Advertisement

                                                                      15

     எப்போதும் வேலை வேலை என்று ஓடிக் கொண்டு வார இறுதி நாட்களில் மட்டுமே வீட்டில் தங்குபவன், இப்போது திங்களன்றும் வேலைக்குக் கிளம்பிச் செல்லாமல் அங்கேயே இருக்கவும் வீட்டில் இருப்பவர்களுக்கு அதிசயமாய் இருந்தது.

     அதென்னவோ தெரியவில்லை, கார்த்திக்கை அங்கு கண்டதிலிருந்து அவனால் அங்கிருந்து கிளம்ப முடியவில்லை!

     வீட்டில் இருக்கும் அனைவரும் அவனைத் தாங்கு தாங்கென்று தாங்குவதையும், அவனும் இவர்கள் வீட்டுப் போல் பிள்ளை போல் மிக உரிமையுடன் இங்கு வந்து செல்வதையும் பார்க்கப் பார்க்க அவனுக்கு மண்டை சூடேறினாலும், இம்முறை தன் குடும்பத்தாரை அவனுக்கு விட்டுக் கொடுத்துவிட்டுச் சென்னை செல்ல அவனுக்கு சுத்தமாய் மனம் வரவில்லை! அதிலும், கவியிடம் கார்த்திக் வந்து பேச்சுக் கொடுக்கும் போதெல்லாம் அவளும் அவர்களுக்குள் திருமணம் என்ற ஒன்று நின்று போனது என்ற உணர்வே இல்லாமல் இயல்பாய் சிரித்துப் பேசிப் பழக இவனுக்கு எல்லாமே தவறாகத்தான் பட்டது,

     எப்போதும் யார் எப்படிப் போனால் என்ன என்று ஊருக்குக் கிளம்பிச் சென்றுவிடுபவனால், இப்போது அப்படிப் போக முடியாமல், இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு, அங்கேயே இருந்தான்.

     அன்று காலை வீரபாண்டியும், ரத்தினமும், வயலுக்குக் கிளம்ப, மாதவிடாய் நேரம் முடிந்திருந்ததால், கவியும் அவர்களுடன் வயலுக்குக் கிளம்பினாள்.

     “நீ எங்கப் போற?!” என்றான் அவள் கிளம்பும் போதே.

     “இது என்ன கேள்வி?” என்பது போல் அவனைப் பார்த்தவள்,

     “காட்டுக்குத்தான்” என்றுவிட்டுக் கிளம்ப,

     ‘ஓ! உடம்பு சரியாகிடுச்சுப் போல?!’ என்று எண்ணிக் கொண்டு, அமைதியாகி விட்டான்.

     ஆனால் வீட்டிலிருந்து வெளியே கிளம்பிச் சென்றவர்களுடன் கார்த்திக்கும் கிளம்புவதைப் பார்க்க, இவனுக்கு மீண்டும் பொறாமை தலை தூக்கியது.

     விடுவிடுவென தனது செருப்பைப் போட்டுக் கொண்டு அவனும் அவர்களுடன் கிளம்ப,

     “நீ எங்கடா வர?!” என்றார் தங்கரத்தினம்.

     “ம் காட்டுக்குத்தான்” என்று அவன் சொல்ல,

     “என்னாது?!” என்று முன்னே நடந்து சென்று கொண்டிருந்த அனைவருமே சட்டென்று நின்று அவனைத் திரும்பிப் பார்க்க,

     “என்ன? என்ன அப்படிப் பார்க்குறீங்க?! நம்ம வயலுக்கு நான் வரக் கூடாதா?!” என்றான் இவன் சாதாரணமாய்.

     “ஓ! வரலாமே!” என்ற ரத்தினம், மனதிற்குள்,

     ‘நீ எதுக்கு வாரன்னு எனக்குத் தெரியாதா மகனே?!’ என்று சொல்லிக் கொண்டு,

     “ஏன் கார்த்திக் தம்பி, இன்னிக்கு காலையில இருந்தே வானம் கொஞ்சம் இருட்டினாப்புல இருக்குல்ல? மழை ஏதும் வருமோ?!” என்றார் வேண்டுமென்றே மகனை வம்பிழுக்கும் விதமாய்.

     ‘இந்த அப்பாவுக்கு ரொம்பத்தான் குசும்பு கூடிப் போச்சு!’

     “மழை வருமா வராதான்னு உங்களுக்குத் தெரியாதா? நேத்து ஊருக்கு வந்தவன் கிட்ட போய் கேட்குறீங்க?!” என்றான் இவனும் விடாமல்.

     “சும்மா ஒரு பேச்சுக்குதான் கேட்டேன்/” என்றவர் அமைதியாய் நடக்க,

     “என்னடி?! உலகத்துல நடக்காத அதிசயமெல்லாம் நடக்கு?!” என்றாள் கங்கா, கவியின் காதில் கிசுகிசுப்பாய்.

     “கொழுப்புக் கூடிப் போச்சுடி உங்களுக்கெல்லாம்! என் மாமன் வயலுக்கு வரது உங்களுக்கெல்லாம் அதிசயமா?!” என்றாள் இவளும் காட்டமாகவே.

     “ம்க்கும்! மாமன ஒண்ணு சொல்லிடக் கூடாதே!” என்று நடந்தவள், பின்னே நடந்து வந்த கண்ணனைத் திரும்பிப் பார்க்க, அவன் பார்வை முழுவதும் கவியின் மீதே இருந்ததைக் கண்டு கொண்டு,

     “ஏன்டி நான் ஒண்ணு கேட்பேன். திட்டக் கூடாது!” என்றாள் கவியிடம்.

     “ம் திட்டாத மாதிரி கேளு!” என்றாள் கவியும் முறைத்தபடியே.

     “இல்ல! உன் மாமனுக்கு எப்போல இருந்துடி உன்மேல இம்புட்டுக் காதல்?!” என்றாள் நம்ப முடியாமல்.

     “என்னடி உளர்ற?!” என்றாள் கவி புரியாமல்.

     “என்னாது உளறலா?!” என்றவள்,

     “கொஞ்சம் அங்கன திரும்பிப் பாரு” என்றாள் கவியிடம்.

     இவள் பட்டெனத் திரும்பிப் பார்க்க, கண்ணன் இத்தனை நேரம்  அவள் மீது செலுத்தி இருந்த பார்வையை சட்டென மீட்டு வேறுபுறம் செலுத்தினான்.

     “நீ வேற அதெல்லாம் ஒண்ணுமில்லடி!” என்று சோகமாய்ச் சொன்னக் கவியை,

     “போடி போடி! உனக்கு ஒன்னும் புரியறது இல்லை!” என்று புலம்பிவிட்டு கங்கா அமைதியாகி விட்டாள். புரிந்திருந்தால் நன்றாய் இருந்திருக்குமோ?! அவன் தன் மீது உயிரையே வைத்திருக்கிறான் என்று தெரிந்தவளுக்கு தீரக் காதலும் கொண்டிருக்கிறான் என்று தெரிந்தால் நன்றாக இருந்திருக்குமோ?! ஆனால் அவளுக்கு மட்டும் அல்ல, அவனுக்குமே அவன் அவள் மீது கொண்டிருக்கும் நேசம் எத்தகையது என்று இன்னும் புரிந்தபாடில்லையே! பிறகு இவளுக்கு மட்டும் எப்படி அவ்வளவு சீக்கிரம் புரிந்து விடும்!

     காட்டிற்குச் சென்றவுடன் அனைவரும் இறங்கி வேலையைப் பார்க்க, இவனோ, அந்தக் காலை வேளையிலேயே சித்திரை வெயிலின் தாக்கம் தாங்க இயலாதவனாய் மரத்தடியின் நிழல் தேடித் போனான்.

     “என்னடா மாப்ளை?! நீ காட்டுக்கு வந்த தோரணையைப் பார்த்து இன்னிக்கு நாலு பேர் வேலையை நீ ஒருத்தனே செய்வேன்னு பார்த்தா, இப்படி வந்ததும் வராம நிழல் தேடித் போற?!” என்றான் கார்த்திக் வம்பிழுத்து.

     “மூடிட்டு வேலையைப் பார்றா” என்ற ரீதியல் அவனை முறைத்து வைத்தவன், அங்கு வெறுமென நின்றிருக்க வெறுப்பாய் இருந்ததால், அப்படியே காட்டை சுற்றி வரத் துவங்கினான் அனைவரையும் பார்வையிட்டபடியே.

     தங்கள் நிலத்தின் ஒரு பகுதியில் பயிரிடப்பட்டிருந்த எள் செடிகளுக்கு ரத்தினம் நீர் பாய்ச்சிக் கொண்டிருக்க, வீரபாண்டியும், கவியுமோ, மறுபுறத்தில் சாகுபடிக்குத் தயாராயிருந்த சின்ன வெங்காயங்களைப் பிடுங்கிக் கொண்டிருந்தனர். சற்று தூரத்தில் கங்காவும், மருது பாண்டியும் அவர்கள் நிலத்தில் வளர்ந்திருந்த செண்டுமல்லிகைகளைக் கொய்து கொண்டிருந்தனர். கார்த்திக்கும் புதிய விளைச்சலுக்காய் தனது நிலத்தை உதவிக்கு ஒரு ஆள் வைத்துக் கொண்டு நன்கு உழுது அடி உரம் போட்டு மண்ணை பண்படுத்திக் கொண்டிருந்தான்.

     சித்திரை, வைகாசி மாதங்களில் வெயில் அதிகம் என்பதால், தையில் நெல் அறுவடை முடிந்ததும் ஒரு பகுதிக்கு மட்டும் நெற் பயிரிட்டுவிட்டு, மற்ற பகுதிகளில், அந்தப் பருவத்தைத் தாங்கி வளரக் கூடிய மற்ற பயிர்களையும், பூச்செடிகளையும், காய்கறிகளையும் விதைப்பதை வழக்கமாய் வைத்திருந்தனர் பெரும்பாலான குடும்பத்தினர். அதோடு, ஒரு பயரின் சாகுபடி முடிந்ததும் நிலத்தைப் பண்படுத்திவிட்டு மீண்டும் அதே பயிரை வைக்காமல், அந்த நிலங்களில் மாற்றாய் பூச்செடிகள், காய்கறிகள் விதைப்பதையும் வழக்கமாய் வைத்திருந்தனர்.

     வியர்வை சிந்த அவன் வீட்டு மனிதர்கள் இப்படி வெயிலில் உழைத்துக் கொண்டிருப்பதைப் பார்ப்பதற்கு கண்ணனுக்குப் பெரும் வேதனைதான் எழுந்தது.

     ‘இப்படி இவங்க எல்லோரும் இங்க கஷ்டப்படணும்னு என்ன தலையெழுத்தா?! என் ஒருத்தன் சம்பாத்தியம் போதாதா இவங்க எல்லாரும் நிம்மதியா உட்கார்ந்து சாப்பிட?!’ என்று எண்ணி பெருமூச்சு விட்டவன், தண்ணீர் பாய்ச்சிய கையோடு, வெங்காயம் எடுக்கச் சென்ற தந்தையைப் பார்த்து,

     “அப்பா, மாமா ரெண்டு பேரும் போய் கொஞ்ச நேரம் நிழல்ல உட்காருங்க. நான் எடுக்கறேன்” என, இருவரும் அவனை வித்தியாசமாய்ப் பார்த்து வைத்தனர்.

     “என்ன போங்க!” என்று அவன் மீண்டும் சொல்ல, வீரபாண்டி,

     “பரவாயில்லைப்பா நீ போ நாங்க பாத்துக்கறோம்” என்றார். ரத்தினமும்,

     “இன்னிக்கு ஒருநா நீ இருக்கன்னு நாங்க ஓய்வெடுத்துட்டா தினமும் ஓய்வுக்கு மனசு ஏங்க ஆரம்பிச்சுடும்யா! போ நீ போயி ஓய்வெடு” என்றார்.

     அவர் சாதாரணமாகத்தான் சொன்னார். ஆனால் குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கத்தானே செய்யும்.

     அவன் முகம் மாற சட்டென அங்கிருந்து நகர்ந்து விட, அதைப் பார்த்திருந்த கவி,

     ‘இருந்தாலும், இந்தப் பெரிய மாமாவுக்கு சின்ன மாமாவை கஷ்டப்படுதுறதே வேலையாப் போச்சு! அது எம்புட்டு அக்கறையா வந்துக் கேட்டுச்சு!’ என்று எண்ணியதோடு நில்லாமல்,

      “இருந்தாலும் எல்லாருமா சேர்ந்து மாமாவை ரொம்பத்தான் ஒதுக்கறீங்க” என்றாள் ஆதங்கமாய்.

      “என்ன பேச்சு இது மருமவளே? என்னிக்கு நாங்க அவனை ஒதுக்கி இருக்கோம்?! அவன்தானே நாம வேணாம்னு எங்கயோ போய் கெடக்கான்?!” என்றார் அவருமே மனம் தாளாமல்.

     அதற்கு அவளாலும் பதில் சொல்ல முடியவில்லை, அதைக் கேட்டுக் கொண்டே நடந்து சென்றவனாலும் பதில் சொல்ல முடியவில்லை!

     அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாமல், ‘இங்க இருந்து இவங்க காட்டுல கஷ்டபடுறதையும் பார்க்க முடியலை! இவங்க பேச்சையும் கேட்க முடியலை! பேசாம வீட்டுக்கே போயிடுவோம்!’ என்று கிளம்பிவிட்டான். ஆனால் கிளம்பிய ஒரு மணி நேரத்திற்குள்ளேயே மீண்டும் அவன் அவளிடம் பேசுவனோ, என்ன செய்து கொண்டிருக்கிறார்களோ என்ற எண்ணம் எழ,

      ‘சேச்சே! என்ன நான், இவ்வளவு மோசமா யோசிக்கிறேன்?! அவன் வேணா பொண்ணுங்க பின்னாடி சுத்துறவனா இருக்கலாம்! ஆனா என் கவி, என் கவி அப்படியா?! அவ நெருப்பு மாதிரி!’ என்று சொல்லி தன்னைத் தானே திட்டிக் கொண்டான்.

     ‘அப்போ அவனை கக்ட்டிக்க மட்டும் எப்படிச் சம்மதிச்சலாம்!’ என்று அவனின் குரங்கு மனம் மீண்டும் சீண்ட,

     “அடச்சே!” என்று டிவியை ஆன் செய்தவன், மனதை திசை திருப்ப முயன்று சிறிது நேரம் அமர்ந்து தொலைக்காட்சிப் பார்க்கலானான்.

      சிறிது நேரத்தில் வைரம் சாப்பாட்டுக் கூடையை எடுத்துக் கொண்டு வயலுக்குக் கிளம்பவும், அதை பார்த்தவன்,

     “குடு அத்தை நான் கொண்டு போறேன்” என்றான்.

     அவர் மறுபேச்சு பேசாமல் அமைதியாய் கொடுத்துவிட்டுச் செல்ல, “ம்! இந்த அத்தை எப்போதான் என்கிட்டே பேசுமோ?!” என்று வாய்விட்டு முனகியபடியே அவன் செல்வதைக் காண வைரத்திற்கு நெஞ்சம் பிசைந்தது.

     ‘ஏன்டா?! ஏன்டா இப்படி இருக்க?! நான் உனக்கு நல்லதை மட்டும்தானே சொல்லிக் கொடுத்து வளர்த்தேன். ஆனா நீ இப்போ இப்படி எல்லாத்துலயும் எல்லாருக்கும் ஏட்டிக்குப் போட்டியா இல்லை நடந்துக்குற?! உம்மண்ணோட பெருமையும் உனக்குத் தெரியலை! உம்மனைவியோட பெருமையும் உனக்குத் தெரியலை!’ என்று பெருமூச்செறிந்தார் கவலையுடன்.

     அவன் சாப்பாட்டுக் கூடையுடன் வெளியே வரவும், “தம்பி உன் அயித்தை வரலை?!” என்றார் கங்காவின் அம்மா கற்பகம்.

     “இல்லை! குடுங்க” என்று அவர் கையில் இருந்த சாப்பாட்டுக் கூடையையும் தானே சென்று வாங்கிக் கொண்டு தன் பைக்கை எடுத்துக் கொண்டுக் கிளம்ப,

     “இதென்ன அதிசயமா இருக்கு?!” என்று கன்னத்தில் கைவைத்து ஆச்சர்ய்யப் பட்டு விட்டு,

     “டீ வைரம்?!” என்று குரல் கொடுத்தபடியே வைரத்தின் வீட்டினுள் செல்ல,

     “வா கற்பகம். என்ன உன் சாப்பாட்டுக் கூடையையும் வாங்கிட்டுப் போயிட்டானா?!” என்றார்.

     “ஆமாம் வைரம்! என்னடா இந்தப் பிள்ளை ஊருக்குக் கிளம்பாம இருக்குறதே அதிசயமா இருக்கேன்னு நினைச்சா? சோறெல்லாம் வேற கொண்டு போவுது?!” என்று மீண்டும் அதிசயிக்க,

     “காலையில அவங்க எல்லார் கூடவும் வயலுக்கும் போனான்.” என்றார் வைரம் கூடுதல் தகவலாய்.

      “ஆத்தி?!” என்று கற்பகம் அதிசயித்துப் போக,

     “என்னங்கடி?! ரெண்டு பேருக்கும் என் பேரனைப் பார்த்தா எப்படித் தெரியுது?! நீங்க வேணா பாருங்க ஒருநா இல்லாட்டி ஒருநா நீங்க எல்லாரும் அசந்து போகுற அளவுக்கு என் பேரன் இந்த ஊருக்குப் பெருமை சேர்ப்பான் பாருங்க” என்றார் கனகாம்புஜம் பாட்டி.

     “அது சரி!” என்ற வைரம்,

     “மொத வீட்டுல இருக்குற மனுஷங்களை மன நிம்மதியோட வச்சிருக்கானா பாரு ஆத்தா! ஊரு பெருமைக்குப் போயிட்ட?!” என்றார் சலிப்பாக.

     “என்னடி இப்படி சொல்லிபுட்ட?! நீ வளர்த்த புள்ளை தப்பா போயிடுவானா?!” என்று பாட்டியும் வருத்தமாய்க் கேட்க,

     “அப்படித்தானே ஆத்தா நானும் நினைச்சேன்! என்னிக்கு வெளியூர் போனானோ, அப்பயிருந்தே அவன் நம்ம கையை விட்டுப் போன மாதிரி ஆகிடுச்சே! ஒருநேரம் அம்புட்டுப் பாசமா இருக்குறவன், மறுநேரம் யாரைப் பத்தியும் கவலைப் படாம தான் வச்சதுதான் சட்டம்கிற மாதிரி அவன் பாட்டுக்கு கிளம்பிப் போயிடுறான்! அன்னிக்கு உன் பேத்திக்கு தீட்டு நாள்ன்னு தெரிஞ்சு தானே போய் மாதுளைப் பறிச்சிட்டு வந்து அவளுக்கு பழச்சாறு பிழிஞ்சு குடுக்கான்! ஆனா அடுத்த நேரம் அவகிட்ட முன்ன மாதிரி முகம் கொடுத்துக் கூட பேச மாட்டேங்குறான்?! அவளை புடிக்கலைன்னா எதுக்குக் கல்யாணம் பண்ணுவானேன்! இப்போ எல்லாரையும் கஷ்டப் படுத்துவானேன்?!” என்றார் கவலையுடன்.

     “அட என்ன வைரம் நீயி?! புடிக்காமையா அவளைக் கல்யாணம் கட்டுனான்! அவளை ரொம்பப் புடிச்சிருக்கப் போய் தானடி, அந்தப் புள்ளைய அந்த மிரட்டு மிரட்டு எழுப்பி தூரத் தள்ளிட்டு தாலியைக் கட்டுனான்!”

     “அவனுக்கு அவளைப் புடிச்சிருக்குடி! ஆனா என்னவோ மனசுக்குள்ள எடக்கு மடக்கா யோசிசிகிட்டு இப்படி சதி பண்ணுறான்! சீக்கிரமே எல்லாஞ் சரியாப் போயிரும்டி வைரம்! கொஞ்சம் பொறுத்துதான் பார்ப்போமே!” என்றார் மகளுக்கு ஆறுதலாய்.

      “என்னமோ ஆத்தா! நீ சொல்ற மாதிரி நல்லது நடந்தா சரிதான்!” என்றவர்,

      “கற்பகம் நீ ஆத்தாகிட்ட பேசிட்டு இரு! நான் போய் கொல்லைப் புறத்துல தண்ணி ஊத்திட்டு வாரேன். வெயில் தகிக்குதுல்ல! ஆடுமாடுங்களுக்கும் கொஞ்சம் அனல் தணியும்.” என்றுவிட்டு எழுந்து சென்றார்.

     அங்கு அவன் சாப்பாட்டுக் கூடையை தூக்கிக் கொண்டு வருவதை பார்த்து,

     “சத்தியமா இன்னிக்கு மழை அடிச்சு ஊத்தப் போகுதுதான் டோய்” என்று வாய்விட்டுச் சொல்லிச் சிரித்தார் ரத்தினம்.

     “எதுக்கு இந்த மாமா இப்படிச் சொல்லுது?!” என்று அவர் பார்த்திருந்த திசையை பார்த்ததும் கவி கண்டுகொள்ள,

     “ஆனாலும் நீயும், உன் தங்கச்சியும் என் மாமனை ரொம்பத்தான் படுத்தறீங்க!” என்று முறைத்தாள் பெரிய மாமனை.

      “அட கோவிச்சுக்காத மருமவளே! அவன் செய்யுற கூத்தெல்லாம் அப்படி இருக்குல்ல?!” என்று அவர் தாஜா செய்ய,

     “இப்ப சொன்னதோட நிறுத்திக்கோ மாமா, அது பக்கத்துல வந்ததும் பேசாம இரு!” என்றாள் கட்டளையாக.

     “சரி மருமவளே!” என்ற ரத்தினம், 

     “பார்த்தியா மச்சான், உன் மக என்னைய எப்படி மிரட்டுறான்னு?!” என்று சொல்ல,

     “என்னை ஏன் மாமா வம்புக்கு இழுக்குறீங்க?! நீங்களாச்சு உங்க மருமகளாச்சு!” என்று தப்பித்துக் கொண்டார் வீரன்.

     அதற்குள் அவன் நெருங்கி இருக்க, “எல்லாரும் வாங்க சாப்பாடு வந்துடுச்சு” என்று குரல் கொடுத்தார் ரத்தினம்.

     அனைவரும் அப்போதே நிமிர்ந்து பார்க்க அவர்களுக்கும் ஆச்சர்யம்தான்!

     “சரி நல்லதாதான நடக்குது!” என்று எண்ணிக் கொண்டு அனைவரும் கைகால் அலம்பி வந்து மரத்தடி நிழலில் அமர,

     “வைரம் வரலையே மருமவளே, நீயே எங்க எல்லாருக்கும் சோறை உருட்டிக் குடுத்துடு!” என்றார் ரத்தினம்.

     “ம் சரி மாமா” என்றவள், தூக்குச் சட்டியில் இருந்த மொத்த சாதத்தில் வெள்ளைப் பூசணிக்காய் சேர்த்து மணக்க மணக்க வைக்கபட்டிருந்த மோர்குழம்பை ஊற்றிப் பிசைந்து, தொட்டுக் கொள்ள, வைரம் நன்கு மொறுகளாய் வறுத்து அனுப்பி இருந்த உருளை வறுவலையும் ஒவ்வொரு கை உருண்டைக்கும் வைத்து அனைவருக்கும் கொடுக்க, ரத்தினம், வீரபாண்டி, கங்கா, மருது, புதிதாய் கார்த்திக்கின் வயலுக்கு வேலைக்கு வந்திருந்தவர் என்று கொடுத்துக் கொண்டே வர, கார்த்திக்கும் அடுத்தபடியாய் கை நீட்ட அவனுக்கும் எந்தவித தயக்கமும் இன்றி அவள் உணவை உருட்டிக் கொடுக்க, அங்கு சற்றுத் தொலைவே அமர்ந்திருந்தவனுக்கு பசியில் ஒருபுறம் என்றாலும், பொறாமையில் ஒருபுறம் வயறு குபுகுபுவென எரிந்தது.

     அனைவரும் உணவை வாங்கிக் கொண்டுவிட, அடுத்தபடியாய் அவன் எங்க காணோம் என்று அவளும் அப்போது பார்த்து மாமனையே தேட, அவனும் இவளையேதான் முறைத்தபடி அமர்ந்திருந்தான்.

     ‘ஒருவேளை மாமா வீட்லயே சாப்பிட்டு வந்துடுச்சோ!’ என்று தானே எண்ணிக் கொண்டு அவள் மறுபடியும் மற்றவர்களுக்கு உணவை உருட்டிக் கொடுக்கத் துவங்க,  அடுத்த கார்த்திக்கின் முறை வரும் போது சரியாய் அவனுக்கு முன் இவன் வந்து கை நீட்டினான் இடைபுகுந்து.

     அதைப் பார்த்தவளுக்கு, ‘அய்யோ மாமா இன்னும் சாப்பிடலையோ?! முதல்லயே சாப்பிடக் கூப்பிடாமப் போயிட்டோமே’ என்று எண்ணி வருந்தியபடியே அவள் மெல்ல அவன் கைகளில் சோற்று உருண்டையை வைக்க, அவளின் அத்தனை பொறுமையான செய்கை, ஏற்கனவே எல்லாவற்றையும் ஏறுக்கு மாறாய்ப் புரிந்து கொள்பவனை இப்போது மேலும் தவறாகப் புரிந்து கொள்ள வைத்தது…

                                        -உள்ளம் ஊஞ்சலாடும்…

      

      

    

     

     

     

    

 

Advertisement