Advertisement

“ஆத்தா! கேட்டியா உன் பேத்தி உனக்குக் கொள்ளுப் பேரனைக் கொடுக்கப் போறாளாம்!!” என்று முகம் முழுக்கச் சிரிப்போடு, அங்கிருந்த ஆண்களுக்கும் விவரம் தெரியுமாறு வைரம் சொல்ல,

     “அடி என் ராசாத்தி!” என்று அவள் முகத்தை வழித்து திருஷ்டி எடுத்த கனகாம்புஜம் பாட்டி,

      “எப்போ பாரு, என் பேரனும் பேத்தியும், பிரிஞ்சு கெடக்காங்க, பிரிஞ்சு கெடக்காங்கன்னு மூக்கை சிந்திகிட்டு கெடந்தியே! இப்போ பார்த்தியா?! புருஷன், பொண்டாட்டிக்குள்ள சண்டை சச்சரவு வர்றதெல்லாம் ஒரு விஷயமான்னு நாம பேசாம இருந்துடணும்! நடக்கிறதெல்லாம் நல்லபடியே நடக்கும்” என்று பாட்டி தன் கருத்தைச் சொல்ல, அவள் விரக்தியாய் ஓர் புன்னகைப் பூத்துக் கொண்டாள்.

     “சரி ஆத்தா நான் போயி அவளை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போயி வந்துடறேன்.” என்று வைரம் சொல்ல,

     “அட இதுக்கெதுக்கு ஆஸ்பத்திரி?” என்றார் பாட்டி.

     “இல்லை ஆத்தா எதுக்கும் போயி பார்த்துட்டு வந்துடறோம்” என்றவர்,

     “வா கவிம்மா” என்று மகளை அழைத்துச் செல்ல, அங்கு ரத்தினத்திற்கும், வீரபாண்டிக்கும் கூட தாங்கள் தாத்தா ஆனதில் வாயெல்லாம் பல்தான்.

     சிறிது நேரத்தில் இருவரும் மருத்துவமனைக்குச் சென்றுத் திரும்ப, கர்ப்பம் உறுதியானதில், பால்பாயசம், வடை என்று அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தார் வைரம்.

     விவரம் அறிந்து கங்கா வீட்டினரும் கவியைப் பார்க்க ஓடோடி வந்திருக்க, அவளைக் கட்டிப் பிடித்து முத்தம் வைத்த கங்கா,

     “அடியே நீங்க ரெண்டு பேரும் இருந்த இருப்புக்கு உன் புள்ளைய எல்லாம் பார்க்க எம்புட்டு வருஷம் காத்திருக்கணுமோன்னு தவிச்சுக் கெடந்தேன்டி, ஆனாலும் அண்ணனும் நீயும் நல்ல ஆளுங்கதென். எங்க முன்னாடி எல்லாம் மூஞ்சியைத் திருப்பிக்கிட்டுச் சுத்திட்டு உள்ளுக்குள்ள ஒரே ம்! ம்ம்!!” என்று கேலி செய்ய, அவள் பொய்யாய்ச் சிரித்து வைத்தாள் யாரும் அவள் மனதின் வேதனையைக் கண்டு கொள்ளக் கூடாதே என்று.  

     “அடேய் ரத்தினம்! என் பேரனுக்கு போனைப் போடச் சொல்லுடா கார்த்திக் தம்பிக்கிட்ட சொல்லி” என்று உற்சாகமாய் குரல் கொடுக்க கங்காவிற்கு கார்த்திக் என்ற பேரைக் கேட்டதுமே முகம் மாறியது.

     ‘இந்தக் கெழவி வேற! நான் இங்க இருக்குற நேரத்துல தானா அந்த கார்த்திக் கீர்த்திக்கை எல்லாம் வரச் சொல்லணும்!’ என்று முணுமுணுத்தாள் மெல்ல.

     “என்னடி ஆச்சு?!” என்று கவி அவள் முகமாறுதலைப் பார்த்துக் கேட்க,

     “ஒண்ணுமில்லையே?!” என்றவள் கார்த்திக் வீட்டினுள் வருவதைப் பார்த்து முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

     அவனுமே வரும்போதே அவளையே பார்த்தபடிதான் வந்தான் அவளை வம்பிழுக்கும் விதமாய் கண்ணடித்துச் சீண்டியபடி.

     “ம்க்கும்!” என்று கழுத்தை நொடித்துக் கொண்டவள்,

     “நான் போயி அத்தைக் கூட வடை தட்டிப் போடுறேன்” என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டாள் பட்டென.

     விவரம் அறிந்த கார்த்திக்கிற்குமே மனம் நிறைய சந்தோஷம் எழுந்தாலும், கவியின் முகத்தில் ஒட்டியிருந்த ஒட்டாத புன்னகையை வைத்தும், நண்பனின் குணத்தை வைத்தும் ஏதோ நெருடல் எழுந்தது.

     ஆனால் அதையெல்லாம் வெளிக்காட்டிக் கொள்ளாமல், “வாழ்த்துக்கள் கவி!” என்று அவளை வாழ்த்திவிட்டு, அவனுக்கு வாட்ஸ்அப் கால் மூலம் அழைப்பு விடுத்து ரத்தினத்திடம் கொடுத்தான்.

     ஆன்லைன் மீடிங்கில் இருந்த கண்ணன், “ஒன் செகண்ட்!” என்று தனது உடன் பணிபுரிபவரிடம் சொல்லிவிட்டு, ஆன்லைன் காலை மியுட்டில் போட்டுவிட்டு,

     கைபேசியில் வந்த கார்த்திக்கின் அழைப்பை ஏற்று, “கார்த்திக் அயம் இன் தி மீட்டிங். வில் கால் யு பேக் இன் ஆப் அன் ஹார்” என்று சொல்ல,

     “அடேய் நான் உன் அப்பா பேசுறேன்டா” என்றார் ரத்தினம்.

     “அப்பா நான் ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்கேன். அரைமணி நேரத்துல கூப்பிடவா” என்று விட்டு அழைப்பைத் துண்டிக்கப் போக,

    “அடேய் இருடா இருடா. கட் பண்ணிடாத. என் கன்னுக்குட்டி அம்மாவாகப் போறாடா!” என்றார் உற்சாகமான குரலில்.

     ஒரு நொடி எதுவும் புரியாமல் இன்ப அதிர்ச்சியில் திகைத்துப் போய் நின்றவனை, “அடேய் காதுல விழுதா இல்லையாடா?! அடேய்” என்று ரத்தினம் கத்த,

     “அ அப்பா?! நெ நெஜமாவா?!” என்றான் ஆசையும், ஆச்சர்யமும், ஆனந்தத் திகைப்புமாய்.

     “ஏன்டா இதுல கூடவா யாராச்சும் பொய் சொல்லுவாங்க?!” என்று ரத்தினம் வைய,

     “கவி கவி கிட்ட போனைக் குடுங்கப்பா” என்றான் ஆர்வமாய்.

     “அம்மாடி கன்னுக்குட்டி?!” என்று அவர் அழைத்தபடி திரும்ப, அதுவரை கூடத்தினுள் இருந்தவள், அவனுக்கு அழைப்பு விடுக்கிறார்கள் என்று தெரிந்ததுமே தனது அறைக்குள் புகுந்து கொண்டாள்.

     ‘அட என்ன இது?! இன்னுமா என் கன்னுக்குட்டிக்குக் கோவம் போகலை?!’ என்று எண்ணிக் கொண்டவர்,

     “கொஞ்சம் இருடா!” என்று சொல்லிவிட்டு, அவள் அறை முன் சென்று நின்று குரல் கொடுக்க, அவளிடம் எந்த பதிலுமே இல்லை!

     “அவ படுத்து ஓய்வெடுக்கா போலடா. அவ எழுந்து வெளிய வந்ததும் திரும்ப கூப்பிடுறேன்” என்றார் ரத்தினம் சமாளிப்பாய். ஆனால் அவனுக்குப் புரியாதா என்ன, அங்கு என்ன நடந்திருக்கும் என்று.

      அத்தனை நொடிகள் இருந்த சந்தோஷம் ஒரே நொடியில் வடிந்து போக,

     “ம் சரிப்பா” என்று அழைப்பைத் துண்டித்தான்.

     ‘சாரி சாரிடி கவி! நான் அப்படி செய்திருக்கக் கூடாதுதான்! ஆனா ஆனா அந்த சில நொடிகள்தான்டி இன்னிக்கு நம்ம வாழ்க்கைக்கு புது அர்த்தத்தைக் கொடுத்திருக்கு! தப்புதான் பெரிய தப்புத்தான்! நான் அதை மறுக்கவே இல்லை! ஆனா, ஆனா நான் செய்த அந்தத் தப்புத்தான் எனக்கு என்னையும் உன்னையும் சேர்த்து உணர வச்சுதுடி! அதே தப்புத்தான் நான் உன்மேல எவ்ளோ பயித்திக்காரத்தனமா அன்பு வச்சிருக்கேன்ங்கிறதையும் உணர வச்சதுடி!’ என்று நெஞ்சுக்குள் உருகியவன் ஒரு வார்த்தையாவது அவளிடம் பேசவிட முடியாத என்று ஏங்கித் தவித்தான்.

     ஆனால், யார் எவ்வளவு சொல்லியும் கவி அவனிடம் பேசச் சொல்லும் போதெல்லாம் ஏதாவது சாக்கு போக்குச் சொல்லித் தவிர்த்துக் கொண்டே போக, நாட்கள் கடந்தும் அவன் எதிர்பார்ப்பு பலிக்காதே போனது.

     கிட்டத்தட்ட கரு உருவாகி நான்கு மாதம் முடிந்து விட்டிருந்தது. என்னதான் உண்டாகி இருந்தாலும் அவள் வயல் வேலைக்குச் செல்வதை மட்டும் கைவிட வில்லை! கடுமையான வெயில் காலமும் இல்லை என்பதால், ஓய்வெடுத்து ஓய்வெடுத்து அவள் தன்னால் இயன்ற சின்னச் சின்ன வேலைகளை எல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள்.

     அப்படி ஒரு நாள், அவள் அவர்கள் தென்னை மற்றும் தேக்குத் தோப்பின் நிழலில் அமர்ந்து, சிலுசிலுவென்ற காற்று முகத்தில் மொத மசக்கையின் பூரிப்பில் கன்னங்கள் பூசி முகம் பொலிவுற, தன் தோழி கங்காவுடன் அமர்ந்து தேங்காய் மட்டைகளை உரித்தெடுக்கும் கருவி கொண்டு அதனை உரித்து எடுத்து தேங்காய்களை சற்றுத் தூக்கி தூரப் போட, அது சரியாய் அங்கே வந்து நின்றிருந்த அவன் காலில் போய் விழுந்தது.

     சில நிமிடங்களுக்கு முன்பே அங்கு வந்திருந்தவன், அவர்கள் அமர்ந்திருந்த  இடத்திற்குச் சற்றுத் தொலைவே இருந்த தென்னையின் மீது சாய்ந்து கைகளைக் கட்டியபடி ஒரு காலை பின்னே மடக்கி மரத்தில் முட்டுக் கொடுத்தபடி நின்று, சத்தம் கொடுக்காமல் அவளை ரசித்திருக்க, தேங்காய் காலில் பட்டதும்,

     “என்ன கங்கா வந்ததுமே தேங்காயால தாக்கி பலமான வரவேற்புக் கொடுக்குறாங்க உன் சிநேகிதி?!” என்றான் கண்களில் சிரிப்புடன் முகத்தில் அவளை ரசிக்கும் பாவனை மாறாமல்.

     “கண்ணன் ண்ணே நீங்க எப்போ வந்தீங்க?!” என்று ஆச்சர்யத்துடன் சட்டென எழுந்து கொண்ட கங்கா, அவன் காலருகே விழுந்து கிடந்த தேங்காயைப் பார்த்து,

     “அச்சச்சோ அடிபட்டுடுச்சா ண்ணே?!” என்று பதட்டமாய் கேட்க,

     ‘அவ பேசாம இருந்ததனால இருந்த வலியை விட அதிகமில்லை!’ என்று அவனும்,

     ‘ம்! உங்க நொண்ணனுக்கு தேங்காயெல்லாம் காணாது! பெரிய பாராங்கல்லைத் தூக்கி எறியணும்!’ என்று இவளும் மனதிற்குள் சொல்லிக் கொள்ள,

     அவளையே பார்த்திருந்த அவனது விழிகள் என்றுமில்லாமல், இப்போது அவளின் மனவோட்டத்தையும் படிக்க முயன்று அதில் வெற்றியும் பெற்று விட,       

     ‘நீ என்ன பண்ணாலும் எனக்கு ஓகேதான் கவிம்மா!’ என்று முனகியபடி மெலிதாய்ச் சிரித்துக் கண்சிமிட்ட,

     ‘பண்றதை எல்லாம் பண்ணிட்டு சிரிக்கிறதைப் பாரு! ஹீம்!’ என்று அவள் அவனை நேருக்கு நேர் முறைத்தபடி பல்லைக் கடிக்க, கங்கா அவர்கள் மனவோட்டம் புரியாமல், இருவரும் ஒருவருக்கொருவர் கண்களாலேயே காதல் பேசிக் கொள்கிறார்கள் என்று தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டு சத்தமில்லாமல் அங்கிருந்து நழுவினாள்.

     கங்கா அங்கிருந்து விலகி ஓடியதும், அவன், அவள் அருகே நடந்து வர, அதைப் பார்த்தவள், சட்டென அங்கிருந்து எழுந்து சென்று விடலாம் என்று எண்ணி வேகமாய் எழுந்தாள்.

     அமர்ந்திருந்த போது தெரியாத அவளின் வயறு, அவள் எழுந்ததும் சற்றே உப்பலாய்த் தெரிய, அதைப் பார்த்தபடியே நான்கே எட்டில் அவளை நெருங்கியவன், சடுதியில் அவள் சென்று விடா வண்ணம் அவள் கைப்பற்றி நிறுத்தி இருந்தான்.

                                         -உள்ளம் ஊஞ்சலாடும்…

   

 

 

              

      

    

     

 

Advertisement