Advertisement

                               17

     “என்னங்க அப்போ போன பிள்ளைங்கள இன்னும் காணோம்! ஒரு எட்டு போய் பாருங்களேன்.” என்று அவர்கள் செல்வதைத் தடுத்த வைரமே கலக்கத்துடன் சொல்ல, அவரை முறைத்துவிட்டு எழுந்தார் வீரபாண்டி.

     வீரபாண்டி செல்கையில், கொல்லையில் ஆடுகளை அடைத்துக் கொண்டிருந்த ரத்தினம் வேலை முடித்து முகம் கை கால் கழுவிக் கொண்டு கூடத்திற்குத் திரும்பியதும், வீரபாண்டியைக் காணாது,

     “மச்சான் எங்க போனாரு?!” என்றார் தங்கையிடம்.

     “இல்லைண்ணே! புள்ளைங்க ரெண்டையும் இன்னும் காணோமே! அதான் போய் பார்த்துக் கூட்டியாரச் சொன்னேன்.” என்றார் கவலையாய்.

     “அட எம்மா அவரை அலைய விட்டுக்கிட்டு?! கன்னுக்குட்டி நம்மைக் காட்டை விட்டா வேற எங்கப் போவா?! அதான் கண்ணனும் போயிருக்கானே! அவன் பார்த்துக் கூட்டியாரப் போறான்” என்று அவர் தைரியம் கொடுக்க,

     “இல்லண்ணே! ரெண்டுமே காயம் பட்டக் கையோடு போயிருக்குங்க! எதோ கோவத்துல சூடு இழுத்துட்டேன்! வீட்டுல இருந்தா தேங்கா எண்ணெயாச்சும் தடவி விட்டுருப்பேன். கொஞ்சம் எரிச்சல் மட்டுப் பட்டிருக்கும்! இந்தப் பொண்ணு பண்ற வேலையிருக்கே!” என்று வைரம் வருத்தமாய்ச் சொல்ல,

      “அது சூடு இழுக்க முன்ன யோசிச்சிருக்கணும்!” என்று கண்டித்தவர், தங்கை முகம் வாடியதைப் பொறுக்க முடியாமல்,

      “சரி சரி வெசனப் படாத வைரம்! நான் போய்க் கூட்டியார்றேன்” என்று சொல்லிக் கொண்டு காட்டிற்குக் கிளம்பினார்.

                              *****

     அதற்குள் பிள்ளைகளைத் தேடிக் கொண்டு சென்று கொண்டிருந்த வீரனிடம், வழியில் வந்த ஊர்க்காரர் ஒருவர், 

      “ஏலே வீரபாண்டி, எப்படிக் காயம் ஆச்சு உன் பொண்ணுக்கும் மருமவனுக்கும்?! ரெண்டும் ஹாஸ்பத்திரிக்கு வந்திருந்துதுங்க?!” என,

     “எங்க நம்ம பசுபதி டாக்டர்கிட்டயா?!” என்றார் வீரபாண்டி.

     “ஆமா ஆமா” என்று அவர் சொன்னதும் பதில் கூட சொல்லத் தோன்றாமல், ஓட்டமாய் அவர் கிளினிக்கிற்கு ஓடினார்.

                                 *****

     இங்கு அவர்களோ, தங்கரத்தினம் நினைத்தது போலவே வயக்காட்டில் தான் இருந்தனர். 

     உறங்கும் மருமகளுக்குக் காவலாய் மகன் அவள் தலை வருடியபடி அமர்ந்திருக்க அதைக் கண்டவருக்கு கண்கள் கலங்கிவிட்டது சின்னவர்களின் அன்பில்.

     ‘எம்புட்டு பாசம் என் புள்ளைக்கு மருமவ மேல! இந்த பாசம் ஜென்ம ஜென்மத்துக்கும் நீடிக்கணும் சாமி!’ என்று எண்ணியபடியே அவர் முன் செல்ல, அவரின் காலடி ஓசை கேட்டு நிமிர்ந்தவன் தந்தையைப் பார்க்க, அவர் ஏதோ சொல்ல முயல, 

     “ஷ்!” என்று தனது வாய்மேல் விரல் வைத்து அவரை அமைதியாய் இருக்கும்படி சைகை செய்தான்.

     அதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டவர், “ம் ம்!” என்று மெல்ல அவர்கள் அருகே சென்று அமர்ந்து, மருமகளின் காயத்தையும் மகனின் காயத்தையும் கண்டு வருந்த, அவன் அவரை வெகுவாய் முறைத்தான்.

     “நான் என்னப்பா பண்னேன்?!” என்பது போல் அவர் சைகையில் கேட்க,

     “உங்க தங்கச்சிதான்!” என்றான் கோபம் மாறாமல் அவனும் சைகையிலேயே.

     “சரி அவளுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்” என்பது போல் அவர் கையெடுத்துக் கும்பிட,

     “வேணாம்!” என்று அவன் அவர் கையைப் பிடித்து இறக்கிவிட, இவள் உறக்கம் களைந்து மெல்லக் கண்விழித்தாள்.

     “மாமா!” என்று தனது பெரிய மாமானும் தனதருகே அமர்ந்திருப்பது கண்டு அவள் குரல் கொடுத்தபடி எழ,

     “கன்னுக்குட்டி!” என்று அவளைத் தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டார் ரத்தினம்.

     அதன்பின் அவளை தண்டிததற்காய் தன் அத்தையிடம் அவனும், தன மாமனுக்குக் காயப்படக் காரணமாகிவிட்டார் என்பதால், தாயிடம் அவளும் ஒரு வாரத்திற்கும் மேல் பேசாமல் இருந்து வைரத்தை அழ வைத்தது வேறு கதை.  

     இப்படிச் சிறுவயதில் அவன் அவளுக்காய்ப் பார்த்துப் பார்த்துச் செய்த ஒவ்வொன்றயும் நினைவு கூர்ந்தவள் உதட்டில் விரக்தியாய் ஓர் புன்னகை மட்டுமே வந்து அமர்ந்து கொண்டது இப்போது!

     ‘ஏன் மாமா ஏன் இப்படி ஆனா?! நான் உன்மேல எம்புட்டு உசிரை வச்சிருக்கன்னு உன்னால புரிஞ்சுக்க முடியலையா?! இல்லை, புரிஞ்சிக்க விரும்பலையா நீ?!’ என்று மீண்டும் மருகித் தவிக்கலானாள் மனதோடு.

                                *****

     அவ்வளவு நேரம் குடியின் உபயத்தால், அப்படியே அங்கிருந்த டேபிளில் சாய்ந்திருந்தவன், பெரும் சப்தத்துடன் ஒலித்த இடியின் தாக்குதலில், நிமிர்ந்து வெளியே பார்த்தான்.

     மதியம் அவளை வாய்க்கு வந்த படியெல்லாம் கேட்டு அவள் மனதைத் துன்புறுத்தி இருந்தாலும், 

     ‘ஐயோ இப்படி இடியும் மின்னலுமா இருக்கே?! அவ அவ காட்டுல இருந்து வீட்டுக்குப் போயிருப்பாளா?! இல்லை! சும்மாவே அவ கோபமோ, கஷ்டமோ வந்தா அங்கதான் இருப்பா! அதிலும் இன்னிக்கு நீ பேசின பேச்சுக்கு அவ நிச்சயமா போயிருக்க மாட்டா?!’ என்று புத்தி எடுத்துரைக்க, வேகமாய் எழுந்து தனது வண்டியை எடுத்துக் கொண்டுக் கிளம்பினான்.

                                *****     

     “என்ன மனுஷங்க நீங்க?! அவதான் வரலைன்னு சொன்னானா நீங்களும் அப்படியே விட்டுட்டு வந்துடுவீங்களா?! மணி எட்டடிக்கப் போவுது. இன்னமும் அவ வீட்டுக்கு வர்றதாக் காணோம்! எப்போ பாரு வயக்காடே கதின்னு கெடக்குறா! வானம் வேற இடியும் மின்னலுமா வெளுக்க ஆரம்பிச்சிடுச்சு!” என்று வைரம் புலம்பிக் கொண்டிருக்க,

     “நாங்க என்ன வைரம் பண்ணுறது?! நீ வளர்த்த ரெண்டும் அம்புட்டு பிடிவாதம் பிடிக்குதுங்க” என்று வைரத்தையே குறை சொன்னார் வீராவும்.

     “ஆனாலும், பொம்பிளைப் பிள்ளைக்கு இவ்வளவு புடிவாதம் கூடாது!” என்று கனகாம்புஜம் பாட்டியும் புலம்ப ஆரம்பிக்க, திண்ணையில் ரத்தினத்துடன் அமர்ந்திருந்த கார்த்திக்கிற்கும் அவளைப் பற்றிய கவலை மனதை அரித்துக் கொண்டே இருந்ததனால்,

     “நான் வேணா என் வண்டியை எடுத்துட்டுப் போய் அழைச்சிட்டு வரட்டுங்களா உங்களுக்கு எதுவும் ஆட்சேபனை இல்லைன்னா?!” என்றான் ரத்தினத்தைப் பார்த்துச் சற்றே தயக்கமாய்.

     “அட உனக்கு ரொம்ப புண்ணியமா போகும் பா! போயி கூட்டிட்டு வா! அவளைத் தனியா விட்டுட்டு வந்ததுல இருந்து என் மனசும் என் கன்னுக்குட்டியையேதான் சுத்திக்கிட்டு கெடக்கு! சடுதியா போய்க் கூட்டிட்டு வாய்யா! மழை வேற வர மாதிரி இருக்கு” என்றார் ரத்தினமும் உடனடியாக.

     “சரிங்க அங்கிள். நான் போயிட்டு வரேன்” என்றவன் வேகமாய் தன் வீட்டிற்குச் சென்று தனது பைக்கை எடுத்துக் கொண்டுக் கிளம்பினான்.

     கார்த்திக் கிளம்பிய நேரம் பாதியிலேயே நல்ல மழையும் காற்றும் பிடித்துக் கொண்டது. முடிந்தவரை வேகமாய் வண்டியைச் செலுத்துக் கொண்டு போனவன், அவள் அத்தனை மழையிலும் காற்றிலும் கூட கொஞ்சமும் அசராமல் அவர்கள் கிளம்பியபோது அமர்ந்திருந்த அதே இடத்தில் அமர்ந்து கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனான். 

     “ஐயோ! என்ன பொண்ணு இவ?! அப்படி என்னதான் சொல்லித் தொலைச்சான் அந்த முட்டாள்?!” என்று கோபத்துடன் சொல்லியபடியே, வேகமாய் அவள் முன்னே சென்று நின்று,

     “என்னங்க இது முட்டாள்தனம்?! நீங்க எப்போ அவனை மாதிரி ஆனீங்க! எல்லோரையும் இப்படி கஷ்டப்படுத்திட்டு இருக்கீங்க?! எழுந்துருங்க முதல்ல” என்றான் கோபமாக.

     அப்போதும் அவனை நிதானமாகவே நிமிர்ந்து பார்த்துவிட்டு அவள் தலை குனிந்து கொண்டாளே ஒழிய அவனுக்கு பதிலும் சொல்லவில்லை எழவும் இல்லை! ஆனால் அவள் பார்வை சொன்ன பதில் அவனுக்குள் இனம்புரியாத கவலையைக் கொடுக்க,

     “ஏங்க, என்ன பிரச்சனையா இருந்தாலும் வீட்டுல போய் அவன் வந்ததும் பேசித் தீர்த்துக்கோங்க! கிளம்புங்க ப்ளீஸ்” என்று சற்றே தணிந்து அழைக்க,

     “ம்!” என்ற விரக்தியான சிரிப்பு மட்டுமே அவள் இதழில் எழுந்தது.

     “ப்ளீஸ்ங்க! எழுந்திருங்க” என்றவன் சட்டென அவள் எதிர்பாரா வண்ணம் அவள் கைத் தொட்டுத் தூக்கிவிட,

     “சாரிங்க எனக்கு வேற வழி தெரியலை!” என்றவன், 

     “வாங்க” என்று வேகமாய் அவள் கைபிடித்து இழுத்துக் கொண்டு நடந்தான்.

     இதையெல்லாம் அப்போதே அவளை அழைத்துப் போவதற்காய் அங்கு வந்து சேர்ந்திருந்த கண்ணனும் பார்த்துக் கொண்டுதான் நின்றிருந்தான் அத்தனை மழையிலும் கொதிக்கும் நீராய்.

     அவர்கள் சாலையை நெருங்கும் போதே கண்ணன் அங்கு நிற்பதைக் கார்த்திக் பார்த்துவிட, அவன் சட்டென்று தான் பற்றி அழைத்து வந்து கொண்டிருந்தவளின் கையை விட்டான்.

     “க கண்ணன் வந்திருக்கான்.” என்று கார்த்திக் சொல்ல, சட்டென ஒருகணம் அவனை நிமிர்ந்து பார்த்தவள்,

     “வாங்க போகலாம்” என்று கார்த்திக்கின் வண்டியின் அருகே சென்று நிற்க, கண்ணன் வேகமாய் தனது வண்டியின் ஆக்சிலேட்டரை முறுக்கினான்.

     அதன் வேகமும், உறுமலுமே கண்ணனின் கோபத்தை நன்கு உணர்த்த, 

     “அ அவன்தான் வந்திருக்கானே, அவன் கூட போங்க” என்று கார்த்திக் சொல்ல, அவள் அடமாய் இவன் வண்டியின் அருகேயே நிற்க,

     “சொன்னாக் கேளுங்க! மறுபடியும் எதுக்குங்க வீண் பிரச்சனை?!” என்றான் கார்த்திக் சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த கண்ணனையே பார்த்தபடி.

     “இப்போ உங்களால அழைச்சிட்டுப் போக முடியுமா முடியாத?!” என்றாள் இவளும் கண்ணனின் பிடிவாததிற்குச் சளைக்காதவளாய்.

     வேறு வழியின்றி கார்த்திக் வண்டியை எடுக்க, ‘என்ன திமிர் இவளுக்கு என் முன்னாடியே அவன் கூட வண்டியில ஏறிப் போறா?!’ என்று தனது வண்டியைச் சீறிக் கிளப்பியவன், கண்ணிமைக்கும் நொடியில் கார்த்திக்கின் வண்டியின் முன் வந்து மறித்து நிறுத்த,

     “ஏங்க? எதுக்குங்க வீண் வம்பு?! இறங்கிப் போய் அவன் வண்டியில உட்காருங்க” என்றான் கார்த்திக்கும் கவலைக் குரலில்.

     ‘அந்தப் பேச்சுப் பேசிட்டு எந்த முகத்தை வச்சுக்கிட்டு இப்போ வண்டியை எடுத்துட்டு வந்து நிக்குற?! அதுவும் ஒரு வார்த்தை கூட கூப்பிடவும் இல்லை!’ என்று இவளும் இறங்காமலேயே அமர்ந்திருக்க, சடுதியில் தன் வண்டியில் இருந்து இறங்கியவன், வேகமாய் அவர்களை நெருங்கி அவளை சர்வசாதரணமாய் தூக்கித் தன் தோள் மேல் போட்டுக் கொண்டு நடந்தான். 

     அவனின் அத்தகைய உரிமையானப் புதிய தீண்டல் அவளுள், காலையில் அவன் பேசியதால் ஏற்பட்ட கோபம், அவன் மீண்டும் தனக்காக, தான் அங்கேதான் இருப்பேன் என்று எண்ணி வந்திருந்ததனால் ஏற்பட்டக் காதல், என்று கலவையாய் சேர்ந்து சொல்லொணா உணர்வைத் தோற்றுவிக்க, அவனுக்கோ அவள் மேனியின் அத்தகைய புதிய ஸ்பரிசச் சூடு சில்லென்ற அம்மழை நேரத்தில் தகதகக்கும் தணலாய் அவனுள் தீயைக் கிளப்பியது. 

    

Advertisement