Advertisement

     இருவருமே ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசாமல், சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் மூடி மறைத்ததனால் பெரும் மனஉளைச்சலில் தவித்துக் கொண்டிருந்தனர் ஒருவர் மற்றொருவரின் செயலையும் சொல்லையும் ஏற்க முடியாமல்.

     பொழுது சாயும் நேரம் அனைவரும் வேலை முடித்து வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமாக, அவள்,

     “நான் கொஞ்ச நேரம் இங்கயே இருந்துட்டு வரேன். நீங்க எல்லோரும் போங்க” என்றாள்.

     “ஏன்டி, இன்னிக்கு காலையில இருந்து வானம் வேற மேக மூட்டமா கெடந்து புழுங்கித் தள்ளுது. நல்ல மழை வரும் ராத்திரிக்குள்ள! மரியாதையா எங்களோடவே வீட்டுக்குக் கிளம்பு!” என்றாள் கங்கா அதட்டலாய்.

     “ஏன்டா கன்னுக்குட்டி இப்படி இருக்க மதியத்துல இருந்து?! அந்தப் பைய ஏதும் சொல்லியிருந்தா அதையெல்லாம் காதோடு விட்டுட்டுப் போயிட்டே இரு கண்ணு. அதை ஒரு பொருட்டா எடுத்துக்கிட்டு மதியத்துல இருந்து இப்படி சுணங்கிக் கெடக்குற?!” என்றார் ரத்தினமும்.

     ‘ம்! அது கேக்குற பேச்சை எப்படி மாமா சாதாரணமா எடுத்துக்க முடியும்?!’ என்று தனக்குள்ளேயே மறுகிக் கொண்டவள்,

     “இல்லை நீங்க எல்லோரும் கெளம்புங்க” என்றாள் மீண்டும்.

     “என்ன புடிவாதம் கவி இது?! கிளம்பு மரியாதையா” என்று எப்போதும் அல்லாமல் இன்று வீர பாண்டியும் மகளை அதட்ட,

     “என்னப்பா? எல்லோருமா சேர்ந்து என் வாழ்க்கையத்தான் கெடுத்துப்புட்டீங்க! இப்போ கொஞ்ச நேரம் தனியா இருக்க கூட எனக்கு  சுதந்திரமில்லையா?!” என்று எரிந்து விழுந்தாள் அவன்மேல் இருந்த கடுப்பில் எல்லோரிடமும்.

     “என்ன என்ன பேசுற மருமவளே?!” என்று ரத்தினம் உட்பட அனைவருமே அதிர்ந்து போய்விட்டனர்.

     “ஐயோ!! என்னை தயவு செஞ்சு தனியா விடுங்களேன். கொஞ்ச நேரம் இங்க காட்டுல தனியா உட்கார்ந்துட்டு வந்தாதான் என் மனசு கொஞ்சமாச்சும் சமன்படும். நீங்க எல்லோரும் கெளம்புங்க.” என்று அவள் கையெழுத்துக் கூம்பிட்டுச் சொல்ல, அதற்குமேல் வற்புறுத்தி மேலும் அவளைக் கோபப்படுத்தவும் சங்கடப்படுத்தவும் மனமில்லாமல் அனைவரும் அமைதியாய்க் கிளம்பினர்.

     அந்தி சாய்ந்து இரவும் கவியத் துவங்கிவிட்டது. அவள் அப்போதும் எழுந்து செல்ல மனமில்லாமல் தங்கள் காட்டையே வெறித்தபடி அவனது நினைவுகளில் உழன்றிருந்தாள்…

                                 *****

     “அடியே இன்னிக்கு உனக்கு சூடு இழுக்கலைன்னா பாரு! எந்நேரமும், புளியைத் தின்னுக்கிட்டு! வயித்துக்கு என்னடி ஆகுறது?!” என்று வைரம் அவளைத் துரத்திக் கொண்டிருக்க, அவள் அவர் கையில் சிக்காமல் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தாள்.

     “அடியே நில்லுடி! நீ சுத்த வைக்குறதுலையே எனக்கு கோவம் ஏறுதுடி!” என்று வைரம் கத்தக் கத்த அவள் சட்டை செய்யாமல் ஓட, மாட்டுக்காய் காய்ச்சிக் கொண்டிருந்த கஞ்சியில் இருந்த சுடுகரண்டியை எடுத்துக் கொண்டு அவளைத் துரத்தியவர், அவள் கையில் சிக்கியதும் கொஞ்சமே பயமுறுத்த எண்ணி அவளது கையில் சூடு வைக்கப் போவது போல் கரண்டியைக் கொண்டு போக, இவள் பயத்தில் அம்மாவைத் தள்ளிவிட, அவர் தட்டுத் தடுமாறி கீழே விழப் போய், ஒருவாறு சுதாரித்து கொண்டு நின்றார்.

     அவள் செய்த செயலில் இன்னுமே கோபம் ஏற, “அடிக் கழுதை தள்ளியா விடுற?! இந்தா இரு வாரேன்” என்று கரண்டியை எரிந்து கொண்டிருந்த அடுப்பில் சில நொடிகள் வைத்து எடுத்து வந்தவர், வேகமாய் ஓடி அவளைப் பிடித்து சூடு வைத்துவிட, அவள் அலறிய அலறலில் அப்போதே காட்டிலிருந்து வீட்டுக்கு வந்த ரத்தினமும், வீராவும், பதினோராம் வகுப்பு என்பதால், ஸ்பெஷல் கிளாஸ் முடிந்து நேரம் கழித்து அந்நேரமே வீடு திரும்பியவனும், என்னவோ ஏதோவென்று பதறிப் போய் கொல்லைப் புறத்திற்கு ஓடினர்.

     காயம் பெரிதெல்லாம் இல்லைதான்! ஆனால் எப்போதுமே செல்லம் காட்டி வளர்த்த பெண்ணை திடீரென்று அவர் கண்டிக்கவும் அவளுக்கு அது பெரிதாய் வலித்தது.

     “ஐயோ! என்னத்தா இது புள்ளைக்கு இப்படி சூடு வச்சிருக்கியே??!” என்று ரத்தினம் பதறி ஓடிப் போய் அவளைத் தூக்க முனைய,

      “வுடுங்க! என்னை வுடுங்க!” என்று அடமாய் யாரிடமும் வராமல், வேகமாய் ஓடியவள் பின்னே, மாமனும், தந்தையும் ஓட,

     “நில்லுங்க அண்ணே! நீங்க ரெண்டு பெரும் கொடுக்குற செல்லம்தான்! அவ எது சொன்னாலும் கேக்குறதே இல்லை! போவட்டும் வுடுங்க! இன்னும் ஒண்ணு ரெண்டு வருசத்துல பெரிய மனுஷியே ஆகிடுவா! இப்போவும் கழுதை ஒரு சொல்லக் கேட்க மாட்டேங்குது! இனியும் நீங்க செல்லங் கொடுத்தா அவ எப்போதான் திருந்துறது! ஓடுறவளுக்கு வரத் தெரியும் விடுங்க” என்று வைரம் அண்ணனையும், கணவனையும் அடக்கி அமர வைக்க, அவன் மட்டும் கேட்கவே இல்லை!

     “கவி! நில்லுடி! எங்கடி போற?!” என்று கத்திக் கொண்டே ஓட,

     “டேய் கண்ணா உனக்கும் சூடு வேணுமா என்ன?!” என்று அதட்டிய வைரத்திடம்,

     “ம்!” என்று அடமாய் சென்று கை நீட்டியவனை அவர் ஆச்சர்யத்துடன் பார்த்தார்.

     “ஏன் என் கவி சூடு வச்சீங்க?!” என்றவன், அங்கு இருந்த யாருமே எதிர்பாராத வண்ணம், கண்ணிமைக்கும் நொடியில் அடுப்பில் எரிந்து கொண்டு இருந்த விறகில் ஒன்றை உருவி, சட்டென தனது கையிலும் வைத்துக் கொண்டான் பல்லைக் கடித்தபடி.

     “ஐயோ கண்ணா!!!” என்று பட்டென விறகைத் தட்டி விட்டவர், அவனது காயம் கண்டு பதற,

      “ம்!!” என்று அவரது கையை வேகமாய் விடுவித்துக் கொண்டு அவன் கவி சென்ற திசையை நோக்கி ஓடினான்.

     அவனுக்குத் தெரியும் அவள் எங்கே சென்றிருக்கிறாள் என்று! நினைவு தெரிந்த நாள் முதல் அவளுக்கு சந்தோஷம் என்றாலும் துக்கம் என்றாலும் அவள் முதலில் நாடிச் செல்வது அவர்களின் பசுமை நிறைந்த காட்டைத்தானே!

     அவன் நினைத்தது போலவே அவர்களது வயக்காட்டிற்குச் சென்றிருந்தவள், நிலத்தில் இருந்த மண்ணை எடுத்து அவளது காயத்தின் மீது பூசியபடி எரிச்சலைத் தணித்துக் கொண்டிருந்தாள்.

     “ஏய் கவி.. என்னடி பண்ற?! மண்ணை எடுத்துக் காயத்துல பூசுற?! இன்பெக்ஷன் ஆகிடும்டி!” என்று அவன் பதறிப் போய் மண்ணைத் தட்டிவிட, அவனது காயமும் அவள் கண்ணில் பட்டுவிட்டது.

     “ஐயோ!! மாமா! என்ன இது?! உனக்கு யாரு சூடு வச்சா?!” என்றவளுக்கு தனது வலியுடன் சேர்ந்து அவனது காயத்தினாலும் ஏற்பட்ட மனதின் வலியில் மேலும் கண்ணீர் பெருக்கெடுக்க,

      “ப்ச் எனக்கு ஒண்ணுமில்லை! நீ வா. முதல்ல டாக்டர் கிட்ட போய் டிடி இன்ஜெக்ஷன் போடுவோம். காயத்துக்கு மருந்தும் எழுதிக் கொடுப்பாங்க. வா” என்று அவளைக் கைபிடித்து இழுக்க,

     “ம்ஹும்! முதல்ல நீ ஹாஸ்ப்பிட்டலுக்குப் போ” என்று அவள் அவனை அனுப்பி வைக்க முயல,

     “இப்போ நீ வரலைன்னா நான் எனக்கும் பார்த்துக்க மாட்டேன்” என்று அவன் உறுதியாய் நிற்க, அவள் வேறு வழியின்றி அவன் உடன் நடந்தபடியே,

     “உனக்கு ஏன் இப்படி ஆச்சு?!” என்றாள் அழுகையினூடே.

     “அது தெரியாம பட்டுடுச்சு!” என்றவன்,

     “உனக்கு ரொம்ப வலிக்குதா கவி” என்றான் அவன் வலியைப் பொருட்படுத்தாமல்.

     “ம்!” என்றவள்,

     “உனக்கும் ரொம்ப வலிக்குதுதானே மாமா?!” என்றாள் அவன் கையைத் தொட்டுத் தூக்கி காயத்தைப் பார்த்தபடியே.

     “இல்லை! ரொம்பல்லாம் இல்லை!” என்றவன்,

     “அவள் கண்களில் இப்போதும் கண்ணீர் வழிந்து கொண்டே இருக்கவும்,

     “ரொம்ப வலிக்குதாடி?!” என்றான் தொண்டை அடைக்க.

     “ஆமான்னு சொல்றேன்ல மாமா! எத்தனை முறை கேட்ப நீ?! உனக்கு எப்படி காயம் பட்டுச்சுன்னு கேட்டா மட்டும் சொல்ல மாட்டேங்குற?!” என்று அவள் சலித்துக் கொள்ள,

     “எனக்கு உன், உன் வலியை எப்படிப் போக வைக்குறதுன்னு தெரியலைடி?! அதான் உன் வலியை எனக்கும் வர வச்சுக்கிட்டேன்!” என்றான் வேதனை ததும்ப.

     “ஐயோ! என்ன மாமா சொல்ற நீ?! அப்போ நீயே சூடு வச்சுகிட்டியா?!” என்று கோபம் கொண்டவள், மீண்டும் அவன் கையின் காயத்தைப் பார்த்து,

     “எல்லாம் இந்த அம்மாவால வந்தது! அது மட்டும் எனக்கு சூடு வைக்கலைன்னா உனக்கும் இப்படி ஆகி இருக்காதுல்ல?!” என்று அதற்கும் தாயின் மீதே கோபம் கொண்டாள் ஏதும் செய்ய இயலாதவளாய்.

     “விடுடி! நீயே தாங்கும் போது நான் தாங்கிக்க மாட்டேனா?!” என்று அவர்கள் பேசிக் கொண்டே நடந்ததில், அவர்கள் ஊரில் இருந்த அந்தச் சிறு கிளினிக்கை அடைந்திருந்தனர்.

     அங்கு சென்று இருவருக்குமே மருத்துவம் பார்த்துக் கொண்டவன், மருத்துவர் அவனின் தந்தைக்கு நன்கு பரிச்சயமானவர் என்பதால்,

     “அப்பாகிட்ட சொல்லி உங்க பீசை கொஞ்ச நேரத்துல கொண்டு வந்து கொடுக்கச் சொல்றேன் அங்கிள். இப்போதைக்கு நான் வெளியே இருந்து வந்ததுனால பணம் கொண்டு வரலை” என்றான். 

     “இட்ஸ் ஒகே மை பாய். கையில தண்ணி படாம பார்த்துக்கோங்க ரெண்டு பேரும்.” என்றவர்,

    “எவ்ளோ கேட்டாலும் ரெண்டு பேரும் எப்படிக் காயம் ஆச்சுன்னு மட்டும் சொல்ல மாட்டீங்க” என்றார் கேள்வியாய்.

     “சாரி அங்கிள்!” என்று இருவருமே ஒரே நேரத்தில் ஒரே போல் சொன்னனரே தவிர வேறு எதுவும் சொல்லவில்லை!

     “ம் அவ்ளோ பிடிவாதம்!?” என்று முறைத்தவர்,

     “இன்னொரு முறை இப்படி எல்லாம் காயம் பண்ணிக்கக் கூடாது” என்று கொஞ்சமாய் மிரட்டியே அனுப்பி வைத்தார்.

     மருத்துவமனைக்குச் சென்று திரும்பி, இருட்டிய பின்னும் கூட அவள் மீண்டும் வயலை நோக்கியே நடை போட,

     “என்ன கவி பிடிவாதம் இது?!” என்றான் சற்றே கோபமாக.

     அவள் பதில் பேசாமல் நடக்க அவள் கைபிடித்துத் தடுத்தவன்,

     “என் பேச்சைக் கேட்க மாட்டியா?!” என்றான்.

     “எனக்கு ஏதோ கஷ்டமா இருக்கு மாமா. கொஞ்ச நேரமாச்சும் அங்க இருந்தாதான் நல்லா இருக்கும் போல தோணுது. வேணும்னா நீயும் வந்து கொஞ்ச நேரம் என்னோட இரு!” என்று அவள் சொல்ல, அவனும் அவள் மனம் உணர்ந்து அவளுக்குத் துணையாய் நடந்தான்.

     வயலை அடைந்ததும் பயிர்கள் இருக்கும் இடத்தை விட்டு, பயிரிடாத வெற்று நிலத்தில் சென்று அமர்ந்து கொண்டவள், அப்படியே மண்ணில் சரிந்து படுக்க,

     “ஏய்! என்னடி பண்ற?!” என்று அவன் கத்த,

     “எவ்ளோ வலி இருந்தாலும், இங்க வந்து இந்த மண்ணுல தலைசாஞ்சு படுத்தேன்னா எனக்கு எல்லாம் சரியாப் போயிடும் மாமா. பள்ளிக் கூடத்துல அன்னிக்கு அந்த வாத்தி என்னை ரொம்ப அடிச்சப்ப கூட இங்கதான் வந்து படுத்துக் கெடந்தேன்.” என்று அவள் விளக்கம் கொடுத்துவிட்டு மீண்டும் படுக்க முனைய,

     “சரி இரு இரு!” தடுத்தவன், சட்டென தனது சட்டையைக் கழற்றி அவள் தலை வைக்கும் இடத்தில விரிக்க,

     “மாமா” என்று மனம் உருகிப் போனவள், மறுவார்த்தை இன்றி அப்படியே மண்ணில் விரித்திருந்த அவன் சட்டையின் மீது தலை சாய்த்துப் படுத்தாள்.

     வலியில் அவள் முகம் சுருங்கி இருக்க, அவன் மெல்ல அவள் அருகே அமர்ந்து அவளின் கைக்காயத்தைச் சுற்றி மென்மையாய் வருடி விட, அவளின் கண்கள் சோர்விலும் அவன் வருடல் கொடுத்த இதத்திலும் செருகிக் கொண்டுப் போனது…

                                      -உள்ளம் ஊஞ்சலாடும்…

                                              

    

         

    

    

 

    

 

        

Advertisement