Advertisement

                           18

     அவன் தன்னை ஆட்கொண்டதை விட அவன் உதிர்த்த  வார்த்தைகளே அவளுள் அத்தனை வலியையும் வேதனையையும் ஆக்ரோஷத்தையும் ஒருங்கே தோற்றுவித்தது.

     தன்னை விட்டு விலகியவனை கொன்று புதைத்துவிடலாமா எனும் அளவிற்கு எழுந்த ஆத்திரத்தை கண்களில் மொத்தமாய்த் தேக்கி நிறுத்தியவள் பார்த்த பார்வை அவனின் கோபமும் உணர்ச்சிகளும் மட்டுப்பட்ட பின்பே அவனுக்குத் தென்பட்டது.

     அந்தப் பார்வையே அவனை நிலைகுலையச் செய்ய,

     ‘ஐயோ நான் என்ன செஞ்சிருக்கேன்?! ச்சே எவ்ளோ மிருகத்தனமா நடந்திருக்கேன்!’ என்று அவளின் உடலில் இருந்த காயங்கள் கண்டுப் பதறிப் போனான் பின்புத்தி கொண்டவனாய்.

     “க கவி?!” என்றவன் குரல் பயத்திலும் பதட்டத்திலும் குழற, வலியில் எழ முடியாமல் படுத்துக் கிடந்தவள், மெல்ல தன் இரண்டு கைகளை மட்டும் உயர்த்தி, உடல் நடுங்க, பற்களைக் கடித்துக் கொண்டு, அவன் கழுத்தை நெறிப்பதைப் போல் சென்றுவிட்டு, அப்போது கூட பாழாய்ப் போன அவளது காதலால் அதைச் செய்ய இயலாது, மீண்டும் தன் கைவிரல்களை இறுக மூடி பின்னிழுத்துக் கொண்டு தன் முகத்திலேயே அறைந்து கொண்டாள் ஆக்ரோஷமாய்.

     “கவி கவி!” என்று அவளின் ஆவேசத்தைக் கட்டுப்படுத்த முயன்றவனை ஒரே தள்ளில் தன்னிலிருந்து விலக்கி ஆவேசமாய்த் தள்ளிவிட்டவள்,

     “இனி ஒருமுறை உன் விரல் என்மேல பட்டாலும், என்னை நானே எரிச்சுக்குவேன்!” என்று ஆங்காரமாய் உரைத்துவிட்டு, அத்தனை வலியையும் பொறுத்துக் கொண்டு எழுந்து அவனிடமிருந்து சில அடிகள் விலகி அமர்ந்தாள்.

     அவளின் வார்த்தைகள் அவனைத் தீ வைக்காமலேயே எரித்துப் பொசுக்க, மொத்தமாய் நொறுங்கிப் போனான்.

     “கவி ந நான்” என்று அவன் தன்னிலை விளக்கம் கொடுக்க முனைய,

     “ம்!” என்று கை உயர்த்தி அவனை நிறுத்தச் சொன்னவள்,

     “நீ, நீ எதுக்காக இப்படி செஞ்சயோ, அது எல்லாமே உன்னோட கேவலமான கற்பனையால மட்டுமே!”

     “ஒரு பொண்ணுக்கு கல்யாணக் கனவுகள் உருவாகக் கூடிய காலத்துல இருந்து உன்னை, உன்னை மட்டுமே என் உசிருல சுமந்துட்டு இருந்ததுக்கு நீ குடுத்தப் பரிசு இது!” என்று அவள் சொல்லச் சொல்ல அவனுக்கு நெஞ்சில் கதியைச் செருகியதைப் போல் ஓர் வலி.

     “க கவி?!” என்று அவன் வேதனையுடன் அவளைப் பார்க்க,

     “நீ, நீ கல்யாணம் பண்ண அன்னிக்கு என்னை விட்டுட்டுப் போ, போனப்போ கூட, நீ உன்னை விட்டுட்டு அவரைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சுட்டேங்கிற கோபத்துல போனேன்னு தான் நான் நினைச்சேன். நேத்துவரைக்கும் கூட நீ அதனாலதான் அப்படி நடந்துக்குற, என்மேல எவ்ளோ உரிமையும் பாசமுமிருந்தா அப்படி நடந்துக்குவன்னு கூட பையித்தியக்காரியாட்டமா நினைச்சு என் மனசைத் தேத்திக்கிட்டு இருந்தேன்! அ ஆனா?! இ இன்னிக்கு நீ காட்டுல அப்படிக் கேட்ட போதே என் மனசு மொத்தமா உடைஞ்சு போச்சு! இ இப்போ?!” என்று உதட்டை அழுந்தக் கடித்து கொண்டு பேச வந்த வார்த்தைகளை அடக்கியவளை பெரும் குற்ற உணர்ச்சியுடன் பார்க்க வியலாது தலை குனிந்தான் அவன்.

     “உ உனக்கு நான் அவங்களைக் கல்யாணம் கட்டிக்க நினைச்சதுதான் தப்பு! அவங்க பொண்ணு கேட்டதும், ரத்தினம் மாமா அப்படி ஒரு வாக்கு குடுத்ததும், ஒரே நாள்ல ஒரே நிமிஷத்துல உன்னை ஏன் மனசுல இருந்து தூக்கிப் போட்டுட்டு அவங்களை விரும்ப ஆரம்பிச்சுட்டேங்கிற குறுக்கெண்ணம்!” என்று ஏளனமாய்க் கேட்க, அவன் பேச முடியாமல் தவித்தான்.

     “பதில் சொல்லு அப்படித்தானே?!” என்றாள் பெண் சிங்கத்தின் கர்ஜனையாய்.   

     “கவி?!” என்று அவன் பதில் உரைக்க முடியாமல் தவிக்க,

     “அப்படித்தான்?!” என்று தானே தீர்த்துச் சொன்னவள், அவனைப் பார்த்த பார்வையில் அவன் நெஞ்சம் பொசுங்கியது.

    சற்று நேரத்திற்கு முன்வரை அத்தனை ஆட்டம் ஆடியவனால் இப்போது எதுவுமே பேச இயலவில்லை! ஏனெனில் அவளது தீர்க்கமான வார்த்தைகளும், பார்வையும் அவனைக் கொல்லாமல் கொன்று கொண்டிருந்தது. அதோடு இத்தனை நாள் அவன் மனதுள் இருந்த திரையும் விலகி உண்மையில் என்ன நடந்திருக்கக் கூடும் என்றும் அவன் மூளை சித்திக்க ஆரம்பித்தது காலம் கடந்த ஞானமாய்.

     அவ்வளவுதான்! அதன் பின் அவன் எவ்வளவு கெஞ்சியும் பேசியும் அவளிடமிருந்து இருந்து எந்தப் பிரதிபலிப்பும் இல்லை! அவனது, ‘கவி கவி’ என்ற உருகலுக்காய் நொடிக்கு நொடிக் காத்திருந்தவள், இப்போது அவன்,

     “கவி, கவி” என்று மனம் கரைய அழைத்தும் அவனை ஏறிட்டுப் பார்க்கச் சற்றும் விருப்பமின்றி விட்டத்தையே வெறித்திருந்தாள்.

     அவளிடம் எந்த அசைவும் இல்லாது போக, பதட்டமாய் அவளை நெருங்கி, கவி என அவன் மீண்டும் அழைக்கவும், அவள் வெடுக்கென எழுந்தாள் தனது உடல் வலியைப் பல்லைக் கடித்துக் கொண்டுப் பொறுத்தப்படி.

     தனது உடைகள் கிழிந்தும் அலங்கோலமுமாய் இருப்பதையும் யாரேனும் பார்த்துவிட்டால் என்ன நினைப்பார்கள், என்று எண்ணியவள், தனது அறையில் இருந்த மாற்று உடை ஒன்றை எடுத்துக் கொண்டு மெல்ல வெளியேறினாள்.

     அவள் செல்வதையே கதியற்றுப் பார்த்திருந்தவன், என்ன செய்துவிட்டோம் என்று கலங்கித் தவித்தான்.

     அவன் எப்போதுமே அப்படித்தான்! சொல் புத்தியும் இல்லை, சுயபுத்தியும் இல்லை! தானாய் ஒரு முடிவு கட்டிக் கொண்டு, தனது ஆழ்மனதின் ஆசைகளை உணர்ந்து அறியாதவனாய், மேலோட்டமாய் எழும் சிறுபிள்ளைத்தனமான ஆசைகளாலும், தவறான புரிதலாலும் இன்று அவனது உயிரானவளையே இழந்து நிற்கிறான்.

     கொல்லைக்குச் சென்றவள் மாற்று உடைகளை குளியறையில் வைத்துவிட்டு வந்து சோவென்று கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்த மழையில் தனது உடலின் வெப்பமும் மனதின் வெப்பமும் தணிய சில நிமிடங்கள் அப்படியே கண் மூடி நின்றிருந்தாள். அவன் தீண்டலுக்காய் ஏங்கி ஏங்கித் தவித்தவளது உடலும் உள்ளமும் இன்று அவனது  தீண்டலால் தணலாய் தகித்துக் கொண்டிருந்தது.

     வெளியே சென்றவளை இன்னமும் காணோமே என்று தேடி வந்தவன் நெஞ்சம், அவள் கண்ணீர் கரைய மழையில் நின்று கொண்டிருப்பதைக் கண்டதும் துடிதுடித்துப் போனது. ஆனாலும் ஏதும் செய்யத் திராணி அற்றவனாய் தானும் அப்படியே நின்றுவிட்டான் மழையோடு.

    சோர்ந்து போன மனமும் உடலும், மரத்துப் போகும் வரை அப்படியே நின்றிருந்தவள், மெல்லக் கண்திறக்க, தன் எதிரே அவனும் மழையில் நின்றிருப்பதைக் கண்டாள்.

     “ம்!” என்று மெலிதாய் விரக்திச் சிரிப்பொன்றைத் தன் உதடுகளில் வெளிபடுத்தியவள், அதன்பின் அவனை ஒருநொடி கூடப் பார்க்கப் பிடிக்காதவளாய்ச் சென்றுக் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

     அவன் குளித்துவிட்டு வெளியே வரும் வரையும் அவன் அங்கேயே நின்றிருக்க அவன் ஒருவன் அங்கு இருப்பதையே உணராதவளாய் அவள் நேராய் செவலை இருக்கும் கொட்டகைக்குப் போனாள்.

     அவனுக்குப் புரிந்தது அவன் செவலையைத்தான் நாடிச் செல்கிறாள் என்று! அவள் உடல் இருந்த நிலைக்கு அவள் சற்று ஓய்வெடுத்தாலாவது நன்றாக இருந்திருக்கும்! ஆனால் தான் செய்து வைத்த நிலைக்கு அவளிடம் அதை சொல்ல முடியுமா என்ன?! என்று எண்ணியபடி அமைதியாய் நின்றுவிட்டான்.

     அவள் செவலையின் அருகே செல்ல, அவளின் மனதின் உக்கிரமும், வேதனையும் அதற்குப் புரிந்து விட்டதோ என்னவோ, தனது வாலை மெல்ல ஆட்டி அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தது ஆதரவாய்.

     அதோடு அல்லாமல் நின்றிருந்தவன், தன் அன்புக்குரியவள் தன் மீது தலை சாய்ந்துப் படுத்துக் கொள்வதற்கு வாகாய் மெல்ல தன் முன் முட்டிகளை மடக்கிக் கீழே அமர, அந்த வாயில்லா ஜீவனின் ஆழ்ந்த புரிதலில் அவள் நெஞ்சம் நெகிழ்ந்து கசிந்தது.

     யாரிடம் போய் சொல்லுவாள் அவள்?! தான் உயிராய் நேசித்த தன் ஆருயிர் மாமனே தன்னை இப்படிக் கேவலமாய் எண்ணி ஆட்கொண்டு விட்டான் என்று.

     வாய்விட்டுச் சொல்லாமல் மனதோடு தன் நட்புக்குரிய, அன்பிற்குரிய, மனித மனங்களைப் போல் கள்ளம் இல்லாத கபடற்ற அந்த வாயில்லா ஜீவனின் கழுத்தைக் கட்டிக் கண்டு அதன் முகத்தில் முகம் புதைத்துக் கேவினாள் தன் கோபம், ஆக்ரோஷம், வேதனை அனைத்தையும் அதனிடம் கொட்டித் தீர்க்கும் விதமாய்.

     இதையெல்லாம் சற்றுத் தொலைவே இருந்துத் தவிப்புடன் பார்த்திருந்தவனோ இத்தனை நாட்களாக தான் செய்து கொண்டிருந்த தவறுக்கெல்லாம் மொத்தமாய் தண்டனையை அனுபவிப்பதற்கு ஆயத்தமானான் தன் குற்றம் உணர்ந்தவனாய். ஆனால் விதியும் வேண்டியவளும் தண்டிப்பார்களா?! மன்னிப்பார்களா?!    

                               *****

     விடியற்காலை நான்கு மணி அளவிலேயே சேவல் கூவ, இரவெல்லாம் அவளின் மனக்குமுறலைப் போலவே கொட்டித் தீர்த்த மழையும் சற்றே ஓய்வெடுத்துக்  கொண்டது.

     ஒரு சில நொடிகள் அவன் மழையில் நனைந்தாலே அவனுக்கு ஜலதோஷம் பிடிக்கும் என்று ஓடோடி வந்து குடை பிடிப்பவள், அத்தனை மணி நேரமாய் துணி துவைக்கும் சலவைக் கல் மீது மழையில் சொட்ட சொட்ட நனைந்தபடி அவன் அமர்ந்திருந்த போதும் அவன் புறம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை!

     சேவலின் கூவல் கேட்டதும் மெல்ல தன் தலை உயர்த்திப் பார்த்தவள், அவன் இன்னமும் தன் எதிரேயே அமர்ந்திருப்பதைக் கண்டு அவனை விரக்தியாய் ஓர் பார்வைப் பார்த்துவிட்டு மெல்ல எழுந்து சென்று தன் அறைக்குள் புகுந்து கதவைச் சாற்றித் தாழிட்டுக் கொண்டாள் அவன் கவி என்று அழைத்தபடியே பின்தொடர்ந்து வந்ததைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல்.

     அதற்கு மேலும் சோதிக்க விரும்பாமல், ஓர் முடிவெடுத்தவனாய் தனது கர்வத்தையும் பிடிவாதத்தையும் தூக்கிப் போட்டுவிட்டு, நேராய் கார்த்திக்கின் வீட்டின் கதவைத் தட்டினான் அந்த விடியற்காலை வேளையிலேயே!

     தடதடவென கதவு தட்டப்படும் சப்தம் கேட்க, பதறி அடித்துக் கொண்டு எழுந்த கார்த்திக் கதவைத் திறந்ததும், “நீதானா?” என்பது போல் அலட்சியமாய் பார்த்துவிட்டு உள்ளே செல்ல,

     “என் அப்பா கவியை உனக்கு கட்டிக் கொடுக்க சம்மதிச்ச பிறகு என்னடா நடந்தது?!” என்றான் இத்தனை  நாட்களாய் கேட்க வேண்டிய கேள்வியை இவவளவு தாமதமாய் எல்லாத் தவறுகளையும் செய்து முடித்தப் பின்பு.

     கார்த்திக் அவனை அலட்சியமாகவும் கோபமாகவும் முறைத்துவிட்டு, மறுபடியும் சென்று படுக்கையில் விழப் போக,

     “இப்ப நீ சொல்லப் போறியா இல்லை உன்னைக் கொன்னு போடவா?!” என்று அருகே இருந்த மரநாற்காலி ஒன்றைத் தூக்கிக் கொண்டு கண்ணன் ஆவேசமாய் கார்த்திக்கின் அருகே வர,

     கார்த்திக் முற்றிலும் தூக்கம் களைந்தவனாய், “அடேய் படாத இடத்துல பட்டுடப் போகுதுடா! நானே இன்னிக்குதான் ஒருத்தியைக் கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணுவேன்னு சவால் விட்டுருக்கேன்!” என்று அவன் பதட்டமாய்ச் சொல்ல,

     “என்ன?!” என்று கண்ணன் புரியாமல் இப்போதும் கோபப் பார்வையே பார்க்க,

     “ஆமாம்டா!” என்றவன்,

     “இப்படி அர்த்த ராத்திரியில வந்து பாதித் தூக்கத்துல எழுப்பி என்னைக் கேட்குறியே, அதை உன் வீட்ல இருக்க உன் பொண்டாட்டிக் கிட்டயே போய் கேட்குறதுக்கு என்னவாம்?!” என்றான் இப்போதும் அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல்.

    

Advertisement