Advertisement

                                                                   2

     அவன் அறைந்த அறையில் தடுமாறிக் கீழே விழப் போனவளைப் பின்னிருந்து தாங்கி நின்றது அக்கரங்கள்.

     ஷாலு, வலியோடு யார் தன்னை விழாமல் பற்றினார்கள் என்று நிமிர்ந்துப் பார்க்க அவள் முகம் வெளிறிப் போனது.

     “கி கிஷோர்?!” என்று அவள் உதடுகள் தந்தி அடிக்க,

     “ம்!” என்று விரக்தியான புன்னகை ஒன்றை அவளுக்குக் கொடுத்தவன் அவளை விடுவிக்க,

     “கி கிஷோர்! நான் சொல்ல வர்றதைக் கொஞ்சம் கேளு ப்ளீஸ்” என்று அவள் அவன் கையைப் பற்றிக் கொண்டு இறைஞ்சத் துவங்க,

     “அவன் மேல இருந்து கையை எட்றீ!” என்றான் கண்ணன் கர்ஜனையாய்.

     “யு யூ! எல்லாம் இவனாலதான்! கிஷோர் இவன்தான் என்னை” என்று சொல்ல வந்தவள் மீண்டும் பளீரென்று அறை வாங்கியதில் பட்டென்று வாயை மூடிக் கொண்டாள்.

     “அவனைப் பத்தி ஒரு வார்த்தை தப்பா சொன்ன கொன்னுடுவேன்டி உன்னை!” என்று உறுமிய கிஷோரை,

     “இன்னும் என்னடா பேச்சு இவகிட்ட?! வா” என்று இழுத்துச் சென்றான் கண்ணன்.

     “ஆனாலும் இவன் பண்ற அக்கப்போருக்கு ஒரு அளவே இல்லாம போயிக்கிட்டு இருக்குடா! நல்லா இருக்க லவ்வர்ஸை பிரிச்சு வைக்கிறதையே பொழப்பா வச்சிக்கிட்டு சுத்திகிட்டு இருக்கான். இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு, பியூச்சர்ல இவன் லவ் பண்ணான்னா? லவ் பண்றது டவுட்டுதான்! இன்கேஸ் லவ் பண்ணான்னா அவன் லவ்வை நான்தான்டா பிரிச்சு விடுவேன்” என்று விளையாட்டாய் சாபம் இட்டுக் கொண்டிருந்தான் கார்த்திக்.

     “டேய் அவங்க எங்கடா நல்ல லவ்வர்சா இருந்தாங்க?! ஷாலுவோட குணம் தெரியாம கிஷோர் தான் அவளை உருகி உருகி லவ் பண்ணி சுத்திக்கிட்டு இருந்தான். அவளும் இவனை யூஸ் பண்ணிக்கிட்டா! நாம எவ்ளோ எடுத்து சொல்லியும் இவன் கேட்குறதா இல்லை! அதான் கண்ணன் இன்னிக்கு இப்டி அதிரடியா இறங்கிட்டான்” என்று நரேஷ் முறைப்புடன் சொல்ல,

     “ஆமாம்டா! இவனுக்கு எந்தப் பொண்ணைப் பார்த்தாலும் உருகிடும்! அதான் சார் அவளுக்கு பரிஞ்சிகிட்டு வராரு” என்றான் பிரதாப்பும் கார்த்திக்கை முறைத்தபடி.

     “போடா பொண்ணுங்களோட மனசைப் பத்தி உங்களுக்கு என்னடா தெரியும்? சொல்றேன் கேளு” என்று கார்த்திக் ஆரம்பிக்க,

     “டேய் கண்ணா இவன் ஏதோ சொல்லணுமாம் உன்கிட்ட. சீக்கிரம் வாடா” என்று கார்த்திக்கை கோர்த்துவிட்டனர் கண்ணனிடம்.

     “என்னடா?!” என்று புருவம் உயர்த்திக் கேட்டபடியே கண்ணன் அவனை நெருங்க,

     “ஏன்டா?! ஏன்?!” என்று வடிவேலு மாடுலேஷனில் கேட்டவன்,

     “ஹஹா! ஒண்ணுமில்லடா கண்ணா உன்னை மாதிரி இந்த உலகத்துல எந்த ஆம்பிளையுமே இவ்ளோ கெத்தா இருக்க மாட்டாங்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன்!” என்று அவன் மழுப்ப,

     “ஏன்?! அப்ப மத்தவங்கல்லாம் என்ன வெத்தா?! இப்படி எடாகுடமா பேசி எவன் கிட்டயாச்சும் வாங்கிக் கட்டிக்காத!” என்று நக்கலடித்துவிட்டு கண்ணன் தங்கள் நண்பர்களுடன் ஒன்றாய் அமர்ந்து சாப்பிடுவதற்காய் புக் செய்திருந்த டேபிளில் சென்று அமர, கிஷோர் வாட்டத்துடன் அமர்வதைக் கண்டு,

     “டேய் மச்சி! இது உனக்கு சந்தோஷமான நாள்டா! இத்தனை நாளா உன்னைப் பிடிச்சிருந்த பேய் உன்னை விட்டுப் போயிடுச்சுன்னு நினைச்சு சந்தோஷமா என்ஜாய் பண்ணுடா, இன்னிக்கு சாப்பாடோடு சேர்த்து சரக்கும் என்னோட ட்ரீட்!” என்று கண்ணன் சற்றுத் தொலைவே கன்னத்தில் கைவைத்தபடி அவர்களையே வைத்த கண் வாங்காமல் முறைத்திருந்த ஷாலினியைப் பார்த்தபடியே சொல்ல, அவள் கண்களில் அத்தனைக் கனல்.

     ‘சர்தான் போடி!’ என்ற ரீதியில் அவளை ஒருபார்வை பார்த்தவன்,

     “சீயர்ஸ்…” என்று தன் நண்பர்களுடன் கொண்டாட்டத்தை ஆரம்பித்தான்.

     ஒருமணி நேரமாய் தொடர்ந்த அவர்களின் விருந்து முடிவடையும் தருவாயில்,

     “டேய் இந்த வாரம் நீ ஊருக்குப் போகலையா?!” என்றான் கார்த்திக் ஏதோ நியாபகம் வந்தவனாய்.

     “ஏன் எங்க அத்தை செய்து கொடுத்து அனுப்புற மீன் கொழம்பு நியாபகம் வந்துடுச்சா?!” என்றான் கண்ணன் கேலியாய்.

     “இல்லடா! எப்போ பாரு ஊருக்கு போகும் போதெல்லாம் எங்களைக் கூட்டிட்டுப் போறேன் போறேன்னுட்டு ஊரைக் கண்ணுலேயே காட்ட மாற்றியே! உங்க அத்தை பொண்ணு சும்மா கின்னுன்னு இருப்பாளா என்ன?!” என்றான் கார்த்திக் போதையில் உளறலாய்.

     அவ்வளவுதான், என்ன ஏது என்று யூகிப்பதற்குள் கண்ணனின் கை கார்த்திக்கின் தொண்டையை நெருக்கி இருக்க, மற்றவர்கள் பயந்து போய்,

     “டேய் கண்ணா! கண்ணா!” என்று கத்த,

     “சாவடிச்சிடுவேன்!” என்றான் சீற்றமாய்.

     பயத்தில் விழி பிதுங்கிப் போனக் கார்த்திக், “விடு விட்றா!!” என்று இரும்பியபடியே கெஞ்ச,

     “ஹேய் கண்ணா விடுடா ப்ளீஸ்! எல்லாரும் பார்க்குறாங்கடா!” என்று ப்ரதாப்பும், நரேஷும் அவனிடம் கெஞ்ச, போனால் போகிறது என்று ஒற்றை விரல் நீட்டி எச்சரிக்கையுடன் மிரட்டிவிட்டே அவனை விடுவித்தான் கண்ணதாசன்.

     கார்த்திக் அவனை எதுவும் செய்ய முடியாமல் முறைக்க, கண்ணனோ, விடுவிடுவென அங்கிருந்து எழுந்து சென்று விட்டான் யாரிடமும் எதுவும் பேசாமல்.

     “இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படி பண்ணான்?!” என்று கேட்ட கார்த்திக்கை,

     “செருப்புப் பிஞ்சிடும் நாயே! உன் அத்தைப் பொண்ணை அப்படிப் பேசினா நீ சும்மா  இருப்பியா?!” என்று திட்டினான் கிஷோர்.

     “நான் என்னடா தப்பா சொன்னேன்! அழகா இருப்பளான்னு கேட்குறதுக்கு பதில் கொஞ்சம் டங் ஸ்லிப்பாகி கின்னுன்னு” என்று சொல்ல வந்தவனை முறைத்து,

     “டேய் கண்ணா!” என்று ப்ரதாப் அழைக்க,

     “அடேய்?!!” என்று அவன் வாயைச் சட்டெனப் பொத்தினான் கார்த்திக்.

     “அவ்ளோ பயம் இருக்குல்ல?! அப்புறமும் மூடிட்டு தண்ணியடிச்சோமா தின்னோமா தூங்குனோமான்னு இருக்கிறதை விட்டுட்டு! ச்சே! எல்லாத்தையும் கெடுத்து வச்சிட்டான். இன்னிக்கு லீவ் எடுத்து லஞ்ச் அரேஞ் பண்ணதே வேஸ்டா போச்சு!” என்று திட்டிய நரேஷ்,

     “வாங்கடா!” என்று கிளம்ப, மற்றவர்களும் அவன் உடன் எழுந்து செல்ல,

     “டேய் பில்லுடா?!” என்று பதறினான் கார்த்திக்.

     “ஹான்! நீ பேசின பேச்சுக்கு நீயே அதைக் கட்டு” என்றுவிட்டு, நகர்ந்தான் பிரதாப்.

                          *****

     “மாமா?! என்ன நினைச்சுக்கிட்டு இருக்க நீ?! இதோ வரேன் அதோ வரேன்னு எவ்ளோ நேரம் போக்குக் காட்டுவ?!” என்று போனில் அவனிடம் காய்ந்து கொண்டிருந்தாள் கவிதாயினி.

     “வரேன்டி. சும்மா நொய்யி நொய்யின்னு நீ போனைப் போட்டு நச்சரிக்காம இருந்திருந்தாலே இந்நேரம் ஊருக்கு வந்து சேர்ந்திருப்பேன். போனை வையிடி முதல்ல” என்று கண்ணன் கடுப்புடன் போனை வைக்க,

     “ப்ச்!!” என்று சலித்துக் கொண்டவள், தனது மொபைல் ஸ்க்ரீனில் சிரித்துக் கொண்டிருந்தவனைப்  பார்த்து,

     “போ மாமா! எப்போ பாரு என்னைத் திட்டிக்கிட்டே இருக்க?! என் அருமை உனக்கு புரியவே மாட்டேங்குது!” என்று புலம்பினாள்.

     “புரியும்டி புரியும். சீக்கிரமே உன் மாமனுக்கும் உனக்கும் ஒரு கால்கட்டுப் போட்டாதான் புரியும்” என்றபடி வந்த வைரம்,

     “ஊருக்குத்தானே வந்துக்கிட்டு இருக்கான்! பொறவு எதுக்கு சும்மா அவனுக்கு போனைப் போட்டுக்கிட்டு இருக்க?!” என்றார்.

     “ம்! வயறு பசிக்குதுல்ல?! அது எப்போ வந்து நீ எப்போ அதுக்கு எண்ணெய் தேச்சு குளிக்க வச்சு” என்று அவள் பெருமூச்சு விட,

     “நீ ஏன் காத்துக் கெடக்க?! போய் சாப்பிட வேண்டியதுதானே?!” என்றார் வைரம்.

     “ஹாங்! அதெப்படி?! அதுகூட சேர்ந்து சாப்பிடுறதே வாரத்துல ரெண்டு நாள்தான் அதையும் விட்டுக் கொடுக்கவா?!” என்று கேட்டவளை,

     “அப்போ பேசாம போயி வேலையைப் பாரு! அழுக்கு பாத்திரமெல்லாம் கெடக்கு. அதை வெலக்கி வச்சுட்டு, துணிங்களையும் துவைச்சு காய வையி” என்று வைரம் அவளுக்கு வேலை கொடுத்து அனுப்ப,

     “ம் ம்! போம்மா! நான் இப்போதான் குளிச்சு முடிச்சு தயாரானேன்! இப்போ போயி வேலை செஞ்சா வேர்த்து விறுவிறுத்துப் போயிரும்! அப்புறம் செஞ்சுக்கறேன் போ!” என்று விட்டு அவள் கங்கா வீட்டுக்கு ஓட்டமாய் ஓடிவிட்டாள்.

     “அடம்பிடிச்சக் கழுதை! சனி, ஞாயிறு வந்தாலே இவ அளப்பறைத் தாங்கலை!” என்று செல்லமாய் வைதபடியே, வைரமும், தாளித்து விட்டுருந்த ஆட்டுக்கால் பாயா இறக்கும் பதம் வந்துவிட்டதா என்றுப் பார்க்க ஓடினார்.

     “டி! கங்கா” என்று குரல் கொடுத்தபடியே வீட்டினுள் நுழைந்தவளைப் பார்த்து,

     “எம்மா?! இன்னிக்கு சூரியன் கிழக்குல தானே உதிச்சது! சனிக்கிழமை அதுவுமா இவ காத்து இந்தப் பக்கம் அடிக்குது?!” என்று கங்கா தோழியை வம்பிற்கு இழுக்க,

     “ரொம்பத்தான் போடி!” என்று அவள் தோள் பட்டையில் ஒரு இடிஇடித்துவிட்டு கவி நேராய் அவர்கள் சமையற் கட்டிற்குள் நுழைய,

     “அங்க ஒன்னும் நீ எதிர்பார்க்குற மாதிரியெல்லாம் எதுவும் இல்லை! வெறும் கம்பங்களியும் கருவாட்டுக் குழம்பும்தான்!” என்று கங்கா சொல்ல,

     “என்னாது?!” என்று ஒரு தட்டை எடுத்து அதில் ஒரு கரண்டி களியைத் தானே தட்டில் இட்டு, அதற்கு மூன்று கரண்டி குழம்பையும் ஊற்றி கங்கா வீட்டின் நடுக் கூடத்தில் இருந்த ஊஞ்சலில், போய் அமர்ந்தவளை,

     “வந்துட்டாளா என் மருமவ?! எங்க இன்னிக்கு சனிக்கிழமையாச்சே. என் புள்ளை வராதே, நாமலே களியையும், கொழம்பையும் கொண்டு போய் கொடுப்போம்னு சொல்லிட்டு இருந்தேன் உங்க அயித்தைகிட்ட” என்றபடியே வந்தார் மருது.

     “இன்னும் அவுக வரலை மாமா” என்றபடியே சப்புகொட்டிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தவளின் அருகே வந்து அமர்ந்தவர்,

    “கற்பகம் எனக்கும் சோறு கொண்டாம்மா” என்றுவிட்டு,

     “ஏனாம்?! இம்புட்டு நேரமாகுதே!” என்றார் கேள்வியாய்.

     “ம்க்கும்! அதைக் கேட்டதுக்குதான் அத்தைக்கும், மருமவனுக்கும் அம்புட்டு கோவம் வருது மாமா! பசி வேற தாங்கலை! அது வரதுக்குள்ள அம்மா கொழம்பு சட்டியை வெளியே எடுக்கவும் எடுக்காது! அதுவுமில்லாம நானும் அது கூட உட்கார்ந்து சாப்பிடுறதே இந்த ரெண்டு நாள்தானே!” என்று அவள் சொல்ல,

     “ம்!” என்று தலையசைத்தவருக்கு ஏனோ மனம் கனத்தது இவளுடைய அன்புக்கு அவன் உகந்தவன் தானா என்று!

     அதற்குள் தெருமுனைக்குள் திரும்பும் போது கொடுக்கும் அவன் காரின் ஹாரன் சத்தம் அவள் காதுகளை எட்டிவிட,

     “மாமா வந்துடுச்சு!” என்றபடியே மீதமிருந்த களியை ஒரு மடக்கில் வாயில் போட்டவள், முற்றத்தில் இருந்த வாளித் தண்ணீரில் கையைக் கழுவிக் கொண்டு தட்டையும் சடுதியில் கழுவி வைத்துவிட்டு ஓடினாள் ஓட்டமாய்.

     அதைப் பார்த்த கற்பகம், வாய்விட்டுச் சிரிக்க, மருதுவோ கவலையுடன் தனது நண்பனின் மகளைப் பார்த்திருந்தார்.

     “என்னப்பா சோறு கூட சாப்பிடாம கவியையே பார்த்துகிட்டு உட்கார்ந்திருக்கீங்க?!” என்று அருகே வந்து அமர்ந்த மகளிடம்,

      “என்னமோ இந்தப் புள்ளைக்கு ஒரு கஷ்டமும் வந்துடக் கூடாதுன்னு மனசு அடிச்சுக்குது!” என்று இத்தனை நாள் மனதில் போட்டு வைத்துக் கொண்டிருந்ததை ஏதோ ஒரு கவலையில் கொட்டிவிட,

     “ஏன் ப்பா?! ஏன் திடீர்னு இப்படிச் சொல்லுறீங்க?!” என்று கலங்கிப் போய்க் கேட்டாள் கங்கா.

     “ஹான் ஒ ஒண்ணுமில்லைம்மா?! என்னவோ தெரியலை?! தோணுது!” என்றவர்,

     “சரிம்மா நான் காட்டுக்கு கிளம்பறேன். வீராவும் எனக்காகக் காத்துகிட்டு இருப்பான். நீயும் கவியும் பொறுமையா கெளம்பி வாங்க!” என்றுவிட்டு கொண்டு வந்த உணவை முழுதாய்ச் கூடச் சாப்பிடாமல் எழுந்தவரைப் பார்த்து கங்காவிற்கும் ஏதோ சுமை கூடியது.

     “எம்மா?! களியை வீணாக்காம அப்படியே மதிய சாப்பாட்டுக்கு கொண்டாந்துரச் சொல்லு!” என்று குரல் கொடுத்து விட்டு அவர் வெளியேற,

      “ம் சரிப்பா! நாங்க வரும் போது கொண்டார்றோம்!” என்றபடியே, அவருக்காய் கொண்டு வந்த உணவை திரும்பவும் சமையற்கட்டிற்குள் எடுத்துச் சென்றாள் கங்கா.

     மூச்சிரைக்க ஒரே ஓட்டமாய் ஓடி வந்து அவன் கார் முன் நின்றவளை முறைத்தவன்,

     “காலங்கார்த்தால எங்கடி ஊர் சுத்தப் போன?!” என்றான் அதட்டலாய்.

      “சும்மாதான் இங்க கங்கா வீடு வரைக்கும்” என்றவள், கார் பின் சீட்டில் இருந்த அவனது உடமைகளை எடுத்துக் கொண்டு உள்ளே செல்ல,

     “என்ன ஆச்சு மாமா?! உடம்புக்கு ஏதும் சரியில்லையா?! முகமே சரியில்லை!” என்று அவள், அவன் நெற்றியிலும், கழுத்திலும் கை வைத்துத் தொட்டுப் பார்க்க,

     “ஒண்ணுமில்லடி! நல்லாத்தான் இருக்கேன்” என்றுவிட்டு நேரே தன் அறைக்குச் சென்றவனை,

     “மாமா எதுக்கு ரூமுக்குப் போயிக்கிட்டு! கிணத்தடியில உன் துண்டு, சோப்பு எல்லாம் எடுத்து வச்சிருக்கேன்! அம்மாவும் அங்கதான் தண்ணி காய வச்சிக்கிட்டு இருக்கு உனக்கு எண்ணெய்க் குளியல் போட” என்று அவள் சொல்ல,

     “ம்!” என்றுவிட்டு நகர்ந்தவனை ஆசையாய் ரசித்தாள் தன் இரு கண்களிலும் நிறைத்துக் கொண்டு.

     “வாடா! எவ்ளோ நேரம் இன்னிக்கு வந்து சேர?! இந்தப் பொண்ணு வாசலுக்கும் வீட்டுக்கும் நடையா நடந்துத் தரையச் தேச்சுப்புட்டா!” என்ற வைரம்,

     “வந்து உட்காருய்யா?!” என்று அவனைக் குளியல் போடும் கல்லில் அமரச் சொல்ல, அவன் துண்டைக் கட்டிக் கொண்டு தனது மற்ற உடைகளைக் களைந்துவிட்டு அமர்ந்தான் தன் அத்தை இல்லை இல்லை அவன் மனதில் தாயாய் நிறைத்திருப்பவளின் கைகளால் எண்ணெய்க் குளியல் போட,

     வைரம் அவனின் தலையில் நல்லெண்ணெய் ஊற்றிச் சூடு பறக்கத் தேய்த்துவிட, அவனுக்கு உறக்கம் சொக்கிக் கொண்டு வந்தது.

     “ஏடெய் என்ன இது? குளிக்கக்குள்ளவே உறங்கிக் கிட்டு?!” என்று குரல் கொடுத்தார் அதட்டலாய்.

     “அத்தை சீக்கிரம் தண்ணியை ஊத்து. தூக்கம் சொக்குது?!” என்றவனை,

     “இல்லல்ல. கொஞ்ச நேரமாச்சும் எண்ணெய் ஊருனாத்தான் உடம்புச் சூடு தணியும்!” என்ற வைரம்.

     “டி… மாமனுக்கு சீயாக்காய் காய்ச்சிக் கொண்டா!” என,

     “ம். சரிம்மா!” என்று குரல் கொடுத்தாள் இத்தனை நேரம் உள்ளிருந்தே அவனை ரசித்துக் கொண்டிருந்தவள்.

     சமயலறைக்குச் சென்றவள், ஒரு பாத்திரத்தில் தண்ணீரையும் இரண்டு கரண்டி சீயக்காய்த் தூளையும்  போட்டு அடுப்பில் வைத்துவிட்டு அது கொதி வரக் காத்திருந்த நேரம், கனவில் மூழ்கினாள்.

     “ஏய்!! மெதுவாடி! தலையைத் தானே தேய்ச்சு விடுறேன்னு வந்த?! கை ஏன்டி தாடிப் பாக்கம் போகுது?! கோதிக் கோதியே இருக்குறத் தாடியை எல்லாம் பிச்சுப்போட்டுடுவப் போல!” என்று அவன் கத்த,

     “ம்! இந்தக் கருகருன்னு இருக்க தாடி மேல எனக்கு அம்புட்டு ஆசை மாமா?!” என்றவள், மீண்டும் அவன் தாடியை வருட,

     “வேணும்னா ஒட்டு தாடி வாங்கித் தரேன். வச்சுக்கிட்டு சுத்துடி! என் தாடியை விடுடி!” என்று அவன் கலாய்க்க,

     “அய்யே! போ மாமா!” என்று சிணுங்கியவள், அவனை மையலுடன் பார்த்தவாறே,

     “நீ ஒவ்வொரு முறை என்னைக் கொஞ்ச வரும்போதெல்லாம் என்னைக் குறுகுறுக்க வைக்கிற இந்தத் தாடியை எனக்கு எம்புட்டுப் புடிக்கும் தெரியுமா?!” என்று அவள் கிறக்கமாய்ச் சொல்ல,

     “டி! கிணத்தடியில உட்கார்ந்திருக்கேன்டி! இப்படி உசுப்பேத்தி விடுற?!” என்றவன் மனமும் மனைவியின் கிறங்கிய குரலில் எக்குதப்பாய்த் துடிக்க,

     “அடியே எவ்ளோ நேரம்டி சீயக்காய் காய்ச்சிக் கொண்டு வர?!” என்று வைரம் போட்ட சத்தத்தில், கனவு கலைந்தவள் சீயக்காய்த் தூளை எடுத்துக் கொண்டு ஓடி, அவனை வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே அவன் அருகே வந்து சீயக்காயை வைத்துவிட்டு, அருகே வெளாவி வைத்திருந்த சுடு நீரை எடுத்து கண்மூடி அமர்ந்திருந்தவன் தலையில் ஊற்றிவிட்டு ஓட,

     “இவளை!” என்று கையை ஓங்கிக் கொண்டு அவளை அடிக்க எழுந்தவனை,

     “விட்றா கண்ணா! கட்டிக்க போறவனாச்சேன்னு உரிமையோட விளையாடுறா” என்று தடுத்தார் வைரம்.

     “கட்டிக்கப் போறவனாச்சே!” என்ற சொல் ஒரே நேரத்தில் அவள் நெஞ்சில் அமுதத்தையும் அவன் நெஞ்சில் கசப்பையும் சுரக்க வைக்க இருவரின் வாழ்வும் எப்படி ஒன்றுபடும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்…

                          -உள்ளம் ஊஞ்சல் ஆடும்…

         

        

           

    

Advertisement