Advertisement

                                       21

     முன்பெல்லாம் அவன் கைகள் தீண்டியதும், பனிக்கட்டியைப் போல் உருகிப் போய் நிற்பவளா இப்போதிருக்கும் அவனது கவி!

     கண்களில் எரிமலைத் தணலை தேக்கி நிற்பது போல் அவனைத் தீப்பார்வை பார்த்தவளின் முகபாவமே கையை எடு என்று மிரட்டல் விடுக்க,

     “தப்புதான்டி. நான் செஞ்சது மன்னிக்க முடியாத தப்புத்தான். அதுக்கு நீ என்ன வேணாலும் தீட்டித் தீர்த்துடு! ஏன் அடிக்கக் கூட அடிச்சுடு! ஆனா இப்படிப் பேசாம இருந்துக் கொல்லாதடி!” என்றான் வேதனையுடன்.

     எதற்கும் அவளிடம் எந்தப் பிரதிபலிப்பும் இல்லை!அதற்கு மேல் அவன் எதிரே நிற்கக் கூடப் பிடிக்கவில்லை என்பது போல் அவள் பாட்டிற்கு அங்கிருந்து செல்ல, இவனுக்கும் கோபம் வந்தது.

     “ஏய் நில்லுடி!” என்று கோபம் கொண்டவன், இரண்டே எட்டில் அவள் முன்னே சென்று நிற்க, அவளுமே முன்பு போல் முகம் தாழ்த்திக் கொள்ளாமல் நேர் பார்வைதான் பார்த்தாள் நிமிர்வாகவே.

     “நீ பேசலைன்னா நான் அமைதியா இருந்துடுவேன்னு நினைச்சியா?!” என்று அவன் சீற, அவள் அலட்சியமாய் ஓர் புன்னகை பூத்தாள்.

     “என்னடி சிரிக்குற?! அங்கிருந்து வரத் தெரிஞ்சவனுக்கு உன்னை இங்கிருந்து அங்க கூட்டிட்டுப் போகத் தெரியாதா?!” என்றான் கர்வமாய்.

   “ம்?!”  என்று அவளுமே கேள்வியும் அலட்சியமுமாய் புருவம் உயர்த்த,

     “என்னடி? என்னால முடியாதுன்னு நினைக்கிறியா?!” என்றவன்,

     “இன்னும் ஒரு வாரத்துல உன்னைக் கூட்டிட்டுப் போய்க் காட்டவா?” என்று சவாலாய்க் கேட்க,

     அவனை தீர்க்கமாய் நோக்கியவள், இந்த மண்ணை விட்டு நான் போனேன்னா அது என் உசிர் போனதுக்குச் சமானம்!” என்று வாளினும் கூர்மையாய் வார்த்தைகளை விட்டு, அந்த ஒற்றை வரியில் அவனை பேசாமடந்தையாய் நிற்கச் செய்துவிட்டு நடந்தாள் வயிற்றின் பாரத்தோடு சேர்ந்து நெஞ்சின் பாரமும் ஏற.

     இப்படி ஒரு வார்த்தையை விட்ட பின் அவனாலும்தான் என்ன செய்ய முடியும்?! சிறுவயது முதலே அவள் இந்த மண்ணின் மீது கொண்ட காதலையும், அவளின் எல்லையற்ற பிடிவாதத்தையும் அறிந்தவனாயிற்றே!

     வெகு நாட்களுக்குப் பின் மருமகன் வெளிநாட்டிலிருந்து வந்திருந்ததாலும், தன்னைப் பாட்டியாக்கியதில் மருமகன் மீது இருந்த கோபத்தை எல்லாம் தொலைத்திருந்ததாலும் வைரம், தடபுடலாய் விருந்து ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். கவிக்கு அவரின் மனநிலையைக் கண்டு சிரிக்கத்தான் முடிந்தது.

     ‘என்னை விட்டுட்டுப் போன கோபத்துல சோறு சாப்பிடக் கூடக் கூப்பிடாம பிடிவாதமா பேசாம இருந்தவங்க, இப்போ மருமகன் வாரிசைக் கொடுத்ததுனால மகளை நல்லாப் பார்த்துக்கிடுறார்ன்னு நினைச்சுக்கிட்டு விழுந்து விழுந்து கவனிக்குறாங்க!’ என்று எண்ணிச் சிரித்தவள்,

     ‘உன் சந்தோஷமாவது நிலைக்கட்டும்மா என்று மனதோடு சொல்லிக் கொண்டு அமைதியாய்ச் சென்று தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

     “அடியே புருஷன்காரன் ஊருல இருந்து வந்திருக்கான். அவன்கிட்ட பேசாம கொள்ளாம எதுக்குடி உள்ள, உள்ள போய் புகுந்துக்குற?!” என்று பாட்டி கூச்சல் போட,

     “இந்தக் கெழவி வேற?!” என்று முணுமுணுத்தவள்,

     “எனக்கு கொஞ்சம் அசதியா இருக்கு. கொஞ்ச நேரம் படுத்து எழுந்து வரேன்என்று இவளும் உள்ளிருந்தே குரல் கொடுக்க,

     “விடு அப்பத்தா நான் ரூம்லயே போய் அவகிட்ட பேசிக்கிறேன்என்று அவன் எழுந்த நொடி அவள் ஹாலுக்கு வந்திருந்தாள்.

     அவள் வந்த வேகத்தைப் பார்த்து அவனுக்குச் சட்டென சிரிப்பு வந்துவிட,

     “வா வா! வந்து உட்காரு கவிம்மாஎன்று அக்கறையாய் அவள் கைப்பற்றி அழைத்து வந்தவன், அவளை அங்கிருந்த பழங்கால மர சோபாவில் அமர வைக்க, அவளுக்கு அவனை நன்கு புடைத்து எடுக்கலாம் எனும் அளவிற்கு ஆத்திரம் எழுந்தது.

     எல்லார் முன்னாடியும் எதுவும் செய்ய மாட்டேன்னு தைரியமா?!’ என்று எண்ணி முறைத்தபடியே அவள் சோபாவில் அமர, அவள் அமர்ந்த பின்னும் அவன் கையை எடுக்காமலேயே பற்றி இருப்பனைப் பார்த்து கண்களாலேயே அவள் கையை எடுக்கும் படி மிரட்ட, அவன் கண்களில் சிரிப்புடன்,

     முடிஞ்சா கையைத் தட்டி விடு பார்க்கலாம்! என்றான் மெல்லிய குரலில்.

     ஏன் தட்டி விட முடியாத?! என்றவள் சட்டென அவன் கையைக் நறுகென்று கிள்ள, அதற்கெல்லாம் அசருபவனா அவன்,

     “தட்டிவிட வேண்டிதுதான?! எதுக்குடி கிள்ளுற?!” என்றான் குசும்பாய்.

     அவளால் முன்பு போல் மற்றவர்கள் முன் அவனை ஒதுக்கித் தள்ள முடியவில்லை இப்போது! பிள்ளையே உண்டாயிற்று இன்னும் என்ன ஏட்டிக்கு போட்டி?! என்று ஆரம்பித்துவிடுவார்கள் வீட்டில் உள்ளவர்கள்.

     ஆனாலும் அவள் தன் கையை மெல்ல அவன் கையிலிருந்து விடுவித்துக் கொள்ள முயன்று கொண்டே தான் இருந்தாள் விடாமல். அவள் விடுவிக்க முயன்றதுமே அவன் மேலும் இறுக்கமாய் அவள் கைப்பற்றிக் கொள்ள, அவளுக்குமே பல்லைக் கடித்தபடி அமர்ந்திருப்பதைத் தவிர வேறு வழியில்லாது போனது.

     அவளை அந்த இம்சையிலிருந்து ரட்சிக்கும் தேவதையாய், கங்கா அங்கு வந்து சேர, அவளைத் தொடர்ந்து கார்த்திக்கும் அங்கு வந்து சேர்ந்தான்.

     ஆனால் அவர்கள் வந்த பின்பும் கூட கண்ணன் அவள் கையை விடாது தன் மடி மீது வைத்து அழுந்தப் பிடித்திருக்க,

     “டேய் மச்சான் ஆனாலும் நீ இப்படி எல்லாம் இருப்பன்னு நான் கனவுல கூட நினைச்சுப் பார்க்கலைடா!” என்றான் கார்த்திக்.

     “எப்படி இருப்பேன்னு இப்படியா?!” என்று கண்ணனுமே பிடித்திருந்த கவியின் கையை விடாமல் சுட்டிக் காட்டிக் கேட்க,

     “ம் நடத்துடா நீ நடத்து!” என்ற கார்த்திக்,

     “வேணாம் வேணாம்னு சொல்றவனுங்க எல்லாம் பிராக்ஷன் ஆப் செகண்ட்ல தாலி கட்டி குடும்பஸ்தன் ஆகிடுறான்! ம்!! நம்ம ஜாதகமும் இருக்கே! நாம கட்டிக்க ஆசைப்படுற பொண்ணுங்க எல்லாம் நம்மளை திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேங்குது!” என்று அவன் கங்காவைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சுடன் சொல்ல,

     ‘பேச்சப் பார்த்தியா?! கட்டிக்க ஆசைப்படுற பொண்ணுங்க எல்லாமாம்?! பக்கிக்கு அதைக் கூட ஒருமைல சொல்ல வருதா பாரு?!’ என்று கங்கா அவனை முறைத்து வைக்க, இருவரின் ரியாக்ஷனையும் பார்த்த கண்ணன்,

     ‘அடப்பாவி! கங்காதானா நீ கரெக்ட் பண்ணி கல்யாணப் பண்றேன்னு சவால் விட்டப் பொண்ணு?!’ என்று எண்ணியபடி அவனை முறைத்து வைத்தான்.

     அவன் முறைத்த முறைப்பில் எங்கு எல்லோர் முன்பும் ஏதேனும் கேட்டு வைத்துவிடப் போகிறானோ, என்று அவன் கையைப் பிடித்தவன்,

     போதும்டா! உன் பொண்டாட்டி எங்கயும் போயிட மாட்டாங்க! அவங்க  கையை விட்டுட்டு எழுந்து வாடா!” என்று இழுக்க,

     “அதானே யாரும் ஒண்ணா சந்தோஷமா இருந்தா சிலவங்களுக்குப் பொறுக்கவே பொறுக்காதே!” என்று முணுமுணுத்தாள் கங்கா அவனை நேருக்கு நேர் முறைத்தபடியே.

     கண்ணனும், கார்த்திக்கும் அங்கிருந்து எழுந்து சென்றதும், “என்னதான்டி பிரச்சனை உனக்கு?! எதுக்கு எப்போ பாரு கார்த்திக்கை வம்பிழுத்துட்டே இருக்க?!” என்றாள் கவியும்.

     “ஆமாம்! அவரு நான் கட்டிக்கப் போற மாமன் பாரு! வம்பிழுக்க!” என்று கங்கா வாய் தவறி துடுக்காய் வார்த்தைகளை விட,

     “ஏன் கார்த்திக் தம்பிக்கு என்ன கொறைச்சல்?! கட்டிகிட்டாதான் என்ன?!” என்றார் யாருமே எதிர்பாராத விதமாய் கனகாம்புஜம் பாட்டியும்!

     இதெல்லாம் அப்போதே வெளியே சென்ற கார்த்திக்கின் காதிலும் விழ, இரண்டே எட்டில் மீண்டும் உள்ளே வந்தவன்,

     “ஐயோ என் தங்ககட்டிப் பாட்டி! உங்க வாய்க்குச் சர்க்கரை தான் போடணும்!” என்று அவரைக் கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தம் வைக்க,

     ‘அடப்பாவி?!’ என்ற ரீதியில் கங்கா பார்த்திருக்க, அவர்கள் அனைவருக்கும் சாப்பிடப் பலகாரம் எடுத்து வந்த வைரத்திற்கும், அப்போதே சந்தைக்குச் சென்றுத் திரும்பியிருந்த ரத்தினம், வீராவுக்கும், கூட,

     ‘அட! இப்படி நடந்தாலும் நல்லா இருக்கும்தானே!’ என்று ஒரு சேர எண்ணம் எழுந்தது.

     “அட இது எங்களுக்குத் தோணாத போச்சே ஆத்தா?!” என்றபடியே ரத்தினமும் உள்ளே வர, கார்த்திக்கிற்கு முகம் முழுக்க சிரிப்புதான். ஆனால் கங்காவின் முகத்தைப் பார்க்க வேண்டுமே அவள் முகத்தில் ஈயாடவில்லை!

     ‘அய்யயோ! இது என்ன வம்பா போச்சு?!’ என்று அவள் பேந்தப் பேந்த விழித்திருக்க, வீட்டில் இருக்கும் அனைவருக்கும் உற்சாகமாகிப் போனது இவர்களின் திருமணப் பேச்சை எடுத்தவுடன்.

     அவளோ, அவனை வேண்டாம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்ட அவர்களின் திருமணதிற்கு அச்சாரம் போடும் படியான வார்த்தைகளை வாய்தவறி விட்டுவிட்டாள் மனதில் அவன் அவளை மீறி உள்ளே நுழைந்திருந்ததால். ஆனாலும் பட்டென அதை ஒப்புக் கொண்டு விட முடியுமா என்ன?!

     “என்னடி அப்படி முழிக்குற?!” என்று கவி அவளை உலுக்க,

     “இல்ல இல்லை இதெல்லாம் சரி வராது!” என்று மண்டையை வேகவேகமாய் மறுப்பாய் உருட்டியவள், விறுவிறுவென அங்கிருந்து எழுந்து அவர்கள் வீட்டிற்கு ஓடிவிட்டாள்.

     “அவகெடக்கா நீங்க ரெண்டு பேரும் போய் மருதுகிட்ட பேசி முடியுங்கஎன்றார் பாட்டி இப்போதும் விடாமல்.

     “பாட்டி!” என்று கார்த்திக் மீண்டும் அவரைக் கட்டிக் கொண்டு முத்தம் பதித்ததிலேயே தெரிந்தது அவன் கங்காவை எவ்வளவு தூரம் விரும்புகிறான் என்று.

     “ஏன் தம்பி அவ்ளோ ஆசையா கங்கா பொண்ணு மேல?!” என்றார் ரத்தினம் கேலியாக.

     “அது அது வந்துங்க அங்கிள்என்று கார்த்திக் தயக்கமாய் புன்னகைக்க,

      “அடேய் உனக்கு இப்படி எல்லாம் கூட ரியாக்ட் பண்ணத் தெரியுமாடா?!” என்று கேட்டபடி வாய்விட்டுச் சிரித்தான் கண்ணன்.

     அவன் சிரிப்பதை ஒரு நொடி நிமிர்ந்து பார்த்தவள், சட்டென முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொள்ள, அது ஒரு நொடிப் பார்வைத் தீண்டலாயினும் அதை கண்டு கொள்ளத் தவறிவில்லை அவன்! அவள் முகத்திருப்பலில் கொஞ்சமாய் அவளை வம்பிழுக்கத் தோன்ற,

     “என்ன கவிம்மா உனக்கு ஓகேதானே?!” என்றான் அவளை அழைத்து.

     “ம்!” என்று அவன் புறம் திரும்பியவள், அவனை முறைக்க,

     “ஓகேவான்னு கேட்டேன் ம்மா?!” என்றான் மீண்டும்.

     “என்ன ஓகேவா?!” என்று அவள் சிடுசிடுக்க,

     “ஒண்ணா சேர்ந்து வாழுறதுல!” என்றான் புன்னகையுடன்.

     “ம்?!” என்று அவள் கண்கள் இடுங்க முறைக்க,

     “ஐ மீன் கார்த்திக்கும் கங்காவும்!” என்றான் விளக்கமாய்.

     “ம்!” என்றவள், கார்த்திக்கைப் பார்த்து,

     “உங்க நல்ல மனசுக்கு ஏற்ற மாதிரியே உங்க வாழ்க்கையும் அமையப் போகுது! வாழ்த்துக்கள் கார்த்திக். என் கங்காவை நல்லா பார்த்துப்பீங்க இல்லை?!” என்றாள் கேள்வியும் கண்டிப்புமாய்.

     “நாங்க வாழும் போது பாருங்கஎன்றான் கார்த்திக் அழகான புன்சிரிப்புடன்.

  

Advertisement