Advertisement

                                                                   20

     “வசந்த் எனக்குப் புரியாம இல்லை, ஆனா?!” என்று கண்ணன் இப்போதும் தயங்க,

     “நோ வே கண்ணன். இன்னும் ஒரு வாரம் வேணா கூட லீவ் எடுத்துக்கோங்க. என்ன பிரச்சனையா இருந்தாலும் அதுக்குள்ள சால்வ் பண்ணிட்டு நிம்மதியா கிளம்புங்க. இது மட்டும்தான் என்னால இப்போதைக்கு செய்ய முடியும்” என்றார். அதற்கு அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லாது போக,

     “கண்ணன் ஆர் யு தேர்” என்றார் மீண்டும்.

     “ம். எஸ் வசந்த்” எனவும்,

     “ஓகே கண்ணா. நம்ம டீம்க்கு எந்த வித ரிமார்க்கும் வர விட மாட்டீங்கன்னு நான் நம்பறேன். பை. வில் மீட் யு இன் தி ஆபீஸ் சூன்!” என்று அழைப்பைத் துண்டித்தார்.

     “ஒரு வாரம்! ஒரு வாரத்துக்குள்ள அவளை சந்திக்கிறதே கஷ்டம். இதுல பிரச்சனையை சரி செய்யிறது எப்படி?!” என்று வாய்விட்டு முனகியவன்,

     “இப்போதைக்கு நான் அவளை விட்டு தூரமா இருக்கிறது மட்டும்தான் அவளுக்கு நிம்மதியைக் கொடுக்கும்! இங்க சென்னையிலேயே இருந்தா நிச்சயமா என்னால ஊருக்குப் போகாம, அவளைப் பார்க்காம இருக்க முடியாது! சோ, பெட்டர் நான் யுஎஸ் போறது மட்டும்தான் இதுக்கு ஒரே வழி!” என்று யோசித்து முடிவெடுத்தவன் அதற்கான ஆயத்தங்களில் இறங்கினான்.

     ஒரு வாரத்திற்குப் பிறகு. அவனது அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும், வெளிநாடு செல்லத் தேர்வாகி இருந்த அனைவரும் சேர்ந்து சின்னதாய் ஒரு விருந்து ஏற்பாடு செய்திருந்தனர் அந்தப் பார்ட்டி ஹாலில்.

     வெளிநாடுச் செல்லத் தேர்வாகி இருந்த மற்ற அனைவரும், வெகுவாய் சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருக்க, இவன் மட்டும் உம்மென்று அமர்ந்து கொண்டிருந்தான்.

     “ஹேய் கண்ணா என்னடா?! அதான் நீ ஆசைப்பட்ட மாதிரியே தானே எல்லா நடக்குது! அப்புறம் எதுக்கு இந்த சோக சீனு?!” என்றான் பிரதாப் அவன் அருகே வந்து அமர்ந்து.

     கண்ணன் அவனை முறைக்க, “எதுக்குடா அவனை முறைக்கிற?! அதான் நீ ஆசைப் பட்ட மாதிரியே அந்த பட்டிக்காட்டை எல்லாம் விட்டுட்டு ஹைபை லைப் ஸ்டைல் வாழப் போற இல்ல! அங்க போய் சம்பாதிக்குற பணத்துல மூணே வருஷத்துல திரும்பியதும், இங்க நீ  வாங்கி வச்சிருக்க ப்ளாட்ல ஒரு வில்லா கட்டிட்டு செட்டில் ஆகிடலாம்.” என்றான் கிஷோரும். 

     மூணு வருஷம் என்று சொல்லும்போதே அவன் நெஞ்சில் சொல்லொணா வலி எழுந்தது.

     ‘மூணு வருஷம், மூணு வருஷம் என் கவியை விட்டு, என் குடும்பத்தை விட்டு நான் எப்படி இருப்பேன்?!’

     ‘ச்சே என்ன ஒரு முட்டாள்தனம் செஞ்சுட்டேன்!’ என்று எப்போதும் போல் கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்பவனாய் அவன் நொந்து போனான்.

     அவர்களுக்குள் இப்போதைக்கு இடைவெளி தேவைதான் ஆனால் இத்தனை ஆண்டுகள் என்பது அவர்களின் அன்பை உடைக்குமா அல்லது இணைக்குமா?!

                                 *****

     வெளிநாடு கிளம்புவதற்கு நான்கு நாட்களுக்கு முன் அவன் ஊருக்குச் சென்று அனைவரையும் பார்த்துவிட்டு விவரம் சொல்லிவிட்டுச் செல்லலாம் என்று வந்திருந்தான்.

     இத்தனை நாட்கள் ஓரளவு வெளியே வந்து சென்று கொண்டிருந்தவளோ, அவன் வருகைக்குப் பின் மீண்டும் தன் அறைக்குள்ளேயே முடங்கிப் போனாள் அவன் கண்ணில் பட விரும்பாமல். ஆனால், அவளுக்குத் தெரியாதே இப்போதைக்கு மட்டும் அல்ல மொத்தமாய் மூன்று வருடத்திற்குத் தன் கண்ணில் பட முடியாத தூரத்திற்கு அவன் போகப் போகிறான் என்று!

     அன்று முழுவதும், வீட்டில் இருப்பவர்களிடம் எப்படி விவரத்தை சொல்வது என்று தயங்கித் தயங்கித் தவித்திருந்தவன், ஒருவழியாய் அனைவரும் இரவு உணவை உண்டு முடித்த சமயம் மெல்ல விஷயத்தைச் சொல்ல,

     “என்ன வெளிநாட்டுக்கா?!” என்று கோபம் கொண்டார் ரத்தினம்.

     “என்னய்யா சொல்ற?!” என்று பாட்டியும் அழாத குறையாய்க் கேட்க, வைரமும், வீரபாண்டியும் மனம் கலங்க ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

    “இது கல்யாணத்துக்கு முன்னாடியே முடிவான விஷயம். அப்போ இருந்த மனநிலையில மூணு வருஷ ப்ரராஜெக்டை ஏத்துக்கிட்டு அக்ரீமென்ட்ல சைன் பண்ணிட்டேன். இப்போ என்னால எதுவும் செய்ய முடியலை!” என்று அவனுமே மிகவும் வருத்தமாகச் சொல்லவும்,

     “என்ன மூணு வருஷமா?! எல்லாத்துலயும் அவசரம்டா உனக்கு! எதுலயும் நிதானமா முடிவெடுக்கிறது இல்லை!” என்று ரத்தினம் அவனைக் கடிய,

     “என்னப்பா இது?! வேற எதுவும் செய்ய முடியாதா?!” என்றார் வீர பாண்டியும் கவலையாய்.

     “இல்லை மாமா, வேற வழியில்லை! நான் ஏற்கனவே பேசிப் பார்த்துட்டேன். கவி கவியை” என்றவனின் குரல் உடைந்து போக, அங்கிருந்த பெரியவர்களுக்குமே மனம் உடைந்து போனது.

     “அவ வேணாம் வேணாம்னு நீ சொன்னதுக்கு ஏற்ற மாதிரியே இன்னிக்கு எல்லாம் நடக்குது பார்த்தியாடா?! உன் வாக்கே உனக்குப் பலிச்சு போச்சு! கல்யாணம் முடிச்சும் நீ ஒரு பக்கம் அவ ஒரு பக்கம்னு வாழணும்தான் விதி இருந்தா யார் என்ன செய்ய முடியும்?!” என்று வைரம் கண்களைக் கசக்கிக் கொண்டு எழுந்து செல்ல, அவனுக்கு எப்படி அவர்களை எல்லாம் சமாதானப் படுத்துவது என்றே தெரியவில்லை! ஏனெனில் அவனே இந்நொடி வரை சமாதானம் ஆகவில்லையே இந்தப் பிரிவுக்கு!

     அவன் பேசியதெல்லாம், அவன் வந்திருந்தனால் தனது அறையிலேயே தனியாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு, தட்டைக் கொல்லைப் புறத்திற்கு எடுத்துச் சென்று போட வந்தவளின் காதுகளிலும் விழத்தான் செய்தது. அவனும் அதற்காகவே காத்திருந்து அவள் வரும் சமயம் அந்தப் பேச்சை ஆரம்பித்திருந்தான் அவளிடம் தனியாகச் சென்று இதைச் சொல்ல முடியும் என்று தோன்றாததால்.

     அவளைப் பொறுத்தவரை அவன் வேண்டுமென்றே இம்முடிவை எடுத்திருக்கிறான் என்றே தோன்றியது!

     ‘செய்யக்கூடாததை எல்லாம் செய்துவிட்டான். இனி அவன் என்ன செய்தால் என்ன?!’ என்று வெறுத்துப் போனது அவள் மனம்.

     ‘என்னவோ செய்துக்கோ!’ என்ற ரீதியில் அவள் தன் அறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொள்ள, அவன் வெறுமையாய் உணர்ந்தான்.

    ‘ஒரு வாரம் ஊருக்கு வரலைன்னாலே என்னை அவ்ளோ தேடுவாளே! இன்னிக்கு மூணு வருஷம் அவளை விட்டுப் போகப் போறேன்னு தெரிஞ்சும் ஒரு வார்த்தை, ஏன் ஒரு பார்வை கூட பார்க்கலையே?!’ என்று வெகுவாய் வருந்தினான்.

     ‘நீ செஞ்ச வேலை அப்படிடா!’ என்று உள்மனம் குத்த, அமைதியாய் எழுந்து சென்று கைகழுவி வந்தான்.

     அவர்களுடன் சேர்ந்து அமர்ந்திருந்த கார்த்திக்குமே இங்கு நடப்பதை எல்லாம் பார்த்தும் கேட்டும் கொண்டுதான் இருந்தான். ஆனால் அவனுக்குமே இதற்கு என்ன சொல்வது என்று புரியவில்லை! அலுவகத்தின் கோட்பாடுகள் அறிந்தவனாயிற்றே! அதிலும், இந்த முடிவு, அவர்கள் பொங்கலுக்கு ஊருக்கு வருவதற்கு முன்பே எடுக்கப் பட்டது என்பதால் கண்ணனையும் அவனால் குற்றம் சொல்ல முடியவில்லை! அவனும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறான் கண்ணனின் மாற்றத்தை.

     ஊருக்கு வந்ததுமே அவனிடம் அனைத்தையும் சொல்லி வருந்தியவனை, இவன் என்ன சொல்லிக் கோபிப்பது. ஆனால் கவிக்கும், அவனுக்கும் இடையே நடந்த பிரச்சனையை மட்டும் அவன் சொல்லவே இல்லை இதுவரை. எப்படிச் சொல்லுவான்?! கார்த்திக்கை மனதில் வைத்துத்தானே அவளை அத்தனை வேதனைப் படுத்தி இருக்கிறான். அதைச் சொன்னால் கார்த்திக்குமே அவனை மொத்தமாய் வெறுத்துவிட மாட்டானா?! அதிலும் கணவன் மனைவிக்கு இடையே நடந்த அந்தரங்கத்தை வெளியே சொல்வதென்பது அவளுக்கு இழைத்த துரோகத்திலும் துரோகம் அல்லவா!

     கண்ணன் ஒரு நிலையில் இல்லாது தவித்துப் போனான். அவனால் அவளை விட்டுப் போகவும் முடியவில்லை! அலுவலகத்தின் முடிவை மறுக்கவும் முடியவில்லை! வேறு வழியின்றி இந்த பிரிவு தங்களுக்குள் ஒரு நல்ல மாற்றத்தை விதைக்கும் என்ற நம்பிக்கையுடன் விமானம் ஏறினான் அந்த நாளின் விடியலில்…

                                 *****

     வேலை வேலை வேலை என்று அவன் அலுவலகத்திற்காய் உறக்கமின்றியும் அவளை மறக்க மனமின்றியும் உழைத்துக் கொண்டிருந்தான் கண்ணன்.

     அவனின் அன்பிற்குரியவளும் அங்கு அவனைப் போலவே வேலை வேலை வேலை என்றே மூழ்கிக் கிடந்தாள் காட்டிலும் தோப்பிலும்.

     அவள் பிறந்த போது நட்டு வைக்கபட்டிருந்த தேக்கும், தென்னையும் நன்கு வளர்ந்திருந்தது அவள் அறியாமல் அவள் வயற்றில் வளர்ந்து வரும் அவளின் வாரிசைப் போலவே!

     “இன்னும் ரெண்டு மூணு வருஷத்துல நல்ல விலைக்குப் போவும்ல வீரா?!” என்று ரத்தினம் கேட்க,

     “ஆமாம் மாமா!” என்றார் வீராவும்.

     “ம்! அதுக்குள்ள நமக்குன்னு ஒரு பேரப்புள்ளை வந்துட்டா, மொத வெட்டுற மரத்துல என் பேரப் புள்ளைக்கு தேக்குத் தொட்டில் செஞ்சிப் போட்டுடுவேன். ஆனா எங்க?! இந்தப் பைய ஒரு பக்கமும் என் கன்னுக்குட்டி ஒரு பக்கமும் கெடந்து திண்டாடுதே!” என்று ரத்தினம் பெருமூச்செறிய, அதைக் கேட்டு, அவர்கள் அருகே நின்று மரத்திலிருந்து இறக்கிய இளநீகளை கணக்கெடுத்துக் கொண்டிருந்த கவிக்கு திக்கென்றது.

     ‘ஐயோ நெசந்தானா இது நெசந்தானா?!’ என்று எண்ணியவளுக்கு உடல் வெலவெலத்துப் போனது.

     ‘இது, இது எப்படி சாத்தியம்! ஒரு நாள்ல ஒரே நாள்ல கரு உருவாகிடுமா?!’ என்று எண்ணியவள், மனதினுள் சட்டெனத் தான் மாதவிடாய் ஆனக் காலத்தைக் கணக்குப் போட்டுப் பார்க்க, அவள் மாதவிடாய் நின்ற இரண்டு நாட்கள் கழித்தே அவன் அப்படி நடந்து கொண்டதும் அதன் நிமித்தம் நிச்சயம் கரு உருவாக வாய்ப்பு உள்ளதென்பதும் பன்னிரண்டாம் வகுப்பு வரை நன்றாகவே படித்து தேறியிருந்த அவளுக்குப் புரிந்து போனது.

     ‘அப்போ அப்படிப் பார்த்தா இப்போ ரெண்டு மாசம் முடியப் போகுதே! நாள் தள்ளிப் போனதைக் கூட யோசிக்கத் தோணலையே!’ என்று எண்ணியவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

     ‘ஐயோ இதை, இதை எப்படி நான் வெளில சொல்லுவேன்?! மத்தவங்களைப் பொறுத்தவரை இன்னும் நாங்க ஒண்ணா வாழலைன்னு தானே நினைக்கிறாங்க! இ இப்போ இந்த விஷயம் தெரிஞ்சா என்ன என்ன நினைப்பாங்க எல்லோரும்?!’ என்று கலங்கினாள். ஆனால் மூடி மறைக்கக் கூடிய விஷயமாயிது!

      ‘பிள்ளையாதான் இருக்கும்னு எப்படி உறுதியாத் தெரிஞ்சிக்கிறது?! அ அம்மாகிட்ட சொல்லிடுவோமா?!’ என்று எண்ணியவள், அன்று மாலை வீட்டுக்குப் போனதும் தயங்கித் தயங்கி தாயிடம் விவரம் சொல்ல,

     “அடி என் தங்கமே! நான்கூட கவனிக்கத் தவறிட்டேனே போன மாசம் கூட நீ தலை குளிக்கவே இல்லையில்ல?!” என்று அவள் முகத்தை வழித்து முத்தமிட்டவர்,

     “வா வா உடனே ஹாஸ்பத்திரிக்குப் போவோம்” என்று ஆவலாய் அவள் கையைப் பிடித்துக் கொண்டு எழுந்தார் வைரம்.

     அவள் மனதிற்குள் பயந்து கொண்டிருந்தது போல் அல்லாமல்  விவரம் சொன்னவுடன் வைரம் அத்தனை மகிழ்ச்சியோடு ஆர்ப்பரித்ததில் அவளுக்கு மனதுள் கொஞ்சமே நிம்மதி எழுந்தது.

    

Advertisement