Advertisement

  “அப்புறம் என்ன, அப்பா நீங்களும், மாமாவும் போயி இப்பவே மருது மாமா கிட்ட பேசிட்டு வந்துடுங்கஎன்றாள் கவியும் மனம் நிறைய மகிழ்ச்சியுடன்.

     நீண்ட நாள் கழித்து அவள் முகத்தில் நிறைவான மகிழ்ச்சியைக் கண்ட கண்ணனது உள்ளமும் பூரித்துப் போனது.

     சிறிது நேரத்தில், வைரம், வீரபாண்டி, ரத்தினம் மூவரும், பூ, பழம், வெற்றிலை பாக்கு சகிதம் தாம்பூலத் தட்டில் வைத்து எடுத்துக் கொண்டு மருது வீட்டிற்குச் செல்ல, மருதுவும், கற்பகமும்,

     “வாங்க வாங்க?!” என்று அவர்கள் கையில் இருந்த பொருட்களை பார்த்தபடியே ஆச்சர்யத்துடன் வரவேற்றனர்.

     “என்ன மருது அப்படிப் பாக்குற?! எல்லாம் விஷேஷமாத்தான் வந்திருக்கோம்?” என்ற தங்கரத்தினம்,

     “நம்ம கங்காவை எங்க வீட்டுப் பிள்ளை கார்த்திக்கு பொண்ணு கேட்டு வந்திருக்கோம். குடுப்பீங்களா?!” என்று விஷயத்தை பட்டென சொல்லி விட்டார்.

     தீடீரென அவர்கள் பெண் கேட்டு வந்ததில் மருதுவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை! அவர் திரும்பி மனைவியைப் பார்க்க, அவரோ, சற்றுத் தொலைவே நின்றிருந்த மகளைப் பார்த்தார்.

     என்ன கற்பகம், அவ என்ன சொல்லப் போறா?! அவதான வாயை விட்டதே!” என்று வைரம் வீட்டில் நடந்ததைச் சொல்ல, ற்பகம் மகளை முறைக்க,

     “ஐயோ அம்மா! நான் சும்மா விளையாட்டுக்கு வாய்தவறி சொல்லிட்டேன்! எனக்கு ஒண்ணும் அந்த ஆளையெல்லாம் புடிக்காது! நீங்க வேணான்னு சொல்லிடுங்கஎன்று முகம் சுளித்தபடி சொல்லிவிட்டு, அவள் உள்ளே செல்ல எத்தனிக்க,

     “அப்போ சரி விடும்மா! எம்மா வைரம் நம்ம வேலூர் தங்கச்சி பொண்ணு, அந்த பொண்ணு பேர் என்ன வளர்மதி, அதை கட்டிக் கொடுக்க சம்மதமான்னு அவுங்களுக்குப் போனைப் போடும்மா கொஞ்சம். நல்ல நாள்னு பேச்சை ஆரம்பிச்சோம்! இன்னிக்கே பேசி முடிச்சிடுவோம்என்று ரத்தினம் உடனே மனதை மாற்றிக் கொள்ள, கங்காவின் முகம் கருத்துப் போனது.

     “பேசுங்க யார்க்கு வேணாலும் பேசி முடிங்க! அவங்க யாரைக் கட்டிகிட்டா எனக்கென்ன?! ம்!” என்றுஅவள் சிலுப்பிக் கொண்டு கோபத்துடன் செல்வதைப் பார்த்த அங்கிருந்த அனைவருக்குமே தெரிந்து விட்டது அவளுக்கும் கார்த்திக்கின் மீது விருப்பம் இருக்கிறது என்று! அதன் பின் என்ன? ஏற்கனவே மருதுபாண்டிக்கு கார்த்திக்கை மிகவும் பிடிக்கும். இப்போது நண்பன் வீர பாண்டியின் வீட்டுப் பிள்ளையாய் அவன் நிற்கும் போது கேட்கவே வேண்டாம்!

                            ******

     கார்த்திக்கிற்கு பெண் பேசி முடித்ததிலும், கண்ணன் ஊரிலிருந்து வந்ததிலும் வீடே குஷியில் இருக்க, இரவு, கங்கா வீட்டில் இருக்கும் அனைவருக்கும் சேர்த்தே விருந்து தயாராகி இருந்தது.

     எல்லோரும், முகமெல்லாம் சிரிப்பாய் இருக்க, கங்காவும், கவியும் அவரவர்க்குரியவர்களை முறைத்து முறைத்தே வெறுப்பேற்றிக் கொண்டிருந்தனர்.

     “அடேய் என்னடா நமக்கு வந்த சோதனை?! ஒருத்தி கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே கண்ணாலேயே மிரட்டி மிரட்டி முறைக்குறா?! உன் பொண்டாட்டி என்னன்னா கல்யாணம் ஆகி பிள்ளையே பிறக்கப் போகுது! இப்போவும் உன்னை கண்ணாலேயே பொசுக்குறா?! எப்போதான்டா இவங்க நம்மளைக் காதலோட பார்ப்பாங்க?!” என்று கார்த்திக் தன்னருகே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த கண்ணனின் காதில் கிசுகிசுக்க,

     அதெல்லாம் பாசம் தம்பி பாசம்!” என்று பதில் கொடுத்தார் அவர்கள் அருகே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த தங்கரத்தினம்.

     ‘அய்யய்யோ, அங்கிள் காதுலயும் விழுந்துடுச்சு போல!’ என்று அவன் அசடு வழிய,

     “ஏ பிள்ளை கங்கா, போய் மாபிள்ளைக்கு என்ன வேணும்னு கேட்டுப் பறிமாறேன்.” என்று கற்பகம் மகளை ஏவ, கார்த்திக் முகம் முழுக்க ஜொலிப்புடன்,

     “கொஞ்சம் பாயாசம் கொண்டு வரீங்களா?!” என்றான் ஆசையாய்.

     “பாயாசமா வேணும் பாயாசம்? இந்தா கொண்டாறேன்!” என்றவள், பாயசத்தை எடுத்துச் சென்று வேண்டுமென்றே இலையில் அவன் காலியாக ஒதுக்கி வைத்திருந்த இடத்தை விடுத்து, சாதத்தின் மேலேயே  ஊற்ற,

     “அடியே கூறுகெட்டவளே கண்ணு தெரியலையா? சாப்பாட்டுலயே பாயசத்தை ஊத்துற?!” என்று கற்பகம் வைய ஆரம்பிக்க,

     “ஹென் அவுங்கதான சோறு சாப்பிடும் போதே பாயசம் கேட்டாங்க! அதான் சோறோடு கலந்து சாப்பிடுவாங்களோன்னு அதுலயே ஊத்திட்டேன்!” என்றாள் கங்காவும் சளைக்காமல்.

     “அட விடுங்க ஆன்ட்டி. அவங்க என்னைப் பார்த்துகிட்டே ஊத்தினதுல மெய் மறந்து போயிருப்பாங்க! அதான் இப்படி!” என்று கார்த்திக்கும் விடாமல் பேச,

     ‘ஆமாம்! இவங்க அப்படியே கேஜிஎப்ல வர ராக்கி பாய் பாரு! இவங்க அழகுல அப்படியே சொக்கிப் போயி நிக்க?!’ என்று அவள் அவனை முறைத்தபடியே உதட்டைச் சுழிக்க, அவன் அவளை வெகுவாய் ரசித்தபடியே சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, அவளைத் தவிர மற்றவர்கள் யாரும் தன்னை கவனிக்காத நேரம் பார்த்து தன் உதடுகள் குவித்து பறக்கும் முத்தம் ஒன்றை அவளுக்கு அனுப்பி வைக்க,

     “சீ சீ!” என்று முகம் கோணலாக கத்தியவள், சட்டென அங்கு அனைவரும் இருப்பதை உணர்ந்து,

     “! !” என்றாள் சமாளிப்பாய்.

     “அடேய் அடங்குடா! இன்னிக்குதான் பொண்ணு பேசியே முடிச்சிருக்காங்க! நீ பண்ற வேலைக்கு அந்தப் பொண்ணு கல்யாணமே வேணாம்னு நிறுத்திடப் போகுது!” என்று இப்போது கண்ணன் கிசுகிசுத்தான் அவன் காதில் மிக மெதுவாக.

     “பார்த்துட்டியா?!” என்று அசடு வழிந்த கார்த்திக்,

     “நல்ல மனசுக்காரன் டா நீ! நல்லா வாயை வைக்கிற!” என்ற கார்த்திக் அப்போதும் பார்வையை அவ்வப்போது கங்காவின் மீது அலையவிட்டுக் கொண்டேதான் சாப்பிட்டான்.

     இரவு உணவு முடித்து வெகு நேரம் சிரிப்பும் பேச்சுமாய் பேசிக் கொண்டிருந்தவர்கள், பத்து மணிக்கு மேல் உறங்கச் செல்ல, கவியும் தனது அறைக்குச் சென்று கதவைச் சாற்ற முயன்ற நேரம் கண்ணன் சரியாய் கதவின் நடுவே போய் நின்றான்.

     அவன் அருகே வந்ததும் சட்டெனப் பின் வாங்கியவள், ‘வெளிய போ!’ என்பது போல் வெகுவாய் முறைத்து நிற்க,

     “நான் என் ரூம்ல போய் படுத்தா எல்லோரும் தப்பா நினைப்பாங்க!” என்றான் பொறுமையாய்.

     “என்ன?! வேணும்னே வம்பு பண்றியா?!” என்று அவள் சீற,

     “நா, நான் எங்க வம்பு பண்ணேன் கவிம்மா! சும்மா பேசிட்டு தானே இருக்கேன்என்று அவன் நல்ல பிள்ளை போல் பேச,

     “! அந்த நினைப்பெல்லாம் வேற இன்னும் இருக்கா?!” என்று அவள் கடுமையாய்க் கேட்க,

     “எந்த நினைப்பு?!” என்றான் ஒன்றும் அறியாதவன் போல்.

     ‘ஆமா! ஒன்னும் தெரியாத பச்சைப்புள்ளை பாரு!’ என்று அவள் முகம் திருப்ப,

     “?! ! அந்த நினைப்பா கவிம்மா! இ இப்போ, நீ, நீ சொன்னதும்தான் தோணுது!” என்றவன், சட்டென உள்ளே வந்து அறைக் கதவைச் சாற்ற, அவள்,

     “ஏய்! போயிடு போயிடு!” என்று எச்சரித்தபடியே அவனை அடிப்பதற்கு ஏதேனும் கிடைக்கிறதா என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டுத் தேடியபடியே பின்னே நகர, கீழே போடப் பட்டிருந்த தலையணை மீது கால் வைத்தவள் கால்கள் சட்டெனத் தடுமாறியது.

     “கவிம்மா!” என்றபடி அவன் அவளைத் தாங்கிப் பிடிக்க, சட்டென சுதாரித்து நின்று அவனை விட்டு நொடியில் விலகியவள், அவனை எரித்து விடும் பார்வை பார்க்க,

    “என்னை அடிக்கப் பொருள் தேடுறியா கவிம்மா?!” என்றான் கேள்வியாய்.

    அவள் சட்டென முகம் திருப்ப, “அன்னிக்கு நீ ஆசை ஆசையா என்னை அணைச்சிக்கிட்ட அதே கையால இன்னிக்கு அடிக்க மட்டும் தான் தோணுது இல்ல?!” என்று அவன் கேட்க, அவள் நெஞ்சுக் குழியிலும் சொல்லொணா வலிதான்.

     “அடிச்சுக்கோடி! எதைக் கொண்டு வேணாலும் எப்படி வேணாலும் அடிச்சிக்கோ! ஆனா என் கிட்ட பேசாம, மாமான்னு கூட கூப்பிடாம என்னைத் தவிக்க விடாதடி!” என்றவனை, அவள் மனம் நோகப் பார்த்து வைக்க,

      “என்னால முடியலைடி! உன்கிட்ட பேசாம, நீ மாமா மாமான்னு என்னைச் சுத்திச் சுத்தி வர்ற உன் பாசம் இல்லாம என்னால இருக்க முடியலைடி!” என்று அவன் சொல்ல, அவள் அப்படி ஒரு பார்வை பார்த்தாள்.

     “புரியுதுடி! நீ என்ன நினைக்கிறேன்னு புரியுது! நான் உன்னை விட்டு விலகிப் போனப்போ உனக்கும் இப்படித்தான் வலிச்சிருக்கும்! ஆனா ஆனாஎன்றவனால் அதற்கு எந்த சமாதானமும் சொல்ல இயலவில்லை!

     அவள் எதற்குமே பதிலும் சொல்லாமல் கேள்வியும் கேட்காமல், அமைதியாய் நின்றிருக்க,

     “அ அன்னிக்கு உன்னைக் கட்டிக்க மாட்டேன் மாட்டேன்னு ஒதுங்கிப் போனேன்தான்! ஆனா அப்பவும் என் நினைப்பு பூரா நீதான்டி இருந்த! ஆனா, இந்த இந்த மரமண்டைக்கு அது நான் உன்மேல வச்சிருக்கப் பாசம்னு தெரிஞ்சதே தவிர, இ இப்படி இருக்கும்னு நான் நினைக்கவே இல்லடி! எனக்குத் தெரியலைடி! எனக்கு நிஜமா தெரியலைடி!” என்றான் தவிப்புடன்.

     அவள் அப்போதும் கேள்வியுடன் பார்த்தது பார்த்தபடியே நிற்க, “அப்போ தெரியாத காதல் இப்போ மட்டும் எப்படி தெரிஞ்சதுன்னு கேட்கறியா?!” என்றான்.

     அவள் மெல்லிய பெருமூச்சொன்றை விட, “நம்ம குழந்தை வந்ததுனால வந்ததுன்னு நினைக்கிறியா?!” என்றான் அவள் கண்களைச் சந்தித்தபடி.

     அந்தக் கேள்வி அவளுள்ளும் இருந்ததனால் அவள் வேறுபுறம் தன்  கண்களைத் திருப்பிக் கொள்ள,

     “நிச்சயமா இல்லைடி!” என்றவன்,

     “உண்மைய சொன்னா நீ கோவம்தான் படுவ!” என்று நிறுத்தி,

    “கார்த்திக். கார்த்திக் உன்னைக் கட்டிகிறேன்னு சொன்ன அந்த நொடி, அந்த நொடிதான் எனக்குப் புரிஞ்சுது! உன்னை என்னால யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாதுன்னு!” என, அவள் அவனை நிமர்ந்து பார்த்தாள்.

     “அப்புறம் எதுக்கு அப்போவே உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லலைன்னுதானே பார்க்குற?!” என்று தானே கேட்டுக் கொண்டவன்,

     “ஆனா, ஆனா அப்பவும் அதை என் மனசு முழுசா ஏத்துக்கலை! அதனாலதான் உனக்கு வேற மாப்பிள்ளை பார்க்கிறேன். கார்த்திக் வேணாம் அது இதுன்னு கத்தினேன்! பட் ட்ரூலி ஐ கான்ட் மிஸ் யூன்னு அந்த நொடியில இருந்துதான் நான் உணர ஆரம்பிச்சேன்!” என்று அவன் நிறுத்த, அவள் வெறுமையாய் அவனைப் பார்த்திருந்தாள்.

     “அப்புறம் ஏன் கல்யாணம் பண்ணியும் உன்னைத் தனியா விட்டுட்டுப் போனேன்னு உ உனக்கே தெரியுமே!” என்றான் அவள் முகத்தை நேருக்கு நேர் சந்திக்க இயலாமல்.

     அவன் இத்தனை விளக்கம் சொல்லியும் எதற்குமே இறங்காதவளாய்,

     “நான் தூங்கணும். எனக்குத் தூக்கம் வருதுஎன்றாள் விட்டேத்தியாய்.

     “கவிம்மா!” என்று அவன் வேதனையுடன் அழைக்க, அவள் பாயை விரித்து தலையணை எடுத்துப் போட்டுப் படுக்க, அவன் செய்வதறியாமல் வெறுமையாய் பார்த்திருந்தான் தன் உயிரின் பாதியானவளை!

                                                       -உள்ளம் ஊஞ்சலாடும்…

 

 

 

Advertisement