Advertisement

‘என்ன பண்ணித் தொலைச்சான் இவன்?!’ என்று கலக்கத்துடன் அவன் செல்வதையே பார்த்திருந்த கார்த்திக்கிற்கு நண்பன் அவ்வளவு மோசமான காரியத்தை செய்திருப்பான் என்று யூகிக்கக் கூடத் தோன்றவில்லை!

     வீட்டினுள் சென்று அவள் முகம் பார்க்கத் திராணி அற்றவனாய், மாடிக்குச் சென்று அமர்ந்திருந்தான் மழை பெய்ந்து ஓய்ந்திருந்தனால் உண்டான குளிரைப் பொருட்படுத்தாது.

    ஆனால் நேற்று முதல் மழையில் நனைந்ததும், மனதின் உறுத்தலும், குற்ற உணர்வும் சேர்ந்து அவன் மனதோடு உடலையும் சோர்வுறச் செய்திருந்தது வெகுவாய். இருந்தும் அப்படியே ஈரத் தரையில் படுத்துக் கொண்டவன், அண்ணாந்து வானத்தைப் பார்க்க, ஏனோ மழை விட்டும் நீங்காதிருந்த இருண்ட மேகங்கள் சூழ்ந்த வானைப் போல, தன் வாழ்வும் மொத்தமாய் இருண்டு விட்டதைப் போல் உணர்ந்தான் அந்நொடியில்.

     இத்தனைக் காலமாய் அவன் உணராத அவள் காதல், அவள் உருகி உருகித் தன்னைக் காதலித்த நொடிகள், தன்னைத் தேடித் தேடி அலைந்த அந்தக் கண்கள், திருமணப் பேச்சு எழுந்ததில் இருந்து தான் இதுவரை அவளை வார்த்தையாலும் செயலாலும் வதைத்த நொடிகள் எல்லாம் தொடர் பேரலை போல் நினைவில் எழும்பி அவனை வலிக்க வலிக்க வதைத்துத் தின்றது.

     மற்றவர்களை வார்த்தைகளால் தான் காயப்படுத்தும் போது அவன் உணராத அந்த வலி இன்று அவள் பேச மறுத்த வார்த்தைகளால் வந்து புகுந்து கொண்டது நெஞ்சில்.

     ‘ஆனால் இனி என்ன செய்ய முடியும்?! செய்யக் கூடாத அத்தனை முட்டாள்தனத்தையும் மொத்தமாய் செய்துவிட்டேனே! இனி, இனி என் கவியை நான் எப்படி எதிர் கொள்வேன்?!’ என்று ஏதேதோ எண்ணி மறுகினான் செய்த தவறை நியாயப்படுத்த விரும்பாதவனாய்.

     ஆனால் என்ன செய்ய?! தெரிந்து செய்தானோ தெரியாமல் செய்தானோ? தவறு தவறுதானே! அதற்கான தண்டனையும் உண்டுதானே!

                                   *****

     கீழே, அவ்வளவு நேரம் ஆகியும் அவள் தன் அறையில் இருந்து எழுந்து வெளியே வராததனால் வைரம், அவள் அறைக்கதவைத் தட்டிக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்.

     அவளை அழைக்கும் சப்தம் கேட்கவும் அவனும் எழுந்து கீழே இறங்கி வந்தான்.

     “என்ன ஆச்சுங்க இந்தப் பொண்ணுக்கு?! இவ்ளோ தட்றேன்?! அந்த சத்தம் கூடவா கேட்காது! எப்போவும் இப்படித் தூங்க மாட்டாளே?!” என்று புலம்பிவிட்டு,

     “டி கவி?! கதவைத் திறடி?! நேத்து மழையில நனஞ்சதுல உடம்பு கிடம்பு எதுவும் முடியலையாடி? குரல் குடுடி” என்று கலக்கத்துடன் வைரம் கூப்பிட,

     ‘ஐயோ உடம்புக்கு முடியாமப் போயிருக்குமோ?!’ என்று பதட்டத்துடன் அவனும் வேகமாய் வந்து கதவை இடித்துத் திறக்கப் போக, அவனாய் தான் இருக்கும் என்று நொடியில் புரிந்து கொண்டவள்,

     “உயிரோடதான் இருக்கேன். இன்னும் சாகலை!” என்றாள் உள்ளிருந்தபடியே.

     அத்தனை அழுத்தமான, கோபம் அடக்கப்பட்ட அவளின் குரல் கேட்கவும் சட்டென அமைதியானான் கதவை இடிப்பதை விடுத்து.

     ஆனால் வைரமோ, அவன் அமைதிக்கு மாறாய் கோபம் கொண்டவராய்,

     “ஏய் என்னடி? நானும் நேத்துல இருந்து பார்க்கிறேன். ரொம்பவும் முரண்டு பிடிச்சிட்டு இருக்க? அப்படி என்னதான்டி ஆச்சு?! சொல்லித்தான் தொலையேன்” என்று கண்ணனை முறைத்தபடி அவர் மகளிடம் பேச, அவன், அவர் முகத்தைப் பார்க்க முடியாமல் கண்களை திருப்பிக் கொண்டான்.

     “ம்மா! தயவு செய்து என்னைத் தனியா விடும்மா! எனக்கு எதுவுமே ஆகலை! நானே எழுந்து வரேன். கொஞ்சம் தனியா விடும்மா” என்று மகள் மீண்டும் உள்ளிருந்தே கெஞ்சுதலாய் சொல்ல, தாயின் மனதில் பயத்தோடு பரிவும் சேர்ந்து கொண்டது.

     “என்னங்க இது?!” என்பது போல் கணவனைப் பார்க்க,

     “அவளே வருவா வைரம். அவளைக் கொஞ்சம் அமைதியா விடு” என்றுவிட்டு அவர் நகர்ந்தார்.

     அதன்பின் வைரமும் மகளைப் பற்றி எண்ணியபடியே அங்கிருந்து அமைதியாய் சென்றுவிட, அவன் மட்டும் அங்கேயே நின்றிருந்தான் அழைக்கவும் முடியாமல், செல்லவும் மனமில்லாமல்.

     “என்னடா இங்கயே நின்னுட்டு இருக்க?! செய்ய வேண்டியதை யெல்லாம் செஞ்சு என் மருமவளைக் கஷ்டப்படுத்திட்டு, அப்புறம் வந்து மன்னிப்புக் கேட்டா, எல்லாஞ் சரியாப் போயிடுமா?! போ போய் வேலையைப் பாரு! அவளா எப்ப மன்னிக்கிறாளோ மன்னிக்கட்டும்” என்று ரத்தினம் நேற்று அவன் அவளை ஏதோ சொல்லித் திட்டியதை நினைத்து சொல்லிவிட்டுச் செல்ல, இவனுக்கு திக்கென்றது.

     “என்னடா பேயறைஞ்ச மாதிரி பாக்குற?! நேத்து என் மருமவளைக் காட்டுல வச்சு ஏதோ திட்டுனதானே?! அதான் அவ கோவமா இருக்கா இன்னும். போ போ! நீ அவளைப் பேசாத பேச்சா! கோவம் தணிஞ்சா தன்னால உங்ககிட்டதான் ஓடியாரும் என் கன்னுக்குட்டி” என்று அவர் போகிற போக்கில் சொல்விட்டுச் செல்ல, அவன் உள்ளம் நொறுங்கிப் போனது.

     ஆம்! அவன் எவ்வளவு சத்தம் போட்டாலும், கோபம் கொண்டாலும் அவளும் பதிலுக்குக் கோபம் கொள்வாளே தவிர அவனை ஒதுக்கித் தள்ளியதே இல்லை இதுநாள் வரை! ‘ஆனால் இனி, இனி அது போல் ஒரு தருணம் தனக்கு வாய்க்குமா?!’  என்று எண்ணிய போதே அவனுக்குத் தொண்டை அடைத்தது.

     ரத்தினம் அங்கிருந்து நகர்ந்த பின்னும் சிறிது நேரம் அவன் அங்கேயே தான் நின்றிருந்தான்.

     “என்ன ராசா!? நீ ஏன் இங்கயே காத்துக் கெடக்க, அந்தக் கழுதைக்கு திமிரு கூடிப் போச்சு! அவளே தன்னால எழுந்து வெளிய வருவா. நீ போ! போயி குளிச்சிட்டு சாப்பிட வா” என்றார் கனகாம்புஜம் பாட்டி பிரச்சனை அறியாதவராய்.

     “ம்?! ம் பாட்டி” என்றுவிட்டு அவன் அங்கிருந்து செல்ல மனமில்லாமல் நகர, அவன் அவ்வளவு நேரம் அங்குதான் நின்றிருக்கிறான் என்று அவள் உணர்ந்து கொண்டாள். ஆனாலும் அவள் மனம் கொஞ்சம் கூட அவனுக்காய் இறங்கவில்லை!

     ‘ம்! இத்தனை நாள் நீ பேசினது, செய்தது இதையெல்லாம், உன்னோட. உன்னோட அந்த அன்புக்காக மட்டும்தான் நான் பொறுத்துகிட்டேன். ஆனா அந்த அன்பயே நேத்து நீ கேள்விக்குறியாக்கின பிறகு, இனி, இனி என்ன இருக்கு நமக்குள்ள?!’ என்று வெறுத்துப் போய்ச் சொன்னாள் வாய்விட்டு.

     சிறிது நேரத்திற்குப் பின் வைரம் சமைத்து முடித்து அண்ணனுக்கும், கணவனுக்கும் தாய்க்கும் உணவு பரிமாற, அப்போதும் அவள் வெளியே வரவே இல்லை!

     “என்னதான் ஆச்சு இந்த கன்னுக்குட்டிக்கு?! இவ்வளவு நேரமா எழுந்து வர மாட்டேங்குறா?!” என்றபடியே எழுந்த ரத்தினம்,

     “இரு வைரம் நான் போய் கூட்டியார்றேன்” என்று எழுந்து சென்று அவளை அழைக்க, அப்போதும் அதே பதில்தான் அவளிடமிருந்து.

     அவளைப் பற்றிய கவலையில் பெயருக்கென உண்டு முடித்து எழுந்த ஆண்கள் இருவரும் மனதே இல்லாமல் காட்டிற்குக் கிளம்ப, அதன் பின்னும் கூட அவள் தனது அறையை விட்டு வெளியே வரவே இல்லை!

     இங்கு இவள் தனது அறையில் முடங்கிக் கிடந்தது போலவே அவனும் அவனது அறையில் முடங்கிக் கிடந்தான் அவளது பிம்பத்தைக் கண்ணில் ஏந்தியபடி.

     வைரத்திற்கு நேற்று மீண்டும் ஏதோ பெரிதாய் பிரச்சனை நடந்திருக்கிறது என்று மட்டும் புரிந்தது. ஆனால் இருவருமே என்ன கேட்டாலும் சொல்லப் போவதுமில்லை என்றும் அவருக்குத் தெரிந்தது. அதற்காக இருவரையும் அப்படியே விட்டுவிடவும் மனம் வரவில்லை அவருக்கு! ஒரு பக்கம் வளர்த்த பாசம், ஒருபக்கம் பெற்ற பாசம் என சேர்ந்து அவர் மனதைப் படாய்ப் படுத்தியது.

     “என்ன ஆத்தா இவுங்க ரெண்டு பேரும் இப்படி இருக்காங்க! அவதான் வம்படியா பிடிவாதம் பிடிக்குறா வெளியவே வரமாட்டேன்னு! இவனையாச்சும் கூப்பிட்டுக் கேளுங்க என்ன தான் ஆச்சுன்னு?!” என்றார் தாயிடம்.

     பாட்டிக்குமே மனம் நெருட, மெல்ல எழுந்து நடந்து, “ஐயா கண்ணா” என்று குரல் கொடுத்தபடி அவன் அறைக்குச் சென்றார்.

     “என்ன ராசா நீ?! நீயும் இப்படியே படுத்துக் கெடக்க? அப்படி என்னதான் பிரச்சனை உங்களுக்குள்ள?!” என்று அவர் கேட்க,

     “அதெல்லாம் ஒண்ணுமில்ல அப்பத்தா” என்றான் மறுப்பாய்.

     ‘என்ன கேட்டாலும் ரெண்டும் வாயைத் திறக்காதுங்க! அம்புட்டு புடிவாதம்’ எட்று எண்ணிப் பெருமூச்சொன்றை எறிந்தவர்,

     “சரிய்யா, போய் குளிச்சிட்டு வந்து ரெண்டு வாய் சோறாச்சும் சாப்பிடேன்” என்றார் ஆதுரமாய் அவன் தலை வருடி.

     அந்த வருடல் ஏனோ அவளுக்கே இப்போது அவசியம் தேவை என்று அவனுக்குத் தோன்றியது. அதோடு தான் அங்கு இருக்கும் வரை அவள், அவன் முகத்தில் விழிக்கக் கூடாது என்பதற்காகவே வெளியே வர மாட்டாள் என்றும் உணர்ந்தான்.

   

Advertisement