Advertisement

   16

     உணவுண்ணும் நேரம் வரை அனைவருமே சிரிப்பும் பேச்சுமாக மகிழ்ச்சியுடன் உண்டு முடிக்க, இவன் மட்டும் எதிலும் ஒட்டாமல், அமைதியாகவே சாப்பிட்டு முடித்து எழுந்து சென்றுவிட்டான்.

     மற்றவர்கள் அவன் எப்போதுமே இப்படித்தானே ஒரு நேரம் நன்றாய்ப் பேசுவதும், ஒருநேரம் உம்மென்று இருப்பதும் என்று பெரிதாய் எதுவும் கண்டுகொள்ளவில்லை! ஆனால் அவளுக்கு மட்டும் என்னவோ உறுத்தியது,

     ‘ச்சே தப்பு பண்ணிட்டேன். மாமாவையும் சாப்பிடக் கூப்பிட்டிருக்கணும்! அதுதான் கோவிச்சுக்கிச்சுன்னு நினைக்கிறேன்!’ என்று வருந்தியதோடு நில்லாமல், பாத்திரங்களைக் கழுவி எடுத்து வந்தவள், கண்ணன் அங்கு அனைவரும், அமர்ந்திருந்த இடத்தில் இருந்து சற்றுத் தள்ளி அமர்ந்திருந்ததைக் கண்டு அவனிடம் சென்றாள்.

      “மன்னிச்சிடு மாமா! நீ வீட்டுலயே சாப்பிட்டு வந்திருப்பன்னு நினைச்சுதான் உன்னைக் கூப்பிடலை!” என, அவன் அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு, மீண்டும் வேறுபுறம் பார்வையை திருப்பிக் கொண்டான்.

     “கோவமா மாமா?” என்று அவள் அவன் அருகே வந்து அமர,

     “ஏன்டி என்மேல உசிரையே வச்சிருக்கேன்னு பொய் சொன்ன?!” என்றான் அவள் முகம் நோக்கி.

     “எ என்ன மாமா சொல்லுற நீ?!” என்று இவளுமே கோபம் துளிர்க்க கேட்க,

     “அப்போ எப்படிடி அவன் வந்ததும் என்னை உனக்குப் பிடிக்காமப் போச்சு?!” என்றான் வெறுமையாய்.

     இவ்வார்த்தைகள் அவளுள்ளும் பெரும் கோபத்தை உண்டு பண்ண,

     “சீ!” என்ற ஒற்றை வார்த்தையிலும் முகச்சுளிப்பிலும் அவளது கோபத்தை அவனிடம் காட்டிவிட்டு அங்கிருந்து விறுவிறுவென அவள் நடக்க, இவனுக்கு முகத்தில் அறைந்தார் போல் ஆனது.

     ‘எவ்ளோ திமிர் இருக்கும் இவளுக்கு?!’ என்று எண்ணியவன், விறுட்டென்று எழுந்து சென்று அவள் கையைப் பற்றித் தடுத்து நிறுத்தினான்.

     அவள் கோபமாய் அவனைத் திரும்பி முறைக்க, “என்னடி உண்மையச் சொன்னதும் உரைக்குதோ! பதில் சொல்ல வார்த்தை வரலையோ?!” என்று அவன் மீண்டும் நக்கலாய்க் கேட்டு வைக்க,

     அவனைத் தீர்க்கமாய்ப் பார்த்தவள், “ம்! உன் கிறுக்குத்தனமான கேள்விக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது?!” என்றாள் நிமிர்வாகவே.

     “அப்போ உனக்கு அவனைப் புடிக்காது?!” என்றான் சந்தேகமாய்.

     அவள் அமைதியாய் நிற்க, “அப்போ புடிக்கும்!” என்றான் அவனாகவே தீர்மானித்து முடித்து.

     “ஆமாம்! புடிக்கும்!” என்று அவள் கண்ணனின் மீது அச்சமயம் இருந்த கோபத்திலும், எரிச்சலிலும், கார்த்திக்கின் மீது இருந்த மரியாதையிலும் யோசிக்காமல் வார்த்தைகளை விட அவனுள் அத்தனைக் கோபம்.

     “அப்போ என்ன மயிருக்குடி என்னை விரும்பறேன்னு சொல்லிட்டுத் திரிஞ்ச?!” என்றான் ஆவேசமாய் அவளைத் தன்புறம் திருப்பி.

     “தப்புத்தென்! நான் உன்னை விரும்புனதுதான் நான் செஞ்சப் பெரியத் தப்பு!” என்று இவளுமே கோபத்தில் வார்த்தைகளை விட, அவன் உள்ளம் தீ பற்றியதைப் போல் காந்தியது.

     அவளுக்கு இத்தனை நாள், தான் கார்த்திக்கை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தால்தான் அவன் கோபமாக இருக்கிறான் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது அவன் கேட்டதையும், இத்தனை நாள் அவன் குத்திக் காட்டிப் பேசியதையும் எல்லாம் யோசிக்கும் போது, இவனை விட்டுவிட்டு கார்த்திக்கை விரும்பி விட்டதைப் போலல்லவா நினைக்கிறான் என்று புரிய,

     ‘ச்சே! ச்சே! என்ன கேவலமான எண்ணம்?!’ என்று எரிமலையாய் உள்ளம் குமுறியது.

     அவனுக்கோ, தன்னைக் காதலித்ததையே அவள் தப்பு என்று சொல்வதைக் கேட்க, மொத்தமாய் மனம் விட்டுப் போனது. அதில் இத்தனை நேரம் பிடித்திருந்த அவனின் பிடியைப் பட்டென அவன் விட்டுவிட, அவள் கோபமும், கண்ணீரும் ஆவேசமும் போட்டியிட அங்கிருந்து வேகமாய் விலகி நடந்தாள்.

     சற்றுத் தூரத்தில் அமர்ந்து இவர்கள் பேசுவதை அவ்வப்போது கவனித்துக் கொண்டுதான் இருந்தார்கள் பெரியவர்களும், கார்த்திக்கும், கங்காவும்.

     ஆரம்பத்தில் சாதாரணமாய் பேசிக் கொண்டிருப்பது போல் இருந்தவர்கள், திடீரென கோபமாய்ப் பேச ஆரம்பிப்பது போல் தோன்றவும்,

     “ஏலே வீரா இதுங்க ரெண்டும் எப்போ தான்டா சிரிச்சுப் பேசி நாம பார்க்கிறது?!” என்றார் ரத்தினம் விளையாட்டாய்.

     “இவுங்க போற போக்கைப் பார்த்தா அதுக்கெல்லாம் பல காலம் ஆகும் போல மாமா!” என்றாள் கங்காவும் விளையாட்டாய்.

     “அட என்னங்க? எங்க இப்படி சொல்றீங்க?!” என்று கார்த்திக் இடைபுக,

     “ஆமாம்! உங்களுக்கு என்ன அக்கறை வந்துச்சாம்?! எல்லாம் உங்களால்தான் வந்தது! நீங்க மட்டும் இந்த் ஊருக்கு வராம இருந்திருந்தா, அவங்க ரெண்டு பேருக்குள்ளயும் இப்படி பிரச்சனையே வந்திருக்காது! பொங்கலுக்கு வர மாதிரி வந்து பொண்ணு கேட்டு வச்சு எல்லாப் பிரச்சனையையும் இழுத்து விட்டுட்டீங்க!” என்றாள் துடுக்காய்.

     “ஏ கங்கா! என்ன பேச்சு இதெல்லாம்?!” என்று அவளது தந்தை மருது கண்டிக்க,

     “நீ சும்மா இருப்பா! இவரு செய்யிறதெல்லாம் நல்லாவா இருக்கு! சரி கல்யாணம் தான் நின்னு போச்சுல்ல! பொறவு எதுக்கு மறுபடியும் இந்த ஊருக்கு வந்து இங்க நெலம் வாங்கிப் போட்டு இங்கயே குடித்தனம் பண்ணனும்னு இறங்கி இருக்காரு! இவரைப் பார்த்தாலே கண்ணன் அண்ணனுக்கு எரிச்சலா வருது!” என்றாள் கண்ணனுக்குப் பரிந்து.

     “கண்ணனுக்கு எரிச்சலா வருதா இல்லை உங்களுக்கு எரிச்சலா வருதா?!” என்றான் கார்த்திக்கும் வெடுக்கென்று.

     ‘ஹென்! எனக்கும்தென்!’ என்று தொண்டை வரை வந்த வார்த்தைகளை பெரியவர்களுக்காய் கட்டுப் படுத்திக் கொண்டு,

     “ம்!” என்று தோள் பட்டையில் தன் முகத்தை இடித்துக் கொண்டு அவள் அங்கிருந்து நகர்ந்து விட,

     “அது பேசுறதை எல்லாம் பெருசா எடுத்துகாதீங்க தம்பி! அதுக்கு மனசுல எதுவும் வச்சுக்கத் தெரியாது! பட்டணத்துல படிச்சு வளர்ந்தும் நீங்க எப்படி எங்க மண்ணுமேலயும், மனுஷங்க மேலயும் மதிப்பு வச்சிருக்கீங்க! அது அந்தக் கழுதைக்குப் புரியுதா?!” என்று மகளை விட்டு இவனுக்குப் பரிந்து பேசினார் மருதுவும்.

     ஆனால் அதைக் கேட்டிருந்த ரத்தினத்திற்கு தான் ஏதோ போல் ஆகிவிட்டது!

     “ஆனா எம்மவனுக்கு இந்த மண்ணையும் மதிக்கத் தெரியலை! மனுஷங்களையும் மதிக்கத் தெரியலை இல்ல மருது?!” என்றார் ரத்தினம் வேதனையாய்.

     “ஐயோ! நீங்க என்னண்ணே?! நான் இவரைப் பத்தி பேசினா நீங்க ஏன் கண்ணனை இழுக்கறீங்க!” என்றார் பதட்டத்துடன்.

     “நீ சொன்னாலும் சொல்லலைன்னாலும் அதானே உண்மை மருது!” என்ற ரத்தினம் மகனின் போக்கைப் பற்றிய விசனத்துடன் எழுந்து வேலையைப் பார்க்கச் செல்ல,

     “ஏன் மருது?!” என்றார் வீராவும்.

     “ஐயோ சத்தியமா நான் கண்ணன் தம்பியை நினைச்சு அப்படி சொல்லலை வீரா” என்றார் மருதுவும் மனம் வருந்த.

     “விடுங்க அங்கிள். ரத்தினம் அங்கிள் ஏதோ வருத்தத்துல அப்படிப் பேசிட்டுப் போயிட்டார். புரிஞ்சிக்குவார்.” என்று சமாதானம் சொன்னான் கார்த்திக்கும்.

     “ம்” என்று மற்றவர்களும் வேலையைத் தொடர எழ, கார்த்திக்கும் தன் வயலுக்கு நடந்தான். போகும் வழியில் சற்றுத் தள்ளித் தனியே பூப்பறித்துக் கொண்டிருந்த கங்காவின் அருகே சென்று நின்றவன்,

     “நான் ஏன் இந்த ஊருக்கு வந்தேன்னு உனக்குத் நிஜம்மா தெரியாது?!” என்றான் கண்ணடித்து.

     அவன் கண்ணடித்துக் கேட்டதில், அவளுக்கு ஏற்கனவே இருந்த சந்தேகம் ஊர்ஜிதமாகிவிட,

     “கொன்னுப்புடுவேன் ஜாக்கிரதை” என்றாள் கண்களை உருட்டி.

     “அம்மாடியோ! பயந்துட்டேன் போ!” என்று நக்கலாய்ச் சிரித்தவன்,

     “முடிஞ்சா நீ என்கிட்ட கவுந்து தொபுக்கடீல்னு விழாம தப்பிச்சுக்கோ!” என்றுவிட்டு அவன் மீண்டும் கண்ணடித்துச் சிரித்துவிட்டுச் செல்ல,

     “அடேய்!” என்று பல்லைக் கடித்தவள்,

     “மானங்கெட்டவன் மானங்கெட்டவன்! அவளைக் கட்டிக்கிறேன்னு சொல்லிப்புட்டு என்னைய சைடு பார்வை பார்க்கும் போதுலயிருந்தே நினைச்சேன்! நினைச்சது சரியாபோச்சு! இனி என்னைப் பார்த்துக் கண்ணடிக்கட்டும், கண்ணு ரெண்டுலயும் எருக்கம்பாலை ஊத்தி கருக்கிபுடுறேன் கருக்கி!” என்று கங்கா வாய்விட்டுப் புலம்பியது அவன் காதிலும் விழ அவன் சிரித்தபடியே தன் நடையைத் தொடர்ந்தான்.

     இங்கு கார்த்திக் கங்காவிடம் தனது காதல் விளையாட்டை ஆரம்பித்து இருக்க, கண்ணனோ, தனது முட்டாள்தனமா யோசனைகளால், அவளிடம் கேட்ககூடாத கேள்வியைக் கேட்டு வாங்கக் கூடாத பதிலை வாங்கிக் கொண்டு எரிமலையை குமுறிக் கொண்டிருந்தான் மனதுள்.

     ‘எவ்ளோ நெஞ்சழுத்தம் இருந்தா, என்கிட்டயே அவனைப் புடிக்கும்னு சொன்னதும் இல்லாம, என்னைக் காதலிச்சதே தப்புன்னு சொல்லிட்டுப் போவா?!’ என்று பல்லைக் கடித்துக் கொண்டு தூரத்தில் செல்லும் அவளையே கடும்கோபத்துடன் சில நிமிடங்கள் வெறித்திருந்தவன், எப்போதும் போல் தனது கோபத்திற்கு வடிகாலாய் மதுவையே நாடிச் சென்றான், அதனால் இன்னும் தான் என்னென்ன வீபரீதத்தை விளைவிக்கப் போகிறோம் என்று தெரியாமல்!

                                  *****

      மாமன் அப்படிக் கேட்டதில் இதுநாள் வரை அவளுக்கு இருந்தப் பொறுமைக் காற்றில் பறந்திருக்க,

     ‘என்னை என்னைப் போய் எப்படி மாமா உன்னால அப்படி நினைக்க முடிஞ்சுது?! உன்னை, உன்னைத் தவிர இன்னொருத்தனுக்கு என் மனசுல எப்படி மாமா நான் இடங்குடுப்பேன்?! இதை இதெல்லாம் யோசிச்சுதான் என்னைக் கல்யாணம் கட்டியும் என்னைத் தவிக்க வச்சியா?! ச்சே! இவ்ளோதானா நீ என்னை புரிஞ்சிக்கிட்டது?!’ என்று ஏதேதோ எண்ணி மறுகிக் கொண்டிருந்தவளுக்கு வேலையில் மனதே லயிக்கவில்லை!

     அத்தனைச் சுறுசுறுப்பாய் இயங்குபவள், அத்தனைப் பொறுமையாய் வெங்காயங்களை பிடுங்கவும்,

     “கன்னுக்குட்டி?! என்னடா ஆச்சு?! உடம்புக் கிடம்பு முடியலையா என்ன?!” என்றார் ரத்தினம் அக்கறையாய்.

     “ஹான்! அதெல்லாம் இல்லை மாமா”

     “இல்லையே என் கன்னுக்குட்டி முகமும் சரியில்லை! வேலையிலயும் சுறுசுறுப்பில்லையே?!” என்று அவர் மீண்டும் கேட்க,

     ‘எல்லாம் உன்னாலதான் மாமா வந்துச்சு! நீ மட்டும் அவங்க பொண்ணு கேட்டதும் சம்மதிக்காம இருந்திருந்தா இன்னிக்கு இம்புட்டு பெரிய பிரச்சனை வந்திருக்காது!’ என்று வாய் வரை வந்த வார்த்தைகளை, மாமன் மனம் நோகுமே என்று வெளியே கொட்டாமல் அடக்கியவள்,

     “ஒண்ணுமில்லைன்னு சொல்றேன்ல விடு மாமா” என்றுவிட்டு அவள் காலை முதல் மூவரும் சேர்ந்து பிடுங்கி வைத்திருந்த சின்ன வெங்காயங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் ஓரிடத்தில் குவிக்கத் துவங்கினாள்.

     ‘இந்தப் பைய இன்னிக்கு என்ன பிரச்சனைப் பண்ணானோ தெரியலையே?! புள்ளை முகமே சரியில்லை!’ என்று மேலும் கவலைக் கூடிப் போனது ரத்தினத்திற்கு.

     தங்கள் ஊரில் இருந்த அந்தச் சின்ன மதுக்கடையில், சென்று தனது கோபம் தீர்க்கும் வடிகாலாய் மீண்டும் மீண்டும் குடித்துக் கொண்டே இருந்தான் கண்ணன். முன்பெல்லாம் எப்போதாவது நண்பர்களுடன் சேர்ந்து அளவோடு மட்டுமே குடிப்பவன், இப்போதெல்லாம் அவளையும், கார்த்திக்கையும் பற்றிய எண்ணங்களின் அலைப்புறுதல் எல்லை கடக்கும் போதெல்லாம் இப்படி மதுவை நாடிச் சென்று கொண்டிருந்தான் தன் நிலை மாறி.

     எல்லாவற்றிலும் ஒரு கட்டுப்பாட்டுடன் இருந்து வந்தவன், இப்போது எண்ணங்களிலும் கட்டுப்பாட்டைத் தொலைத்து, செயலிலும் கட்டுப்பாட்டை தொலைக்கத் துவங்கி இருந்தான் அவள் மீது கொண்டிருந்த வெறித்தனமான அன்பால். இதில் என்ன கொடுமை என்றால் இன்னமும் அவனுக்கு அவளைத் தான் காதலிக்கிறோம் என்றே உணர முடியவில்லை! அவள் தனக்குத்தான் உரிமையானவள், அவள் தன்னை மட்டும்தான் நேசிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு  சுற்றிக் கொண்டு இருந்தானே ஒழிய, அவள் தான் தன் உலகம் அவளும் அவனைத்தான் உலகமாக நினைத்திருக்கிறாள் என்பதை உணர மறுத்தான்.

Advertisement