Advertisement

     அவன் குளித்து வரும்போது அவள் அவனது அறையை விட்டு அவளது அறையில் வந்து படுத்திருக்க,

     “உன்னைக் கட்டில்ல தானே படுக்கச் சொன்னேன். இங்க எதுக்குடி வந்த?!” என்றான்.

     “இல்லை பரவாயில்லை மாமா” என்று அவள் படுத்தபடியே சொல்ல,

     “எந்திரிச்சு வந்துப் படுடி” என்றான் மீண்டும் அதட்டலாய்.

     இவளுக்குமே அவனது துவனியில், சட்டென கோபம் துளிர்க்க, “நீதானே அன்னிக்கு தலையணையும், போர்வையும் தூக்கிப் போட்டு கீழ படுன்னு சொன்ன இப்போ மட்டும் என்ன அக்கறை வந்துச்சு?!” என்று பொரிந்தாள் படபடவென.

     அவள் அப்படிச் சொன்னதும் அவனுக்கும் ரோஷம் வர, “போடி எப்படியோ போ! நீதானே இடுப்பு வலிக்குது மாமா கால் வலிக்குது மாமா புலம்புவ! உனக்காகப் பார்த்துச் சொன்னேன் பாரு” என்றுவிட்டு அவன் வேகமாய் அவள் அறையில் இருந்து வெளியேறிவிட்டான்.

     ‘ப்ச்! ஒழுங்கா மாமா கூப்பிட்டதுமே போயிருக்கலாமோ?!’ என்று அவள் எண்ணம் போக,

     ‘சீ கொஞ்சம் கூட ரோஷமே இல்லைடி உனக்கு!’ என்று இடித்தது அவள் மனசாட்சி.

     ‘ம்க்கும்! என் மாமன்தானே அதுக்கிட்ட என்ன ரோஷம் வேண்டிக்கெடக்கு எனக்கு?!’ என்று மனதைத் தட்டி அடக்கியவளுக்கு,

     ‘ச்சே! மாமா ரூம்ல படுத்திருந்தா, அதைப் பார்த்துகிட்டே தூங்கி இருக்கலாம்ல?! நானே எல்லாத்தையும் கெடுத்துப்புட்டேன்!’ என்று புலம்பியபடி மீண்டும் தனது அறையிலேயே படுத்துக் கொண்டாள்.

     இரவு எட்டு மணியளவில், “மணி எட்டாகுது. எல்லாரும் சாப்பிட்டு வந்துட்டு எவ்ளோ நேரம் வேணும்னாலும் பேசிக்கிட்டு இருங்க?” என்று வைரம் அனைவரையும் சாப்பிட அழைக்க,

     “சரி, நானும் போய் சாப்பிட்டு வரேன்” என்று எழுந்தார் மருது பாண்டியும்.  

     “ஏன் அண்ணே நம்ம வீட்டுலதான் சாப்பிடுங்க. இன்னிக்குக் கருவாட்டுக் குழம்பு வேற? உங்களுக்கும் ரொம்பப் பிடிக்கும்ல?” என்று அவரையும் சாப்பிட அழைத்தார் வைரம்.

     “அட இருக்கட்டும்மா! அப்புறம் எங்க வீட்ல சமைச்சதை சாப்பிடலைன்னு சத்தம் போடுவா உன் சிநேகிதி” என்று அவர் மறுத்துக் கிளம்ப,

     “செத்த இருங்க! கொழம்பையாச்சும் எடுத்துட்டுப் போங்க” என்று ஓடிப் போய் ஒரு கிண்ணத்தில் குழம்பை ஊற்றி எடுத்து வந்து கொடுத்தார் வைரம்.

     அதன்பின் வீட்டினர் அனைவரும் உள்ளே சென்று சாப்பிட அமர, கார்த்திக்கும் வந்து அமர்ந்தான்.

     அப்போது, வைரம் அனைவருக்கும் பொதுவாய், “சாப்பாட்டு நேரமாகுதுன்னு தெரியுதுல்ல! ஒவ்வொருத்தரையும் தனித் தனியா வெத்தலைப் பாக்கு வச்சு அழைக்கணுமா?!” என்று மகளுக்கும் மருமகனுக்கும் சேர்த்துக் குரல் கொடுக்க,

     “இந்த அம்மா ரொம்பத்தான் பண்ணுது! இத்தனை நாள் என்னைய பேர் சொல்லித்தானே கூப்பிடும்! இப்போ மாமாவை கூப்பிடணும்னு வேணும்டே இப்படிப் பண்ணுது! நியாயமா கோபப்பட வேண்டிய நானே என் மாமாகிட்ட பேசுறேன். இவுங்களுக்கு என்னவாம்?!” என்று புலம்பியபடியே அவள் எழுந்து வர, அவனும் அவன் அறையில் இருந்து வெளியே வந்தான்.

     கார்த்திக் அங்கு முதல் ஆளாய் அமர்ந்திருப்பது கண்டு அவனுக்கு இதுவரை மட்டுப்பட்டிருந்த கோபம் மீண்டும் தலைதூக்க,

     “ச்சே!” என்றபடி அவன் மீண்டும் தனது அறைக்குள் செல்லத் திரும்ப,

     “எங்கய்யா போற? வா வந்து உட்காரு. எம்புட்டு நாளாச்சு உன்கூட ஒண்ணா உக்கார்ந்து சாப்பிட்டு? போன வாரம் கூட நீ ஊருக்கு வரவே இல்லை!” என்று அழைத்தார் பாட்டி.

     “இல்லை வந்திருக்க விருந்தாளியை கவனிங்க. இப்போல்லாம் வீட்ல இருக்கிறவங்களை விட வெளியாளுங்களுக்கு தான இங்க மதிப்புப் கூடிப் போச்சு!” என்றான் நக்கலும், கோபமுமாக.

     “என்னய்யா இப்படிச் சொல்லிக்கிட்டு?! அதுவும் நம்ம வீட்டுப் புள்ளை மாதிரிதானே?” என்று இப்போது பாட்டியும் கார்த்திக்கிற்குப் பரிந்து பேச, அவனுக்கு மேலும் எரிச்சல் மண்டியது.

     “சாப்பிடுங்க சாப்பிடுங்க! உங்க வீட்டுப் பிள்ளையோடவே சாப்பிடுங்க!” என்றுவிட்டு அவன் சட்டென தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொள்ள, பாட்டியின் மனம் கனத்துப் போனது.

     “அட! நீ ஏன் ஆத்தா அவனுக்காகப் பார்த்துகிட்டு! அவன்தான் தான் பிடிச்ச முயலுக்கு கால்னு எல்லாத்துலயும் புடிவாதமா நிக்குறானே! எதுக்கு அவனை இழுத்துப் பிடிச்சிட்டுக் கெடக்கீங்க? அவனுக்கு பசிச்சா சோறு போட்டு சாப்பிட்டுக்க அவனுக்குத் தெரியும். நீங்க சாப்பிடுங்க” என்றார் வைரம் விட்டேத்தியாக.

      இதையெல்லாம் உள்ளிருந்து கேட்டிருந்தவனுக்கு தனது தாய்க்கு நிகரான அத்தையின் இத்தகைய ஒதுக்கத்தினால் மனம் நொந்துப் போனது.

     ‘என்னதான் இருந்தாலும், உன் பொண்ணுன்னு வந்தபிறகு என்னைத் தூக்கிப் போட்டுட்ட இல்லை அத்தை?!’ என்று பெரும் வேதனை கொண்டான் அவன்.

     ஆனால் அவன் வேதனைக்கு மாறாய், தாய் சொல்வதைக் கேட்டு மிகுந்த கோபம் கொண்டவளாய் தனது அறைக்குள் இருந்து எழுந்து வெளியே வந்தவள்,

     “என் மாமனை யாரும் ஒன்னும் பார்த்துக்க வேணாம்! நான் இன்னும் உசிரோடதான் இருக்கேன்! அது வெளியூர்ல இருக்கற வரை எப்படியோ, ஆனா நான் இருக்க இடத்துல அதுக்கு பசிச்சா அதுவே போட்டுத்தான் சாப்பிடணும்ங்கிற நிலை நான் உசிரோட இருக்குற வரைக்கும் வராது! என் மாமனுக்கு நானே பரிமாறிக்கிறேன். நீங்க எல்லோரும் உங்க வேலையை முடிச்சிட்டுப் போய்ப் படுங்க” என்று அவள் தாயிடம் ஏகத்திற்கும் பேசிவிட்டுப் போக, அங்கிருந்த அனைவருக்குமே அவளின் கோபத்தைவிட, அவள் அவன் மீது வைத்திருக்கும் அதீத அன்புதான் தெரிந்தது.

     உள்ளே இருந்தவனுக்கும் அவள் பேசியது கேட்கத்தான் செய்தது. அதைக் கேட்டிருந்தவனுக்கு ஒரு நொடி அவளின் அன்பில் பிரமிப்பு எழுந்தாலும், மறுநொடி, இவளால தானே எல்லோரும் என்னைத் திட்டுறாங்க? என்றும் சலித்துக் கொண்டான்.

     “பார்த்தீங்களா அண்ணே உங்க மருமவளை?! எப்படிப் பேசிட்டுப் போறா?!” என்று வைரம் அண்ணனிடம் குறைபட,

     “அம்புட்டு பாசம் அவ மாமன் மேல!” என்றார் மெச்சுதலாய்.

     “ஆமாம் பாசம் ஊர்ல உலகத்துல இல்லாத பாசம்! அவன் இப்படி மூஞ்சியைத் தூக்கிட்டுத் திரியும் போதே இவ இப்படி உருகுறா?! இன்னும் பாசாமா பேசிட்டான்னா என்னென்ன பேசுவாளோ?!” என்று வைரம் சொல்ல,

     “என்ன வைரம் இது?! நீயே நம்ம பொண்ணை இப்படி எல்லாம் பேசுற?!” என்றார் வீரபாண்டி சற்றே கடிதலாய்.

     அதன் பின்னே அவர் அமைதியாக, ‘வைரம் இப்படி எல்லாம்  பேசாதே?!’ என்று ரத்தினம் கேள்வியாய் வைரத்தின் முகம் பார்க்க,

     “பொறவு சொல்றேன் அண்ணே” என்று அண்ணனின் அருகே வந்து குழம்பை ஊற்றுவது போல் மெல்லக் கூறிவிட்டு சென்றார் தங்கை.

     சிறிது நேரத்தில் அனைவரும் சாப்பிட்டு விட்டு மீண்டும் வெளித் திண்ணைக்குச் சென்றுவிட, அவள் எழுந்து வந்து அவனது அறைக் கதவை மெல்லத் தட்டி,

     “மாமா…” என்று குரல் கொடுத்தாள்.

     அவனிடம் எந்த பதிலும் இல்லாது போக, அவள் மீண்டும் மீண்டும் அழைக்க,

     “இப்போ எதுக்குடி நொச்சு நொச்சுன்னு கதவைத் தட்டிக்கிட்டு இருக்க?!” என்று கதவைத் திறந்து கொண்டு வந்து அவளிடம் எரிந்து விழுந்தான் அவள் எதற்கு அழைக்கிறாள் என்று நன்கு தெரிந்தும்.

     “பசிக்குது சாப்பிட வா” என்றாள்.

     “பசிச்சா போய்க் கொட்டிக்க வேண்டியதுதானே?!”

     “நீயும் வா”

     “எனக்கு வேணாம்” என்று அவன் வறட்டு கௌரவம் பார்க்க,

     “உனக்கும் எம்புட்டுப் பசிக்குதுன்னு எனக்குத் தெரியும். வா” என்று அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றவள்,

     “உட்காரு” என்று அவனைப் பிடித்து அமரவும் வைக்க,

     “ஏய் ஓவரா போறடி நீ! நான் என்ன சின்னக் குழந்தையா?!” என்றான் சிடுசிடுப்பாய்.

     ‘ஆமாம் மாமா. இப்போல்லாம் நீ அப்படித்தான் தெரியுற! என்னைய பிடிச்சும் பிடிக்காதுன்னு நீயா லூசுத்தனமா நினைச்சுக்கிட்டு, கடைசியா என்னைய விட்டுக் கொடுக்க முடியாம உனக்கு சொந்தமாக்கிக்கிட்டு, அப்புறம் எங்க உன் வறட்டு புடிவாதம் வீணாப் போயிருமோன்னு இப்படி சின்னப் பிள்ளையாட்டம் எதை எதையோ நீயா கற்பனை பண்ணக்கிட்டு’ என்று எண்ணிக் கொண்டே அவனைப் பார்த்து ரசித்தபடி மெலிதாய்ச் சிரித்துக் கொண்டே, ஒரு தட்டில் சோறைப் போட்டு கருவாட்டுக் குழம்பை ஊற்றி, முட்டைப் பொடிமாசையும் வைக்க, இதுவரை இருந்த ரோஷமெல்லாம் வயற்றுப் பசியிலும், சமையலின் வாசத்திலும் பறந்து விடுமோ என்ற ரீதியில் அவன் தவித்துக் கொண்டிருந்தான்.  

     “எனக்கு எதுவும் வேணாம்! இந்த வீட்ல இருக்குறவங்களுக்கு தான் எனக்கு சோறு போட கூட மனசு இல்லாமப் போயிடுச்சே! அதுக்கப்புறமும் இங்க சாப்பிட்டா எனக்கு என்ன மரியாதை இருக்கு?!” என்றான் சற்று சத்தமாக அத்தையின் காதில் விழும்படி.

     “வெளியாளுங்களத்தேன் வெத்தலை பாக்கு வச்சு அழைக்கணும். வீட்ல இருக்கிறவங்களுக்கு, சாப்பாடு எடுத்து வச்சா சாப்பிட வரணும்னு தெரியாதா?!” என்று குரல் வந்தது வெளியில் இருந்து.

     அதற்கு என்ன பதில் கொடுப்பதென்று தெரியாமல் அவன் பேசாமல் இருக்க,

     “அது இத்தனை வருஷமா தெரியலையாக்கும்?! வேணும்னா வேண்டி வேண்டி கூப்பிட்டு விதவிதமா பொங்கிப் போடுறது! வேணாம்னா அவங்களே வந்து சாப்பிடத் தெரியாதான்னு கேட்குறது?! ஆகாத மருமகன் கைபட்டா குத்தம் கால்பட்டா குத்தம்னு சொல்வாங்களே அதுப் போல இருக்கு இங்க நடக்குற கூத்தெல்லாம்?!” என்று அவன் மனைவியிடமிருந்து பதில் பறந்தது அவன் மாமியாருக்கு.

     இதற்கு, அங்கு பதில் இல்லாது போக, “நீ சாப்பிடு மாமா! எனக்கு நீ எப்போவும் உசத்திதான். என் மாமாக்காக எப்போவும் நான் ஒருத்தி இருகேங்கிறது நினைப்பு இருக்கட்டும்!” என்று அவனுக்கும் மற்றவர்களுக்கும் சேர்த்து அவள் சொன்ன விதத்தில் வெளியே இருந்தவர்கள் மனதோடு சிரித்துக் கொள்ள, அவன் அவளது மாசற்ற அன்பில் மனம் கரைந்து அமர்ந்திருந்தான்….

     மனம் மாறுவானா?! மீண்டும் மணமுடித்தவளைத் தவிக்க விடுவானா?!

                               -உள்ளம் ஊஞ்சலாடும்…   

   

 

    

    

      

    

    

    

       

     

Advertisement