Advertisement

                                                                    19

    

 இத்தனை நேரம் அவளைப் பற்றி மட்டுமே சிந்தித்து ஒரு முடிவு எடுத்திருந்தவன், மெல்ல எழுந்தமர்ந்து,

     “அப்பத்தா!” என்றான் ஏதோ சொல்ல வந்து தயங்கியவனாய்.

     “என்னய்யா சொல்லு” என்று அவர் பரிவாய்க் கேட்க,

     “ஒ ஒண்ணுமில்லை!” என்றவன்,

     “நான் போய் குளிச்சிட்டு வரேன்” என்று எழுந்து சென்றான்.

     குளித்துவிட்டு வந்தவனைப் பாட்டி சாப்பிட அழைக்க, “இருக்கட்டும் அப்பத்தா. நேரமாகுது நான் ஊருக்குக் கிளம்பறேன்” என,

     “என்னய்யா திடீர்னு?!” என்றார் பாட்டி கவலையாய்.

     “இல்லை ஒரு முக்கியமான வேலையிருக்கு அப்பத்தா” என்றவன்,

     “நான் போயிட்டு சீக்கிரம் வந்துடுவேன். அத்தை, மாமா அப்பாகிட்டயும் சொல்லிடு,” என்று சொல்லிக் கொண்டு சாற்றியிருந்த அவள் அறைக்கதவின் முன் சென்று நின்று கதவுக்கும், தரைக்கும் இடையே இருந்த இடுக்கின் வழியே தான் எழுதி எடுத்து வந்திருந்த காகிதத்தை வைத்து உள்ளே தள்ளினான்.

     “நான் நான் போறேன் கவி. இத்தனை நாள் உனக்குக் கொடுத்த தண்டனையை இனி நான் அனுபவிக்கப் புறப்பட்டுப் போறேன்” என்று எழுதி வைத்துவிட்டுக் கிளம்பியவனுக்கு அப்போதும் புரியவில்லை அது அவனுக்கான தண்டனை மட்டுமல்ல என்று!

     அவனது கார் சப்தம் அவள் செவிப்பறைகளைக் கடந்து மறையும் வரை கூட அவள் அந்தக் கடிதத்தை எடுத்துப் பார்க்கவே இல்லை! அவளுக்கு ஒன்று மட்டும் புரிந்தது அவன் ஊருக்குக் கிளம்பிவிட்டான் என்று!

     அதன் பின்னேயே அவன் வைத்துச் சென்றக் கடிதத்தை எடுத்துப் படித்துப் பார்த்தாள் அவள்.

     “தண்டனை?! ம்! தண்டனை?!” என்று விரக்தியாய் ஓர் புன்னகையை உதிர்த்தவள்,

     “இப்போ கூட உனக்குப் புரியலை இல்லை! நீ கொடுத்துக்கப் போற தண்டனை உனக்கு மட்டுமானது இல்லைன்னு!” என்று விரக்தியாய்ச் சொல்லிக் கொண்டாள்.

                                  *****

     அவன் கிளம்பிச் சென்ற சிறிது நேரத்திற்குப் பின் எழுந்தவள், மெல்ல கதவைத் திறந்து எழுந்து கொல்லைப் புறத்திற்குச் சென்று தனது இயற்கை உபாதையின் அவஸ்தையை போக்கிவிட்டு வந்தாள். என்னதான் அவள் முகத்தை குனிந்தபடியே வைத்துக் கொண்டு சென்றுவிட்டு வந்தாலும், பெற்றவளுக்கு தெரியாத என்ன?

     “என்னடி ஆச்சு உடம்புக்கு?!” என்று பதட்டத்துடன் அவள் அருகே சென்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு பதறினார் வைரம்.

     “ஓ ஒண்ணுமில்லைமா. நேத்து ராத்திரி மழையில பாத்ரூம் போக எழுந்து வந்தப்போ வழுக்கி விட்டுச்சு! அங்க பக்கத்துல இருந்த  வேலிக்கத்தான் செடி மேல விழுந்துட்டேன்.” என்று சட்டென சமாளித்தாள் அவர் நம்பும் விதமாய்.

     வேறென்ன செய்ய முடியும்?! தான் வளர்த்த பிள்ளை இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறான் என்று தெரிந்தால் அவர் எவ்வளவு துடித்துப் போவார்?! அவளுக்கே அவன் செய்தச் செயலை தாங்கிக் கொள்ள முடியவில்லையே!

     “ஐயோ பார்த்து நடக்கக் கூடாதடி! இப்படியா போயி கிறீக்குவ?! சரி இரு நான் போய் மஞ்சள் அறைச்சுக் கொண்டார்றேன்” என்று அவர் ஓட, அவள் மீண்டும் அவள் அறைக்குள் சென்று புகுந்து கொண்டாள். ஆனால் இம்முறை கதவைச் சாற்றி வைக்காமல் திறந்து வைத்துவிட்டுப் படுத்துக் கொண்டாள் அவன் அங்கு இல்லாததால்.

     சிறிது நேரத்தில் மஞ்சள் அறைத்து எடுத்து வந்த வைரம், அவள் காயங்களுக்குப் போட்டுவிட முனைய,

     “இல்ல வேணா வேணாம்மா. நானே போட்டுக்கறேன்” என்றாள்.

     “ஏன்டி?!” என்றவர்,

     “இல்லம்மா நானே போட்டுக்கறேன்” என்று அவள் மீண்டும் மீண்டும் சொல்லவும்,

     “சரி நான் போய் உனக்கு சாப்பாடாச்சும் எடுத்துட்டு வரேன். ராத்திரி கூட சரியா சாப்பிடலை” என்று அவர் எழுந்து செல்ல, அவர் கையைப் பிடித்தவள்,

     “ம்மா!” என்றாள் அவர் செல்வதைத் தடுக்கும் விதமாய்.

     “என்னடி? என்னடி ஆச்சு?!” என்று மீண்டும் மகளின் அருகே அமர்ந்தவரிடம்,

     “கொஞ்ச நேரம் உன் மடியில தலைவச்சுப் படுத்துக்கவா ம்மா?! இல்லை எப்போவும் போல உன் மருமகனுக்கு மட்டும்தான் அந்த உரிமை இருக்கா?!” என்றாள் துக்கம் தொண்டையை அடைக்க.

      “அடி என் தங்கமே!” என்று மகளை இழுத்து அணைத்துக் கொண்டவர்,

     “அது ஏதோ சின்ன வயசுல அவன் கேட்டப்போ சொன்னது. அதுக்காக என் பொண்ணுக்கு நான் உரிமை இல்லாமப் போயிடுவேனா?!” என்று மகளை மடியில் சாய்த்துக் கொள்ள, இத்தனை நேரம் அவள் அடக்கி வைத்திருந்த அழுகை விம்மலாய் வெடித்தது.

     “கவி! கவிம்மா” என்று அவர் பதற,

     “ஒ ஒண்ணுமில்லை ம்மா! உன் மடியில படுத்த சந்தோஷத்துல அழுகை வந்துடுச்சு!” என்று அவள் சொன்னதை இப்போது அவர் நிச்சயமாய் நம்பவில்லை!

     ‘கடவுளே என் பொண்ணு வாழ்க்கை என் கண்ணு முன்னாடியே இப்படிக் கேள்விக்குறியா நிக்குதே! அப்படி என்ன தான் நடக்குது இவங்க ரெண்டு பேருக்குள்ளயும்?! வேணாம் வேணாம்னு சொன்னவன் கடைசி நேரத்துல வேணும்னுதானே அவளைக் கட்டிக்கிட்டான்?! அப்புறம் ஏன் இப்படி சதி பண்ணுறான்! தானும் நிம்மதியா இல்லாம அவளையும் காயப்படுத்திக்கிட்டு, எங்களையும் கஷ்டப்படுத்திக்கிட்டு! என்னதான் இருக்கோ அவன் மனசுல?! ஆண்டவா நீதான் என் பிள்ளைங்களுக்கு நல்லது பண்ணனும்! அதுங்க ரெண்டும் சீக்கிரமே மனமொத்து வாழ நீதான் வழி செய்யணும் சாமி!’ என்று இறைவனிடம் முறையிடுவதைத் தவிர வேறேதும் தெரியவில்லை வைரத்திற்கு.

                            *****

     அவன் சென்னைக்குத் திரும்பி மூன்று நாட்களாகிவிட்டது. ஆனாலும் அலுவலகத்திற்குச் செல்லாமல் வீட்டிலேயே தான் முடங்கிக் கிடந்தான் பிரதாப்பும், கிஷோரும் எவ்வளவு கேட்டும் எதுவும் சொல்லாமல்.

     இருவரும் கார்த்திக்கிற்கு போன் செய்து விவரம் கேட்க, அவனுக்குமே என்ன நடந்தது என்று முழுதாய் தெரியாததால் தெரிந்தவற்றை மட்டும் சொல்லி அவர்களைச் சமாதானப் படுத்தி வைத்தான்.

     அங்கு அவளுமே மூன்று நாட்கள் ஆகியும் வயலுக்குக் கூடச் செல்லாமல் அறைக்குள் இருந்து வெளியே வராது சதி செய்து கொண்டுதான் இருந்தாள். வயலுக்குச் சென்றால் எங்கு அவள் காயங்களைக் கண்டு ஒருவர் இல்லை ஏனும் ஒருவருக்குச் சந்தேகம் வந்துவிட்டால் என்று. அவளது அன்பிற்குரிய அப்பா, தாய்மாமன், தோழி, பாட்டி என்று யாரையுமே அவள் பார்க்க மறுத்தாள். ஒருவழியாய் மூன்று நாட்களில் காயங்கள் நன்கு ஆறிப் போக, அன்றைய காலை எப்போதும் போல் வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல், காட்டிக் கொடுக்காமல் வயலுக்குக் கிளம்பினாள்…

     இங்கு இவன் இன்றும் அலுவகத்திற்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க, அவனது தலைமை அலுவலரிடமிருந்து அழைப்பு வந்தது அவன் கைப்பேசிக்கு.

     ‘இவரு எதுக்குக் கால் பண்றார்?! நான்தான் லீவ் அப்ளை பண்ணி இருந்தேனே!’ என்று எண்ணியபடியே தயக்கத்துடன் அழைப்பை ஏற்றவன்,

     “சொல்லுங்க வசந்த்” என,

     “என்ன கண்ணன், நேரா யுஎஸ் க்கு கிளம்பும் போதுதான் ஆபீஸ்க்கு ஜாயின் பண்ணுவியா?!” என்றார் சிரிப்புடன்.

     “எ என்ன வசந்த் சொல்றீங்க?!” என்று இவன் எல்லாம் மறந்தவனாய்க் கேட்க,

     “சரியா போச்சு! கொஞ்ச மாசம் முன்னாடி நம்ம பிராஞ்ச்ல சிலரை யுஎஸ் போக செலெக்ட் பண்ணி இருந்தாங்க இல்ல?! அதுல நீங்களும் ஒருத்தராச்சே மறந்துட்டீங்களா?!” என்றார் அவர்.

     ‘ஓ! நோ! இதை எப்படி நான் மறந்தேன்?!’ என்று எண்ணியவன்,

     “சாரி வசந்த். இப்போ நான் இருக்க சிச்சுவேஷன்கு நான் அப்ராட் எல்லாம் போக முடியும்னு தோணலை!” என்று அவன் பட்டெனச் சொல்லிவிட,

     “வாட்?!” என்று அதிர்ந்தவர்,

     “என்ன ஆச்சு? ஏதவாது பிரச்சனையா?! வேணும்னா ஒரு ஒன் வீக் டைம் எக்ஸ்டன்ட் பண்ணிக்கலாம் கண்ணா” என்றார் அவனுக்காக.

     “இல்லை வசந்த்! என்னால இங்க ஆபீஸ்லயே தொடர முடியுமான்னு தெரியலை!” என்று அவன் குண்டைத் தூக்கிப் போட,

     “ஹேய்! ஹவ் கேன் யூ டூ தட் கண்ணா?! நீதானே யுஎஸ் போறேன்னு ஆக்ரீமேன்ட்ல சைன் பண்ணி எல்லா டீடெயில்சும் மெயில் பண்ண! இப்போ தீடீர்னு வேணாம்னு சொன்ன மறுபடியும் புது ஆளை அனுப்ப மொதல இருந்து எல்லா ப்ரோசீஜரும் பாலோ பண்ணியாகணும். அதுக்கு நிறைய அவகாசம். வேணும்! அந்த அளவுக்கு நமக்கு நிச்சயமா நேரம் இல்லை! இன்னும் ரெண்டு வாரத்துல நியயூ ப்ரொஜெக்ட் ஆரம்பிக்கப் போகுது. அதுக்குள்ள கண்டிப்பா நீங்க அங்க போய் ஆகணும். இல்லைன்னா, உங்களுக்கு மட்டும் இல்லை, நம்ம டீம், ஏன் நம்ம பிரான்ச்கே இது ஒரு ப்ளாக் மார்க்கா ஆகிடும்” என்றார் பொறுமையாய் அவனுக்கு நிலையை எடுத்துக் கூறி.

     இதெல்லாம் தெரியாதவன் அல்ல! ஆனால் அன்று அவர்களின் திருமணப் பேச்சு எழுந்த போது அதிலிருந்துத் தப்பிப்பதற்காக யோசிக்காமல் அவன் எடுத்த முடிவு இது. இன்று அவன் அவளைப் புரிந்து கொண்டு வாழ விரும்பும் நொடி அவர்களைப் பிரிப்பதற்காகவே இடைஞ்சலாய் வந்து நிற்கும் என்று அவன் கனவிலும் நினைத்திருப்பானா என்ன?!

     பல நேரம், பலர் வாழ்வில் உண்டாகும் பிரச்சனைகளுக்கு அவர்கள், தானாக எடுத்த முடிவுகள் மட்டுமே காரணமாக இருக்கும்! அவர்கள் மட்டுமே அதற்கு பொறுப்பாளியாக வேண்டும்! ஆனால் என்னதான் பொறுப்பை அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் பாதிக்கப்படப் போவது அவர்களை நம்பி இருப்பர்வகளும்தான் என்பதை நினைவில் கொண்டால், முடிவுகள் ஒருமுறைக்கு நான்கு முறை சிந்திக்கப் பட்டே எடுக்கப்படும்!   

                                            -உள்ளம் ஊஞ்சலாடும்…

    

    

   

    

    

    

Advertisement