணன் தம்பி எவ்ளோ ஆசையா உனக்கு ஊட்டி விடுது வாங்கிக்கோயேன்.” என்று அங்கிருந்த பலர் ஆரம்பிக்க,

      ‘வேணும்டே பண்ணுது இது?!’ என்று முறைத்தபடியே உணவை வாங்கியவள், நறுக்கென விரலைக் கடித்து வைத்தாள் அவனுக்கு வலிக்கும் விதமாய். ஆனால் அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், அவன் புன்னகை மாறாது மீண்டும் உணவை ஊட்ட,

     “உன் இலையில இருக்கிறதையே சாப்பிட்டா என் இலையில இருக்கிறதை யாரு சாப்பிடுறதாம்?!” என்றாள் மெல்லிய குரலில் சிடுசிடுப்பாய்.

     “வேணும்னா நீ ஊட்டிவிடு கவிம்மா. நான் சாப்பிடுறேன்!” என்றான் அவன் புன்னகை மாறாமல்.

     அப்போது, கார்த்திக் அவர்கள் இலையில் இன்னும் கொஞ்சம் இனிப்பு பரிமாறுவதைப் போல் அவன் அருகே வந்து,

     “வாழ்றடா!” என்றுவிட்டுச் செல்ல,

     “ம்க்கும்! ரொம்ப வாழ்ந்துட்டேன்!” என்று மைன்ட் வாய்சில் சலித்துக் கொண்டவன்,

      “வெறுப்பேத்தாம போயிடுறா!” என்றான் கண்ணன் கண்களாலேயே மிரட்டல் விட்டு.

     இதற்குள், பக்கத்தில் அமர்ந்திருந்தவர்களுக்குப் பரிமாறியபடி அவனையே பார்த்திருந்த கங்கா, விரைந்து அவன் அருகே வந்து,

     “உனக்குக் கொஞ்சம் கூட அறிவே இல்லையா?! அவங்க கொஞ்ச நேரம் ஒண்ணா உட்கார்ந்து சந்தோஷமா இருந்தா பொறுக்காதோ?!” என,

     “ஆமாம் பொறுக்கலைதான்! அவன் மட்டும் ஜாலியா அவன் பொண்டாட்டிக்கு ஊட்டிவிட்டுகிட்டே சாப்பிடுறான்ல! அதான்! எனக்கும் இப்போவே உனக்கு ஊட்டி விடணும் போல இருக்கு! ஊட்டிவிடவா? சாப்பிடறியா?” என்று அவள் கைப்பிடித்து இழுத்துக் கொண்டு பந்தியில் அமர,

      “ஏய்! என்ன என்ன பண்ற நீ?!” என்று கங்கா கத்த,

     “மாமா. அதான் எனக்கும் உங்க பொண்ணுக்கும் கல்யாணத்துக்கு தேதி குறிச்சிட்டீங்கல்ல நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடலாம்ல?!” என்று சற்றுத் தொலைவே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மருது பாண்டியை நோக்கிக் குரல் கொடுத்தான் கார்த்திக்.

     “அட என்ன மாப்பிள்ளை இதையெல்லாம் கேட்டுக்கிட்டு?! வாங்க வந்து உட்காருங்க! உங்களுக்கு இல்லாத உரிமையா?!” என்று கங்காவின் உறவுக்காரப் பெண்மணி ஒருவர் அவன் கையையும், அவள் கையையும் பிடித்து அழைத்துக் கொண்டு சென்று, கவி, கண்ணனின் அருகேயே அமர வைத்து, அவர்களுக்கும் உணவைப் பரிமாறத் துவங்க, கார்த்திக்கிற்கு ஒரே சந்தோஷம்தான்.

     “என்ன மருது, விட்டா இப்போவே மாப்பிள்ளை உன் பொண்ணு கழுத்துல தாலி கட்டிடுவார் போல இருக்கே!” என்று உறவினர்களும் கேட்க,

     “நான் இப்போவே தயார்தான்!” என்று கார்த்திக் இங்கிருந்தே குரல் கொடுக்க, அவன் கைகளை நறுக்கென்று கிள்ளி வைத்தாள் கங்கா.

     “ஹா!” என்று வேண்டுமென்றே கார்த்திக் சத்தமாய் அலற,

     “கடவுளே!” என்று தலையில் கை வைத்துக் கொண்டவள்,

     “கத்தாம ஒழுங்கா சாப்பிடுய்யா” என்று கங்கா பல்லைக் கடிக்க,

     “நீ ஊட்டிவிட்டா சத்தம் போடாம சாப்பிடறேன்” என்று அவன் அடமாய் அமர்ந்திருக்க,

     “நீ சாப்பிட்டா சாப்பிடு. சாப்பிடாக்காட்டி பட்டினியா கெடந்து சா” என்று சொல்ல வந்தவளை,

     “அடிப்பாவி உன் புருஷன்டி நான்! சாக சொல்ற?!” என்று அவன் வாய்பிளந்து கேட்க,

     “என்ன?! புருஷனா?! நீ என்ன தாலியா கட்டிட்டா?! இன்னும் நிறைய மாசமிருக்கு முகுர்த்த தேதிக்கு! அதுக்குள்ள எந்த ராஜகுமாரன் வேணா வந்து என்னையத் தூக்கிட்டுப் போகாலாம்!” என்று இவளும் வேண்டுமென்றே வம்பிழுக்க,

      “என்ன?! தூக்கிட்டுப் போவானா?! உன்னையா?! நீ இருக்க வெயிட்டுக்கு அவன் உன்னை தூக்கினதும் பொத்துன்னு போட்டுட்டு ஓடிடுவான்டி! பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும்!” என்று கார்த்திக் வாய்விட்டுச் சிரிக்க, கங்கா சோற்றுக் கையோடு மீண்டும் அவன் கையில் நறுக்கென்று கிள்ள,

     “ஹா!” என்று மீண்டும் கத்தப் போனவனின் வாயில் சோற்றை அள்ளித் திணித்திருந்தாள் அவன் கத்த முடியாமல்…

     இவர்கள் குறும்பில், தங்கள் பிரச்சனையை மறந்து அவர்களை ரசித்திருந்த கவிக்கு, கண்ணன் தனது இலையில் இருந்த மொத்த உணவையும் ஊட்டி முடித்திருக்க, அவளும் புன்னகையுடனேயே உணவை உண்டு முடித்திருந்தாள் கோபங்களெல்லாம் சில நொடிகள் மறந்து.

     பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த கார்த்திக்கைப் பார்த்து,

     ‘தாங்க்ஸ் டா மச்சான்!’ என்று கண்ணன் வாயசைவிலேயே நன்றி கூற,

     ‘விட்றா விட்றா!’ என்றான் சைகையிலேயே.

                                      *******

     அவள் தன்னிடம் முகம் கொடுத்துப் பேசாவிட்டாலும், மற்றவர்களுக்காக வேணும் அவனைத் தன் அறையில் அனுமதித்திருந்தாளே, அதுவே அவனுக்கு பொதுமானதாக இருந்தது இப்போதைய அவளது மனநிலைக்கு.

     இரவு ஆன போதும் அவளுக்கு ஜடையைப் பிரிக்க மனம் வராததால், உடையை மட்டும் மாற்றிக் கொண்டு அப்படியே உறங்கிப் போயிருந்தாள் அவள். அதிலும் மகிழம்பூ காயக் காயத்தான் அதிக மணம் கொடுக்கும் என்பதில், அவளுக்கு அதைக் பின்னலில் இருந்து எடுக்க மனதே இல்லை!

     மகிழம்பூவின் வாசமும் மனைவியின் வாசமும் அவளுக்குச் சற்றே தள்ளிப் படுத்திருந்தவனின் மனதைப் பாடாய்ப் படுத்தியது.

    ஆனால் ஒருமுறை செய்த தவறே அவனுக்கு பெரும் குற்ற உணர்வைக் கொடுத்திருக்க, அவர்களின் மழலைத் தாங்கிக் கொண்டிருக்கும் அவளின் மேடிட்ட வயிற்றைத் அவ்வப்போது தொட்டுப் பார்க்க எழும் ஆவலைக் கூட வந்த நாளிலிருந்து வெகு பாடு பட்டு அடக்கிக் கொண்டிருந்தான்.

    ‘ம்! நீ பண்ண முட்டாள்தனத்துக்கு இது உனக்குத் தேவைதான்டா!’ என்று நெஞ்சோடு நொந்து கொண்டவன் மனம், இன்று ஏனோ சமாதனம் ஆகவில்லை!

     ‘அவதான் நல்லா தூங்குறா இல்லை! இப்போ ஒருமுறை ஒரே முறை தொட்டுப் பார்த்துகிட்டா என்ன?!’ என்று உந்த, மெல்ல ஓசைபடாமல் நகர்ந்து அவள் அருகே சென்றவன், கைகள் நடுங்க மெல்ல அவள் வயிற்றில் கைவைக்க, அவன் தீண்டலில் உடல் சிலிர்த்து எழுந்தாள் சடக்கென.

                                             -உள்ளம் ஊஞ்சலாடும்…

          

 

 

       

    

       

         

       

         

    

Advertisement