Advertisement

“இப்ப நீ சொல்லப் போறியா இல்லையாடா?!” என்று கண்ணன் உக்கிரமூர்த்தியாய் கார்த்திக்கின் சட்டையைப் பற்றி இழுத்து நிறுத்த,

     “ஹேய் சொல்றேன் சொல்றேன்டா!” என்றவன்,

     “உன் அப்பா கவியை எனக்கு கல்யாணம் செய்து கொடுத்த சம்மதிச்ச கொஞ்ச நேரத்துலயே கவி என்கிட்ட வந்து பேசுனாங்க” என்றான்.

     ‘என்ன பேசினா?!’ என்பது போல் அவன் பார்க்க,

     ‘அதைக் கூட இவரு வாய்விட்டுக் கேட்க மாட்டாரு! பெரிய இவரு!’ என்று எண்ணிக் கொண்டவன், அன்று நடந்ததைச் சொல்லத்த் துவங்கினான்.

  ரத்தினம் அவளைக் கார்த்திக்கிற்குக் கட்டிக் கொடுக்க சம்மதித்து விட்டாலும், அவளால் அதை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது என்று  முடிவெடுத்தவள், அந்தப் பேச்சுவார்த்தை நடந்த சில மணி நேரத்தில், நேராய்க் கார்த்திக்கிடம் போய் நின்றாள்.

     கார்த்திக்கும் அமைதியாகவே நின்றான் அவளே பேசட்டும் என்று.

     அவளோ எடுத்த எடுப்பிலேயே மிக காட்டமாய், “நான் இல்லைன்னா நீங்க செத்துடுவீங்களா?!” என்றாள் அவனை நேருக்கு நேர் முறைத்து.

     அவன் அதிர்ச்சியாய்ப் பார்க்க, “ஆனா என் மாமா இல்லைன்னா நான் செத்துடுவேன்” என்றாள் தீர்க்கமாய்.

     “ஐயோ! என்னங்க நீங்க இப்படி எல்லாம் பேசுறீங்க?!” என்று பதறிய கார்த்திக்கை கையமர்த்தித் தடுத்துவிட்டு,

     “எப்படி நீங்களா பெண் கேட்டீங்களோ அப்படியே வேணாம்னு சொல்லிட்டுத் திரும்பிப் போயிடுங்க!” என்று இரண்டே வரிகளில் அவள் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டுப் போக,

     “ஒரு நிமிஷம்!” என்றான் கார்த்திக்.

     “நீங்க அவனை உண்மையா நேசிக்கறீங்களா?!” என்றான்.

     ‘இது என்னடா முட்டாள்தனமான கேள்வி?!’ என்று போல் அவள் பார்க்க,

     “கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க!” என்றான் மீண்டும்.

     “ம்!” என்றாள் அழுத்தமாக.

     “அப்போ உங்க காதல் மேல உங்களுக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு?!” என்றான் குதர்க்கமாக.

     “இந்த கேள்வி எல்லாம் எதுக்கு இப்போ?!” என்றாள் அவளுமே கோபமாக.

     “காரணம் இருக்கு சொல்லுங்க” என்று மீண்டும் கேட்க,

     “ஆமாம் நம்பிக்கை இருக்கு! அது மட்டும் இல்லை என் மாமாவும் என்மேல உசுரையே வச்சிருக்கு!” என்றாள் கூடுதல் தகவலாய்.

     அதைக் கேட்டு மெல்லச் சிரித்தவன், “அது எனக்குமே இப்போ உங்களை நான் பெண் கேட்ட பிறகுதாங்க தெரிஞ்சுது” என்று சொல்ல,

     ‘என்ன?!’ என்று ஆச்சர்யமாய் அவனைப் பார்த்தாள்.

     “அந்த முட்டாள் உங்களை அளவுக்கு அதிகமா நேசிக்கறான்! ஆனா அது காதலா, மாமா பொண்ணுங்கிற பாசமான்னு அவனுக்கே தெரியலை!” என்று அவன் பொறுமையாய்ச் சொல்ல, அவள் ஆச்சர்யமாய் அவனைப் பார்த்தாள்.

     “இந்தக் கல்யாணம் பேசின படியே நடக்கட்டும்ங்க” என்று அவன் ஆரம்பிக்க,

     “விளையாடுறீங்களா?!” என்றாள் அவள் மீண்டும் சீற்றமாக.

     “இந்தக் கல்யாண ஏற்பாடு மட்டும் நடக்கட்டும்ங்க!” என்று அவன் அவளுக்குப் புரியும் படி சொல்ல,

     “அவனால நிச்சயமா உங்களை விட்டுக் குடுக்க முடியதுங்க! அவன் கண்டிப்பா உங்களை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டான்!” என்றான் தீர்க்கமாய்.

     ஆம்! அவளுக்கும் அந்த நம்பிக்கை இருக்கத்தான் செய்தது!

     ‘அதற்காக வேறொருவரைத் திருமணம் செய்து கொள்ளப் போவது போல் நாடகமாட முடியுமா?! இது சுத்த முட்டாள்தனமான செயல் அல்லவா?!’ என்று எண்ணம் தோன்ற,

     “இல்லை! ஒரு பேச்சுக்குக் கூட என்னால இன்னொருத்தரோட என்னைச் சம்மந்தப்படுத்தி யோசிக்க முடியாதுங்க!” என்றாள் பட்டென்று.

     “அப்போ நீங்க காலம் பூரா அவனை நினைச்சுக்கிட்டே இப்படியே தனியா வாழ்ந்துட முடியும்னு நினைக்கிறீங்களா?!” என்றான் கார்த்திக்குமே இப்போது சற்றே குரல் உயர்த்தி.

     ஒரு நொடி அவன் கேள்வியில் குழம்பிப் போனவள், “இல்லை ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் என் மாமா என்னைப் புரிஞ்சிக்கும்!” என்றாள் அவன் மீது இருந்த கொள்ளைப் பிரியத்தில் குழந்தை போல்.

     “அவன் ரொம்ப குடுத்து வச்சவங்க!” என்றான் கார்த்திக் அந்நேரத்திலும் அவளின் அவனுக்கான அன்பை எண்ணி.

     “நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னது உங்க மேல ஆசைப் பட்டோ, இல்லை அவனை வெறுப்பேற்றவோ எல்லாம் இல்லைங்க! நான் இங்க வந்த நாள்ல இருந்தே இந்த ஊரை, உங்க குடும்பத்தை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்ததுங்க. அதனால்தான் உங்க அம்மா அப்படிப் பேசினதும் பட்டுன்னு மனசுல தோணினதை கேட்டேன். ஆனா நான்தான் பிறந்ததுல இருந்தே அனாதையா வளர்ந்தவனாச்சே! எனக்குல்லாம் அவ்ளோ சீக்கிரம் நல்லது நடந்துடுமா என்ன?!” என்று கார்த்திக் கேட்க, அவளுக்கு ஏதோ போல் ஆகிவிட,

     “ஐயோ ஏன்ங்க அப்படி சொல்றீங்க?!” என்று அப்போதும் அவனுக்காய் அவள் மனம் வருந்த,

     “அட என்னை விட்டுத் தள்ளுங்க!” என்று சட்டென தன் கவலை மறைத்துச் சிரித்தவன்,

     “கண்ணன் உங்க மேல அவனுக்கு இருக்க தன்னோட காதலையும், உரிமையையும் உணரணும்னா நீங்க இதுக்கு சம்மதிச்சுதாங்க ஆகணும்! ஆனா இது உங்க வீட்ல இருக்க மத்தவங்களுக்கும் கூட தெரிய வேணாம்” என்று கார்த்திக் சொல்ல,

     “அதெப்படி தம்பி தெரியாமப் போகும்?!” என்று அவர்கள் வீட்டின் மாடிப்படியில் இருந்து மேலே ஏறி வந்த ரத்தினத்தின் குரலில் இருவரும் அதிர்ந்து போயினர்.

     “ம மாமா?!” என்று கவி திகைக்க,

     “என்னடா, என் மருமக இவ்ளோ நேரம் அமைதியா இருக்காளேன்னு நினைச்சேன்! இப்போ நீ எழுந்து மேல வரதைப் பார்த்ததும் சந்தேகம் வரவும் எழுந்து உன் பின்னாடி வந்தேன். வந்தது நல்லதாப் போச்சு” என்றவர்,

     “ஐயா” என்று கார்த்திக்கை மார்போடு கட்டிக் கொண்டு,

     “உன் மனசு உன் சிநேகிதனுக்கு ஏன்யா இல்லாம போச்சு?” என்று வருத்தமாய்ச் சொன்னவர்,

     “எங்க புள்ளைங்களுக்காக நீங்க இவ்வளவு யோசிக்கும் போது உனக்காக நாங்க யோசிக்க மாட்டோமாய்யா?!” என்றார் அவனின் யோசனையை ஆமோதித்தவராய்.

     “அப்போ உங்களுக்கும் முழு மனசோட கவியை எனக்குக் கல்யாணம் செய்து கொடுக்க சம்மதமில்லை, இல்லை அங்கிள்?!” என்று கார்த்திக் செல்ல முறைப்போடு வினவ,

     “ஐயோ அப்படி எல்லாம் இல்லையா?! மருமவ மருமவன்னு சொல்லிட்டு சட்டுன்னு தூக்கி வேறொருத்தருக்குக் கொடுக்க கஷ்டமா இருந்ததுய்யா?! அதான் அப்படிச் சொல்லிட்டேன்” என்றார் அவர்.

     “அப்போ நான் வேற ஒருத்தன்தானா அங்கிள் உங்களுக்கும்?!” என்று கார்த்திக் லேசாய்ப் புன்னகைத்துக் கேட்க,

     “அய்யோ நான் அந்த அர்த்ததுல சொல்லலையா!” என்றவர்,

     “இப்போ சொல்றேன்யா. இந்த நிமிஷத்துல இருந்து நீயும் எனக்கு இன்னொரு மகன்தான்” என்று மனதார சொல்லிவிட்டு,

     “என்ன மருமவளே! என் சின்னப் புள்ளை சொல்றதைக் கேட்கப் போறியா இல்லையா?!” என்றார் அவளைப் பார்த்து மிரட்டலாய்.

     “இல்லை!” என்று அப்போதும் கவி தயங்க,

     “நம்புங்க! நல்லதே நடக்கும்!” என்று கார்த்திக் சொல்ல,

     “ஆமாம் கன்னுக்குட்டி” என்றார் ரத்தினமும்.

     சிறிது நேரம் யோசித்தவள், “ஒருவேளை என் மாமா மனசு மாறலைன்னா, கடைசி நிமிஷத்துல என்னை யாரும் கட்டாயப்படுத்தக் கூடாது. மீறிக் கட்டாயப் படுத்துனா” என்று ஏதோ சொல்ல வந்தவளைத் தடுத்தவன்,

     “அப்படி ஒரு நிலைமை நிச்சயம் வராது” என்றான் கார்த்திக் கண்ணனின் பிடிவாதம் உணர்ந்தவனாய். அங்கு ஆரம்பித்தது அவர்களின் திருமண நாடகம்.

     கார்த்திக் நடந்ததைச் சொல்லி முடிக்க, “முட்டாள்! முட்டாள்?!” என்று அவன் சட்டையை பிடித்து உலுக்கியவன், சட்டென அவனை இழுத்து ஆரத் தழுவிக் கொள்ள, கார்த்திக்கிற்கு நண்பனின் மனம் எண்ணிச் சிரிப்பே எழுந்தது. ஆனால் அடுத்த நொடியே நண்பனின் வாட்டமான முகத்தை எண்ணி கவலையே சூழ்ந்து கொள்ள,

     “என்னடா ஆச்சு?! என்ன பிரச்சனை நேத்துல இருந்து உனக்கும் கவிக்கும்?! ஏன் திடீர்னு இந்நேரத்துல வந்து இதெல்லாம் கேட்ட?!” என்றான் கார்த்திக்.

     மெல்ல நண்பனை விட்டு விலகியவன், “எல்லாத்தையும் மூடி மூடி மறைச்சு, இன்னிக்கு என் கவியையும், என்னையும் மொத்தமாப் பிரிச்சிட்டீங்களே டா” என்றபடி கண்ணன் தன்  கை முஷ்டியை இறுக்கி நெற்றியில் வைத்துக் கொண்டு அமர்ந்துவிட, கார்த்திக்கிற்கு ஏதோ நெருடியது.

     “என்னடா ஆச்சு?!” என்றான் கார்த்திக் இப்போது கோபமான குரலில்.

     கண்ணனிடம் எந்த பதிலும் இல்லாது போக, “கேட்கறேன்ல என்னடா ஆச்சு!” என்றான் இன்னும் காட்டமாய்.

     கண்ணன் அமைதியாகவே அமர்ந்திருக்க, “என்ன ஆச்சுன்னுதான் சொல்லித் தொலையேன்டா!” என்றான் வெறுப்பும் கோபமுமாய்.

     “ஹ்ம்!” என்று விரக்தியாய்ச் சிரித்த கண்ணன்,

     “யாரையும் சரியாப் புரிஞ்சுக்காததுனால, செய்யக் கூடாத எல்லாத் தப்பையும் செஞ்சுட்டேன்! இனி அதுக்குறிய தண்டனையையும் ஏத்துகிட்டு தான் ஆகணும்” என்றபடி எழுந்து தன் வீடு நோக்கி நடந்தான்…

                                  -உள்ளம் ஊஞ்சலாடும்…

    

      

 

    

      

Advertisement